நவநீதம் பிள்ளை

“காலங்காலமாக, பாலியல் வன்கொடுமை என்பது போரில் வெற்றியின் சின்னமாக கருதப்பட்டு வந்தது. இனி அது போர்க்குற்றமாகக் கருதப்படும் என்ற வலுவான செய்தியை உலகிற்கு சொல்லி கொள்கிறோம்”. 

கற்பழிப்புகளும், பாலியல் வன்கொடுமையும் இன அழிப்பில்  பெரும் பங்கு வகிக்கிறது என்கிற  துணிச்சலான பார்வையை ருவாண்டா வழக்கின் வழியாக உலகின் முன் நிறுத்திய நவி பிள்ளையின் வரிகள் இவை.  2026 ம்  ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு திருமதி நவி என்கிற நவநீதம் பிள்ளை அவரக்ளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  உலக அமைதி மற்றும்  சர்வதேச சட்டங்களை மேம்படுத்தும் முயற்சிகளுக்காக வழங்கப்படுவதாக விழா குழு அறிவித்திருக்கிறது. போர்களும் பூசல்களும் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில்,  நீதிபதிகளும், சட்ட அமைப்புகளும் அரசியல் ரீதியாக தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் சூழலில், மோதல்களுக்கான தீர்வாக வன்முறையோ, பலத்தையோ 

பயன்படுத்தாமல் இருப்பது சர்வதேச சட்ட விதிகளை சார்ந்தே இருக்கிறது என்பதை நோபல் குழு நினைவூட்ட விரும்புகிறது. போர்குற்றவாளிகளை தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி முறையாக கிடைக்கவும் வழி செய்யும் சர்வதேச சட்ட அமைப்பே உலக அமைதியை உறுதிப்படுத்தும் முன் நிபந்தனையாக இருக்க முடியும் என்று நோபல் விருது குழு கூறியிருக்கிறது. 

இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவி பிள்ளை, தென்னாபிரிக்கா நாட்டை சேர்ந்தவர், இவருடைய தாத்தா பாட்டி கரும்பு தொழிலாளர்களாக 1890ல்  அழைத்து வரப்பட்டனர்.  நாராயணசாமி, சந்தமா தம்பதிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1941 ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று பிறந்தார். நிறவெறி நிறைந்த தென்னாப்பரிக்காவில் டர்பன் நகரின் ஏழ்மையான குடியிருப்பில் வாழக்கை. கடும் வறுமையிலும், தங்களுடைய எட்டு பிள்ளைகளையும் முடிந்த அளவு சமமாக நடத்தினர். சிறு வயதிலே பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்துவிடும் காலத்திலும், தங்கள் பெண்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினர். பள்ளிகளின் எண்ணிக்கையை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்த காலகட்டம் அது. நீண்ட வரிசையில் நின்று, தங்களின் பிள்ளைக்கு அனுமதி  வாங்குதல், உபயோகப்படுத்தாத பக்கங்களை சேர்த்து நோட் தைத்து கொடுத்தல் என நவி பிள்ளையின் தாயார் வறுமையிலும் தளராத மனஉறுதி பின்னாளில் எந்த நாடுகளின் அச்சறுத்தலுக்கும் பயன்படாது அவர்களின் போர்க்குற்றங்களை வலிமையோடு உரக்க சொன்னதோடு இணைத்து பார்க்க முடிகிறது.

உள்ளூர் மக்களின் பங்களிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை கொண்டு நடால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நவி பிள்ளை, இன ஒதுக்கீடு நிறைந்த சூழலையும் தாண்டி படித்து 1963-ல் இளங்கலைப் பட்டமும், 1965-ல் சட்டப் பட்டமும் பெற்றார். நிறவெறிச் சட்டம் காரணமாக அவர் வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டாலும், சற்றும் தளராமல் நீதி அமைச்சகத்தை நேரில் தொடர்புகொண்டு போராடி மீண்டும் தனது பழைய கல்லூரியிலேயே கல்வியைத் தொடர்ந்தார். பிற்காலத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று தனது உயர்கல்வியைத் தொடர்ந்த அவர், 1982-ல் முதுநிலைப் பட்டமும், 1988-ல் முனைவர் பட்டமும் பெற்றார். இதன் மூலம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று முனைவர் பட்டம் பெற்ற முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை பெற்றார். 

