இருளில் ஒளிரும் கலைப்படைப்புகள் பின் ஒளிந்த வேதியியல்

பழங்கால வண்ணப்பூச்சுகளில் மறைந்திருக்கும் ஒளி

இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அமைதியான கூடங்கள் வழியாக நடந்து செல்லும்போது, கண்ணாடிக் கூண்டுகளுக்குள் கரடுமுரடான நீல நிற லேபிஸ் லாசுலி (Lapis lazuli) கற்கள், சிவப்பு தீப்பிழம்பு போல் காணப்படும் சின்னபார் (Cinnabar) தாதுக்கள், ஒளி ஊடுருவும் நீண்ட ஜிப்சம் (Gypsum) படிகங்கள் ஆகியவைகளை சாதாரணமாக பார்க்கலாம். சற்று அருகில் இருக்கும் கலை அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தால், அதே கனிமங்கள் மீண்டும் நமது கண்களுக்கு வேறுவிதமாகத் தென்படும். நுண்ணிய பொடிகளாக அரைக்கப்பட்டு, பின்னர் எண்ணெய், முட்டை ஆகியவற்றுடன் சேர்ந்த கலவை, மறுமலர்ச்சி காலப் புனிதர்களின் ஆடைகளாகவும், பரோக் (Baroque) நிலப்பரப்புகளின் வானங்களாகவும் மரப் பலகைகளில் தீட்டப்பட்டிருக்கும்.


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதனின் படைப்பாற்றல் புவியியலுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதை அவை நமக்கு நினைவூட்டுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன வேதியியல் உருவாகுவதற்கு முன்பு, ஒவ்வொரு கலைஞனும் இயல்பாகவே கனிமவியலாளராக இருந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கலாம். குகைச் சுவர்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றில் ஓவியம் தீட்டுவதற்கு அக்கலைஞனுக்கு வண்ணமயமான மண், விலையுயர்ந்த கற்கள், உலோகத் தாதுக்கள் போன்றவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, மேலும் அவற்றின் பிரகாசத்தை வெளிக்கொணரக் கைகளால் அரைக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அருங்காட்சியக விளக்குகளின் கீழ் நாம் இன்று வியந்து பார்க்கும் வண்ணங்களுக்கு அடியில், பண்டைய ஓவியனின் கண்ணுக்குப் புலப்படாத பரிமாணம் ஒன்று மறைந்திருந்தது. மனித வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்ட பல இயற்கைக் கனிமங்களும், கரிமப் பிணைப்புகளும் (Organic binders) குறிப்பிடத்தக்க ஒளிரும் பண்புகளைக் (Luminescent properties) கொண்டிருந்தன. புற ஊதா (UV), எக்ஸ்-கதிர் (X-ray) போன்ற ஒளியின் குறிப்பிட்ட அலைநீளங்களுக்கு உட்படுத்தப்படும்போது, இந்தப் பண்டையப் பொருட்கள் ஒளிர்ந்து, அவற்றில் மறைந்திருக்கும் வேதியியல் கைரேகைகளை வெளிப்படுத்துகின்றன. இன்று, நவீன ஒளித் தொழில் நுட்பவியல்(Optical technologies) மூலம் புதிய தலைமுறை விஞ்ஞானிகளும், கலைப் பாதுகாவலர்களும்(art conservators), இந்த இயற்கை ஒளியைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். தூரிகைக் கோட்டைக் கூடத் தொடாமல் வரலாற்றுக்கு முந்தைய குகைகள், பண்டைய காலத் தலைசிறந்த படைப்புகள் ஆகியவற்றில் புதைந்துள்ள ரகசியங்களை அறியவும், மேலும் அப்பொக்கிஷங்களை எப்படி பாதுகாப்பது என்பதையும் ஆராயத்  தொடங்கியுள்ளனர்.


கனிம வண்ணத் தட்டு: பனியுகக் குகைகள் முதல் மறுமலர்ச்சி காலப் பட்டறைகள் வரை


இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணப்பூச்சுகளைப் போல் இல்லாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க நிறமிகள், நசுக்கப்பட்ட பாறைகள், மண், இயற்கைச் சாறுகள் ஆகியவை பிணைப்பு ஊடகத்தில் (Binding medium) கலக்கப்பட்ட கலவையாகும். 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, பழைய கற்காலக் (Paleolithic) கலைஞன் எரியும் தீப்பந்தங்களுடன், அன்றைய புவியியல் கருவிகளுடன் இருண்ட சுண்ணாம்புக் குகைகளுக்குள் சென்றிருக்கக் கூடும். அன்று கிடைக்கப்பெற்ற இரும்பு ஆக்சைடு (சிவப்பு), மஞ்சள் காவி மண் (Ochre), மாங்கனீசு டை ஆக்சைடு, மரக்கரி(அடர் கருப்பு), சுண்ணாம்பு, ஜிப்சம் (வெள்ளை) போன்ற கனிமங்கள் உள்ளூர் ஆற்றுப்படுகைகளிலும், பாறை முகடுகளிலும் எளிதாகக் கிடைத்ததாலும், நெருப்பு வெளிச்சத்தில் கவர்ச்சிகரமானதாகத் தெரிந்ததாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். மேலும், இவைகளின் நிறம் நீடித்து இருப்பதையும் அவன் அறிந்திருக்கக் கூடும்.

The Horses panel in Chauvet Cave, France. Image credit: Boulard et al., doi: 10.1021/acsomega.6c05061

பின்னர் வர்த்தகப் பாதைகள் விரிவடைந்தபோது, கலைஞர்களின் கனிம வண்ணத் தட்டு மிகவும் சிக்கலானதாகவும் விலையுயர்ந்ததாகவும் மாறியது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக படாக்ஷானின்(Badakhshan, ஆப்கானிஸ்தான்) மலைகளில் வெட்டியெடுக்கப்பட்ட அடர் நீல நிற உருமாறிய பாறை (Ultramarine)யிலிருந்து கடினமான முறையில் தயாரிக்கப்பட்ட நிறமியான லேபிஸ் லாசுலி, இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் தங்கத்தை விட விலை மதிப்புமிக்கதாக இருந்தது. பண்டைய ரோம் முதல் சீனா வரை போற்றப்பட்ட பிரகாசமான சிவப்பு நிற பாதரச சல்பைடு (Cinnabar, Vermillion) இயற்கையான முறையில் வெட்டியெடுக்கப்பட்டோ அல்லது பாதரசத்தையும் கந்தகத்தையும் சூடாக்கியதன் மூலமாகவோ தயாரிக்கப்பட்டது. இடைக்காலத்தில் சுவரோவியங்கள், பலகை ஓவியங்கள் ஆகியவற்றில் காணப்படும் பசுமையான பச்சை நிற மாலகைட்(malachite), அடர் நீல நிற அசுரைட்(azurite), ஒரே தாமிரப் படிவுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற துடிப்பான தாமிர கார்பனேட் கனிமங்களாகும். பிரகாசமான மஞ்சள், ஆரஞ்சு நிற ஆர்சனிக் சல்பைடுகள்(Orpiment, Realgar) தீவிர நச்சுத்தன்மை கொண்டதாக இருந்தபோதிலும், ஒளிரும் பொன்னிறச் சாயல்களை வழங்கியது.


