பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?

ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.