நிறவெறி ஆட்சியில் எந்தவொரு வெள்ளையினச் சட்ட நிறுவனமும் தன்னை ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ள மறுத்த சூழ்நிலையில், 1967-ஆம் ஆண்டில் நடால் மாகாணத்தில் தனது சொந்தச் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம், அந்த மாகாணத்தில் சொந்தமாகச் சட்ட நிறுவனம் தொடங்கிய முதல் பெண்மணி மற்றும் முதல் வெள்ளையரல்லாத பெண் வழக்கறிஞராக நவி பிள்ளை அறியப்பட்டார். நிறவெறியை  எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC), கருப்பு மனசாட்சி இயக்கம் (Black Consciousness Movement) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல அரசியல் போராட்டக்காரர்களுக்காகவும், சித்திரவதைகளுக்கு ஆளானோருக்காகவும் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார். குறிப்பாக, 1971-ஆம் ஆண்டில் இவருடைய கணவர் காபி பிள்ளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, காவல்துறை அத்துமீறி விசாரணை நடத்துவதைத் தடுத்து நிறுத்தத் துணிச்சலாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி கண்டார். 1973-ஆம் ஆண்டில், ராபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா மற்றும் சக அரசியல் கைதிகள் தங்களுக்குரிய சட்ட ஆலோசனைகளைப் பெறும் உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தொடரப்பட்ட வழக்குகளிலும் திறம்பட வாதாடி வென்றார். 

தென்னாப்பிரிக்காவின் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நவி பிள்ளை, நெல்சன் மண்டேலா மற்றும் நீதி அமைச்சர் துல்லா உமரின் பரிந்துரையின் பேரில் ஐ.நா பாதுகாப்புப் பேரவையால் ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICTR) நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்; அதில் முதல் நான்கு ஆண்டுகள் இத்தீர்ப்பாயத்தில் பணியாற்றிய ஒரே பெண் நீதிபதி இவரே ஆவார். பின்னர் இதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். 

இவரது இந்தக் காலக்கட்டத்தில் நடந்த ஜீன்-பால் அகயேசு (Jean-Paul Akayesu) வழக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ருவாண்டாவில் டபா நகரின் மேயராக இருந்த அகயேசு, துட்சி (Tutsi) இனப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை திட்டமிட்டு தன்னுடைய படைகளை ஏவி நிகழ்த்திய குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டுவருவதே பெரும் சவாலாக இருந்தது; ஐ.நா-வின் உதவியோடு சாட்சிகளைத் திரட்டிய கோடிலீவ் முகாசரசி (Godeliève Mukasarasi) போன்ற துணிச்சலான பெண்கள் கடும் அச்சுறுத்தல்களை சந்தித்ததுடன், அவர்களின் குடும்பத்தினரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஆனாலும், அத்தனை ஆபத்துகளையும் தாண்டி நால்வர் சாட்சியமளிக்க முன்வந்தனர்.

நவி பிள்ளை தலைமையிலான முதலாம் அமர்வு 1998ம்  ஆண்டு செப்டம்பர் 2 அன்று அகயேசு மீதான இனப்படுகொலை, சித்திரவதை, மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட ஒன்பது  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும்போது அதுவும் ‘இனப்படுகொலையின்’ ஒரு வடிவமே என்று இத்தீர்ப்பு திட்டவட்டமாக வரையறுத்தது.

சர்வதேச அரங்கில் திருப்புமுனையாக அமைந்த இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் போரின் பெயரால்  பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை எதிர்கொள்ளும் முறையியலை முற்றிலுமாக மாற்றியமைத்ததுடன், உலகளாவிய மனித உரிமைச் சமூகத்தின் மாபெரும் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது. இத்தீர்ப்பு மற்றும் வழக்கை அடிப்படையாகக் கொண்டு ‘The Uncondemned’ என்ற ஆவணப்படம் பிற்காலத்தில் வெளியானது.

ருவாண்டா தீர்ப்பாயத்தில் நவி பிள்ளை கையாண்ட மற்றொரு முக்கியமான வழக்கு, வெறுப்புப் பிரச்சாரங்களைப் பரப்பிய ஊடகவியலாளர்கள் மீதான வழக்குகளாகும். துட்சி இன மக்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரங்களைப் பரப்பிய ‘கங்குரா’ (Kangura) இதழ் மற்றும் ‘மிலே கொலின்ஸ்’ (RTLM) வானொலி நிலையத்தின் பங்கு குறித்த வழக்கையும் அவர் விசாரித்தார். பொதுமக்களை இனப்படுகொலைக்கு நேரிடையாகத் தூண்டியதாக இந்த வானொலி மற்றும் பத்திரிகை தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அரசியல் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை உருவாக்குவதில் ஊடகங்கள் எத்தகைய ஆபத்தான பங்காற்றுகின்றன என்பதையும், அதன் மூலம் நிகழும் கோர விளைவுகள் எத்தகையவை என்பதையும் சட்டத்தின் முன் நிறுவியதில் இவ்வழக்கின் தீர்ப்புகள் கவனம் பெறுகிறது.  

தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தொடக்கக் கால நீதிபதிகளில் ஒருவராக 2003 முதல் 2008 வரை பணியாற்றினார். 2008 ல்  ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக (UN High Commissioner for Human Rights) நவி பிள்ளையை பான் கி மூன் நியமித்தார். மனித உரிமைகள் உயர் ஆணையர்  என்பவர்  “உலகெங்கிலும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக”  ஒலிப்பவர் என்றார். சாதி அடிப்படையிலான வன்கொடுமைகளுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததுடன், “சாதிச் சுவர்களைத் தகர்ப்போம்” என்ற தலைப்பில் கட்டுரைகளையும் கருத்துகளையும் வெளியிட்டார். மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை சார்ந்த உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ+) உரிமைகளுக்கான ஐ.நா. தீர்மானங்களுக்கும், “Born Free and Equal” ஆவணத்திற்கும் தனது வலுவான ஆதரவை வழங்கினார். விக்கி லீக்ஸ் (WikiLeaks) அமைப்பின் மீதான தாக்குதல்கள் மற்றும் தகவல் கசிவாளர் எட்வர்ட் ஸ்னோடென் மீதான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் சார்பாக நின்றார்.

பதவிக் காலம் முடிந்த பிறகும், சர்வதேச நீதிமன்றங்களில் (ICJ) நீதிபதியாகத் தனது பணியை  தொடர்ந்தார். குறிப்பாக, மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக (Ad hoc judge) நியமிக்கப்பட்டு நீதி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நவி பிள்ளையின் இந்த நீண்ட பயணத்தில், அவரின் நிலைப்பாடுகள்  பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திருக்கிறது. குறிப்பாக, 2012-ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே நாட்டில் ராபர்ட் முகாபி (Robert Mugabe) ஆட்சிக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கை அந்நாட்டு மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மனித உரிமை மீறல்களை ஜிம்பாப்வே அரசு மூடிமறைக்க நவி பிள்ளை துணைபோவதாக அந்நாட்டு சிவில் சமூக அமைப்புகள் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தன. அதேபோன்று, 2013-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசை ஒரு சர்வாதிகார அரசாகக் கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கை பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. நவி பிள்ளையின் தமிழ் வம்சாவளி அடையாளமே  இத்தகைய கருத்துக்களுக்கான பின்புலமாக செயல்படுவதாக எதிர்ப்பு எழுந்தது. மிக சமீபத்தில், காசா மோதல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் தலைவராக அவர் ஆற்றிய பணிகள் பெரும் புயலைக் கிளப்பின. ஹமாஸ் குழுவினருக்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கைகளில் காசாவில் இனப்படுகொலை அரங்கேறியுள்ளதாக ஐ.நா. விசாரணை ஆணையம் குற்றஞ்சாட்டியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, போர்க்குற்றவாளிகளுக்கான பொறுப்பை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். யூத எதிர்ப்பு மனநிலையோடு ஐ.நா. செயல்படுவதாக  குற்றம் இஸ்ரேல் கடுமையாக குற்றஞ்சாட்டியது. இத்தகைய கடுமையான கண்டனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் பதிலளித்த நவி பிள்ளை, “சட்டத்தை நடுநிலையோடு விளக்குவதும், அனைத்து உண்மைகளையும் பக்கச்சார்பின்றி ஆராய்ந்து முடிவெடுப்பதுமே ஒரு நீதிபதியின் பணி” என்று தெரிவித்தார்.

கரும்பு தொழிலாளர்களாக தென்னாப்ரிக்காவிற்கு அழைத்து வரப்பட்ட குடும்பத்தில் இருந்து, வறுமையின் பிடியிலும், கல்வியை, சட்டத்தையும் துணையாக கொண்டு தொடங்கியவரின் வாழக்கை தன் குடும்பத்தினரைக் காப்பதற்காகவும், நிறவெறி ஆட்சியில் ஒடுக்கப்பட்ட சொந்த மக்களுக்காகவும் பிற்காலத்தில் உலகெங்கிலும் புதைகுழிகளிலும் போர்க்களங்களிலும் நசுக்கப்பட்ட ஒட்டுமொத்த மனிதகுலத்தின் குரலாக மாறியது.


Discover more from சொல்வனம் | இதழ் 376 | 11 அக் 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.