கூடடைதல்

புழுக்கம் மிகுதியாக இருந்ததால் அப்பா அன்று சட்டை அணிந்திருக்கவில்லை.

திண்ணை விளிம்பில் மடித்துவைக்கப்பட்டிருந்த தினசரி அருகே உள்ளங்கையளவு ரேடியோவில் இருந்து சன்னமான இசை கேட்டுக்கொண்டிருந்தது. அவருடன் அமர்ந்திருந்த அம்மா வெந்த பனங்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நொடித்து அவர் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். மெனோபாஸை நெருங்கிக்கொண்டிருந்த அவளது வலதுமூட்டில் நிரந்தமான வலி குடியேறிவிட்டிருந்ததால் கால்நீட்டி அமர்வதற்கு தோதாக ஒரு நாற்காலியை போட்டிருந்தாள்.

பொதுவாக வீடே அமைதியாக இருக்கும் வேளை அது. அன்றைய ஓட்டத்தின் உளைச்சலை நீவித் தளர்த்தும் தொடுகை அந்த அமைதிக்கு உண்டு.

பெரும்பாலும் அப்பொழுதுகளில் பேச்சுக்கு இடமே இருப்பதில்லை. மிஞ்சிப்போனால், காபி அல்லது தோசை எடுத்து வரவா என்று அம்மா இரண்டு முறை கேட்பாள். மற்றபடி, ரேடியோவில் கேட்கும் கண்ணதாசன் பாடல்களின் மெட்டுக்களை அப்பா மெல்லிதாய் முனங்குவதும், நறுக்கென ஒரு வரி உதித்து சுருக்கென தைக்கும்போது நாக்கைச் சுழற்றி அதனை அவர் ரசிப்பதையும் தாண்டி அங்கே எந்த சத்தமும் எழுவதில்லை.

கத்திப் படிக்க பழகியிருந்த சிவராமன் கூட அப்போது மௌனமாகவே வீட்டுப்பாடம் கற்பான். அண்ணன் கார்த்திகேயனின் சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும் முன் அறையில் அவன் அமர்ந்திருக்கும் கோணத்திலிருந்து அப்பாவின் மயிரடர்ந்த முழங்கையும், விரலிடுக்குகளில் லேசாய் அப்பியிருக்கும் பவுடர் தடமும், சிவப்பு நாற்காலியில் அசைவில்லாமல் கிடக்கும் அம்மாவின் வெடிப்புற்ற பாதமும், காய்த்துப்போன அவளது விரல்களை அலங்கரிப்பதைப்போல் அதன்மேல் விழுந்திருக்கும் இரண்டொரு வேப்பம்பூக்களும் தெரிந்தது.

சுதர்ஷன் ஆஸ்பத்திரி அருகே அவர் வேலைசெய்யும் சிறிய ஜெராக்ஸ் கடைக்குச் செல்லும்போதும், வாரக்கடைசிகளில் முத்துக்கிருஷ்ணன் டாக்டருக்கு பகுதி நேர டிரைவராக போகும்போதும் இரண்டு கைக்குட்டைகளை எடுத்துச்செல்வார் அப்பா. அடர்நீல நிறத்தில் இருக்கும் ஒன்று பெரும்பாலும் அவர் கழுத்தைச் சுற்றி கிடக்கும். அவ்வப்போது அதை உருவியெடுத்து ஒரு உதறு உதறும்போது அருகில் இருப்பவர்களின் நாசியை கோகுல் சாண்டல் வாசம் நெருடும்.

மற்றொன்று பச்சை நிறம். தூசுப்படக் கூடாதென்று அவர் உபயோகப்படுத்தும் நோக்கியா போனை விரலளவு நீளம்கொண்ட பாலிதீன் கவரினுள் போட்டு, பிறந்த மகவை தொட்டிலில் கிடத்தும் தாதியைப்போல் பக்குவத்துடன் அதை அந்த கைக்குட்டையில் வைத்து, போர்த்தி, ஜெராக்ஸ் கடையில் அவரது மேசையின் ஓரத்தில் அழகாய் வைத்திருப்பார்.

அன்றும் அவர் அருகே படுத்துக்கொண்டு, அவர் ரசிக்கும் பாடல்களை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அவரது மூன்றாம் குழந்தை திடீரென வீறிட்டபோது ஒருகணம் ஆடித்தான் போனார் அவர். பெரும்பாலும் அந்நேரத்துக்கு அவருக்கு அழைப்புகள் எதுவும் வருவதில்லை.

அலைபேசித் திரையில் ஒளிர்ந்த அந்த புது எண்ணைப் பார்த்ததுமே அவருக்கு ஏதோ தோன்றியிருக்கவேண்டும்.

ஒய்யாரமாக தலைக்குமேல் உயர்த்தப்பட்டிருந்த வலதுகை வெடுக்கென கீழிறங்கியது.

தலையை மட்டும் உட்பக்கமாகத் திருப்பி சிவராமனைப் பார்த்து, “தம்பி, அண்ணன் எங்க போறேன்னு சொல்லிட்டுப்போனான்?” என்றார்.

ஆனால் நெடுநேரம் பேசாததால் வறண்டிருந்த தொண்டையைச் சரிசெய்து அவன் பதில் சொல்வதற்குள் அந்த அழைப்பை ஏற்றிருந்தார் அப்பா.

பேசத் துவங்கியிருந்த எட்டாம் விநாடியே அவரது இடது உள்ளங்கை இதயத்தை நாடிச்சென்றது. இதழ்கள், “கடவுளே!” என்று முணுமுணுத்தன.

அம்மாவின் வலதுகால் அந்த சிவப்புநிற நாற்காலியை எட்டி உதைத்துக் கீழே தள்ளியபடி நிலத்தில் ஊன்றியது. வலியை மறந்து குதித்தெழுந்தவள் அப்பாவை ஒட்டினாற்போல் நின்றுகொண்டு, அவர் தோளைத் தொட்டபடி அவரது முகத்தையே உற்றுப் பார்த்தாள். அவள் விழியிரண்டும் அதற்குள் கலங்கிப்போயிருந்தன. அவளுக்கும் ஏதோ புரிந்திருக்கவேண்டும்.

