“…. இந்தத் தொழிலாளர்களின் தங்கும் விடுதிகள் படுக்கைகளால் நிரம்பியிருந்தன …எப்படிப்பட்ட படுக்கைகள் அவை! … ஒவ்வொரு அறையிலும் எவ்வளவு தொழிலாளிகளை அடைக்க முடியுமோ அவ்வளவு பேர் அடைக்கப்பட்டிருந்தனர்… ஒவ்வொரு படுக்கையிலும் நான்கு, ஐந்து, ஆறு மனித உருவங்கள் குவியலாய்க் கிடந்தன….நோயுற்றவர்- ஆரோக்கியமானவர், இளையோர்- முதியோர், குடிபோதைக்காரர்கள்-தெளிவாய் இருப்பவர்கள்,ஆண்கள்-பெண்கள் என்று வர்ஜா வர்ஜமின்றி அடைக்கப்பட்டிருந்தனர் … அடிதடிகள், காயங்கள் சகஜம்… இங்கும்கூட படுக்க இடம் கிடைக்காதவர்கள் நடைபாதைகளிலிலும், நுழைவாயில்களிலும், மூலைமுடுக்களிலும், எங்கு இடம் கிடக்கிறதோ, எந்தெந்த இடங்களில் போலீஸோ இடத்தின் சொந்தக்காரரோ தொல்லை செய்ய மாட்டோரோ அந்த இடங்களில் எல்லாம் படுத்துத் தூங்கினர்…”
இது அங்காடித்தெரு திரைப்படத்தில் வரும் தொழிலாளர்கள் வாழ்நிலை நிலை குறித்த வர்ணனையில்லை. 19-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் நெசவாளத் தொழிலாளர் நிலை குறித்து ஏங்கெல்ஸ் எழுதிய புத்தகத்தில் காணப்படும் விவரிப்புகள் இவை.
”1844இல் இங்கிலாந்து தொழிலாள வர்க்கத்தின் நிலை” என்ற நூல் மார்க்ஸீயத் தத்துவத்திற்கு நிஜ வாழ்விலிருந்து எடுத்துக்காட்டுகள் பலவற்றை கொண்டு தந்த நூல். ஏங்கெல்ஸின் தந்தையின் தொழிற்சாலையில் (பல காரணங்களால்- குறிப்பாக மார்க்ஸுக்கு பண உதவி செய்யும் பொருட்டு) அதிகாரப் பொறுப்பேற்ற ஏங்கெல்ஸ் இங்கிலாந்தின் – குறிப்பாக மான்செஸ்டர் நெசவாலைகளில் தொழிலாளர்கள் வாழ்நிலை குறித்து எழுதிய இந்நூலும் பின்னர் தொடர்ந்து தொழிற்புரட்சியின் பெரும் உற்பத்தி, ஆலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் நிலை ஆகியவை குறித்தும் மார்க்ஸுக்கு அவர் அளித்த தகவல்கள்தான் மார்க்ஸின் தத்துவக் கட்டமைப்பை நிதர்சனங்களின் அடிப்படையில் தகவமைக்க உதவின.
முதலியத்தின் வியாபார வெற்றி உண்மையில் தொழிலாளர்களைப் பிழிந்தெடுத்து அழிப்பதில் இல்லை. பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பது போன்ற செயல் அது. ஏழ்மையால் உந்தப்பட்டு முன்பை விட ஸ்திரமான ஒரு உத்தரவாத வாழ்க்கையையும் அதன் மூலம் படிப்படியாக உயரும் வாழ்க்கைத்தரத்தையும் எதிர்பார்த்து தொழிலாளிகள் நகரப் பெருநிறுவனங்களை நோக்கி வருகிறார்கள். சிற்றூர்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க்கும் இந்த தொழிலாளர்களின் நம்பிக்கையை முதலியம் தொடர்ந்து மெய்ப்பித்திருக்கிறது. சென்னைக்கும் பம்பாய்க்கும் டெல்லிக்கும் கால் நூற்றாண்டுக்கு முன் இடம்பெயர்ந்த எத்தனையோ குடும்பங்கள் உழைப்பு, செயலூக்கம், நம்பிக்கை ஆகியவற்றை மட்டுமே மூலதனமாக்கி மேலே வந்துள்ளன. தாம் மேலே வந்தது மட்டுமன்றி பல குடும்பங்களையும் உற்றார்களையும் நண்பர்களையும் கைகொடுத்து மேலே கொண்டுவந்துள்ளன. கெட்டும் பட்டணம் போகும் இந்த ஓயாத இடப்பெயர்வு கடந்த இரு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
இந்த இடப்பெயர்வின் தொழிற்புரட்சிகால ஆரம்ப விளிம்பில் நின்று 19-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மான்செஸ்டர் நெசவாலைத்தொழிலாளர்களின் நிலை குறித்து ஏங்கெல்ஸ் எழுதியவைதான் மேற்குறிப்பிட்ட வாசகங்கள். இங்கிலாந்தின் நெசவாலைத்தொழிலாளர்களின் அவல நிலைமையை மிகத்துல்லியமாக அவதானித்து ஏங்கெல்ஸ் ”1844இல் இங்கிலாந்து தொழிலாள வர்க்கத்தின் நிலை” என்ற புத்தகத்தை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். அன்று மான்செஸ்டர் நெசவுத் தொழிலாளர்களின் நிலை தொடர்ந்து பெரும் சீர்கேட்டை நோக்கி விழுந்து கொண்டிருந்தது. ஐரோப்பா முழுவதுமே பரவலாக தொழிலாளர்கள் நிலை அவலமாகத்தான் இருந்தது என்றாலும் இங்கிலாந்தில் அது பரிதாபகரமாக இருந்தது. ஏங்கெல்ஸ் மான்செஸ்டர் நகரெங்கும் அலைந்து அங்குள்ள தொழிலாளர் நிலை குறித்து தனக்கே உரித்த முகத்திலறையும் பாணியில் ஒரு நேர்முக வர்ணணையைத் தருகிறார்:
”… அழுக்குக் குட்டைகளில் திளைக்கும் பன்றிக்கும்பல் போல இங்கே (அழுக்குக் குடிசைகளில்) குவியும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கும்பல்கள் திளைக்கின்றன… ஒட்டுப்போடப்பட்ட உடைந்த ஜன்னல்கள், அழுகிப்போன கதவிடுக்குகள் கொண்ட இந்த சிதிலமடைந்த குடிசைகளில்,… கொடும் நாற்றத்திலும் குப்பையிலும் ஏதோ ஒரு குறிக்கோளுக்காகவே இருப்பவவர்கள் போல வாழும் இந்த இனம் மனித குலத்தின் மிக மோசமான நிலையை அடைந்த ஒரு இனமாகத்தான் இருக்க வேண்டும்”
“…. மான்செஸ்டரில் அலைந்து திரிந்து நாம் கண்டவற்றை ஒழுங்குபடுத்திக் கூறுவதென்றால் இவ்வாறு சொல்லி விடலாம்: மான்ஸெஸ்டரின் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்களும் நீரொழுகுகின்ற, இடிந்த, குப்பைக் கூளமான குடிசைகளில் வாழ்கிறார்கள்; அவர்கள் வாழ்விடத்தைச்சுற்றியுள்ள தெருக்களோ இருப்பதிலேயே அவலமும், அசுத்தமும் நிறைந்த தெருக்களாய், காற்றுப் போக்கிற்கு இடமின்றி அவ்விடங்களின் கண்ட்ராக்டர்களின் லாபத்தை மட்டுமே முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டதாய் இருக்கின்றன. சுருக்கமாய்ச் சொல்வதென்றால்: இந்த குடியிருப்புகளில் சுத்தமோ தூய்மையோ, வசதியோ, குடும்ப வாழ்க்கையோ சாத்தியமில்லை; மனிதத்தனம் களவாடப்பட்டு, உடல் ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் மிருகங்களாக்கப்பட்டு நிற்கும் கீழ்த்தர மானுட இனம் மட்டுமே இவற்றின் வசிப்பதை சொந்த வீடு போல் வசதியாய் உணர முடியும்…. இங்கே உணவோ வாயில் வைக்க வழங்காததாய் இருப்பது மட்டுமல்லாமல், பல நேரங்களில் போதுமான அளவு கிடைப்பது கூட இல்லை; சில சமயங்ககளில் பட்டினியால் சாவதும் கூட நடக்கின்றது”
இந்த வர்ணனையைப் படிக்கையில் மட்டுமல்ல- மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பல தொழிலாளர் விவரணைகளைப் படிக்கையிலும் இரக்கத்தை விட மேலோங்கி நிற்கும் ஆசிரிய உணர்ச்சியாக இரண்டு விஷயங்களை நம்மால் எளிதாக இனம் காண முடியும்: எரிச்சல் மற்றும் எதிர்பார்ப்பு (”எப்போது புரட்சியாய் வெடிக்கப்போகிறது”) ஆகியவையே அவை. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் அன்றைய ஐரோப்பிய தொழிலாளர் வாழ்க்கையின் பரிதாபச்சரிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கினர் என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் இப்படித்தான் பல தொழிலாள அவலங்களும் மார்க்ஸீய பிதாமகர்களால் பார்க்கப்பட்டன. ஏனெனில், அவலம் என்பது அதலபாதாளத்தை அடைந்து தொழிலாளர் பஞ்சப்பரதேசிகளாய் ஆகாதவரை வர்க்கப் புரட்சி வராது என அவர்கள் உறுதியாக நம்பினர். இன்னும் சொல்லப்போனால் ரத்தப்புரட்சி வழியே மட்டுமே சமூக மாற்றங்கள் பிறக்கும் என்றும், கூட்டம் கூட்டமாக மக்கள் அழிவது என்பது இந்த புரட்சிகர மாற்றத்தின் இன்றியமையா ஓர் அம்சம் என்றும் அவர்கள் நம்பினர். இந்தப்பின்னணியில் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய அத்தனை வஞ்சகங்களையும் கொடுமைகளையும் சுரண்டலையும் கூட மார்க்ஸின் ஐரோப்பிய இனவாதப்பார்வை எளிதாக நியாயப்படுத்திச்செல்கிறது.
