ஆழிக்குழியோசை

“அய்யோ…” அம்மாவின் அலறல் ஒரு பாறை போல வந்து சித்தத்தின் மேல் அறைந்துச் சிதறியது. அந்த ஒலியால் உடல் சட்டெனச் சில்லிட்டு அரித்தது. நிரஞ்சன் அதை துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை. “டேய் மாப்ள,  என்னை மன்னிச்சிடுடா…” என்ற மாமாவின் சொற்கள் மூச்சைமுட்டும் பொதிகளாக அதுவரை அவன்மேல் அழுந்திக் கிடந்தன. அவனால் அந்தச் சொற்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவை அவன்மேல் முடிவின்றி விழுந்தபடியே இருந்தன.

அம்மாவின் குரல் தீட்டிய வாள்போல் சித்தத்திற்குள் இறங்கியதும் பரபரத்து அவரைநோக்கித் திரும்பி அவரைப் பிடிக்க எத்தனிப்பதற்குள் அவர் ஓட்டமாக இரண்டெட்டில் மாமா இருந்த படுக்கையை அடைந்து அவரது கால்களைக் கட்டிக்கொண்டார்.

அந்த அறை மொத்தமும் திடுக்கிட்டு அடைப்பகன்ற ஆற்றலாய் அவர்களைநோக்கித் திரும்பிக் கொண்டது. செவிலியர் ஒருவர் ஓசையை உயர்த்தாமல் ஆனால் கடினமான குரலில், “ஏன்மா அறிவிருக்காம்மா, எதுக்கு ஐசியூ வார்ட்ல இப்படி கத்துறீங்க?” என்றபடி அவர்களை நெருங்கினார். வெளியிலிருந்து கதவைத் திறந்துகொண்டு அத்தையும், சேகரனும் பீதியுடன் உள்ளே விரைந்து வந்தனர்.

செவிலியர் சேகரனிடம் திரும்பி  “ஏன்பா சின்ன சத்தம்கூட இல்லாம பார்த்துட்டுப் போக சொல்லித்தானே உள்ளேயே விட்டது!?” என்றார்.

சேகரன் அவர்களை அணுகி, “டேய் என்னடா?” என்றான்.

நிரஞ்சன் “இல்லை…” என்றபடி தடுமாற்றத்துடன் அத்தையை நோக்கினான். அவர் படுக்கையில் கிடந்த மாமாவை மிரட்சியுடன் கண்டு, அவருள் மூச்சசைவதை உணர்ந்ததும் உடல் தளர்ந்து மார்மேலும், தலையிலும் கைகளை வைத்துக் கொண்டார். மெல்லிய குரலில் “சேகரா அவங்களை வெளியில அனுப்பு!” என்றார். அவரது குரல் ததும்பியது.

“அவங்களைப்பிடி!” என்றான் சேகரன். இருவருமாக அம்மாவைப் பிடித்து எழுப்பினர். சிறுபிள்ளைபோல முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பியழும் அவரைக் கண்டு சேகரன் வியந்தான். அவரை வெளியே அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தியபின்பு, நிரஞ்சனிடம் “என்னடா ஆச்சு?” என்றான்.

“இல்லை, மாமாவைப் பார்த்ததும்…”

சேகரன் அதில் நிறைவடையவில்லை. “சரி, அவங்க பக்கத்துலயே இரு!” என்றுவிட்டு உள்ளே சென்றான்.

நிரஞ்சன் தலையசைத்துவிட்டு அம்மாவின் அருகில் அமர்ந்துகொண்டான். அவர் அழுதுகொண்டே இருந்தார். உடல் குலுங்க முகத்தை மூடியிருந்த விரலிடுக்குக் குழிகளை துளிகள் நிறைத்தபடியே இருந்தன. சிறுசிறு கேவல்களின்றி சொற்களே இல்லை.

“லெட்சத்துல சம்பளம் வாங்குறவனே பொண்ணு கிடைக்காம அலைஞ்சிட்டு இருக்கான். பொழப்பே இல்லாதவனுக்காக பொண்ணை விட்டுவச்சி இருக்கலாம்னு சொல்லுறியே அறிவிருக்கா?” என்று அத்தை மாமாவிடம் சத்தமிட்டதாக சில பெண்கள்வந்து வீட்டில் கூறிவிட்டுச் சென்றார்கள். அன்றும், அதன்பின்னும் அவர்கள் வீட்டின் முன்பும், உள்ளுமாக நின்று அதன் நீட்சிகளைக் கூறிக்கொண்டே இருந்தார்கள். தொடக்கத்தில் அதற்கென அழுவதும், சில சுடுசொற்களால் பதிலளித்துவிடுவதுமாக இருந்த அம்மாவை அவரது அகச்சூழல் ஒருவாறு இறுக வைத்துவிட்டது. அதன்பின் அவர் யாரிடமும் அது தொடர்பாக எதுவும் கூறுவதில்லை. அதுவே அவர் கேட்பதில்லை என்பதையும் கூறிவிட்டது.

நிரஞ்சனுக்கும் இலஞ்சியின்மீது காதலென்று ஒன்றுமில்லை. ஆனால், காதலென அறியப்படாத விருப்பமிருந்தது. அதற்குமுன் அதுவெறும் கேலியாக இருந்தது. சிறுவயதிலெல்லாம், “மாப்ள, நீ மட்டும் என் பிள்ளையைக் கட்டிக்கோ, மாமன் கடையைவிட பெரிய கடையா கட்டித்தரேன்!” என்பார் மாமா. அது எப்போதும் இலஞ்சியோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த பருவம். நிரஞ்சன் தலையையாட்டி “மாட்டேன்!” என்பான். “அப்போ மாமாவோட பெரிய சொத்து வேணாமா?” என்பார். அவன் வேண்டாமென்றால் “போடா பைத்தியக்காரா!” என்றுவிட்டு அவனை இழுத்து உடலோடு இறுக்கி, அவனது மென்மையான கன்னத்தில் சிராய்புகள் தோன்றுமளவு தன் தாடிக் கன்னத்தைத் தேய்ப்பார். அவர்மேல் எப்போதும் எழும் மளிகைக்கடை வாடையோடு வியர்வையும், புளித்த நெடியும் கூடி அவனைத் திணறிடிக்கும்.

அதற்கெனவே இலஞ்சியிடம் சண்டைகளிலும் வம்புப்பேச்சிகளினூடும்கூட, “போ, நான் ஒன்னும் உன்னைக் கட்டிக்க மாட்டேன்!” என்று கூறுவான். அதற்கு அவள் “ச்சீ ப்பே! உன்னை யாரு கட்டிக்குவா?” என்றுவிட்டு அழுதபடி செல்வதைக் காண அவனுக்கு வேடிக்கையாக இருக்கும். பிற்பாடு அவள்மீது உண்டான ஈர்ப்பை எல்லாம் அவன் எள்ளலாக மடைமாற்றிக் கொண்டிருந்தான். அவள் அழகையும், சிரிப்பையும், பற்றையும்கூட எள்ளல் செய்வான். இளம்பருவத்தில் அந்தச் சீண்டல்கள் எல்லாம் எப்படியோ குறைந்துவிட்டன. பேச்சும்கூட சுருக்கமாக மாறிக்கொள்ள, பார்வைகள் மட்டும் அதிகரித்தன. மிகவும் அழுத்தமான, அவர்கள் மட்டுமே அறியும் பார்வைகள்.

இலஞ்சியை மணக்கப் போவதில்லை என்ற செய்தியை அவனால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அவனால் துலங்கிக்கொள்ள இயலாவொன்று மீண்டும் மீண்டும் அவனது சிந்தையில் தோன்றிக்கொண்டே இருந்தது. நாட்கள் நகர்வில் அதன்மேல் எடைக்கூடியது. அவனறியாத அது  அவனுள் புகைந்தெழுந்து அவனை உண்ணத் தொடங்கியது. அவன் யாரோடும் பேச்சற்றவனானான். தனிமையில் அமர்ந்திருக்கையில் தவிப்பும், கூட்டத்தில் இருக்கையில் படபடப்பும் கொண்டான். அவனால் அதைத் துல்லியமாக வகுக்க முடியவில்லை. அதற்கு உருவம் எழுதியெழுதி அழித்தபடியே இருந்தான்.

“ஏன்டா… நீ கூப்பிட்டா அந்தப் புள்ளை வந்துடாதா!?” என்றான் மதி. ஆலமரமேடையில் கால்மேல் காலிட்டுப் படுத்துக்கொண்டு தலைக்குக் கைகொடுத்து கிளைகளைப் பார்த்தபடியே நிரஞ்சனிடம் கேட்டான்.

அவனையும், அவனுக்கடுத்ததாக இருந்த நிரஞ்சனின் மௌனத்தையும் கண்டுவிட்டு, “வராதாம்!” என்றான் வள்ளியப்பன்.

“டேய் எரும! உன்னையாக் கேட்டேன்?” மதி வள்ளியைநோக்கி கோபமான பாவனையுடன் திரும்பினான்.

“அவன்தான் ஒன்னும் சொல்லலையே!”

மதி படுத்த வாக்கிலேயே தலையை பின்னுருட்டி தலைகீழாக அமர்ந்திருந்த நிரஞ்சனைக் கண்டு “டேய் நிரஞ்சி, இதுலாம் பிரச்சனையே இல்லைடா. அந்தப் புள்ள மட்டும் வர ரெடியா இருந்தாலே போதும். திருச்செங்கோட்டுல மாமா இருக்கார்ல, அவர்ட்ட சொன்னா மலையில கல்யாணத்தைப் பண்ணிவிட்டு, ஈரோட்டுலயோ சேலத்திலேயோ உனக்கு ஒரு வேலையும் ஏற்பாடு பண்ணிடுவாரு. நீ பாட்டுக்கு வாழலாம்.” என்றான்.

“டேய்!” என்று ஒரு குரல் கேட்டது. மதி அனிச்சையாக வள்ளியைநோக்கிவிட்டு, பின் திரும்பி ஆலமரமிருந்த மண்பரப்பிற்கு அப்பால் கடைவீதிக்குச் செல்லும் சாலையைக் கண்டான். அங்கே சேகரன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மதி சட்டென எழுந்தமர்ந்துகொண்டு கைலியைச் சீர்செய்வதுபோல் “டேய் உன் மாமன்டா!” என்றான்.

நிரஞ்சன் தலையுயர்த்தியதும், சேகரன் கைநீட்டி தன்னை அழைப்பதைக் கண்டான். அவனுள் தயக்கமும், தவிப்பும் அடைந்து உடல் வியர்த்தது. அவன் மெல்ல மேடையை விட்டு கீழிறங்கி சேகரனைக் கண்டபடி நேராக நடந்தான். மண்பரப்பிற்கும், சாலைக்கும் இடையே இருந்த இரண்டடி சாக்கடையைக் கடக்க ஓரமாகப் போடப்பட்டிருந்த கற்பலகையையும் தவிர்த்து, நேர் நடந்தான். அகலக்கால் வைத்து சாக்கடையைக் கடந்து, சிறிய தடுமாற்றத்துடன் சேகரன்முன் சென்று நின்றபோது, தன் உடல் இயந்திரத்தனமாகச் செயல்படுவதை உணர்ந்து வெட்கி கசப்படைந்தான். அது தவிப்பை மேலும் அதிகரித்தது.

“என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான் சேகரன்.

“இல்ல, பசங்களோட…” என்ற நிரஞ்சன் சேகரனின் முகத்தைக் கண்டு தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

“முதல்ல மூஞ்ச இப்படி வச்சிக்கிட்டு திரியாத! ஊருல உள்ளவன்லாம் ஒன்னு சொல்லுறேன்னு மண்டையைத் தேய்ச்சிட்டு இருப்பானுங்க. எவன் பேச்சையாவது கேட்டு எதையாவது பண்ணித் தொலைஞ்சனா வாழ்க்கை கெட்டுப்போகும், புரியுதா!?”

