‘கடாவர்’ அம்மா 

தெலுங்கில்: கே.ஏ. முனிசுரேஷ் பிள்ளை

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

“அப்புறமா நமக்குத் தருவாங்களா?”

“அப்புறம்னு எதுவும் கிடையாது. ஒரு தடவை கொடுத்துட்டா அது அவ்வளவுதான்”

“தகன காரியம் செய்யணும் இல்லையா?” 

“அதெல்லாம் எதுவுமில்லை. இங்கே ஒப்படைச்சுட்டா நம் வேலை முடிஞ்சுது” 

“அதுக்கில்லடா, அஸ்தியை காசிக்கு எடுத்துட்டு போய் கங்கைல கரைச்சால் தானே…”  

“இதப் பாரு சுமலதா, உயிரோடு இருக்கும்போது மூணு தடவை காசிக்குப் போய் கங்கைல குளிச்சிருக்காங்க. அப்போ வராத புண்ணியம், சாம்பலைத் தூக்கிட்டு போய் கரைச்சால்தான் வருமா?”

என் உதடுகள் காய்ந்திருந்தன. முகம் உப்புக் காகிதம் போலிருந்தது. மனமும் அப்படித்தான். என் நாவிற்கு என்ன ஆச்சு? என் அன்பான பேச்சுகள் எங்கே போயின? வார்த்தைகள் கரடுமுரடாக வெளியில் வந்தன. என் முரட்டுத்தனமான பேச்சுக்கு சுமலதா சற்றுநேரம் பதிலளிக்கவில்லை. அவளிடமிருந்து வெளிவந்த பெருமூச்சுகள் அந்த மௌனமான துக்கத்தை என் மேல் சுமத்தின. 

“அம்மாவ மேஜை மேல போட்டு துண்டு துண்டா அறுப்பாங்கன்னு நெனச்சா ரொம்ப வருத்தமா இருக்குடா” கரகரத்த குரலில், சொற்கள் தடுமாறி தொண்டை அடைக்கக் கூறினாள் சுமலதா. 

“அது எதையும் நாம் பார்க்க முடியாது. ஆனா, கட்டையில படுக்க வெச்சு சுட்டால்? அம்மா நம் கண் முன்னாலயே நெருப்பில் எரிந்து சாம்பலானால்? அப்போ மட்டும் வருத்தமா இருக்காதா?”

அந்தக் கணத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. கால் கட் ஆவதற்கு முன் “சீ” என்றாளா? எனக்கு அப்படிக் கேட்டதா? அதற்கு என்ன பொருள்? அவள் அப்படிச் சொல்வாள் என்று எனக்குத் தோன்றியதா? 

“முன்னும் பினனும் யாருமில்லாமல் பிறந்தாய். மனிதர்களையும் அன்பையும் பற்றி உனக்கு என்னடா தெரியும்?” எனக்குக் கிடைத்த பட்டங்களில் இதுவும் ஒன்று. கோபத் தருணங்களில் வெறுப்பு மழை பொழிந்தவர் யார் என்பது முக்கியமல்ல. ஆனால் அது உண்மைதானோ என்று அஞ்சினேன். உடன்பிறந்தோர் தினத்தைக் கொண்டாடும் இந்த உலகத்தைக் கண்டாலே எனக்கு எரிச்சலாக வந்தது. என் இதயம் கொழுந்து விட்டு எரிந்தது. பலவீனங்களைப் பற்றி அறிந்திருப்பதும் ஒரு பலம் தானே. அன்பு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொருவரையும் நேசிக்கத் தொடங்கினேன். நூற்றுக்கணக்கான பந்தங்கள். எண்ணற்றவையாக, கூடை கூடையாக ஒற்றைக் குழந்தையாகப் பிறந்த எனக்கு  உடன்பிறப்புகள். அம்மா அனைவரையும் தன் குழந்தைகளாக்கிக் கொண்டாள். அன்பு செலுத்தினாள். சுமலதாவும் அப்படிப்பட்ட உரிமை கொண்ட உடன்பிறப்பே. 

ஒரு ‘சீ’ ஒலி வெளிப்பட்டு விட்டது. இன்னும் எத்தனை உடன்பிறப்புகளிடம் இருந்து எத்தனை ‘சீ’ ஒலிகள் வெளிப்பட்டு என்னைச் சூழ்ந்து, என்னால் உடைக்க முடியாத வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரப்போகிறதோ? தலை முதல் கால் வரை என்னைக் கவசமாகப் பாதுகாத்து வந்த என் அம்மாதான் இப்போதும் என்னைக் காக்க வேண்டும். அம்மாவின் பாதுகாப்பு இருக்கையில் எந்த அச்சம் என்னைத் தொட முடியும்? எந்தத் தயக்கம் என்னைப் பின்னுக்கு இழுக்க முடியும்? நான் தாய்ப்பாலோடு அம்மாவின் பிடிவாதத்தையும் சேர்த்து உறிஞ்சியன்.  

அம்மா என் ஒருவனையே வயிற்றில் சுமந்து பெற்றெடுத்ததன் பின்னால் இன்றைய நிகழ்வு மறைந்திருக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை. வேறு யாராவது உடன் பிறந்து, இப்படி மறுப்பு தெரிவித்திருந்தால் இந்தச் செயல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அம்மாவுக்கும் இந்த கௌரவம் கிடைத்திருக்காது. 

யார் இப்படி போதித்தது? “படைப்பில் விலங்குகளும் பறவைகளும், மரம் செடி கொடிகளும் வாழ்ந்தாலும், இறந்தாலும் பயனுடையவையே. மனிதன் ஒருவன் மட்டுமே பயனற்ற பண்டம். கிளி பறந்து போன பின் கட்டை மண்ணில் சேர வேண்டும். எதற்காகக் கவலைப்படவேண்டும்?” 

அம்மா இந்த வறட்டு போதனைகளுக்குச் சவால் விடுத்தாள். “கிளியோடு இருக்கையில்  நான் நல்ல மனிதர்களுக்கு உதவுபவள். கிளியை விட்ட பின் நான் சமுதாயத்தின் நலனைக் கோருபவள்” என்று உச்சந்தலையிலிருந்து உரத்த குரலில் அறிவித்து விட்டுக் குளிர்பதனக் கிடங்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். என் ‘கடாவர்’ அம்மா. 

***** 

ஜபல்பூர் அவ்வளவு அருகில் இல்லை. ஹைதராபாதில் இருந்து எண்ணூறு கிமீ  தொலைவில் உள்ளது. உடனடியாக கிளம்பிச் செல்ல வேண்டிய வேலை அங்கே என்ன இருக்கிறது? ஆனால் நான் அதைச் செய்யாவிட்டால் என் தனி முத்திரை என்னவாகும்? 

இன்னும் இரண்டு நாட்களில் நர்மதை புஷ்கரம் முடியப் போகிறது என்ற செய்தியை அறிந்து இரவு ஒன்பது மணிக்கு வீட்டில் கூறினேன், “விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கிளம்ப வேண்டும். வழியில் சாப்பிட சப்பாத்தி செய்ங்க. நர்மதை நதி புஷ்கரம் நாளன்னைக்கே கடைசி”. 

அம்மா மிகவும் மகிழ்ந்தாள். அன்னாபூர்ணா உடனடியாக அதற்கான ஏற்பாடுகளில்   இறங்கினாள். அம்மாவுக்குக் கடவுள் பக்தி அதிகம். சடங்குகளிலும், பூஜை, புனஸ்காரங்களிலும் மிகுந்த ஈடுபாடு. சம்பிரதாயங்களில் அளவுகடந்த நம்பிக்கை. அதோடு புஷ்கரம் போன்ற சிறப்பான விழாக்கள் என்றால் நம்பிக்கையோடு கூட மோகமும் அதிகம். இங்கே அருகில் நடக்கும் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, காவேரி புஷ்கரங்களுக்கு நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் சென்று வருவாள்.  எங்களையும் உடன் அழைத்துச் செல்வாள். அருகில் அமர்ந்து பிண்டப்பிரதானம் எல்லாம்  சிரத்தையாகச் செய்யச் செய்வாள். 

சிராத்தம் செய்யும் நாட்களில் வீட்டுக்கு புரோஹிதரை வரவழைக்கையில் பார்க்க வேண்டும். புரோகிதம் செய்வது அவரென்றால் அவருக்கு டைரக்ஷன் முழுவதும் அம்மாவே. கர்மாக்களில் ஒரு துளியும் குறை இருக்கக் கூடாது. புஷ்கரங்களுக்கு சென்றாலும் அதே கதைதான். சாதாரணமாக நாங்கள் நான்கு நதிகளுக்குச் சென்று வருவோம். ஒவ்வொரு இடத்திலும் புஷ்கரச் சடங்குகளின் தீவிரம் அதிகம் இருக்கும்.   கோதாவரி, கிருஷ்ணா. துங்கபத்ரா, சரி…. காவேரிக்குச் சென்றாலும் கோதாவரி ஜில்லாவைச் சேர்த்த தெலுங்கு பிராமணர்கள் அதிகம் தென்படுவார்கள். அலைமோதும் கூட்டத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது பிண்ட பிரதானங்கள், நூறு நதி ஸ்நானங்கள் செய்து வைத்தால் புஷ்கரம் நடக்கும் பன்னிரண்டு நாட்களில் ஓராண்டுக்கு வேண்டிய வருமானம்  கிடைக்கும் என்ற அவசரத்தில் இருப்பார்கள். அங்கு ஆப்தீக மந்திரங்கள் எல்லாம் சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடும். 

“மம” என்ற சொல்லுக்கு முன்னும் பின்னும் சாஸ்திரத்திற்கு நான்கு மந்திரங்களை உச்சரித்து, ‘சவ்யம்’ என்று சொல்லி, பூணூலை இடது தோளுக்கு மாற்றுவதோடு சரி. தர்ப்பையை மோதிரமாக முடிபோட்டு, பவித்திரத்தை அவிழ்த்து, இலையில் வைத்த  பிண்டங்களை புஷ்கர நதியில் விடச் செய்வார்கள். எல்லாம் அம்பு வேகத்தில் நடைபெறும். ஆனால் அம்மாவிடம் அந்த பருப்பெல்லாம் வேகாது. அவள் தேர்ந்தெடுத்த பிராமணரால் அன்று அவர் நினைத்த பிண்டப்பிரதான இலக்கை எட்ட முடியாது. அம்மா அருகில் அமர்ந்து, எந்த ஒரு சடங்கும் குறைவில்லாமல் நடக்கும்படி பார்த்துக் கொள்வாள். அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் புஷ்கரமாயிற்றே.  சும்மா விடுவாளா? பந்து, மித்திர, பரிவாரங்களோடு இறைவனடி சேர்ந்த அனைவரின் பெயர்களும் அம்மாவின் தலையில், கோத்திர, நாமங்களோடு சேர்ந்து பெரிய பட்டியல் இருக்கும். ஒவ்வொரு பெயரையும் தன் விரல் நுனியில் முறையாக நினைவு கூர்ந்து வரிசை தவறாமல் அவர்கள் அனைவருக்கும் பிண்டம் வைக்கச் செய்வாள். 

