பழத்தோட்டத்தில் ஒரு காவல்

ஆங்கிலம்    : அம்ரிதா பிரீதம்

தமிழாக்கம் : தி.இரா.மீனா

“கங்கு தூங்குகிறாயா?”

“இல்லை, அங்கிள்.”

“பிறகு ஏன் கட்டிலை நிழலில் இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் இந்தச் சூட்டில் உன்னை வதைத்துக் கொள்கிறாய்?”

“சரி அங்கிள்” என்று சொல்லி, கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து கட்டிலை நாவல் மரத்தினடியில் இழுத்துப் போட்டான். கட்டில் காலின் குறி அவன் வெற்று முதுகில் வெளிப்படையாகத் தெரிந்தது. முதுகைக் கையால் நீவிக் கொண்டு திரும்பவும் படுத்தபடி,“ அங்கிள், இங்கே வந்து உட்காருங்கள்.” என்றான்.

அவர் நிமிர்ந்து நாவல் மரத்தைப் பார்த்தார். அந்த நீலக் கொத்து அவர் சரும நிறத்தில் தெரிந்தது. ஒருவிதமான குழப்பத்தோடு அவர் கட்டிலில் உட்கார்ந்தார்.

“விளிம்பில் உட்காராதீர்கள். இந்தப் பக்கம் வாருங்கள்.” என்று கங்கு வற்புறுத்தினான்.

“பரவாயில்லை, கங்கு. இந்த முறை பழங்கள் மிக அதிக அளவில் பழுத்திருக்கின்றன. வெறுமனே அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மனம் லேசாகிவிடும். மிக இனிப்பாக இருப்பதால் இந்த முறை கொட்டை இருப்பதே நமக்குத் தெரியாது…”

“ஆமாம், அங்கிள்.”

“இப்படி பழுத்திருப்பதை பல வருஷங்களுக்குப் பின்னால் நான்  பார்க்கிறேன். பத்தாண்டுகளுக்குப் பிறகு என்று நினைக்கிறேன்…”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அங்கிள்.”

“அப்போது உனக்குப் பதினாலு ,பத்னைந்து வயதிருக்கலாம். அந்த நாட்களில் மரம் மிக கனத்திருக்கும்…மிக மிக கனமாக.. அப்போது உன் அப்பா உயிருடனிருந்தார். எனக்கு ஞாபகம் இருக்கிறது…”

      “பழங்களின் ராஜா அங்கிருக்கிறான்!

      என்னுடன் ராஜாவை அழைத்து வந்திருக்கிறேன்,

      அளவீட்டிற்கான ஒரு துண்டு

      ராஜாவும் புதையலும்..”

நாவல் பழங்களின் பருவ காலத்தில் தாள லயத்தோடு அப்பா இதைப் பாடுவதை அவன் நினைத்துப் பார்த்தான். வேறொன்றும் அவனுக்கு நினைவில் வந்தது. அந்த மென்மையான நீண்ட விரல்கள். அவனை எழுப்பி விடுவது போல முடியைக் கலைத்தன.

கங்கு திடுக்கிட்டவனாய் அரைத் தூக்கத்திலிருந்து விழித்தான். யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமில்லை. ஒரு மாயைதான்.

மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். அது ஒரு சிறுமியில்லை என்று நினைத்தான். தாப்பி ஒரு மந்திரவாதி. அவள் ஒரு மந்திரவாதியாக இல்லா விட்டால், நினைவுகளால் இன்னமும் இப்படித் தன்னை இறுக்கமாகத் தழுவிக் கொண்டிருக்க மாட்டாள்… ஒவ்வொரு வருடமும் நாவல் பழங்கள் பழுக்கும் போதும், அவளுடைய ஞாபகங்கள் புத்துணர்ச்சி தருவதாக வந்து, பின் காயப்படுத்தி…

