பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்

கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.
கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன.