மீண்ட தெய்வம்

“கலையின் அழகு -இரகசியம், அதன் சிருஷ்டியிலா அல்லது அதை ரசிக்கின்றவர்களின் அநுபவத்திலா?-”

கேள்வி கேட்ட லதாவைப் பேராசிரியர் ராகவன் ஒரு விநாடி உற்றுப் பார்த்தார். அக்கேள்விக்கு விடை அந்த ஒரு விநாடிப் பார்வையிலேயே அடங்கிக் கிடந்தது. ‘இதைத் தெரிந்து கொள்ள வில்லையே இந்தப் பேதைப்பெண்|எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?’

உலகம் அவரைப்பற்றி எந்தவிதமாகக் கருதுகின்றதோ அதை ஆதாரமாகக் கொண்டுதானே அப்பெண்ணும் தன்னுடன் இப்படி நெருங்கிப் பழகுகிறாள்

‘இலக்கியம்,தத்துவம் இவற்றையெல்லாம் கரைகண்ட டாக்டர் ராகவனுக்கு திருமணம் போன்ற சில்லறை விஷயங்களில் எப்படி ஈடுபாடு இருக்க முடியும்? அதனால் தான் ஐம்பது வயதாகியும் இவர் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார்.’-

‘நாகரிகத்தின் சிகரம், குணக்குன்றின் உச்சி,ஆசிரிய மகரிஷி. இப்படியெல்லாம் உலகம் அவரை பற்றிப் பேசுகின்றது.

நேற்றுகூட, கல்லூரித் தலைவர் அவரை புன்சிரிப்புடன் கேட்டார்: “இயற்கையின் அர்த்தமற்ற, கோணல் மாணலான விசித்திரம்தான் இனக்கவர்ச்சி என்று நீங்கள் கருதுகின்றீர்களோ, டாக்டர்?”

உலகத்திலுள்ள யாவரும் தங்கள் தங்களிடத்திலுள்ள குறை களையெல்லாம் அவரிடத்து இல்லையாக நம்புகிறார்கள். அவர் கண்கண்ட தெய்வம்!

தான் ஏதேனும் தவறு செய்தால் அது அவர்களுடைய கற்பனைக்கு இழைக்கும் கொடுமை. தான் தெய்வமில்லை என்று உலகமெல்லாம் கேட்க அலற வேண்டும் போலிருந்தது அவருக்கு. அவ்வெண்ணத்தின் பேரிரைச்சல், புயலாக, எரிமலையாக, நெஞ்சின் அடித்தளத்திலிருந்து அவருக்கு மட்டும் கேட்டதேயன்றி உலகத்துக்குக் கேட்கவில்லை.

“நான் அப்புறம் வருகிறேன் சார்” லதா புறப்பட்டாள்.

“என்னம்மா,ஏதோ கேட்டாய், உடனே புறப்பட்டு விட்டாயே?”

அவள் கேட்ட கேள்விக்கு விடை தன் நெஞ்சில் கொட்டை எழுத்துக்களில் ‘நியான்’ ஒளியெனப் பளிச்சிடுகின்றதே! அப்படியிருந்தும் இந்தப் பேராசிரியர் பாவனை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது!’நாகரிக குணக்குன்று, ஆசிரிய மகிரிஷி | சே!சே/தன்னைப் போன்ற வேஷதாரி உலகத்தில் எங்குமே இருக்க முடியாது.

“நீங்கள் வேறு ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது!” அவள் புன்னகை செய்தாள். காலை முகிலின் விளிம்போரங்களில் கதிரவன் கூட்டும் வண்ண ஜாலங்களின் ஆயிரங்கோடி கற்பனைகள் !ஆனால் … ஆனால் மனச்சாட்சியின் நிழல் இருளென அக்காட்சியை மூடி,அவரை திக்குமுக்காடச் செய்தது. அவர் திணறினார்.

“கலையின் அழகு இரகசியம் அதன் சிருஷ்டியிலா அல்லது அதை ரசிக்கின்றவர்களின் அனுபவத்திலா?” லதா மீண்டும் கேட்டாள்.

