பக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கலாம். அதில் இருப்பது ஒரு இளம் பெண்ணா அல்லது ஒரு வயது முதிர்ந்த பாட்டியா என்பது நீங்கள் படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விஷயம். பூமியில் எவ்வளவு எண்ணெய்யும் எரிவாயுவும் ஒளிந்திருக்கின்றன என்பதும் நாம் அலசும் விதம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலிய விஷயங்களைப் பொறுத்து பாட்டியிலிருந்து இளம்பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறது! நாம் ஐந்தாம் வகுப்பில் தெரிந்து கொண்டதுபோல், இருந்து அழிந்த உயிரியல் எச்சங்கள் பூமிக்கடியில் புதைந்து போனபின், பூமியின் உள்ளே நிலவும் வெப்பமும், அழுத்தமும் பல்வேறு ரசாயன மாற்றங்கள் வழியே அவற்றை சமைத்து கச்சா எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்ற புரிதலில் மாற்றம் ஏதும் இல்லை.