நிரஞ்சன் தலையசைத்தான். சேகரன் இடையில் கையையூன்றிக்கொண்டு தலையை அசைத்தபடி இருந்தான். அவனுள் மேலும் சொற்கள் இருப்பதாகத் தோன்றியது. “சென்னை பக்கட்டுப்போய் வேலை தேடிப் பார்க்கலாம்ல! அம்மாக்கூட இருந்தாகணும்னு ஊருக்குள்ளேயே உருண்டு கிடந்தா எப்படி?” என்றான். அவனே தனக்குள் பேசிக்கொள்பவன்போல “படிச்ச வேலை கிடைக்கணும்னா கொஞ்சம் தூரத் தொலவு போய்த்தான் ஆகணும். போய் பாரு. எதுவும் கிடைச்சிட்டா நல்லதுதானே!” என்றான்.

அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. நிரஞ்சன் தலையசைத்தான். அவன் நிரஞ்சனின் தோள்தட்டி நகர்ந்து சென்றான்.

இரண்டு நாட்கள் கழித்து, சேகரன் கூறியதையே அம்மாவும் கூறியபோது அவனுக்கு அழுகைவருவதுபோல் ஆகியது. ஏனோ எல்லோரும் தன்னை விலக்குவதாக எண்ணிக்கொண்டான். படித்து முடித்து, அதற்கான வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றியே திரிந்தது அம்மாவிற்காகத் தான் என்று நம்பியிருந்தான். அவரே அவனைச் செல்லும்படி கூறியபின் அது மேலும் உறுதியானது. சென்னையில் கிருஷ்ணனின் அறையில்  மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். எதன் பொருட்டும் ஊருக்கு வரவேண்டியதில்லை என்று அம்மா கூறியிருந்ததால், அவனுக்கு வேலைதேடும் பணிமட்டும்தான் எஞ்சியிருந்தது. தொண்ணூறு நாட்கள் அவரைக் காணாததும், அவனைக் காணவேண்டும் என்று அவர் சொல்லாததும் அவனுக்கு வியப்பாக இருந்தது. இது அவனாலும், அவராலும் முடியக்கூடிய ஒன்றென்றே அவன் எண்ணியிருக்கவில்லை.

வேலைக்குத் தேர்வாகி, அது உறுதியான அன்று அவன் அம்மாவை அழைத்து கூறினான். “ரொம்ப சந்தோசம்ப்பா! எப்போ சேரச் சொல்லி இருக்காங்க?” என்றார்.

“ஒரு வாரத்துல!”

“சரிப்பா! புதுத்துணி நாலு எடுத்து வச்சியிருக்கேன்…” என்று அவர் தொடங்கியபோது அது ஊருக்கான அழைப்பென்று உறுதிகொண்டு மனம் மகிழாமல் ஏனோ சலிப்படைந்தது. அவர் அதன் தொடர்ச்சியாக “கிருஷ்ணன் ஊருக்கு வந்திருக்கானாமே, நான் அவன்கிட்ட அதைலாம் கொடுத்துவிடுறேன். நீ இங்க வந்து சிரமப்பட்டுட்டு இருக்க வேண்டாம்!” என்றான்.

அவனுக்கு சட்டென மனம் கசந்து சிரிப்பு வந்தது. “என்னைப் பார்க்கணும்னு உனக்கு தோனலயாம்மா?” என்றான். அதைக் கூறியபின்தான் அந்தச் சொற்கள் அவனறியாமல் வெளிவந்துவிட்டதை எண்ணி அஞ்சினான்.

அம்மா மறுநொடியே “அதுல என்னப்பா, நீ எப்பவும் என் கண்ணுமுன்ன தானே இருக்க!” என்றார். அவர் அதை அழுகாமல் கூறியதில், அவனுக்கு அழுகை வந்தது.

கிருஷ்ணன் புதுத்துணிகளோடும், செலவுக்காசோடும் அறைக்கு மீண்டபின்தான் இலஞ்சிக்கு ஒரு வாரம் முன்பு திருமணம் நிச்சயமாகிவிட்டச் செய்தி தெரிந்தது. மாப்பிள்ளை சீர்காழியில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறான். மாமாவின் உடல் சீர்கெட்டு விட்டதால் திருமணத்தை மூன்று மாதத்தில் முடித்திட இருக்கிறார்கள். அவர் நிறைய குடித்து எங்கும் தனித்திருப்பதாகவும், மளிகைக்கடையை முழுமையாக சேகரனே கவனித்துக் கொள்வதாகவும் கூறினான். மதியும், வள்ளியப்பனும் அவனை ஊர்வரும்படி கேட்டுக்கொண்டதையும் தெரிவித்தான்.

