கார்காலக் கதை

 தன் கணவன் விஜய் புதிய கார் வாங்க திட்டம் போட்டுக்கொண்டிருந்த போதே பூர்வஜா பலமுறை சொல்லிப் பார்த்தாள்:   “விஜிமா, இப்ப இருக்குற நம்ம காருக்கு என்ன குறை? இன்னும் ஒரு அஞ்சு  வருஷம் போகட்டும். புதுசா வாங்கிக்கலாம்.” 

  “அதுக்குள்ள மாடல் போயிடும்டா, உதிரிப் பாகங்கள் கிடைக்காது. அப்போ ஒருத்தனும் வாங்க மாட்டான்’’ என்றான் விஜய்.

   “நல்லா போயிட்டு இருக்கு, எதுக்குமா மாத்தணும்?’’ என்றவளிடம், “இன்னும் கொஞ்ச நாள்ல பிரச்சன பண்ண ஆரம்பிச்சிடும், அதுக்கு முன்னாலேயே மாத்தறது  பெட்டர்,’’ என்றவன், காரின் எஞ்சின், மைலேஜ், பெட்ரோல் குறித்து பலவாறு  பேசி அவளை சம்மதிக்க வைத்தான்.

   புதிய காரும் வாங்கியாயிற்று. இன்னும் ரிப்பன் வெட்டாத புத்தம் புதிய காரில் உட்கார்ந்திருந்த பூர்வஜா பின்னால் திரும்பிப் பார்த்தாள்.  மகன் யூவினும், மகள் ட்ரிஷ்ணாவும் அலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ட்ரிஷ்ணா இப்போதுதான் பத்தாம் வகுப்பு சென்றிருக்கிறாள், யூவின் நாலாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். 

    “யூவின்மா எத்தனை நாள் அலசி ஆராய்ஞ்சு இந்த கார புக் பண்ணி வாங்கியிருக்கோம், என்ஜாய் பண்ணாம மொபைல்ல விளையாடினா என்ன அர்த்தம்? அம்மாகிட்ட போன குடு’’ என்றாள் பூர்வஜா.

   “என்ன மம்மி பண்ண சொல்றீங்க? ரூஃப் டாப்ப  இப்போ திறந்து வச்சுட்டு நிக்க வேணாம்னு அப்பா சொல்லிட்டாங்க. நான் என்னம்மா பண்றது, இப்போ’’ என்று குழந்தைத்தனம் மாறாத குரலில் கேட்டான் யூவின்.

  “வெளியே பார்த்துட்டு வரலாமே! பாரு, எல்லாரும் நம்ம காரின் ரிப்பன் அலங்காரத்தையே பார்க்கிறாங்க.” என்றாள் பூர்வஜா. 

  “அதான் ஷோ ரூம்லையே சொன்னேன், இந்தக் கன்றாவியை எல்லாம் எடுத்திடலாம்னு, நீதான் கேட்கல,’’ என்றான் விஜய்.

  “இன்னைக்கு ஒரு நாள் இருக்கட்டுமே, விஜி. எல்லோரும் நம்மள பார்க்கட்டுமே’’ என்றாள் பூர்வஜா. 

 “இட்ஸ் நாட் ஃபார் அதர்ஸ் பூர்வி, ஒன்லி ஃபார் அஸ்’’ என்றவனைப் பார்த்து உதட்டை சுழித்த பூர்வஜா, திரும்பி மகளைப் பார்த்து,

   “ட்ரிஷுமா முன்னாடி வாடா, இப்பதான் நடந்தே நீங்க ரெண்டு பேரும் முன்னாடி பின்னாடி போய்க்கலாமே. வாடாமா, வந்து தம்பி பக்கம் உட்காரு’’ என்றாள்.  

    ட்ரிஷ்ணாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மூஞ்சைத்  தூக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தவள், தலையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.  ட்ரிஷ்ணாவின் விருப்பம் வேறொரு காரின் மீது இருந்தது. ஆனால் யூவினுக்கோ காரின் மேற்கூரையைத் திறந்து, நின்றுவாறு வெளியே வேடிக்கை பார்த்தபடி வரவேண்டும் என்ற ஆசை. கடைசியில் யூவினின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த காரை வாங்கி ஆயிற்று. 

    “ஏண்டி, இவ்வளவு சொகுசா கார் வாங்கி இருக்கோம், நீ என்னடான்னா மூஞ்ச தூக்கிட்டு உட்கார்ந்துட்டு இருக்க,’’ என்று சற்றுக் கடுகடுத்தவாறு கூறினாள் பூர்வஜா.

    “நான் இப்போ எதுவுமே சொல்லலையே! ஐ அம் ஜஸ்ட் சாட்டிங் வித் மை பிரண்ட்ஸ்,’’ என்று பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தோள்களைக் குலுக்கியவாறு பதிலளித்தாள் ட்ரிஷ்ணா.

  “விடு பூர்வி, ஷி வில் பி ஆல்ரைட்,’’ என்று கூறினான் விஜய். 

  சந்தோஷமான அந்த சூழலைக் கெடுக்க விரும்பாத பூர்வஜா அமைதியானாள். மனதில் பல எண்ணங்கள் ஓடத் தொடங்கின.  இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு காரை மாற்றுவது எப்படி இத்தனை எளிதாக இருக்கிறது என்பது அவளுக்கு இன்றும் புரியாததாகவே இருந்தது. 

    “இது நம்முடைய நாலாவது கார்ல விஜி. கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருஷத்துல இது நாலாவது கார்’’ என்றவள், திடீரென்று மலர்ந்த பூரிப்புடன்,    “எங்க கார் எங்க வீட்ல எத்தனை வருஷமா இருந்தது, தெரியுமா? உங்களுக்கு மாப்பிள்ளை அழைப்புகூட அந்த கார்லதானே! ஞாபகம் இருக்குல்ல?’’ என்றாள்.   

  “எது அந்த சொப்பன சுந்தரி கார்ல வச்சு தள்ளிட்டு வந்தானுங்களே, உன் அண்ணன் தம்பி எல்லாம். அதைதானே சொல்ற?” என்று கேட்ட விஜயின்  தொடையில் அடித்த பூர்வஜா, “யாரும் தள்ளிட்டு வரல, ஜம்முன்னு உட்கார வைச்சு ஓட்டிட்டுதான் வந்தாங்க’’ என்றாள்.  

   உடனே விஜய், “ஆமாம் மணிக்கு அரை கிலோ மீட்டர் ஸ்பீட் இல்ல ஓட்டிட்டு வந்தானுங்க’’  என்றான்.

  “அம்மா நீங்க அந்த மியூசியம் காரைதானே சொல்றீங்க!’’ என்று யூவின்  கேட்டான். 

  “டேய், நீயும் உன் அக்காவும் குழந்தையா இருந்தப்போ அதுல உட்கார வச்சிதான் அம்மா உங்களுக்கு சாப்பாடு ஊட்டுவேன், நீ அதுலதான் தூங்கணும்னு அடம்பிடிப்ப தெரியுமா,’’ என்றாள் பூர்வஜா.

  “ஐயோ! அம்மா, அந்த காருக்கு ஐயம் நாட் ரெடி’’ என்று தன் குட்டி கரங்களைத் தன் தலைக்கு மேல் கும்பிட்டு காட்டினான் யூவின். ட்ரிஷ்ணாவைத் தவிர எல்லோரும் சிரிக்க கார் வழுக்கிக் கொண்டு சாலையில் சென்றது. பூர்வஜாவின் மனதிற்குள் அலையலையாய் நினைவுகள் வந்து மோதின. 

   பூர்வஜா வீட்டுக்கு முதன்முதலில் கார் வந்தபோது அவள் யு.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். அந்த நாளில் காலையிலிருந்தே ஒட்டுமொத்த குடும்பமும் பரபரப்புடன் இருந்தது.  அம்மாவும் பெரியம்மாவும் காலையிலேயே சமையல் முதலான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாசற்படியிலேயே காத்திருந்தார்கள்.

  பெரியம்மா,  “ஷீலா பாயாசம் செஞ்சு வைச்சுடுவோமா,’ ’என்று கேட்டார்.

  அம்மா, “அக்கா கேசரி  பண்ணிடுவோம், பாயாசம்னா டம்ளர், கிண்ணம்னு தேடணும், கேசரின்னா எலையிலேயே வச்சு எல்லாருக்கும் கொடுத்திடலாம்’’ என்றதும், பெரியம்மா மணக்கமணக்க கேசரி செய்து வைத்தார்.