சிவராமன் தான் கையில் வைத்திருந்த பென்சிலை நழுவவிட்டான். மெல்ல உருண்டு அகன்ற அந்த நட்ராஜ் பென்சில் அண்ணனின் சைக்கிளின் பின் டயரில் மோதி நின்றது. திருப்பூரில் இருக்கும் சித்தி அப்பாவுக்கென்று வாங்கியனுப்பியிருந்த, அளவில் மிகவும் பெரிதாகிப்போனதால் அணியாமல் அலமாரியில் வைத்திருந்த, அந்த மஞ்சள்நிறச் சட்டையை அணிந்தபடி தன்னைப் பார்த்துக் கிண்டலாக கண்ணடித்தபடி வீட்டைவிட்டு அண்ணன் கிளம்பிய காட்சி மட்டும் மனதினுள் ஓடியபடியே இருந்தது.

இரண்டே நிமிடங்கள் நீடித்த அந்த அழைப்பு அவர் நெற்றியெங்கிலும் வியர்வைத் துளிகளை படரச்செய்திருந்தது.

புடவைத் தலைப்பால் அதைத் துடைத்துவிட்டு அம்மா சிவராமன் பக்கம் பார்த்து, “தம்பி தண்ணி கொண்டுவாப்பா” என்றாள்.

நோட்டு புஸ்தங்கங்களை மூடிவைத்துவிட்டு அவன் எழுவதற்குள் நெஞ்சைப் பிடித்தபடி அவன் பக்கம் வந்த அப்பா, “தம்பி அண்ணன் எங்க போரேன்னுயா சொல்லிட்டுப்போனா? உண்மையச் சொல்லுய்யா!” என்றார்.

அவர் உடல் அதிர்வதை, விழிகள் சிவந்து கலங்குவதை, கீழுதடு ஒருபக்கமாக இழுத்துக்கொள்வதைக் கண்ட சிவராமனுக்கு ஏனோ அழுகை வந்தது.

“சொல்லுய்யா… ஏதோ பிரச்சனைன்னு போன் பண்ணுதாவ…” என்று அவனை லேசாய் அழுத்தினார் அப்பா.

“சித்ராதேவி ஸ்டேஷனரி கடைக்கு போறேன்னு சொல்லிட்டுப்போனான்” என்றான் சிவராமன்.

அப்பா அம்மாவைப் பார்த்தார். பிறகு வாயைப் பொத்திக்கொண்டு, நெடுமூச்செடுத்து, “கூட்டாளிங்களோட சேந்து என்னத்தயோ செஞ்சுபுட்டான்னு ஸ்டேஷன்ல இருந்து சொல்லுதாவட்டி” என்றார்.

தன் அருகிலிருந்த மரக்கதவை இறுகப் பற்றிக்கொண்டாள் அம்மா. கால் விரலிடுக்கில் இருந்த வேப்பம்பூ ஒன்று கீழே விழுந்து அவள் கட்டைவிரல் அடியே மிதிபட்டுக் கிடந்தது.

பத்து நிமிடங்கள் கழித்து ஆட்டோ அமர்த்திக்கொண்டு அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் வாசல்பக்கம் கிடந்த அந்தப் பச்சைநிற கைக்குட்டையையும், மல்லாந்து கிடந்த நாற்காலியையும், ஓரமாய் இருந்த ஓடையில் கிடந்த விரலளவு நீளம் உள்ள பாலிதீன் கவரையும் வெறித்தபடி அமர்ந்திருந்தான் சிவராமன்.

கரகரப்புடன் ஒலித்துக்கொண்டிருந்த கண்ணதாசன் பாடல் நிறைவுற்றதும், பேட்டரி இல்லாமல் அணைந்துபோனது அந்த ரேடியோ.

***

தினமும் பள்ளிக்கூடத்திற்கு ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்தனுப்பும் அம்மா அன்று முப்பது ரூபாய் தந்திருந்ததை நினைத்து சிவராமனால் சந்தோஷப்பட முடியவில்லை.

“அம்மா இன்னைக்கு சமைக்கல… கேன்டீன்ல இட்லியும், மதியத்துக்கு லெமன் சோறும் வாங்கிக்க, என்னய்யா? சாயங்காலம் அம்மா இங்கன இல்லன்னா, சாவி கீதாக்கா வீட்டுல இருக்கும்… அக்காவ ஹார்லிக்ஸ் குடுக்கச் சொல்லியிருக்கேன்… குடிச்சுட்டு, ஹோம்வர்க் செஞ்சுட்டு இரு, அம்மா வந்துருவேன், என்ன?”

அவள் மிகவும் துவண்டுபோயிருந்தாள். உறக்கமின்மையால் முகம் உப்பி, இமைகள் சுருக்கமுற்று பார்ப்பதற்கே எப்படியோ இருந்தாள்.

இரவெல்லாம் அப்பாவோ அண்ணனோ வீட்டிற்கு வரவேயில்லை. வழக்கத்திற்கு விரோதமாய் அன்று ஏதேதோ கொடுங்கனவுகளால் ஆட்கொள்ளப்பட்ட சிவராமன் நெடுநாட்கள் கழித்து படுக்கையிலேயே மூத்திரம் கழித்திருந்தான். பதற்றத்துடன் விழித்துக்கொண்டு, நிலை உணர்ந்து விசும்பியழுதபோது, உள்ளறையில் இருந்து கண்களைக் கசக்கியபடி வெளியே வந்த அம்மா, “என்னய்யா…” என்றாள். பிறகு அவனது ட்ரவுஸரில் இருந்த ஈரத்தை கவனித்து, “விடு விடு… ஒண்ணுமில்ல” என்று சொல்லிவிட்டு அவனை சுத்தம் செய்வதில் மும்முரமானாள்.

சிவராமனுக்கு அது புதுசாக இருந்தது. அந்தப் புதுமை அவனை ஏனோ அச்சுறுத்தியது.

பொதுவாக அண்ணனுடன் சைக்கிளிலோ, அவனுக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும் பட்சத்தில் அப்பாவுடன் ஸ்கூட்டரிலோ பள்ளிக்குச் செல்லும் சிவராமன் அன்று ஆட்டோ ஒன்றினுள் அமர்த்தப்பட்டிருந்தான். மழை பொழியும் தினங்களில் தன்னை ஏற்றிச்செல்ல வரும் கணபதி அண்ணனின் ஆட்டோ இல்லை அது. முகம் தெரியாத அந்த டிரைவரிடம் பேசிவிட்டு அவனிடம், “பாத்து இருந்துக்க என்னப்பா?” என்று அம்மா சொன்னபோது இனம்புரியாத வருத்தத்தில் அவன் கண்கள் குளமாகின.

