பெருவெளி நான்

1. அஹம் பிரம்மாஸ்மி! – நான் இல்லா நான்!


ஏதோ ஒரு புள்ளியில் ,
“தன்னுணர்வு”
விழித்தெழுகிறது!
தன்னிருப்பை உணர்ந்து
திகைக்கிறது!
தொற்றியவை,பற்றியவை,
அருளற்றவை, பொருளற்றவை,
தங்கியவை, மங்கியவை,
மயக்கியவை,மயங்கியவை,மாயை!
அனைத்து அஃறிணைகளும்
அகத்தகிப்பின் தாக்கத்தில்
சாம்பலாகின்றன!
சாம்பலின் ஆழத்தில்,
விழிப்புணர்வின் விளிம்பில்
தன்னுணர்வு மின்னுகிறது!
ஒளிப்பாளம் பிளக்கிறது!
அவ்வொளியில்
“நான் இல்லை”
ஆனால் நான் இருக்கிறேன்!
மனதற்ற பெருவெளியில்
அணுவின் அணுவாய்
நிறைந்திருக்கிறேன்!
அதுவே நான்!
அதுவே அனைத்தும்!


2. மாயையின் மறைநாடகம்!


எல்லாவற்றையும்
திரும்பப் பின்னுகிறது
மாயை!

பழகிய பாவனையை
பறித்து விட்டு,
புதிதாய் ஒன்றை அணிவிக்கிறது!

கொண்டாடிக் களித்தவற்றை,
விரலிடுக்கில் நழுவவிட்டு,
கனவுகளின் நூலால்,
மீண்டுமொரு
பெருங்கனவை நிகழ்த்துகிறது!

“நான்”என்று நம்பியதையும்,
“என்னுடையது”என்று பற்றியதையும்,
தள்ளி நின்று
வேடிக்கை பார்க்க வைக்கிறது!

காணாத கைகளால்
கதை எழுதும் மாயை,
மனத்தூணாய் நின்று ,
நம்மையே,
நம்மிடமிருந்து மறைக்கிறது!

சித்தரிப்பும், சிதறடிப்பதுமாய்,
சுழலின் சுழிப்பில்
சிக்கிக் கிடக்கிறது!அலைகள் ஆட்கொள்ளா இடைவெளியில்-
மாயத்தின் வலையில்
மயங்கி மயங்கி,
பின்-
தெளிந்து திளைப்பதோ
இப்பிறப்பின் ரகசியம்?


3. அடையாளச் சிக்கல்!

வேட்டைச்சிங்கத்தின்
தலைகோதி,
கனிவாய்ச் சிரித்தார்
கடவுளர்களில் ஒருவர்!
பால் சோறு
பிசிறி வைத்தார்!
விளையாட
பந்து ஒன்று தந்தார்!
அவ்வளவு தான்!
அடையாளச்சிக்கலுக்குள்
அகப்பட்டுக்கொண்டது சிங்கம்!
“இது தான் சமயம்” என
வலைபின்ன ஆரம்பித்தது
சிலந்திப்பூச்சி!
“நீ கூட்டுப்புழு அல்ல”
காட்டமாய், காதில் கிசுகிசுத்தது
வண்ணத்துப்பூச்சி!
குறுகுறுப்பாய்ப்
பார்த்தது நரி!
சீறியது சிறு நாகம்!
மௌனமாய்க் கடந்தது
மற்றொரு சிங்கம்!
சுதந்திரமாய் வளைய வந்தது
வரிக்குதிரை!
முதுகில் மெல்ல ஏறியது
ஒரு நாரை!
அசையாமல் அமர்ந்திருந்த
சிங்கத்தின் எதிரே
ஆளுயரக் கண்ணாடியை
அமைதியாய்
வைத்துச் சென்றார்
மற்றொரு கடவுள்!
நிமிடங்கள் கடந்தபின்,
காடெங்கிலும் எதிரொலித்தது
அரிமாவின் ஆரவார கர்ஜனை!
விளையாட்டு முடிந்த திருப்தியில்
புன்னகைத்துக் கொண்டார்கள் கடவுளர்கள்!!


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.