பிறந்தநாள் பரிசு

அப்பா உயரமாக இருப்பார், ஆனால் குண்டில்லை. தை மாதப் பனியில் நனைந்த பழுத்த பரங்கிப்பழ வண்ணம் ; தங்க மினுமினுப்பு. மீசை இல்லாத, ஒடுக்கம் இல்லாத, சதை  நிறைந்த   முகம். நெற்றியிலிருந்து கோடுபோல இறங்கி, கூர்கொண்டு நிற்கும் மூக்கு. வில் போல வளைந்த சிறிய மேல் உதடு. சிவந்த கீழ் உதடு. பச்சரிசி பற்கள். அப்பா சிரிக்கும் போது வாய் கோடுபோல நீண்டு நீளமாக தெரியும். எப்போதும் அந்த உதட்டில் சிரிப்பு வழிவதுபோலவே இருக்கும்.   மூன்று கோடுகள் விழ விபூதி பூசிய பின்னரும் நெற்றியில் இடமிருக்கும். இந்த நெற்றியைப் பிரித்துக் கட்டுவதுபோன்ற இமை; அதன் கீழ், நீண்ட ஒளிவிடும் பெரிய கருப்பு மணி போன்ற கண்கள். அவை எப்போதும்  மின்னுவது போலவே இருக்கும். அப்பா முகம் மட்டும் பார்ப்பவர்கள் ஒரு கணம் அவரைப் பெண் என்று நினைத்துவிடுவார்கள்.

கருப்பு, சுருள் சுருளான தலை முடி. நீண்ட வலுவான கைகள். என்னை ஒரு கையிலும், அம்மாவை ஒரு கையிலும் தூக்கி வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் காட்டுவார். அப்பா நெஞ்சில் படுக்கும்போது, நான் நெஞ்சுக்குழிக்குள் அடங்கிவிடுவேன். அப்பாவின் இரண்டு மார்புகளும் பந்துபோல் இருக்கும். அப்பா தினமும் கரலைக் கட்டை சுற்றுவார். அப்பா வீட்டு வாசலில் மிதிவண்டியில் வந்து நிற்கும்போது, பெரிய மிதிவண்டியே அப்பா கால்களுக்கு இடையில், முக்கால் வண்டி போலத்தான் தெரியும்.

அப்பா ஏழுமலையான் திருமண மண்டபத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறார். மாதச் சம்பளம்  அம்மா  கைக்கு வந்து விடும். மண்டபத்தில் திருமண விழா நடக்கும்போது, திருமண வீட்டார்கள், மண்டபச் செலவு, மின்சாரச் செலவு, துப்புரவுச் செலவு ஆகியவற்றின் கணக்குத் தீர்க்கும்போது அப்பாவுக்கு ஊக்கத்தொகையாக ஐநூறு ரூபாய் கொடுப்பார்கள். அப்பாவுக்கு இருநூறு ரூபாயும், அப்பாவுடன் வேலை பார்க்கும் உதவியாளர்கள் மூவருக்கும் ஆளுக்கு நூறு ரூபாயும் கிடைக்கும். அதுதான் அப்பாவின் கைச்செலவுக்கு. அப்பாவுக்கு என்ன கைச்செலவு? எங்களுக்குத் தின்பண்டங்கள் வாங்கியது போக மீதியை அம்மாவிடம்தான் கொடுப்பர்,   இருபது தேதி ஆகிவிட்டால், அம்மா, “அதுக்குப் பணம் இல்லை, இதுக்குப் பணம் இல்லை” என்று வீட்டில் தொணதொணத்துக் கொண்டே இருக்கும். அப்பாவின் மாத வருமானத்தில் பாதி வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. 

நானும் அண்ணனும் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறோம். அண்ணண் பள்ளியில் நடக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் பேச கடலூர் போயிருக்கிறான். நாளைதான் வருவான். அண்ணனும் என்னைப்போலத்தான், அப்பா அம்மாவிடம் எதுவும் வேண்டும் என்று கேட்கமாட்டான். அருமையாகப் படிப்பான். நிச்சயம் பரிசு வாங்கிவருவான்.  

