அதிருஷ்டவசமாக மறுநாள் ஒரு ஃபிரெஞ்சுக் கப்பல் சைகோனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. அவன் அதில் ஏறிக்கொண்டான். சைகோனில் பத்திரமாக இருக்கலாம்; அவன் அங்கே போகக்கூடும் என்று அவளுக்கு ஒருபோதும் தோன்றாது. அப்படித் தோன்றியிருந்தால் நிச்சயமாக இதற்குள் மோப்பம் பிடித்திருப்பாள். பாங்காக்கிலிருந்து சைகோன் செல்ல ஐந்து நாட்கள் பயணம் செய்தாக வேண்டும். செல்வதற்கான படகுகளும் அழுக்காகவும் கூட்ட நெரிசலோடும் அசௌகரியமாகவும்தான் இருக்கும்.
