சின்னா தேவி

தெலுங்கு மூலம் : பத்மலதா ஜெயராம் நந்திராஜு

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

பொழுது சாய்ந்து நீண்ட நேரம் ஆனது. நகர வீதிகளில் எப்போதோ ஓரிரு சிறு ஓசைகள் கேட்டன. வீடுகளில் எரிந்த தீபங்களின் ஒளி குறைந்து மினுக்மினுக்கென்றது. அவ்வப்போது கேட்ட குதிரைகளின் குளம்படி ஓசைக்கு அஞ்சி பறவைகள் கூச்சலிட்டன. 

பதினாறு வயது கிருஷ்ணதேவன் உறக்கம் பிடிக்காத கண்களைத் திறந்தும் மூடியும் யோசனையில் ஆழ்ந்திருந்தான். “எத்தனை காலம் தான் இந்த அஞ்ஞாதவாசம்? பகலில் அலுப்புத் தெரியாமல் நேரம் கடந்து விடுகிறது. ‘அப்பாஜி’ பிரம்ம முகூர்த்தத்திலேயே அவனை எழுப்பி யோகாப்பியாசம் செய்யச் செய்வார். ‘வாட்பயிற்சியும், சிலம்பமும் கற்றுத் தருவதற்கு ‘சித்தய்யா’ அதற்குள் தயாராக இருப்பார். இரண்டு மணி நேரக் கடினமான பயிற்சிக்குப் பிறகு கஸ்தூரி, ஜவ்வாது சந்தனம் கலந்த நீர்த் தொட்டியில் நீராடல். அதன் பிறகு பாதாம் பருப்பு அரைத்துக் கலந்த அரைப்படி பாலைக் குடிக்க வேண்டும். அதன் பிறகு சற்று ஓய்வு. மனத்துக்குப் பிடித்தபடி மாளிகையின் பூந்தோட்டத்தில் சுற்றி வரலாம். அதன் பிறகு அன்பான ‘அப்பாயம்மா’, கேழ்வரகு கஞ்சியில் வெண்ணையும் தயிரும் கலந்து, தொட்டுக் கொள்வதற்கு ருசியான குழம்பும் சேர்த்து ஊட்டி விடுவாள். 

அவள் பெயர் அதுதானா என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அப்பாஜியின் மனைவி அவனுக்குத் தாய்க்குச் சமம். அதனால் அவளை ‘அப்பாயம்மா’ என்றுதான் அழைப்பான். குதிரை சவாரி, கத்தி, வாள், அம்பு, சூலம் முதலிய ஆயுதங்களால் போர்ப் பயிற்சி. அதற்குப் பிறகு கடவுள் வழிபாடு, குரு போதனை, நீதி நூல்கள், புராண இதிகாசப்  பாடங்கள், உலகியல் குறித்தும் ஆன்மிகம் குறித்தும் ஆச்சாரியர்களின் உபன்யாசம்  என்று ஏதோ சிறு வேறுபாடுகளோடு தினசரி நிகழ்சிகளின் அட்டவணை இருக்கும்.  

அப்பாஜியின் அந்த விசாலமான வளாகத்தைத் தவிர வெளி உலகைப் பார்த்து எத்தனை நாளானதோ? அவனுடைய தந்தை வீரநரசிம்மராயர் தனக்குப் பிறகு கிருஷ்ணதேவனுக்கே பட்டம் கட்ட வேண்டும் என்று மரணப் படுக்கையில் ஆணையிட்டார். கிருஷ்ணதேவனின் பெரியம்மா அவனைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினாள். அப்போது அப்பாஜி (திம்மரசு) அவனை மறைத்து வைத்து, ஆட்டின் கண்களைக் காட்டி கிருஷ்ணதேவன் மரணமடைந்தான் என்று நம்ப வைத்தார். அன்றிலிருந்து அவனை அஞ்ஞாதவாசத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறார். அவனை விஜயநகரத்தின் அரசனாக முடி சூட்ட வேண்டும் என்று அவர் சபதம் செய்த காட்சி இன்றும் அவன் கண்களில் நிழலாடியது. 

அவன் உயிரோடிருப்பது வெளியில் தெரிந்தால் அவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆனால் எத்தனை காலம்தான் இப்படி வாழ முடியும்? யாரும் இல்லை என்று நினைத்து தன் மனத்தில் உள்ளதை வெளியில் சொன்ன கிருஷ்ணதேவன் ஓசை கேட்கவே சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். பிறையில் வைத்திருந்த தெய்வத்தின் தீபத் திரியைத் தூண்டி விட்டு, அருகில் வந்தார் திம்மரசு. 

“உன்னுடைய வேதனையும் கவலையும் எங்களுக்குத் தெரியும் கிருஷ்ணா. இன்னும் கொஞ்ச நாள்தான். நீ துளுவ வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும் ஆந்திர சாம்ராஜியத்தை நிலைநிறுத்தப் போவது நீ ஒருவன்தான். இது உண்மை. வித்யாரண்ய சுவாமி மகா விஷ்ணுவின் அம்சம். அவருடைய வாக்கு பொய்க்காது, மகனே. உன்னைப் பெற்ற தாயார் நன்றாக இருக்கட்டும். நாகமாம்பாவின் ஆசியோடு தென்னாட்டுக்கு ஏக சக்ராதிபதியாக நீ மகுடம் சூடும் நாள் விரைவில் வரப் போகிறது. இந்த பூமித்தாய் அதற்காகக் காத்திருக்கிறாள். அந்த நொடிக்காகவே இந்தக் காத்திருப்பு” என்றார்.  

“மன்னியுங்கள் அப்பாஜி” என்று தலை வணங்கினான் கிருஷ்ணதேவன். அப்பாஜி சிரித்தபடி கூறினார், “மன்னிக்க வேண்டிய தவறு எதுவும் நீ செய்யவில்லை கிருஷ்ணா. உன்னை மகிழ்விக்கக் கூடிய ஒரு இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வதற்காகவே இப்போது இங்கு வந்தேன். இதோ, இந்தத் தலைப்பாகையைச் சுற்றிக் கொள். இந்த வேட்டியை ஒரு கிராமத்தானைப் போலக் கட்டிகொள். தோளை இந்த உத்தரீயத்தால் மூடிக் கொள். என்னோடு வா” என்று கூறிவிட்டு அப்பாஜி அறையின் வாயிலைத் தாண்டினார். 

சரத் கால பௌர்ணமி. வெண்ணிலவின் ஒளி எங்கும் பரவியது. வேணுகோபால ஸ்வாமி ஆலயத்தில் ருக்மிணி சத்தியபாமாவோடு சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா உலகத்தைக் காத்துக் கொண்டிருந்தார். குடி மக்களோடு சேர்ந்து ஆலய வளாக அரங்கத்தில் அப்பாஜியும் கிருஷ்ணதேவனும் நான்காவது வரிசையில் அமர்ந்திருந்தனர். அனைவரின் கண்களும் மேடை மேல் லயித்திருந்தது. திடீரென்று மிருதங்க ஒலி “தகிடதகிட தக தகிடதகிட தக தகிட தகிட” என்று ஒலித்தது. ஜல் ஜல் என்று சலங்கை ஒலியோடு நர்த்தகி மேடையில் பிரவேசித்தாள். 

“அதோ நர்த்தகி, நர்த்தகி ‘சங்கமா’ தேவி” என்று பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரித்தனர். அவர்களின் கூக்குரல் ஆலயமெங்கும் எதிரொலித்தது. நர்த்தகி விண்ணிலிருந்து இறங்கிவந்த மின்னலைப் போலத் தோன்றினாள். அரங்க பூஜை செய்தபின் நாட்டியம் தொடங்கியது. உயிருள்ள சிற்பத்தைப் போல அமர்ந்து உலடெங்கும் கண்களாக கிருஷ்ணதேவன் நாட்டியத்தைப் பார்க்கத் தொடங்கினான். 

பார்வையைத் திருப்ப இயலாத அழகி சங்கமா தேவி. லயத்தோடு பொழியும் அருவி போன்ற இப்படி ஒரு நாட்டியத்தை இனி உயிருள்ளவரை அவனால் பார்க்க இயலாது. 

மதனகோபாலனின் குறும்புச் சேஷ்டைகளால் துன்புற்று, இன்பமாகக் கோபித்து, அவனைத் தேடி அலையும் கோபிகா கீதத்திற்குத் தன் உடலைச் சமர்பித்த ராஜ நர்த்தகியின் புதல்வி ‘சங்கமா தேவி’, கிருஷ்ணதேவனின் மனத்தை முழுமையாகக் கொள்ளை கொண்டாள்.  

இளமையில் அடிவைத்த கிருஷ்ணதேவன், நள்ளிரவு வரை தொடர்ந்த நாட்டிய நிகழ்ச்சியின் களிப்பில் மூழ்கியிருந்தான். நிகழ்ச்சி முடிவடைந்தது. நடனக் குழு மேடையிலிருந்து இறங்கிச் சென்றது. 

அன்றிரவு கிருஷ்ணதேவனுக்கு உறக்கம் வரவில்லை. அந்த ஒரு இரவு மட்டுமே அல்ல. அடுத்த ஒரு வாரம் வரை அவனுடைய கண்களும் மனமும் உறக்கத்தை நெருங்க வில்லை. கண்களை மூடினாலும் திறந்தாலும், உடற்பயிற்சி செய்தாலும், போர்ப்பயிற்சி செய்தாலும், எங்கிருந்தாலும் சங்கமாதேவியே அவனை ஆட்கொண்டிருந்தாள். 

அந்த இளம்பெண்ணின் விசாலமான கண்கள், கடைக்கண் பார்வை, சொகுசான நடை, சொப்பு போன்ற சிறிய வாய், மெல்லிய உதடுகள், சோர்வறியாத அவளுடைய நடனம் என்றிவ்வாறு ஒவ்வொரு அணுவில் அவள் அழகி.

மயக்கும் அவளுடைய இளமையின் சௌந்தர்யத்தை கிருஷ்ணதேவனால் மறக்க இயலவில்லை. இனி அவனால் தாங்க முடியாது. அப்பாஜியின் கண்ணை மறைத்து கிருஷ்ணதேவன் வீட்டை விட்டு வெளியில் வந்தான். அவன் கால்கள் அவளுடைய இருப்பிடத்தை நோக்கி நடந்தன. அவனுடைய வேகமான நடை நடனமங்கையரின் வசிப்பிடத்தை விரைவில் சென்றடைந்தது. அவனுடைய கண்கள் வீடு வீடாகத் தேடின. “யாரது? யார் வேண்டும்?” நள்ளிரவிலும் வெளிச்சத்தோடு விளங்கிய ஒரு நாட்டிய மங்கையின் வீட்டு வாயிலில் நின்றிருந்த நடு வயதுப் பெண்மணி கிருஷ்ணதேவனை வினவினாள். “சின்னா தேவி வேணும். அழகொழுகும் சின்னா தேவியை நான் பார்க்கணும். குறுக்கே நிற்காதீங்க.. விலகுங்க” என்றான். ஆஜானுபாகுவான கிருஷ்ணதேவன் ஒரு கையால் அந்தப் பெண்ணை ஒதுக்கித் தள்ளிவிட முடியும். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை.

“யார்? சின்னா தேவியா? அந்தப் பெயரில் இங்கு யாரும் இல்லையே. ஆனால், இளமை முதிராத பதினாறு வயது பாலகன் நீ. இங்கே உனக்கு என்ன வேலை? போ போ. வழி தவறி இங்கு வந்துவிட்டாய் போலுள்ளது. வீட்டுக்குப் போய் பால் சாதம் சாப்பிட்டுத் தூங்கு போ” என்று கூறி களுக்கென்று சிரித்தாள் அந்தப் பெண். 

“வழி தெரிந்துதான் வந்தேன். பௌர்ணமி இரவில் வேணுகோபால சுவாமி ஆலயத்தில் நடனமாடி மயக்கிய சின்னா தேவி இந்தப் பக்கம் தான் வந்தாள். நான் பார்த்தேன். நகருங்கள்” என்று கூறி அவளைக் கூர்ந்து பார்த்தான் கிருஷ்ணதேவன். 

தலை குனிந்து நகர்ந்தாள் அந்தப்பெண். அந்த மாளிகையின் உட்புறம் நவரசங்களை   விளக்கும் ஓவியங்களோடும், அபிநயம் காட்டும் சிற்பங்களோடும் ஒரு கலைக்கூடமாக விளங்கியது. 

“யாருப்பா நீ? அரச குலத்தவரைப் போலுள்ளாய் இது அரச குலத்தவருக்கான இடம்  இல்லை. யாருக்காக உன் வருகை?” என்று கேட்டாள் அன்று நட்டுவாங்கம் பிடித்த பெண். 

“சின்னா தேவியைப் பார்க்கணும். அதான் சங்கமா தேவி” அவனுடைய நடுங்கும் உதடுகள் தெளிவில்லாமல் சொற்களை உதிர்த்தன. கிருஷ்ணதேவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கண்களுக்கு சங்கமா தேவி தென்பட்டாள். இருவரின் கண்களும் சந்தித்தன. 

மீனைப் போலத் துள்ளிய கண்களை மூடும் முன்னுச்சிச் சுருள் முடியைத் தாமரைத் தளிர் போன்ற விரல்களால் தள்ளி விட்டபடி, ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த  கங்கையைப் போல அங்கு வந்து நின்றாள் சங்கமா தேவி. அவளுக்குப் பதினைந்து வயதுக்கு மேல் இருக்காது. அவளுடைய மேலாடை தெரிந்தும் தெரியாமலும் இருந்த இளமையை மறைக்க முயன்று தோற்றது. பிஞ்சு முகத்தில் அழகு துள்ளி விளையாடியது. 

மந்திரத்தால் கட்டுண்டவன் போல அவளை நெருங்கிய கிருஷ்ணதேவன், கிடுகிடுவென்று ஒப்பிப்பதுபோல, “என் பெயர் கிருஷ்ணதேவ ராயன். நரசிம்மராயரின் புதல்வன். துளுவ வம்ச க்ஷத்திரியன்” என்றான். 

“நீங்களா? தாங்கள் பிரபு அல்லவா? அரசே, நீங்கள் உயிரோடுதான் இருக்கிறீர்களா?” சங்கமாதேவியின் தாய் ‘வல்லமாதேவி’ அதிர்ந்து போய் வினவினாள்.  

கிருஷ்ணதேவனின் பதிலுக்காக சங்கமா தேவி காத்திருக்கவில்லை. “பிரபு, என்னை மன்னிக்க வேண்டும். என் நாட்டியமும் கானமும் ஆலயத்தில் கொலுவீற்றிருக்கும் வேணுகோபால சுவாமிக்கு மட்டுமே உரித்தானது. தயவு செய்து தாங்கள் திரும்பச் சென்று விடுங்கள்” அவனை வணங்கிவிட்டுச் சட்டென்று திரும்ப யத்தனித்த சங்கமாதேவியின் கையைப் பிடித்து நிறுத்தினான் கிருஷ்ணதேவன்.  