அப்பாவுக்குக் கடன் வாங்குவது பிடிக்காது. “இருக்கிற பணத்துக்குள் செலவு பார்த்தால் போதும்” என்பார். அப்பா கோபமாக எதுவும் சொல்வதில்லை. அப்பா முகம் எப்போதும் சிரித்தபடிதான் இருக்கும். அம்மா முகத்தில், எங்களுக்கு ‘அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும்’ என்ற ஆசையால் கொஞ்சம் கடுகடுப்பு இருக்கும்.

எனக்குக் கோபம் வரும். “தொணதொணக்காதேம்மா” என்று கத்துவேன். அம்மா அடிக்க வரும்போது அப்பாவிடம் ஓடிவிடுவேன். அப்பாவுக்குக் கோபம் வராது. அப்பா சிரிப்பார். என்னைத் தூக்கிக்கொண்ட அப்பா, அம்மாவை அணைத்துக்கொள்வார்கள். அம்மா, அப்பாவைக் கிள்ளிவிட்டு, “விடுங்கள்” என்று பொய்க் கோபத்துடன் திரும்பி, சிரித்துக்கொண்டு போவாள்.

“அம்மாவிடம் கோபப்படக் கூடாது” என்று சொல்லி, அப்பா என்னைக் கீழே இறக்கிவிட்டதும், ஓடிப்போய் அம்மாவை அணைத்துக்கொண்டு, அம்மாவுக்கு முத்தம் இடுவேன். அந்த முத்தம் கன்னத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது; என் உதடு படும் இடத்தில் இருக்கும்.

இன்று எனக்குப் பிறந்தநாள். அம்மா புதுச் சட்டையும், பள்ளியில் தோழர், தோழியருக்குக் கொடுக்க மிட்டாயும் வாங்கிக் கொடுத்தார். வேலைக்குப் போகும் அப்பாவுக்கு மிட்டாய் கொடுத்தேன்.

“அன்பு பொன் மகளே! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வேலையை விட்டு வரும்போது பிறந்தநாள் கேக் வாங்கிட்டு வரேன். உன் பிறந்தநாளை இரவு சிறப்பாகக் கொண்டாடுவோம்” என்று அப்பா சொன்னதும், நான் அப்பாவின் இரண்டு கால்களையும் கட்டிக்கொண்டு, அப்பாவின் வேட்டி மணத்தை முகர்ந்து, அண்ணாந்து அப்பாவின் முகம் பார்த்துச் சிரித்தேன்.

அப்பாவின் தலை கூரையில் முட்டிக்கொண்டு இருப்பதுபோல் தெரிந்தது. எந்தக் கூட்டத்தில் நின்றாலும் அப்பாவின் தலை உயரமாகத் தெரியும்.

“க்ஹூ…ம்” என்று அம்மா தன் முகத்தை வலது தோளில் இடித்துக்கொண்டார். அப்பா தன் கையில் இருந்த மிட்டாயில் ஒன்றைப் பிரித்து எனக்கு ஊட்டிவிட்டார். வீட்டிற்குள் சென்று அம்மா வாயில் பாதி மிட்டாயைத் திணித்துவிட்டு, தன் வாயில் பாதியைப் போட்டுக்கொண்டார்.

அப்பா, வாயில் மிட்டாயுடன் மெல்லச் சிரித்தபடி வேலைக்குச் சென்றார். மிட்டாயின் இனிப்பைவிட, உள்ளுக்குள் ஏதோ ஓர் இனிப்பு பரவிய பரவசம் அது.

