புதைகுழி மேல் நின்ற வாழ்க்கை

ஆறா வடு – சயந்தன்

ஒரு நாட்டின் அடக்குமுறை அரசின் ராணுவத்திற்கும், அதற்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் ஒரு விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான போர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீண்டு அதன் உச்சகட்ட வன்முறையில் வெடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கிடையே சிக்கிக் கொண்ட சாதாரண மக்களின் நிலை என்னாகும்? மூன்று தலைமுறைகளாகப் போரின் நடுவே நசுக்கப்பட்டு, உயிரையும் உடமைகளையும் இழந்து, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்ட அந்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

அவர்களில் சிலர் அந்த விடுதலை இயக்கத்தின் கொள்கையால் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டு, ஆயுதம் ஏந்தி போரில் இறங்கலாம்; அல்லது நேரடிப் போரில் பங்கு பெறாமல் மறைமுகமாக உதவலாம். சிலர் அந்த இயக்கத்திற்கே எதிரான அரசியல் நம்பிக்கையால் மாற்று இயக்கங்களில் இணைந்திருக்கலாம். வேறு சிலரோ, இந்தப் போரையும் வன்முறையையும் முற்றிலும் தவிர்த்து, அதே ஊரில் தங்களுக்குண்டான வாழ்க்கையை எப்படியாவது காப்பாற்றிக்கொண்டு வாழ விரும்பியிருக்கலாம். இன்னும் சிலர் இந்த மண்ணையே விட்டு தப்பி ஓடி, தொலைதூர நாடுகளில் புதுவாழ்வு ஒன்றை அமைத்துக்கொள்ள முயன்றிருக்கலாம்.

ஆனால் இந்த அத்தனை சாத்தியங்களிலும் எந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் கூட உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், மரணம் எந்த நிமிடமும் குண்டாகி நம்மைத் துளைக்கும் சூழலில், அந்த மக்களின் வாழ்விற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? தங்களின் காலடியில் உள்ள மண் எப்போது வேண்டுமென்றாலும் புதைகுழியாகி விடக்கூடிய சூழலில், அவர்கள் அனுபவிக்கும் வெற்றிகளையும் தோல்விகளையும், அவர்கள் செய்யும் துரோகங்களையும் காட்டும் விசுவாசங்களையும், அவர்கள் உருவாக்கும் சட்டங்களையும் அனுபவிக்கும் தண்டனைகளையும் — எந்த அறநெறியின் அடிப்படையில் நாம் மதிப்பிட முடியும்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சியாகவே சயந்தனின் “ஆறாவடு” நாவலை வாசிக்க முடிகிறது.

இந்த நாவல் ஈழச் சூழலில் நிகழ்ந்த விடுதலைப் போரைக் களமாகக் கொண்டு, போரும் வன்முறையும் எளிய மக்களின் வாழ்வை எவ்வாறு சிதைத்தன என்பதைக் கூறுகிறது. போரின் வெளிப்புற நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்வதற்குப் பதிலாக, அந்தச் சூழலில் வாழ்ந்த மனிதர்களின் உள்ளுணர்வுகளையும் முரண்பாடுகளையும் ஆராய்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்ற மக்கள் நம்பிக்கை, சில போர் வெற்றிகள், இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்கள், சிங்கள அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் போது, ஒரே அரசியல் கோணத்தை மட்டும் முன்வைக்காமல், அனைத்து தரப்பினரையும் பாரபட்சமின்றி விமர்சிக்கும் நேர்மையான பார்வை இந்த நாவலில் வெளிப்படுகிறது.

