சென்ற வருடம் சொல்வனம் பதிப்பகம் வெளியிட்ட சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகம், இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டாம் பதிப்பாக வெளியாகிறது. முதல் பதிப்புக்கு எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய முன்னுரையை இத்தருணத்தில் வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
சுகாவுடைய இந்தப் புத்தகத்துக்கு என்ன பெயர் என்றே தெரியாது. மனுஷனுக்குப் பெயர் வைக்கலாம். நெல்லையப்பன், கோமதிநாயகம், ஆவுடையப்பன், சங்கரலிங்கம், காந்திமதி, தெய்வானை, இசக்கி, சுப்புலட்சுமி என்று ஒரு அடையாளத்துக்குப் பெயர் வைப்பது சரிதான், ஆனால் அவர்கள் வாழ்கிற இந்த வாழ்வுக்கும் ஒட்டுமொத்த அனுபவங்களுக்கும் என்ன பெயர் வைக்கமுடியும்? பேரனுபவங்களும் பெருநிலைகளும் பெயர்களை அடையாளங்களை எல்லாம் உதறி அப்பால் செல்பவையே. அந்த அளவில், பெயர் வைக்கப்படாத அல்லது வைக்கப்பட்டு நான் அறியாத இந்தத் தொகுப்புக்குள் கடந்த சில தினங்களாக நான் குடியிருந்து வருவது ஒன்றும் தப்பில்லை. அதுதான் சரியானது கூட.
கொஞ்ச காலமாகவே, திருநெல்வேலிக்கு ஒரு யோகம் அடிக்கிறது. கலாப்ரியா ‘’நினைவின் தாழ்வாரங்கள்” என்று ஒன்று எழுதினாலும் எழுதினான், அப்படியே சுடலைமாடன் கோவில் தெருவில் ஆரம்பித்து, எங்கள் ஊரின் மூலை முடுக்கு எல்லாம் ‘நடு சென்டருக்கு’ வந்துவிட்டன. சில கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிய பிறகு ஒரு முழிப்பு வந்துவிடும். வௌவால் நாற்றம் எங்கே போயிற்று என்று தெரியாது. எல்லாப் பிரஹாரத்திலும் வேட்டி தடுக்குகிற சத்தமும் பட்டுச் சேலை உரசலும் ஜாஸ்தியாகிவிடும். கோவில் வாசலில் கழற்றிப் போட்டிருக்கிற செருப்பு விதம் விதமாகப் புரண்டு கிடக்கிற அழகைச் சொல்லிமுடியாது.
காணாமல் போய்விட்ட லட்சுமி டாக்கீசும், ராயல் டாக்கீசும், பார்வதி டாக்கீசும், ஆட்டத் திவசத்திற்குத் துடைத்துக் குங்குமப் பொட்டுவைத்து மாலை போட்டது மாதிரி, அதன் அதன் ஃப்ரேம் போட்ட சிரிப்புடன் நம்மைப் பார்க்கும். ‘நம்மள அறியாம’ நாம் நினைவுகளைக் கும்பிட்டுக் கொள்வோம். பொருட்காட்சியும் ஆனித் திருவிழாவும், சமைஞ்ச பிள்ளையைச் சடங்கு வீட்டில் எடுத்த ஃபோட்டோ மாதிரி, ஜடையில் தாழம்பூ வைத்துத் தைத்து, முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொண்டு வெட்கப்படும்.
இப்படி எவ்வளவோ நடந்தது.
அதற்குப் பிறகு கலாப்ரியாவே, குங்குமத்தில், “ஓடும் நதி” எழுதினான். அவன் எழுத எழுத, இனிமேல் திருநெல்வேலியைப் பற்றி எழுதுகிறதற்கு பாக்கி ஒன்றுமே இல்லை. மிச்சம் மிஞ்சாடி இல்லாமல் வள்ளிசாக எழுதியாயிற்று. இனிமேல் நடு ஆற்றுக்குள் உறை இறக்கினால்தான் உண்டு என்றுதான் தோன்றியது.
சுகா “யார் சொன்னது அப்படி”’ என்கிறார்.