 கார் வீட்டுக்கு வர மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. தெருவில் கார் திரும்பியதும் அதை நோக்கி குழந்தைகள் எல்லாரும் ஓடினர். பாஸ்கர் மாமாதான் முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்தார். ஒருபோதும் சிரிக்காத அவர் உதட்டில்,  கத்தியபடி ஓடி வரும் குழந்தைகளைப் பார்த்ததும் புன்னகை எழுந்தது.

  பூர்வஜாவின் பெரிய அத்தை சுபத்ராவைத் திருமணம் முடித்திருந்த பாஸ்கர் மாமா வீட்டில் அப்போதே கார் இருந்தது. பாஸ்கர் மாமாவுக்கு கார் ஓட்டத் தெரியாது, ஆனாலும் கார்களைப் பற்றி நன்றாகத் தெரியும் என்ற நினைப்பில் கார் வாங்க அவரை அழைத்துச் சென்றிருந்தார்கள். 

  அந்த இளம் பச்சை நிற ஃபியட்டின் பின்னிருக்கையில் பெருமிதத்தோடு பெரியப்பா உட்கார்ந்திருந்தார்.  கார் ஜன்னலுக்கு வெளியே கைகளையும் தலையையும் நீட்டியபடி,  “விலகு, விலகு’’ என்று சொல்லியபடியே அப்பா  வந்தார்.  

  அப்பா, மாமாவுக்கு கார் கதவைத் திறந்து விட்டதும், தாத்தாவிடம் அவர், “ரொம்ப நல்லா இருக்கு, மாமா’’ என்றார்.

  உடனே, “ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை,’’ என்றார் தாத்தா.

 “அவிய வீட்ல காரு 10 வருஷத்துக்கு மேல இருக்குல்ல, அதனால மருமவனுக்கு கார பத்தியெல்லாம் நல்லா தெரியும்’’ என்று நெகிழ்ந்துகொண்டிருந்தாள்  பாட்டி.

  பின்பு தாத்தாவை முன்னால் உட்கார வைத்து பாட்டியும், பெரியப்பா பெரியம்மாவும் பின்னால் அமர, அப்பாவும் அம்மாவும் சுவேதா மொபட்டில் பின்தொடர கோவிலுக்குச் சென்றார்கள்.  திரும்பி வந்ததும் குழந்தைகளின் பவனி ஆரம்பமானது. 

  கிட்டத்தட்ட எல்லோரும் காரில் ஏறினர். தெருவைச் சுற்றி அடுத்த தெரு ரவுண்டானா வரை சென்று திரும்பியதும், அடுத்த கும்பல் ஏறிச் சென்று திரும்பியது. ஒரு கும்பல் பின்னாலேயே ஓடியது. அப்படி ஓர் உற்சாகம், துள்ளல், கத்தல் என தெருவே வேடிக்கை பார்க்க, கார் ஊர்வலம் தொடர்ந்தது.

  பெரியப்பாவிடம் பாட்டி, “மாணிக்கம் சித்தப்பா வெளிய எட்டிப் பாக்காவ பாரு, அவுகளையும் ஒரு தடவை கூட்டிட்டு போ பாண்டி ’’ என்றாள்.  

  “வேண்டாம்மா,’’ என்ற அப்பாவிடம் பாட்டி, “மூஞ்சி செத்து போயி நிக்கிறாரு மனுஷன், ஒரு வார்த்தை சொல்லி ஒரு ரவுண்டு கூட்டிட்டுப் போயிட்டு வாயா, திருஷ்டி கழியும்’’ என்றாள். 

 அப்பா போய் கூப்பிட்டதும் மாணிக்கம் தாத்தா உடனே வந்துவிட்டார்.  சிரிப்புடனே முன்னாள் உட்கார்ந்துகொண்டவர், “அர்ச்சுனா நீயும் வா,’’ என்று பூர்வஜாவின் தாத்தாவை அழைக்க, தாத்தாவும் அவரும் நெருக்கிக்கொண்டு முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டார்கள். அப்போதெல்லாம், டிரைவரின் இருக்கை தனியாக இல்லாமல், பின்னிருக்கையைப் போலவே ஒரே இருக்கையாக இருக்கும். அதனால் இரண்டு தாத்தாக்களும் முன்னால் உட்கார்ந்து கொள்ள முடிந்தது.  சுமார் ஏழெட்டு குழந்தைகள்  பின்னால் ஏறிக்கொள்ள கார்  மார்க்கெட் வரை சென்று திரும்பியது.

