சான்டாக் தன்னை ஒரு திரைப்பட விமர்சகராகவோ, ஏன், ஒரு விமர்சகராகவோ கூடக் கருதவில்லை. “நான் விமர்சகர் அல்ல, அது கட்டுரையாளரிலிருந்து வேறானது,” என்று அவர் பாரிஸ் ரிவ்யூ நேர்காணலில் குறிப்பிட்டார்; “என் கட்டுரைகளை ஒருவிதக் கலாச்சாரச் செயல்பாடாகவே நான் பார்த்தேன்; எவை எழுதப்பட வேண்டுமோ அந்த அவசியத்தின் உந்துதலால் எழுதப்பட்டவை அவை.” தான் வியந்து போற்றியவற்றைப் பற்றியும், புறக்கணிக்கப்பட்டதாகத் தான் உணர்ந்தவற்றைப் பற்றியுமே அவர் பெரும்பாலும் எழுதினார்.⁴ அவர் திரைப்படங்களையும் இயக்கினார்: 1969 முதல் 1983 வரை சுவீடன், இஸ்ரேல் மற்றும் இத்தாலி நாடுகளில் எழுதி இயக்கிய நான்கு முழுநீளத் திரைப்படங்கள் அவை; இதில் 1973ஆம் ஆண்டுப் போர்க்களத்தின் முனையிலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட வாக்களிக்கப்பட்ட தேசங்கள் (Promised Lands) ஆவணப்படமும் அடங்கும்.