பிரிட்டிஷ் காலனீயமும் மார்க்ஸீய இனவாதமும்
இந்திய நெசவுத்துணிகளின் உயர்தரமும், வண்ணச் செறிவும் வடிவ நேர்த்தியும் ஐரோப்பிய சந்தைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்திய நெசவின் நேர்த்தியுடன் போட்டி போட இயலாமல் இங்கிலாந்தின் நெசவாலைத் துணிவகைகளின் விற்பனை அடிபட்ட போது, இங்கிலாந்து வெளிப்படையாக இந்திய நெசவுத்தொழிலை அராஜகச் சட்டங்களை வைத்து முடக்கிப்போட முடிவு செய்தது. இந்திய நெசவாலைப்பொருட்களுக்குக் கடும் வரி விதித்தது. அதே சமயம் மான்செஸ்டர் நெசவாலைப்பொருட்களுக்கு வரிச்சலுகை தரப்பட்டது. இதற்குப்பின்னும் ஐரோப்பாவில் இந்திய கைநெசவின் பிரபலத்தை முறியடிக்க இயலாமல் போகவே, நெசவாடை ஏற்றுமதியே தடை செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து கச்சாப்பொருளான பருத்தி ஏற்றுமதியை மட்டும் கிழக்கிந்தியக்கம்பெனி மூலம் அனுமதித்தது. சில வருடங்களிலேயே இந்திய நெசவுத்தொழில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களால் முதுகெலும்பு உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டது. உலகெங்கும் புகழ்பெற்ற உயர்தர மஸ்லின், பருத்தி ஆடைகளை பல நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக உற்பத்தி செய்த இந்திய நெசவுத்தொழிலாளர்கள் சில வருடங்களிலேயே தமது பாரம்பரியத்தொழிலை இழந்தனர். பல நெசவுக்குடும்பங்கள் தெருவுக்கு வந்தன. கூட்டம் கூட்டமாய் நகரத்திற்கு இடம்பெயர்ந்தன. வரிவிதிப்பால் தெருவுக்கு வந்த விவசாயக்குடும்பங்களும் இப்படி நகரங்களை நோக்கிப் படையெடுத்தனர். கிராம நிர்வாகம் செயலற்று ஏரிகளும், குளங்களும் தூர்வாரப்படாமல் சிதிலமடைந்து விவசாயம் பொய்த்து உயிர்ப்பான ஒரு கிராமப்பொருளாதார இயக்கம் வற்றிப்போனது. கிராமப்பொருளாதாரத்தைச் சார்ந்து இயங்கிய சிற்றூர்களும் பாதிக்கப்பட்டன. வாழ்வாதாரம் இழந்த பலதரப்பு மக்கள் கூட்டம் அலை அலையாக நகரங்களின் ஒண்டுக்குடித்தனக் கூடுகளில் வந்து அடைந்தன. சாக்கடைகளும் சேரிகளும், புகையும், நோய்களும் நகரங்களின் நிரந்தர இயல்பாயின.
கச்சாப்பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யமுடியும் என்றும், இந்திய நெசவுத்துணிகளுக்கு ஏற்றுமதி சந்தை கிடையாது என்றும் பிரிட்டிஷ் காலனீயம் அராஜக சட்டங்களை நிறைவேற்றியது. இது உருவாக்கிய உண்மையான தேசியக் கொடுமை என்னவென்றால் சுதந்திர வணிகச்சூழல் சாத்தியப்படுத்துகின்ற படைப்பூக்கமும், அதனை வெற்றிகரமாகச் சந்தைக்குக் கொண்டு வரும் தொழில் முனைவோரின் செயலூக்கமும், பலனேதுமில்லாமல் முடக்கப்பட்டது. ஒவ்வொரு சமூகமும் அதன் செல்வ வளத்தைப் பெருக்கும் சக்தியை அச்சமூகத்தின் படைப்பாளிகளிடத்தும், தொழில் முனைவோரிடத்தும் கொண்டுள்ளது. அது பயன்படுத்தப்படாமல் முடக்கப்படுவது அச்சமூகத்தை தேக்க நிலைக்குள் தள்ளுகிறது. தொடர்ந்த போர்களிலும் மதச்சண்டைகளிலும் ஈடுபட்டு தொழில்நுட்ப வளர்ச்சியையும் படைப்பூக்கத்தையும் தவற விட்ட ஐரோப்பா, போர்களைக் குறைத்து ஸ்திரத்தன்மை காணத்துவங்கிய மறுமலர்ச்சி காலத்தில்தான் வெகுவேகமாக வளரத்தொடங்கியது. ஆனால் பிரிட்டிஷ் காலனீயத்தின் பிடியில் இந்திய நெசவுத்தொழிலாளியின் படைப்பூக்கம் தண்டிக்கப்பட்டது. இந்தியத் தொழில்முனையும் திறன் ஒடுக்கப்பட்டது. வ.உ.சியின் கப்பல் வியாபாரம் திட்டமிட்டு பிரிட்டிஷாரால் முடக்கப்பட்டது தமிழகத்தில் நாம் கண்ட முக்கிய உதாரணமாகும். இந்திய மக்கள் தம் சிந்தனை மற்றும் உழைப்பின் உருவாக்கத்தால் தம் பொருளாதார விதியை சுயமாய் நிர்ணயிக்கும் திறனை, பிரிட்டிஷ் ஆட்சி அடக்குமுறை சட்டத்தால் தண்டித்தது. இந்திய படைப்பூக்கமும் தொழிலூக்கமும் முடங்கிப்போயின. பிரபல இயற்பியலாளரும் சிந்தனையாளருமான ரிச்சர்ட் ஃபெயின்மேன் ”பொருட்கள் அல்ல, அவற்றை உருவாக்கும் திறனே செல்வ வள உருவாக்கத்தில் முக்கியமானது” என்கிறார். செல்வ வளம் உருவாக்கும் இத்தகைய திறன் பிரிட்டிஷ் காலனீய ஆட்சியில் அராஜகத்தால் சிதைக்கப்பட்டதுதான் இந்தியாவின் ஏழ்மைக்கு முதன்மைக் காரணமானது.
ஆனால் மார்க்ஸ் இந்த கொடுமையை வெற்றி எக்காளமிட்டு வரவேற்றார். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் சமூகப்புரட்சியைக் கொண்டு வந்ததாக விதந்தோதினார்.
பிரிட்டிஷ் என்ற மேலான இனத்தால் அடிமைப்படுத்தப்படுவது இந்தியாவிற்கு மிகவும் நல்லது என்று மார்க்ஸ் கருத்து வெளியிட்டார். ’… முன் வந்த துருக்கியர்களும், அராபியர்களும், மொகலாயர்களும் ஹிந்து மரபுக்குள் உள்வாங்கப்பட ”ஹிந்துக்களை விட உயர்வான பிரிட்டிஷ்” அவ்வாறு உள்வாங்கப்படாமல் தனியே இருந்தனர்” என்கிறார்.ஆனால் எதை வைத்து ஹிந்துக்களை விட பிரிட்டிஷார் உயர்வானவர் என்ற முடிவுக்கு மார்க்ஸ் வந்தார் என்பது அடுத்த வரியிலே தெளிவாகி விடுகிறது. “(பிரிட்டிஷார்) இந்திய சமூகங்களை உடைத்தார்கள்; பாரம்பரியத் தொழில்களை அடியோடு பெயர்த்தெடுத்தார்கள்… மீண்டும் கட்டியெழுப்பப்படும் அறிகுறிகளே தெரியாத அளவுக்கு இந்தியாவின் முழு சமூகச் சட்டகத்தையும் நொறுக்கி விட்டார்கள்” என்று பாராட்டுப்பத்திரம் வாசிக்கிறார் மார்க்ஸ். செல்லும் இடங்களில் எல்லாம் அந்நாட்டு பழங்குடி மக்களை அழித்தொழித்த ஐரோப்பிய இனவாதம் செழித்த சூழலில்தான் மார்க்ஸ் வாழ்ந்தார். அழிக்கும் இனம் அழிக்கப்படும் இனத்தை விட உயர்ந்தது என்ற அராஜக இனவாதத்திற்கும் அதன் பின்னணியில் உள்ள ஐரோப்பிய மேன்மை வாதத்திற்கும் மார்க்ஸ் விதிவிலக்கில்லை.
இதன் தொடர்ச்சியாக ”இங்கிலாந்து இரண்டு முக்கிய கடமைகளை இந்தியாவில் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது” என்கிறார்; ”ஒன்று அழிக்க வேண்டிய வேலை – ஆசிய சமூகத்தை அழிக்க வேண்டியது; அழித்து, மேற்கின் சமூகத்தை ஆசியாவில் நிறுவுவதற்கான பொருள்முதல் அஸ்திவாரத்தை அமைப்பது”.
கவனியுங்கள்: தொழில்யுக சமூகம்/ தொழிற்புரட்சி சமுதாயம்/ தொழிலாளர் சமுதாயம் என்று எதையும் சொல்லவில்லை- ”மேற்கின் சமூகம்” என்று பறைசாற்றுகிறார். அவ்வாறு சொல்கையிலேயே அது எல்லாவிதத்திலும் ஆசிய சமூகங்களிடமிருந்து மேம்பட்டது என்ற முன்தீர்மானத்தின் மையத்தில் நின்று கொண்டுதான் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார். மார்க்ஸின் ஐரோப்பிய மேன்மைவாதம் பளிச்சென்று வெளித்தெரியும் இடம் இது.
”வெறுக்கத்தக்க சுயநலத்தினால் இங்கிலாந்து இந்துஸ்தானத்தில் ஒரு சமூகப்புரட்சியைக் கொண்டு வந்து கொண்டிருக்கிரது என்பது உண்மைதான்; முட்டாள்தனமாக அதனைச் செயல்படுத்துகிறது” என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு மன்னிப்புத் தரும் விதமாய் எழுதுகிறார். ”கொடூரமாக, ஈவிரக்கமின்றி, அராஜகங்களினால், அநியாய வரிகளினால், செயற்கைப் பஞ்சங்களில் மக்களைக் கொன்று” என்றேல்லாம் சொல்லலாம், இப்படிப்பட்ட வர்ணணைகளை பூர்ஷ்வா முதலாளிகளுக்கு எதிராக அவர் பிற நேரங்களில் தாராளமாய்ப் பயன்படுத்துபவர்தான், என்றாலும் இங்கு அவ்வாறு சொல்வதில்லை. அதாவது வெறுக்கத்தக்க சுயநலமும், மக்களை அழிக்கும் சமூகப்புரட்சியும் அவருக்கு பிரச்சனையில்லை. அவற்றை ”முட்டாள்தனமாக” செயல்படுத்துவதுதான் அவருக்குப் பிரச்சனையாகிறது. ஆனால் அதுவும்கூட அடுத்த வரியிலேயே அவருக்கு முக்கியமில்லை என்றாகி விடுகிறது. “ஆனால் அது (அதாவது பிரிட்டிஷார் முட்டாள்தனமாய் செயல்படும் விதம்- அருணகிரி) இங்கே முக்கியமான கேள்வியில்லை. முக்கியமான கேள்வி என்னவென்றால்: ஆசியாவின் சமூக நிலையில் இப்படிப்பட்ட புரட்சி இல்லாமல் மனிதகுலத்தின் விதி முழுமையடைய முடியுமா? முடியாதென்றால், இங்கிலாந்து என்னதான் குற்றங்களைச் செய்திருந்தாலும் புரட்சியைக்கொண்டு வருவதில் தன்னையறியாமலேயே வரலாற்றின் கருவியாக அது செயல்பட்டுள்ளது”.
