திவினேஷிற்கு அநபாயனின் வீட்டிற்குச் செல்வதற்கு நாற்பது நிமிடங்கள் பிடித்தன. அவன் வசிக்கும் மெல்ரன் சிற்றியில் இருந்து, வடக்கு மெல்பேர்ண் வரைக்கும் ஒரே வாகன நெரிசலாக இருந்தது.
அவர்கள் இருவரும் பிரதி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், ராக் க்ளைம்பிங் செய்வதற்கு மெல்பேர்ண் நகரத்திற்குச் செல்வார்கள்.

மெல்பேர்ண் நகரத்திற்குள் அவ்வளவு இலகுவாகக் கார் ஓட முடியாது. அநபாயன் சிற்றிக்குள் வேலை செய்வதால் அவனுக்கு வீதிகள் எல்லாம் அத்துப்படி. திவினேஷ் தனது காரை அநபாயன் இருக்கும் வடக்கு மெல்பேர்ண் வீட்டில் நிறுத்திவிட்டு, அநபாயனின் காரினில் ஏறிக் கொண்டான்.
“மச்சான்… வாற மாதம் ஒரு பப்ளிக் ஹொலிடே ஒண்டு வருகுதல்லவா? ஒருக்கா கிறம்பியன்ஸ் போய் வருவமா? நெடுகலும் இண்டோர் ராக் க்ளைம்பிங் செய்து செய்து சலிச்சுப் போச்சு” திவினேஷ் கேட்டான்.
“ஓம் புறோ… எனக்கும் அதுதான் சரியெண்டு படுகுது. நிஜமான பாறை ஏறுற அனுபவம், அந்தத் திரில் இந்த இண்டோரிலை கிடையாது. மற்றது மஹதியும் ஒருக்கா கிறம்பியன்ஸ் போவமா எண்டு கேட்டவள்…”
“அது ஆர் மஹதி…”
“அது புறோ… என்னோடை வேலை செய்யிறவள்…”
“லவ்வரா?”
“இல்லை புறோ! கேர்ள் ஃப்ரெண்ட்… சும்மா பழகிறம்!”
`ராக் க்ளைம்பிங் உள்ளரங்கு’ வந்துவிட்டது. மாலை நேரம் என்பதால் பலரும் வேலை முடித்து பாறை ஏறுவதற்காகக் காத்திருந்தார்கள்.
அநபாயனும் திவினேஷும் வியர்வை வடிய ஏறிக் களைத்தார்கள். இடையிடையே இளைப்பாறினார்கள். இளைப்பாறும்போது அநபாயனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சற்று நேரத்தில் ஒரு அழகு தேவதை, நெற்றியிலும் உதட்டின் மேற்புறமும் வியர்வைத்துளிகள் பூத்திருக்க அநபாயனிடம் வந்து நின்றாள். அநபாயன் அவளுக்கு திவினேஷை அறிமுகம் செய்து வைத்தான்.
பல வர்ண ஜாலங்கள் காட்டும் பிளவுஸிற்கும் ஸ்கர்டுக்கும் இடையே தொப்புளில் கம்மல் குத்தியிருந்தாள் மஹதி. குட்டையான கையுடைய பிளவுஸிற்குள்ளால் நீண்டிருந்த அவளின் வழுவழுப்பான கைகளைப் பார்க்க திவினேஷிற்கு படபடப்பாக இருந்தது. மஹதி திவினேஷிற்குக் கை குடுத்தாள். ஒரு மெல்லிய குளிர் ஐஸ் ஒன்று திவினேஷின் நாடி நரம்புகளுக்குள்ளால் ஊடுருவிப் பாய மூச்சே நின்றுவிடும் போலிருந்தது அவனிற்கு. ஒரு பத்து நிமிடங்கள் தான் மஹதி அங்கே நின்றிருந்தாள். இருவருக்கும் ஹாய் சொல்லிவிட்டுப் பறந்துவிட்டாள்.
அநபாயனும் திவினேஷும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கார் ஊர்ந்து கொண்டிருந்தது.
“புறோ… என்ன மாதிரி வேலைகள் ஏதாகிலும் சரிவந்துதா?” அநபாயன் வீதியைப் பார்த்தபடி திவினேஷிடம் கேட்டான்.