ஈழப் போரைக் குறித்து எழுதப்படும் பல படைப்புகள் பெரும்பாலும் ஒரு அரசியல் நிலைப்பாட்டை முன்னிறுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கின்றன. சில படைப்புகள் இயக்கத்தை முழுமையாக ஆதரிக்கும்; சில படைப்புகள் அதையே முழுமையாக எதிர்க்கும். ஆனால் “ஆறாவடு” இந்த இரு முனைகளுக்கும் இடையில் நின்று, போரின் மனித விலையைப் பற்றிய ஒரு சிக்கலான, நேர்மையான பார்வையை முன்வைக்கிறது. அதனால் இந்த நாவல் ஒரு அரசியல் பிரசார நூலாக அல்லாமல், மனித அனுபவத்தின் ஆழத்தை ஆராயும் இலக்கிய முயற்சியாக மாறுகிறது.

நாவலின் பிரதானக் கதாபாத்திரம் அமுதன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போர்வீரன். எதிரிகளின் குண்டுகளுக்குத் தன் கால்களைப் பலியாகக் கொடுத்துவிட்டு, இயக்கத்தின் அரசியல் பிரிவில் பணிபுரிபவன். தனது காதலின் நிமித்தம் இலங்கையை விட்டு கள்ளப்படகில் இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயல்வதில் தொடங்கும் கதை, அவனது சுயவிமர்சனத்திலிருந்து ஆரம்பித்து, அவன் சார்ந்திருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கம், புலிகளுக்கு எதிரான மாற்று இயக்கங்கள், அவர்களின் வன்முறை, சிங்கள மற்றும் இந்திய ராணுவங்களும் அரசுகளும் என பல திசைகளில் விரிந்து செல்கிறது. இந்தப் பல அடுக்குகளும் ஒரே நேரத்தில் சேர்ந்து ஒரு சிக்கலான அரசியல் வரைபடத்தை உருவாக்குகின்றன.

போர்க்களப் பின்னணி கொண்ட நாவல்களில் வரும் வழக்கமானதொரு படைவீரன் அல்ல அமுதன். வாளோடு முன்தோன்றிய மூத்தகுடியில் பிறந்துவிட்டதனாலேயே, வீரமும் லட்சிய வேகமும் கொண்டு ‘எழுக போருக்கு’ என செருக்களத்தைத் தேடிச்சென்ற புறநானூற்று வீரனல்ல அவன். தன் செருப்பைத் திருடிச்சென்றவனைத் தேடிச்சென்று மிரட்டியதற்காக இந்திய ராணுவத்திடம் மாட்டிக்கொண்டு மரணத்தின் விளிம்புவரை சென்று, அவர்கள் தேடுபவர்களைக் காட்டிக்கொடுத்து உயிர்பிழைக்கிறான்.   இந்திய ராணுவத்திடமிருந்து  தப்பிப்பதற்காக, மக்கள் விடுதலை இராணுவத்தில் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து சேர்கின்றான். பின் புலிகளிடம் மாட்டிக்கொள்கையில் தனது பொறுப்பாளர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டு போராளியாக மாறுபவன், இறுதியில் தன் காதலுக்காக அங்கிருந்தும் தப்பி இத்தாலிக்குப் பயணிக்கிறான். ஆயினும் ஈழத்தின் போர்ச்சூழலையும், மக்களின் அவலநிலையையும் எழுதிச்செல்லும் விதத்தில் அமுதன் எப்படியாவது தப்பிவிட மாட்டானா என்று நம்மைத் தவிக்கவைத்து விடுவது சயந்தனின் வெற்றி.     

