அளவுமீறா அமுதப் பெருக்கு

கையாளுவதற்கு கடினமான கருவிகளில் நாகஸ்வரமும் ஒன்று. வாசிக்கப் படும் சூழல், வாத்தியத்தின் எல்லை, வாசிப்பவரின் திறன் என்ற விஷயங்களைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் மறைந்து வாசிக்கப்படும் ராகம் மட்டுமே வாசிப்பவரையும், கேட்பவரையும் ஆட்கொண்டு வெளிப்படுத்திக் கொள்ளும் தருணங்களை நாகஸ்வர கச்சேரிகளிலேயே அதிகம் காண முடியும். அப்படி பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வப்போது வாசிப்பில் பிசுறுகள் தோன்றுவதுண்டு. காருகுறிச்சியாரின் வாசிப்பில் நமக்குக் கிடைக்கும் பதிவுகளில், வற்றாது பெருகியோடும் கற்பனைப் பெருக்கில் எத்தனை நுட்பமான சங்கதியை வாசித்த போதும், அவர் மனம் நினைத்ததை ஸுஸ்வரமாய் அவர் வாத்தியம் வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.