அம்மா “க்ஹூ…ம்” என்று சொன்னதற்குக் காரணம், ஆறு வருடங்களாக அப்பா சொல்வது மட்டும்தான்; கேக் வாங்கி வந்ததில்லை. பணம் இருந்தால் அப்பா வாங்கி வந்திருப்பார். பணம் கிடைக்கவில்லை, கடன் வாங்கி அப்பா வாங்கி வரமாட்டார். நான் ஆடி மாதம் பிறந்ததால் திருமண மண்டபம் ஈ ஓட்டும். நான் இருபத்தி ஒன்பதாம் தேதி பிறந்தேன். ஒன்றாம் தேதி வந்தால்தான் சம்பளம் கிடைக்கும்.  அப்பா என்ன செய்வார்.

ஒன்று, இரண்டு, மூன்று ஆண்டுகள் காத்திருந்து, காத்திருந்து, அழுது தூங்கிப்போனேன். இப்போது எல்லாம் அழுவதில்லை. ஆனால் அம்மா இரவு அழுதது. அம்மா இரவு அழுதது எனக்காகத்தான் என்பது புரிந்துவிட்டது.  தூங்குவதற்குள் அப்பா வந்தால் போதும் என்று இருந்தேன். கேக் இல்லாமல் எப்படி வருவது என்று நினைத்து அப்பா என் பிறந்தநாள் அன்று மட்டும் நான் தூங்கிய பிறகுதான் வருவார்.

இந்த நாளும் அப்படித்தான். அழுது என்ன பண்ணப் போகிறோம்? ஆனால், அம்மா அழுததற்கு   காரணம் இருந்தது. என் பிறந்தநாளுக்குக் கேக் வெட்டாததால், நான் தோழியர் யார் வீட்டுக்கும் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதில்லை. தோழிகள் கூப்பிட்டாலும் ஏதாவது காரணம் சொல்லிப் போக மாட்டேன். கடந்த மாதம், பக்கத்துத் தெருவில் இருக்கும் தோழி மாலாவின் பிறந்தநாள் விழாவுக்கு அவள்  என்னை கூப்பிடவில்லை, ஆனால் அவளே கேக் எடுத்துவந்து ஊட்டிவிட்டுப் போனாள். அந்த நினைப்புதான் அம்மாவின் அழுகைக்குக் காரணம். 

நம் வீட்டிலும் கேக் வெட்ட வேண்டும்,  பிரியாணி விருந்து வைக்கவேண்டும், என் தோழிகளைக் கூப்பிட வேண்டும் என்ற ஆசை.   இது எல்லாம் நடக்க மூவாயிரம் ரூபாயாவது வேண்டும்  என்று அம்மா சொன்னது.  மூவாயிரம்  ரூபாய் இருந்தால்   பத்து நாளாவது வீட்டு செலவுக்கு கட்டுப்படியாகும்  ஆகும்.  அதுவும் அம்மாதான்  சொன்னது.   இன்று அது நடக்கப் போவதில்லை. அப்பா நான் தூங்குவதற்குள் வந்தால் போதும். ஆனால், அம்மா அப்பாவுக்காகக் காத்திருந்தார்கள். மாலாவுக்காகவாவது அப்பா கேக்காவது வாங்கி வந்தால் போதும் என்று அம்மா காத்திருந்தாள். 

மாலை வீட்டில் தீபம் ஏற்றியதில் இருந்து அம்மா அடிக்கடி வாசலைப் பார்த்தாள். சின்ன நிழல் ஆடினாலும்கூட ஓடிவந்துப் பார்த்தாள். எட்டு ஒன்பது மணிக்குள்ளே அப்பா கேக் வாங்கி வந்தால் கூட, மாலாவை அழைத்து வந்து கேக் வெட்டிவிடலாம் என்ற  நினைப்பின் தவிப்பு.  அம்மா கண்கள் ஈரமாக இருந்தன. மூக்கை அடிக்கடி உறிஞ்சி, புடவை முந்தானையில் தேய்த்ததில் மூக்கு சிவந்து வீங்கி நின்றது.

அம்மா அப்பா மீது கோவப்பட்டது இல்லை. ஒரு நாளும் அப்பாவைக் குறை சொன்னதில்லை. ஆனாலும், அம்மாவையும் மீறி, அப்பா மீது கோவம் ஏறுவதைப் பார்க்க முடிந்தது. “ஒரு கேக் கடன் கேட்டு வாங்கி வரத் துப்பு இல்லை!” – அம்மாவையும் மீறி வார்த்தை வெளியில் வந்து விழுந்தது.