ஒரு விடுதலை இயக்கத்தின் பரிணாம மாற்றத்தைப் பற்றித் தெளிவாகப் பேசுவது இந்த நாவலின் இன்னொரு முக்கியமான பலம். மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திய ஒரு இயக்கம், பின்னர் தானே ஒரு ஆட்சியமைப்பாக மாறி மக்களிடமிருந்து வரி வசூலித்து, நிபந்தனையற்ற கீழ்ப்படிதலைக் கோரும் நிலைக்கு எவ்வாறு மாறுகிறது என்பதை சயந்தன் திறம்படக் காட்டுகிறார். ஆரம்பத்தில் மக்கள் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற இயக்கம், பின்னர் அதே மக்களிடமிருந்து எவ்வாறு அன்னியமாகிறது என்பதையும் நாவல் நினைவூட்டுகிறது. வெற்றி பெற்ற போர்களுக்கே பெயர்கள் சூட்டப்பட்டு அவையே ஊடகங்கள் வழியாக மக்களிடம் பரப்பப்படுகின்றன; தோல்வியுற்ற போர்கள் செய்திகளில்கூட இடம் பெறாமல் மறைக்கப்படுகின்றன என்ற சுட்டிக்காட்டும் பகுதி, போரின் அரசியல் பிரச்சார இயந்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிகாரத்தைப் பிடித்த எந்த இயக்கமும், அது எந்த அரசியல் பெயரிலேயே இருந்தாலும், தன் தோல்விகளை மறைத்து வெற்றிகளை மட்டுமே பெரிதாக்கி காட்டும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளும் என்பதை இந்த நாவல் நினைவூட்டுகிறது.

நாவலில் வரும் நேரு கதாப்பாத்திரம் வழியே சயந்தன் இயக்கத்தைக் குறித்து முன்வைக்கும்  விமர்சனங்கள் மிகக் கூர்மையானவை. வெற்றிகள் தங்கள் பக்கம் இருந்தபோது அமைதிக்காக இறங்கி வராமல் இருப்பது, மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்கியது, சாதி, காதல், மண உறவு உள்ளிட்ட தனி மனித உரிமைகளில் கூட தலையிட்டது என அவர் வைக்கும் அத்தனை விமரிசனங்களும் நேர்மையாகவும் உள்ளன. அவை வெறும் குற்றச்சாட்டுகளாக இல்லாமல், அனுபவத்தின் கசப்பிலிருந்து வந்த நேர்மையான கேள்விகளாகத் தோன்றுகின்றன. “உங்கள் இயக்கம் மட்டும் இல்லாவிடில் இந்த மக்களின் வாழ்வு எத்தனை மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என்று அமுதனிடம் நேரு கூறுவதை வாசிக்கையில் உண்மையில் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.  தன்னால் பதிலளிக்க முடியாத அத்தனை கேள்விகளுக்கும்  “எல்லாம் அண்ணைக்குத் தெரியும்” என்று சொல்லிப்போகிற அமுதனால் அந்த இடத்தில் நேருவிடம் ஆத்திரத்தை மட்டுமே காட்டமுடிகிறது.

ஆறாவடு ஒரு அரசியல் விமர்சன நாவலாக மட்டும் அல்ல; அது மனித வாழ்க்கையின் நொறுங்கிய துண்டுகளைப் பற்றிய கதையாகவும் இருக்கிறது. இத்தாலிக்குச் செல்லும் கள்ளப்படகில் பல தமிழர்களுடன் சேர்ந்து சுமார் பத்து சிங்களர்களும் பயணிக்கிறார்கள். இந்தச் சிறிய நிகழ்வு நாவலின் அரசியல் பார்வையை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. “எங்களுக்கு ஏராளமான இடர்கள்; நிற்க இடமின்றி ஓடுகிறோம். உங்களுக்கு என்ன குறை? நீங்கள் ஏன் ஓட வேண்டும்?” என்று அமுதன் கேட்கும் போது, சிங்கள ராணுவப் பணியிலிருந்து தப்பி இத்தாலிக்குத் தஞ்சம் தேடும் பண்டாரவின் பதில் வாசகனை ஆழமாகக் கலங்கடிக்கிறது.

போரின் இரு பக்கங்களிலும் சாதாரண மனிதர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்; மறுபக்கம் சிங்கள இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு போரில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார்கள். இந்தச் சந்திப்பு போரின் அரசியல் எல்லைகளைத் தாண்டி மனித துயரத்தின் பொதுவான தன்மையை வெளிப்படுத்துகிறது. 

