பின்னால் இருந்து ஒரு கை என் வலது தோளில் இலேசாக அழுத்தியது. சட்டெனத் திரும்பிப் பார்த்தேன்.
‘பீப்பீ தானே!’ என்றாள் அவள்.
என் நினைவுகள் சரியாயின் என்னை ‘பீப்பீ’ என்று அழைத்தது அவள் மட்டும்தான். அதுவும் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னராவது இருக்கும்.
‘பீப்பீ’…என் பூவரசம் பீப்பீ.
அது அவளேதான். என்னால் நிச்சயிக்க முடிந்தது. எவ்வளவு மாற்றம் அவளில். ஷோல் கொண்டு தலையை சுற்றி மறைத்திருந்தாள். நீண்ட அடர் நீலவண்ணத்தில் ஊதா நிறப் பூக்கள் போட்ட அபாயா. காலில் வெள்ளைச் சப்பாத்து. அதே கண்கள். அதே சிரிப்பு. அப்போது போலவே இப்போதும் கன்னத்தில் குழி. நானும் அவளை ‘பீப்பீ’ என்றுதான் அழைப்பேன். அவள் என் அருகில் இருப்பதால் கிடைத்த அதே குதூகலம் மீண்டும் என் இதயச் சுவர்களில் தட்டியது. ஏனோ என் நாவு கட்டிக்கொண்டது. நான் இருக்குமிடம் மறந்து என் கண்கள் முந்திக்கொண்டு பனித்தன. காதுகள் அடைத்துக் கொண்டது.
மழைநீர் வடிந்தொழுகும் கண்ணாடியில் தோன்றும் உருவம் போல அவள் இப்போது தெரிகின்றாள். தன் இரு கைகளாலும் வாயைப் பொத்தி வியப்பில் அவள் பிரலாபிப்பது எதுவும் என் செவிகளுக்குள் நுழையவில்லை. அவளுக்கு என் நிலை இன்னமும் புரியவில்லை. எதுவுமே நடக்காதது போல ரொம்ப நாட்கள் காணத பள்ளித்தோழமையை கண்டது போல அவள் குதூகலமாக வார்த்தைகளைக் கொட்டுகிறாள். பீப்பீக்கும் என் வயதுதான். ஆனாலும் விடலைப் பிராயத்துக்குத் திரும்பியவள் போல அவள் கால்கள் தரையில் நர்த்தனமாடிக் கொண்டு இருக்கிறன.
அவள் என்னைக் கண்ட வியப்பில்தான் இன்னமும் இருக்கின்றாள் போலும். என் முகத்தை தடவி எனக்கு நரைமுடிகள் வந்துவிட்டதை கேலி செய்கிறாள். அவள் கண்களில் அவ்வளவு விகசிப்புத் தெரிகிறது. என் கண்களில் தெரியும் ஏமாற்றத்தை அவள் சட்டை செய்யவில்லை. அவள் என்னிடம் ஹிழுறியாப் பள்ளி முன்னால் நின்று கோபித்துச் சண்டை பிடித்துக்கொண்டு என் குதூகலத்தை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டு ஏகாந்தத்தைத் தந்துவிட்டுப் போனதைப் பற்றி அவளுக்கு துளியும் கவலை இல்லை.
அவள் என் கரங்களைப் பற்றிப்பிடித்து இழுத்துக் கொண்டு செல்கிறாள். தாயின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது இழுபட்டுச் செல்லும் சிறுவனைப் போல அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் என் கால்களும் செல்கின்றன.