அவனை அருகில் நெருக்கமாகப் பார்த்தாள் சங்கமா தேவி. மன்மதனே மனித வடிவில் வந்தது போல் நின்றிருந்த அவன் கண்களில் காமம் இல்லை. இச்சையும் இல்லை. அன்பு இருந்தது. பாசம் இருந்தது. அவளுடைய அழகை ஆராதிக்கும் ஆச்சர்யமே அதிகம் தென்பட்டது. அவர்களுடைய இருவரின் கர ஸ்பரிசத்தில் நட்பு மிளிர்ந்தது. இருவரின் கண்களும் காவியங்களை விஞ்சிய கவிதைகளை மொழிந்தன. 

அவளுடைய கண்ணிமைகள் கீழிறங்கின. ஒருவர் கையில் ஒருவர் அடங்கிப் போனார்கள். சொல்லுக்கடங்காத எண்ணங்கள் அவர்களிடம் பொங்கி வரவே, அவளைத்  தொடர்ந்து படிக் கட்டுகளைத் தாண்டி அவளுடைய அறைக்குள்ளும் இதயத்திற்குள்ளும் அவன் புகுந்தான். 

“நீங்கள் யார்?” 

“நான், நான் தான்”

“சாமர்த்தியம் தான். என்ன கோரிக்கையோடு இங்கே வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்?” மஞ்சத்தில் அமர்ந்த அவனுக்கு வெண்சாமரத்தால் வீசியபடி வினவினாள் சங்கமாதேவி.  

“சங்கமாதேவியின் மனத்தில் சங்கமிக்க வேண்டும் என்று வந்தேன். எந்த கோரிக்கையும் இல்லாத நிலையில் இப்போது இருக்கிறேன் என்பதே உண்மை. சின்னா தேவி, உன் சந்நிதி என்னை நான் மறக்கும்படிச் செய்கிறது” என்றான் கிருஷ்ணதேவன். 

“சின்னா தேவி” என்ற அவனுடைய அழைப்பு, சங்கமா தேவியின் காதுகளில் அமிழ்தத்தை ஊற்றியது போல இனித்தது. முன்னெப்போதும் அறியாத மோகம் அவளில்  உதித்து அவளை எரித்தது. சின்னாதேவியாக மாறிய சங்கமாதேவி அன்று இரவு கிருஷ்ணதேவனுக்கு பிரிய சகியாக மாறி அவனோடு சதுரங்கமாடினாள். நாட்டிய முத்திரைகளால் அவளை மகிழ்வித்தாள். காதலியாக மாறி அவனைக் கொஞ்சினாள்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும், கண்களில் தெரிந்த ஆசையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டும் ஒன்றுபட்ட இதயத்தோடு இரவு முழுவதும் கழித்தார்கள். ‘நகாரா’ ஒலி அவர்கள் காதில் விழுந்து பொழுது புலர்ந்ததை அறிவித்தது. கிருஷ்ணதேவன் அவளிடமிருந்து பிரியாவிடை பெற்று, அவள் கன்னத்தில் உதிர்ந்த  கண்ணீரைத் தன் விரல் நுனியால் துடைத்துவிட்டுக் கிளம்பினான் 

வண்டின் இறகு போன்ற கருத்தத் தலைமுடியை மறைத்த தலைப்பாகை, உருண்டு திரண்ட உடல், இளமையின் தொடக்கத்தை அறிவிக்கும் அரும்பு மீசை, ஆறடி ஆண்மகன் நடந்து வருவதைக் கண்டால் போதும். சின்னாதேவிக்கு அனுதினமும் பண்டிகையே. அவளை அவன் “சின்னா” என்று அழைத்த போதெல்லாம் ஒரு கோடி வீணை நாதங்கள் ஒருசேர அவள் உள்ளத்தில் ஒலித்தன.