நாவலில் இடம் பெறும் சில உவமைகள் மிகவும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. தாகம் கொண்ட மேகம் கடல் நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்கையில் அதை முதன் முதலில் காணும் இளவயது அமுதன், அப்போது நீரில் இருக்கும் மீன்கள் என்னவாகும் என்று தன் மாமனிடம் கேட்கிறான். “அங்கிருக்கும் மீன்களும் மனிதர்களும் எல்லாம் உறிஞ்சி எடுக்கப்பட்டு முழுங்கப்பட்டுவிடும்” என்ற மாமனின் பதில் பின்னர் நாவலின் மைய உவமையாக மாறுகிறது. போரெனும் ஊழிக்காலம் ரத்த தாகம் கொள்கையில், அத்தனை உயிர்களும் அவ்வாறே தூக்கிவீசப்பட்டும் முழுங்கப்பட்டும் விடுகின்றன. 

நாவலின் கட்டமைப்பும் கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்த சிறுகதையைப் போலத் தோன்றினாலும், பின்பகுதியில் ஆசிரியர் அவற்றை ஒன்றோடொன்று இணைத்து ஒற்றைச் சித்திரமாகக் கட்டியெழுப்புகிறார். ஆரம்பத்தில் சிதறியதாகத் தோன்றும் நிகழ்வுகள் பின்னர் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை வாசகர் உணரத் தொடங்குகிறார். ஆயினும் தொடக்கத்தில் வரும் அத்தியாயங்கள் ஒரு தொடர்கதை உணர்வைத் தருவதையும் தவிர்க்க முடிவதில்லை. சில இடங்களில் ஆசிரியரின் நடை “அவரது பதில் இவ்வாறாக இருந்தது” போன்ற மொழிபெயர்ப்பு ரீதியிலான வாக்கியங்களாக மாறுவதும், “அவ்வாறாக இந்த அத்தியாயம் முடிகிறது” போன்ற குறிப்புகள் இடம் பெறுவதும், நாவலின் ஒட்டுமொத்தத் தீவிரத்துடன் ஒத்துப் போகாததாகத் தோன்றலாம். ரத்தமும் சதையுமாகத் தெறிக்கும் போர்க்களக் காட்சிகளும் வன்முறையும் நாவல் முழுவதும் தொடர்ந்தாலும், சயந்தன் நாவலைக் கட்டமைத்த விதமும், எள்ளலும் பகடியும் கலந்த அவரது விமர்சன நடைமும் வாசகனை தொடர்ந்து ஈர்த்துக்கொண்டே செல்கின்றன. 

நாவலின் இறுதி பகுதி மிகவும் வலுவான குறியீட்டு காட்சியுடன் முடிகிறது. காலிழந்த அமுதனின் ஃபைபர் கிளாஸ் செயற்கைக் கால்கள் கடலில் கரையொதுங்குகின்றன. பின்னர் அவை எத்தியோப்பியாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் காலிழந்த எரித்ரிய விடுதலைப் போராளியிடம் சேர்கின்றன. இந்தக் காட்சி ஒரு தனிப்பட்ட கதையின் முடிவாக மட்டுமல்ல; உலகின் பல பகுதிகளில் தொடர்ந்துகொண்டே இருக்கும் மக்கள் போராட்டங்களின் நீட்சியை நினைவூட்டும் குறியீடாகவும் அமைகிறது. இந்தக் குறியீடே நாவலின் தலைப்பை நினைவூட்டுகிறது. “ஆறாவடு” என்ற சொல் குணமாகாத காயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு மனிதனின் உடலில் இருக்கும் காயமாக மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் நினைவில் நீங்காத காயமாகவும் அதை வாசிக்கலாம். ஈழப் போர் முடிந்துவிட்டதாக அரசியல் வரலாறு கூறினாலும், அதன் காயங்கள் இன்னும் பலரின் வாழ்க்கையிலும் நினைவுகளிலும் நீடித்துக்கொண்டிருக்கின்றன. அந்த ஆறாத காயத்தின் நினைவாகவே இந்த நாவல் நிற்கிறது.  இது தீயினாற் சுட்ட புண் தான், ஆனாலும் ஒருநாளும் ஆறாதது. 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.