அம்மா தவித்து, தலை கவிழ்ந்து கண்களைத் துடைத்துக்கொண்டாள். நான் எழுந்து போய் அம்மாவைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டேன். அம்மா என்னை அணைத்தபடி அப்படியே தரையில் உட்கார்ந்து கேவி அழுதாள். நானும் அழுதுவிட்டேன். அப்பா மீது எனக்கும் கோவம் வந்தது.

நான் சாப்பிடாமல் போய் படுத்துவிட்டேன். அம்மாவும் வந்து என்னை அணைத்தபடி படுத்தாள். வீட்டுக் கதவு திறந்தே கிடந்தது. 

அம்மாவின் உடல் நடுக்கம், என் வயிற்றின் மீது இருந்த அம்மாவின் கைகள் வழியாக அதிர்வாக என் வயிற்றில் பரவியது. நான் திரும்பி அம்மாவின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு அம்மாவை அணைத்துக்கொண்டேன்.  தூங்கிவிட்டேன்.

யாரோ என்னை நெஞ்சில் அடித்ததுபோல திடுக்கிட்டு எழுந்தேன். என்னைச் சுற்றி இருட்டு. வீட்டில் மின்சாரம் இல்லை என்று நினைக்கிறேன். நடு இரவு. அப்பா இப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

சமையல் அறையில் விளக்கொளியில் அப்பா தோசையைப் பிட்டு சட்டினியில் தோய்த்துச் சாப்பிடுவது நிழல்போலத் தெரிந்தது. அப்பாவின் நிழல் அப்பாவின் வலக்கைப் பக்கம் தரையில் விழுந்து வளைந்து சுவரில் ஏறிப் பெரிதாக அசைந்து கொண்டிருந்தது. தோல்பாவைக்கூத்தின் அர்ஜுனன் போல தெரிந்தார்.

அம்மா உட்கார்ந்து இருப்பது தெரியவில்லை. அம்மா தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து தோசை மாவு ஊற்றும் ஓசையும், எண்ணெய் வாசமும் என் நாசியைத் தீண்டி உணர்வு கொள்ளத் தூண்டியது. பாயில் உருண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி நீட்டினேன். கையில் அணிந்திருந்த வளையல்கள் மேலிருந்து கீழாகச் சரிந்து விழுந்து குலுங்கின. நான் அதைப் பார்த்துப் புன்னகைத்து அதேபோல் மீண்டும் செய்து மகிழ்ந்தேன்.

நான் எழுந்து பாயில் உட்கார்ந்தேன். வெள்ளை பூப் போட்ட இளம் சிகப்பு புதுப்பாவாடை பாயில் கோலம் போல விரிந்து கிடந்தது. காலில் வெள்ளி முத்து கொலுசு மின்னியது. காலில் போட்டிருந்த மருதாணி சிகப்பு, இருட்டில் அடர் கருமைக் கோடுகளாகத் தெரிந்தது.

அப்பா சாப்பிட்டு விட்டு தட்டிலேயே கை அலம்பி, தட்டை நகர்த்தி வைத்துவிட்டு, அம்மா முந்தானையை இழுத்து கைகளைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தார். அம்மா அழுகின்ற விம்மல் கேட்டது. அப்பா கைநீட்டி அம்மாவின் இடுப்பைப் பற்றி இழுத்துத் தனது மடியில் தூக்கி உட்கார வைத்தார். நான் கூச்சத்துடன் அவசரமாக மீண்டும் பாயில் படுத்துக்கொண்டேன்.

“உன்னைப்போல ஆழ்மைப் பிடித்த மனிதனைப் பார்த்ததே இல்லை. வெள்ளத்தில் வீடு அடித்துக்கொண்டு போகும்போதுகூட சிரித்துக்கொண்டு இருந்த மனிதன்தானே நீ” என்று அம்மா அப்பாவின் தோளில் முகம் அழுத்தி விம்மினாள்.