“சின்னா, நீ என் உயிர். நம் இருவருக்கும் முற்பிறவித் தொடர்பு ஏதோ பாக்கி உள்ளது  என்று நினைக்கிறேன். உன் நட்பு, நசுக்கப்பட்ட என் பால்யத்தின் துயரங்களை மறந்து போகச் செய்கிறது. எதிர்கால வாழ்க்கையே என் உள்ளங்கையில் தெரிவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. “கிருஷ்ணதேவா, இந்த விஜய நகரத்து ஆண்கள் எல்லோரையும் விடத்  துணிச்சல் மிக்க வீரானாக, ஒரு மகாராஜாவாக நீ உயர  வேண்டும்” என்று அப்பாஜி கூறிய வார்த்தைகள் எனக்குத் தலைமேல் வைத்துத் தாங்க வேண்டியவை. ஆனால் நான் மாறிவிட்டேனா? வழி தவறிச் செல்கிறேனா? புரியவில்லை. சின்னா, காவியங்களில் புகழப்படும் எட்டு வித கதாநாயகிகளை நான் உன்னில் காண்கிறேன், என் ப்ரிய சகீ. என்னில் பாதியாக நீ இருப்பதை உணர்கிறேன். இந்தப் பிறவிக்கு இது போதும் என்று தோன்றுகிறது” சின்னாதேவியின் மடியில் தலை சாய்த்துப் பேசினான் கிருஷ்ண தேவன். 

“அப்படிச் சொல்லாதீர்கள், அரசே. தற்போது நம் தேசம் சிக்கலில் உள்ளது. நாற்புறமும் பகையும், சதியம், வஞ்சனையும் ஒளிந்துள்ளன. நம் மக்களின் நம்பிக்கையைக் உருக்குலைத்து, கோவில்களை இடித்து, நம் கலாசாரத்தை முழுவதும் அழிக்கத் துடிக்கும் மத வெறியர்கள் அதிகரித்து வருகிறார்கள். தங்களுடைய சுயநலத்துக்காக சின்னச் சின்ன ராஜ்யங்கள் எல்லாம் அவர்களோடு இணைந்து வருகின்றன. பெண்களின் மானமும், எல்லைகளின் பாதுகாப்பும் நடக்காவிட்டால் நம் இனம் இருக்காது. அப்பாஜி கூறியது போல தாங்கள் மட்டுமே அதற்குத் தகுந்தவர். இந்தப் பிறவி முழுவதும் நான் உங்கள் தாசியாக சேவை புரிவேன். கடமையைச் செவ்வனே முடித்து வாருங்கள் பிரபு. சென்று வாருங்கள்” என்று கூறித் தன் நெற்றியின் குங்குமத்தைத் தொட்டு கிருஷ்ணதேவனின் நெற்றியில் இட்டு வழியனுப்பினாள் சின்னாதேவி.  

“சின்னா, இந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கு பட்டாபிஷம் செய்து கொண்ட அடுத்த வினாடி உன்னை என் பட்டமகிஷியாக்கிக் கொள்வேன். இது சத்தியம்” என்று அவளுக்கு வாக்களித்தான். 

“அரசே, எனக்கு அப்படிப்பட்ட பேராசையெல்லாம் இல்லை. உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே நடனமாடி, இறுதிவரை உங்களோடு இருக்கும் வரம் கொடுங்கள். அது போதும் எனக்கு” கிருஷ்ணதேவனின் விசாலமான மார்பில் சாய்ந்து சின்னாதேவி  உணர்ச்சி பொங்கக் கூறினாள். அவள் தன்னுடைய பெயரை மட்டுமல்ல, தன் இருப்பையே அவனுக்குத் தாரை வார்த்தவளாகக் காணப்பட்டாள். 

