தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ

உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.