நிரஞ்சனுக்கு அவையெல்லாமே தொலைதூரங்களாகிவிட்டன. அம்மாவே எங்கோ அடியாழத்தில் நெளியும் நீர்ப்பிம்பம்போல்தான் காட்சியளிக்க ஆரம்பித்திருந்தார். வருத்தம் வலிந்து வரவழைத்துக் கொள்ளவேண்டிய ஒன்றாக இருந்தது. அப்படி வலிந்து சிந்தனைக்குள் ஆழ்ந்திருப்பதும் வேலைக்குச் சேர்ந்தபின் அரிதாகிவிட்டது. காலையும், மாலையும் வேலைக்குச் செல்வதும், அறைக்குத் திரும்புவதுமான ஓட்டத்திற்குள்ளே ஒளிந்துகொண்டன. அவற்றிற்கிடையே அவனிடம் பேசிய அம்மாவிடமும் உணவு, உறக்கம், பணி சார்ந்த சொற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. நிரஞ்சனுக்கும் அம்மூன்று மட்டும்தான் அவ்வாழ்வில் இருந்தன. அவற்றுக்கு அப்பால் எதையும் தருவித்துக்கொள்ளும் துணிவு அவனிடமில்லை. புதிய யாரிடமும் பேச படபடப்பு உண்டாகியது. பணியிடத்தில் அவன் இயந்திரம்போலவே பழகிவந்தான். அவனுக்கு எல்லாமே அலுத்துக் கொண்டிருந்தன. எங்கோ அவனுடைய வாழ்வு அவனின்றி நலிந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. அதை அடையாளம் காணவோ, கைப்பற்றிக்கொள்ளவோ அவனால் ஏதும் செய்ய முடியவில்லை.

உணவு இடைவெளியில் கைகளைக் கட்டிக்கொண்டு இருக்கையில் கண்களை மூடி சாய்ந்திருந்தபோது பாக்கெட்டுக்குள் கைப்பேசி அதிர்ந்தது. திரையில் புதிய எண்ணைக் கண்டதும் அதைத் துண்டித்துவிட்டு பேசியை மேசையில் வைத்தான். அது மீண்டும் அதிர்ந்தது. நிரஞ்சன் அதை எடுத்துக்கொண்டு “ஹலோ?” என்றான்.

எதிர்முனையும் “ஹலோ!” என்றது. அந்தக் குரலை அவன் அனுமானிக்க எத்தனித்தபோது உள்ளம் சிலிர்த்துக் கொண்டது. இதயம் சில்லிட்டு துடிப்பதை உணர முடிந்தது. “மாமா?” என்றாள் இலஞ்சி.

“அ?” அவனால் எதுவும் கூறமுடியவில்லை.

“எப்படி இருக்க மாமா?” என்றாள். அவன் மிகவும் சிரமப்பட்டு மூச்சை இழுத்துக்கொண்டான்.

“மாமா?”

“ம்ம்!”

இலஞ்சி “என்மேல கோவமா உனக்கு?” என்றாள். அந்தக் குரலின் ஆழத்தில் அழுகையொட்டி வந்ததை நிரஞ்சனால் துல்லியமாக உணர முடிந்தது.

“இல்லை!” என்றான் படபடத்து.

“அப்புறம் ஏன் என்கிட்டலாம் பேசுறதே இல்லை. ஊருக்குக்கூட வரதே இல்லையாமே!? நீயும், அத்தையும் கல்யாணத்துக்காவது வருவீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். அப்பாவுக்கு அதுல ரொம்ப வருத்தம்!”

