ஒரு கப் காபியிலிருந்து தொடங்கிய வாசிப்பு

காபி, டீ குடிக்கும் பழக்கமில்லாத எனக்கு, ஒரு கப் காபியோடு   அறிமுகமானவர் எழுத்தாளார் இந்திரா பார்த்தசாரதி.  எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், சிறுகதையின் துல்லிய காட்சிகளால் என்னிடம் பரிட்சயமானவர்.  

காபியை படுக்கையிலே தரிசனம் செய்துவிட்டு எழுந்திருப்பவர்கள் உண்டு. காபி கைக்கு வந்த பிறகே சூரியன் உதித்ததாக நம்புவோரும் உண்டு.  காபியில்லாத காலையென்பது மின்சாரம் இல்லாமல் இயங்க மறுக்கும் எந்திர நிலை என்று விளக்குவோரும் உண்டு.  இது ஒரு சாதாரண விருப்பம். அன்றாட வாழ்வின் மிகச்சிறிய தேவை.  இந்தத் தேவையின் பின்னால் புதைந்திருக்கும் பல அடுக்குகளை இந்தக் கதை நமக்குக் காட்டுகிறது.

பால்ய நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் பகுதி, கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடம்.  அவர்களின் உரையாடல் வெளியில் வேடிக்கையாக இருப்பதுபோலத் தோன்றினாலும், பல சமூகச் சிந்தனைகளை விதைத்தது. 

பால்ய நண்பர் அனந்து, வேதவித்துவின் வீடு ஒரு காலத்தில் புகழும் செழுமையும் நிறைந்திருந்ததை நேரில் கண்டு வளர்ந்தவர்.  அந்தப் பழைய நினைவுகளின் தொடர்ச்சியாக,  ராஜப்பாவை அணுகுகிறார் அனந்து.

ராஜப்பா வீட்டிலோ காபிக்கூடக் குடிக்க முடியாத வறுமை.  ஆனால், அனந்து ராஜப்பா செழுமையான வாழ்வில் வாழ்வதாக நினைத்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அனந்துவின் இந்த நினைவைக் கலைக்க ராஜப்பாவிற்கு மனம் வரவில்லை. தன் வறுமையைச் சொல்லி இரக்கத்தைச் சம்பாதிக்க விருப்பமில்லை.  அனந்துவிடம் மறுத்துப் பேசாமல் அவரின் கற்பனையோடு ஒத்துப் போகிறார். 

பிறர் முன் தன் மரியாதையை இறக்கி வைக்கத் தயங்கும் மனித மனத்தை இந்தக் கதை அமைதியாக வெளிப்படுத்துகிறது. பொருளாதாரச் சரிவு என்பது வெறும் பணக்குறைவாக அல்லாமல் அந்த வீட்டில் உள்ள உறவுகளின் தொனியையும் மாற்றி விடுகிறது என்பதை இக்கதையில் காணலாம். இக்கதை ராஜப்பாவின் தனிப்பட்ட நிலையை எடுத்துரைத்திருந்தாலும், அவர் சார்ந்த சமூகத்தின் கடந்தகால வரலாறு மற்றும் இன்றைய நிலைப்பாடு புலப்படுகின்றது. 

இந்த அமைதியான வெளிப்பாடு, இவருடைய சிறுகதைகளின் ஆழமான இலக்கியத் தன்மை. ’’பெருமாளுக்கு காலையில்  காபி நைவேத்தியம் பண்ணக்கூடாதா’ போன்று பல இடங்களில் புன்னகைக்கவும்  வைத்தார்.

மரபு, பெருமை, அடையாளம், நினைவுகள் இவற்றையெல்லாம்  தாண்டி, இறுதியில் மனிதன் தன் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக   யாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அந்த உண்மையை இக்கதையில் ஆர்ப்பாட்டமின்றி ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த ஒரு கப் காபி காலத்திற்கும் நம்மோடு கலந்திருக்கும்.

”நான் யார் தெரியுமா? நானும் ரெளடிதான்” என்று வலம் வருவர் சிலர். ஆனால் அடிப்படையில் பலவீனமானவர்களாக இருப்பர்.  புரிதலற்றவற்களாகவும் இருப்பர். இப்படியான மனிதரைச் சந்திக்க நேர்ந்தால் அறத்தோடு எப்படி ஒருவன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை “அவஸ்தைகள்” சிறுகதை உணர்த்தியது.

அவஸ்தைகள் என்றதும் ரயில் பயணம் கண்களில் காட்சியாக விரிகிறது. இந்த ரயில் பயணம் வாழ்க்கைப் பயணம் போன்றது. மனிதர்கள் தங்களை எப்படி மேடையேற்றிக் கொள்கிறார்கள் என்பதை இந்தப் பயணத்தில் காணலாம். ஆசிரியரும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் இடத்தில் கர்வம் பொங்கி வழியும் வடஇந்தியப் பிரமுகர் ரவி சங்கர் மிஸ்ரா அமர்கிறார். 

“உலகத்தைப் பந்தாகச் சுற்றி தம் குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல்” இருக்கிறார் அந்த வடஇந்தியப் பிரமுகர் என்று இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டிருப்பார். இந்த நக்கல் புன்னகைக்க வைக்கிறது. இந்த நக்கலுக்குள்தான் ரவி எல்லாரையும் கையில் போட்டுக் கொண்டு, உலகை மிகவும் அலட்சியமாகப் பார்க்கும் பார்வை வெளிப்பட்டது.  அவர் அமர்ந்திருக்கும் இருப்பிடத்திற்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பழக்கூடைகளைப் பாதுகாக்க தமிழ்ப் பணியாளார்கள் கை கட்டி நிற்பார்கள். அதிகாரம் மனிதரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதைக் காணலாம். 

வேறு ஒரு இளைஞன் அந்த ரவி அமர்ந்திருக்குமிடம், தான் முன்பதிவு செய்த இடம் என்றான்.  “ரெயில் வே போர்டு மெம்பர்” என்று சொல்லி அந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் அந்த இளைஞனை எதிர்த்தார் ரவி. தன்னை ஒரு கவிஞராக, டாக்டராக, ஜோசியராக என்று பல பரிமாணங்களைக் கொண்டவராக எல்லோரிடமும் விவரித்தார். 

என் முகத்திலிருந்த புன்னகை சற்றும் குறையாமல் இந்தக் கதையைப் படித்து முடிக்க நேர்ந்தது. “மொரார்ஜியிடம்… இந்திராகாந்தி என்னைத் தேடிக் கொண்டு வந்தார்” என்று பொய்களை அடுக்கிக் கொண்டு சுயபுராணம் பேசும் இடம் நகைச்சுவையின் உச்சம்.  தொடர்ந்து பொய் சொன்னால் மனம் அதை உண்மை என்று நம்புத் தொடங்கி விடும். அப்படியாகத்தான் இவர் வெளித் தோற்றத்தில் கர்வமாகத் தன்னைக் காட்டிக் கொள்வார். 

மேலும், தான் அணிந்திருந்த ஒன்பது மோதிரத்திற்கு “ஒன்பதுதான் இறைவன்” என்று சொல்லி, “நவக்கிரக பூஜை செய்யுங்கள்”, “நவரத்தினக் கல் மோதிரம் அணிய வேண்டியது உடல் நலனுக்கு மிக அவசியம்” என்ற தத்துவ விளக்கம் கதையின் நகைச்சுவைத் தன்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. 

மனிதன் தன் உடல் அவஸ்தையின் முன், தன் கர்வத்தை இயல்பாகவே இழந்து விடுகிறான். அப்படியொரு ஆஸ்த்மா அவஸ்தையில் ரவி இருக்கும்பொழுது சுற்றியுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இக்கதையில் காணலாம்.

அவஸ்தை என்பது உடலின் அவஸ்தை மட்டுமல்ல. ஆன்மாவின் அவஸ்தையும் கூட. தன்னைப் பற்றி கட்டிக் கொண்டிருக்கும் போலி மேடைகளின் அவஸ்தை. 

மற்றவர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்த மனிதன், சிக்கலில் அகப்படும் பொழுது, உலகம் அவரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும். கிண்டலும் கேலியும் செய்து மேலும் மரணிக்க வைக்கும். இன்றைய சமூக வலைத் தள உலகில், தனிமனித அவஸ்தைகள் கூட தயவு தாட்சணையின்றி பொது வெளியில் கேலிக்குரியவையாக மாற்றப்படுகின்றன. ஆனால் எந்த சூழ்நிலையிலும் மனித்தன்மையை கைவிட்டு விடக்கூடாது என்பதை நேர்த்தியாக இக்கதையில் காட்டியிருப்பார் ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.

 “அந்தணர் என்போர் இந்திய–அமெரிக்கப் பிரஜைகள்” சிறுகதை என்னைக் கவர்ந்த மற்றுமொரு சிறுகதை. இந்தச் சிறுகதையின் தலைப்பே இலக்கியநயமும், நக்கலும், ஒரு சமூகத்தைப் பற்றிய அடையாளத்தையும் காட்டியது. 

திருக்குறளில் “அந்தணர் என்போர் அறவோர்” என்ற குறள், நீத்தார் பெருமை அதிகாரத்தில் இடம் பெற்றிருக்கின்றது.  அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு, கருணையோடு, அறநெறியில் வாழும் சான்றோர்களே ‘அந்தணர்’ என்றும், ‘அறவோர்’ என்றும் போற்றப்படுவர் என வள்ளுவர் கூறுகிறார்.  இந்தக் கதையில் தேசபக்தி என்ற பெயரில் நடத்தும் அதிகாரத்தை, வியாபாரத்தை நையாண்டியுடன் காட்டியிருப்பார். 

பணம், அதிகாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவை அனைத்தும் கூடினால் என்ன நடக்கும் என்பதை இக்கதையில் காணலாம்.  முப்பது வருடங்களாக அமெரிக்காவில் வாழும் ராமானுஜம் தன் பூர்வீகக் கிராமத்தைத் தத்தெடுக்கிறார். அதை வளமான ஊராக மாற்ற முன்வருகிறார். சுற்றியுள்ளவர்கள் அவரைத் தேசப் பக்தர்கள் என்று புகழ்கிறார்கள். அதன் பின்னால் தொழிலதிபர்களின் கனவு, அதிகார மொழி ,அரசியல்வாதிகளின் பலம் அனைத்தும் இருந்தது. ஆனால், ஒரு கிராமத்தின் உண்மை வாழ்க்கையை அவர்கள் உணரவில்லை. 

”ஏழ்மை ஒழிப்பு கூட விருந்து மேசை உரையாடலாக மாறுகிறது” என்று நையாண்டியுடன் சூழ்நிலையை விளக்கியிருப்பார் ஆசிரியர். “இந்தியக் கிராமங்கள் மட்டுமல்லாமல் சென்னை நகர வீதிகளையும் யாராவது தத்தெடுத்துக் கொண்டால் தேவலை” என்ற நையாண்டி, இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கூர்மையான பார்வையை வெளிப்படுத்துகிறது.

கிராமம் என்பது வரைபடத்தில் இருக்கும் பெயர் அல்ல. வாழும் மனிதர்களின் வாழ்க்கை. வாழ்க்கையைப் பார்க்காமல் முதலீட்டுத் திட்டம் போடுவது மேட்டிமைத்தனம் என்பதை “அந்தக் கிராமமே இல்லை” என்ற ஒரு வாக்கியத்தில் காட்டியிருப்பார். 

இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகளை வாசித்தப்போது, ஒரு கப் காபி, ஒரு ரயில் பயணம், ஒரு கிராமத் தத்தெடுப்பு இவற்றின் தத்துவங்கள் மனதை நிறைத்தது.  மனிதனின் பெருமை, வறுமை, போலித்தனம், கருணை, சமூகத்தின் பங்கு இவற்றையெல்லாம் காண முடிந்தது.

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைகள் கோபத்துடன் கூடிய கூச்சலாக வருவதில்லை.  அது அறிவார்ந்த புன்னகையாக வருகிறது.  படித்து முடிக்கும்முன்னே சிந்திக்க வைக்கிறது. 

நாவல், நாடகம், கட்டுரை எனப் பல வடிவங்களில் இயங்குகிறார். ஆனால், வடிவம் எதுவாக இருந்தாலும் இவரின் சிந்தனையின் செறிவு மாறாமல் தென்படுகிறது.

என்னால் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைகளை வெறும் கதைகளாக மட்டுமேப் படித்து நகர முடியவில்லை.   மனிதன் தனிப்பட்டவனாகத் தோன்றினாலும், அவனது பலவீனங்களையும், அவனைச் சுற்றிய குடும்பம், சமூகம், காலம் ஆகிய சூழல்களையும் புரிந்து கொள்ள வைக்கும் கண்ணாடியாக அவை இருக்கின்றன. 

ஒரு கப் காபியிலிருந்து தொடங்கிய இந்த வாசிப்பு, இறுதியில் மனித மரியாதை, அறம், சமூகம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு நீண்ட சிந்தனையாக என்னுள் தங்கிவிட்டது. 


சுபா காரைக்குடி

வட அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் சுபா காரைக்குடி, தமிழ் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, குறிப்பாக சிறுகதைகள் மற்றும் நாவல்களைத் தொடர்ந்து வாசித்து வரும் தீவிர வாசிப்பாளர். வட அமெரிக்காவில் ‘கதையாடும் முன்றில் வாசகர் வட்டம்’ என்ற இலக்கிய வாசகர் வட்டத்தை நடத்தி வருகிறார். ‘தேடலில் தொலைந்த வெயில்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருவதோடு, தமிழ் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த பல்வேறு முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.