அன்றைய கலைஞன் இக்கனிமங்களை சாதாரண வெளிச்சத்தில் தோன்றும் அழகிற்காக மட்டுமே தேர்ந்தெடுத்தாலும், அவன் அறியாமலேயே சிக்கலான படிக அமைப்புகளும் நுண்ணிய அசுத்தங்களும் அக்கலைப்படைப்புகளில் உட்பொதிந்தன. அந்த நுண்ணிய புவியியல் பண்புகளே இன்று அவைகளைக் காப்பாற்றும் திறவுகோலாகவும் மாறியுள்ளது.


கண்ணுக்குப் புலப்படாத கலையில் உடனொளிர்வு(Fluorescence) மற்றும் நின்றொளிர்வு(Phosphorescence)

இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள் பலவற்றில் கனிமங்களுக்கென்று தனிப்பட்ட காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களுக்கு புதிய உலகத்தைத் திறந்து வைக்கின்றன. சாதாரண வெளிச்சத்தில் பார்க்கும்போது   ஜின்சைட் (zincite), கால்சைட்(calcite) போன்ற கனிமங்கள் வெண்மையாகவோ, பழுப்பு நிறமாகவோ தோன்றலாம். ஆனால் அதையே புற ஊதாக் கதிர்களின் கீழ் வைத்துப் பார்த்தால், அது ஒரேயொரு நிறத்திலோ அல்லது பல நிறங்களிலோ ஒளிரக்கூடும்.  சிலவற்றின் ஒளிர்வு புற ஊதாக் கதிர்கள் நிறுத்தப்பட்ட உடனேயே மறையவும் செய்யும். வேறு சில கனிமங்கள் கதிர்வீச்சு நிறுத்தப்பட்ட பின்னரும் ஒளியை வெளியிட்டுக் கொண்டிருக்கும். இந்த அனுபவங்கள் பல பார்வையாளர்களுக்கு வியப்பையும் தரும். ஆனால் இவ்விளைவுக்குப் பின்னால் கனிமத்தின் அணுக்கள், அயனிகள், படிக அமைப்பு, எலக்ட்ரான்களின் ஆற்றல் நிலைகள், ஒளியுடன் அவை நிகழ்த்தும் தொடர்புகள் போன்றவைகளின் தாக்கங்கள் உள்ளன.

ஒளிரும் பொருட்களின் வரலாற்றில் ரேடியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரேடியத்தின் கதிரியக்கப் பண்புகள் அறிவியலாளர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தன. இருளில் ஒளிரும் கடிகாரங்கள், கருவிகளின் அளவுகாட்டிகள், இராணுவ உபகரணங்கள் ஆகிய பல பொருட்களில் ரேடியம் சார்ந்த நிறமிகள் பயன்படுத்தப்பட்டன.ரேடியம் தனியாக பச்சை நிறத்தில் ஒளிரும் பொருள் அல்ல என்பதை நினைவு கூற வேண்டும். ரேடியத்தின் கதிரியக்கச் சிதைவிலிருந்து வெளிவரும் ஆற்றல், அதனுடன் கலந்திருக்கும் துத்தநாக சல்பைடைத் தூண்டி பச்சை நிறத்தில் ஒளிர்கிறது.
மேலும் இந்த தொழில்நுட்பத்தின் வரலாறு மற்றொரு பெரிய பாதுகாப்புப் பாடத்தையும் வழங்கியுள்ளது. ரேடியம் பயன்படுத்தப்பட்ட கடிகாரங்களின் டயல்களை வரைய பணியாற்றிய பெண்கள், அந்த நிறமியைத் தூரிகையின் முனையை வாயால் கூர்மைப்படுத்தும் பழக்கத்தினால் ரேடியத்தை உட்கொண்டு, பின்னர் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இந்த சம்பவங்கள் கதிரியக்கப் பொருட்களின் அபாயங்களைப் பற்றிய அறிவியல் புரிதலையும், தொழிலாளர் பாதுகாப்பு விதிகளையும் மாற்றியமைக்க உதவின.

இயற்கையில் காணப்படும் உடனொளிர்வு கொண்ட கனிமங்களில் ஃப்ளூரைட், கால்சைட், வில்லமைட், ஷீலைட் போன்ற பல கனிமங்கள் அடங்குகின்றன. ஆனால் குறிப்பிட்ட கனிமத்தின் எல்லா மாதிரிகளும் ஒரே மாதிரியாக ஒளிர்வதில்லை. அவற்றில் உள்ள மிகச் சிறிய அளவு அயனிகள், குறைபாடுகள், வேறு வேதியியல் கூறுகளின் இருப்பு ஆகியவை ஒளிர்வின் நிறத்தையும் தீவிரத்தையும் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, கால்சியம் ஃப்ளூரைடு கனிமம் (CaF₂) சில மாதிரிகளில் நீல நிறத்திலோ, ஊதா நிறத்திலோ ஒளிரக்கூடும். வில்லமைட் (Zn₂SiO₄) பச்சை நிறத்தில் ஒளிரும் மாதிரிகளைக் கொண்டுள்ளது. கால்சைட் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளிர்வைக் காட்டக்கூடும். இந்த நிறங்கள் கனிமத்தின் வேதியியல் அமைப்பையும், அதில் உள்ள ஒளிர்வை ஏற்படுத்தும் மையங்களையும் சார்ந்து வேறுபடும். படிகத்தில் காணப்படும் மிகச் சிறிய அளவு மாசுகள், மாற்று அயனிகள் கூட அதன் ஒளிர்வை மாற்றக்கூடும். குறிப்பாக யூரோப்பியம் (Eu), டெர்பியம் (Tb), சீரியம் (Ce) போன்ற அயனிகள் ஒளிரும் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எலக்ட்ரானிக் அமைப்பில் உள்ள தனித்துவமான ஆற்றல் நிலைகள், குறிப்பிட்ட நிறங்களில் ஒளியை வெளியிட உதவுகின்றன. யூரோப்பியம் அயனியின் குறிப்பிட்ட ஆற்றல் மாற்றங்கள் சிவப்பு ஒளியை உருவாக்க முடியும். டெர்பியம் அயனியின் ஆற்றல் மாற்றங்கள் பச்சை ஒளியை உருவாக்கலாம். இந்த அயனிகளைப் பொருத்தமான படிக அமைப்பில் இணைத்தால், திண்மத்தின் ஒளிர்வை நம் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க முடியும். இன்று ஒளிரும் விளக்குகள், தொலைக்காட்சித் திரைகள், பாதுகாப்பு அடையாளங்கள், மருத்துவப் பரிசோதனைகள் போன்ற பல தொழில்நுட்பங்களில் இந்த அடிப்படை அறிவியல் பயன்படுத்தப்படுகிறது.