“எங்கை மச்சான்… போடுறன் போடுறன் ஒண்டுமே சரிவாறதாக் காணோம்.”
“புறோ… எனக்கொரு இண்டர்வியூ நாளைக்குக் காலமை `டொயட்டோ’ கார் இண்டஸ்றியிலை இருக்கு” அநபாயன் சொன்னபோது, திவினேஷிற்கு நெஞ்சு திக்கென்றது.
“மச்சான்… நீதானே நல்ல வேலையிலேயே இருக்கின்றாயே! பிறகேன்…”
“இல்லை புறோ… இது கொஞ்சம் பெட்டர் போலத் தோணுது…”
திவினேஷ் தானும் அந்த இண்டர்வியூவிற்கு நாளை போக இருக்கின்றான் என்பதைச் சொல்லாமல் மெளனமாக இருந்தான். `நல்லவேளை தனக்கு மாலை நேர்முகம் என்பதால் அநபாயனைச் சந்தித்துக் கொள்ள வாய்ப்பில்லை’ என்பதை உணர்ந்த திவினேஷ், அந்த உரையாடலை சற்றே திசை திருப்புவதற்காக மஹதி பற்றிக் பேச்சுக் குடுத்தான்.
மஹதி பற்றிய உரையாடல் தொடங்கியதும் அநபாயன் ஒரு மோன நிலையில் தவமிருப்பது போலவும், காரை வேகமாகவும் ஓட்டத் தொடங்கினான்.
“மச்சான்… நீ கார் ஓடுறதைப் பாக்க எனக்குப் பயமாக் கிடக்கு. எப்பிடித்தான் ஓடினாலும் ஒரு ஐஞ்சு நிமிஷத்தையும் மிச்சம் பிடிக்க முடியாது. பாத்து ஓடு.”
ஆனால் அநபாயன் திவினேஷின் பேச்சைக் கேட்கவில்லை. மஹதியைப் பற்றி உளறியபடியே காரை வெட்டி வெட்டி ஓடினான்.
•
அநபாயன் ஏற்கனவே நல்லதொரு கொம்பனியில் கணக்காய்வாளராக இருக்கின்றான். அதை விட்டுவிட்டு தனக்குப் போட்டியாக இறங்குகின்றானே என நினைக்க திவினேஷிற்கு கவலையாக இருந்தது. ஆனால் இந்தத் தடவை அநபாயன் ஏமாறப் போகின்றான், அவனுக்கு அந்த வேலை கிடைக்கப் போவதில்லை என்பதில் திவினேஷ் உறுதியாக இருந்தான்.
திவினேஷின் மாமா `டொயட்டோ’ தொழிற்சாலையில் இரவு நேர ஜெனரல் போர்மனாக வேலை செய்கின்றார். அவர் அந்த நேர்முகத் தேர்வில் இருக்காட்டார் என்றாலும், அந்த வெற்றிடத்திற்கு திவினேஷை சிபார்சு செய்திருக்கின்றார்.
•
நேர்முகத் தேர்வு முடிவடைந்து இரண்டு நாட்களாகியும் திவினேஷின் மாமா அவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பதவி வெற்றிடம் அவசரமானதென்றும், அடுத்த வாரம் திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது என்றும் விளம்பரத்தில் அறிவித்திருந்தார்கள். திவினேஷின் அம்மா கலக்கமடைந்தார். தனது தம்பியுடன் தொடர்பு கொண்டார்.
“அக்கா… ஒரு தொழிற்சாலை ஒரு வெற்றிடத்தை நிரப்பும்போது மிகவும் திறமையுள்ளவரைத்தான் தேர்ந்தெடுக்க விரும்புகின்றது. இண்டர்வியூ செய்த மூன்று பேரும் அநபாயனைத் தெரிவு செய்திருக்கின்றார்கள். ஒருவேளை அவன் வராத பட்சத்தில், அவனுக்கு அடுத்ததாக இருக்கும் திவினேஷிற்குக் கிடைக்கக் கூடும்.” மாமா தனது கையாலாகாத்தனத்தைக் கவலையுடன் தெரிவித்தார்.