நான் ஒரு முறை, “அப்பாவே போயிட்டாரு. இதெல்லாம் தேவையாம்மா?” என்று கேட்டேன். 

இரண்டு நிமிடங்கள் அம்மா எதுவும் பேசவில்லை. “நாம கொடுக்கற இந்த பிண்டம்தான்  மேலுலகத்துல அவுங்களுக்கு ஒரு வருஷ காலத்துக்கு சாப்பாடுன்னு சாஸ்திரம் சொல்லுதுடா. உயிரோடு இருக்கும் போது எத்தனை நாள் உங்கப்பாவை பசியோடு பட்டினி போட்டேன், எத்தனை நாள் அரை வயித்துக்குச் சோறு போட்டுத் தூங்க வெச்சேன்னு என் ஒருத்திக்குத்தாண்டா தெரியும். வசதி இருக்கும்போது பிண்டம் கொடுக்குறதுல என்னடா நஷ்டம்? அவர் காலமான பிற்பாடும் பசியோடு இருக்கக்கூடாதுன்னுதானே இதெல்லாம் செய்றோம்?” என்றாள்.  சற்று இடைவெளி விட்டு, “உங்கப்பா ஒரு அப்பாவிடா. அவரால பசி தாங்க முடியாது”  அமைதியோடும் உணர்ச்சிவசப்படாமலும் கூறினாள்.

அவளுடைய சொற்கள் அமைதியாக இருந்தபோதிலும் எங்கள் இருவரின் மனங்களும்  பாரமடைந்தன. அதற்கு மேல் என்னால் என்ன சொல்ல முடியும்?   

எனது அணுகுமுறை வேறு. அம்மாவிடம் இருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை எனக்கில்லை. அதற்காக, அதை எதிர்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் எனக்கு இல்லை. இது அம்மாவுக்குப் பிடித்த செயல் என்பதால் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றும்  கருவியாக நான் செயல்படுகிறேன். அதனால்தான் தென்னகத்தில் இருக்கும் அனைத்து முக்கிய நதிகளிலும் நடைபெற்ற நதித் திருவிழாக்களான புஷ்கர  நிகழ்வுகளையும் பார்த்துவிட்ட அம்மாவை வடக்கே நர்மதை நதிக்கரையில் நடைபெறும் புஷ்கரத்திற்கும் அழைத்துச் செல்ல உடனடியாகத் திட்டமிட்டேன். ஆனால் அதற்கு இன்னும் ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. 

நாங்கள் எந்த புஷ்கரத்திற்குச் சென்றாலும், எந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்றாலும், அங்கிருக்கும் நதி நீரைத் தலை மீது தெளித்துக்கொள்ளும் போது அம்மா இந்த மந்திரத்தைச் சொல்வாள். “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு”. ஒவ்வொரு முறையும் அதன் பொருளை எங்களுக்கு விளக்குவாள். நாங்களும் அதைச் சொல்லி, “சுவாமி, இந்த அனைத்துப் புனித நதிகளிலும் நீராடிய பலனை எங்களுக்கு அருள்வாயாக” என்று பிரார்த்திக்கச் சொல்வாள். அதோடு நிறுத்த மாட்டாள். “எல்லா நதிலயும் ஆசை தீரக் குளிச்சுடேண்டா. இன்னும் நர்மதை ஒண்ணுதான் பாக்கி” என்பாள். 

அந்த வார்த்தைகளுக்குப் பின்னால், “நர்மதை நதிக்கு அழைத்துச் செல்ல மாட்டாயா?”   என்ற த்வனியை என்னால் உணர முடிந்தது. நர்மதையில் புனித நீராடுவதும், புஷ்கரத்  திருழாவில் கலந்துகொள்வதும் ஒருசேர நிகழ இதுவே சரியான தருணம் என்று கருதி உடனடியாகப் புறப்பட முடிவு செய்தேன். 

நாங்கள் ஜபல்பூரை அடைந்தபோது மாலை நான்கு மணி. புஷ்கரத் திருவிழா என்றாலே ​​உள்ளூர் தலைவர்களின் வரவேற்பு பதாகைகளும், நதியின் குளியல் துறைகளை  நோக்கிச் செல்லும் வழிகாட்டிப் பலகைகளும் நிறைந்த சூழலைப் பார்த்துப் பழகிய எனக்கு, நதியைக் கண்டறிய முடிந்ததே தவிர அங்கு படிக்கட்டுகளைக் கண்டறிவது கடினமாக இருந்தது. நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, நதிக்கரைக்குச் செல்லும் ஒரு பாதையைக் கண்டுபிடித்தோம். ஆனால் அங்கு ஒரு ஈ, காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடிk கிடந்தது. பலரிடம் விசாரித்த பிறகு இறுதியாக ‘தில்வாரா காட்’ இருக்கும் இடத்தைக் கண்டறிந்தோம்.