“ம்ம்”

“மாமா…” என்ற இலஞ்சி இரண்டு நொடிகள் அமைதி இருந்தாள். பின் “அதைலாம் மறந்துடு மாமா. எனக்கும்தான் கஷ்டமா இருந்துச்சு. திடீர்னு கல்யாணம்னதும் எனக்கும் ஒன்னுமே புரியல. உன்னைப் பார்த்து பேசணும் போலவே இருந்துச்சு. ஆனா நீ வேலைதேடி போயிட்டதா எல்லாரும் சொன்னாங்க. எதுவும் புரியுறதுக்கு முன்னயே எல்லாம் முடிஞ்சுபோச்சு!” என்றபோது, அவள் அதை என்னவெனக் கூறுகிறாள் என்று பகுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் அவனது மௌனத்திடம் “ஊருக்கு வந்தா சொல்லு மாமா. முடிஞ்சா இங்க சீர்காழிக்கு வா. அவர்கிட்ட உன்னைப்பத்திலாம் நிறைய சொல்லியிருக்கேன். அவரும் உன்னை மாதிரிதான்!” என்றாள். எப்போது அந்த அழைப்பு துண்டித்தது என்று நினைவிலில்லை.

மருத்துவனையின் சாய்வான பாதையின்மீது இலஞ்சி வயிற்றைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு ஏறி வந்தாள். அவளுக்கு இடதுபக்கமாக ஓரடி இடைவெளியில் பின்தொடர்ந்தபடி அவளது கணவன் உடன்வந்தான். எளிய உருவம். முகம் அமைதியாக எதன்மீதும் ஆர்வமின்றி உடன்வந்தது. அவள் அவர்களிருந்த இடத்தை நெருங்கியதும், அம்மாவின் தோள்மேல் கைவைத்து “அத்தை!” என்றாள். அவள் குரலில் வியப்பிருந்தது.

அம்மா சட்டெனத் தலைநிமிர்ந்து அவளை நோக்கியதும், “யம்மா இலஞ்சி…” என்று தேம்பலை மீண்டும் அழுகையாக்கிக்கொண்டார். இலஞ்சி அதில் கலவரமடைந்து நிரஞ்சனை ஏறிட “மாமாக்கு ஒன்னுமில்லை. உள்ளதான் இருக்கார்” என்றான் அவசரமாக. அந்தக் குரலில் அச்சமிருந்ததை எண்ணி, தலைதாழ்த்திக் கொண்டான்.

அவள் கணவன் கைப்பேசியில், “வெளியிலதான் இருக்கோம்” என்றது கேட்டது. சிறிது நேரத்தில் சேகரன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். “வாம்மா! வாங்க!” என்றான்.

“அப்பாக்கு எப்படி இருக்கு?” என்றாள்.

“பார்த்துட்டு இருக்காங்க. உள்ள போய் பாரு, அம்மா பக்கத்துல தான் இருக்காங்க!”

அவள் தலையசைத்து உள்ளே சென்றாள். “நீங்களும் போகலாம் மாப்ள” என்றான்.

“இருக்கட்டும் மச்சான்!” என்று அவன் வெளியிலேயே நின்றுகொண்டான். சேகரனிடம் வழமையான சில கேள்விகளைக் கேட்டான். பின் யாருக்கோ ஒரு அழைப்பு விடுத்து, பேசிவிட்டு மீண்டுவந்தான். சேகரன் அவனிடம் “இங்கதானே இருக்கீங்க?” என்றான். அவன் “ஆமா!” என்றான்.

“கொஞ்சம் பார்த்துக்கோங்க. நான் கீழவர போயிட்டு வரேன். கொஞ்சம் தலைவலியா இருக்கு!”

அவன் தலையசைத்தான். சேகரனும் தலையசைத்துவிட்டு “எதாவதுன்னா உடனே போன் பண்ணுங்க, வந்துடுறேன்!” என்றான். பின் நிரஞ்சனை நெருங்கி “டேய் வா!” என்றான். அவன் அம்மாவை ஏறிட்டான். அவர் அவனில்லாப் பரப்பிற்குள் தலைதாங்கி அமர்ந்திருந்தார். “ப்ச் வாடா!” என்றான் சேகரன் மீண்டும்.