அப்போது அவளுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். கழுத்தில் சிவப்பு மணி மாலை போட்டிருப்பாள். முடியைக் கலைத்து, வலிக்கும்படி தலையைத் தட்டி அவனை எழுப்புவாள். அப்புறம் அவன் நாவல் மரத்திலேறுவான். அதிகச் சாறு இருக்கும் கருப்புப் பழத்தை அவள் பொறுக்குவாள். அதன் பிறகு அவனை இறுகக் கட்டிக் கொள்வாள். அந்த இறுக்கம் அவனது உடம்பில் ஏதாவது ஒரு சிறிய எலும்பை முறித்து விட வேண்டுமென்றும் அவன் படுக்கையில் கிடக்கும் போது அந்தச் சிறு பெண் நர்சாகத் தன் அருகில் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் அந்த நாட்களில் அவன் ஆசைப்பட்டிருக்கிறான். 

தன் எண்ணங்களுக்கு பயந்து, அவன் எழுந்து உட்கார்ந்தான்.

“என்ன ஆயிற்று?” முதியவர் கேட்டார்.

“மூட்டைப் பூச்சி” எரிச்சலாகச் சொல்லி விட்டு, படுக்கையில் தேடுவது போல நடித்தான்.

“படுக்கையிலா? அதுவும் இந்த நாட்களிலா? உளறாதே!” என்று நம்ப முடியாதவராக அவர் சொன்னார்.

“கடவுளுக்குத்தான் வெளிச்சம்.” தன் கவனத்தை மாற்ற விரும்பி எழுந்து உட்கார்ந்தான்.

“நான் எழுந்து கொள்கிறேன். பையன்கள் தூங்கி இருப்பார்கள். பறவைகள் நாசம் செய்து விடும்.” சொல்லி விட்டு எழுந்தார். ”உனக்குத் தெரியுமா கங்கு? இந்த முறை இதில் நான்காயிரம் ரூபாய் போட்டிருக்கிறோம்… அப்படியென்றால் சாக்கு சாக்காகப் பணம்… சாக்கு சாக்காக…”

“சாக்காகவா?” கங்கு சிரித்தான். ” அப்படியென்றால்.. என்ன சொல்கிறீர்கள்? ஒரு சின்னப் பர்சே போதுமே…”

“புரிந்து கொள் கங்கு… பேப்பர் நோட்டை விட வெள்ளிக் காசுகள் என்னும் போது அவை சாக்குகளில் நிரப்பப்பட்டு…”

“அதற்கும் கூட ஒரு சாக்கு போதுமே..”

“ஆமாம், ஆனால் நாங்கள் பத்து பேர் பங்குதாரர்கள்…என்னும் போது ஒவ்வொருவரும் நானூறு மட்டுமே, இல்லையா? அதிகமில்லை…”

“சரி, சரி. அந்த ஒப்பந்தம் உயர்வானது என்று நான் எப்போதாவது சொல்லி இருக்கிறேனா?”

“நூற்றுக்கணக்கான மரங்கள் இருக்கின்றன…நாம் போடும் தொகைக்கு குறைந்தது இரண்டு மடங்காவது அதிகம் கிடைக்க வேண்டும், இல்லையா?”

“ஆமாம், அங்கிள். இப்போது ஒரு ரூபாய்க்கு ஒரு சீர் என்று விற்கிறார்கள். சில சமயங்களில் கொஞ்சம் அதிகமாகவும் கூட.”

கங்குவின் பேச்சு உற்சாகமானதாக இருந்தது. பணம் இரட்டிப்பாகும் போது யாரும் எதுவும் சொல்வதில்லை. ஆனால் முதியவர் மனம் நிறைந்திருந்தது. தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த முதுமையால் அவர் சிலவற்றை இழந்திருந்தாலும், மிக வேகமாக மரங்களை நோக்கி நடந்தார்.

கங்கு திரும்பவும் படுத்துக் கொண்டான். தாப்பியின் ஞாபகங்கள் அவனுக்குள் படர்ந்து அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டன. ஒரு எலும்பு, ஒரே ஒரு விலா எலும்பு உடைந்திருந்தாலும், தாப்பி பக்கத்தில் உட்கார்ந்து அந்தக் கட்டை நீவிக் கொண்டிருந்திருப்பாள்.