என் மனைவி ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் நண்பர் ஷியாம் படம் பார்க்க ‘வன்கோல்பேஸ்’ வருமாறு அழைத்திருந்தார். அவர் வரும்வரை அங்கிருந்த கடைகளை நோட்டம் விட்டவாறு நடந்து திரிந்துகொண்டிருந்த போதுதான் பீப்பி என்னைக் கண்டிருக்க வேண்டும். அவளும் அவளது பிள்ளைகளுடன் குடும்பமாக கொழும்புக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்கள். பீப்பிக்கு அவளுயரத்துக்கு வளர்ந்த இரு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுடன் வந்திருந்த வயதான அவளின் தாயின் முன் என்னை நிறுத்தி,
‘இது யாருன்னு விளங்குதா?… பீப்பீம்மா… நம்முட பீப்பீ… எங்கயோ பார்த்த மாதிரி இருக்குன்னு பின்னாலயே போய் லேசா தட்டிக் கூப்பிட்டுப் பாத்தன்… பேயறஞ்ச மாதிரி நிக்குது… அப்பிடியே இழுத்துட்டு வந்துட்டன்…
அவளின் தாய்க்கு இன்னமும் நான் யாரென்று சரியாக பிடிபடவில்லை. பீப்பீ தன் பெண் பிள்ளைகள் இருவரையும் அருகே அழைத்து அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.
‘சீ கேர்ள்ஸ் திஸ் இஸ் பீப்பீ. மை ஷைல்ட்ஹூட் பெஸ்ட் பிரண்ட்…’
‘ஸலாம் அலைக்கும் அங்கிள்…நைஸ்டு மீட் யூ’ என்று என்னுடன் கைலாகு செய்தார்கள்.
‘யு டூ..டேக் உம்மம்மா அன்ட் வோக் எரவுன்ட். ஐல் ஹேவ் ஏ ஷட் வித் ஹிம் அன்ட் ஜொய்ன் யு’ என்று அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு.. என்னைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள்.
‘வா நடந்துகிட்டே பேசலாம்’ என்றாள்.
அதற்குள்ளால் என் தொலைபேசி வேறு ஒலித்தது. ஷியாம் தான். தியேட்டரில் டிக்கட் எடுத்துக் கொண்டு அங்கு காத்திருக்குமாறு சொல்லி தொலைபேசியை துண்டித்தேன். பீப்பி என் முகத்தையே பார்த்தவாறு வந்து கொண்டிருந்தாள். நான் எதுவும் பேசாது அவளுடன் கூட நடந்துகொண்டிருந்தேன். அவள் என்னிடம் சண்டை பிடித்துப் பிரிந்தது என் கண்முன்னே வந்து நிழலாடியது.
நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. வெத்திலாக்குச் சப்பி ஆலிமிடம் ஹிழுறியாப் பள்ளியிலுள்ள ஓதப் பள்ளியில் ஓதப்பழகிய காலம். அவளும் அங்குதான் ஓத வருவாள். அவளது சட்டைக்கு மேலால் அவளது காலுயரத்துக்கு ஒரு பர்தாவைப் போர்த்திக்கொண்டு வருவாள். அது அவளது ராத்தாவுடையதாக இருக்க வேண்டும். ஓதப்பள்ளி கலைந்து வீடு செல்லும் போது எங்களுடனேயே அவளும் வருவாள். வழியில் பூவரசம் இலைகளை பறித்துச் சீட்டிகள் செய்து ஊதியவாறு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு நாளில் அவள்,
‘எனக்கும் ஒரு பீப்பீ செய்து தா…’ என்று கேட்டாள்.
பூவரசம் இலையை வாகாக மடித்துச்சுருட்டிச் சுருளாக்கி ஒரு சீட்டி செய்து கொடுத்தேன். வீடு செல்லும் வரை ஊதிக் கொண்டே வந்தாள்.

மறுநாள் குர்ஆனில் ஒட்டுவதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒன்றை பரிசாகத் தந்தாள். அது எனக்கு மிகவும் பிடித்த நீல ‘ஸ்மேப்ஸ் கார்ட்டூன்’ படம் போட்ட பெயர் எழுதும் ஸ்டிக்கர். அவளே அதை குர்ஆனில் ஒட்டியும் விட்டாள்.
‘ஊட்ட போய் ராத்தாக்கிட்ட குடுத்து பெயர் எழுதுறன்.’ என்றேன். சரி என்றாள். முகத்தில் குழி விழச் சிரித்தாள்.