  வீட்டுக்கு வந்ததும் வாசலிலேயே பாட்டி, அம்மா, பெரியம்மா எல்லோரும் பிடித்துக் கொண்டார்கள்.  

   “அப்படியே முல்லக்காடு போயிட்டு வந்துடுவோம், உங்க பெரியப்பா கிட்ட போய் காரைக் காட்டிட்டு வந்துடுவோம்’’ என்றார் சுமதி பெரியம்மா.

 “ஏன் மைனி காட்டணும், அவங்க சுகந்திக்குப் கல்யாணம் பேசி முடிச்சிருக்கிறதையே  ரகசியமா வச்சிருக்காங்க. அப்புறம் நாம எதுக்கு நம்ம காரைக் கொண்டு போய் காமிக்கணும்’’ என்றார் அப்பா.

  “இல்ல  கொழுந்தன், அப்புறம் இதையே சாக்கா வச்சு சுகந்திக்கு பூ வைக்கிறது, நிச்சயதார்த்தம்னு எல்லாத்துலயும் பிரச்சன பண்ணுவாக உங்க பெரியம்மா, அவுக அருள் கார் வாங்குற வரைக்கும் சும்மா கெடக்க மாட்டாக,  அதனால் சிரமம் பாக்காம சுகந்திக்காக ஒரு எட்டு போய் காமிச்சிட்டு வந்துருவோம்’’ என்றார் சுமதி பெரியம்மா. 

  “சரிதான், தென்னரசு, மணி அண்ணன வண்டிய எடுக்கச் சொல்லு,’’ என்றார் பெரியப்பா.

   மீண்டும் கிளம்பினார்கள். இப்போது மற்ற குழந்தைகள் வீட்டிலேயே நிறுத்தப்பட, பூர்வஜா மட்டும் அவள் அம்மாவின் மடியில் அமர்ந்தவாறு சென்றாள். 

  குழந்தைகள் எல்லாரும் காரின் பின்னாடியே ஓடி வந்தார்கள். பூர்வஜாவின்  அண்ணன் பிரதாப் பல தெருக்கள் தாண்டி ஓடி வந்து டாட்டா காட்டிவிட்டு,  பின்பு “எங்க கார், எங்க கார்!’’ என்று கத்தியபடியே திரும்பி ஓடினான்.  திரும்பி அவனுக்குக் கைகளை அசைத்துக் கொண்டு வந்த பூர்வஜாவின்  முகத்தில் சில்லென்று காற்று பட்டதும், ஒட்டுமொத்த முடியும் காற்றில் பறக்க வாயைத் திறந்து காற்றை விழுங்கிய படியே சென்றாள். சற்று நேரத்திலெல்லாம் எல்லோருடைய முடியும் காற்றில் பறக்க முல்லக்காடு  சென்று இறங்கினார்கள். 

   பெண்கள் வீட்டில் பேசிக்கொண்டிருக்க பெரிய தாத்தாவையும், பெரிய பாட்டியையும் அழைத்துக் கொண்டு பூர்வஜாவுடன் கோவிலுக்கு மீண்டும் கிளம்பினார்கள்.  

  “நம்ம சுகந்திக்கு நம்ம கார்லதான் மாப்பிள்ளை அழைப்பு பெரியம்மா, மணி அண்ணனை காரோட நம்ம வீட்டிலேயே நிறுத்திடுவேன்,’’ என்றெல்லாம் அப்பா சொல்லிய போது கூட பெரிய பாட்டி சிரிக்கவில்லை.  பெரிய தாத்தா நன்றாகப் பேசிக்கொண்டு வந்தார். வீட்டுக்குத் திரும்பி வந்தபோது பெரிய பாட்டி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாரே ஒழிய காரைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சுகந்தி அத்தை சுட்டுக் கொடுத்த தோசையை சாப்பிட்டு விட்டு எல்லோரும் வீடு திரும்பினார்.  

