எல்லாக் கோடையும் ஒரே நாளில்

ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன.