மெக்கானிக் கதைகள்

ஒரு சிறுகதை எத்துணை வகையான குறுக்கு தோற்றத்தினை உருவாக்கிக் கொடுக்கும் என்பதனை அறுதியாக சொல்லிவிடமுடியாது. சிறுகதை வழியே நாம் பேசும் உலகம் நிஜஉலகத்தினை போன்றதன்று. ஆனால் கதைகள் இந்த உலகை ஆழ்கின்றன. எல்லா சோகங்களையும் இன்பங்களையும் புரிந்துக் கொள்ள கதைகள் போல சிறந்த வழிகள் இல்லை. 

நிஜவாழ்வில் நடக்கும் சின்ன இன்பங்களையும் துன்பங்களையும் மீண்டும் நிகழ்த்தி பார்க்க சிறுகதைகள் பயன்படுகின்றன. 

சிறுகதைகள் நாளும் மாறிக் கொண்டிருக்கின்றன. அதன் வடிவமும் உள்ளடக்கமும் கடந்த பத்து ஆண்டுகளில் மாறிவிட்டன‌. மனித மனதின் மாற்றங்களுக்கு இணையாக சிறுகதைகளின் கூறுகளில் மாற்றம் இருக்கும். இன்று ஒரே வகையான குடும்பக் கதைகள் தேவையில்லை. குற்றக் கதைகளும் ரோமாண்டிக் கதைகளுக்கும் பெரிய வரவேற்பில்லை. 

யதார்த்த அல்லது பின்நவீனத்துவ கதைகள் தாம் ஆனால் அவற்றின் களங்கள் வேறு. நீள்கதைகள், குறுங்கதைகள் என்று வடிவங்களை மாற்றினாலும் அதனுள்ளே புதிய களங்களில் ஆசிரியரின் சொந்த அனுபவங்களும், வாழ்வின் நிகரான‌ வேறொரு வாழ்க்கையும் தொடர்ந்தபடி இருக்கின்றன. 

இரண்டாயிரம் ஆண்டு வரை தமிழில் வந்த கதைகள் குடும்பத்தையும், மனித ஆசைகளையும் அதன் வீழ்ச்சியை பேசியவை. இரண்டாயிரத்திற்கு பின் கணிப்பொறியின் வளர்ச்சியும், இதழ்களின் வளர்ச்சியும் புதியவகை எழுத்துகளை நோக்கி சென்றன. புதிய உலகை படைத்துக் காட்ட எழுத்தாளர்களுக்கு சவாலாக அமைந்தன.

குடும்பம், உறவு, எளிய சங்கடங்கள், அதன் குறுகுறுப்புகள் முடிந்து வாழ்வை சொல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. வெவ்வேறு களங்கள் தேவையாயின. வெவ்வேறு பாத்திரங்கள் தேவையாயின, இதுவரை பேசப்படாத அல்லது கவனிக்கப்படாத பாத்திரங்கள் முதன்மைபடுத்தப்பட்டன.

இன்று ஒரு மெக்கானிக், ஒரு எலக்ரீஷியன், ஒரு ஆழ்துளை கிணறு அமைப்பாளர் என்று பல‌துறைகளிலிருந்து எழுத்தாளர்கள் வருகிறார்கள். அவர்களின் துறைசார்ந்த அனுபவங்களினினூடாக நாம் பெரும் புதிய அனுபவங்கள் நாம் பெற்ற முந்தைய கதைகளிலிலிருந்து முற்றிலும் வேறானவை.

கலித்தேவனின் இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் மெக்கானிக் கதைகள் என்று வகைப்படுத்திவிடலாம். புதிய கதைகள் வருவது தமிழுக்கு நல்லது. யதார்த்த கதைகளின் தன்மை ஒரு வகையில் எளிய சொற்களுடன் சொல்ல இடமளிப்பவை. தொடர்ந்து தங்கள் வாழ்வை பதிவிட எழுத்தாளர்களுக்கு அனுமதி அளிக்கிறது யதார்த்த கதைகள்.

கலித்தேவன் கதைகள் வழியே தான் அடைந்த மொத்த வாழ்வையும் சொல்லிவிட துடிக்கும் துடிப்பில் இருப்பது இந்த முதல் தொகுப்பில் தெரிகிறது. எல்லா கதைகளும் தன்னிலையில் எழுதப்பட்டுள்ளன. ஆரம்ப எழுத்தாளருக்கும் இந்த தன்னிலை கதைகள் முதன்மை எழுத்தாக அமையும்.. தன்னிலை விளக்கம் போல கதை அமைந்துவிடும்.

சிறிய எளிய கதைகள், எளிமை இக்கதைகளில் வலிமை எனலாம். நேரடியாக வாசகருடன் உரையாடும் இக்கதைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தன் கதைகள் மேலிருக்கும் அளவிலாத பற்று ஒவ்வொரு கதைகளிலும் மிளிர்க்கிறது. தன் சொந்த அனுபவத்தின் சாயல்களும் நெருக்கமான ஒன்றின் அமைதியும் கதைகளில் பிரதிபலிக்கின்றன. கூடவே இக்கதைகளை சொல்லியே தீரவேண்டும் என்கிற ஆசிரியரின் வேட்கையும் வெளிப்படுகிறது. 