அம்மாவின் கொண்டை அவிழ்ந்து அம்மாவின் முதுகில் பரவியது. அம்மாவின் முதுகு குலுங்கியதில் அவிழ்ந்த கூந்தல் பாம்புகள் நெளிவதுபோல அச்சம் ஊட்டின. என் நெஞ்சில் பயம் கலந்த சிலிர்ப்பு உண்டானது. நான் குறுகிப் படுத்து, இரண்டு கைகளையும் தொடை இடுக்கில் நுழைத்துக்கொண்டேன். 

அப்பா அம்மாவின் முதுகை மெல்லத் தடவிக் கொடுத்தார். அம்மா குழந்தைபோல தேம்பிக்கொண்டே இருந்தாள்.  அம்மாவின் வட்டமான குழந்தை முகம், அழும் போது மேலும் குழந்தையாக மாறியது.   

அம்மா அப்பாவை ஒருபோதும் ‘நீ’ என்று சொன்னது இல்லை. ”வெள்ளத்தில் வீடு அடித்துக்கொண்டு போகும்போதுகூட சிரித்துக்கொண்டு இருந்த மனிதன்தானே நீ” என்று அம்மா சொல்லும்போது ‘நீ’ என்று அப்பாவைச் சொல்லியதை நம்ப முடியவில்லை. எப்போதும் அம்மாவிற்கு அப்பா ‘மாமா’தான்.

வெள்ளத்தில் வீடு அடித்துக்கொண்டு போகும்போதுகூட சிரித்துக்கொண்டு இருந்த மனிதன் அப்பா என்பது உண்மைதான்.

என் தாத்தா, அப்பாவின் அப்பாவுக்கு ஐந்து வெள்ளாடுகளும், இருபத்தைந்து சென்ட் புஞ்சை நிலமும் இருந்ததாம். அது வானம் பார்த்த பூமி.  தாத்தா அதில் மழை வரும் காலத்தை அனுசரித்து கம்பு, சோளம், வரகு, கேழ்வரகு, நாட்டுக் கடலை போடுவாராம். பல நேரம் கலப்பு பயிர் செய்வாராம். அது போதும் என்றுதான் ஆயாவை தாத்தாவுக்கு கட்டிக்கொடுத்தார்களாம்.   நான் தாத்தாவையும், ஆயாவையும் பார்த்ததில்லை. நான் ஆயா போல இருப்பதாக அம்மாவும் சொல்வாள்.

ஆயாவுக்கு முடி நரம்பைப் போலக் கருகருவென்று இடுப்பு வரை இருக்குமாம். வெள்ளிக்கிழமை ஆயா எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், தாத்தா சட்டியில் சவுக்குக் கரி நெருப்பு உண்டாக்கி சாம்பிராணிப் போட்டு, சாம்பிராணிப் புகையை ஆயாவின் கூந்தலுக்குக் காட்டுவாராம். ஆடு மேய்க்கும் இடத்தில் தாழம்பூ கிடைத்தால், எடுத்து வந்து, தன் கையாலேயே தாழம்பூ வைத்து ஆயாவுக்குச் சடை பின்னி விடுவாராம்.

ஆயா ஊர்ப் பெண்களுடன் ஊற்று நீர் எடுக்க மூன்று மைல் நடந்து ஓடைக்குப் போயிருக்கிறாள்.  குடம் நிறையாததால், ஆயா அரைகுடத்தைத் தூக்கிக்கொண்டு அழுதுகொண்டே வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

ஆயா தண்ணீர் கிடைக்காமல் அடிக்கடி அழுதுகொண்டு வருவதைப் பார்த்த தாத்தா, ஒரு நாள் இரவு தனது வயலில் கிணறு தோண்ட ஆரம்பித்துவிட்டார். ‘கிறுக்குப் பயல்’ என்று ஊரே திட்டியிருக்கிறது.  பெரும் பணக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் கிணறு தோண்டி தோத்ததுப் போயிருக்கிறார்கள். மழைக்காலத்தில் மட்டும்தான் தண்ணீர் இருக்குமாம். ஊர் திட்டத் திட்ட, ஆத்திரத்தில் இரவு பகல் பாராமல், சோறு தண்ணீர் இல்லாமல் கிணறு தோண்டி இருக்கிறார்.