ஆனால் பள்ளிக்கூடத்தின் முதல் மணி அடித்த கணத்தில் துவங்கி எப்போதும்போல் நடந்த வகுப்புகளும், விளையாட்டுகளும் அவனுள் குடிபுகுந்திருந்த இறுக்கத்தையும், பதற்றத்தையும் சற்றுநேரம் மறக்கடிக்கச் செய்திருந்தன. அப்பாவின் நெருங்கிய நண்பரான செக்யூரிட்டி தியாகராஜன் இடைவேளையின்போது வந்து அவனிடம் பொதுவாக நலம் விசாரித்துவிட்டுச் சென்றதும், கணக்கு வாத்தியார் பரமசிவம், “டுவெல்த் ஸ்டாண்டர்ட் கார்த்திகேயன் தம்பி நீ தான?” என்று ரகசியமாக கேட்டதும் அவனை பெரிதாக பாதிக்கவில்லை.

அன்று சுபலட்சுமி டீச்சர் நீலநிற புடவை அணிந்து வந்திருந்தார். அதேபோன்ற புடவை ஒன்று அம்மாவிடமும் இருப்பதால் டீச்சர் அதனை உடுத்திவரும்போதெல்லாம் அவர்களிடம் விசேஷமான நெருக்கத்தை உணர்வான் சிவராமன். மாணவர்களை கடுமையுடன் நடத்தும் சகாயசெல்வி டீச்சருக்கு தொடர்ச்சியாக இரண்டு பீரியட் இருக்கும் தினங்கள் அல்லது காலாண்டு அரையாண்டு தேர்வுகள் துவங்கும் நாட்களிலெல்லாம் சுபலட்சுமி டீச்சர் தற்செயலாக அந்தப் புடவையில் வந்துவிட்டால் அதனை நற்சகுனம் என கருதுவான் அவன்.

வழக்கத்திற்கு மாறாக அன்று அடர்த்தியான மௌனத்தில் இருந்த சுபலட்சுமி டீச்சர் ஒருகையை பின்னால் கட்டிக்கொண்டு, மறுகையால் போர்டில் சயின்ஸ் வாத்தியார் வரைந்துவிட்டுச் சென்றிருந்த இதயத்தை அழித்துக்கொண்டிருந்தார். பிறகு கைகளைத் தட்டித் தூசியை அகற்றிவிட்டு, புடவைத் தலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டு ஒருமுறை செருமினார். அணிந்திருந்த மூக்குக்கண்ணாடிக்குப் பின்னால் அழகாக இருந்த அவரது மையிட்ட விழிகள் ஒருமுறை சிவராமனைத் தொட்டுச் சென்றது.

சிவராமன் லேசாய் புன்னகை செய்தான். பின்னர் இடப்பக்கம் இருந்த சுவரின் மையத்தில் மிக பிரம்மாண்டமாக, பெரிய திரையைப்போல் ஒட்டப்பட்டிருந்த சார்ட் அட்டையில் தெரிந்த புகைப்படக் குவியலை ஓரவிழியால் நோக்கினான்.

வாய்ப்பாடு, உலகத்தின் வரைப்படம், உலக அதிசயங்களின் புகைப்படங்கள், பல்வேறு வண்ணத்தாள்கள் மற்றும் சித்திரங்களால் சூழப்பட்ட வகுப்பறைக்கு மேலும் அழகுசேர்ப்பதைப்போல் இருந்தது பலதரப்பட்ட குழந்தை முகங்களைச் சுமந்து நின்ற அந்த வெண்திரை.

அந்த யோசனைக்குச் சொந்தக்காரரும் சுபலட்சுமி டீச்சர்தான்.

குழந்தைகள் தினத்திற்கு முந்தைய நாள், இறுதி மணி அடித்தபிறகு, சுட்டிக் குழந்தையைப்போல விடுவிடுவென வகுப்பறைக்கு வந்து, “ஸ்டூடண்ட்ஸ்… இங்க, இதோ இந்த இடத்துல பெருசா ஒரு சார்ட் ஒட்டலாம்… அதுல நம்ம கிளாஸ் பசங்க ஒவ்வொருத்தரும் அவங்க பேபியா இருந்தப்போ எடுத்த போட்டோவ பேஸ்ட் பண்ணலாம்… அட்டண்டன்ஸ் ஆர்டர் படி ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு போட்டோ… ஒகே?” என்று சொன்னபோது அனைவரும் கரகோஷம் எழுப்பியிருந்தனர்.

ஏதோ விதத்தில் அந்தப் புகைப்படங்கள் அந்த இடத்தின் சடைவை அகற்றுவதைபோல் இருந்தது. கடுகடுவென வரும் ஆசிரியர்கள் ஏதோ புள்ளியில் அதைக் கண்டு தளர்ந்து லேசாவதை சிவராமன் பலமுறை கண்டிருக்கிறான். சிரிப்பையே மறந்துவிட்டிருந்த சகாயசெல்வி டீச்சர்கூட இரண்டொரு முறை அதன் அருகே நின்று, மெல்லிய புன்சிரிப்புடன், “இது யாரு?”, “இது நீயா?”, “டேய், ரமேஷ் குண்டா, அப்ப ஒல்லியா இருக்க?” என்றெல்லாம் கேட்டு விளையாடியிருந்தார்.

சிவராமன் தனக்கு மிகவும் பிடித்தமான அந்தப் புகைப்படத்தை இரு தினங்களுக்கு முன்பே ஒட்டிவிட்டிருந்தான்.

ஒட்டப்பட்ட இரண்டாம் நிமிடமே ஓடிவந்து அதை பார்வையிட்டிருந்த வடமாநில பெண்ணான கல்பனா, “இட்ஸ் க்யூட்” என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாள்.

அக்கணத்தில் இருந்தே சுபலட்சுமி டீச்சர் அதைப் பார்த்துவிட்டு என்ன சொல்வார் என்கிற ஆவல் அவனுள் துளிர்விட்டிருந்தது. ஆனால் ஆண்டுவிழாவில் ஆடவிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு இரண்டு நாட்களாக தனது வகுப்பை கணக்கு வாத்தியாருக்கு கைமாற்றி விட்டிருந்தார் சுபலட்சுமி டீச்சர்.