அன்றிலிருந்து நான் எதை வாங்கினாலும் அவளுக்கும் தர ஆரம்பித்தேன். பள்ளிவாயல் முன்னால் நிற்கும் சுல்லிமனைக் கரத்தையில் பூசனிக்காய் தோசி வாங்கி இருவரும் சாப்பிடுவோம். அவளுக்கு அது மிகவும் பிடிக்கும். அலாவுதீன் காக்காவின் தும்பு முட்டாஸ், மசீனா வீட்டு நைஸ், குளுக்கோரஸ், பால் டொபி, தேங்காப்பூ டொபி, புல்டோ, இழுப்பு முட்டாஸ் என எது வாங்கினாலும் அவளுக்கும் அதில் பங்கு கொடுப்பேன்.
அவள் பற்கள் சூத்தை பிடித்துச் சூம்பிப் போயிருந்ததால் அவளுக்கு அதிகம் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று பீப்பீயின் உம்மா உத்தரவு கொடுத்திருந்தாள். நான் இதெல்லாம் வாங்கிக் கொடுத்துச் சாப்பிட்டதற்காக அவளது உம்மா அவளை தொடையில் கிள்ளியதாக ஒரு நாள் என்னிடம் சொல்லியிருக்கிறாள்.
ஓதப்பள்ளியில் நன்றாக ஓதும் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து போட்டிக்குத் தயார் படுத்திக் கொண்டிருந்தார் ஆலிமு. என்னையும் பீப்பீயையும் சேர்த்து நாங்கள் பன்னிரெண்டு பேர். வழமையாக எல்லோரும் ஓதும் நேரம் முடிந்து எங்களை மேலதிக நேரம் ஓதவைப்பார். எங்களை ஒரே வரிசையாக அருகருகே அமர வைத்து ஒவ்வொருவரிடமும் மனப்பாடமிட்டவைகளை ஒப்புவிக்க வைப்பார். ஒரு பிழை நேர்ந்தாலும் கட்டை விரலையும் நடுவிரலையும் காதின் சோனையில் வைத்து அழுத்துவார். வலியில் உயிரே போகும். கண்களில் அருவி பெருக்கெடுக்கும். எல்லோரும் கேவிக் கேவி அழுவார்கள்.
அப்படியான ஒரு நாளில்தான் அவள் என்னிடம் சண்டையிட்டாள். ஆலிமு எங்கள் அனைவரிடமும் குர்ஆனை ஒருவர் பின் ஒருவராக ஓதவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார். வெற்றிலை சப்பிய வாயுடன் வெற்றிலைச் சாறு தெறிக்காதவாறு வாயைக் கூப்பி தலையை உயர்த்தி எங்களுடன் கூட ஓதி திருத்தங்கள் செய்தார். சம்மனமிட்டு மதிலில் சாய்ந்தவாறு வலது காலை மட்டும் குத்தவைத்து அதில் அவரது கையை வைத்திருந்தார். அவரது விரல்களுக்குள் பிரம்பு விளையாடிக் கொண்டிருந்தது.
அன்று பீப்பீ வரிசையின் நடுவில் அமர்ந்திருந்தாள். அவள் ஓதும் முறை அப்போது வந்திருக்கவில்லை. அவளுக்கு இரண்டுபேர் முன்னதாக இருந்த பிள்ளை ஓதியதை இடைமறித்த அவர்,
‘டேய் திரும்ப ஓதுடா’ என்றார். அவனும்…
‘…பிஸ்மில்லாஹி மஜ்ராஹா’ என திரும்பவும் ஓதினான். ஆலிமுடைய தோரணை மாறியது. அவரது கண்கள் அவரது வாயைப் போலவே சிவந்து விட்டிருந்து.
‘அடுத்தாள் ஓது பாப்பம்’ என்றார். அவனும் அதே மாதிரியே…
‘…பிஸ்மில்லாஹி மஜ்ராஹா’ என்றான்.
ஆலிமும் ‘அடுத்தாள் ஓது’ என்றார். அது பீப்பீயின் முறை. அவளும்…
‘…பிஸ்மில்லாஹி மஜ்ராஹா’ என்றுதான் ஓதினாள். நான் வரிசையில் கடைசியாக இருந்தேன். எனது முறை வரும்வரை அனைவரும் அதே மாதிரியே ஓதினார்கள். என் முறையும் வந்தது. நான் ஓத ஆரம்பித்தேன்…
‘பிஸ்மில்லாஹி மஜ்ரேஹா… என்று ஓதினேன். ‘மஜ்ரேஹா… மஜ்ரேஹா… என்று விடுத்து விடுத்து ஓதியவாறு ஆலிமு வெகுண்டெழுந்தார்.
‘கொட்ரா அம்பட்டுப் பேருட தலையிலயும்’ என்றார். நானும் எழுந்து முதலாவது இருந்தவனுக்கு ஒரு கொட்டு வைத்தேன்.
ஆலிமு கர்ச்சித்தார்,
‘ஒழுங்கா கொட்டாட்டி நான் உனக்கு வெளுப்பன்’
நானும் என் பலம் கொண்ட மட்டும் ஒவ்வொருவராக கொட்டிக் கொண்டு சென்றேன். பீப்பீக்கும் தான். பன்னிரெண்டாவது ஆளுக்கும் கொட்டி விட்டு திரும்ப வரும்போது பீப்பீ என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நானும் அந்த நேரத்தில் இறுமாப்பில் தலையை ஆட்டி ஆட்டி ‘எப்பிடி…எப்பிடி..’ என வாய்குள்ளாள் முனுமுனுத்துச் சென்றேன்.
அன்று ஆலிமு என்னை முதலில் வீட்டுக்குப் போகச் சொன்னார். நான் அன்றடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பள்ளிக்கு வெளியில் பூசணிக்காய் தோசி வாங்கி வைத்துக் கொண்டு பீப்பீ வரும்வரை காத்துக் கொண்டு நின்றேன்.
பீப்பீ அன்று கடைசியாகத்தான் வந்தாள். நெஞ்சில் குர்ஆனையும் ரேஹானையும் கட்டி அணைத்தபடி வந்தாள். அவள் அப்போதும் கேவிக் கேவி அழுது கொண்டே இருந்தாள்;… வந்ததும் வராததுமாக என் முதுகில் விரல்களை மடித்து ஒரு குத்துவிழுந்தது.
‘எனக்கு மட்டும் வேணுமென்டு நல்லா நோகுற மாதிரி கொட்டுன வா…’ என்றாள்.
‘ஆலிமுதானே சென்ன…’
‘அப்ப எனக்கு மெதுவா கொட்டுரானே’
‘நோகிச்சா…கொஞ்ச நேரத்துல சரியாப் பெய்த்திடும். இந்தா தோசி தின்னு’ என்று நீட்டினேன்.
எனக்கு வானா…நான் உன்னோட இனி அத்தம்’ என்று என்னை விட்டு விட்டு அவள் தனியாக நடக்க ஆரம்பித்தாள்.
நானும் அவளுக்குப் பின்னால் ஏதேதோ சொல்லிக் கொண்டு சென்றேன். ம் ஹும்… எதுவும் வேலைக்கு ஆகவில்லை. அன்று பேசாது விட்டவள் தான்.
இத்தனை வருடம் கழித்து இதோ இன்றைக்குத்தான்…
நானும் பீப்பீயும் நடந்தவாறே சற்று தொலைவில் வந்திருந்தோம். அவளது பிள்ளைகளும் தாயும் எங்கள் கண்களை விட்டு மறைந்திருந்தார்கள். அவள் இப்போதும் பேசிக்கொண்டே வந்தாள்.
‘நான் இப்ப லண்டன்ல இருக்கன். எங்குட மச்சான உனக்கு தெரியுமா…கலியாணம் முடிச்சிட்டு போய், இந்தா பத்தொம்பது இருபது வருசமாகுது. இதுகள் ரெண்டும் டுவின்ஸ்… உனக்கு எத்துன பிள்ளைகள்?
ஆற்றாமை மேலிட்டு நான் சொன்னேன்.
‘ஏன் என்னோட சண்ட பிடிச்சிட்டுப் போன… ஆலிமு சொல்லயும் தானே கொட்டுனன். அதுக்குத்தான் வெளிய வந்ததும் அடிச்சிட்டியே, மறுகாலும் எதுக்கு என்னோட பேசுற இல்ல,
என் கண்களை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் அதற்குச் சிரித்தாள்.
‘டேய் ஏன்டா இதுக்குப் போய் அழுகிறாய்…இது எப்பயோ நடந்தது. நானே மறந்துட்டன்…யாராவது பாத்தா என்னடா நினப்பாக.. கண்ணத் துடை.. என்று அவளே தன் கைகளால் என் கண்ணீரை துடைத்தும் விட்டாள்.
‘எனக்கும் அது பெரிசா தெரியல… யுனிவசிடில நிறைய பூவரசம் மரம் நிக்கும். அதயெல்லாம் கடந்து போகக்க உன் நினப்பாவே இருக்கும்… அன்டு அது மட்டும் நடக்கல என்டா நீ என் கூட நல்லாத்தானே பேசிக்கிட்டு என்கூடவே இருந்திருப்ப தானே… உன்ன எனக்கு அவ்ளவு புடிக்கும்…’
அவள் ஹெஹ்ஹே என்று சிரிக்க ஆரம்பித்தாள்..
‘இவ்வளவு கதக்கிற நீ அடுத்தநாள் ஓதுறைக்கு கூட்டிப் போக வந்திருக்கலாம் தானே.. நீ ஏன் வரல.’
‘நீ தானே அத்தம் என்டு சொல்லிப் போன… அதான் நானும் வரல’
அவள் குடல் வெளிவரும் அளவுக்கு சிரித்தாள். என் தோள்களைப் பற்றித் தொங்கியவாறு சிரித்துக் கொண்டே இருந்தாள்.
‘ஏன்டா இப்படி சின்னப்புள்ள மாதிரி கதக்காய்.. உனக்கும் கலியாணம் முடிஞ்சி புள்ளைகள் இருக்குமே. இன்னுமா அத நினச்சிக்கிட்டு இருக்காய்’ என்றாள் பீப்பீ.
‘உனக்கு இந்த பீப்பிய ஞாபகம் வந்ததே இல்லயா… பூவரசம் பீப்பியயாவது’
அவள் என்னை மறுபடியும் இழுத்துக் கொண்டு சென்றாள். அங்கிருந்த மின்சார ஏணியில் வந்து நின்றாள். அவள் வாய் முழுக்க சிரிப்பு. கொட்டிவிடும் என்று பயந்து அவள் வாயைக் கூப்பிக்கொண்டிருந்தாள். எங்கள் இருவரையும் ஏணி மேலே கொண்டு சென்றது. அதிலிருந்து இறங்கி அப்படியே மறுபடியும் என்னை இழுத்துக் கொண்டு நடந்தாள். நான் ஒரு இடத்தில் நின்றேன். என்ன? என்பது போல அவள் கண்கள் வினவியது,
எனக்கு தெரியனும்… உனக்கு என்ன ஞாபகம் வரவே இல்லயா… ஒரு தரமாவது’
‘இருந்தாப் போல வரும்… அயினக்கே மறந்துடும்…’
‘ஆனா நான் உன்னத்தான் நினச்சிக்கிட்டே இருந்தன்… கலியாணம் முடிக்கும் வரைக்கும்…’
அப்போதுதான் அவள் முகம் சிரிப்பை விட்டொழித்தது. அவள் என் முன்னே திரும்பி நின்று என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தொண்டைக்குழியில் உமிழ் நீர் விழுங்குவது தெரிந்தது. எதையோ சொல்ல வந்து வேண்டாம் என்பது போல அவள் ஒரு பெரு மூச்சை விட்டாள்.
‘பீப்பீ… நீ இவ்வளவு சீரியசா இதயெல்லம் ஞாபகம் வெச்சிருப்ப என்டு யாருக்குத் தெரியும்… குர்ஆன் போட்டி முடிஞ்சத்துக்குப் புறகு… நான் பெரிய புள்ள ஆகிட்டன்… அதுக்குப் புறகு ஸ்கூலுக்கு மட்டும்தான் வெளிய போற… அதுவும் ராத்தாவோட போயிட்டு அப்பிடியே வீட்டயே வந்துடுவன்… அது எனக்கு ஒரு இதாவே தெரியல… அப்பிடியே காலம் பெய்த்து…’
மறுபடியும் என் அருகில் நடக்க ஆரம்பித்திருந்தாள். இப்போது அவள் உற்சாகம் வற்றியிருந்தது. என்னை ஒட்டிவாறு நடந்து கொண்டிருந்தாள். கடைகளின் முனையில் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது அங்கு இருக்கைகள் இருந்தது. அதில் போய் அமர்ந்தாள். நானும் அவளருகில் அமர்ந்தேன்.
‘உன்ன இப்ப பாத்ததுல இருந்து எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு… நீ என்னடா என்டா கண்ணால தண்ணி உருத்துற… உன்னப்பத்தி எதுவுமே சொல்லல… மிச்ச நாளைக்குப் புறகு கண்டா இதுகளத் தானே தெரிஞ்சுக்கனும்…’
நான் என்னைத் தேற்றிக் கொண்டு முகத்தை துடைத்துக்கொண்டேன். உதடுகள் பிரியாமலேயே அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.
பீப்பீ என்று நான் சொல்ல… அவளும் பீப்பீ என்று சொல்ல இருவரது வார்த்தைகளும் ஒரு கோரசாக வந்து விழுந்தது. இருவரும் சிரித்தோம். அவள் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். இடையே சொன்னாள்.
‘இப்பிடிச் சிரிச்சு எவ்வளவு நாளாகுது.’
‘ம்.. நீ இன்டக்கி கொள்ளயாச் சிரிச்சிட்ட… கொள்ளயா சிரிச்சா என்ட வைப் சொல்லுவா… இன்டக்கி கொள்ளயா சிரிச்சாச்சி… என்ன நடக்கப் போகுதோ தெரியா என்டு…’
‘உனக்கு எத்தின புள்ளயல்…’
‘ரெண்டு பேரு… ரெண்டும் ஆம்புளப் புள்ளகள்.. ஒரால் பத்தாம் ஆண்டு படிக்காரு…மத்தவரு அஞ்சாம் ஆண்டு…இந்த வருசம் ஸ்கொலசிப்…’
‘நீ எப்ப வந்த?
‘நான் இங்கதான்… ஹெல்த்ல வேல… பத்து வருசமாகுது’.
நீ…?
‘ரெண்டு நாளாகுது. இங்க ரெண்டு நாள் இருந்துட்டு ஊருக்குப் போவம். இன்னும் ரெண்டு கிழமைக்கு நிப்பம். அதுகளுக்கு ஸ்கூல் ஸ்டாட் ஆகிடும்.’
‘அப்ப உம்மா…’
‘அவயும் எங்களோடதான். நீ எப்ப ஊருக்கு வருவ. வீட்ட வாறியா?’
‘எனக்கு லீவு எல்லாம் முடிஞ்சிட்டு… வரக் கஸ்டம். புள்ளயலுக்கு ஸ்கூல் லீவு. அவக எல்லாரும் ஊருலதான் நிக்காக… கூட்டாளி ஒராள் படம் பாப்பம் என்டு சொன்னாரு..அவரத்தான் காத்துட்டு நின்ட…’
அப்போது அந்த இடத்துக்கு அவளது பிள்ளைகளும் வந்துவிட்டிருந்தனர். அவள் எழுந்து நின்றாள்.
‘போகட்டா…?’
“சரி…?
அவள் தன் மகள்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள். நான் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
சிறிது தூரம் சென்றபின் சட்டென திரும்பி என்னை நோக்கி வந்தாள். என் கண்களைப் பார்த்து,
‘அன்டக்கி என்ன உரமா நோகிச்சி தெரியுமா… ஊட்டயும் போய் நான் கத்தின தான் … உம்மாதான் திராவித் திராவி உட்டா’
என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பாராது திரும்பிச் சென்றாள். நான் அவள் என் கண்களில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.
அவளை என்றோ கொட்டியதற்கு அன்றுதான் எனக்கு வலித்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

Ada..ada..iam back to my teen