மகாத்மா காந்தியின் அஸ்தி இங்குதான் கரைக்கப்பட்டதாம். திலவாரா காட் அற்புதமான அழகோடு விளங்கியது. கிழக்கு மேற்காகப் பாயும் அபூர்வ நதியான நர்மதை, பசுமையான மலைகளின் ஓரத்தைத் தொட்டபடி அகன்று விரிந்து ஓடிக்கொண்டிருந்தது. யாத்ரிகர்களை நதிப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் மோட்டார் படகுகள் வண்ணமயமான பிளாஸ்டிக் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கரையருகில் வரிசையாக மிதந்து கொண்டிருந்தன. அவை மாலை நேரத்துச் சூரியனின் பொன்னிற ஒளியில் ஒருவித வசீகரத்தோடு ஜொலித்தன. அருகில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய கல் பாலத்தின் விளிம்பில் சில இளம் ஜோடிகள் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். குளியல் துறையின் ஒருபுறம் தில்வாதேஷ்வர் சிவன் கோயில் உள்ளது. அங்கிருந்து ஆரத்தி வழிபாட்டின்போது ஒலிக்கும் கோவில் மணிகளின்  மெல்லிய சீரான ஓசை காற்றில் மிதந்து வந்தது. ஜபல்பூர் போன்ற ஒரு பெரிய நகரத்தில் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய குளியல் துறை இதுதான். இருப்பினும் இங்கு மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அன்று அக்ஷய த்ரிதியை நாள். பக்தர்கள் அவ்வப்போது ஜோடிகளாக வந்து நர்மதை நதிக்கு வழிபாடு செய்து ஆற்றில் நாணயங்களை எறிந்து, கரையில் தேங்காய் உடைத்து, பின்னர் தில்வாதேஷ்வர் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டுத் திரும்பினர்.

சில தசாப்தங்களாக நான் புஷ்கரம் திருவிழாக்களில் பார்த்த பரபரப்பான சூழல் இங்கே சற்றும் தென்படவில்லை. கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. “இங்கும் சந்திரபாபு நாயுடு போன்ற ஒருவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று எனக்குத் தோன்றியது. ஆனால் இங்கு ஒரு பிரச்சினை எழுந்தது. இங்கு நடைபெறும் புஷ்கரத்  திருவிழாவுக்கு அவ்வளவு முக்கியத்துவத்துவம் இல்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ, கோதாவரி பிராமணர்கள் யாருமே அங்கு இல்லை. சொல்லப்போனால், தர்ப்பணச் சடங்குகளை நடத்துவதற்கு வட இந்திய பூசாரி ஒருவர் கூட அங்கு இல்லை.  மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் அந்த முழு படித்துறையிலும் தேடிப் பார்த்தோம். யாரும் தென்படவில்லை. 

படித்துறையின் ஒரு பக்கமாகத் தரையில் ஒரு பழைய போர்வையை விரித்து, அதையே மண மேடையாகக் கொண்டு திருமணம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. மணப்பெண்ணின் வயது பன்னிரண்டோ பதினான்கோ இருக்கலாம். அந்தப் பெண்       முகத்தை மறைத்து சிவப்பு நிற முக்காடு அணிந்திருந்தாள். மணமகனுக்கு இருபது வயதுக்கும் குறைவாகவே இருக்கும். அவன் சூட் அணிந்திருந்தான். தலையில்  ஸ்டைலாக ஒரு தொப்பி அணிந்திருந்தாள். அந்தத் தொப்பியிலிருந்து தொங்கிய சம்பங்கி மலர் மாலைகள் அவன் முகத்தை மறைத்தன. மணமக்ளை அமரவைத்து ஒருவர் திருமணத்தை நடத்தி வைத்துக் கொண்டிருந்தார். அங்கு இருபதுக்கும் குறைவான விருந்தினர்களே இருந்தனர். ஒரு ஓரத்தில் சில ஆண்கள் அமர்ந்து பீடி புகைத்துக்கொண்டிருந்தனர். வேத மந்திரங்கள் ஓதப்பட்டுக்கொண்டிருந்தன. இவ்வளவு சிறிய வயதில் திருமணம் செய்கிறார்களே என்று கோபம் வந்தாலும், அந்தச் சடங்கின் அதீத எளிமை வியப்பை ஏற்படுத்தியது.  

இதற்கிடையில் எங்களுக்கு ஒரு பண்டிதர் கிடைத்தார். அந்த படித்துறை முழுவதிலும் இருந்த ஒரே பண்டிதர் அவர்தான். அவர் இருந்த இடத்தில் பிண்டப் பிரதானம் போன்ற காரியங்கள் எதுவும் நடக்கவில்லை. பக்தர்கள் நதி நீரைத் தங்கள் தலை மேல்  தெளித்துக்கொண்டு அவரிடம் சென்று பத்து ரூபாய் நோட்டை அவர் கையில் வைத்து அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டுச் சென்றனர். நாங்கள் அவரிடம் பிண்டப் பிரதானச் சடங்குகளைச் செய்து தருமாறு கேட்டபோது, ​​அவர் சற்றும் வியப்படையாமல், “நீங்கள் ஆந்திராவிலிருந்து வருகிறீர்களா?” என்று கேட்டார். நாங்கள் பேசிய இந்தி மொழியைக் கேட்டு அவர் இதைக் கணித்தாரா அல்லது எங்கள் நடத்தையை வைத்தே புரிந்துகொண்டாரா என்பது தெரியவில்லை.