அன்று திவினேஷுடன் ஒன்றாகப் படித்த சக நண்பன் மதுரனின் இருபத்தைந்தாவது பிறந்தநாள். அதற்குப் போடுவதற்காக உடுப்புகளை அயர்ன் செய்து கொண்டிருந்தான் திவினேஷ்.
“திவினேஷ்… அநபாயனோடை அல்லது அவன்ர பேரன்ஸோடை இதைப்பற்றிக் கதைச்சுப் பாக்கட்டுமா? அவன் எப்பிடியும் உனக்காக விட்டுத் தருவான்.”
“அம்மா… அப்பிடி ஒரு பிச்சைக்கார வேலை எனக்குத் தேவையில்லை.”
திவினேஷும் அநபாயனும் சிறு வயது முதல் ஒரே பாடசாலையில் படித்ததால், அவர்களின் பெற்றோர்கள் நண்பர்களாக இருந்தார்கள்.
அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா, “துரை எங்கையோ பார்ட்டிக்குக் கிழம்புறார் போல. உதுக்கு மாத்திரம் குறைச்சல் இல்லை” என்று சிடுசிடுத்தார்,
“அப்பா… ஒருநாளைக்கு நான் நல்லா இருக்கத்தான் போறன். அப்ப பாருங்கோ.”
“பிள்ளை எண்டா அநபாயன் மாதிரி இருக்க வேணும். உனக்கு வேலை கிடைக்கேல்லை எண்டு எதுவித சுரணையும் இல்லை. எருமை மாட்டிலை மழை பெஞ்ச மாதிரித்தான்” அப்பா பேசத் தொடங்க, திவினேஷ் அரையுங்குறையுமாக உடுப்புக்களைக் போட்டுக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான்.
மதுரனின் வீடு கால் நடக்கும் தூரத்தில் இருந்தது. திவினேஷ் அங்கு போய்ச் சேர்ந்தபோது அனேகமாக எல்லாரும் வந்திருந்தார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பமானது. மதுபானம் கரை புரண்டோடியது. ஆடல் பாடல் என வீடு களைகட்டத் தொடங்கியது.
“ஏய் திவினேஷ்… நீ நல்லாப் பாடுவாயல்லோ…. இந்தா பாடு” மதுரன் மைக்கை திவினேஷிடம் நீட்டினான்.
`சுரணை இல்லாத எருமைமாடு பாடப் போகுதாம்’ மைக்கை வாங்கப் போன திவினேஷ் திடுக்கிட்டான். அப்பா மனதிற்குள் நின்று பல்லிளித்தார். அப்பா மீதான திவினேஷின் வெறுப்பு, அநபாயன் மீது காழ்ப்புணர்வாக ஊற்றெடுக்கத் தொடங்கியது.
கேக் வெட்டியபின்னர் சிலர் சாப்பிடப் போனார்கள். சிலர் மதுபானத்திற்குள் மூழ்கிக் களித்தார்கள். சிலர் பாடிக் கொண்டிருந்தார்கள்.
“மதுரன்… நாளைக்கு ஒரு புது வேலை தொடங்கிறன். இப்பவே நேரம் இரவு பதினொண்டு அம்பதாகுது. இனி வீட்டை போய்ச் சேர பன்னிரண்டரை ஆகிடும். நான் வரப்போறன்.” அநபாயன் விடைபெற ஆயத்தமானான்.
“புது வேலையா? சொல்லவே இல்லையே!” மதுரனும் சிலரும் அநபாயனைச் சூழ்ந்து கொண்டார்கள். அநபாயன் தனது புது வேலையைப் பற்றி சிறிது புளுகிக் கொண்டான். அவனின் பேச்சு, திவினேஷிற்கு புண்ணிலே புளியைப் பூசுவது போல் இருந்தது.
அனபாயனுக்கு, திவினேஷும் அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தான் என்பது அப்பொழுதும் தெரிந்திருக்கவில்லை.
“புறோ… ரியூஸ்டே ராக் க்ளைம்பிங்கிலை சந்திப்பம்” திவினேஷிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுக் கொண்டான். அநபாயன் புறப்பட்டுக் காரில் ஏறியதும், அதுவே சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்டு, சதி வலையைப் பின்னத் தொடங்கினான் திவினேஷ்.