அடுத்தமுறை புவியியல் அருங்காட்சியகத்திற்குள் உள்ள கனிமக் கூடத்திற்குச் செல்லும்போது, இருட்டாக்கப்பட்ட காட்சிப் பெட்டிக்குள் புற ஊதா விளக்கை(Blacklight) ஒளிரச் செய்யும் பொத்தானை அழுத்தி, கனிம ஒளிர்வை நேரில் காண முயற்சி செய்யுங்கள். மந்தமான சாம்பல் நிறப் பாறைகள் திடீரென்று நியான் பச்சை, நீலம், ஆரஞ்சு போன்ற நிறங்களில் ஒளிர்வதைக் காணலாம்.

பாரம்பரிய அறிவியலில் (Heritage science), ஒளி தொடர்புடைய நிகழ்வுகளான, உடனொளிர்வு (Fluorescence), நின்றொளிர்வு (Phosphorescence) ஆகிய இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு பொருள் அதிக ஆற்றல் கொண்ட, கண்ணுக்குத் தெரியாத ஒளியை (எ.கா. புற ஊதா கதிர்வீச்சு, எக்ஸ் கதிர்) உறிஞ்சி, உடனடியாக அந்த ஆற்றலைக் குறைந்த ஆற்றல் கொண்ட கண்ணுக்குத் தெரியும் ஒளியாக (visible light) மீண்டும் வெளியிடும்போது உடனொளிர்வு நிகழ்கிறது. புற ஊதா ஒளி அணைக்கப்பட்ட கணமே, அந்த ஒளி உடனடியாக மறைந்துவிடும். நின்றொளிர்வும் ஒளி ஆற்றலை உறிஞ்சுவதை உள்ளடக்கியது, ஆனால் கனிமத்தின் படிக அமைப்பிற்குள் சிக்கியுள்ள எலக்ட்ரான்கள் காரணமாக, ஆற்றல் மெதுவாக வெளியிடப்படுகிறது.  நின்றொளிர்வு கனிமமானது ஒளி அகற்றப்பட்ட பிறகும் வினாடிகள், நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்களுக்குக் கூட மங்கலான ஒளியைத் தொடர்ந்து வெளியிடும்.

இருளில் ஒளிரும் பாதுகாப்பு அடையாளங்கள், அவசரகால வெளியேறும் வழிகளைக் காட்டும் பலகைகள், இரவில் ஒளிரும் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றில் இந்தக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரான்ஷியம் அலுமினேட் (SrAl₂O₄) என்ற பொருளில் யூரோப்பியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் போன்ற அரிதுமண் (rare-earths) அயனிகளைச் சேர்ப்பதன் மூலம் நீண்ட நேர ஒளிர்வு பெறப்படுகிறது. இதன் ஒளிர்வு பழைய துத்தநாக சல்பைடு அடிப்படையிலான பொருட்களை விட அதிக தீவிரத்துடனும் நீண்ட காலத்திற்கும் செயல்படக்கூடும். இத்தகைய பொருட்களின் படிக அமைப்பு, ஆற்றல் நிலைகள், எலக்ட்ரான் பிடிப்பு மையங்கள் ஆகியவற்றை ஆராய வேண்டும். மேலும், பொருளின் ஒளிர்வித்தன்மை ஆயுட்காலத்தை கணக்கீடு செய்ய வேண்டும். தற்போது இந்த அறிவியல் கலை உலகத்திலும் முக்கியமானதாகி வருகிறது.

https://www.coregravel.ca/site/assets/files/1018/chemistry_of_glow_-_englishfrench.pdf


பண்டைய கலைஞர்கள் ரகசிய இரவு நேர விளைவுகளை உருவாக்க இருட்டில் ஒளிரும் நிறமிகளை தெரிந்து பயன்படுத்தவில்லை. நவீன புற ஊதா விளக்குகள் இல்லாததால், இந்த ஒளிரும் பண்புகள் முற்றிலும் மறைந்தே இருந்தன. இருப்பினும், வரலாற்றுக் கலைகளில் பயன்படுத்தப்பட்ட பல முக்கியப் பொருட்கள் இயற்கையாகவே உடனொளிர்வு, நின்றொளிர்வு கொண்டவை. தூய கால்சைட், ஜிப்சம் ஆகியவை மாங்கனீசு, கரிமச் சேர்க்கைகள் போன்ற நுண்ணிய கூறுகளைப் பொறுத்து புற ஊதா ஒளியின் கீழ் நீலம், வெள்ளை, மஞ்சள் நிறங்களில் ஒளிர்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அடர் ஊதா-நீல நிறத்தில் ஒளிரும் ஃப்ளோரைட் (Fluorite) கனிமத்தை ஆராய்ந்ததன் விளைவாக, அப்பண்பை ஃப்ளோரசன்ஸ் என்று பெயரிட்டனர்.


கனிமங்களைத் தவிர, நிறமிகளுடன் கலந்த கரிமப் பொருட்களும் ஒளிர்வதைக் கண்டறிந்தனர். உதாரணமாக, வார்னிஷ்களுக்குப் பயன்படுத்தப்படும் இயற்கை மரப் பிசின்கள் (டாமர் மற்றும் மாஸ்டிக் போன்றவை), ஆளி விதை எண்ணெய் (Linseed oil), முட்டையின் மஞ்சள் கரு (Egg yolk tempera), ரோஸ் மேடர் (Rose madder) போன்ற சிவப்பு கரிம நிறமிகள் அனைத்தும் புற ஊதா ஒளியின் கீழ் தனித்துவமான வண்ணங்களை வெளியிட்டன. குறிப்பாக அவை பல நூற்றாண்டுகளாகப் பழமையாகி ஆக்சிஜனேற்றம் அடையும்போது இந்த ஒளிர்வு மேலும் தெளிவாகத் தெரிந்தது.