**** 

“நீ விஜய நகரத்தின் வருங்கால சாம்ராட். ஒரு விலைமாதுவுக்கு அடிமையாகலாமா, கிருஷ்ணதேவா? இதுதானா உனக்கு நான் கற்றுக் கொடுத்த பண்பாடு? நான் உன்னை பாதுகாத்து வளர்த்தது இதற்குத் தானா?” வருத்ததோடு கேட்டார் அப்பாஜி. 

கிருஷ்ணதேவனிடம் இந்த மாற்றத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. தன் கண்ணை மறைத்து கிருஷ்ணதேவன் இப்படி ஒரு செயலைச் செய்வான் என்று அவர் கறபனையில் கூட நினைக்கவில்லை. 

“அப்பாஜி, என்னை மன்னியுங்கள். அவள் விலைமாது அல்ல. எனக்காகவே பிறப்பெடுத்த  என் மறுபாதி அவள். குலத்தைக் குறுக்கே வைத்துத் தடுத்து எங்களைப் பிரிக்க வேண்டாம். நான் சின்னாதேவியைக் காதலிக்கிறேன். விவாகம் செய்து கொண்டு பட்டமகிஷியாக்கிக் கொள்வதாக அவளுக்கு வாக்களித்திருக்கிறேன். ராஜ்ஜியத்தைக் கூட தியாகம் செய்வேனே தவிர சின்னாதேவியை விட்டுப் பிரிய சம்மதிக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அப்பாஜி” என்றான்.

அவன் சொற்களைக் கேட்டு அப்பாஜி அதிர்ச்சிக்குள்ளானார். இளவரசனுக்குப் பல விதமாக புத்தி சொல்லிப் பார்த்தார். அச்சமூட்டினார். எச்சரித்தார். கோபித்துக் கொண்டார். என்ன செய்தும் கிருஷ்ணதேவராயனின் மனத்தை மாற்ற இயலாமல் போனார். 

“சரி கிருஷ்ணா, உன் விருப்பபடியே ஆகட்டும். ஆனால் ஒரு நிபந்தனை. உன் எதிரில் இருக்கும் பொறுப்பை நீ சரிவர நிறைவேற்றிய பின்னரே உனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொள். இந்த நாட்டைக் காப்பாற்றக் கூடிய மனிதன் நீ ஒருவனே என்பது அறிஞர்களின் கூற்று. அந்த வாக்கை நீ காப்பாற்ற வேண்டும். உன் ராஜ்ஜியத்தை நீ ஆளவேண்டும். உனக்கு பட்டாபிஷேகம் நடந்த பிறகுதான் உன் திருமணத்தைப் பற்றிய பேச்செடுக்க வேண்டும். உன் அப்பாஜிக்கு, உன் தந்தையின் காலத்திலிருந்து அமைச்சராக கடமையாற்றி வரும் இந்த திம்மரசுவுக்கு நீ இந்த அளவாவது கௌரவம் அளிபாய் என்று நம்புகிறேன்” அப்பாஜியின் சொற்களைக் கேட்ட கிருஷ்ணதேவன் தடாலென்று அவர் பாதங்களைப் பணிந்தான். 

கிருஷ்ணதேவன், அப்பாஜியின் கண்காணிப்பில் தனக்கென்று ஒரு படையை உருவாக்கிக் கொண்டான். அரச அரியணைக்கு உரியவனான அவனை அழிக்க நினைத்தவர்களிடமிருந்து தப்பி விஜய நகர சாம்ராஜ்யத்தின் அரசனாக முடிசூட்டிக்  கொண்டான். 

“அப்பாஜி, உங்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன். நீங்களும் எனக்குக் கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டும். என் சின்னாதேவியோடு எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்” சின்னக் குழந்தை போல் அவர் முகத்தைப் பார்த்து ஏக்கத்தோடு கேட்டான் விஜய நகரப் பேரரசன் ஸ்ரீகிருஷ்ணதேவராயன். 