“டேய் மதுரன்… உனக்கு மஹதியைத் தெரியுமா? அநபாயன்ரை காதலி..”
மதுரன் திகைத்துப் போனான். இல்லையென்று தலையாட்டினான். இருவரும் தத்தமது கதிரைகளைத் தூக்கிக்கொண்டு செவ்வரத்தஞ்செடிகளுக்குப் பின்னால் ஒதுங்கினார்கள்.
“உனக்கு அவன் நண்பனாடா… என்னடா நண்பன்… அநபாயன் எனக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தானடா… பாத்தாய் எண்டா விடமாட்டாய்.” மொபைல்போனைத் திறந்து மஹதியின் படத்தைக் காட்டினான் திவினேஷ்.
மஹதியைப் பார்க்க மதுரனின் கண்கள் அகல விரிந்தன. உதடுகள் வீணீர் வடித்தன. உடல் எல்லாம் தெப்பமாக நனைய, “என்னோட பேச எவளுமே வரமாட்டேங்கிறாளுங்க. உவனுக்கு மாத்திரம் எங்கையிருந்து கிடைச்சாள் உந்த செம பிகரு. உவள் எனக்குத்தான் செட் ஆவளடா” என்றான் மதுரன். ஏற்கனவே போதையேறிய மதுரன், மொபைல்போனில் உள்ள மஹதியின் படத்தை விரித்து, உதடுகளைப் பெரிதாக்கி கிஸ் அடித்து, அவள் அழகில் சொக்கினான்.
“அநபாயன் மஹதியைப் பற்றிச் சொல்லத் துவங்கினான் எண்டா ஆகாயத்திலை பறக்கத் துடங்கி விடுவான். இப்ப படத்திலைதானே பாத்தனி. அநபாயன் சொன்னான் எண்டா, நீ நேரிலை பாத்தமாதிரி இருக்கும்.” மதுரனை உசுப்பேத்தினான் திவினேஷ்.
“இப்ப அநபாயன் கார் ஓடிக் கொண்டிருப்பான் என்ன…?” – மதுரன்.
“ஓடினால் என்ன… நீ போனைப் போடு. அவன் கதைச்சால் கதை…” – திவினேஷ்.
“அப்ப ரெலிபோனைப் போடுவம். அநபாயனைப் பறக்க வைப்பம். நான் அவனோடை கதைக்கிற எல்லாத்தையும் என்ரை போனிலை பதியப் போறன். பிறகு ஒருநாளைக்கு அவனுக்கே போட்டுக் காட்டலாம். வெட்கப்படுவான்…”
“நான் மஹதியின்ரை படத்தைக் காட்டினதைப் பற்றி ஒண்டும் சொல்லிப்போடாதை மச்சான்…”
மதுரன் மொபைல்போனில் உள்ள குரலைப் பதிவு செய்யும் செயலியை முடுக்கிவிட்டான். வாயில் விரலை வைத்து திவினேஷிற்கு உஷ் காட்டினான். அநபாயனுக்கு ரெலிபோன் செய்தான்.
“அநா…. நான் மதுரன் கதைக்கிறன். என்ன கிளியோபாட்ரா மாதிரி கிளியொண்டைப் பிடிச்சு வைச்சிருக்கிறியாமே!”
அநபாயன் கதைக்கத் தொடங்கினான். நிஜ உலகத்தை விட்டு மஹதியின் உலகத்திற்குள் தாவினான். சிரிப்பும் பேச்சும் என உரையாடல் நீண்டுகொண்டே போனது. அவனின் காதல் கதை பதிவாகத் தொடங்கியது.
ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் கதைத்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென்று பாரிய சத்தமொன்று அநபாயனின் ரெலிபோனிற்குள்ளால் கேட்டது. மின்னல் ஒன்று தரையிறங்கிக் கட்டிடத்தில் மோதியது போன்றதொரு சத்தம். அதன் பிறகு அநபாயனின் மொபைல்போன் செயலிழந்து போனது.
“சக்சஸ்” என்றான் திவினேஷ். மதுரன் திவினேஷை வியப்புடன் பார்த்தபடி, தனது பதிவு செய்யும் செயலியை நிறுத்திக் கொண்டான்.
“என்ன நடந்தது?”