அவர் முதலில் நர்மதை நதியை வணங்கும் மந்திரங்களைக் கூறி எங்கள் மூவரையும் நதி ஸ்நானம் செய்வித்தார். முதலில் அம்மாவும், பின்னர் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நானும் என் மனைவியும் நதியில் இறங்கினோம். மார்பளவு ஆழமான நீரில் நிற்கவைத்து அம்மாவை மூன்று முறை நதி நீரில் மூழ்கி எழச் செய்தார். அம்மா தனக்கு மனப்பாடமாகத் தெரிந்த சில ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டு, ஏதோ ஆழ்ந்த ஆன்மீக நிலையில் மூழ்கியிருந்தாற்போல் சற்றுநேரம் அப்படியே அசையாமல் நின்றாள்.   

எனக்கு அப்போது அம்மாவிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவளுடைய அமைதியைக் குலைக்க விரும்பாமல் நானும் நதியில் ஒருமுறை மூழ்கி எழுந்தேன். எங்களுக்கு ஒரு செக்யூரிடியைப் போல, மேல் படியில் அந்தப் பண்டிதர்   கவனத்துடனும் காவல் காப்பது போல நின்றுகொண்டிருந்தார். காய்ந்த தலைமுடி, ஒரு சாண் நீளம் கொண்ட மெல்லிய குடுமி. அரைக்கை சட்டை. என் ஒப்பீடு கேவலமாக இருந்தாலும், அவர் பார்ப்பதற்கு நகரத்திலுள்ள பெரிய பார்களில் தென்படும் வலிமையான பௌன்சர் போலக் காணப்பட்டார். என் மனைவி அன்னபூர்ணாவும் ஸ்நானம் செய்து முடித்தாள்.

பழைய மரப்பலகைகளால் கட்டில் போல் அமைத்திருந்த அவருடைய பணியிடத்தில்    ஈர உடையோடிருந்த என் தாயாரை மென்மையாக அமர வைத்தார். அவர் எனக்கு அருகில் கல் தரையில் அமர்ந்து சடங்குகளைத் தொடங்கினார். என் தாயார், அவளுக்குத் தெரிந்த சொற்ப இந்தி மொழியில் எங்கள் குலம், வம்சம், நாங்கள் பின்பற்றும் ஆசாரங்கள் குறித்து விளக்கினாள். எந்தெந்தச் சமூகங்களுக்கு நாங்கள் சமமானவர்கள் என்பதையும், எங்கள் சடங்குகளை எவ்வளவு நிஷ்டையோடு செய்ய வேண்டும் என்பதையும் அவள் விரிவாகப் பண்டிதரிடம் விளக்கினாள். இம்முறை, எங்கள் உறவினர்கள், நண்பர்களில் மறைந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, அவர்களுடைய கோத்திரங்களுடன் சேர்த்து, நாங்கள் ஒரு நோட்புக்கில் எழுதி எடுத்து வந்திருந்தோம். பண்டிதர் அமைதியுடனும்,  கவனத்துடனும் எல்லா சடங்குகளையும்  என்னைச் செய்ய வைத்தார். தென்னிந்தியாவில் நடக்கும் புஷ்கரங்களின் போது ​​புரோகிதர்களிடம் இத்தகைய அமைதியையும் அர்ப்பணிப்பையும் நான் பார்த்ததில்லை.  புரோகிதர்கள் பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்குள் சடங்குகளை அவசரமாக முடித்துவிடுவதிலேயே குறியாக இருப்பார்கள். ஆனால் இங்கு அப்படியில்லை. நான் எழுதிக் கொண்டு வந்த பெயர்கள் எல்லாம் முடியும்வரை வரிசையாகப் பரத்தியிருந்த தர்பைகளின் மேல் அறுபத்து மூன்று பிண்டங்களை வரிசையாக வைத்து, புரோகிதர் கூறிய ஹிந்தி கலந்த சமஸ்கிருத மந்திரங்களை ஓதி, முழு சடங்கையும் நிறைவு செய்தேன். இறுதியாகப் பிண்டங்களை நர்மதை நதியில் கரைத்து, என் பிரார்த்தனையை நிறைவு செய்தேன். அம்மா மிகவும்  மகிழ்ந்தாள். மேலுலகத்தில்ல் முன்னோர்களுக்கு அடுத்த ஓராண்டு காலத்திற்கு உணவுக்கும் நீருக்கும் எந்தக் குறையும் இருக்காது என்ற எண்ணம் அவளுக்கு நிம்மதியைத் தந்திருக்க வேண்டும். நாற்பது வருடங்களுக்கும் மேலாகப் பல புஷ்கர விழாக்களில் கலந்துகொண்ட என் தாயார், இத்தனை கவனத்துடனும் பக்தியுடனும் சடங்குகளைச் செய்த ஒரு புரோகிதரை இதற்கு முன் பார்த்ததில்லை என்று திருப்தியுடன் கூறினாள்.   

அன்னபூர்ணாவும் நானும் பேசி முடித்த தொகையை விடச் சற்று கூடுதலாகவே புரோகிதருக்கு தட்சிணை கொடுத்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினோம். ஏனோ தெரியவில்லை. என் தாயார் மரப்பலகையின் மீது ஈர உடைகளுடன் அமர்ந்திருந்தபோது ​​அந்தப் புரோகிதரும் குனிந்து என் தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கினார். அம்மா திடுக்கிட்டு கைகளை நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கூப்பி, கடவுளை வேண்டிக்கொண்டாள்.