“ஒவ்வொரு பொருளும் அதனதன் குணத்துக்கு எல்லையாக நின்றுவிட்டால் அதாவது, அதன் குணநிர்ணயத்திற்கு அதனால் பாதிக்கப்படுகின்ற மற்றைய பொருள்களின் உணர்ச்சி அனுபவத்தை வேண்டாது, தொடர்பற்ற முறையில் தனக்குத்தானே வரையறையாக இருந்துவிட்டால், உலகம், இயக்கமாகிய ஆகர்ஷண வேகம் இல்லாத ஜடப்பொருளாகிவிடும். கலையின் அழகு அதைச்சரியானமுறையில் ரசிக்கின்றவர்களின் அனுபவத்தில் பூர்த்தியாகின்றது”

சரியான முறையில் ரசிப்பதென்றால் …?”

“தான் அது என்ற வேறுபாடு ஒழிந்து, தான் அதுவாகிவிடும் வேதாந்த மகா வாக்கிய நிலை!

அப்படியென்றால் அதுவும் ஒரு சலனமற்ற நிலைதானே! இயக்கம் எங்கே இருக்கிறது?”

“ஒரு மின்விசிறி மிகவேகமாகச் சுற்றும் போது அது ஸ்தம்பித்து நிற்பது போலத்தானே இருக்கிறது..? ஏன் உலகம் இவ்வளவு வேகமாகச் சுற்றுகின்றதே? அது நமக்குத் தெரிகின்றதா? அதனால் இயக்கம் இல்லை என்று சொல்லி விட முடியுமா?”

அதற்குமேல் என்ன கேட்பது என்று அவளுக்குத் தெரிய வில்லை, சற்று யோசித்தாள். சிந்திக்கும்போது அவள் கண்கள் சற்று அகல விரிக்கின்றன.

கேள்வியின் கருத்துச் சுமையை உள்ளடக்கிய அப்பார்வையின் நிலைக்கொள்ளாத தவிப்பு, மழலைக் குழந்தையின் பரபரப்பென, உள்ளத்தில் எவ்வளவு கனவுக் குமிழிகளை எழுப்புகின்றது! ஏதோ கேட்க வேண்டும் என்ற விருப்பத்தில் முன்னறிவிப்பாய் துடிக்கும் இதழ்களின் மென்மையான அசைவு எழுந்து முத்துக்களை சொரிந்து விட்டு அடங்கும் அலையைப் போல் -குறுநகையாய் விரிந்து, அடங்குகின்றது. அம்முத்துக்கள் ராகவன் முகத்திலும் தெறித்து விட்டாற்போல், அவர் நெற்றியில் வியர்வைத் துளிகள்! பேராசிரியர் ராகவன் தன் ஆசனத்தைவிட்டு எழுந்தார்.

கனவுக்கும் நடைமுறைக்குமிடையே உடனுக்குடன் உடன் பாடு செய்யத் தவறிய மனநிலையில் அவர் எழுந்ததும், கால் தடுமாறி விழத் தெறிந்தார். அவரை விழாமல் சட்டெனத் தாங்கிக் கொண்டாள் லதா.

“என்ன சார்.. என்ன சார்?”- அவள் பதறிவிட்டாள்.

வராந்தாவில் சென்று கொண்டிருந்த மற்றைய ஆசிரியர்கள் யாவரும் கூடிவிட்டனர்.

“என்ன நடந்தது? விழுந்து விட்டாரா?

மயக்கமா? எப்பொழுது பார்த்தாலும் படித்துக் கொண்டே யிருந்தால் இப்படித்தான்..”

இப்படி உட்காருங்கள். இதோ இங்கே உட்காருங்கள்”.

எல்லோருமாகச் சேர்ந்து ராகவனைக் கட்டாயப்படுத்தி நாற்காலியில் மீண்டும் உட்கார வைத்து விட்டார்கள்.

“எனக்கு ஒன்றுமில்லை. எதற்கு இப்படி அலட்டிக் கொள்கிறீர்கள்? கீழே விழப் போனேன். இந்தப் பெண் விழாமல் பிடித்துக் கொண்டு விட்டாள். சரி, நான் வகுப்புக்குப் போக வேண்டும், நகருங்கள்!’

“நீங்கள் இப்பொழுது போக வேண்டாம். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்”

“என்ன இது? ஒன்றுமில்லாததைப் பெரிது படுத்துகிறீர்கள் கால் மரத்துவிட்டது. விழப்போனேன். அவ்வளவுதான்.

அதற்குள் கல்லூரித் தலைவர் அங்கு வந்துவிட்டார்.

“டாக்டர் மயக்கமாக இருக்கிறதா?”

ராகவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த இடத்தைவிட்டு ஓடிவிட வேண்டும் போலிருந்தது அவருக்கு.

இவ்வளவு பேருக்கும் தன்பால் எவ்வளவு அக்கறை, அபிமானம், மரியாதை! இதைப் பெறுவதற்கு தனக்குத் தகுதியிருக்கிறதா? தன் உள்ளத்து உணர்ச்சிகள் அனைத்தையும் அள்ளிக் கொட்டி விதியே, இது என்ன சோதனை/ அந்த இடத்திலேயே அப்பொழுதே விடலாமா? அதனால் ஒரு வேளை மனத்துக்கு நிம்மதி ஏற்படலாம் …ஆனால்.. ஆனால்.

“புஸ்தகத்தை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு கொஞ்ச நாளைக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்”.

ராகவன் தன் இருப்பிடத்தைவிட்டு எழுந்தார். “இதோ பாருங்கள். எனக்கு ஒன்றுமில்லை.கால்இடறி விழப்போனேன். அவ்வளவுதான். உங்கள் அபிமானத்தோடு உங்கள் கற்பனையும் துரிதகதியில் இயங்குவதுஎன் துரதிருஷ்டம் தான். தயவு செய்து வகுப்புக்குப் போக வழிவிடுங்கள்!”

கல்லூரித்தலைவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“டாக்டர்… உங்களுக்கு ஒன்றுமில்லை என்பது நிச்சயம் தானே! மயக்கமாக ஏதாவது இருந்தால்!

”எனக்கு ஒன்றுமில்லை!” தீர்மானமாகக் கூறிவிட்டு அவர் அறையினின்றும் வெளியே வந்தார்.

வெளியே இருமருங்கும் மாணவர்களும் மாணவிகளும் நின்று கொண்டிருந்தனர். “சார் ஒன்றுமில்லையே, சார்…. ஒன்றுமில்லையே?” அவர்கள் அனைவருக்கும் அவர்பால் எத்தனை மரியாதை, ஈடுபாடு| தலைகுனிந்து கொண்டே பேராசிரியர் ராகவன் தன் வகுப்பை நோக்கி நடந்தார்.

”நம் நாட்டின் பழம் புலவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி எந்தவிதக் கூச்சமுமின்றிக் கூறியிருப்பது ‘ஆபாசமாக’ நமக்கு இப்பொழுதுபடுகிறதென்றால், அதற்குக் காரணம், மேல்நாட்டு மரபை ஒட்டிய ‘குற்றமனப்பான்மை’ நம்மையும் பாதித்திருப்பது தான் ஈடன் தோட்டத்தில் மனிதன் செய்த குற்றத்தினால் விளைந்தது மனித சமுதாயம் என்ற பாவ உணர்ச்சியை, பாரம்பரியமாக தாங்கிவரும் மேல்நாட்டுப் பழம்பெரும் இலக்கியங்களில் இந்தக் ‘குற்ற மனோபாவம்’ பிரதிபலிக்கக் காணலாம். ஆனால் இப்பொழுது அவர்களுடைய தற்கால இலக்கியங்களில் எதனையும் ‘பச்சை’யாக வெளிப்படையாகக் கூறும் தன்மை ஏற்பட்டிருக்கின்றதென்றால், ஏதோ புரட்சி செய்ய வேண்டும் என்ற, சமூகத்திற்குச் சவால் விடுக்கும் நோக்கத்துடன் ஆண்-பெண் உறவுகள் கூறப்படு கின்றனவேயன்றி, நம் நாட்டின் தொன்மை இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது போல் இயற்கையாகச் சொல்லப் படவில்லை. இலக்கியம் இயற்கைத் தன்மையை இழந்து விட்டால், அது பிணத்திற்கு அலங்காரம் செய்வது போல…”

பேராசிரியர் ராகவன் இயந்திரம் போல் பேசிக் கொண் டிருந்தார். திடீரென்று மனத்தில் ஒரு சபலம் . பெண்கள் இருக்கும் இடத்தை நோக்கினார்.லதா குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள். முன்புறத்தில் விழுந்திருந்த கூந்தல் அவள் எழுதும்போது அசைந்தது.அவ்வசைவு எழுப்பிய லயம், அவர் மூச்சோடு இழைந்து கற்பனையில் எழுந்த தெய்வ கீதத்திற்குச் சுருதி கூட்டியது.

“குற்ற மனப்பான்மை நம்மிடத்திலும் இருக்கிறது என்கிறீர் कना?”

உடைமாற்றிக் கொள்ளும் போது, திடீரென்று யாரோஉள்ளே வந்து விட்டாற் போன்ற ஒரு கணநேரத் திகைப்பு.

கேள்வி கேட்ட பாஸ்கரனை ராகவன் ஊடுருவிப் பார்த்தார். எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கிறான் இந்தப் பையன்? அவன் உடம்பில் பொலியும் ஆண்மை அவருக்கு ஏதோ விரசமாகப் பட்டது. பாஸ்கரன், பெண்கள் பக்கம் நோக்கினான். ஆசிரியர் கூறுவதைத் தான் புரிந்து கொண்டிருப்பதை மற்றவர்களும் அறிய வேண்டுமென்ற ஆசையோ?

”ஆமாம்!” அளவுக்கு மீறிய அழுத்தத்துடன் சொல் வெளிப்பட்டது. ஒரு வேளை உண்மையை ஒளிவு மறைவில்லாமல் கூறுகின்ற தர்ம ஆவேசமா?

”நம் நாட்டிலும் இப்பொழுது ‘பச்சை’த் தர புஸ்தகங்கள் ஏராளமாக வருகின்றனவே” இதை எப்படி முடிப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

“ஆமாம், அதைப்பற்றி என்ன?”

”வந்து….நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” நிருபர் பாணியில் அமைந்திருந்தது அவன் கேள்வி,மாணவ மாணவிகள் முகங்களில் இளநகை!

“கலையில் ஆபாசம் இல்லை என்பது என் வாதம். ஆனால் ஆபாசத்தை கலையாக்கக் கூடாது!’

லதா இருக்கும் இடத்தை ஒருவிநாடி அவர் திரும்பிப் பார்த்தார். முத்தாய்ப்பு வைத்தாற்போல் தான் பேசிய பேச்சு அவள் முகத்தை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. வியப்பில் மலர்ந்த முகம், அவர் நெஞ்சில் நிலவொளியை வாரியிறைத்தது. அந்த கணநேர இன்பம்

நித்தியத்துவத்தின் நெடும் போக்காய் விரிந்து அவ்வின்பத்தின் குணமற்ற சுகத்தெதிரே, உலகத்தில் வேறு எதனையும் அர்த்தமற்றதாக்கியது.

தான் பேசியதெல்லாம் பொய், வரட்டுத் தத்துவங்கள்! இந்தக் கணம் தான் நிரந்தர உண்மை. கணந்தோறும் மாறும் செக்கர் வானத்தின் வண்ண வியப்புகள் போல், வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் புதுப்புது கற்பனைகளை தந்து, வாழ்க்கையையே ஓர் இயற்கை ஓவியமாக்கக் கூடாதா?

அடக்கப்பட்ட உணர்ச்சிகளுடன், கல்விப்பட்டங்கள் சூட்டியுள்ள பண்பாட்டு முக மூடியைப் போட்டுக் கொண்டு, போலி வாழ்க்கை நடத்துவது இயற்கைக்கு விரோதம்!

தான் பெற்றுள்ள பட்டங்களும், கௌரவமும் நாசமாய்ப் போகட்டும். பூமியின் உச்சியில் இருந்து கொண்டு அண்ட பகிரண்டம் யாவும் எதிரொலிக்கக் கூவவேண்டும். “நான் தெய்வமல்ல… நான் தெய்வமல்ல.. மனிதன்தான்! லதா… லதா”

மணி அடித்தது. வெளியே ஓடத் தெரிந்த தெய்வத்தை ஓடாமல் மீண்டும் இருத்தியது ஆலய மணியோ!

* * *

ராகவன் வகுப்பைவிட்டு வெளியே வந்தார். இரண்டு மூன்று மாணவர்களும், மாணவிகளும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இவரைக் கண்டதும் சிரிப்பு, பேச்சு இரண்டும் நின்றன. வழிவிட்டு பணிவுடன் நின்றனர். தனக்குத்தான் சிரிக்க மறந்துவிட்டது என்றால், தான் செல்லும் இடமெல்லாம் சிரிப்புக்கு இடமில்லையோ? மரியாதை, பணிவு!

எல்லாம் அழிந்தொழியட்டும்! மாணவர்களே, மாணவிகளே! சிரியுங்கள், சிரியுங்கள். எல்லோருமாகச் சிரித்து மகிழலாம்.

அவர் தன் அறைக்குச் சென்று உட்கார்ந்துகொண்டார். ஜன்னல் வழியே விளையாட்டு மைதானத்தை நோக்கினார். கால் பந்தும், இளமையும் போட்டி போட்டுக்கொண்டு துள்ளித் துள்ளி மகிழ்ந்தன. இதைப் போல் தான் என்றாவது விளையாடியதுண்டா? எப்பொழுது பார்த்தாலும் படிப்பு, படிப்பு! இளமைப் பருவத்தை எங்கோ காணாமற் போக்கிவிட்ட மனநிலை! இல்லை, ஒரு வேளை அது இப்பொழுதுதான் தன்னை நாடி வந்திருக்கின்றதோ?

“சார்…சார்” அவர் திரும்பினார்.

லதா!

அப்பொழுது ஜன்னல் வழியே வீசிய மென் காற்று அவள் நெற்றியில் சுருண்டு கிடந்த ஓரிரண்டு குழல்களை அலைத்துக் கொண்டிருந்தது. குறும்பு செய்யும் குழந்தைகளைப் பரிவுடன் தடவி விலக்குவது போல், அவள், நெற்றியில் விழுந்த கற்றைகளை ஒதுக்கித் தலையைக் கோதிக் கொண்டு அவரருகில் வந்து நின்றாள்.

அவருடைய அவள் தன்னருகில் நிற்கின்றாள் என்ற நினைவே அவருக்கு ஸ்பரிச சுகத்தை லாகிரியாக ஊட்டியது. அது அணு அணுவாக உடம்பின் ஒவ்வொரு பாகத்திலும் பரவி, மின்சாரமெனப் பாய்ந்து, இன்ப அதிர்ச்சியில் அவர் தன்னைக் கண்டுதானே மருளும்படி செய்தது. அவர் நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

“என்னம்மா வேண்டும்?”

“உங்களை ஏதேதோ கேட்க விரும்புகிறேன். ஆனால் உங்களைப் பார்த்தால் என்ன கேட்பது என்றே தெரியவில்லை”.

என்ன சொல்லுகிறாள் இந்தப் பெண்? ஒருவேளை.. ஒருவேளை.. பேராசிரியர் ராகவனின் மனச்சாட்சி, மனத்தில் ஏற்பட்ட ஐயத்தின் வித்தை வளரவொட்டாமல் தடுத்து அழுத்தியது.

“என்ன கேட்க விரும்புகிறாய்” எப்படித்தான் தன்னால் இயற்கையாகக் கேட்க முடிந்ததோ? இயற்கையாகக் கேட்பதற்கு தான் செய்த முயற்சியின் அவஸ்தை, குரலில் நிழலிட்டிருக்குமோ.

“மனிதனுக்கு வாழ்க்கையில் ஓர் இலட்சியம் வேண்டும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

“அப்படியென்றால் ? நீ கேட்பது எனக்குப் புரியவில்லை..!”

“அதாவது, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை கொண்டே வாழ்வது, அது நிகழக் எதிர்பார்த்துக் கூடியதாயிருந்தாலும் சரி, அல்லது நிகழ முடியாவிட்டாலும்சரி, அப்படி வாழ்வதுதான் விவேகம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“விவேகம் என்று சொல்ல முடியாது. விவேகமாக வாழ்கின்றவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு எதை அளித்திருக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு திருப்தியுடன் வாழ்வார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டே வாழ்க்கை முழுவதையும் நடத்துவதுதான் இலட்சியத்தை நோக்கிய பிராயணம். ஒவ்வொருவருடைய சிருஷ்டி இரகசியம் அவரவர் எதனை எதிர்பார்க்கின்றோம் என்று தெரியாமல், ஆனால் எதிர்ப்பார்ப்பது உண்மையாக வாழ்வதுதான்.”

