டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு

ஸீபால்ட் எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. “என் வேலை கடினமாகவும் என் விழிப்பு நேரம் அனைத்தையும் கோருவதாகவும் அமைந்திருந்ததால் எழுதுவதற்கான நேரம் எனக்கு கிடைக்கவே இல்லை.” ஒரு கருப்பொருளிலிருந்து மற்றொன்றிற்கு ஒழுங்குமுறையின்றி தாவுவது போல் தோற்றம் தரும் அவர் படைப்புகளின் அனிச்சையான தொடர்புபடுத்தல்கள் மனநலச் சிகிச்சையின் வழிமுறைகளை நினைவுறுத்தியதால் அவர் அம்மாதிரியான சிகிச்சைகளை எப்போதாவது முயற்சித்ததுண்டா என்று கேட்டேன். “அதிலெல்லாம் ஈடுபடுவதற்கான நேரம் அமையவில்லை. மற்றவர்களின் மனநலச் சிகிச்சை வரலாறுகளைப் படிப்பதுதான் எனக்கு சிகிச்சையாக இருந்திருக்கிறது.”

பன்மொழி உலகுக்கான சால்ஸ்பர்க் அறிக்கை

நம் உலகம் உண்மையாகவே பன்மொழித்தன்மை கொண்டது. எனினும், பல கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகள், குடியுரிமை நடைமுறைகள், மற்றும் அரசு நிர்வாக அமைப்புகள் பல லட்ச மக்களின் மொழிகள் மற்றும் மொழித் திறன் காரணமாய் அவர்களைக் குறைபட்டவர்கள் ஆக்குகின்றன. “ஏழ்மை ஒழிப்பு, புவிப் பாதுகாப்பு, அனைவரும் வளம் பெற உறுதி பூணுதல்,” என்ற நோக்கத்தில் 193 தேசங்கள் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை (6) அடைய வேண்டுமென்றால் நாம் இந்தச் சவாலை எதிர்கொண்டாக வேண்டும். வலுவான, நியாயமான மொழிக் கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வற்ற கல்வி அமைப்பின் அடிப்படையில்தான் அனைவருக்குமான முன்னேற்றம் நிகழ முடியும்.

பொருளாதாரத் துறையும் அற விழுமியங்களும்

நவீன பொருளாதார நிபுணர்கள் தங்கள் பொருளாதார கொள்கை குறித்த ஆய்வுகளில் விழுமியங்கள் குறித்த மதிப்பீடுகளின் பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர். வருமானம், அதன் பகிர்வு போன்ற மாறுபடும் பொருளாதார அலகுகள் மீது எப்படிப்பட்ட தாக்கம் இருக்கக்கூடும், இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்த பொதுநலன் மீது எப்படிப்பட்ட பாதிப்பு செலுத்தும், என்பனவற்றைக் கொண்டு பொருளாதார கொள்கைகள் மதிப்பிடப்படுகின்றன.

கட்டுரைகளின் நகைமுரண்

அமெரிக்க புனைவுகளுக்கும் இது போன்ற கட்டுரைகளுக்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாய்த் தோன்றுகிறது. அமெரிக்க அரசியலிலும் சமூக விவாதங்களிலும் காணப்படும் பேரச்சங்கள் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. இவை முழுக்க முழுக்க காரணமற்ற மிகையச்சங்கள் என்று சொல்லிவிட முடியாது. அமெரிக்க அறிவார்ந்த உரையாடல்களின் அடிநாதமாய் விளங்கும் உணர்ச்சி, அவநம்பிக்கையுடன்கூடிய பிறழ்வச்சம் (paranoia), என்றுகூட சில சமயம் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பேராபத்து அவர்களுக்கு அறிமுகமாகிறது. நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதி வரும் அமெரிக்க இலக்கிய விமரிசனக் கட்டுரைகளில்கூட இது விரித்தெடுக்கப்படாத ஒரு சரடாய்த் தொடர்கிறது. ஆனால் இந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது, இழப்பு, மரணம், துயரம், ஏழ்மை, நிறவேற்றுமை, என்று பல விஷயங்கள் பேசப்பட்டாலும் அப்படி எந்த ஒரு அச்சமும் வெளிப்படுவதில்லை.

தொழில்நுட்ப மயக்கங்களும் நவீனத்துவத்தின் முடிவும் – மைக்கேல் சகசாஸ்

சார்லஸ் டைலர் கனடாவைச் சேர்ந்த தத்துவவியலாளர். இவரது ‘எ செக்யூலர் ஏஜ்’ என்ற புத்தகம், சமயம் மற்றும் சமயசார்பின்மை பற்றி பேசுகிறது. சமய நம்பிக்கை வலுவிழப்பதால் சமயசார்பின்மை வளர்வதில்லை, மாறாய் தன்னைத் தவிர பிறிதொன்றுக்கு இடமளிக்காத மானுட நேயமே அதன் வளர்ச்சியின் அடிப்படையாய் இருக்கிறது, என்றார் அவர். இக்கருத்து, கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது…..பல பரிமாணங்களும் நுட்பங்களும் கொண்ட அவரது வாதத்தின் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொள்ளவே அவர் எழுதிய ‘எ செக்யூலர் ஏஜ்’ நூலைச் சுட்டுகிறேன். வசீகரமிழத்தல் (disenchantment) குறித்த அவரது புரிதல் முக்கியமானது.

நவீனத்துக்கு முற்பட்ட சமூக இயல்புகளில் மாயங்கள் நிறைந்த உலகம் (enchanted world) என்ற பார்வையும் ஒன்று. அதைக் கடந்த பின்னரே, டைலரின் பொருளில் சமயச்சார்பற்ற உலகம் ஒன்று தோன்ற முடியும்.

ஒரு முடிவை மாற்ற எத்தனை பேர் தேவை?

பொதுவாகவே நம் அனைவருக்கும் மனச்சாய்வுகள் உண்டு என்பதையும் ஒரே பண்பாட்டைச் சேர்ந்த அறிவியலர்கள் தம் பண்பாட்டையொட்டிய மனச்சாய்வுகளைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் மனச்சாய்வுகளின் இயல்பை அறிந்தவர்களும்கூட அதற்கு பலியாகின்றனர் என்பதையும் இணையத்தில் அண்மையில் வாசிக்கக் கிடைத்த சில கட்டுரைகள் சுட்டுகின்றன. மொத்தத்தில், பல பண்பாடுகள் கொண்டதாக மானுட இனம் இருப்பதே அறிவியலையும் சிறப்பிக்கிறது.