பாரம்பரியப் பாதுகாப்பு எதிர்கொண்ட சாத்தியமற்ற இக்கட்டான நிலை


இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், பண்டையகால ஓவியத்தில் புதைந்திருக்கும் கலவையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஊடுருவும் இயற்பியல் மாதிரி எடுத்தல் (Invasive physical sampling) தேவைப்பட்டது. வான் கோ தீட்டிய நீல வானத்தில் இருப்பது விலையுயர்ந்த அல்ட்ராமரைனா, கோபால்ட் ஆக்ஸைடா, பிரஷ்யன் நீலமா , மலிவான அசுரைட்டா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? உதிரும் வண்ணப்பூச்சு அடுக்கின் வேதியியல் காரணத்தைக் கண்டறிய முடியுமா? 

இக்கேள்விகளுக்கான விளக்கங்களை அறிய, கலைப் பாதுகாவலர்கள் நுண்ணோக்கியின் கீழ் அறுவை சிகிச்சை கத்தியைப் பயன்படுத்தி வண்ணப்பூச்சின் சிறிய பகுதியை, சுரண்டி எடுக்க வேண்டியிருந்தது. இந்த நுண்ணிய மாதிரிகள் ஆய்வகத்தில் விலைமதிப்பற்ற தரவுகளை வழங்கியபோதிலும், இச்செயல்முறை பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது.  எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட பகுதிகளின் விவரங்கள் மட்டுமே மாதிரியில் கிடைக்கும்.  இது கலைப்படைப்பில் மீளமுடியாத இழப்பையும் விளைவிக்கும். மேலும் அணுக முடியாத வரலாற்றுக்கு குகைகள், எளிதில் சேதமடையக்கூடிய தொல்லியல் தளங்கள் போன்றவை தொல்லியல் பாதுகாவலர்களுக்கு, கலைப்படைப்பைத் தொடாமல் அதன் கனிம, வேதியியல் வரலாற்றை அறிவதற்கான வழி தேவைப்பட்டது. அந்தத் தேடலே ஊடுருவல் இல்லாத ஒளியியல் செய்நுட்பங்களின் (Non-invasive optical diagnostics) எழுச்சிக்கு வித்திட்டது. 

ஷோவெட் (Chauvet) குகையில் புற ஊதா ஸ்கேன்கள் வெளிப்படுத்திய உண்மைகள்


தெற்கு பிரான்ஸின் புகழ்பெற்ற ஷோவெட் குகைக்குள், சுமார் 37,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட குதிரைகள், குகைச் சிங்கங்கள், கம்பளி காண்டாமிருகங்கள், மாமத்கள் போன்றவைகளின் துடிப்பான கரி ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஷோவெட் குகையைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. குகையின் தரைப்பகுதி, பனியுகக் கரடி எலும்புகள் போன்றவைகளை தவிர்த்து சுவரோவியங்களை ஆய்வு செய்ய, ஆராய்ச்சியாளர்கள் குழு சுமார் எட்டு அடி தூரத்திலிருந்து பாறை முகப்பை ஸ்கேன் செய்யும் திறன் கொண்ட, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய புற ஊதா உடனொளிர்வு நிறமாலையியல் அமைப்பை உருவாக்கியது. அங்கிருந்த புகழ்பெற்ற குதிரைகள் பலகையை(Horses Panel) அவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட புற ஊதா ஒளியால் ஒளிரச் செய்தபோது, அடர் கரி கோடுகள் கதிர்வீச்சை உறிஞ்சி, ஒளிரும் கனிமப் பின்னணிக்கு எதிராகத் தெளிவாகத் தெரிந்தன.

நிறமாலைத் தரவுகள் (Spectral data) இரண்டு குறிப்பிடத்தக்க ரகசியங்களை வெளிப்படுத்தியது. முதலாவதாக, கரி ஓவியங்களின் பெரிய பகுதிகளில் இருந்த இயற்கை கால்சைட் வார்னிஷ்ஷை, பிரகாசமான நீல நிற உடனொளிர்வின் மூலம் கண்டறிந்தது. குகைச் சுவர்களில் கசிந்த கனிம வளம் மிக்க நிலத்தடி நீரால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மெதுவாகப் படியவைக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் (Speleothem calcite) எனப்படும் மெல்லிய, ஒளி ஊடுருவும் படலத்திலிருந்து இந்த ஒளி வந்தது என்பதை வேதியியல் பகுப்பாய்வு உறுதிப்படுத்தியது. இயற்கையே 37,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்களை நுண்ணிய கனிமக் கண்ணாடியால் மூடி, மென்மையான கரியைச் சுண்ணாம்புக் கல்லில் இறுக்கமாகப் பிணைத்து அரிப்பிலிருந்து பாதுகாத்துள்ளது.


இரண்டாவதாக, பலகையின் மற்ற பகுதிகளில், புற ஊதா ஸ்கேன்கள் எதிர்பாராத விதமாகச் சூடான ஆரஞ்சு நிற உடனொளிர்வுத் திட்டுகளைக் கண்டறிந்தன. பழைய கற்காலப் பார்வையாளர்கள் எரியும் மரத் தீப்பந்தங்கள், சூடான கரிகள் ஆகியவற்றை நேரடியாகப் பாறையில் அழுத்தியபோது, சுண்ணாம்புக் கல் வெப்பத்தால் மாற்றமடைந்து கரிம எரிப்பு எச்சங்களை விட்டுச் சென்றதால் இந்த ஒளிரும் அடையாளங்கள் உருவாகின என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


குகைப் பாதுகாவலர்களுக்கு, இத்தரவுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தூரத்திலிருந்தே ஒளிரும் கால்சைட் கவசத்தின் சரியான தடிமன், பரவல் இரண்டையும் வரைபடமாக்குவதன் மூலம், நவீன ஈரப்பத மாற்றங்கள், நுண்ணுயிர் வளர்ச்சி ஆகியவற்றால் இந்த இயற்கையான பாதுகாப்பு அடுக்கைக் கரைக்கும் அபாயம் உள்ளதா என்பதை கண்காணிக்க முடியும். 


