மனிதரை விடத் துடிப்பான எந்திரங்கள் தம்மை விடத் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி அவை மேலும் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி இவ்வாறாக படிப்படியாக எந்திரங்களின் துடிப்பு அம்சம் உயர்ந்துகொண்டே போவது நுண்ணறிவுப் பெரு வெடிப்புக்கோ(intelligence explosion) அல்லது ஒருமைத் தன்மைக்கோ (singularity) இட்டுச் செல்லும் என்று சிலர் கலக்கம் அடைகிறார்கள். நுண்ணறிவு எந்திரங்கள் வெகு விரைவில் மேன்மேலும் சூட்டிகையாக ஆகி அவற்றின் மொத்த அறிவுத் தொகுப்பு மனிதர்களால் புரிந்து கொள்ள முடிகிற சக்திக்கு மீறியதாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். மேம்பட்ட அறிவும் தொழில் நுட்பமும் கொண்ட எந்திரங்களின் ஆதிக்கத்தில் மனித இனம் அற்ப ஜீவிகளாகி ஒடுங்கி நிற்கும் நிலை வரக் கூடும் என்கிறார்கள்.