“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை…

“நான் சொன்னவற்றை விட, சொல்லாதனவற்றில் தான் அதிக அர்த்தம் இருக்கிறது!”

“அப்படியென்றால்”

அதுதான் என் சிருஷ்டி இரகசியம்!”

லதா அவரை உற்று நோக்கினாள். அவர் என்ன பேசுகிறார்? அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சிருஷ்டி இரகசியம் என்று அவர் எதனைக் குறிப்பிடுகிறார்? அவள் மனம் குழம்பியது. திடீரென்று அவள் குழந்தைத்தனமாகக் கேட்டாள்: “என் சிருஷ்டி இரகசியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா சார்?”

அவளுடைய சிருஷ்டி இரகசியம் ! அவர் உள்ளத்தில் திடீரென்று ஒரு மின்வெட்டு. தன்னுடைய சிருஷ்டி இரகசியமும், அவளுடைய சிருஷ்டி இரகசியமும் சந்திப்பில், சங்கமத்தில் இடையீடில்லா இயக்கத்தில், இறப்பும் எதிருமறியா நித்யநிகழ்ச்சியின் தொடர்ச் சியில் ஒன்றி அடங்கினவோ?

யுகங்களின் தொடக்கத்தில் சக்தி சிவனைப் பார்த்துக் கேட்ட கேள்வி இதுதானோ! ‘திட்டிக் கதவும் திறந்து திறவுகோலைக் கண்ட மகிழ்ச்சிதானோ, தன் ஊனை, உயிரை, உருக்கி இசையாய்ப் பெருகுகின்றது!உவகை சாம்ராஜ்ஜியத்தின் பெரு மயக்கத்தில் ஆழ்ந்து, அவர் தன்னை மறந்து, தானில் தெளிந்து…. அவர் கண்கள் தாமாகவே மூடின.

விண்வெளிக்கப்பால் எங்கோ பறந்து கொண்டிருந்த செயற்கைக் கிரகம் திடீரென்று பூமிப்பரப்பில் இறங்கி தவிடு பொடியாயிற்றோ! “சார்…சார் “அவர் பேராசிரியர்! தத்துவத்திலும் இலக்கியத்திலும் பட்டங்கள் பெற்று, எட்டி நின்று உலகிற்கு ஒளியைத் தரும் கதிரவனைப் போல் ஒதுங்கி நின்று உபதேசமளிக்கப் பிறந்த குரு | கண்ணியத்தின் எல்லை/ பண்பாட்டின் உருவகம்! கல்விச் சிலுவையில் அறையப்பட்ட தெய்வம்! அவர் கண்கள் திறந்தன.

“தூக்கம் வருகிறதா சார்”?

“இல்லை, கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. அவ்வளவு தான். நீ என்ன கேட்டாய்?”

”ஒன்றுமில்லை. நான் பிறகு வருகிறேன்.”

* * *

வீட்டிற்குச் சென்ற ராகவனுக்கு வீட்டின் தனிமை அவர் ஆத்மாவின் தனிமையை உணர்த்திற்று, யாவரும் அவரை எட்டி நின்று வணங்குகிறார்களேயன்றி, அவருடன் நெருங்கிப் பழக வில்லை. கர்ப்ப கிருஹத்திலுள்ள தெய்வத்தோடு அத்யந்த சிநேகம் யாருக்குண்டு? அன்றாடக் கடமைகளுக்குப் பிறகு இரும்புக் கதவை அடைத்து தாளிட்டுச் சென்றுவிட்டால், தனிமையையும் இருளையும் தவிர தெய்வத்திற்கு வேறு துணை ஏது? மேதைப் பட்டம் சூட்டப்பட்டு தனித்து வாழும் அவருக்கும் உலகத்திற்குமிடையே இரும்புத்திரை! தனிமை இயற்கைக்கு விரோதம்! ஆகர்ஷணம் இயற்கை நெறி!

ஆகவே … தான் மனம் விரும்புகிறபடி செய்துவிட்டால்?

“கண்ணியம் மிகுந்த பேராசிரியர் ராகவனைப் பார்த்த பிறகுதான் கண்ணியத்தின் பொருள் தெரிகின்றது.”