வீட்டினுள் உருவாகியிருந்த இறுக்கத்தினால் இந்த சமாச்சாரத்தை அறவே மறந்திருந்த சிவராமன் அப்போது மிகுந்த கிளர்ச்சிக்குள்ளானவனாய் தோற்றமளித்தான்.

பதினைந்து நிமிடத்திற்கு தீவிரமாய் பாடம் நடத்திவிட்டு, மாணவர்களை எழுதச் சொல்லிவிட்டு அந்த வெண்திரையை நோக்கி அவர் அடியெடுத்துவைத்தபோது உற்சாகத்தில் அவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. டீச்சர் அந்த வெண்திரையை உற்று நோக்குவதும், பின்னர் அதைத் தொட்டுப் பார்ப்பதையும் உணர்ந்தவனுக்கு மூத்திரமே முட்டிவிட்டது.

இரண்டு நொடிகளுக்கு கண்மூடிக்கொண்டான்.

விழித்தபோது சுபலட்சுமி டீச்சர் அவன் அருகே நின்றுகொண்டிருந்தார். சூழ்ந்திருந்த அறுபது மாணவர்களின் தலைகளும் அவன் பக்கம் திரும்பியிருந்தது.

சிவராமன் சிரிக்க முயன்றான்.

அப்போது மேசையில் அவன் எதிரே அந்தப் புகைப்படத்தை வைத்தார் சுபலட்சுமி டீச்சர்.

“சிவராமன்… இந்த பிக்சர் வேண்டாமே… வேற எதாச்சு இருந்தா எடுத்துட்டு வா, பாக்கலாம்… என்ன?” டீச்சரின் குரல் தொலைவில் எங்கோ கேட்பதைப்போல் இருந்தது.

வெள்ளைநிறத்தில் பட்டாடை அணிந்து, பக்கவாட்டில் இருந்த சுவரைப் பற்றி, மடக்கியிருந்த கட்டைவிரலை வாயினுள் நுழைத்துக்கொண்டு பொக்கைவாய் காட்டியபடி தான் நிற்க, கேக் வெட்டும் பொம்மைக் கத்தியை விளையாட்டாக தனது கைமேல் அழுத்தியபடி அண்ணன் கார்த்திகேயன் நிற்கும் அந்தப் புகைப்படத்தின் உச்சிப் பகுதியில், கோந்து கசிந்திருந்ததால் உருவாகியிருந்த பச்சைக் கறைமேல் பார்வையை நட்டுவைத்து அமர்ந்திருந்தான் சிவராமன்.

பின்னர் மெல்ல நிமிர்ந்து, “ஒகே மிஸ்” என்று அவன் சொன்னதும் திரும்பிப் பாராமல் விலகி நடந்தார் சுபலட்சுமி டீச்சர்.

அந்தப் புகைப்படத்தை இரண்டாக, நான்காக, எட்டாக மடித்து ட்ரவுசர் பையினுள் அவன் திணித்துக்கொண்டபோது இறுதி மணி அடித்தது.

***

வண்ணார்பேட்டை கம்ப ராமாயணத் தெருவில் இருக்கும் இந்த வீட்டிற்கு குடிவருவதற்கு முன்பு அவர்கள் பாளையம்கோட்டை சுடலை கோவில் சந்தில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.

முருகன்குறிச்சியில் இருந்த சோடா கம்பெனி ஒன்றுக்கு லோடு வண்டி ஓட்டிக்கொண்டிருந்ததால் அப்போதெல்லாம் சிவராமன் பள்ளிக்கூடத்திற்கு ஸ்கூல் வேனில்தான் சென்றுவந்தான். தற்போது பிரின்சிபாலுக்கு தனிப்பட்ட ஓட்டுநராக பணி உயர்வு பெற்றுவிட்ட திரவியம் அண்ணன் அப்போது வேன் டிரைவராக இருந்தார்.

சிறுவர்கள் பயணிக்கும் வாகனம் என்பதால் குழந்தைகளை சூதானமாக ஏற்றியும், அவர்களது பைகளைச் சுமந்தபடி இறக்கிவிட்டு, நிறுத்தும் இடத்தில் தத்தமது பிள்ளைகளுக்காக காத்திருக்கும் பெற்றோரிடம் ஒப்படைப்பதும் மயூரியின் முதன்மைப் பணியாக இருந்தது.

மயூரி வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவள். தமையன் இஷானுடன் வேலை தேடி தமிழகம் வந்தவள், சிறிது காலம் கட்டுமானம் மற்றும் உணவகங்களில் பணிபுரிந்தாள். இருவருக்கும் அடிப்படை ஆங்கிலம் எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருந்ததால் கூடிய விரைவில் பள்ளிக்கூடத்தில் வேலைக் கிடைத்தது. சம்பளம் குறைவென்றாலும் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருந்ததால், நிரந்தர பணியைக் கண்டடைந்துவிட்ட நிம்மதி அவர்கள் இருவர் முகத்திலும் தெரிந்தது. இஷான் அதே பள்ளிக்கூடத்தில் ஆபீஸ் பாயாக இருந்தார். அவ்வப்போது அவர் கேன்டீனில் சமையல் பணிகளில் ஈடுபடுவதும் உண்டு.

வேனில் எப்போதும் நுழைவை ஒட்டி இருக்கும் இருக்கையையே தெரிவுசெய்வான் சிவராமன். அவன் தாமதமாக வரும் நாட்களில் அந்த இடத்தை அவனுக்காக பாதுகாத்து வைத்திருப்பாள் மயூரி.

சிவராமன் அவளை, “தீதீ” என்றே அழைப்பான்.

காலையோ மாலையோ, வண்டியில் ஏறியமர்ந்த ஐந்தாம் நிமிடம் அவனது விரல்கள் அவள் அணிந்திருக்கும் ஆம்பளைச் சட்டையின் ஏதேனும் ஒரு பகுதியை வருடத் துவங்கியிருக்கும். அடுத்த மூன்றாம் நிமிடத்தில் இதழோரத்தில் கோழை வடிய அவன் உறங்கிவிட்டிருப்பான். இஷானின் உடம்பில் இருக்கும்போது அழுக்காகவும், கரடுமுரடாகவும் தோன்றும் சட்டை மயூரியின் உடம்பில் வெல்வெட்டைப்போல் மிருதுவாகிவிடுவது எப்படி என்று அவன் பலமுறை வியந்ததுண்டு.