மீண்டும் அவர் சொல்வதைக் கவனியுங்கள்: ”பாட்டாளி வர்க்கப்புரட்சி முழுமையடைய முடியுமா” என்று கேட்கவில்லை. ”மனிதகுலத்தின் விதி முழுமையடைய முடியுமா” என்கிறார். ஆக, மார்க்ஸைப்பொறுத்தவரை ”மனிதகுலத்தின் விதி” மேற்கின் சமூகத்தை ஆசியாவில் நிறுவுவதில் அடங்கியுள்ளது. பிற நிற மக்களை நாகரீகப்படுத்த வேண்டிய பொறுப்புச் சுமை வெள்ளையினத்திற்கு இருப்பதாய் எழுதிய இனவெறியாளரான ருடியார்ட் கிப்ளிங்கும், மனிதகுலத்தின் விதி மேற்கின் சமூகத்தை ஆசியாவில் நிறுவுவதில் உள்ளது என்று எழுதிய மார்க்ஸும் ஒருங்கிணையும் புள்ளியாக ஐரோப்பிய இனமேன்மைவாதம் உள்ளது. மார்க்ஸ் இன்னமும் ஒருபடி மேலே போய் அதற்காக மக்களின் சித்திரவதை விலையாகத் தரப்பட்டது என்றாலும் கூட அது வரவேற்கத்தக்கதே என்று அன்றைய ஜெர்மன் படைப்பாளியான (மீண்டும் ஒரு ஜெர்மனிக்காரர்!) Goethe-இன் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி சொல்கிறார்:
”… பழைய உலகம் உடைந்து அழிவது என்னதான் கசப்பான காட்சியாய் நம் தனிப்பட்ட உணர்வுகளுக்கு இருந்தாலும் வரலாற்றுப்பார்வையில், ”மிகுந்த இன்பத்தைத் தருகின்ற இந்த சித்ரவதை நமக்கு உளைச்சல் தர வேண்டுமா?” என்று கூத்(Goethe)துடன் சேர்ந்து வியக்க நமக்கு உரிமை இருக்கிறது”
இதைப்படிக்கையில் ஒரு மனிதாபிமானியின் சித்திரம் உங்களுக்குத் தெரிகிறதா, அல்லது எதிர்கால கம்யுனிஸ அராஜக சர்வாதிகாரிகளான ஸ்டாலின், மாவோ, போல்போட் ஆகியோரை எதிர்நோக்கும் திட்டம் தெரிகிறதா? இன்று மனித உரிமை பேசும் எவரும் மார்க்ஸிஸ்டுகளாக தம்மை அடையாளம் காண்பது என்பது உண்மையில் ஒரு திகிலூட்டும் நகைச்சுவை.
முதலாளிகளுக்கு தொழிலாளர்கள் என்பவர்கள் உற்பத்திக்கான கருவிகள் என்றால், மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் அவர்கள் கம்யூனிஸப்புரட்சிக்கான கருவிகள். முன்னதில் அவர்களுக்கு சோறு கிடைக்கும் என்கிற நம்பிக்கையாவது இருந்தது. பின்னதில் அதுவும் கிடையாது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சுவனக்கனவு மட்டுமே உண்டு.
மார்க்ஸிஸம் என்கிற பேரழிவு மதவாதம்
மனிதகுலத்தின் மீட்பர் இறுதிநாளின் பேரழிவில் வெளிப்பட்டு மனிதகுலத்துக்கான விடியலைத்தருவார் என்பது அடிப்படைவாத ஆபிரஹாமிய இறையியலின் அடிநாதம். இதே அடிநாதம் மாபெரும் அவல அழிவின் இறுதியில் தொழிலாளர்களின் “மீட்பு” நடைபெறும் என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆரூடம் கூறியதில் எதிரொலிப்பதைக் காணலாம். இது தற்செயல் அல்ல. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் 19-ஆம் நூற்றாண்டு மதவாத ஜெர்மனியின் மைந்தர்கள்.
ஐரோப்பாவின் கிறித்துவ தத்துவ மையம் என்று இன்றும் சொல்லக்கூடிய நாடு ஒன்று உண்டென்றால் அது ஜெர்மனிதான். கத்தோலிக்கத்திற்கு எதிராக (ப்ராட்டஸ்டண்டு என்று) ஒரு இறையியலையே உருவாக்கி வளர்த்தெடுத்த பின்னணி உள்ள நாடு ஜெர்மனி. சொல்லப்போனால் மத அடிப்படைவாதத்தில் இறுகிப்போய் நவீன கால ஐரோப்பாவில் பரவிய எவ்வகை முற்போக்கு சிந்தனையின் வீச்சுககளையும் உள்வாங்காமல், 20-ஆம் நூற்றாண்டில் கூட கலாசார அளவில் மிகவும் பின்தங்கிக்கிடந்த கிறித்துவ நாடு ஜெர்மனி ஆகும். இது பலருக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஏனெனில் தொழிற்புரட்சியின் பெரு உற்பத்திக் கூறுகளை முழுமையாய் ஏற்று இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் மாபெரும் தொழில் சக்தியாய் உருவான தேசம் ஜெர்மனி. அதே சமயம் தொழிற்புரட்சி பிற ஐரோப்பிய நாடுகளில் உண்டாக்கிய மத அடிப்படைவாத எதிர்ப்பு, கலாசார பன்முகத்தன்மை, பரந்த முற்போக்கு சிந்தனைகள் ஆகியவை ஜெர்மனியின் ஒட்டு மொத்த சமூக உளவியலில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, ஒரே நேரத்தில் தொழிற்புரட்சியின் பொருளாதார நலன்களை ஏற்றும், அது தேசத்தின் உளவியலில் உருவாக்கும் பரந்த சிந்தனைகளையும் முற்போக்கு மாற்றங்களையும் நிராகரித்தும் வல்லரசாய் உருவான ஐரோப்பிய நாடு ஒன்றே ஒன்றுதான்: அதுதான் ஜெர்மனி.