“கல்வி, பண்பு இவற்றின் உருவமாக விளங்கும் டாக்டர் ராகவனைப் பார்த்தால், வேத கால ரிஷிகளின் நினைவு நமக்கு வருகிறது”

“நம்மமைப் போன்ற சாதாரண மனிதர்களைக் கவர்கின்ற அற்ப உணர்ச்சிகளால் பாதிக்கப்படாமல், கர்மமே உருவாய் முனிவரைப் போல் வாழும் பேராசிரியர் ராகவன் ஆன்மீக ஒளியில் விவேகாநந்தருக்கு இனையானவர் என்று சொன்னால் மிகையாகாது!”

அறையின் எல்லா திசைகளினின்றும் அவருக்கு வழங்கப்பட்ட, அவர் இதுவரையில் பழகிவிட்ட பாராட்டு உரைகள் ஒலித்தன. ஆம்… அவர் தன் மனம் விரும்புகிறபடி செய்துவிட்டால் இவை எல்லாம் ஒரு நிமிஷத்தில் அடங்கிவிடும்.

சாதாரண மனிதன் தன் விருப்பப்படி எது செய்தாலும் உலகம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அவர் உலகம் தானாகவே கற்பித்துக் கொண்ட தெய்வம். அவர் உலகம் எது தவறு என்று கருதுகின்றதோ, அதைச் செய்துவிட்டால், தவறாக எடை போட்டதன் காரணமாக தன் மீதுள்ள கோபமும் சேர்ந்து அவர்மீது எழும் என்பது இயற்கை. ஏமாற்றிவிட்ட தெய்வம் தான் உலகத்தின் முதல் எதிரி!

உலகத்தைத் திருப்தி செய்யவேண்டும் என்ற பொறுப்பை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

‘லதா! அப்பெண் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறாள்? அவள் தன்னைக் கேட்கின்ற கேள்விகளைப் பார்த்தால்..

இவ்வெண்ணத்தின் குளுமையில் அவர் நெஞ்சு சிலிர்த்தது. ஒரு வேளை அவர்உள்ளத்திலும், இல்லை, உள்ளத்தின் அடித்தளத்தில் எழுந்திருக்கக்கூடிய அக்கருத்து, இரும்புத்திரையைக் கண்டு அஞ்சி, ‘அசட்டுத்தனம்’ என்று அவளாலேயே கண்டிக்கப்பட்டு நினைவின் மூலையில் ஒளிந்து கொண்டுவிட்டதோ! அவள் தன்னைக் கேட்கிற கேள்விகளுக்கப்பால் மனத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ‘குருக்ஷேத்திரத்தை’தன்னால் எப்படி அறிய முடியும்?

இரும்புத்திரை தகர்ந்து தவிடு பொடியாகட்டுமே! தெய்வம் என்று தன்னைப் புனித பீடத்தில் ஏற்றியவர்கள் ‘சைத்தான்’ என்று தன்னைத் தூற்றட்டுமே! பண்பாடும், தவப்பொலிவும் பெற்றிருப் பதாக ஏன் இந்த வேஷம்?

‘லதா லதா/’கூண்டை விட்டு வெளியேறிய சிட்டுக் குருவியின் சுதந்திரத்தோடு அவள் உருவத்தை கற்பனை செய்து பார்க்கலாம்.

அந்தக் கற்பனையின் சுகம் அவரை நித்திரையில் ஆழ்த்தியது.

* * *

அடுத்த நாள் அவள் கல்லூரிக்கு வரவில்லை. நாள் சூன்யமாக விரிந்தது. அதற்கு அடுத்த நாளும் அவள் வரவில்லை. தான் வாழ்ந்த ஐம்பது ஆண்டுகளும் வெறுமையாகிவிட்டனவோ? மூன்றாம் நாள் அவரே கல்லூரிக்கு போகவில்லை.

வீட்டில் அவர் தனிமையுடன் தனிமையாய் உறவாடி சூன்யத்தின் பெருங்கதியில் மூழ்கிப் படுக்கையில் கிடந்தார். உணர்ச்சிப் பெருவெள்ளத்தின் ஆதி அந்தமில்லாப் பெரு நடப்பில், உடல் அவருக்கு ப் பொருத்தமில்லா இடைச் செருகலாய்ப் பட்டது. வாழ்க்கையின் நித்ய கடமைகள் அவசிமற்றதாய், அர்த்தமற்றதாய் புலப்பட்டன. யார் யாரோ வந்தார்கள், பேசினார்கள். ஒரு டாக்டர் கூட வந்து மருந்து கொடுத்துவிட்டு போனார் போலிருக்கிறது. கல்லூரித் தலைவர் அவரை அழைத்து வந்திருக்க வேண்டும்.