அன்று பள்ளியிலிருந்து அவனை அழைத்துச் செல்ல கணபதி அண்ணனின் ஆட்டோ வந்திருந்தது. தொங்கிய முகத்துடன் அதிலிருந்து இறங்கி வீட்டினுள் சென்றவனுக்கு முன் அறையில் கால்மூட்டுகளைக் கட்டிக்கொண்டபடி அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. அவள் அணிந்திருந்த சட்டையைக் கண்ட பிறகே மயூரி அந்தநாள் முழுக்க பள்ளிக்கூடத்தில் தென்படாதது அவன் நினைவுக்கு வந்தது.

செத்துப்போன பறவையைப்போல் இருந்த மனம் திடீரென சிறகடிக்கத் துவங்கியதைப்போல் ஒருவித உற்சாகத்துடன் அகலக்கால் போட்டு வாசற்படி ஏறியவன் தன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை மயூரியின் தலைமேல் நிறுத்தினான்.

சீறியெழும் பாம்பைப்போல் வெடுக்கென நிமிர்ந்த அவளது முகத்தில் இருந்த வலியை, கண்களின் சிவப்பை, பல்வரிசை ஒன்றோடொன்று உரசிக்கொண்டு எழுப்பும் சத்தத்தைக் கண்டு அதிர்ந்த சிவராமன் அப்படியே பின்வாங்கினான்.

பின்னால் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கைகளைப் பிசைந்துகொண்டிருந்த அப்பா, “தம்பி உள்ளுக்கு போய் முகம் கழுவிட்டு, படி… போ” என்றார். வழக்கத்திற்கு மாறாக அவர் குரல் அன்று மிகவும் கரகரப்பாக ஒலித்தது.

அம்மா அவன் தோளிலிருந்த பையை வாங்கிக்கொண்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

இறுதியாக ஒரு முறை முயல்பவனின் மூர்க்கத்தோடு மயூரி பக்கம் திரும்பிய சிவராமன், “தீதீ!” என்று கூச்சலிட்டான்.

மயூரி அவனைப் பார்க்கவேயில்லை.

சிவராமனுக்குள் ரௌத்திரம் பொங்கியது. செய்வதறியாமல் தனது அம்மாவின் முழங்கையை லேசாக நுள்ளினான்.

அம்மா உச்சுக்கொட்டினாள். பிறகு அவனை சற்று வலுவாக, தரதரவென்று இழுப்பதைப்போல் இழுத்து, புழக்கடையில் நிறுத்திவிட்டு வீட்டினுள் விரைந்தாள்.

சிவராமன் குழாயைத் திறந்துவிட்டான். திபுதிபுவென கொட்டிய நீர் கீழே இருந்த வாளியை இமைப்பொழுதில் ரொப்பியது. வழிந்தோடிய நீர் ஓடையை அடைந்து குதூகலத்துடன் உருண்டோடுவதை சற்று நேரம் வெறித்துப் பார்த்தவன், பக்கத்தில் இருந்த குடம் ஒன்றை எடுத்து வாளியின் அருகே வைத்து, அதனுள்ளிருந்த நீரை கோப்பையால் அள்ளி இதற்குள் கொட்டினான். பின்னர் அக்குடத்தின் குறுகிய வாயினுள் விரல்களை நுழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரள்ளி முகத்தில் தெளித்துக்கொண்டான். பிறகு உச்சுக்கொட்டியபடி எழுந்துகொண்டு வீட்டைப் பார்த்து நடந்தான்.

இருண்டிருந்த பின்னறை, மங்கலான மஞ்சள் ஒளி கொண்டிருந்த கூடத்தை அடுத்து இருந்த முன் அறையில் மயூரி எழுந்து நின்றிருந்தாள். அவள் முன் அப்பா, அச்சுறுத்தும் நெருக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். அம்மா தனது ஒரு கையால் நெஞ்சைப் பிடித்தபடி, மறுகையால் மயூரியின் தோளைத் தொட்டுக்கொண்டிருந்தாள்.

ஜன்னல் திண்டில் இருந்த மஞ்சள் பையை எடுத்த அப்பா, அதனுள்ளிருந்து எதையோ எடுத்து மயூரியின் கையில் புகுத்தப் பார்த்தார்.

உள்ளங்கையில் நெருப்பள்ளி கொட்டிவிட்டதைப்போல் கரத்தை பகிரங்கமாக பின்னுக்கிழுத்த மயூரி, அப்பாவைப் பார்த்துச் சுட்டுவிரலை ஆட்டி, அவளது மொழியில் எதையோ ஆக்கிரோஷத்துடன் உரைத்தாள்.

அவள் முன் கைகூப்பிய அம்மா, “அண்ணன் ஆஸ்பத்திரி செலவுக்காச்சு வச்சுக்கம்மா!” என்று கெஞ்சினாள்.

மயூரி தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்துக்கொண்டிருந்தபோது சட்டென அவள் காலில் விழுந்தார் அப்பா.

“அய்யோ… கடவுளே!” என்று வாய்பொத்திக்கொண்ட அம்மா அடுத்த நொடியே வெடுக்கென பின்புறம் திரும்பினார். சிவராமன் அதைப் பார்த்துக்கொண்டே நிற்பதைக் கண்டு, “தள்ளிப்போ!” என்று சொல்லிவிட்டு, அப்பாவை மறைத்தாற்போல் நின்றுகொண்டார்.

அங்கிருந்தபடியே சிவராமனை நோக்கிய மயூரி கண்களைக் கசக்கியபடி வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றாள்.

***

அந்த இரண்டு நாட்களும் அம்மா வீட்டைக் கூட்டித் துடைத்திருக்கவில்லை. அடுக்களைத் தொட்டியில் எச்சில் பாத்திரங்கள் போட்டது போட்டபடிக் கிடந்தது. ஓரமாய் இருந்த குப்பைத்தொட்டியில் உணவுக்கறை படிந்த பொட்டலங்களும், முட்டை ஓடுகளும், அதன் குழிந்த பகுதியில் கருகருவென ரொப்பிக்கிடந்த தேநீர் சக்கைகளும் பார்ப்பதற்கே அருவருப்பை ஊட்டின. பூஜை அலமாரியின் நடுத்தட்டில் மண்டிக்கிடந்த ஊதுவத்திச் சாம்பலும், கீழ்தட்டில் இருந்த வெண்கல தாம்பாளத்தில் சிதறிக்கிடந்த வாடிய செம்பருத்திகளும் அகற்றப்பட்டிருக்கவில்லை.