“அதற்கான நேரம் வந்து விட்டது கிருஷ்ணதேவா. உன் காதல் நிறைவேறிவிட்டது. ஆனால் இந்த சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக உன் வாழக்கை உன் ஒருவன் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. இந்த நாட்டு மக்களுக்கும் அதில் தொடர்புள்ளது. ஒரு தேசத்தின் அரசனாக, ஒரு தலைவனாக நீ நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். உன்னை மக்கள் பலரும் பின்பற்றுவார்கள் என்பதை மறக்கக் கூடாது. உன் பட்டமகிஷியாக ஒரு க்ஷத்திரியக் கன்னி மட்டுமே அரியணை ஏறத் தகுதியானவள். அதற்கான ஏற்பாட்டை நான் செய்துள்ளேன். அஞ்சவேண்டாம். உன் காதலும் நிறைவேறும். நம் விஜயநகர சாம்ராஜ்யத்தின் நண்பன் ஸ்ரீரங்கப்பட்டணத்தின் அரசன் வீரப்பகௌட ராஜாவின் புதல்வி திருமலா தேவியோடு உனக்கு விவாகம் நிச்சயம் செய்துளோம். அதன் பிறகு நீ சின்னா தேவியைத் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது” என்றார். 

எதிர்பாராத அந்த திருப்பதை அறிந்த கிருஷ்ணதேவராயன் அதிர்ந்து போனான். “என்ன இது அப்பாஜி? நாளை திருமலா தேவி, சின்னாதேவியை அங்கீகரிக்கவில்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகாதா? நான் நிம்மதியாக அரசாள்வது எங்ஙனம்?” என்று கேட்டான். 

“அந்த பாரத்தையும் என் மேல் போட்டுவிடு, கிருஷ்ணதேவா. நீ நிம்மதியாக இரு. என்னை நம்பு. உன் வழியை எளிதாக்குவது என் பொறுப்பு. திருமலா தேவியைச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பு என்னுடையது. சின்னா தேவியோடு உன் திருமணம் கட்டாயம் நடக்கும்” என்று ஆறுதல் உரைத்து கிருஷ்ணதேவனை ஒரு தந்தையைப் போல அரவணைத்தார் அப்பாஜி. 

அந்தப்புர மகளிரிடையே அப்சரசைப் போல ஒளி வீசிய சின்னா தேவியை, சாட்சாத் பாற்கடலில் உதித்த லட்சுமிதேவியைப் போல் அலங்கரித்த திருமலா தேவி கிருஷ்ணதேவராயரின் கரங்களில் ஒப்படைத்தாள். 

“ஸ்வாமி, இனி ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவியும் பூதேவியும் போலத் தங்களை மகிழ்வித்து, சேவித்து, உய்வடைவதற்கு நானும், என் சகோதரி சின்னா தேவியும் தயாராக உள்ளோம்” என்று கூறி சின்னா தேவியை ஸ்ரீகிருஷ்ணதேவ ராயரின் அருகில் அமரச் செய்தாள் திருமலா தேவி. 

கிருஷ்ணதேவன் அப்பாஜியை நன்றியோடு பார்த்து கண்களாலேயே அவரை வணங்கினான். வேத மந்திரங்கள் முழங்க, துந்துபிகள் ஒலிக்க, கோலாகலம் விண்ணை முட்ட, கிருஷ்ணதேவ ராயர் சின்னா தேவியை மனையாளாகக் கரம் பிடித்தார். இரு தேவியரோடும் சேர்ந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டார். ஆலயத்திற்கு பலப்பல காணிக்கைகளை அளித்தார். அதற்கு அடையாளமாக இன்றும் திருமலையில் அந்த மூவரின் சிலைகள் ஆலயத்தின் பிரதான துவாரத்தின் அருகில் காணக் கிடைக்கின்றன. காதலுக்கு அடையாளமாக கிருஷ்ணதேவன், சின்னா தேவியின் கதை பல தலைமுறைகளாகக் கூறப்பட்டு வருகிறது. 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.