முதல் கதை கலித்தேவனின் கதை சொல்லும் முறைமையின் அழகை கொண்டிருக்கிறது. அவரது அனுபவ அறிவின் மிக தீவிர மனநிலை பிரதிபலிக்கும் கதை. மெக்கானிக் கடைக்கு வரும் இருவாடிக்கையாளர்களின் அடாவடியும், பணம் அதிகம் செலவழிக்க வேண்டியிருக்குமோ என்ற பதபதைப்பு தெரிய உரையாடும் உரையாடல் இதுவரை தமிழ்ச் சிறுகதைகளில் வெளிப்பாடாத ஒன்று.

‘விடுதலை’ என்கிற கதையும் மெக்கானிக்கின் கதைதான் ஆனால் கதை சூழல் மருத்துவமனையில் நடக்கிறது. இரண்டு மெக்கானிக் நண்பர்கள் தங்கள் குடும்ப விவகாரங்களை இருவரும் சேர்ந்து தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதும் அதனால் ஏற்படும் சங்கடங்களையும் பற்றியது.

‘புதிய சங்கமம்’ இத்தொகுப்பில் வந்திருக்கும் சிறந்த கதை. மெக்கானிக் போன்றவர்களின் சங்கங்களில் நடக்கும் கதை. எப்படி ஒரு தலைவரை உருவாக்குகிறார்கள் அதற்கு ஆள் சேர்க்கிறார்கள், எப்படி பிரிந்து புதிய சங்கங்களை உருவாக்குகிறார்கள் போன்ற தெறிக்கும் கதை. தலைவராக இருக்க எப்படி செயல்படுவது; நடைமுறையில் எப்படி நடக்கிறது என்பதை குறிப்பாக சொல்லியிருக்கிறார்.

ஒரு மெக்கானிக்கிற்குத் தொழில் சொல்லிக் கொடுத்த குருவின் கதை ஒன்று. குருவானவர் எப்படிபட்டவராக இருக்க வேண்டியிருக்கிறது என்பதில் தொடங்கி அவரிடம் அவரது குடும்பத்துடன் ஏற்படும் சங்கடங்களை எப்படி ஒரு மாணவராக எதிர் கொள்கிறார் என பேசுகிறது.

எளிய தினகூலி மனிதனின் வீடு கட்டும் ஆசையை குடும்பம் எப்படி தன் தோள்களில் எடுத்து அவருக்கு உதவி செய்கிறது என்பதை ‘நிஜத்தின் நடுவில்’ கதையில் வெளிப்படுகிறது. வீட்டில் எலி எப்படி நுழைய முயற்சிப்பதும் அதை முறியடிக்க நினைக்கும் குடும்ப உறுப்பினர்களின் கதை ஒரு ‘எலி’யகதை. எலியும் கதாநாயகனும் மாறி மாறி கதை சொல்லும் பாணியில் அமைந்திருக்கிறது கதை. நோய் முதல் நாடி, தேங்காய் கணக்கு போன்ற கதைகளும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன.

கதைகளை சொல்லும் பாணியில் தெரியும் அழகுணர்ச்சி அந்த கதைகள் மீதான நம்பிக்கையை உண்டுபவவையாக இருக்கின்றன‌. கலித்தேவன் எல்லா கதைகளிலும் அந்த அழகுணர்ச்சி பாணியை வெளிப்படுத்துகிறார். சொற்தேர்வுகளிலும் புதிய களத்தை சொல்லும் நேர்த்தியும் கதைகளில் ஒரு தேர்ச்சி இருக்கிறது. கதையின் ஆரம்பத்தில் தடுமாற்றங்களும் கதை சொல்வதில் இருக்கின்ற நிலையாமையும் தெரிகின்றன, ஆனால் கதை நகரும்போது தேர்ந்த கதை சொல்லலாக மாறிவிடுகின்றன. கதையை ஆரம்பிக்கும் தடுமாற்றம் அடுத்த தொகுப்பில் மாறிவிடும் என நம்புகிறேன்.

ஐடிதுறை கதைகளில் ஒரு விலகல்தன்மை தெரியும், மெக்கானிக் கதைகளில் அப்படி விலகல்தன்மை ஏதுமின்றி நெருக்கமாகவே உணரமுடிகிறது. முக்கியமாக அது மேட்டிமை என்ற தளத்தை அடையவில்லை என்பது காரணம்.

கதைகள் பிள்ளைகளுக்கு மட்டுமே உரியவை அல்ல. தன் நோக்கத்தை, தன் வெற்றியை, தன் இயலாமையை மீறி ஒருவரின் வாழ்வில் மாறாத ஒன்றைப் பற்றி  சொல்லிக் கொண்டிருப்பவை அவை. எல்லாமும் சேர்ந்து அவை குறியீடுகளாக‌ கலித்தேவனின் கதைகளில் மிளிர்கின்றன. அவருக்கும் என் வாழ்த்துகள்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.