உரிமையாளர்களால் கைவிடப்பட்டு, நோய்கண்டு துவளும் நாய்குட்டியைப்போல் இருந்த அந்த வீட்டினுள் உலவுவது சிவராமனை இனம்புரியாத உளைச்சலுக்கு உள்ளாக்கியிருந்தது.

அவனை பள்ளிக்கூடம் செல்லவேண்டாம் என சொல்லியிருந்தார் அப்பா.

புதன்கிழமை மதியத்திற்குமேல் தொடர்ச்சியாக இரண்டு மணிநேரம் கிடைக்கும் கேம்ஸ் பீரியடையம், ஆங்கிலப் புலமை மெருகேறும் பொருட்டு பிரிட்டனில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த பகுதிநேர ஆசிரியையான சார்லட் டீச்சரின் வகுப்பையும் இழக்க நேரிட்டது அவனுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், எந்தவித நிபந்தனைகளும் இன்றி சுதந்திரமாக திரிவது சற்று மகிழ்ச்சியை வழங்கியிருந்தது. ஆனால் சருகுகளும், பறவை எச்சங்களும் படிந்திருந்த அந்தத் திண்ணையில் முற்றிலும் இடிந்து போனவராய், தொட்டதற்கெல்லாம் கூச்சலிடுபவராய் அமர்ந்திருந்த அப்பாவையும், வியர்வை வாடையுடன், மலங்க மலங்க விழித்தபடி ஏதோ மூலையில் குந்தியிருந்த அம்மாவையும் கண்டபோது ஏனோ நடுக்கமாக இருந்தது. மதியத்திற்கு மேல் அவனையும் மிஞ்சிய ஒரு சோர்வு அவனைக் கவ்விக்கொண்டிருந்தது. காய்ச்சல் வந்தவனைப்போல் முடங்கிபடுத்துவனுக்கு எதற்கென்றே தெரியாமல் அழுகை வந்தது.

இரண்டு நாட்களாக திடீரென தலைகாட்டத் துவங்கியிருந்தார் பழனியப்பன் மாமா. பரணி நகர் முனையில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் இவரை அம்மாவுக்கு அறவே பிடிக்காது. இங்கே குடிவந்த புதிதில் நடந்த மிகப்பெரிய வாக்குவாதத்திற்கு பிறகும், சோடா கம்பெனிக்கு லோடு அடித்த காலத்தில் ஒட்டிக்கொண்டிருந்த பொடி மற்றும் குடிப் பழக்கத்தை அப்பா முற்றாக கைவிட்ட பிறகும், மாமா இங்கு வருவதை நிறுத்திக்கொண்டிருந்தார்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனைப் பார்த்தால்கூட இரண்டொரு வார்த்தைகளுக்கு அப்பால் எதையும் பேசியிராத பழனியப்பன் மாமா, தொடர்ச்சியாக இரண்டு நாட்களாய் வீட்டின் மொட்டைமாடியில் பாய்விரித்து படுத்துக்கொள்வதையும், அவருடன் அப்பா நெடுநேரம் செலவு செய்வதையும், நள்ளிரவிற்கு மேல் கிளம்பும் உரத்தக்குரல் புலம்பல்கள் மற்றும் பீடி நாற்றத்தை அம்மா பொருட்படுத்தாமல் இருப்பதும் சிவராமனுக்கு அளவுகடந்த ஆச்சரியத்தை வழங்கியது.

ஆச்சரியங்கள் ஒவ்வொன்றும் நொடிப்பொழுதில் அச்சமாக மாறிப்போகும் உளநிலையை எட்டியிருந்தான் அவன்.

தனித்தலைந்து நேரம் போக்கும் புழக்கடை, மச்சுப்படி, பக்கவாட்டு முடுக்கு என்று அவனுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் செல்லவே பயமாக இருந்தது. துணைக்கு ஆள் இருந்தால் தேவலை என்று பட்டது. அண்ணன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது எண்ணிக்கொண்டான். அவன் எங்கே சென்றான், எப்போது வருவான் என்று தெரிந்தால் ஆறுதாலாகத்தான் இருக்கும். ஆனால் அம்மாவிடம் அதைக் கேட்கவே தயக்கமாக இருந்தது.

வக்கீலைப் பார்த்துவருவதாக காலையில் சொல்லிவிட்டுப் போகும் அப்பா வீடு திரும்புவதற்கு மாலை ஆகிவிடும். அம்மா தரும் தேநீரை அருந்திவிட்டு, இரவானதும் பழனியப்பன் மாமாவுடன் மாடிக்குச் செல்பவர் உறங்கினாரா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மயூரி வந்துசென்ற பிறகுதான் நிலை மோசமானதாக பட்டது சிவராமனுக்கு. அன்றைய இரவில் தான் அப்பா அத்தனை ஆத்திரப்பட்டு அவன் முதன்முதலில் கண்டிருந்தான். ஒடிசலான உடம்புடன் சாந்தமாக தோன்றும் அம்மாவினுள் தன்னை அச்சுறுத்தும் முகம் ஒன்று இருப்பதும் அவனுக்கு அன்றே தெரியவந்தது.

செய்வதறியாமல், வீட்டினுள் செறிந்திருந்த மௌனத்தை சகித்துக்கொள்ள முடியாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த அவனை திடீரென அணுகி வந்த அம்மா, “தம்பி பசிக்கா? உப்புமா ஏதும் கிண்டி தரவா?” என்று கேட்டிருந்தாள். சட்டென தோன்றியிருந்த அந்த அக்கறையினால் முகம் மலர்ந்த சிவராமன் சரியென்று தலையசைத்தான்.

புத்துணர்ச்சியுடன் செயல்பட்ட அம்மா கடகடவென சட்டியை எடுத்து அடுப்பின் மீது வைத்தாள். பின்னர் நான்கு கேரட்டுகளும், ஒரு கொத்து பீன்ஸும், பச்சை மிளகாயையும், பல்லாரியும் எடுத்துக்கொண்டவள் திடீரென சமையலறை உள்ளேயே வட்டமடிக்க ஆரம்பித்தாள்.

எதையோ தேடுகிறாள் என்பதை புரிந்துகொண்ட சிவராமன் என்னவென்று கேட்டதும், “நறுக்கறதுக்கு கத்தி… இங்கன தான் வச்சுருப்பேன்… எங்க காணும்?” என்று பதில் கேள்வி கேட்டாள்.

அப்போது மூத்திரம் கழிக்கவென்று படியிறங்கி வந்த அப்பா அங்கே நிலவும் பரப்பரப்பைக் கண்டு, “என்ன?” என்று லேசாக உறுமினார்.

“கத்திங்க” என்று அவரைப் பார்க்காமலே சொல்லிவிட்டு அங்கும் இங்கும் அலைந்தாள் அம்மா.

அப்பாவின் முகம் எப்படியெல்லாமோ போனது. வேதனையும் வெறியும் கலந்ததோர் உணர்வு விழிகளில் படர சத்தமாக உச்சுக்கொட்டினார்.

அம்மா அதை கவனிக்காதபோது தரையை பலமாக மிதித்து, “ஏய்!!” என்று கூச்சலிட்டார்.

பதறிப்போன அம்மா உறைந்து நின்று அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு ஏதோ நினைவு வந்ததைப்போல் வாய்பிளந்தபடி பின்னிருந்த சுவரில் சாய்ந்துகொண்டாள். அவளுக்கு மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தது.

அப்பா மற்றும் அம்மாவின் முகத்தை மாறி மாறி நோக்கிய சிவராமனுக்கு அடிவயிற்றில் ஏதோ சுழித்துக்கொண்டது. நெஞ்சில் தாளமுடியாத பாரம் கூடுவதைப்போல் தோன்றியதும் கிடுகிடுவென உள்ளறைக்குள் ஓடி மெத்தையில் குப்புறப் படுத்துக்கொண்டான்.

பின்னர் எப்படி உறங்கினோம் என்று அவனுக்கே தெரிந்திருக்கவில்லை.

நடுவில் அப்பா, “பழனியப்பன அனுப்பிறவா?” என்று கேட்பதும், அம்மா எதற்கோ விசும்பி அழுவதும், திடீரென அவர்கள் இருவரும் அருகே அமர்ந்துகொண்டு அவனையே உற்று நோக்குவதும் கனவென்றே அவன் நினைத்தான். அப்பாவின் முகம் தன் முகத்திற்கு மிகவும் நெருக்கமாக வந்தபோது இரண்டாம் நாளாக அன்றும் படுக்கையிலேயே மூத்திரம் கழித்தான் அவன்.

“ஓ!” என்று கத்தி அழுதபடி அவன் விழித்துக்கொண்டபோது அறையைவிட்டு சட்டென வெளியேறினார் அப்பா.

ஏதோ கனவிலிருந்தென விழித்துக்கொண்ட அம்மா மெதுவாக அருகே வந்து அவனை ஆறுதல் படுத்த ஆரம்பித்தார்.

***

வெள்ளிக்கிழமை மதியம் அப்பா மற்றும் வக்கீல் கோதண்டராமனுடன் வீட்டை அடைந்த அண்ணன் உள்ளே வராமல் அழுக்கடைந்திருந்த அந்தத் திண்ணையிலேயே அமர்ந்துகொண்டான்.

வாசற்கதவைப் பிடித்தபடி நின்ற அம்மா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில் உயிரே இருக்கவில்லை.

வக்கீலை வழியனுப்பிவிட்டு கேட்டை டமாலென அப்பா அடைத்தபோது உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிவராமன் திடுக்குற்று விழித்துக்கொண்டு வெளியே வந்தான்.

“அம்மா”, “அம்மா” என்று முனங்கியபடி மெல்ல அடியெடுத்து வாசல்பக்கம் வந்தவன் அங்கே அண்ணன் வந்திருப்பதைக் கண்டு உற்சாகத்தில் துள்ளியபடி அவன் அருகே சென்றான்.

மெதுவாக நிமிர்ந்த கார்த்திகேயன் அவனைப் பார்த்து புன்னகைசெய்தபோது எதிரே நின்ற அப்பா பாய்ந்து வந்து சிவராமனின் பனியன் பட்டையைப் பற்றி அவனை மூர்க்கமாக விலக்கினார்.

“உள்ள போல… வந்துட்டான், பெரிய இவன் கணக்கா!” என்று அவனிடம் கோபமாக பேசினார்.

உச்சுக்கொட்டி முறைத்தபடி வெடுக்கென எழுந்துகொண்டான் கார்த்திகேயன்.

கலங்கியிருந்த விழிகளை அவன் பக்கம் திருப்பிய அப்பா, “வாய்யா… எங்கள வெட்டி வீசு… எடு அந்த கத்திய… கெத்து காட்டுதேன் பேர்வழின்னு பிழைக்கவந்தவன கிழிக்கறதுக்கு, பெத்தவன கொன்னு வீசு… வா!” என்றார்.

உச்சக்குரலில் பேசிமுடித்தபோது அவருக்கு ஒருநொடி பார்வை மங்கியது. லேசான தள்ளாட்டத்துடன் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு பக்கவாட்டுச் சுவரில் உள்ளங்கையைப் பதித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

பின்னர் அம்மாவிடம் திரும்பி, “சாடிட்டு வாரான் பாத்தியா? நேத்திக்கே போயிருந்திருக்கணும்… வந்து நிக்குதப்ப, ஆத்தாளும் அப்பனும், ஒன்னுமறியாத தம்பியும் மூச்சில்லாம கடக்கறத பாத்திரந்தா புத்தில உறைச்சுருக்கும்!” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மா சிவராமனின் தோள்களைப் பற்றி வீட்டின் உட்புறமாக அவனைத் தள்ளிக்கொண்டு போனாள்.

அறையில் அவனுக்கென போடப்பட்டிருக்கும் சிறிய நாற்காலியில் அவனை அமர்த்தி, கையில் ஒரு குவளை தண்ணீரை அவள் திணித்தபோது சிவராமனுக்கு மேலெல்லாம் சில்லிட்டுப்போயிருந்தது. மிரண்டுபோயிருந்த அம்மாவின் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீரும், அவளது வாய் நாற்றமும் அவனுக்கு குமட்டலெழுப்புவதாக இருந்தது. வாயினுள் ஊற்றிக்கொண்ட நீர் உள்ளே செல்லாமல் இதழோரங்களில் வழிந்து உடலை நனைத்தது.