மறுமலர்ச்சி காலத் தலைசிறந்த படைப்புகளில் புரட்சி:


பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பா ஓவியங்களும், கனிம, கரிம உடனொளிர்வின் அதே அடிப்படைக் கொள்கைகள் அருங்காட்சியகப் பாதுகாப்பில் மற்றொரு புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. மறுமலர்ச்சி காலப் பலகை ஓவியங்களும், சுவரோவியங்களும் மிகவும் சிக்கலான பல அடுக்கு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.  பொதுவாக அக்கால கலைஞர்கள், ஜெஸ்ஸோ (Gesso – விலங்கு பசை, ஜிப்சம்/சுண்ணாம்பு கலந்த மென்மையான வெள்ளைக் கலவை) பூசப்பட்ட மரப் பலகையில், கரி/மையால் அடிப்படை ஓவியத்தை வரைந்து, அதன் மேல் முட்டை/டெம்பெரா/ஆளி விதை எண்ணெயில் கலக்கப்பட்ட கனிம நிறமிகளைப் பயன்படுத்தித் துடிப்பான வண்ணங்களை உருவாக்கி, ஆழத்திற்காக ஒளி ஊடுருவும் கரிம மெருகூட்டல்களைப் (Glazes) பூசி, இறுதியாக இயற்கை மரப் பிசின் வார்னிஷின் பாதுகாப்பு அடுக்குடன் ஓவியத்தை முடிப்பார்கள்.

ஐந்நூறு ஆண்டுகள் கடந்த பிறகு, இந்த அடுக்குகள் மெதுவான வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. வார்னிஷ்கள் மங்கலான மஞ்சள்-பழுப்பு நிறமாக மாறி, கலைஞர்கள் தேர்ந்தெடுத்த அசல் குளிர் நீலம், பிரகாசமான வெள்ளை ஆகிய நிறங்களை மறைக்கத் தொடங்குகின்றன. இதற்கிடையில், சில ஓவியங்களில் பாதுகாவலர்கள் தங்கள் காலத்தில் பிரபலமாக இருந்த பொருட்களைப் பயன்படுத்திச் சேதமடைந்த பகுதிகளுக்கு மேல் மீண்டும் வண்ணம் தீட்டியுள்ளனர். மறுமலர்ச்சி கால ஓவியம் நவீன பாதுகாப்பு ஆய்வகத்திற்குள் நுழையும்போது, புற ஊதா தூண்டப்பட்ட கண்ணுக்குத் தெரியும் உடனொளிர்வு (UV-induced visible fluorescence) என்பது எப்போதும் முதல் கண்டறிதல் சோதனை ஆகும். இருட்டாக்கப்பட்ட அறையில் புற ஊதா விளக்குகளின் கீழ், ஓவியம் ஒளிரும் கண்டறிதல் வரைபடமாக மாறுகிறது.


பழமையான இயற்கை பிசின் வார்னிஷ்கள் தனித்துவமான பால் போன்ற, பச்சை கலந்த மஞ்சள் நிற ஒளியை வெளியிடுகின்றன. பழைய வார்னிஷுக்கு மேல் செய்யப்பட்ட எந்தவொரு மறுசீரமைப்பும் (Retouching), வெறும் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குத் துல்லியமாகக் கலக்கப்பட்டிருந்தாலும், புற ஊதா ஒளியை உறிஞ்சி, அடர் ஊதா அல்லது கருப்புத் திட்டுகளாகத் தோன்றும். இதனால், ஓவியத்தில் எவ்வளவு பகுதி அசல் மறுமலர்ச்சி காலத் தூரிகை வேலைப்பாடு என்பதையும், எவ்வளவு பத்தொன்பதாம் நூற்றாண்டில் பூசப்பட்ட மேல்வண்ணம் என்பதையும் அறிஞர்களால் உடனடியாகக் கணிக்க முடியும்.


மறுமலர்ச்சி காலத்தின் முக்கியக் கனிம நிறமியான வெள்ளை  ஈயம் (Lead white), அதன் எண்ணெய் பிணைப்பி பழமையாகும்போது மென்மையான, குளிர்ந்த ஒளியுடன் ஒளிர்கிறது; அதே சமயம் பிற்காலப் பாதுகாவலர்களால் பயன்படுத்தப்பட்ட நவீன வெள்ளை டைட்டானியம், ஜின்சை போன்றவை முற்றிலும் மாறுபட்ட முறையில் எதிர்வினையாற்றுகின்றன. இதேபோல், ரோஸ் மேடர் போன்ற மென்மையான கரிமச் சிவப்பு மெருகூட்டல்கள் தனித்துவமான சூடான ஆரஞ்சு-இளஞ்சிவப்பு உடனொளிர்வை வெளியிடுகின்றன, இது மேற்பரப்பிற்கு அருகில் எளிதில் சேதமடையக்கூடிய சாய அடிப்படையிலான நிறமிகள் உள்ள பகுதிகளைப் பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கிறது.


இன்று, புற ஊதா ஒளியைத் தவிர, பாதுகாப்பான தூரத்திலிருந்து கனிமங்களின் அணு, மூலக்கூறு கட்டுமானத் தொகுதிகளைக் கண்டறியும் ஊடுருவாத கருவிகளின் தொகுப்புடன் புற ஊதா உடனொளிர்வுப் படமாக்கலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Figure 1. Some examples of UVF images from our laboratory archive demonstrating the utility of the UVF technique for the study of artworks, especially during restoration activities. (A) An 18th-century tetramorphic wooden lectern from the Church of the Certosa of San Martino (Naples, Italy), showing the progress of the cleaning operation (upper part cleaned, lower part uncleaned) in the Restoration Laboratory of the University of Tuscia; (B) the 18th-century wall painting in Palazzo Nuzzi at Orte (Central Italy), showing yellow fluorescence in the area of interest with inpainting with zinc white [21]; (C) detail of a 16th-century panel painting representing the Crucifixion and attributed to Michelangelo’s workshop, displayed in the Museum of Colle del Duomo in Viterbo, showing the presence of cracks, inpainting and grouting [22]; (D) a large 19th-century canvas representing the wall paintings of Cappella Mazzatosta by the Renaissance artist Lorenzo da Viterbo, showing an interesting use of two different kinds of white: yellow fluorescent zinc white, and lead white [12] (Reproduced with permission from L. Lanteri, C. Pelosi, Proceedings Volume 11784, Optics for Arts, Architecture, and Archaeology VIII; published by SPIE, 2021).
J. Imaging2025, 11(7), 245;https://doi.org/10.3390/jimaging11070245