நவீன காலத்திற்கு ஐரோப்பிய சமூகங்கள் நகர்ந்தபோது ஜெர்மனி மட்டும் இடைக்கால இருண்ட கிறித்துவ அடிப்படைவாத விழுமியங்களில் மூழ்கியே கிடந்தது என்கிறார் ஹிட்லரின் விருப்பக் கொலையாளிகள் (Hitler’s willing executioners) புத்தக ஆசிரியர் கோல்ட்ஹேகன், (இரண்டாம் உலகப்போரின் யூதப்படுகொலைக்கான களன் ஜெர்மனியில் உருவாக இதுவே பின்னாளில் அடிப்படைக்காரணமாக அமைந்தது என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறார் கோல்ட்ஹேகன். ஹிட்லர் கால ஜெர்மனி குறித்த உண்மைகளை முகத்திலறையும் நிரூபணங்களுடன் கோல்ட்ஹேகன் எழுதிய ”ஹிட்லரின் விருப்பக் கொலையாளிகள்” நூல் பல விருதுகளை வென்றது). 1930-களில் இப்படிப்பட்ட மதவாத பிற்போக்கில் ஜெர்மனி அமிழ்ந்து கிடந்தது என்றால் நூறு வருடங்களுக்கு முன் அது எப்படிப்பட்ட இறுக்கமான மதவாத சமூகச் சூழலில் இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.
இந்த சமூகக்களத்தில், அதன் ஆயிரமாண்டு கருத்தியல் தொன்மத்தின் ஆழத்தில் படிந்து போயிருந்த பேரழிவுவாதம் (apocalyptism) மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும்கூட பீடித்ததில் வியப்பில்லை. மேற்கின் ஆபிரஹாமிய இறையியல், ஒன்றை அழித்து மட்டுமே மற்றொன்று வளரும் என்ற எளிய இரட்டை நிலை உளவியலை அடித்தளமாய்க் கொண்டது. கிறித்துவ சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஆட்களை தெரிவு செய்ய நம்பிக்கையாளர்கள்- நம்பிக்கையற்றவர்கள் என்ற எளிய இருநிலை அதற்குப் போதுமானதாய் இருக்கிறது. இந்த இரட்டை நிலை சிந்தனையில் முரண் அம்சம் என்பது முழுமையாய் அழிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னை ஏற்காத பாகன் குடும்ப குழந்தைகளைக்கூட கொல்லும் ஆபிரஹாமியக்கடவுளின் மனோநிலைதான், ஜார் குடும்ப வாரிசான சிறு குழந்தைகளைக்கூடக் கொன்று அவர்களது உடல்களை அமிலத்தில் அழுத்திக் கரைத்தழித்த லெனினின் கம்யூனிஸ வெற்றியில் காணக்கிடைக்கிறது.
லெனினின் நடைமுறைக் கம்யூனிஸத்தின் தத்துவ அடிப்படை, கிறித்துவ இறையியலின் தந்தை தேசமான ஜெர்மனியின் இறுகிப்போன ஆபிரஹாமிய தத்துவப்பின்புலத்தில் உருக்கொண்ட ஒரு விஷயம். யூதர்களுக்கெதிரான ஜெர்மனியின் சட்டங்களில் இருந்து தப்பிக்க கிறித்துவரானவர்கள் மார்க்ஸின் பெற்றோர்கள். ஏங்கெல்ஸின் பெற்றோர் பிராட்டஸ்டண்டு அடிப்படைவாதிகள். இருவருமே கடவுள் என்கிற கருத்துமுதல்வாத சிந்தனையை மறுத்து பொருள்முதல்வாத சிந்தனையை முன்வைத்தவர்கள் என்றாலும் அவர்களது சித்தாந்தங்களின் பல கூறுகளில் ஆபிரஹாமிய அடிப்படைவாதம் விரவித்தான் கிடந்தது. 20-ஆம் நூற்றாண்டின் முக்கிய ஜெர்மன் மார்க்ஸிஸ்ட் தத்துவவாதியான எர்ன்ஸ்ட் பளாக் ரஷ்ய கம்யூனிசப்புரட்சி பற்றி பேசுகையில் ”போல்ஷ்விக்குகளின் கம்யூனிஸம் கடவுளுக்காக நடத்தப்படும் போரின் ஒரு பகுதியே” என்றார். (இடதுசாரி கிறித்துவவாதத்தில் (Liberation Theology) எர்ன்ஸ்ட் ப்ளாக் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்),
மத அடிப்படைவாததில் ஊறி உருவான இப்படிப்பட்ட பேரழிவுவாத சிந்தனைதான் எதிர்-கருத்துகள் அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டிய அம்சமான ஒன்றாக மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் பார்க்க வைத்தது. மக்கள் அழிவைக்கூட கம்யூனிஸ ”மீட்பு” நாளை நோக்கி விரைவுபடுத்தும் ஒரு அம்சமாக, வரவேற்கத்தக்கதான விஷயமாக அவர்களைக்காணச் செய்தது. இவ்வகை தீர்ப்பு நாள் ஆரூடங்களையும் அந்தத் தீர்ப்புநாளின் அழிவினை ஆவலுடன் எதிர்நோக்கும் விசித்திரத்தையும் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடத்தில் எளிதாய்க் காணலாம். கிறித்துவத்திலும் இஸ்லாத்திலும் தீர்ப்பு நாளில் அந்தந்த மதங்களின் நம்பிக்கையாளர்கள் மீட்கப்படுகிறார்கள். பிற மத நம்பிக்கையாளர்கள் அழிக்கப்படுகிறார்கள். மார்க்ஸீயத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படுகிறார்கள். பிறர் (முதலாளிகள் மட்டுமல்ல, எதிர்புரட்சிக்காரர்கள், பிற்போக்குவாதிகள் என அனைவரும்) ஒழித்துக்கட்டப்படுகிறார்கள். இதன் நிதர்சன நீட்சிதான் ஸ்டாலின், போல்போட், மாவோ என்று அத்தனை கம்யூனிஸ அராஜகர்களின் பேரழிவுக்கொலைச் செயல்களிலும் நாம் காண்பது.