நிரஞ்சன் எழுந்து அவனைத் தொடர்ந்தான். “எங்கே?” என்றான்.

“டீ குடிச்சிட்டு வரலாம்!”

“அவரு?”

“வேண்டாம்!” என்றான் முணுமுணுப்பாய்.

இருவரும் தரைத்தளம் வந்தபோது “எதுக்குடா உங்கம்மா அப்படி கத்துச்சி?” என்றான் சேகரன்.

“இல்லை, சும்மா…”

“சும்மாவா?”

“இல்லை, அவரைப் பார்த்ததும்…”

“ம்ம். ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்தே ஒருவருசங்கிட்ட ஆகப்போகுது!”. நிரஞ்சன் தலையசைத்தான். “அவருக்கு அது ரொம்ப வருத்தம்டா. வீட்லயும் ஒழுங்கா யார்கிட்டயும் பேசுறது இல்லை. ஒரே குடி. யார் சொல்லியும் கேட்கல.” சேகரன் நெடுமூச்சுவிட்டுக் கொண்டான். “எதாவது பேசணும்னா இலஞ்சிக்குத் தான் போன் பண்ணுவாரு. அவர் உங்ககிட்ட எதுவும் பேசினாரா?” என்றான்.

“எப்போ?”

“உள்ள போனீங்களே!”

“இல்லை மாமா!”

“ம்ம். அவர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாரு. உடனே போன் பண்ணிட்டேன்!”

“எதுவும் இல்லை மாமா!”

“அவர் எங்ககிட்ட பேசுறதே இல்லை. ஏனோ எங்கமேல அவருக்கு வெறுப்பாகிப் போச்சு!” அவன் விரக்தி கொள்வதை உணரமுடிந்தது.

“அப்படிலாம் இல்லை மாமா!”

“இல்லைடா. ஆளாளுக்கு ஒரு கணக்கு வச்சியிருக்காங்க, அதுல நாமதான் மாட்டிக்கிட்டு உருளுறோம்.” என்றான்.

வெளியே நல்ல வெயில் இருந்தது. நிலத்தில் காலூன்றி நின்றிருந்த நிறங்களெல்லாம் சற்று மங்கியிருந்தன. வண்டிகள் நிறுத்துமிடத்தின் தொடக்கத்தில் கடை இருந்தது. சேகரன் இருவருக்குமாய் தேநீர் வாங்கிவந்து மேசையின்மேல் வைத்தான். மெழுகு படர்ந்தாற்போல் தெரிந்த மேற்பகுதியை ஊதிவிட்டு இரண்டு மிடறு உறிஞ்சினான். “உனக்கு எதுவும் வருத்தமாடா?” என்றான். நிரஞ்சன் அந்தக் கேள்வியை உள்வாங்கிக் கொள்ளவில்லை. “எங்கமேல எதுவும் வருத்தமானு கேட்டேன்!”

“ஏன் மாமா, அப்படிலாம் நினைக்காதீங்க!”

“சொல்லிடுடா. அப்புறம் சாவுறவரைக்கும் வச்சிட்டே இருக்கணும்!”

நிரஞ்சன் எதுவும் கூறிக்கொள்ளவில்லை. சேகரன் கைப்பேசி அடித்தது. அவன் அழைப்பை இணைத்து “சொல்லுங்க?” என்றான். அடுத்தது “தோ உடனே” என்றான். கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, கைப்பேசியை சட்டையில் வைத்துவிட்டு “நிரஞ்சா வா!” என்றான்.

மேலே சென்றபோது இலஞ்சி கதவினருகே நின்று அழுதுகொண்டிருந்தாள். சேகரனைக் கண்டதும் அவனை நெருங்கிவந்து அவன் மார்மேல் விழுந்து “அண்ணே அப்பா போயிட்டாருண்ணே!” என்று அலறினாள். அந்தச் சொற்கள் நிரஞ்சனுக்கு நம்பும்படியாக இல்லை. பின்னிருந்து யாரோ தொண்டையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டது போன்ற உணர்வு. அவன் அம்மாவை நோக்கினான். அவர் அமைதியாக சிலைபோல அமர்ந்திருந்தார். இலஞ்சி அழுகையாகவே “என் கையைப் பிடிச்சிக்கிட்டு என்னை மன்னிச்சுடு… மன்னிச்சிடுனு…” என்றபோது சேகரன் அவளது கணவனைக் கண்டுவிட்டு “ஒன்னுல்லம்மா!” என்றான். அவள் இருமுறை தலையில் வலுவாக அறைந்துகொண்டாள்.