உயிரினங்கள் உருவாக்கும் ஒளி


இயற்கையில் சில உயிரினங்களும் ஒளியை உருவாக்குகின்றன. இரவு நேரங்களில் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வதைப் பலமுறை பார்த்திருப்போம். கடலின் இருண்ட சில பகுதிகளில் நீல நிற ஒளியை வெளியிடும் உயிரினங்களையும், சில காளான்கள் ஒளிர்வதையும் சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. உயிரினங்களில் வேதியியல் வினைகளின் மூலம் ஒளி உருவாகுவதை, உயிரொளிர்வு (Bioluminescence) என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மிகக் குறைந்த வெப்ப இழப்புடன் ஒளியை உருவாக்கும் வேதியியல் நிகழ்வு. மின்மினிப் பூச்சிகளில், லூசிஃபெரின் (Luciferin) என்ற மூலக்கூறு, லூசிஃபெரேஸ் (Luciferase) என்ற நொதியின் உதவியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்படுகிறது. ஏ.டி.பி(ATP)யும், ஆக்சிஜன் உள்ளிட்ட கூறுகளும் இந்த வினையில் பங்கெடுக்கின்றன. வினையின் போது உருவாகும் உந்தப்பட்ட மூலக்கூறு நிலை, மீண்டும் தரை நிலைக்குத் திரும்பும்போது ஒளியை வெளியிடுகிறது. பல்வேறு உயிரினங்கள் வெவ்வேறு வேதியியல் அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. சில கடல்வாழ் உயிரினங்களில் ஒளிரும் புரதங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. சில உயிரினங்களில் ஒளிர்வுக்கான வேதியியல் பொருட்கள் வேறு உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன. உயிரொளிர்வானது உயிரினங்களின் வாழ்வில் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இரையை ஈர்ப்பது, எதிரிகளிடமிருந்து தப்பிப்பது, துணையை ஈர்ப்பது, உயிரினங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் ஒளி பயன்படுகிறது. ஆழ்கடலில் சூரிய ஒளி சென்றடையாத இடங்களில், ஒளி முக்கியமான உயிரியல் கருவியாகிறது. மேலும், அது உயிரினங்களின் வேதியியல், பரிணாமம், சுற்றுச்சூழல் உறவுகளின் ஒரு பகுதியாக உள்ளது.

கடலின் ஒளியும் உயிருள்ள பொருட்களும்


சில கடல் உயிரினங்கள் அசைக்கப்படும்போதோ, சுற்றுச்சூழல் மாறும்போதோ ஒளியை வெளியிடுகின்றன. கடல் அலைகள் கரையைத் தாக்கும்போது நீல நிறத்தில் ஒளிரும் நிகழ்வுகள், குறிப்பிட்ட ஒளிரும் பிளாங்க்டன்களின் இருப்புடன் தொடர்புடையவை. Pyrocystis lunula போன்ற டைனோஃப்ளாஜெல்லேட்டுகள்(dinoflogellets) இதற்கு எடுத்துக்காட்டாகும்.இந்த உயிரினங்களில் ஒளிர்வு வேதியியல்-உயிரியல் செயல்முறையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அவற்றின் செல்களில் ஒளி உருவாக்கும் அமைப்புகள் உள்ளன. சுற்றுச்சூழல் தூண்டுதல்கள் இந்த அமைப்புகளைச் செயல்படுத்தும்போது ஒளி வெளிப்படுகிறது.இன்று ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினங்களின் ஒளிர்வை செயற்கை பொருட்களுடன் இணைக்க முயற்சிக்கின்றனர். உயிருள்ள ஒளிரும் பொருட்கள் (Living Light Materials) எனப்படும் புதிய துறையில், ஒளியை உருவாக்கும் உயிரினங்கள் ஜெல் போன்ற பொருட்களில் இணைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பராமரிக்கப்படுகின்றன.

https://biologyinsights.com/dinoflagellate-bioluminescence-the-oceans-glowing-wonder/#google_vignette

2026 ஆம் ஆண்டில் Science Advances இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, Pyrocystis lunula உயிரினங்களின் ஒளிர்வை வேதியியல் தூண்டுதல்களின் மூலம் நீடிக்கச் செய்யும் முறைகளை ஆராய்ந்துள்ளது. உயிருள்ள பொருட்களின் இயல்பான ஒளிர்வை கட்டுப்படுத்தவும், அதன் கால அளவை நீட்டிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. https://www.science.org/doi/10.1126/sciadv.adz0017?


இந்த ஆராய்ச்சி, கலைக்கும் பொருள் அறிவியலுக்கும் இடையே புதிய பாலத்தை உருவாக்குகிறது. எதிர்காலத்தில் உயிருள்ள ஒளிரும் பொருட்கள் கட்டிட அலங்காரம், கலை நிறுவல்கள், சுற்றுச்சூழல் வடிவமைப்பு, குறைந்த ஆற்றல் செலவுடைய ஒளி அமைப்புகள் ஆகியவற்றில் பயன்படக்கூடும். ஆனால் அவற்றின் நீடித்த தன்மை, உயிரியல் பாதுகாப்பு, பராமரிப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை இன்னும் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.


இயற்கையின் ஒளியிலிருந்து நவீன ஒளிரும் ஓவியம் வரை


இயற்கையில் ஒளிரும் கனிமங்களையும் உயிரினங்களையும் ரசித்த மனிதன், அவற்றை தனது கலைக்குள்ளும் கொண்டுவரத் தொடங்கினான். குகை ஓவியங்களில் தொடங்கிய கலை, சுவர் ஓவியங்கள், கோவில் சிற்பங்கள், கையெழுத்துப் பிரதிகள், அலங்காரப் பொருட்கள் என்பதைக் கடந்து, இன்றைய நவீன ஓவியங்கள் வரை, நிறமிகள் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் வேதியியல் அமைப்பு, படிக அமைப்பு, ஒளியை உறிஞ்சும் திறன், பிரதிபலிக்கும் தன்மை, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றுடன் நிகழும் வேதியல் மாற்றங்கள் போன்றவை அதன் பயன்பாட்டையும் நீடித்த தன்மையையும் தீர்மானிக்கின்றன. பழைய ஓவியங்களில் சின்னாபார், ஓக்கர், லாபிஸ் லாசுலி போன்ற பெரும்பாலான நிறமிகள் கனிமங்களிலிருந்து பெறப்பட்டவை. சில நிறமிகள் உயிரியல் மூலகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டன. பின்னர் செயற்கை நிறமிகள் உருவாக்கப்பட்டன.