அன்று வீட்டில் எவரும் உணவு உண்டிருக்கவில்லை. ஆனால் இரவில் குளித்துவிட்டு வெளியே சென்ற அப்பா அனைவருக்கும் சாப்பாடு வாங்கி வந்திருந்தார். பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்து, சாம்பார் மற்றும் சட்னியை தனித்தனியாக பாத்திரங்களில் ஊற்றிவைத்துவிட்டு, அம்மாவிடம், “அவனையும் கூப்பிடு” என்றார்.

அறையிலிருந்து வெளியே வந்த அண்ணன் தனது தட்டை எடுத்துக்கொண்டு ஓரமாக அமர்ந்துகொண்டான். அப்பா வழக்கத்திற்கு மாறாக டீ.வியை போட்டு, சத்தத்தை மிகவும் அதிகமாக வைத்தார். அங்கே பேச்செழுவதை அவர் அறவே விரும்பவில்லை.

காதைக் கிழிக்கும் அந்த ஓசையில், செய்திகளைக் கேட்பது சிவராமனுக்கு நாராசமாக இருந்தது. மெல்ல ஊர்ந்தபடி சென்று அப்பாவின் அருகே இருந்த ரிமோட்டைப் பற்றியிழுத்து, சேனல்களை ஒவ்வொன்றாக மாற்ற ஆரம்பித்தான்.

தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையே உணராதவரைப்போல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அப்பா.

திடீரென அண்ணன், “சிவா, அந்த பாட்ட வையேன்…” என்றான்.

மார்பினில் இன்பம் போங்க திரும்பிப் பார்த்த சிவராமன், சிரித்த முகத்துடன் ரிமோட்டை அழுத்தி அண்ணன் கேட்ட சேனலை வைத்தான். பிறகு இரண்டு வாய் இட்லியை வாயில் போட்டுகொண்டு திரும்பியபோது அப்பா அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் விழிகளில் இருந்த வெறுப்பை, வெறியை, சவரம் செய்திராத முகம் மிகைப்படுத்திக் காட்டுவதைப்போல் இருந்தது.

சிவராமன் சுருங்கிப்போனான். தக்காளித் துண்டைப்போல் இருந்த அவனது கீழுதடு வெளிப்புறமாக மடங்கி அதிரத் துவங்கியது.

***

சுடலை கோயில் சந்தில் வசித்தபோது அவர்கள் வளர்த்த சின்னா எனும் பூனைக்குட்டியின் உடம்பை நூற்றுக்கணக்கான கரப்பாண்பூச்சிகள் மொய்ப்பதைப்போல் ஒரு கனவைக்கண்டு பதறி விழித்தான் சிவராமன். அழுகை வந்தது. ஏதேதோ பூச்சிகளின் ஓசைகள் கேட்கும் இந்த கும்மிருட்டு வேளையில் இப்படி விழித்துக்கொள்வது அவனை கலங்கடிக்கத் துவங்கியிருந்தது.

அம்மாவும் அப்பாவும் இரண்டு நாட்களுக்கு பிறகு கொஞ்சம் நிம்மதியாக உறங்குவதைபோல் இருந்தது. வாசற்படியில் அமர்ந்துகொண்டு நட்சத்திரங்களற்ற வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் அண்ணன்.

சிவராமனுக்கு எழுந்துசெல்ல வேண்டும்போல் இருந்தது. வீட்டின் சுவர்களிலெல்லாம் அவன் கனவில் கண்டிருந்த கரப்பாண்பூச்சிகள் ஊர்ந்துசெல்வதைப்போல் மனம் மயங்கியதும் சட்டென எழுந்துகொண்டு வாசலை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

அனாமத்தாய் தரையில் கிடந்த அப்பாவின் கைபேசி காலில் மிதிப்பட்டபோது அச்சத்தில், “அம்மா” என்று முனங்கிவிட்டான். பிறகு, “கார்த்தி!” என்றபடி ஓடிச் சென்று அண்ணனைக் கட்டிக்கொண்டான்.

அண்ணனின் முகம் விநோதமாய் உப்பியிருப்பதைப்போல் பட்டது. எப்போதும் அழகாய் ஒதுக்கப்பட்டிருக்கும் தலைமுடி, சிடுக்குகள் விழுந்து அசிங்கமாக இருந்தது. அவன் மேல் வீசிய நெடி சிவராமனுக்கு சற்றும் உவக்கவில்லை. அச்சுறுத்தும் அம்சம் ஒன்று அதனுள் பொதிந்து கிடப்பதைப்போல் இருந்தது. உட்புலன் அனைத்தும் அணிதிரண்டு அவனை அங்கிருந்து விலகச் சொன்னபோதிலும் அண்ணனின் வலக்கரத்தை மிருகத்தனமான தீவிரத்துடன் பற்றியிருந்தான் சிவராமன்.

கார்த்திகேயன் நெகிழ்ந்தான்.

“லேய் சிவா… என்னல!” என்றபடி அவன் முகத்தை கைகளில் எடுத்து அவன் விழிகளை நோக்கினான். அதில் அவன் எப்போதும் காணும் அன்பும் குறுகுறுப்பும் முற்றாக வடிந்து, பித்தனைப்போன்ற வெறிப்பும், முறியப்போகும் கிளையைப் பற்றிக்கொண்டிருப்பவனின் நடுக்கமும் வந்திருந்தது.

தொண்டைக்குழியில் உதித்த கூரான குத்தல் உணர்ச்சி மெல்லப் படர்ந்து அடிவயிற்றில் ஒருவித குளிராய் நிலைபெற்று உடலை நடுக்குறச் செய்வதை உணர்ந்த கார்த்திகேயன், தன்னை காத்திரமாகப் பற்றியிருந்த சிவராமனின் கையை பலம்கொண்டு பிரித்து, “இங்க வராத… போ… போய் அம்மாகூட படு” என்றான்.

ஒருகணம் முழித்த சிவராமன் பிறகு மெதுவாக பின்வாங்கி வீட்டின் இருட்டுக்குள் மறையத் துவங்கினான்.

ஒருசில நிமிடங்கள் கழித்து கண்களைத் துடைத்தபடி திரும்பிய கார்த்திகேயன், அங்கே கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்தபடி புறவாசலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சிவராமனைக் கண்டு வெருண்டுபோனான்.

*****


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.