வட்டிகொண்ட விசாலாட்சி

மதராஸில் இருந்தால் ஆந்திர தேசத்தில் உள்ள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவர் செல்லும் வாய்ப்புகள் இருக்காது என்று அவர் கருதினார். அதுவே உண்மையாயிற்று. பரம்புரம் என்ற ஊரில் நடந்த இலக்கிய பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்று சாப்பிடாமல் இருந்து பிடிவாதம் பிடித்தாலும் கூட விசாலாட்சி நினைத்ததை சாதிக்க இயலாமல் போனார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெற்றிகரமாக அவரை வெளியேற்ற முடிந்ததாக கணவர் மகிழ்ந்தார். தனக்கு விருப்பமான சாகித்ய சங்கத்தில் பணி செய்யும் சுதந்திரதத்தை தன்னிடமிருந்து பிடுங்கி கட்டுப்படுத்திய கணவர் மீது அதிருப்தியில் இருந்த விசாலாட்சி உரைநடை இலக்கியத்தின் மீது பார்வையைத் திருப்பினார். 1951ல் இருந்து கதைகளும் நாவல்களும் எழுதத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை பெண்களின் கோணத்தில் பார்த்து அன்றைய இயக்கங்களையும் போராட்டங்களையும் மதிப்பிட்டு அவர் படைத்த கதைக்கருக்கள் அதற்கு முன்பு யாரும் எழுதாதவை.