ஆயா வேளைக்கு வேளை சோறு பொங்கிக் கொடுத்துவிட்டு, ஆடு மேய்க்க ஆரம்பித்துவிட்டது. நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதமாகி, மாதங்கள் ஆண்டாகிவிட்டன.  ”ம்..கூம்”   

கிணற்றின் கரையில் நின்று பார்த்தால், தாத்தா நிற்பது கூடத் தெரியாதாம்; அவ்வளவு ஆழம். தாத்தா சிந்திய வியர்வையைப் பிடித்து வைத்திருந்தால் கூட, கிணறு நிரம்பி இருக்கும் என்று ஊரே பேசிக் கொண்டதாம். . ”பார்த்துடா! பூமிக்கு அந்தப் பக்கம் போய்விடப் போற!’ என்று பெரியவர்கள் சிரிப்பார்களாம். ஆனால், தாத்தா நிறுத்தவில்லை.

கிணற்றுக்குள் சூடு தாங்காமல், ஒரு நாள் தாத்தா மயக்கம் போட்டு கிணற்றுக்குள் விழுந்து, அங்கேயே கிடந்து மயக்கம் தெளிந்து எழுந்து வந்திருக்கிறார். 

அதில் இருந்து ஆயாவுக்குப் பயம்.  ஆயா,தானும் கிணறு வெட்ட தாத்தாவுக்கு உதவி செய்திருக்கிறாள்.  ஆடுகளை விற்று கயிறு வாங்கி கவளை ஏற்றம் போட்டு,   மண்ணை இழுத்து மேலே கரை ஏற்றியிருக்கிறாள். மாடுபோல முன்னும் பின்னும் நடந்து நடந்து ஆயாவின் கால்கள் பப்பாளிப் பழம் போல வீங்கி விடுமாம். ஆயாவின் அம்மா இதைப் பார்த்துவிட்டுத் தாங்க முடியாமல் கிணற்று மண்ணை எடுத்துத் தாத்தாவை அடித்து விட்டு ஆயாவை ‘வா” வீட்டுக்கு என்று கூட்டிப் போகப் பார்த்திருக்கிறது.   ஆயாவின் அம்மா அடித்ததில் தாத்தாவின் வலது நெற்றியில் எலுமிச்சை பழம் அளவுக்கு வீக்கமாம்.

”இனி இங்க வராத” என்று ஆயா தனது அம்மாவைத் திட்டி அனுப்பி இருக்கிறாள். தாத்தா, அத்தை தன்னை அடித்ததை நினைக்காமல் சிரித்துக்கொண்டே ”அத்தை, உன் பொண்ண நான் நல்லா பார்த்துக்கிறேன், நீ கவலை படாமல் போய் மாமன் மச்சானை பார்த்துக்க” என்று அனுப்பி வைத்தாராம்.  ஆயாவின் அம்மா ஊரு  போறவரையும் கேவிக் கேவி அழுக்கோண்டே போனதாம்.  

ஒரு கட்டத்தில் தாத்தாவும் ஆயாவும் இருவரும் சோர்ந்து போய், ”போதும் விட்டு விடுவோம்” என்று நினைப்பார்களாம். மறுநாள் இன்னும் ஒருமுறை தோண்டலாம் என்று ஆழமாக தோண்டுவார்களாம்.  