   சுகந்தி அத்தையிலிருந்து மற்ற எல்லா பெண்களின் திருமணத்தன்றும் மாப்பிள்ளை அழைப்பு அந்த காரில்தான் நடந்தது. அதுவே மிகப்பெரிய பெருமையாகக் கருதப்பட்டது, பலவித அலங்காரங்களை அவர்கள் கார் பார்த்தது. 

   ப்ளஷர் என்றோ, பத்மினி கார் என்றோ வீட்டில் யாரும் சொல்லக்கூடாது, ஃபியட் என்றுதான் சொல்ல வேண்டும் என்பது வீட்டில் எழுதப்படாத சட்டமாகியது. தாத்தாவுக்கு எப்போதும் அது வண்டிதான், பாட்டிக்கு மட்டும் ‘காரு’.

  பிள்ளைகளுக்கு உடம்போடு ஒட்டிய தோலாய் சிறிய கர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. ஒரு காரில் பத்து பேர் சென்று இறங்கினாலும் கார் அவர்களுக்குப் பெருமதிப்பை அளித்தது.  

  சாந்தினியும் பூர்வஜாவும்  கல்லூரிக்கு எப்போதெல்லாம் புடவை கட்டுகிறார்களோ அப்போதெல்லாம் காரில்தான் செல்வார்கள். முடி கலைந்து விடும் என்று அவர்கள் இருவரும் ஒருபோதும் கார் கண்ணாடியை இறக்கி விடமாட்டார்கள். பெரியப்பா வைத்துக் கொடுத்த சிறிய மின்விசிறிதான் சுழன்றுகொண்டிருக்கும். 

  பூர்வஜாவின் அம்மாவும் பெரியம்மாவும் கோவிலுக்கும், குடும்ப விசேஷங்களுக்கும் காரில் சென்று இறங்குவதை உறவினர்களும் பெருமையாகவே கருதினர். பிரதாப்பும், பிரவினும் பத்தாவது படிக்கும்போதே மணி மாமாவிடம் இருந்து கார் ஓட்ட கற்றுக் கொண்டனர்.  மணி மாமா சில வருடங்களில் காரின் கராஜிலேயே தங்கிக்கொள்ள ஆரம்பித்தார்.  சாந்தினி அக்காவின் திருமணத்தின் போது கல்யாண புடவை இளம் பச்சை நிறத்தில் சிவப்பு கட்டிச் சரிகை கொண்டது. அவர்கள் காரும் சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டது.  திருமணம் முடிந்து சாந்தினியும் அவள் கணவரும் வீட்டுக்கு வந்து காரிலிருந்து இறங்கிய புகைப்படமே  எல்லா பத்திரிகைகளிலும் விளம்பரத்துக்குத் தரப்பட்டது.  அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமாகி, பல திருமணங்களில் கல்யாண பெண்ணின் பட்டு புடவை நிறத்துக்கேற்ப கார் அலங்காரம் செய்யப்பட்டது. 

   பூர்வஜா திருமணத்தின் போது, அந்தப் பழைய காரில்  மாப்பிள்ளை ஊர்வலம் வர மாட்டேன் என்று அடம் பிடித்த விஜய், பூர்வஜாவைத் தொலைபேசியில் அழைத்து, 

 “பூர்வி என்னோடது பிரான்ட் நியூ இண்டிகோ, அத நான் பெங்களூரில் இருந்து கொண்டு வரேன்.  அதை நம்ம கல்யாணத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம். தயவுசெஞ்சு உங்க அப்பாகிட்ட அந்த ஓட்டக்கார் வேண்டான்னு சொல்லிடு,’’ என்றான்.

  “எங்க கார்ங்க, எங்க கார்லதான் நாம போகணும்,’’ என்று பூர்வஜா  கொஞ்சியும், “மாப்பிள்ளை நல்ல கண்டிஷன்ல இருக்கு மாப்ள, 20 வருஷம் ஆன மாதிரியே இருக்காது மாப்பிள்ளை,’’ என்று ஆயிரம் மாப்பிள்ளை போட்டு பூர்வஜாவின் அப்பா கெஞ்சியும், “டேய்! குடும்பத்துல எல்லா பொண்ணுங்களுக்குமே இதுலதான்  மாப்பிள்ளை அழைப்பு நடத்தி இருக்காங்க. இது கடைசி பொண்ணு கல்யாணம், அதனால அந்த கார்லதான் மாப்பிள்ளை அழைப்பு போகணும்’’ என்று விஜயின் அப்பா அதட்டியும் அவனை  சம்மதிக்க வைத்தனர்.

  பூர்வஜாவின் ரோஜா நிற திருமணப் பட்டுக்கு ஏற்ப ரோஜா பூக்களால் அன்றும் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த  கார்.  பிரதாபும், பிரவினும் தங்களுக்கு என்று கார் வாங்கிக்கொண்டாலும் இன்னமும் அந்தக் குடும்பமே ‘நம்ம கார்’, ‘எங்க கார்’ என்று சொல்வது எழுபதுகளின் இறுதியில் வந்த அந்த இளம் பச்சை நிற ஃபியட்டைத் தான். 

  கார் தன் ஓட்டத்தைச் சற்றுக் குறைத்துக் கொண்டதும், மணி மாமா அவ்வப்போது கூப்பிடும் போது மட்டும் வருவார். பின்பு அதிக பயன் இல்லாமல் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்ட, விளையாட்டு காட்ட   என்றாகிப் போனது.  அப்பாவும் பெரியப்பாவும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காரைத் துடைத்து வைத்து விடுவார்கள். 

   ஒரு நாள் தென்னை மர மட்டை காரின் முன் கண்ணாடியில் விழுந்ததில் கண்ணாடி சிதலமடைந்துவிட்டது. பின்பு காரைக் கொடுத்துவிடலாம் என்று தீர்மானித்து அதை ஒரு பழைய கார் விற்பனையாளரிடம் விற்க முடிவெடுத்து, கனடாவில் சாந்தினியின் பிரசவத்துக்குச் சென்றிருந்த பெரியம்மா வருவதற்குள், அம்மாவுக்கும் தெரியாமல் விற்றனர்.

    காரை விற்ற அந்த நாளில் யாருமே அதிகம் பேசிக்கொள்ளவில்லை. யாரோ வீட்டில் உள்ள ஒருவர் அவர்களை விட்டுச் செல்வது போல் இருந்தது. அப்பாவும் பெரியப்பாவும் மிகுந்த ஆதுரத்துடன் காரையும் ஸ்டியரிங் வீலையும் தடவிக் கொடுத்தனர்.  கண்ணாடியை மட்டும் மாத்திருக்க முடியாதா, அக்கா மட்டும் இருந்திருந்தா விற்க விட்டிருக்க மாட்டாங்க,’’ என்று அம்மா பல நாட்கள் சொல்லிக்கொண்டிருந்தாள்.  

அது வந்த நாளிலிருந்து அது சென்ற நாள் வரைக்கும் பல பெருமைகளைக் கண்டது, அந்தக் குடும்பம் அனுபவித்த மகிழ்ச்சியான தருணங்களும் மிக அதிகம்.

  சட்டென்று சில்லென்ற காட்டு முகத்தில் படவும் சுயநினைவுக்கு வந்தாள் பூர்வஜா.  கார் கண்ணாடியை இறக்கி குடியிருப்பின் காவலாளியிடம் அடையாள அட்டையைக் காண்பித்த விஜய், பூர்வஜா கட்டாயப்படுத்தி வாங்கி வைத்திருந்த இனிப்பு பெட்டியை எடுத்து அவர்களிடம் கொடுத்தான். 

  மிகுந்த மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டவர்கள், “கார் ரொம்ப நல்லா இருக்கு சார்.’’ என்றார்கள். சிரித்தபடி காரை செலுத்தினான் விஜய். 

  நன்றி சொல்லியபடி, “மேற்கூரையைத் திறந்து விடுங்க விஜி” என்ற பூர்வஜா  திரும்பி குழந்தைகளைப் பார்த்தாள். குழந்தைகள் இருவரும் அங்கே தூங்கிக்கொண்டிருந்தார்கள்.  ஏனோ அவர்களைப் பார்க்கப்  பாவமாய் இருந்தது பூர்வஜாவிற்கு. 


Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.