பாலைவன இரவு முதலில் உடலை உடைக்கிறது. பிறகு நேரத்தை. கடைசியில், மனிதன் தன்னைத்தானே எந்த பெயரில் அழைத்துக்கொள்கிறானோ அந்தப் பெயரையே உடைக்கும்.
நெருப்பைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களின் முகங்கள் புகையினுள் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. காற்றில் உலர்ந்த சேஜ் இலைகளை எரித்த புகையின் வாசனை. வியர்வை. மணல். தூரத்தில் இரவு பறவையின் குரல். சேவியரின் வயிறு மெதுவாக ஏறி இறுகியது. உள்ளே ஒரு அமிலக்கொதிப்பு தொடங்கியிருந்தது. உடலின் எண்ணற்ற மயிர்க்கால்கள் செங்குத்தாக நீண்டு வாசல்களைத் திறந்து வைத்தன. புலன்கள் மிகக் கூர்மையாக இருந்தன. ஆனால் உள்ளே சிதறல் தொடங்கியிருந்தது. அவன் கையிலிருந்த சிறிய பசை போன்ற பச்சை உருண்டையைப் பார்த்தான்.
ஹிக்கூரி.
Lophophora williamsii.
அவன் நூற்றுக்கணக்கான முறை எழுதிய பெயர். ஆய்விதழ்கள். தரவுகள். நரம்பியல் விளைவுகள். அல்கலாய்டு அமைப்புகள். அந்த வார்த்தைகள் இப்போது வெறுமையாகத் தோன்றின. இந்தக் கள்ளி உயிரோடு இருந்தது. அதுதான் அவனை அமைதியிழக்கச் செய்தது.
அவன் அதை வாய்க்குள் போட்டான்.
கசப்பு முதலில் நாக்கைத் தாக்கியது. பிறகு தொண்டையில் நின்று கொண்டது . அதை உள்ள அனுப்ப ஹிக்கூரி தேநீர் . எல்லா எதிர்ப்பை மீறி உள்ள சென்ற உடன் ஓட்டுமொத்த உடலும் கசப்பை உணர்ந்தது. இதுவரை அவன் அறிந்த எல்லா கசப்புகளையும் விட இது மிக அதிகம். சில நிமிடங்களுக்குள் வாந்தி வந்தது. உடல் முழுவதும் பரவி இருந்த ஒன்று மெதுவாக வெளியே வந்தது.
குனிந்து வாந்தி எடுத்தான். மூக்கிலும் கண்களிலும் நீர் வழிந்தது.
அவன் அருகில் அமர்ந்திருந்த அனாலி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது வலது கண் வெண்மையாக இருந்தது. அதில் கருவிழிக்கான தடயம் இல்லை. மாலையில் அவளை சந்தித்த போது கருப்பு கண்ணாடி அணிந்து இருந்தாள்.
சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அவள் கண்ணின் நிறத்தை வெண்மையாக்கி இருந்தது. மற்றொரு கண் மட்டும் இருளில் விசித்திரமாகத் தெளிவாக இருந்தது. அது எல்லாவற்றையும் அலட்சியமாக அணுகியது.
சேவியரை பார்காமலேயே “நல்லது,” என்றாள்.
“உடல் முதலில் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.. உடல் என்ற எல்லை உடையும் போது உடலின் எல்லா வாசல்களும் திறக்கும்”
—–
இரண்டு மாதங்களுக்கு முன். பெர்லின்.ஜன்னலுக்கு வெளியே மழை.
இரவு இரண்டு மணி.
திரையில் திறந்திருந்த ஆய்வுக் கட்டுரை: Endocrine Variability Under Mescaline Exposure.
மேசையின் மேல் அவனது ரத்தப் பரிசோதனை. டெஸ்டோஸ்டிரோன் அளவு: 1,250.ng/dL. அதிகபட்ச அளவை விட 400 அதிகம். தோற்றுக் கொண்டே இருப்பது புதியதல்ல.
அவன் திரையைப் பார்த்தான். கடைசியாக சேமித்த தரவுகள் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதிலிருந்து போகும் திசை இப்போது அனுமானிக்க முடியாது.
லீனா பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்தாள். அவன் எழுந்து போய் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து கொண்டு கொஞ்ச நேரம் அங்கேயே நின்றான். தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குள் திரும்பினான்.
லீனா படுக்கையின் மீது குப்புறப் படுத்திருந்தாள். அவளது சுவாசம் சீராக ஏறி இறங்கியது. அவளது உடல் மொத்த கட்டிலையும் ஆக்கிரமித்தது போல் இருந்தது. அருகில் படுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் விரல்கள்.
அவளது மணிக்கட்டில்.
இறுக்கம்.
ஒரு கணம் மட்டும்.
லீனாவின் கண்கள் திறந்தன. அவன் கையை அலட்சியமாகச் விலக்கினாள். ஒரு வார்த்தை கூட இல்லை. மூச்சில் வெப்பம். மானின் அலட்சியத்தால் ஓநாய் அடங்கியது.
அவன் திரும்பிப் படுத்தான்.
கண்களை மூடினான்.
மணிக்கட்டின் சதை , அவன் விரல்களின் அழுத்தம் .அந்த இடைவெளியில் எஞ்சிய வெப்பம். அந்த கைகள் இனி எந்தக் காலத்திலும் அணைக்கப் போவதில்லை.
அவனால் தூங்க முடியவில்லை.
மீண்டும் கம்ப்யூட்டர் திரை முன் உட்கார்ந்தான். மழை இன்னும் கொட்டியது. கைகள் அசையாமல் இருந்தன. அந்தச் சிறிய அழுத்தம் இன்னும் உள்ளங்கையில் எங்கோ உறுத்திக்கொண்டே இருந்தது.
மின்னஞ்சல் வந்தது.
“உங்கள் ஆய்வு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் முதலில் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். உங்கள் கருவிகள் வேண்டாம். உங்கள் நிழலை மட்டும் கொண்டுவாருங்கள்.”
மனம் அங்கே போகக்கூடாது என்பதற்கான ஆயிரம் காரணங்களை பட்டியல் இட்டது .
அவன் பதிலாக “வருகிறேன்” என்று எழுதினான்.
—–
அடுத்த நாள் காலை அனாலி அவனைப் பாலைவனத்துக்குள் அழைத்துச் சென்றாள். கருப்பு கண்ணாடி அணிந்திருந்தாள். சூரியன் இன்னும் முழுவதும் எழவில்லை. மண் குளிராக இருந்தது.
“கீழே பார்,” என்றாள்.
மணலுக்குள் ஒரு சிறிய பச்சைப் பொத்தான். அதன் மேல் பூத்திருந்த மலர்கள்.
அனாலி அதன் முன் மண்டியிட்டாள். விஷிரிக்கா மொழியில் ஏதோ முணுமுணுத்தாள். சிறிய கத்தியால் மேற்பகுதியை மட்டும் வெட்டினாள். வேரை மண்ணில் விட்டாள். அவள் செய்கைகள் ஒரு வேட்டைக்குரிய லாவகத்துடனும் தியானத்திற்குரிய கூர்மையுடனுடனும் இருந்தன.
“ஏன் முழுவதையும் எடுக்கவில்லை?” என்று சேவியர் கேட்டான்.
“இந்த வருடம் மழை குறைவு,” என்றாள் அவள்.
“இன்னும் சில ஆண்டுகளில் இவையும் இருக்காது.”
உலகம் முழுவதற்கும் இப்போது ஹிக்கூரி தேவை .
அவள் மணலை விரலால் மெதுவாக மூடினாள். அப்போதுதான் சேவியர் அவள் கைகளைக் கவனித்தான். விரல் நுனிகளில் ஒரு பழைய ஆழமான வெட்டுக்காயம் . காயத்தின் தழும்பு வெண்மையாக இருந்தது . அவன் தன் கைகளைப் பார்த்தான். நடுங்கிய விரல்கள், இறுக்கிய கைகள். அவளுடைய காயத்துக்கும் அவனுடைய கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு கணம் அப்படி நினைத்தான்.
அது எப்படி வந்தது என்று அவளிடம் கேட்கவில்லை. கேட்கும் இடத்திலும் அவன் இல்லை.
—–
அந்த இரவு.
நெருப்பின் தணல் எங்கும் நிறைந்திருந்தது . நட்சத்திரங்கள். ஒன்றாக , நூறாக , கணக்கற்று நிறைந்திருந்தன. பாலையின் இரவு சமவெளியில் இருந்து வரும் ஒருவனை சமநிலை இழக்கச் செய்யும். எங்கும் பாடல்கள். மூச்சொலிகள்.
ஹிக்கூரி மெதுவாக மிக மெதுவாக உடலை எடுத்துக் கொள்ளத் தொடங்கியது.
முதலில் ஒலிகள் மாறின. நெருப்பின் சத்தம் நிறமாக, பின் இதுவரை கேட்காத இசையாக மாறிக்கொண்டே இருந்தன.
பிறகு நேரம்.
நேரம் உடைந்தது. காலங்கள் மாறின. மனித இனம் மொத்தமாக அழிந்தது. மீண்டும் பிறக்கப் போகும் உலகின் முதல் ஆணாக சேவியர் ஆடையில்லாமல் நின்று கொண்டிருந்தான்.
—
சேவியர் மீண்டும் பெர்லினில்.
ஆய்வகம். மங்கலான வெள்ளை வெளிச்சம். கண்ணாடி.
ரத்த மாதிரிகள்.
அவன் கைகள்.
ஆராய்ச்சியாளனின் கைகள்.
வேட்டைக்காரனின் கைகள்.
அவன் தனது கைகளைப் பார்த்தான். இன்னும் அதே கைகள். ஆனால் ஏதோ. விரல்களுக்கிடையே ஒரு சிறிய இடைவெளி. லீனாவின் மணிக்கட்டின் அகலம்.
—
காட்சி மாறியது.
நெருப்புக்குப் பின்னால் இரண்டு சேவியர்கள்.
ஒருவன் வெள்ளை ஆய்வுக் கோட்டில். கையில் குறிப்பேடு.
இன்னொருவன் நிர்வாணமாக. தோலில் வியர்வை.
ஆய்வுக் கோட்டுடன் இருந்தவன் குறிப்பேட்டைத் திறந்தான். வெண்ணிறமான பக்கங்களில் அவன் எழுதிக்கொண்டிருந்தான்.
மெதுவாக காகிதத்தில் ஈரமான கருமை.
ஈரம் எங்கிருந்து வருகிறது?
பேனா காகிதத்தில் உரசும் சத்தம்,கூரான ஆயுதம் ஒன்று எலும்பில் உராய்வது போல இருந்தது
தந்தையின் குரல். தேவாலயம் திரும்பும் வழியில், குளிரில், கைகள் இறுக , சேவியரின் விரல்கள் நசுங்கும் அளவுக்கு:
“உடலைக் கட்டுப்படுத்து. சரீரத்தினாலே தேவனை மகிமைப்படுத்த முடியும்.”
“அர்ப்பணிப்பு உள்ளவனே ஞானவான் “
ஆய்வக இரவுகள். மழை. ரத்த அறிக்கைகள்.
லீனா கையை விலக்கிக்கொண்ட அந்தச் சிறிய அசைவு.
—
ஈரம் பரவிக்கொண்டே இருந்தது. வெள்ளைக் கோட்டின் கை காகிதத்தைத் தொட்டது. விரல் நுனியில் கருமை ஒட்டியது. துடைக்க முயன்றான். எங்கும் பரவியது.
—
அனாலி அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளது ஒரே கண் அவனைப் பார்த்தது. இரக்கமில்லை. தீர்ப்பில்லை. சோர்வு மட்டும். பல வருடங்களாக ஒரே கதையை மீண்டும் மீண்டும் பார்த்த சோர்வு.
சேவியர் உடைந்து கதறினான் . ஹிக்கூரி உச்சம் அடைந்திருக்கிறது.
“என்னால் முடியவில்லை.”
அனாலி அவன் கைகளைப் பார்த்தாள்.
இன்னும் இறுகியிருந்தன.
“விடு,” என்றாள்.
“எதை?”
அவனை தோளில் சாய்த்துக் கொண்டாள்.
“உனக்கே தெரிந்திருக்கும்.”
—–
இரவு நீண்டது.
நடனம் நீண்டது , எல்லா வாசல்களும் திறந்த பின் வெற்றிடத்தை நிரப்ப காற்று வந்தது.
மீண்டும் அனாலி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
“இப்போது அது என்ன செய்கிறது?” என்றாள்.
சேவியர் கண்களை மூடினான்.
ஓய்ந்திருந்தது.
இறக்கவில்லை.
“ஓய்ந்திருக்கிறது,” என்றான்.
தூரத்தில் யாரோ இருமினார்கள்.
“நல்லது,” என்றாள் அனாலி.
சிறிது நேரம் கழித்து:
“நீங்கள் இதை முதலில் எப்போது எடுத்தீர்கள்?”
அனாலி நெருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என் தந்தை இறந்த இரவு.”
நெருப்புச் சத்தம் மட்டும்.
“அதற்குப் பிறகு நான் இதை எடுப்பதை நிறுத்தவே இல்லை.”
—–

விடியற்காலை. வானம் முதலில் சாம்பல். பின்னர் மஞ்சள். பின்னர் சிவப்பு.
சேவியர் தனியாகப் பாலைவனத்துக்குள் நடந்தான்.
ஒரு சிறிய ஹிக்கூரி. இப்போதுதான் முளைத்திருந்தது. அதன் மேல் பனித்துளி. அதன் மையத்தில் ஒரு மலர் மொட்டு . இதழ்கள் இன்னும் முழுவதுமாக விரியவில்லை. ஆனால் வெளிர் இளஞ்சிவப்பு ஏற்கனவே தெரிந்தது. பாலைவனத்தின் பொன் மஞ்சள் மணலுக்கு நேர் எதிரான நிறம். ஒரு சிறிய வெளிச்சம் போல.
அவன் அதன் முன் மண்டியிட்டான். கட்டைவிரல் தன்னிச்சையாக அசைந்தது.
அந்தச் சிறிய கள்ளி அவனுக்குள் ஒரு பசியை எழுப்பியது.
அளக்க.
பெயரிட.
பாதுகாக்க.
வைத்திருக்க.
அவன் மூச்சை இழுத்தான்.
கையை நீட்டினான்.
தொடவில்லை.
அந்தச் சிறிய இளஞ்சிவப்பு மொட்டு சூரிய ஒளியில் அமைதியாக இருந்தது. காற்று அவன் முகத்தைத் தொட்டது.
சேவியர் எழுந்தான்.
“Kuirasi.”
அவனுக்குப் பின்னால் நிழல் நீண்டிருந்தது. நிழல் அவனுடையதுதான். ஆனால் அவன் நடக்கத் தொடங்கியபோது, மணலில் இருந்த காலடிச்சுவடுகளைப் பார்க்காமல் இருக்க முயன்றான்.
நடந்துகொண்டிருந்தபோதும், அவனுக்குள் ஏதோ இன்னும் பார்த்துக்கொண்டிருந்தது. அளக்க விரும்பிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில், அதிலிருந்து விலகிச் செல்லவும் விரும்பியது.
மணல் அவன் கால்களுக்கு அடியில் நகர்கிறது. ஒவ்வொரு அடியிலும் சிறிது சறுக்குகிறது.
எந்தப் பசி மெதுவாக மற்றொன்றை விழுங்கிக்கொண்டிருந்தது என்பதை அவனால் அறிய முடியவில்லை.
பின்னால் பாலைவனம் மெதுவாக ஒளிர்ந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