தாத்தா தாங்க முடியாமல் ஒரு நாள் ஆயா மடியில் விழுந்து கதறிவிட்டாராம். ஆயாவும் எதுவும் சொல்ல முடியாமல் அழுதிருக்கிறாள். அன்று இருவரும் சாப்பிடவே இல்லை. இரவெல்லாம் தாத்தா தூங்க  வில்லை. கோழி கூவுவதற்கு முன், தாத்தா எழுந்து கிணற்றில் விழுந்து சாவது என்று சென்று இருக்கிறார். 

கிணற்றுக்குள் ஏதோ கலங்கள்  வெள்ளையாய்த் தெரிந்திருக்கிறது. ஒளி அசைவு. தாத்தா ஒரு சின்ன கல்லை எடுத்து கிணற்றுக்குள் போட்டிருக்கிறார். ‘தொபுக்கென்று’ தண்ணீரில் கல்விழும் சத்தம். தாத்தா ஒரு பெரிய கல்லை எடுத்து மீண்டும் கிணற்றுக்குள் போட்டிருக்கிறார். கிணற்றுக்குள் தண்ணீர் எழுந்து தண்ணீரில் விழும் ஓசை. அந்தக் சத்தம் ஊரே விழித்துக்கொள்ளும் அளவுக்கு இருந்ததாம்.

தாத்தா ஆயாவின் பெயரைச் சொல்லிக்  கத்தினாராம்.

என்னவோ ஏதோ என்று துடித்து எழுந்து ஓடிவந்த ஆயாவைத் தூக்கி தலைக்குமேல்  சுற்றி, ”கேணியில் தண்ணீர் வந்துவிட்டது!’’ என்று கீழே இறக்கிவிட்டு, மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்துத் தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு, ஊருக்குள் கத்திக்கொண்டே ஓடி இருக்கிறார். 

உடல் தள்ளாட்டமும், தலை சுற்றலும் நீங்கிய ஆயாவுக்கு கொஞ்ச நேரம் கழித்துதான்  புரிந்திருக்கிறது. தாத்தா கோவணம் கூடக் கட்டாமல் நிர்வாணமாய் ஓடுகிறார் என்று. 

தாத்தா ‘கேணியில் தண்ணீர் வந்துவிட்டது!’ என்று மகிழ்ச்சியில் போட்ட சத்தத்தில், ஊரே எழுந்து வந்து தாத்தா நிர்வாணமாய் ஓடுவதைப் பார்த்திருக்கிறது. ஆயா தன் கொண்டை அவிழ்ந்து, முடி காற்றில் பறக்கத் தாத்தாவைவிட வேகமாக ஓடி, தாத்தாவைப் பிடித்து, அவர் கையில் இருந்த துண்டைப் பிடுங்கி, அவர் இடுப்பில் கட்டிவிட்டு, வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

மருமகன் வெட்டிய கிணற்றில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது; அது தேங்காய் தண்ணீர் போல அத்தனை தித்திப்பு என்று சந்தையில் கேட்டறிந்த ஆயாவின் அம்மா, மருமகனுக்குப் பிடித்த பலகாரங்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு, வெடக்கோழியையும் எடுத்து வந்து விருந்து வைத்தாள். கிணற்றுத் தண்ணீரை அள்ளி அள்ளிக் குடித்ததும், கோரி குளித்ததும், வீடு வீடாகப் போய் மருமகன் பட்ட கஷ்டத்தை கண்ணீர் மல்க விளக்கியதும் என, ஆயாவின் அம்மாவுக்கு மிகுந்த சந்தோஷம்.

ஒருநாள் தாத்தா ஊரைக் கூட்டி, ”இந்தக் கிணறு ஊருக்கே சொந்தம், எல்லோரும் வந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்’ என்று எழுதி கொடுத்துவிட்டார். ஊரே திகைத்துப் போனது. ஆயாவோ மனமார இதனை ஏற்றுக்கொண்டார்.

ஆயாவின் அம்மாவுக்கு தாங்கமுடியவில்லை, அழுது புரண்டு மீண்டும் தனது ஊருக்கு போயிருக்கிறது. போகும் போது மண்ணையும் கல்லையும் வாரி அடித்திருக்கிறது, இந்த முறை அடி எல்லாம் ஆயாவுக்குத்தான். 