“கங்கு, தயவு செய்து கிளையை ஊஞ்சல் மாதிரி கட்டித் தா. நான் ஆட வேண்டும்.”

“அசட்டுப் பெண்ணே! நாவல் மரத்தில் யாராவது ஊஞ்சல் ஆடுவார்களா?”

“ஏன் அதைச் செய்து பார்க்கக் கூடாது?”

“எதற்காகச் செய்ய வேண்டும் என்று சொல். நாவல் மரத்தின் கிளைகள் உறுதியானவை இல்லை…”

“நீ ஏன் அதற்காகக் கவலைப்பட வேண்டும்? என் தோளோ அல்லது காலோதான் முறிந்து போகப் போகிறது.”

“உன் தோளையும், காலையும் பற்றி எனக்கென்ன கவலை ? நீ ஊஞ்சலாடும் போது அந்தப் பழங்களுக்கு வரும் தொல்லை…”

அதைக் கேட்டுத் தாப்பி முகத்தைக் கோணிக் கொள்வாள். அப்போது கங்கு அவளைத்  தோளில் வைத்துக் கொண்டு மிக வேகமாகச் சுற்றுவான். தலை சுற்றி அவள் அலறுவாள். பீச் [Peach ] பற்றிய பாடலைப் பாடினால் உன்னைக் கீழிறக்கி விடுவேன் என்று ஒரு கண்டிஷன் போடுவான். 

“சரி, நான் பாடுகிறேன், பாடுகிறேன்” என்று மயக்கமாக பதில் சொல்வாள்.

      “பீச் மரமே,ஓ, பீச் மரமே

      அன்பாக உன்னை நாங்கள் வளர்த்தோம்

      பீச் மரமே,ஓ, பீச் மரமே

      பழத்தை அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள்

      எங்களுக்கு அவர்கள் விட்டுப் போனது கொட்டைதான்…”

பாடிக் கொண்டிருக்கும் போதே பாதியில் நிறுத்தி விடுவாள் “ அங்கே பார், உன்னுடைய நாவல் பழங்கள் அனைத்தையும் கிளிகள் சாப்பிடுகின்றன!” என்று சொல்வாள். கங்கு மரத்தை நோக்கி ஓடும் போது, தாப்பி கைகளைத் தட்டிக் கொண்டு பாடுவாள்.

     “ஒரு பையனை முட்டாளாக்கினேன்

     அவனுடைய ஒட்டகத்தால் முட்டாளாக்கினேன்

     அவனுடைய  குதிரையால் முட்டாளாக்கினேன்.”

இந்த ஞாபகங்கள்… அப்போது பத்து வயதிருக்குமா? அவை இன்னமும் 

ஆளுமையாக நிற்கின்றன.

உள்ளுக்குள் ஏதோ அசைய கங்குவின் கண்களில் நீர் கோர்த்தது. நீ என்னை முட்டாளாக்கவில்லை தாப்பி… நிச்சயமாக இல்லை. கிளிகள் என் நாவல் பழத்தை அழித்து விட்டன. பீச் மரம் தன் பழத்தை இழந்து விட்டது.

நாவல் பழத்தின் கொட்டை போல கங்குவிற்குள் கசப்பு.. ஏதோ கசப்பு.

தாப்பியை அவனுக்கு கல்யாணம் செய்து தருவதாக அவள் அப்பா சத்தியம் செய்திருந்தார். ஆனால் கங்குவின் அப்பா இறந்து விட்டார். நாவல் மர ஒப்பந்தத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் சிகிச்சைக்குச் செலவாகிப் போனது. அந்த வருஷம் கங்குவால் ஒப்பந்தம் எடுக்க முடியவில்லை. தாப்பியின் அப்பா அவளை வேறு யாருக்கோ மணமுடித்து விட்டார்.

கங்கு இந்தக் கசப்பான நிகழ்வுகளை எல்லாம் நினைவு கூர்ந்தான், தவறாகக் கடித்து விட்ட நாவல் கொட்டை போலக் கசந்த நினைவுகள்…

அந்த முதியவர் திரும்பவும் குறுக்கிட்டார்.