அறையிலிருந்து வெளியேறிய அத்தை திடுக்கிட்டு அவளைநெருங்கி “பைத்தியக்காரி, என்னடி பண்ணுற? வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு…” என்று பிடித்துக்கொண்டபோது அவரும் அழத் தொடங்கினார்.

செவிலியர் ஒருவர் “சார்!” என்றார். சேகரன் தலையை அசைத்துக்கொண்டு அவருடன் சென்றான். நிரஞ்சனும் அவனைத் தொடர்ந்து அந்த அறைக்குள் செல்ல எண்ணியபோது அத்தை அழுகையினூடே அவனையும், அம்மாவையும் ஒருமுறை ஏறிட்டுவிட்டு திரும்பிக்கொண்டார்.

சிறிது நேரத்தில் மாமாவை அகலத் திறந்த வழியின் வழியே தள்ளிவந்தார்கள். அவரை சாய்வுப்பாதையில் கொண்டு சென்றபோது அனைவரும் அவர்பின்னே விரைந்தனர். அம்மாவிடம் அப்போதும் அழுகையில்லை. அழுகைக்குமுன் அவரிடமிருந்த இறுக்கம் இருமடங்காகியிருந்ததுபோல் தோன்றியது. அத்தையும், இலஞ்சியின் கணவனும் சிலரை கைப்பேசியில் அழைத்து தகவலைக் கூறிக் கொண்டிருந்தனர். சேகரன் மருத்துவமனைக் காரியங்களில் இயங்கிக் கொண்டிருந்தான்.

ஆம்புலன்ஸ் மருத்துவமனை வாசலில் அணைத்து நின்றது. ஓட்டுநர் இறங்கிவந்து பின்பக்கக் கதவுகளைத் திறந்துவிட்டதும், மாமாவை உள்ளே கொண்டு சென்றார்கள். நிரஞ்சனும் அவர்களோடு உள்ளே ஏறிக்கொண்டான். அவரை அதிலிருந்த படுக்கையில் கிடத்தியபின் ஊழியர்கள் இறங்கி கொண்டார்கள். அத்தை அழைப்பைத் துண்டித்துவிட்டு வண்டிக்குள் ஏறியபோது உள்ளே நிரஞ்சனிருப்பதைக் கண்டு குழம்பினார். அவரது அலைபேசி மீண்டும் அடித்தது. நிரஞ்சன் அந்த ஒலியைக் கேட்டு அவரை ஏறிட்டுவிட்டு மாமாவிடம் திரும்பிக் கொண்டான்.

அத்தை அலுப்பும், கோபமுமாக வண்டியைவிட்டு இறங்கிக்கொண்டு “சேகரா?” என்று கத்தினார்.

நிரஞ்சன் மாமாவின் வலது கையை தனது உள்ளங்கைகளுக்குள் பொத்திக்கொண்டான். அவன் மெல்ல “மாமா…” என்றபோது சேகரன் வண்டிக்குள் ஏறி அவனை நெருங்கினான். “உங்கமேல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை மாமா, நீங்க எப்பவும் எங்களுக்கு ஒன்னுதான். கவலைப்படாதீங்க!” என்றான். சேகரனுக்கு அச்சொற்கள் விழுங்க முடியாத காற்றாகத் தொண்டையில் சிக்கியது. அவன் கேவி நிரஞ்சனின் தோளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான். அதில் நிரஞ்சனின் உடல் குலுங்கியது. கைகளுக்குள் அடங்கியிருந்த மாமாவின் விரல் அசைந்து அவனது உள்ளங்கையை வருடியது. அவர் அதன்பின் இறந்ததாகவே அவன் எண்ணிக்கொண்டான்.


Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.