இருபதாம் நூற்றாண்டில் நின்றொளிர்வு கொண்ட நிறமிகள் கலை உலகத்தில் புதிய வாய்ப்புகளைத் திறந்தன. அவை சாதாரண வெளிச்சத்தில் ஒரு நிறமாகவும், புற ஊதாக் கதிர்களின் கீழ் மிகவும் பிரகாசமான நிறமாகவும் தோன்றக்கூடும். இதனால் ஓவியர்களுக்கு பார்வையாளர்களின் அனுபவத்தை மாற்றும் புதிய வழிகள் கிடைத்தன. இருளில் ஒளிரும் நிறமிகள் இன்னும் வேறுபட்ட அனுபவத்தை வழங்குகின்றன. அவை வெளிச்சத்தில் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு, இருளில் அந்த ஆற்றலை ஒளியாக வெளியிடுகின்றன. இதனால் ஓவியம் வெளிச்சத்திலும் இருளிலும் இரண்டு வேறுபட்ட தோற்றங்களைப் பெற முடியும். இந்தக் கலை அனுபவம் அறிவியல் ரீதியாகவும் சுவாரசியமானது. ஒரு நிறமி எந்த அலைநீளத்தில் ஒளியை உறிஞ்சுகிறது, எந்த அலைநீளத்தில் ஒளியை வெளியிடுகிறது, அதன் ஒளிர்வு எவ்வளவு நேரம் நீடிக்கிறது, ஒளியின் தீவிரம் காலப்போக்கில் எவ்வாறு குறைகிறது என்பன அனைத்தும் அளவிடக்கூடிய பண்புகள்.

பழமையான ஓவியத்தைப் பார்க்கும்போது, அதன் மேற்பரப்பில் தெரியும் நிறங்களே அந்த ஓவியத்தின் முழு வரலாற்றையும் வெளிப்படுத்துவதில்லை. பல நேரங்களில் ஓவியத்தின் மீது பின்னர் சேர்க்கப்பட்ட நிறமிகள், பழைய நிறமிகளின் மாற்றங்கள், பாதுகாப்புக்காகப் பூசப்பட்ட வார்னிஷ் மற்றும் பழுது பார்த்த பகுதிகள் ஆகியவை சாதாரண வெளிச்சத்தில் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம். இவற்றைக் கண்டறிய கலைப் பாதுகாப்பு அறிவியலில் பல ஒளியியல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் புற ஊதாக் கதிர்களால் தூண்டப்படும் ஒளிர்வுப் படமெடுப்பு (Ultraviolet induced fluorescence imaging) முக்கியமானது. ஓவியத்தின் மீது புற ஊதாக் கதிர்களை செலுத்தும்போது, அதன் மேற்பரப்பில் உள்ள சில பொருட்கள் ஒளியை வெளியிடுகின்றன. சில வார்னிஷ்கள், சில நிறமிகள், சில கரிமப் பொருட்கள் மற்றும் சில பழுதுபார்க்கப்பட்ட பகுதிகள் வெவ்வேறு ஒளிர்வு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒளிர்வு நிறம், தீவிரம் மற்றும் பரவல் ஆகியவற்றை பதிவு செய்வதன் மூலம் ஓவியத்தின் மேற்பரப்பில் நிகழ்ந்த மாற்றங்களை ஆய்வாளர்கள் கண்டறிய முடிகிறது.
புற ஊதாக் கதிர்களின் கீழ் ஒரு பகுதி குறிப்பிட்ட நிறத்தில் ஒளிர்வதை மட்டும் வைத்து, அந்தப் பகுதியில் எந்த வேதியியல் பொருள் இருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியாது. பல பொருட்கள் ஒரே மாதிரியான ஒளிர்வைக் காட்டலாம். அதே பொருள் வேறு சூழலில் வேறுபட்ட ஒளிர்வையும் காட்டலாம். எனவே ஒளிர்வுப் படமெடுப்பு என்பது ஒரு தொடக்க ஆய்வுமுறை. அதன் முடிவுகளை மற்ற அறிவியல் ஆய்வுகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இவை ஓவியத்தின் உண்மையான வரலாற்றைத் தானாகவே வெளிப்படுத்தும் மந்திரக் கருவிகள் அல்ல. அறிவியல் தரவுகள், கலை வரலாற்று அறிவு, பாதுகாப்பு நிபுணர்களின் விளக்கம் ஆகியவை இணைந்தால்தான் நம்பகமான முடிவுகளைப் பெற முடியும்.

ஒரு ஓவியத்தில் நிறத்தை உருவாக்குவது சவால் என்றால், அந்த நிறத்தை நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கச் செய்வது இன்னும் பெரிய சவால். ஒளி பொருளின் மீது விழும்போது, அதன் ஆற்றல் அந்தப் பொருளின் மூலக்கூறுகளுடன் தொடர்பு கொள்கிறது. சில பொருட்களில் இந்த ஆற்றல் வெப்பமாக மாறுகிறது. மற்ற சில பொருட்களில் வேதியியல் மாற்றங்களைத் தொடங்குகிறது. இதனால் நிறமிகள் மங்கலாம், அவற்றின் நிறம் மாறலாம், சில நேரங்களில் அவை வேறு பொருட்களாக மாறலாம். குறிப்பாக ஒளிரும் நிறமிகளில், ஒளியை உறிஞ்சும் மூலக்கூறுகளின் அமைப்பு மிகவும் முக்கியமானது.


இதற்கு ஒளியின் தீவிரம் மட்டுமல்லாமல், ஒளியின் அலைநீளம், வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன் இருப்பு, நிறமியின் வேதியியல் அமைப்பு ஆகியவை காரணமாகின்றன. கலைப் பாதுகாப்பில் இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு மைக்ரோஃபேடிங் சோதனை (Microfading testing) பயன்படுத்தப்படுகிறது. ஓவியத்தின் மிகச் சிறிய பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட ஒளியை செலுத்தி, அதன் நிறத்தில் நிகழும் மாற்றத்தை காலத்துடன் அளவிடுகிறார்கள். இதன் மூலம் ஒரு நிறமி எவ்வளவு ஒளி உணர்திறன் கொண்டது என்பதை மதிப்பிட முடியும்.