இந்த முதியவருக்கு என்ன வேண்டும்? தன் மரங்களைக் கவனிப்பதற்கு பதிலாக ஏன் இவர் இந்தக் கட்டிலையே கண்காணிக்கிறார்?

“நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் கங்கு…”

“சொல்லுங்கள் அங்கிள்…”

“நீதான் இங்கு தலைவன். உன்னிடம் ஆலோசிக்காமல் நான் ஆமாம் அல்லது இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது…”

“ஐயோ..என்னவென்று சொல்லுங்கள் அங்கிள்.”

“உனக்கு  ஞாபகம் இருக்கிறதா என்று கூட எனக்குத் தெரியவில்லை, உன் அப்பாவிற்கு ஒரு நண்பர் இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் இறந்து போய் விட்டார். தாப்பி என்ற பெயரில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்…”

இரண்டில்லை, இருபது மூட்டைப் பூச்சிகள் கடித்தது போலக் கட்டிலிலிருந்து எழுந்தான்.

“எங்கேயாவது கிளம்புகிறாயா?” குழம்பிப் போய்க் கேட்டார்

“ஓ..நானா? எங்கும் போகவில்லை…”  கங்கு பதட்டப்பட்டான்.

“அந்தப் பெண்ணின் கணவனுக்கு வேலை எதுவுமில்லை. இந்த நாவல் பழப் பருவத்திற்காக வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறான். அவனிடம் பணமில்லை. சிறிய உதவி கிடைத்தால் போதும், அதை வைத்துக் கொண்டு அவனால் பழ ஒப்பந்தத்தை எடுக்க முடியும். …”

ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கங்கு முதியவரை வெறித்தான்.

“உனக்கு விருப்பமில்லாவிட்டால் அவனுக்குக் கொடுக்க வேண்டாம்… எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது, அவ்வளவுதான். இது அந்த இளைஞனுக்காகக் கூட இல்லை, அந்தப் பெண்ணுக்குக்காக… தாப்பி கெஞ்சினாள்…? ” கங்குவின் மனம் வலித்தது. கட்டிலருகே இருந்த  மரத்தின் கனமான தண்டைப் பிடித்துக் கொண்டான். பூமியே பிளந்தது போல உணர்ந்தான்.

“நீதான் தலைவர் என்றும், உன் சம்மதமில்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றும் அந்த இளைஞனிடம் சொல்லி விட்டேன்.”

“தலைவர் என்றால் என்ன அர்த்தம் அங்கிள் ?” என்று விருப்பமின்றி கங்கு கேட்டான்.

“நான் உண்மையைச் சொல்ல வேண்டும், இல்லையா? ஒப்பந்தத்தில் நம் பத்துப் பேருக்கும் பங்கிருக்கிறது, உங்களுக்குள் யாருக்காகவோ அது செய்யப்படவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியுமில்லையா?”

“அப்படிப் பேசாதீர்கள் அங்கிள். நீங்கள் என்னை விட மிகப் பெரியவர். நானெல்லாம்..” கங்கு பேச நினைத்தான்.

“அந்த இருவரும் என் கட்டில் பக்கத்தில்தான் நின்று கொண்டிருக்கிறார்கள் அப்படியானால் நான் சரி என்று சொல்லி விடட்டுமா?” மிக வேகமாகக் கேட்டார்.

“உங்களிடம் எதற்காவது நான் இல்லையென்று சொல்லியிருக்கிறேனா?” வருத்தமாகக் கேட்டான்.

“அப்படியானால் தாப்பி சொன்னது சரிதான்.” உற்சாகமாகச் சொன்னார்.

“தாப்பி என்ன சொன்னாள்?” குரலில் நடுக்கம் படர வேகமாகக் கேட்டான்.

“கங்கு தலைவராக இருந்தால் இல்லை என்று சொல்ல மாட்டார் என்று சொன்னாள்.” இதை முதியவர் அழுத்தமாகச் சொன்னார்.

“உண்மையாகவா?”