‘நாந்தான்’ என்று லேசாகப் பம்மிக்கொண்டு சொன்னால்,
“உங்களுக்கு என்ன கோட்டியா பிடிச்சிருக்கு. ரெண்டு நாளா மழ ஊத்து ஊத்துண்ணு ஊத்தினதுல, தைப்பூச மண்டபம் முங்கித் தண்ணி போகுதுண்ணு பேப்பர்ல போட்டிருக்கான் பாக்கலையா? மண்டபத்து உச்சியில ஆட்டுக்குட்டி நிக்குத படம் கூட வந்திருக்கு” என்று கிழிக்கிறார்.
‘கண்ணு என்ன பொடதியிலயா இருக்கு?’ என்று கேட்காதது ஒன்றுதான் குறை. கட்டன் ரைட்டா அப்படிக் கேட்கும்போது நான் மூச்சுக் காட்டமுடியுமா?
ஆமாம் தைப்பூச மண்டபம் முங்கித்தான் போகிறது.
சுகாவின் பக்கங்களில் முன்னடித் துறையிலும் குறுக்குத் துறையிலும் செங்காமட்டைக் கலரில் புது வெள்ளம் சுழித்துப் போகிறது. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு நதி, ஒரு வெள்ளம், ஒரு படித்துறை, ஒரு கல் மண்டபம். யார் யாரோ முங்கிக் குளிக்கிறார்கள், யார் யாரோ தலை துவட்டுகிறார்கள், எப்போதாவது யாரோ மிதந்து செல்கிறார்கள். கருப்பந்துறையில் கரைத்த சாம்பல் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஒரு செம்பருத்தி மிதந்து செப்புக்குடத் தண்ணீருக்குள் புகுந்துவிட முட்டுகிறது. தாழப் பறக்கிறது ஒரு மீன் கொத்தி. நல்ல வேளை நகக்கண்களில் அழுக்கிருக்கிறது மீன் கடிக்க. செம்பகத்தக்காவை கேரியரில் வைத்து சைக்கிளில் மிதித்துக் கொண்டு போகிற அண்ணனை ’முன்னபின்ன’ பார்த்ததே இல்லை.
சுகா யாரைப் பற்றி எழுதினாலும், தாமிரபரணி ஆற்றின் ஈரம் சொட்டுகிறது.
எல்லாம் அனேகமாக நான் அறிந்த நிகழ்வுகள், நான் பார்த்த மனிதர்கள், நான் நடமாடிய தெருக்களும் இடங்களும். ஆனால் அந்த நிகழ்வுகளும் மனிதர்களும் இடங்களும் சுகாவிடம் அபாரமானதொரு உயிர்ப்பையும் அசைவையும் அடைந்து விடுகிறார்கள், விடுகின்றன.
முகத்தின் எந்த இடத்தின் மேல் வெயில் விழவேண்டும் என்பதை விட, எந்த இடத்தில் விழக்கூடாது என்பதை அறிந்த நேர்த்தியான படங்களை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லார் முகத்திலும் அப்படியொரு சந்தோஷம். இத்தனைக்கும் அவர், ‘கொஞ்சம் சிரிங்க’ என்று சொல்வதே இல்லை. தானாகவே நமக்கு சிரிப்பு பொங்குகிறது. அது சிரிப்பு கூட அல்ல, சிரிப்பாணி.
ஒரு அறுபது வயதுக்காரனாக நான் திரும்பிப் பார்க்கிறவற்றை, நாற்பது வயதுக்காரராக அவர் திரும்பிப் பார்க்கையில், இரண்டு பார்வைகளுக்கும் இடையில் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு பேரும் எல்லோரையும் அப்படியே ஆவி சேர்த்துக் கட்டிக் கொள்கிறோம். சுகா அப்படிக் கட்டிக் கொள்வதற்கு முன் அல்லது பின் அல்லது முன்னும் பின்னுமே ஏதாவது கிசும்பும் கிண்டலும் கேலியுமாக நிறையப் பேசுகிறார். அந்த நகைச்சுவை அவருடைய வம்சா வழிச் சொத்து. என்னுடைய பத்திரத்தின் தபசிலில் அது ஒரு இணுக்கு கூட இல்லை. அப்படி மந்திரம் மாதிரி வாய் ஓயாமல் ஏதாவது சொல்லச் சொல்ல, உருவேத்தினது போல, அந்தச் சொல்லுக்குள்ளிருந்து புடைப்புச் சிற்பங்களாக ஆட்கள் மேலெழுந்து வருகிறார்கள். ஆட்களின் எடைக்கு எடை, பேர்பாதியாக அவர்களுடைய திருனவேலி பாஷையையும் சேர்த்து நிறுத்துப் போடப் போட, அவர் எடுத்த மேற்படி புகைப்படங்கள் தத்ரூபமாக நம் முன்னால் நடமாட ஆரம்பித்து விடுகின்றன.
இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது.
‘அதான் சொல்லீட்டேனே’ என்று சுப்பையாவின் தம்பி முடியும். ‘எந்த சந்திரா’ என்று கேட்டான் குஞ்சு என, சந்திராவின் சிரிப்பு. பன்மொழிப் புலமை முடிவது, ‘அந்த நபர் காலஞ்சென்ற யாகவா முனிவர். மொழி இனான்ய மொழி’ என்று. ‘ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பார்க்கலை’ என்று கடைசி வரியில் சுந்தரம் பிள்ளை பெரியப்பா சொல்லும்போது, ஜயண்ட் வீல் உயரம், நெல்லையப்பர் கோவில் கோபுரத்தை விட கொஞ்சம் ஜாஸ்தி என்று புரியும். ஹார்மோனியம் பற்றிய பதிவின் கடைசி வரியில் உண்டாகும் துக்கம் பாறாங்கல் போன்றது. இந்தத் துக்கத்திற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, ‘என்ன சார் சாப்பிடுறீங்க’ என்று கருப்பையா பிள்ளையின் மகன் கேட்கிறதுடன் முடியும் விஞ்சை விலாசின் சுவை.
சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்? அவருடைய பதினேழு பதினெட்டு வருட சினிமா அனுபவங்கள், அதுவும் வாத்தியார் என்று மட்டுமே அவர் அழைக்கிற பாலு மஹேந்திரா என்கிற உயர் கலைஞனிடம் கற்றுக் கொண்ட வித்தையே, முடிவை நோக்கி நகர்வதற்கும் நகர்த்துவதற்குமான, கச்சிதமான அளவில் கத்தரிக்கப்பட்ட வரிகளை மட்டும் முன்வைக்கிற இந்த நுணுக்கத்தை அவருக்கு அளித்திருக்க வேண்டும்.
சுகா ஒரு போர்ட்ரெய்ட் ஓவியர் போல. அவரை ஈர்க்கிற கச்சிதமான முகங்களைத் தேர்ந்தெடுத்து வரைந்து நம் பார்வைக்கு வைக்கிறார். அப்படி வரைந்து வைக்கப்பட்ட முகங்கள் நமக்கும் மிக நெருக்கமான முகங்கள் ஆகிவிடுகின்றன.
குஞ்சரமணி என்ற குஞ்சுவை விடுங்கள். சுகாவுக்கும் விட நமக்கு குஞ்சு நெருக்கமாகி விட்டான், ‘ஏ, நம்ம சேக்காளில்லா டே, புள்ளிக்காரன்’ என்று அவனைச் சொல்லத் தோன்றுகிறது. அவனைத் தவிர, என்று அடுத்த பாராவை ஆரம்பிக்கும் முன்னால், எனக்கு லேசாக ஒரு டௌட் வருகிறது. இந்த ‘குஞ்சு’ என்ற பெயரில் அப்படி யாருமே இருந்திருக்க மாட்டார்களோ? ஒரு வாசிப்பு சுவாரசியத்திற்காக, ஒரே ஜாடையில் இருக்கிற அண்ணன் தம்பிகளை, ‘ஒண்ணாப் பண்ணி ரெண்டா புட்ட மாதிரி இருக்கே’ என்று சொல்கிற மாதிரி சுகா தன்னையே அப்படிப் பிட்டு, இன்னொருத்தராக நடமாட விட்டிருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்படிச் செய்தாலும் தப்பில்லை. அதற்கு என்ன முனிசிபாலிட்டியில் போய் லைசன்சா வாங்க வேண்டும், கிடையாதே. தாராளமாக அப்படிச் செய்ய அவருக்கு ரைட் உண்டு. மேலும், அவர் ஒரு இடத்தில் கூட, ‘சொல்லுவதெல்லாம் உண்மை’ என்று எந்தக் கோர்ட்டிலும் அடித்துச் சத்தியம் பண்ணவும் இல்லை. சுவாரசியம் என்று ஒன்று உண்டு இல்லையா, அது போல இது ‘சுகாரசியம்’. அவ்வளவுதான்.