இந்தச் சோதனைகள்  அருங்காட்சியகத்தில் எந்த ஓவியத்தை எவ்வளவு நேரம் வெளிச்சத்தில் காட்சிப்படுத்தலாம், எந்த அளவுக்கு ஒளியை கட்டுப்படுத்த வேண்டும், எந்தப் பொருட்களை இருளில் பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற முடிவுகளை எடுக்க உதவுகின்றன.
சமீபத்திய ஆய்வு, கலாச்சாரப் பாரம்பரியப் பொருட்களில் காணப்படும் நிறமிகள், சாயங்களின் ஒளி நிலைத்தன்மையை மதிப்பிடுவதில் மைக்ரோஃபேடிங் சோதனை முக்கியத்துவம் வகிக்கிறது.
அதாவது கலைப்படைப்பைப் பாதுகாப்பது என்பது அதை எப்போதும் வெளிச்சத்தில் வைத்திருப்பதல்ல; அதன் பொருட்கள் எவ்வளவு ஒளியைத் தாங்கக்கூடும் என்பதை அறிவியல் மூலம் அறிந்து, அதற்கேற்ப காட்சிப்படுத்துவதுதான்.


பொதுவாக, அருங்காட்சியகத்தில், பல ஓவியங்கள் மங்கலான வெளிச்சத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஏனேனில் பல கலைப்படைப்புகளின் நிறமிகள் ஒளியால் பாதிக்கப்படக்கூடியவை என்பதால், அவற்றின் நீடித்த தன்மையைப் பாதுகாக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஒளி வெளிப்பாட்டின் அளவு, அதன் தீவிரம், கால அளவு ஆகியவற்றைப் பொறுத்தது. ஒரு ஓவியம் மிகக் குறைந்த தீவிர ஒளியில் நீண்ட நேரம் வைக்கப்பட்டாலும், அதன் மொத்த ஒளி வெளிப்பாடு அதிகமாக இருக்கலாம். அதேபோல், அதிக தீவிர ஒளியில் குறுகிய காலம் வைக்கப்பட்டாலும் பாதிப்பு ஏற்படலாம். இதனால் அருங்காட்சியகங்கள் ஒளி அளவீடுகள், காட்சிப்படுத்தும் நேரம், வெளிச்சத்தின் அலைநீள அமைப்பு, பொருளின் ஒளி உணர்திறன் ஆகியவற்றை கவனத்தில் கொள்கின்றன.

புற ஊதாக் கதிர்களை கட்டுப்படுத்துவது, ஒளியின் தீவிரத்தை குறைப்பது, உணர்திறன் கொண்ட ஓவியங்களுக்கு இடைவெளி அளித்து காட்சிப்படுத்துவது, னண ஒளி உணர்திறன் கொண்ட பொருட்களை இருளில் பாதுகாப்பது ஆகியவை பல அருங்காட்சியகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள்.
இதில் முரண்பாடும் உள்ளது. கலைப்படைப்பைப் பார்ப்பதற்கு வெளிச்சம் தேவை. ஆனால் அதுவே காலப்போக்கில் அப்படைப்பை அழிக்கக்கூடும். எனவே கலை அனுபவத்தையும், பொருள் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த, அறிவியல் உதவுகிறது. நிறமி எவ்வளவு ஒளியைத் தாங்கும், அதன் வேதியியல் அமைப்பு எவ்வாறு மாறுகிறது, அதன் ஒளிர்வு எந்த சூழலில் குறைகிறது என்பன போன்ற தகவல்கள் பாதுகாப்பு முடிவுகளுக்கு அடிப்படையாகின்றன.


இன்று கலைப் பாதுகாப்பு என்பது, பழமையான ஓவியத்தின் மீது எந்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன,  அவை எவ்வாறு காலப்போக்கில் மாறியுள்ளன போன்றவற்றை புரிந்துகொண்டு, அவற்றை மேலும் பாதிக்காமல் எப்படி பாதுகாப்பது என்று ஆராய்கின்றது.
இதற்காக வேதியியலாளர்கள், இயற்பியலாளர்கள், பொருள் அறிவியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட நிறமியை அடையாளம் காண, பல நுண்ணாய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ் கதிர் ஃப்ளூரசன்ஸ் பொருளில் உள்ள தனிமங்களை அடையாளம் காண உதவுகிறது. ராமன் நிறமாலை ஆய்வு மூலக்கூறுகளின் அதிர்வு பண்புகளின் அடிப்படையில் பொருட்களை அடையாளம் காணலாம். எக்ஸ் கதிர் படிகவியல் மூலம் பொருளின் படிக அமைப்பைப் புரிந்துகொள்ளலாம். மேலும் ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட நிறமிகள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதையும், அதன் மீது பின்னர் சேர்க்கப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பதையும் சில நேரங்களில் மதிப்பிட முடியும். குறிப்பிட்ட நிறமி பழமையானதாக இருக்கலாம். ஆனால் அதன் மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்ட வார்னிஷ் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஓவியத்தின் சில பகுதிகள் காலப்போக்கில் மங்கியிருக்கலாம். சில பகுதிகள் பாதுகாப்பிற்காக மீண்டும் வரையப்பட்டிருக்கலாம். இத்தகைய மாற்றங்களைப் புரிந்துகொள்வது ஓவியத்தின் வரலாற்றை அறிய உதவுகிறது. இங்கு வேதியியலின் பங்கு பொருளை அடையாளம் காண்பதோடு முடிவதில்லை. அந்தப் பொருளை மேலும் பாதிக்காமல் எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் அறிவியல் தீர்மானிக்க உதவுகிறது.


பழைய ஓவியம் என்பது ஓவியரின் கற்பனையை வெளிப்படுத்தும் கலைப்படைப்பு மட்டுமல்ல. அது உருவாக்கப்பட்ட காலத்தின் பொருள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பிரதிபலிக்கும் ஆவணமாகவும் இருக்கிறது. ஓவியர் பயன்படுத்திய நிறமிகள், அவற்றைத் தயாரிக்கும் முறைகள், நிறங்களை கலக்கும் நுட்பங்கள், மேற்பரப்பைத் தயாரிக்கும் பொருட்கள், ஓவியத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்திய வார்னிஷ்கள் ஆகியவை அந்தக் காலத்தின் வேதியியல் அறிவையும் தொழில்நுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.


இந்தக் கருத்து இந்தியக் கலை வரலாற்றிலும் மிகவும் பொருத்தமானது. அஜந்தா குகை ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள், மைசூர், ராஜஸ்தானிய ஓவிய மரபுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட நிறமிகள் மற்றும் பொருட்களை அறிவியல் முறையில் ஆராய்வது, அவற்றின் கலை வரலாற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். தஞ்சாவூர் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட தங்கத் தகடுகள், கனிம நிறமிகள், சுண்ணாம்பு அடிப்படையிலான மேற்பரப்புகள், பல்வேறு பசைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது, அவற்றின் உருவாக்க முறைகளையும் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களையும் வெளிப்படுத்த முடியும்.


Discover more from சொல்வனம் | இதழ் 379 | 22 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.