“ஆருக்குத் தெரியும்…”
மதுரன் திரும்பத் திரும்ப அநபாயனுக்கு தொலைபேசி எடுத்துப் பார்த்தான். அநபாயனின் மொபைல்போன் வேலை செய்யவில்லை.
வந்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராகப் புறப்படத் தொடங்கினார்கள். மதுரனும் திவினேஷும் கொஞ்சம் சாப்பிட்டார்கள், நிறையக் குடித்தார்கள். நிறைவெறியில் கதிரைகளில் சரிந்து கிடந்தார்கள்.
இரண்டு மணித்தியாலங்கள் கடந்திருக்கும். மதுரனின் மொபைல்போன் அலறியது.
`அநபாயன் ரெட் சிக்னலில் காரை நிற்பாட்டாமல், மொபைல்போனில் கதைத்தபடி அதிவேகத்தில் போனதில், எதிரே வந்த அரச பேருந்துடன் மோதி இறந்து போனான்.’ என்ற செய்தி ஹொஸ்பிற்றலில் இருந்து வந்தது.
மதுரனும் திவினேஷும் தங்கள் குடும்பத்தவருடன் அவசர அவசரமாக, அந்த நள்ளிரவில் ஹொஸ்பிற்றல் போனார்கள்.
“என்னுடைய மகன் கார் ஓடுறதெண்டால் ஒருநாளும் குடிக்க மாட்டான். கார் ஓடேக்கை போனும் கதைக்க மாட்டான்.” அநபாயனின் தாயார் கட்டடம் அதிரக் கத்திக் குளறினார். அவரினால் அநபாயனின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் பேருந்துச் சாரதி மீது குற்றம் சுமத்தி அழுது புலம்பினார். ஆனால் பொலிசார், அநபாயன் மொபைல்போனில் கதைத்துக்கொண்டு, ரெட் சிக்னலில் நிற்காமல் கார் ஓடியதாக உறுதிபடச் சொன்னார்கள்.
அநபாயனின் விபத்துச் செய்தி அறிந்து, அவனின் உறவினர்களும் நண்பர்களும் ஹொஸ்பிற்றலை முற்றுகையிட்டார்கள்.
“அநபாயன் எல்லாருக்குமே உதவி செய்யக்கூடிய பையன். முதியவர்களை பாத்துப் பாத்து கவனிப்பான். அவனுக்கா இந்தக் கதி.”
“அநபாயனுக்கு வாகனம் ஓட்டுற விதிமுறைகள் தெரியாதா என்ன?”
வந்திருந்தவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
அநபாயனின் தந்தை திடீர் அதிர்ச்சியால் மனநிலை குழம்பி ஒரு கதிரைக்குள் புதையுண்டு இருந்தார். அழுது களைத்து சோர்ந்து போயிருந்த தாயாருக்கு, திவினேஷின் அம்மா ஆறுதல் சொல்லியபடி இருந்தார்.
அநபாயனின் உடல் போஸ்மோட்டம் முடித்து, வீட்டுக்கு வர அடுத்தநாள் மதியமாகிவிட்டது. நண்பர்கள் எல்லாரும் ஓடியாடி, ஆகவேண்டிய காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நியூசிலாந்திற்கு வேலை விடயமாகச் சென்றிருந்த மஹதி, நாடு திரும்பி எயாப்போட்டிலிருந்து அநபாயனின் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவளாக திகைத்தபடி இருந்தாள்.
சிறிது நேரத்தில் பொலிஸ் வாகனம் ஒன்று அவர்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. அவர்கள் மதுரனைத் தேடி அங்கே வந்திருந்தார்கள்.
“மச்சான்… ஒண்டுக்கும் பயப்பிடாதை! எங்களிலை ஒரு பிழையும் இல்லை.” திவினேஷ் மதுரனின் காதிற்குள் கிசுகிசுத்தான்.
ஒரு மனிதர், தன்னுடன் பழகும் சக மனிதர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாமலே இறந்து போவது எவ்வளவு கொடுமை?
“எல்லாத்தையும் கடவுள் பாத்துக் கொண்டிருக்கின்றார். தெய்வம் நின்று கொல்லும்” அநபாயனின் தாயார் புலம்பிக் கொண்டிருந்தார்.
Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