முடிவு. ‘ஓய்வு…ஓய்வு….ஓய்வு !’ இதுதான் அவர்களின் ஏகோ பித்த

“தெய்வமே! என்னை ஊமையாக்கி விட்டாயே” என்று அவர் பொருமினார். இனிப் பொறுக்க முடியாது. அவள் வீட்டிற்குச் சென்று அவளைப் பார்க்கவேண்டும். அவளிடத்து எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும். அதுதான் முக்கியம்.

அன்று அவள் கேட்டாள்: ‘கலையின் அழகு இரகசியம் அதன் சிருஷ்டியிலா, அல்லது அதை ரசிக்கின்றவர்களின் அனுபவத்திலா?

அனுபவம் தான் உண்மை. சிருஷ்டி ஒரு சாதனம். அதன் பயன், முடிவு இலட்சியம் யாவும் அனுபவம். அனுபவம் அழியக் கூடியதன்று. காலத்தால் சாகாது. சிருஷ்டிகள் தோன்றித் தோன்றி மறையலாம். தன் அனுபவம் உண்மை, அவளிடத்துச் சென்று சொல்லிவிட வேண்டும் அவள் புரிந்து கொண்டால் போகட்டும். இல்லையென்றால் அதைப்பற்றி தனக்கு கவலையில்லை.”

அவர் படுக்கையினின்றும் எழுந்தார். என்ன இது? உருவெளித் தோற்றமா? லதா அங்கு வந்து நின்றாள். அழுது அழுது அவள் முகம் வீங்கியிருந்தது.

என்னமா இது? எதற்கு வந்தாய்?

அவள் கைகளினால் முகத்தை மூடிக்கொண்டு கேவிக் கேவி அழுதாள்.

ராகவன் எழுந்து சென்று அவள் தோள்கள்மீது கையை வைத்தார். அவள் அழுது அழுது பெருக்கிய கண்ணீர் அவருடைய ஆடைகளையும் நனைத்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்கு அழுகிறாள் இந்தப் பெண்?

“என்னம்மா, எதற்கு அழுகிறாய்?”

“சார்…” சொல்ல ஆரம்பித்தவள், மீண்டும் சொல்ல முடியாமல் திணறினாள்.

“என்னம்மா என்ன, நடந்தது ? சொல்லேன்!”

“நீங்கள்தான் நான் கண்ட தெய்வம்! கண்ணியமே உருவான உங்களிடத்து எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. வேண்டாம். உங்களுக்குத் தெரிய வேண்டாம். ஏதோ அசட்டுத் தனத்தினால் வந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்!”

அவள் திரும்பிப் போக முற்பட்டாள்.

ராகவன் சென்று, அப்பெண்ணை தோள்களைத் தொட்டு திருப்பினார்.

”என்ன சொல்ல வேண்டுமோ, சொல்லிவிடு. உணர்ச்சிகளை அடக்கி வைத்துக் கொள்வது பாவம்…”

அழுகையை நிறுத்திவிட்டு லதா கீழே குனிந்தவாறு செயலற்று நின்றாள்.

“தெய்வத்தின் முன்னால் செய்த தவறுகளைச் சொல்லி அழ உரிமையுண்டு. தவறு செய்துவிட்டேன். பாஸ்கரன் ஆடவன்.ஆனால் பெண்ணைத்தான் பாவம் எல்லாம் சேரும். சார் என்னைப் பார்க்காதீர்கள். உங்கள்புனித உருவத்திற்கு முன்னால் நிற்கக்கூட எனக்குத் தகுதியில்லை. ” அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

பேராசிரியர் ராகவன் செயலற்று நின்றார். மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி அவர் நினைவுக்கு வந்தது. அவர் கால் இடறி விழப் போனார். லதா அவரை தடுத்து நிறுத்தினாள். ஆனால் இப்பொழுது அவளறியாமலேயே அவருக்காக அவள் செய்துவிட்ட தியாகம், மீண்டும் அவரை தெய்வ பீடத்தில் இருத்தியது.


Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.