சரி. குஞ்சு எப்படியும் இருக்கட்டும்.
அந்தக் குட்டை ஆச்சியும், மாம்பழத்தாச்சியும் பசு ஆச்சியும் எப்படிப் பொய்யாக இருக்க முடியும். பிரமநாயகத் தாத்தா புருடா என்று யாராவது ருசு பண்ணினால், பாவம் அந்த விஜய லலிதாவுக்கே வருத்தமாகப் போகும். காந்தி நகரைக் காலிபண்ணி விட்டுப் போனாலும் போய்விடலாம். ஜே.கே ரசிகரான ஏ.வி.எம் காலனி கோபாலன் மேல் சந்தேகமா என்ன, ஓங்கூர்ச் சாமியார் சிரிக்க ஆரம்பித்துவிடுவார். அலங்காரத்தம்மாள் என்ன செய்வார் என்று உடனே தீர்மானிக்க முடியாது. பெயர் வேண்டுமானால் முன்னே பின்னே இருக்கலாமே தவிர, மந்திர மூர்த்தி மாமா போன்ற காதல் மன்னன்களை நாம் பார்க்காதவர்களா? சாமி கொண்டாடி அருணாசலம் பிள்ளை வாசல் திண்டில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் போய்ப் பாருங்கள். இப்பவும் உச்சினிமாகாளி கொடை சமயம் அவர் கையில் வைத்திருக்கும் கப்பரைத் திருநீறு வாசம் அடிக்கிறதா இல்லையா.
அரணாக் கயிறு கோமணத் துணியை நம்பாத மாதிரி, இது போல வெட்டிக் கேள்விகள் எல்லாம் வரும் என்பதால்தான், அவ்வப்போது ஒரு நம்பகத் தன்மைக்காக, நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன், ஜெயமோகன், பாரதிமணி, வ.ஸ்ரீ, சீமான் எல்லாம் கௌரவ நடிகர்கள் மாதிரி வந்து போகிறார்கள். அதிலும், “கை வீசம்மா கை வீசு சீன் ஒண்ணுக்கே துட்டு செத்துது” என்பதற்கு ஈடாக, பாரதிமணி அசத்தி விடுகிறார். ‘பாட்டையா கொண்ணுட்டேரு வே’ என்று தரை டிக்கட்டில் இருந்து விசில் சத்தம் பறக்கிறது.
இதையெல்லாம் விட முக்கியமானது ஒன்று. தாமிரவருணி போல அவருக்குள் சங்கீதம் ஒரு ஆறாக ஓடுகிறது. இரண்டும் ஒன்றாகக் கூட இருக்கலாம் அவருக்கு. தீரா நதிதான் தீரா இசை. எங்கே எல்லாம் இசை சம்பந்தமாக வருகிறதோ, அங்கே எல்லாம் அவர் வேறு ஆள் ஆகிவிடுகிறார். அதுவரைக்கும் நாம் கையைத் தோள் மேல் போட்டுப் பேசிக்கொண்டு இருந்தவர் இவர்தானா என்று தோன்றிவிடுகிறது. நாஞ்சில் நாடனாவது பக்கத்தில் நிற்கலாம். நான் ஒரு எட்டு அடியாவது தள்ளி நிற்கிறதுதான் மரியாதை, தவ்வித் தவ்வி உச்சாணிக்கு அப்படி அவர் போகிறதை என்னை மாதிரிக் கூட்டாளி, ஏறிட்டுப் பார்த்துக்கொண்டு நிற்கவேண்டியதுதானே தவிர, வேறு எதுவும் செய்வதற்கில்லை.