செல்வ உருவாக்கம் பூஜ்ய சமன்பாடில்லை
மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் பொறுத்தவரை மக்களின் அவலமும் அழிவும் – அம்மக்கள் நிராதரவான ஏழைகளாகவே இருந்தாலும் கூட- அவை நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்தை நோக்கிய வரலாற்று இயக்கத்தின் பகுதி என்பதால் அவசியமானவையேயாகும். ஏனெனில் அவை நிகழாவிட்டால் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடுத்த கட்டமான தொழிலாளி வர்க்கப்புரட்சி நடந்தேறாது. வர்க்கப்புரட்சி இல்லாவிட்டால் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் எப்படி வரும்? தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாமல் கம்யூனிஸம் நடைமுறைக்கு வர முடியாதே?!. ஆக, தம் சித்தாந்தங்களான வரலாற்றுப்பொருள்முதல்வாதமும் அதன் விளைவான கம்யூனிஸ ஆரூடங்களும் உண்மையாக வேண்டுமானால் அவலமும் பேரழிவும் ”இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை” என்ற நிலையும் வர வேண்டியது அவசியமானது. அந்த நிலையை துரிதப்படுத்தும் எந்த நிகழ்வும் வரவேற்கத்தக்கது.
இந்த மனோநிலையை மார்க்ஸ்-ஏங்கெல்ஸிடம் மட்டுமல்ல, இன்றைய மாவோயிஸ்டுகளிடமும் காண முடியும். கிராம ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவசியக் கட்டமைப்புகளான பள்ளிக்கூடங்களையும், சாலைகளையும், ரயில்பாதைகளையும் தகர்த்து, அவர்களின் வாழ்வில் நம்பிக்கையும் கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாட்டையும் கொண்டு வரும் அத்தனை சாத்தியங்களையும் ஒழிப்பதன் மூலம் நம்பிக்கையின்மையின் விளிம்பிற்கு அவர்களை நகர்த்திச்சென்று விட்டால்- அவ்வாறு நகர்த்திச்செல்வதன் மூலம்- தாம் ஆவலுடன் எதிர்நோக்கும் வர்க்கப்புரட்சி என்ற மீட்பு நாளை துரிதப்படுத்திவிட முடியும் என்பது மாவோயிஸ்டுகளின் நம்பிக்கை. அதாவது ஏழை எளியவர் நம்பிக்கையிழப்பது மாவோயிஸ்டுகளுக்கு நம்பிக்கை தரும் விஷயம். தங்கள் சந்ததிகளுக்கும் எதிர்காலத்தில் கூட முன்னேற்றம் கிடையாது என்று கிராம மக்கள் நம்பிக்கையிழந்தால் ஆயுதபுரட்சிக்கான மானுடத் தளவாடங்களாக அவர்களை மாற்றுவது எளிது அல்லவா?
பட்டினியும் வேலையின்மையும் பெருகப்பெருக, சர்வாதிகார ஆட்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. வேறு விதமாகச்சொன்னால், ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒவ்வொரு நிகழ்வும் சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கனவுகளுக்குக் குழிதோண்டுகிறது. ” People who are hungry and out of a job are the stuff of which dictatorships are made.” என்கிறார் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட். வர்க்கப்புரட்சி என்ற பெயர் சொல்லி உருவான ஒவ்வொரு அரசும் தனது ஆயுதங்களை அப்பாவி மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவதைத்தான் கடந்த நூற்றாண்டின் கம்யூனிஸ வரலாறு நமக்குக் காண்பித்து வருகிறது. ஆயுதத்தை விதைத்தால் அழிவைத்தான் அறுக்க வேண்டும். தமது சித்தாந்த வெற்றிக்கு மக்களின் தற்காலிக அழிவு கூட சரியான விலைதான் என்று மார்க்ஸீய பிதாமகர்கள் கருதியது பிற்காலத்தில் வந்த அத்தனை கம்யூனிஸ சர்வாதிகாரிகளுக்கும், எதிர்த்தரப்பாளர்களின் அடித்து அழிப்பதை நியாயப்படுத்தும் வசதியான தத்துவார்த்த தடியாகிப்போனது.
