பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்து வருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறைபாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்து வருவதுதான். இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக் கூடாத அதீத காம இச்சைகள் இவைகள்தான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவி வருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை.