பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம்

அமெரிக்க அதிபரிலிருந்து அடுத்த வீட்டுக்காரர் வரை எல்லோரைப் பற்றியும் உங்கள் கருத்துகளைக் காரசாரமாக ட்விட்டரில் புகுத்தி விடுகிறீர்கள் அல்லவா? அத்தகை ட்வீட்கள் ஒரு நிமிடத்துக்கு 90,000 வீதமாக வருகிறதாம். முழுக் கோட்டாவையும் நீங்கள் உபயோகிக்கவில்லை என்றாலும் ஒரு ட்வீட்டுக்கு 50 – 70 எழுத்துகள் என்ற வீதத்தில் எத்தனை பைட்கள் ஒவ்வொரு நிமிடமும் தோன்றிக் கொண்டிருக்கின்றன – இப்படியெல்லாம் ஜனித்த விஷயங்களைச் சேமித்து வைக்க பிரம்மாண்டமான தகடுகள் தேவைப் படும் என்பது மட்டும் பிரசினை அன்று. இந்தத் தரவுகளை அலசி ஆராய்ந்து அவற்றின் பொருள் காண வேண்டும். யாருக்கு வேண்டும் இந்த விஷயங்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த தகவல்களும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் சில செய்திகளைத் தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

அறிவிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

கட்டுப்பாடுகள், நியதிகள் ஏதுமின்றி, எந்தப் பேராண்மையும் வழி நடத்தாமல், விரிவான சோதனைகளும், பரிசீலனைகளுமின்றி, பொருளாதார ஊக்கங்களெதுவுமின்றி, நிரந்தர அமைப்பைச் சாராமல் சுதந்திரப் பறவைகளான பலர் ஒன்று சேர்ந்து சீர்மிகு மென்பொருள் தயாரிக்க முடியும் என்றால், நாம் இத்தனை நாள் கடைப்பிடித்த நடைமுறைகள் அநாவசியமானவையா? லைனக்ஸின் இந்த அவதாரம் ஒன்றைப் புரிய வைத்தது. நோக்கங்கள் மெய்ப்பட மேலே சொன்ன எல்லாக் காரணங்களையும் விட பெரிய ஒரு காரணம் எதிரி ஒருவனை அடையாளம் கண்டு கொள்வதே.

மேகசந்தேசம் 2.0 – Cloud Computing

கணினியச் சேவைகளை அளிப்பதில் நிறைய சிக்கல்கள் உண்டு. எந்த முறையில் தயாரித்தாலும், இறுதிப்பொருளான மின்சாரம் ஒன்றே. ஆனால் தகவல் தொழில் நுட்பத்திலோ, சேகரிப்பு, வகைப்படுத்துதல், சேமிப்பு, வினியோகம் ஒவ்வொன்றிலும், பயனீட்டாளரைப் பொருத்து பெரிய மாறுதல்கள் இருக்கும். உங்கள் கம்பெனி சம்பளக் கணக்கிற்கும், அடுத்த கம்பெனிக்கும் நிறைய வேறுபாடுகள். அச்சிடும் அறிக்கைகளில் ஒற்றுமை இருக்காது. எந்தத் தகவலை யார் பார்க்கலாம், யார் மாற்றலாம் என்பதில் கம்பெனிக்கு கம்பெனி வேறுபடும். பயனீட்டாளருக்கேற்ப வெவ்வேறு சேவையைக் கொடுக்க வேண்டும் என்பது இந்த இணையச் சேவையின் மிகப் பெரிய சவால்.