டூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜிடம் சண்டைக்குப் போனார். அதுவோ மர்மமான முறையில் முற்றிலும் காலியாக இருந்தது, இத்தனைக்கும் அன்று காலையில் அது முழுதும் நிரம்பியதாகவே இருந்தது. சற்றுப் பொறுக்கவும், கிட்டத்தட்ட காலியாக இருந்தது: அதில் சக்தி தரும் பானப் பை ஒன்று பின்னாலே இருந்தது. முந்தின தினம், மிக்க உற்சாகத்துடன் சிரித்தபடி மெட்ரோ நடைமேடையில் வருவார் போவாருக்கெல்லாம் அந்த பானப் பையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து அவர்தான் அந்தப் பையை வாங்கி இருந்தார். அவள் எல்லாருக்கும் அந்தப் பையைக் கொடுத்திருந்தாள். “எதற்காக என்னுடைய எல்லா உணவையும் நீ தூக்கி எறிந்தாய்?” அவர் அந்த ஃப்ரிட்ஜிடம் கேட்டார்.