லோகநாயகி டீச்சர், ஜி.ஆர் எனும் ஜி.ராமனாத அய்யர், ஆர்கன் வாசிக்கும் கோயில் பிள்ளை, கிருஷ்ணன் சார் வைத்திருக்கிற ‘பொட்டி’, டேப் சாய்பு, வி.கே.புதூர் வினாயகத்துப் பெரியப்பா (நாத தனுமனுஷம் உச்ச உயிர்ப்புடைய ஒரு சித்திரம்), பேங்க் பெரியப்பா, இளைய ராஜா, இப்படி யார் ஞாபகமாவது வந்து விட்டால், அந்த நினைவின் புள்ளியில் சுகா அப்படியே காணாமல் போய், அவருடைய இடத்தில் ‘விளக்குப் பொருத்தி வச்ச மாதிரி’ அசையாமல் ஒரு தீப மங்கள ஜோதி எரிய ஆரம்பித்து விடுகிறது.
படித்து முடித்து விட்டோம். கொஞ்சம் கட்டையைச் சாய்ப்போம் என்று படுத்தால், ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒரு பெயர், விஞ்சை விலாசின் சுவை, கருப்பையா பிள்ளையின் இளைய மகன், முருகன் சாமி பேரு, இசைமேதையின் புகைப்படம், ஹார்மோனியம் என்று அடுக்கடுக்காகவும் சீட்டுக்கட்டுக் கலைத்துப் போட்ட மாதிரியும் ஒவ்வொன்றாக ஞாபகம் வருகிறது. ‘இவனுக்குண்ணு எப்படி இத்தனை பேரு கண்ணுல தட்டுப் படுதாங்களோ?’என்று ஆச்சரியம் . அந்த ஆச்சரியம் கொஞ்ச நேரம்தான். சம்பந்தமே இல்லாமல் தொண்டையை அடைக்கும். மூசு மூசென்று அழலாம் என்று தோன்றும். ‘என்ன மூதி, அழுதுக்கிட்டு இருக்கே?’ என யாரும் கேட்டுவிடுவதற்குள் கண்ணைத் துடைத்துக் கொள்வோம். துடைத்துக்கொள்வதால் மட்டும் எந்த அழுகை நின்றிருக்கிறது? ‘என்னடே?’ என்று யாராவது தோளை உலுக்குவார்கள். ‘தாயார் சன்னதி’ ஞாபகம் வந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? சொல்லாமல் இருப்பதற்கும் சில விஷயங்கள் உண்டு இல்லையா?
இதற்குக் கொஞ்சமும் குறையாத ஜீவனுடையது, இவர் காட்டுகிற பதின்பருவக் காதலிகளும் காதலும். ஒரு விடலைப் பருவத்தின் களங்கமற்ற, சேதாரமில்லாத எளிய உணர்வுகளை, மிகுந்த இயல்புடன் இவர்கள் தாண்டிப் போகிற விதத்தை இவ்வளவு அழகாக இவரால்தான் சொல்ல முடிகிறது.
இப்படி ஒன்றில் இருந்து நூறு வரை, ஒரு தப்பு விடாமல். கரெக்டாக எண்ணத் தெரிந்தவர், வாய்ப்பாடு கிளாசுக்கே வருவதற்குப் பயப்படுகிற என்னைப் போய் எதற்கு முன்னுரை எழுதச் சொன்னார் என்று தெரியவில்லை. உலகத்தில் ஒவ்வொன்றும், ‘என்ன, ஏது, எவிடம்’ என்று தெரிந்தா நடக்கிறது? அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் போல.
‘பாட்டையா, வந்து பொண்ணு மாப்பிள்ளைக்குத் திருநாறு பூசுங்க’ என்று சொன்னதும் கம்பை ஊணி எழுந்திருந்து போய் பூசிவிட்டு வராமலா இருக்கிறார்கள்?
எப்போதுமே யாருக்குத் திருநீறு பூசினாலும், பூசின பிறகு மிச்சம் இருக்கிறதை என்னுடைய நெற்றியிலும் பூசிக் கொள்வது என்னுடைய வழக்கம்.
சுகாவுக்குப் பூசினது இப்போது என்னுடைய நெற்றியிலும்.
3 Replies to “சுகாவுக்குப் பூசினது”
Comments are closed.