“அவள் இங்கு வருகிறாளென்று நினைக்கிறேன். அங்கே பார்! .. தாப்பி தானே அவள்?” கண்ணைச் சுருக்கிக் கொண்டு அவர் பார்த்தார்.

தாப்பிி இப்போது அருகே வந்து விட்டாள். அவளை முன்னால் வரும்படி சைகை காட்டினார் முதியவர்.

“கங்கு நியாயமானவன் என்று உங்களிடம் நான் சொன்னேன் இல்லையா?”

“அவருக்கு என்னை ஞாபகமிருக்கிற்தா?” கங்குவைப் பார்த்தபடி முதியவரிடம் கேட்டாள்.

“என்ன கிறுக்குத்தனமான பேச்சு! இருவரும் ஒன்றாக வளர்ந்திருக்கிறீர்கள். விளையாடி இருக்கிறீர்கள், ஒரே தட்டில் சாப்பிட்டிருக்கிறீர்கள்… கங்கு முழுமையாக உன் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறான்…”

“உண்மையாகவா?” தாப்பி தன் தலை முதியவரின் முழங்காலைத் தொடுமளவிற்கு அருகே வந்து, தரையில் உட்கார்ந்தாள்.

“தரையில் உட்காராதே பெண்ணே!, வா, வந்து கட்டிலில் உட்கார்!” முதியவர் கடிந்து கொண்டார்.

“கயிறு உறுத்தலாம்.” கங்குவை மீறி வார்த்தைகள் வந்து விழுந்தன.

தாப்பியிடம் ஒரு பிரகாசம் தெரிந்தது. கங்குவை இன்னொரு தடவை பார்த்தாள். “நான் சிறுமியாக இருந்த போது கங்கு அதிகமாக என்னைக் கிண்டல் செய்வார். எல்லா வகையான சத்தியங்களும் செய்யச் சொல்லிக் கட்டாயப் படுத்துவார்.

“என்ன சத்தியங்கள்?” முதியவர் அன்பாகக் கேட்டார்.

“பல சத்தியங்கள்…” தாப்பி நினைவுகளுக்குள் ஆழ்ந்தாள்.

“வேகமாக என்னைத் தட்டாமாலை சுற்றுவார். பாடுகிறேன் என்று நான் உறுதி சொல்கிறவரை சுற்றுவதை விட மாட்டார்…”

“என்ன பாட்டுப் பாடினாய்?” 

“நான் என்ன பாடுவேன் அங்கிள் ? எனக்கு ஒரே ஒரு பாட்டுத் தான் தெரியும். திரும்பத் திரும்ப என்னைப் பாடச் சொல்வார். அது ஒரு சிறுபிள்ளைத் தனமான பாட்டு…பீச் பழங்கள் பற்றியது.”

எதனாலோ தாப்பியின் கண்களில் கண்ணீர். கங்குவைப் பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். மரங்களுக்குக் காவலாக இருந்தவன் அந்தப் பழத்தைச் சுவைத்ததேயில்லை என்ற வருத்தம் கூட அவளுக்கு இருக்கலாம்.

ஆணி அடிக்கப்பட்டவன் போல அந்த இடத்தில் கங்கு நின்றான்.

தாப்பி திடீரென மேலே பார்த்தாள் .கிளிகள். அவை வேகமாக நாவல் பழ‘க்களைக் கொத்திக் கொண்டிருந்தன. தாப்பி வேகமாக எழுந்து அவற்றை விரட்டினாள்.

இத்தனை நேரமாகச் சிறிது தொலைவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கங்குவின் குழந்தைகள் எழுந்தன படுக்கையிலிருந்து குதித்து, கங்குவிடம் ஓடி வந்து அவன் காலை கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றன.

“கிளிகளை விரட்ட வேண்டாம் தாப்பி, அவை இருக்கட்டும்.” கனத்த மனதுடன் கங்கு சொன்னான். “அவை இருந்து விட்டுப் போகட்டும். எப்படியோ பழம் கெட்டுப் போய் விட்டது….”


நன்றி: Internet Archive 

A Slice Of Life  Selected Works — Amrita Pritam–  Vikas Publishing House


Discover more from சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.