ஜபல்பூரில் இரவு தங்குவதற்கு எங்களிடம் போதிய நேரம் இல்லை. மறுநாள் அன்னபூர்ணா தேர்தல் பணிக்குச் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் படித்துறையிலிருந்து    நேரடியாக ஊர் திரும்பத் தொடங்கினோம். வழியில் ஒரு சிற்றுண்டி வண்டி தென்பட்டது. அதில் உணவருந்தினோம். தில்வாரா படித்துறையில் பார்த்த திருமணக் குழுவினர் அதே டிபன் வண்டியின் அருகில் சாலையோரம் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்டுத் திருமண விருந்தை முடிப்பதைக் கண்டேன். அவர்கள் இரண்டு ஆட்டோ டிராலிகளில் வந்திருந்தனர். அந்த இடமே கலகலப்பாக இருந்தது. முன்பே குறிப்பிட்டது போல, நர்மதையில் மூழ்கி எழுந்த தருணத்திலிருந்தே அம்மாவிடம் ஏதோ பேச வேண்டும் என்று நான் ஆவலாக இருந்தேன். இந்த ஆரவாரத்திற்கு மத்தியில் பேச விரும்பாமல் நிதானமான ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தேன். அப்போதுதான் அவள் கவனமாகக் கேட்க முடியும். நானும் அவளுடைய எதிர்வினையை கவனித்துப் பார்க்க முடியும்.

அன்னபூர்ணாவால் விழித்திருக்க முடியவில்லை. அவளைப் பின் இருக்கையில் படுக்கச் சொன்னோம். அம்மா முன் இருக்கையில் வந்தமர்ந்தாள். கார் வாகன நடமாட்டம் குறைந்த நெடுஞ்சாலையில் விரைந்து சென்று கொண்டிருந்தது. அம்மா மௌனமாக, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள். இதுதான் சரியான தருணம் என்று எனக்குத் தோன்றியது. “அம்மா, இப்போ நர்மதா நதியையும் பார்த்தாகி விட்டது” என்றேன். 

அம்மா, “ஆமாம்”  என்று மென்மையாகப் புன்னகைத்தாள். “எல்லாம் முடிஞ்சி போச்சு. இனிமே பாக்குறதுக்கோ, கவலைப்படுறதுக்கோ எதுவும் பாக்கி இல்லை” என்றாள்.   

அந்த வார்த்தைகளுக்குப் பொருள் என்ன? அம்மா என்ன சொல்ல வருகிறாள்? கடவுளே. 

**** 

எப்போதும் வீட்டில் அம்மாவும் நானும் மட்டுமே இருப்போம். என் மகன் வெளிநாட்டில்  மேற்படிப்பு படிக்கிறான். என் மகள் ஹாஸ்டலில் தங்கித் படிக்கிறாள். அன்னபூர்ணா வேலைக்குச் சென்றுவிடுவாள். நாங்கள் இருவரும் மட்டுமே எஞ்சியிருப்போம். நான் வீடு திரும்பிய அன்று புஷ்கரப் பயணத்தினால் ஏற்பட்ட களைப்பு நீங்கிய பிறகு அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள். இருவரும் காபி குடித்துக்கொண்டே பேசத் தொடங்கினோம். பல தசாப்தங்களாகத் திட்டமிட்டிருந்த நர்மதா நதி நீராடலைப் பற்றியும் ஒவ்வொரு சடங்கையும் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் செய்து உதவிய புரோகிதரைப் பற்றியும் அம்மா மனநிறைவுடன் பேசினாள். நான் இடையில் குறுக்கிட்டேன். 

“பாரதியக்கா, இதைப் பாரேன்” என்று அழைத்தேன். என் அம்மாவின் பெயர் பாரதி. எனக்கு அன்பு மேலிடும் தருணங்களில் நான் இப்படித்தான் அழைப்பேன். நான் ஏதோ சொல்ல வருகிறேன் என்பதை உணர்ந்துகொண்ட அம்மா,  கவனமாகக் கேட்கத் தயாரானாள். அவள் முழு கவனத்துடன் இருப்பதைக் கண்ட நான்,  “இந்த புஷ்கரங்கள், பிண்டப் பிரதானங்கள் எல்லாம் உண்மையில் உன் சந்தோஷத்துக்காக மட்டுமே செய்றேன். நான் எத்தனை பிடிவாதக்காரன்னு உனக்குத் தெரியும். எனக்கு இதிலெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. அதைப் பத்தி இதுக்கு முன்னாடி பல தடவை பேசியிருக்கோம். உன் காலத்துக்கு அப்புறம் இந்த மாதிரி சடங்கு எதுவும் நான் செய்ய மாட்டேன். உன் உடம்பை ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரிக்குத் தானம் கொடுத்திடுவேன். அதுல அவுங்களுக்கு யூஸ் ஆகுற உறுப்புகள அவுங்க எடுத்துக்குவாங்க. பாக்கியை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவாங்க” என்று புன்னகையுடன் கூறினேன். 

