இந்தியக் (காலனிய) ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையும் தொடரும் மனநலப் பிரச்சினைகளும்

சமீபத்தில் இந்தியக் (காலனிய) ஒப்பந்தத் தொழிலாளர்கள் பற்றிய பன்னாட்டு கருத்தரங்கம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் (Durban) மாநகரில் நடைபெற்றது. இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட எண்ணற்ற இந்திய வம்சாவழியினர் பங்கு பெற்ற இந்த மாநாட்டில் நூற்றைம்பது வருடங்கள் கழித்தும் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தங்களின் அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் தலைமுறைகள் தாண்டி இவர்கள் சந்திக்கும் மனநலப் பிரச்சினைகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம். இந்திய வரலாற்றில் “ஒப்பந்தத் தொழிலாளர்கள் திட்டம்” (indentured labourers) என்பது காலனிய ஆதிக்கத்தின் ஒரு கருப்பு நிகழ்வு என்று தான் கூற வேண்டும். இருநூறு வருடக் காலனிய ஆதிக்கத்தின் தாக்கம் பல்வேறு வகையில் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் காலனிய ஆட்சியின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் சந்ததிகள் எதிர்கொண்டு வரும் மனநலப் பிரச்சினைகள், குறிப்பாக அதிக அளவு தற்கொலைகள்.

ஆயிரத்து எண்ணூற்றி முப்பத்தி மூன்றாம் (1833) ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் முதன் முறையாக அடிமை முறையை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றியது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் அடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதன் தாக்கம் அவர்களை மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆயிரக்கணக்கான தோட்ட முதலாளிகளை  வெகுவாக பாதித்தது. தோட்ட முதலாளிகளும் காலனிய அரசாங்கமும் மாற்று வழியைத் தேடிக்கொண்டிருந்த தருணமது. இந்தியாவில் அப்போதைக்கு நிலவிய மோசமான பொருளாதாரச் சூழ்நிலைகளான வறுமை, பஞ்சம், பசி, பட்டினி அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. முக்கியமாக தென் இந்தியாவில் (அப்போதைய மதராஸ் மாகாணத்தில்) ஏற்பட்ட அடுக்கடுக்கான பஞ்சம் குறிப்பாக தாது வருஷத்து பஞ்சம் (1876-1878) என்று அழைக்கக்கூடிய பெரும் பஞ்சம் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களைக் காவு வாங்கியதாக வில்லியம் டிக்பி (William Digby) தன்னுடைய ப்ராஸ்பரஸ் பிரிட்டிஷ் இந்தியா (Prosperous British India) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பஞ்சம் மிகப்பெரிய இடப்பெயர்வுக்குக் காரணியாக அமைந்தது. இதன் விளைவாக உலகின் பல்வேறு மூலைகளுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மக்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் தமிழ் மக்களும் உள்ளடங்குவர். இன்று உலகெங்கும் உள்ள தமிழ் இனத்தின் விழுதுகள் தங்களின் வேர்களைப் பதித்ததில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திட்டமும் ஒன்று என்றால் அது மிகையாகாது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. 1860-இல் இருந்து 1911 வரை 152,000 தொழிலாளர்கள் காபி, தேயிலை, கரும்பு மற்றும் சுரங்கத் தொழில்களில் மிகச் சொற்பமான வருமானத்திற்குப் பணியமர்த்தப்பட்டனர். 

வறுமையின் கோரப்பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள இத்தகைய இடப்பெயர்வு நடைபெற்றாலும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி இடைத்தரகர்களின் மூளைச் சலவையால்  இவர்கள் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் மிகச் செல்வச் செழிப்பான நாட்டிற்குச் செல்ல இருப்பதாகவும், மிக அதிக சம்பளத்தை வருமானமாக ஈட்டப் போவதாகவும் நம்ப வைக்கப்பட்டார்கள். Girmit.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலார்களின் முதல் நிலை தரவுகள் இதனை உறுதிசெய்கின்றன. அதே நேரத்தில் இவர்கள் எங்கு பணியமர்த்தப்படப் போகின்றனர், எவ்வளவு நாள் கப்பலில் பயணிக்க வேண்டும் போன்ற செய்திகள் தெளிவாகக் குறிப்பிடாமல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பணியமர்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களில் 85 சதவீதமானோர் இந்துக்களும், இருபதிலிருந்து முப்பது வயதிற்குட்பட்ட ஆண்களும் அதிக அளவில் இருந்துள்ளனர். பெரும்பாலும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களே இந்த திட்டத்தில் அதிகமாகப் பணியமர்த்தப் பட்டார்கள். 

மிகப்பெரிய செல்வத்தை ஈட்டி மிக விரைவில் சொந்த பந்தங்களுடனும் சேர்ந்துவிடுவோம் என்ற கனவுகளுடனே இவர்களது பயணம் துவங்கியுள்ளது. ஆனால் அவர்கள் கனவு முற்றிலும் பொய்த்துவிடும் அளவிற்கு மிக அவலமான நிலைகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலை இருந்திருக்கிறது. அவர்கள் குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். கப்பல் பயணத்தின் போது உடனிருந்தவர்களின் மரணம் மிக பெரிய அதிர்ச்சியை அவர்களுக்கு அளித்திருக்கக் கூடும். அளவுக்கு அதிகமான பணிச்சுமை, அதிக வேலை நேரம், சொற்ப சம்பளம், வாழ்வதற்கு தகுதியற்ற தங்கும் இடம், கெடுப்பிடியான தண்டனைச் சட்டம், முதலாளிகளின் அத்துமீறல் போன்றவை இவர்களை மேலும் பாதிப்படையச் செய்துள்ளன. அவர்கள் நாள் ஒன்றுக்கு 11 முதல் 18 மணி நேரம் வேலை செய்தார்கள். சிறு குற்றங்களுக்கும் பெரிய அளவில் தண்டனைகள் வழங்கப்பட்டன. வேலைச் சுமையைச் சமாளிக்க அவர்கள் போதைப்பழக்கங்களுக்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். பெண்களை வெறும் தொழில்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதியதாலும், தோட்ட வேலையில் அவர்களின் வேலை குறைத்து மதிப்பிடப்பட்டதாலும் குறைந்த அளவே அவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். இதனால் ஆண் பெண் விகிதாச்சாரம் பாதிப்படைந்தது மட்டுமின்றி பாலியல் தொல்லைகளுக்கும் பெண்கள் ஆளாக்கப்பட்டார்கள். கர்ப்பம் மற்றும் குழந்தைப் பேறுகாலத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு மற்றும் இதரப்படிகள் குறைக்கப்பட்டன. இத்தகையான சூழ்நிலைகள் ஒப்பந்தத் தொழிலாளர்களை உடலாலும் மனதாலும் பாதிப்படையச் செய்தது. முக்கியமாக காலரா, காச நோய், காமாலை, மலேரியா போன்ற எண்ணற்ற நோய்களுக்கு ஆளானார்கள். மிக முக்கியமாக அதிக அளவிலான தற்கொலைகள் நடைபெற்றன. பெரும்பாலான இறப்புகள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதல் வருடத்தில் இருந்தன. இதுபோன்ற எண்ணிலடங்காத் துயரங்களை இந்தத் திட்டம் கொண்டுள்ளதால் ஹ்யூ டிங்கர் – (Hugh Tinker) போன்றோர் இந்த ஒப்பந்த முறையை “அடிமை முறையின் மாற்று” என்று குறிப்பிடுகின்றனர்.இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு அங்கமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பல்வேறு காலனிகளில் ஒழிக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்களை மீள் உருவாக்கிக் கொள்ள மிகப் பெரிய காலம் தேவைப்பட்டது. இத்தொழிலாளர்கள் அடைந்த வலிகளும் வேதனைகளும் அவர்களை வாழ்க்கையின் எந்த நிலையிலும் எதிர்த்துப் போராடக் கூடிய உத்வேகத்தை கொடுத்தன. இன்று அவர்களின் சந்ததிகள் அரசியல், இலக்கியம், தொழில்துறை, மென்பொருள், விஞ்ஞானம். மெய்ஞானம், என பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர். இருப்பினும் தலைமுறைகள் தாண்டியும் அவர்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் மனநலச் சிக்கல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகெங்கும் அதிகப்படியான தற்கொலைகள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சந்ததிகளிடையே காணப்படுவதாக ஆராய்ச்சி கட்டுரைகள் கூறுகின்றன. உலகச் சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வின்படி 2014-ம் ஆண்டின் உலகின் அதிகமான தற்கொலைகள் பட்டியலில் தென் அமெரிக்க நாடான கயானா இரண்டாம் இடத்தை வகித்தது. இந்த நாட்டில் தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலோர் இந்தியரின் (ஒப்பந்தத் தொழிலாளர்களின்) வம்சாவளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஃபிஜி (Fiji) என்ற நாட்டில் 90 சதவீதம் தற்கொலைகள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன, ஆனால் அவர்கள் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் மட்டுமே ஆவார்கள். இதே நிலைதான் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட அனைத்து உலக நாடுகளிலும் நிலவி வருகின்றது. பணியமர்த்தப்பட்ட நாட்டில் கலாச்சாரம், இனம், பொருளாதார வாய்ப்புகள், அரசியல் சூழ்நிலை இன்றளவும் இவர்களுக்கு சவாலாக இருந்து வருகின்றன. இது மிகப்பெரிய அளவு இம்மக்களின் மனநலனை அச்சுறுத்தி வருகின்றது. ஹாலி (Halley) மற்றும் கௌடன்  (Cowden) தங்களின் ஆராய்ச்சிக் கட்டுரையில் காலனிய வரலாற்றின் தாக்கம் இன்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சந்ததிகளின் வாழ்க்கை முறையில் தொடர்ந்து கொண்டு இருப்பதே இத்தகைய மனநல சிக்கல்களுக்கு முக்கியமான காரணம் என்று வாதிடுகின்றனர். மஹாராஜ்-ராம்தயாள் (Maharaj-Ramdial) என்ற மனநல ஆராய்ச்சியாளர் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வலி இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என்று கூறுகின்றார். அஜா (Aja) என்ற கயானா நாட்டை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வம்சாவழியை சார்ந்த பெண் தன்னுடைய ‘ஜெனரேஷன்ல் ட்ராமா ஈஸ் எ வெபன் ‘ (Generational Trauma is a Weapon) என்ற கட்டுரையில் என்னதான் தான் அமெரிக்கா குடியுரிமை வைத்திருந்தாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களான தனது மூதாதையர்களின் வலி இன்னும் தன்னுள் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு இருப்பதாக எழுதியுள்ளார். எனவே இத்தகைய மனநலc சிக்கல்கள் காலனிய வரலாற்றின் எச்சம் என்றுதான் கூறவேண்டியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளிகளான கூலம் எச். வஹீத் (Goolam H. Vahed), அஸ்வின் தேசாய் (Ashwin Desai), சந்தோஷ் பிள்ளை (Suntosh Pillay) போன்றோரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வரலாற்றையும் மனநல பிரச்சனைகளையும் எடுத்து உரைத்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி ஆடு ஜீவிதம் போன்ற நாவல்கள் வரலாறு என்பது ஏதாவது ஒருவகையில் திரும்பத் திரும்ப நடைபெற வாய்ப்புள்ளது என்பதை பறைசாற்றுவதாகவும் வரலாற்றிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைப்பதாகவும் உள்ளதுன. எனவே இவர்களின் வரலாற்றைப் படிப்பதும் வரலாற்றைப் பதிவு செய்வதும் கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன்னால் மண்ணில் புதைக்கப்பட்ட நம் மூதாதையர்களின் வரலாற்றை அறிதல் என்று கூறுவது ஏற்புடையது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.