தொழிலாளர்களை அடித்துப்பிடுங்கி அதன் மூலம் மட்டுமே லாபம் காணும் நிறுவனம் என்பது இயல்பான முதலியத்தில் எங்கும் கிடையாது. முதலியத்தின் வளர்ச்சி என்பது சந்தை சார்ந்ததாய் இருக்கிறது. ஒரு நிறுவனம் வேகமாய் வளர்கையில் அதன் வளர்ச்சியில் தொடர்புடைய அனைத்து உறுப்பினர்களும் – காண்ட்ராக்டர்களிடமிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை- ஏதோ ஒரு வகையில் பயனடைகிறார்கள். வளர்ச்சி மட்டுப்படுகையில் அது தொழிலாளர் வாழ்வையும் பாதிக்கின்றது. ஆனால் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எளிமையாக இருநிலையாக முதலாளி-தொழிலாளி சமன்பாட்டை வரையறுத்துக்கொண்டனர்” “ ….பூர்ஷ்வாக்களின் உற்பத்தி உறவுகள் இரட்டைத் தன்மையுடதாயிருக்கின்றன. செல்வம் உற்பத்தி செய்யும் அதே உறவு நிலை ஏழ்மையையும் உற்பத்தி செய்கிறது…” என்கிறார் மார்க்ஸ். செல்வப்பெருக்கத்தை பூஜ்ய சமன்பாடாகக் (zero sum equation) காண்பதன் விளைவு இது. இது அடிப்படையிலேயே தவறுகளை உள்ளடக்கிய பார்வை என்று பல பொருளாதார மற்றும் அறிவியல் வல்லுநர்களால் இன்று நிறுவப்பட்டு விட்டது. தொழிலாளரின் திறனும், பொருளின் மதிப்பும் ஒரேவிதமாய் விலைமதிப்பிடக்கூடியவை அல்ல. (சிந்திக்க: உற்பத்தி விலை (cost) என்பதற்கும் மதிப்பு (value) என்பதற்கும் வேறுபாடு உள்ளது. தன்னைச் சந்திக்க வந்த சிறுமி அன்பளிப்பாகத்தந்த பென்சிலை ஒரு நாள் முழுக்க செலவிட்டு தேடிய மஹாத்மா காந்திக்கு அந்த பென்சிலின் மதிப்பு மிக அதிகமான ஒன்றாக இருந்தது. மார்க்ஸ் மஹாத்மாவிடம் அந்த பென்சிலின் உற்பத்தி விலையாக 2 பைசாவை தந்து விட்டு ”அதன் மதிப்பைத் தந்தாயிற்று, வேறு பென்சிலை வாங்கிக்கொள், எல்லாம் ஒன்றுதான்” என்றிருப்பார். கண்ணாடி, சிலிக்கான் சில்லு இரண்டும் மண்ணிலிருந்து பெறப்படுபவை; மின்னணுவியல் இல்லாமல் சிலிகான் சில்லுக்கு என்ன மதிப்பு? ஆனால் மார்க்ஸைப்பொறுத்தவரை மண்ணிலிருந்து கண்ணாடியைச்செய்ய சிலிகன் சில்லைவிட அதிக உழைப்பு தேவை என்றால் கண்ணாடிக்குத்தான் மதிப்பு அதிகம்; அந்த அடிப்படையில் சில்லுகள் பதிக்கப்பட்ட ஐஃபோனைவிட, முகம் பார்க்கும் கண்ணாடிகள் பதிக்கப்ப்ட்ட தகரச்சட்டங்கள் அதிக விலைக்கு விற்கப்படலாம்)
செல்வத்தை பூஜ்ய சமன்பாடாகக் கண்டால், என் செல்வம் அதிகரிக்க ஒரே வழி யாரிடம் செல்வம் இருக்கிறதோ அதனை எப்படியாவது எடுத்துக்கொள்வதுதானே! அந்த சிந்தனையில் முதலாளி செல்வம் சேர்ப்பது தொழிலாளி பணத்தை பிடுங்கி மட்டுமே என்று நிறுவுவதும், ஒன்றின் அழிவிலேயே மற்றொன்றின் வாழ்வு அடங்கியுள்ளது என்று நிறுவுவதும் எளிமையான விஷயம்தான். எனவேதான் மார்க்ஸ் ”வர்க்கங்களும் வர்க்கமுரண்களும் இல்லாதபோதுதான், அரசியல் புரட்சி இல்லாமல் சமூகம் வளர்ச்சி அடைய முடியும். அந்நிலை வரும்வரை –ஒவ்வொரு முறை பெரும் சமூகக் கலைப்பு நிகழும்போதும் “போர் அல்லது சாவு; ரத்தப்போராட்டம் அல்லது அழித்தொழிப்பு”… ஆகியவைதான் சமூக அறிவியல் விதியாக இருக்கும்” என்கிறார்.
”இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை” என்ற நிலை பாட்டாளி வர்க்கத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால், வர்க்கப் போர் வராது. வர்க்கப்புரட்சி வராமல் ரத்தப்போராட்டமும் அழித்தொழிப்பும் நிகழாது. இவை நிகழாவிட்டால், கம்யூனிஸ சர்வாதிகாரம் அரியணை ஏற முடியாது. கம்யூனிஸ சர்வாதிகாரம் அரியணை ஏற வரலாற்றின் இயக்கத்தில் முக்கியமில்லாத இனங்கள் (”வரலாறற்ற ஜனக்கூட்டம்” என்கிறார் மார்க்ஸ்) எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று இந்த மார்க்ஸீய பிதாமகர்கள் கருதினர். ஸ்லாவிய இன மக்களை ஐரோப்பாவின் பிற்போக்குக்கூட்டம் என் வர்ணிக்கும் ஏங்கெல்ஸ் ”ஐரோப்பிய பாட்டாளி மக்களின் நலனுக்காக இரக்கமின்றி அவர்கள் பலிகொடுக்கப்பட வேண்டும்” என்று அறிவிக்கிறார். மேலும் “அடுத்த உலகப்போர் பிற்போக்கு வர்க்கத்தையும் பரம்பரையும் மட்டுமல்லாமல் எல்லாவித பிற்போக்கு மக்களையும் பூமியிலிருந்து மறையச்செய்யும்;…அதுவும் சமூக இயக்கத்தில் முன்னோக்கி வைக்கப்படும் ஒரு காலடிதான்” என்கிறார்.
(தொடரும்)