உண்மையில், பல ஆண்டுகளாக நாங்கள் பலமுறை இப்படிப் பேசியிருக்கிறோம். மரணம், இறப்பு போன்ற சொற்களை உச்சரிப்பது அபசகுனம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. மாறாக, மரணத்தை ஒரு வகையான விடுதலை என்றே நான் பார்க்கிறேன். அதனால் எப்போதும் போல இப்போதும் என்னால் அதைப் பற்றி இயல்பாகப்  பேச முடிந்தது. அம்மா என்னைக் கடிந்துகொள்ளவோ, இந்த எண்ணத்தை நிராகரிக்கவோ இல்லை. எந்தவிதமான மனவேதனையையும் அவள்  வெளிப்படுத்தவில்லை. எப்போதும் போல அமைதியாகப் புன்னகையோடு வழக்கமான பதிலையே அளித்தாள்.

“டேய் மகனே, இதெல்லாம் என்னோட சந்தோஷத்துக்காக மட்டுந்தான். நான் இருக்குற  வரைக்கும் நான் சொல்றதக் கேளு. நான் போன பிற்பாடு, நீ எதைச் செஞ்சாலும், செய்யாமல் விட்டாலும் எனக்குத் துளியும் கவலையில்லை”.  

இந்த வார்த்தைகள் எனக்கு எப்போதும் ஒரு துணிச்சலைத் தருகின்றன. உடல் தானம்,  உறுப்பு தானம் குறித்த என்னுடைய தீவிரமான விருப்பத்தை அம்மா ஏற்றுக்கொண்டாள் என்பது எனக்கு நிம்மதியை அளித்தது. நான் அம்மாவை வற்புறுத்தவில்லை. அவளுக்கும் இதில் விருப்பம் இருந்ததால்தான் ஏற்றுக்கொண்டாள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.  

இம்முறை அம்மா மேலும், “உனக்குத் தெரியுமா? நான் கயாவில் ஏற்கனவே ஆத்ம பிண்டம் போட்டுகிட்டேன். அதப்பத்தி உனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். முதல்ல நதிக்கரையில, அப்புறம் விஷ்ணுபாதத்துல, கடைசியா அரச மரத்தடியில பிண்டம் போடுவாங்க. நான் அதெல்லாம் செஞ்சு முடிச்சிட்டேன். பிரம்ம கபாலத்தையும் தரிசனம் செய்துட்டேன். ‘கடா’ ஸ்ராத்தமும் முடிஞ்சிடிச்சி. காசி விஸ்வநாதரை தரிசிச்சாச்சு.   பிரயாகையில திரிவேணி சங்கமத்துல குளிச்சாச்சு. சாஸ்திரப்படி யார தனக்குத் தானே ஆத்ம பிண்டம் போட்டுக்குறாரோ அவர் செத்த பின்னாடி  அவருக்கு வேறு எந்த ஸ்ராத்தமும் வேண்டாம். என்னோட வாழ்க்கை எல்லா விதத்துலயும் முழுசா முடிஞ்சு போச்சு. எந்தக் குறையும் மீதியில்லை” என்றாள். 

‘அப்படியானால் அம்மாவைப் பற்றி இனிமேல் எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ என்றெண்ணி நிம்மதியடைந்தேன். 

அம்மா அந்த வார்த்தைகளின் மூலம் எதைச் சொல்ல முயன்றாள்? எத்தனை இழிவான மனிதன் நான். எந்த நிம்மதியைப் பற்றி சிந்தனை செய்தேன்? 

ஒரு வாரம் கழித்து, அம்மா என்னிடம், “உடல் தானத்திற்குக் கையெழுத்து போடணும்னு  சொன்னியே. வா. நாம எல்லாரும் ஒண்ணா போயி பதிவு செய்துக்கலாம்” என்று நினைவூட்டினாள். 

எங்கள் வீட்டில் நாங்கள் ஐவருமே உடல் தானம் செய்ய நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்தோம். அம்மா இதற்கு முன்பும் சிலமுறை இதைப் பற்றிப் பேசியிருந்தாள். 

அப்போது நான், “இன்னும் கொஞ்சம் காலம் காத்திருப்போம். சின்னவளுக்குப் பதினெட்டு வயசு முடியட்டும். எல்லாருமா போய் பதிவு செய்யலாம்.” என்றேன். 

ஆனால் அம்மாவுக்கு அவசரமாக இருந்தது. அவளால் காத்திருக்க முடியவில்லை.

அவள் விருப்பங்களைத் தீர்த்திருக்காவிட்டால், அம்மா எங்களை விட்டுச் சென்றிருக்க மாட்டாளோ? அம்மா எங்களை விட்டு போயிருந்தால் அவளுடைய விருப்பங்களை நிறைவேற்றாத குறை என்னை எரித்துவிடாதா?

பீஷ்மருக்குத் தன் மரணத்தைத் தானே தீர்மானிக்கும் இச்சா மரண ஆற்றல்  இருந்ததாகச் சொல்வார்கள். அம்மா மேலும் மூன்று, நான்கு மாதங்கள் வாழ்ந்து எங்களை அன்பால் நிறைத்துத் தன் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொண்டாள். சொல்ல வேண்டியதோ, செய்ய வேண்டியதோ எதுவும் பாக்கியில்லை. தீர்க்கப்பட வேண்டிய குறைகள் ஏதுமில்லை என்று உணர்ந்துகொண்ட அவள், அடர்ந்த இருள் சூழ்ந்த ஒரு இரவில் ஈடு இணையற்ற ஆழமான அந்த விடுதலையைத் தேடிக் கொண்டாள். 

எனக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. எனக்கு வழிகாட்டிய ஒளி அணைந்துவிட்டது. பூமி பிளந்துவிடுமோ என்று சொல்லுமளவிற்குத் தாங்கொணாத் துயரம் என்னைச் சூழ்ந்தது.   என் சுவாசம் ஒரு தானியங்கிச் செயலாக, வெறும் காற்றோட்டமாக மட்டுமே நிகழ்ந்தது. ஆகாயம் மட்டுமன்றி என் அக உலகம் முழுவதுமே இருளில் மூழ்கியது. வாழ்வின் மீதான துடிப்பு அனைத்தும் வடிந்து போனவனாக ஒருவித உறைந்த அமைதியில் நிலைகுத்தி நிற்கிறேன்.

மறுநாள் அம்மாவை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்று அவர்களிடம் ஒப்படைத்தோம். அவர்கள் எங்களிடம் ‘கடாபர் பாரதி’  என்று தலைப்பிட்ட ஒரு ஆவணத்தை வழங்கினார்கள். உடற்கூறியல் ஆய்வகம்  அம்மாவின் ஓய்வில்லமாக  ஆனது.  

என்னைச் சுற்றியிருந்த சிறிய உலகில் இது முற்றிலும் புதிய நிகழ்வாக இருந்தது. அந்த உரையாடலுக்குப் பிறகு சுமலதாவும் அதை ஏற்றுக்கொண்டாள். ஆனால் மற்ற பலரால்  அதை ஏற்க முடியவில்லை. 

நான் ஏளனங்களையும், வெறுப்பையும், அவமதிப்பான பார்வைகளையும், கடுமையான சொற்களையும், புறக்கணிப்புகளையும், ஏன், சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதையும் கூட எதிர்கொண்டேன். அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டேன். இவர்கள் அன்பானவர்கள். அம்மாவையும் என்னையும் நேசித்தவர்கள். இருந்தும்  இந்த ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இது ஒரு தொடக்கப் படி மட்டுமே.  சமூகத்தில் நிலைபெற்ற மரபுகளை மீறும் எந்தவொரு செயலும் எதிர்ப்பைச் சந்திக்கவே செய்யும். அதனால்தான் என் அம்மாவின் சிந்தனை முறையை நான் பெரிதும் மதித்தேன். உண்மையில் அவர்கள் யாரும் அம்மாவைப் போல ஆசார சம்பிரதாயங்களை ஆழமாக மதித்தவர் இல்லை. அதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களும் அவர்களில் யாரும் இல்லை. மரபுகளை உயர்வாகக் கருதிய அதே வேளையில் அர்த்தமற்ற பகுதிகளை மிக எளிதாக எந்த விதத் தயக்கமும் இன்றி ஒதுக்கிவிடவும் அம்மாவால் முடிந்தது. அன்று அம்மா சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றன:

“உயிரற்ற மரக்கட்டைக்குக் கூட பிரயோஜனம் இருக்குமானால், உடல்தானம் சம்பிரதாயமாக நிலைக்கணும் தானே?”  

உண்மைதான். புதிய கருத்துகள் உருவாகி வளர்ந்து காலப்போக்கில் அவை தமக்கே உரிய மரபுகளாக மாற வேண்டும்.

அம்மா என் கைகளில் ஒரு ஏற்றிய மெழுகுவர்த்தியை ஒப்படைத்தாள். அதைத் தொடர்ந்து சுமந்து செல்வது இப்போது என் பொறுப்பு. இது பலரது காலடிகளால் மெருகேறிய பாதையோ, தார் பூசிய அழகான நெடுஞ்சாலையோ அல்ல. இது முட்கள் நிறைந்த பாதை. நான் முன்னேறும்போது, ​​எல்லா திசைகளிலிருந்தும் என் மீது கற்கள் வீசப்படலாம். முட்களை அகற்றி, என் மேல் விழுந்த கற்களை பாதையின் இருபுறமும் அடுக்கி வைத்து, அடி மேல் அடி வைத்து நடந்து, நான் இந்த ஒளியைச் சுமந்து செல்ல வேண்டும். அடர்ந்த இருளை முழுமையாக நீக்கும் ஒரு பேரொளியை உருவாக்க வேண்டும். 

வாழ்க்கை என்பது இப்படித்தான். எந்த நம்பிக்கைகள் நிலைத்திருக்கும், எந்த விருப்பங்கள் சிதைந்து போகும் என்பதை யாரறிவார்? பெருமைக்குரிய அடையாளங்கள் குமிழிகளைப் போல மறைந்து போகலாம். செல்வத்தின் உயர்ந்த சிகரங்கள் மணற்குவியலாகச் சரிந்து விழலாம். புகழுக்குரிய சின்னங்கள் களங்கப்படலாம். வெற்றிக் கொடிகள் தோல்வியால் தாழ்த்தப்படலாம். ஏற்ற இறக்கங்களைக் கண்டு கலங்காமல் சமமான பார்வையுடன் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும். ஒரு நாள்  நான் ‘கடாவர்’ ஆகவேண்டிய நிலையை நிச்சயமாக அடைவேன். அந்தத் தருணத்தை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டால் என் தோளை நானே தட்டிக்கொடுத்து, “சபாஷ். நீ உண்மையிலேயே “உன் அம்மாவின் மகன்” என்று சொல்லிக் கொள்வேன்.



Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.