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குத் திரைப்படம் எடுக்க வந்த ஒரு நடிகர், இதைக் கேள்விப்பட்டு தாத்தாவைப் பார்க்க வந்து, அவரைப் பாராட்டிப் பணம் கொடுத்திருக்கிறார். தாத்தா அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

தாத்தாவின் அயராத உழைப்பைக் கண்ட ஆயாவின் அம்மா, அவருடைய அண்ணன் காரியதரிசியாக வேலை பார்க்கும் பண்ணையில், ஒரு காணி நிலத்தைப் போக்கியம் (குத்தகை) பிடித்துக் கொடுத்தார். அதில் உழைத்து ஆயாவும் தாத்தாவும் கட்டியதுதான் அந்த மெத்தை வீடு.

அந்த வீட்டில்தான் ஐந்து அத்தைகளுடன் ஆறாவதாக அப்பா பிறந்தார். நான்கு அத்தைகளுக்கும் தாத்தாவும் பாட்டியும் திருமணம் செய்துவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். அப்பாவின் கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றது. ஐந்தாவது அத்தைக்கு அப்பாதான் திருமணம் செய்து வைத்தார்.

உழைத்தால் உயரலாம் என்பதற்குத் தாத்தாவும் பாட்டியுமே உதாரணம் என்று அப்பா சொல்வார்கள். தன்னலம் பார்க்காமல் உழைப்பவர்களால்தான் உலகுக்கு நன்மையும் செய்ய முடியும் என்பதையும் தாத்தாவிடமும் பாட்டியிடமும் தெரிந்துகொண்டேன்.

அப்பா, அம்மாவை விரும்பினார். அந்த நேரத்தில்தான் அது நடந்தது. ஒரு பெரும்  புயலில், கரையை மாற்றிய ஆற்று வெள்ளத்தில் அந்த வீடு அடித்துச் செல்லப்பட்டது. ஊரே அழுததாம், ஆனால் அப்போதுதான் அப்பா சிரித்துக்கொண்டு நின்றாராம்.

காசு, நிலம், வீடு இல்லாதவனுக்கு அம்மாவை கட்டிக்கொடுக்க மாமாக்கள் விரும்பவில்லை. அதனால் அம்மாவுக்காக அப்பாவை எதிர்க்க மாமாக்கள் முற்பட்டார்களாம். அப்பா, அம்மா வீட்டுக்குச் சென்று அம்மாவை அழைத்தார். மாமாக்கள் அதைப் பார்த்து அப்பாவை அடிக்க ஓடி வர, அப்பா சிரித்துக்கொண்டே, ‘சண்டை வேண்டாம். உங்கள் தங்கச்சி வந்து ‘’போ’’ என்று சொன்னால் நான் போய்விடுகிறேன்’ என்று சொன்னாராம்.

அன்று அம்மா அப்பாவுடன் வந்துவிட்டார். மாமாக்கள் சிலை போல ஸ்தம்பித்து நின்றுவிட்டார்களாம்.   அப்பா சிலம்பு சுற்றுவதை மாமாக்கள் கோயில் திருவிழாவில் பார்த்தவர்கள் தானே. எப்படி அசைவார்கள். அப்பா ஆற்றில் இறங்கித் தண்ணீருக்குள் நின்று சிலம்பு பயிற்சி செய்வாராம். அப்பா சிலம்பு சுற்றும்போது ஊரே சுற்றி நின்று புளியன்கொட்டை எறிந்தாலும் ஒரு புளியன்கொட்டையும் அப்பாமீது படாதாம். அதை சொல்லும்போது அம்மாவின் கண்கள் பட்டாம்பூச்சியாகும்.  அதன் பின் அம்மாவும் அப்பாவும் அந்த ஊருக்குச் செல்லவில்லை.


 இன்னும் அம்மா அப்பாவின் மடியில்தான் உட்கார்ந்திருந்தார்.  அப்பா அம்மாவிடம் ஏதோ சொல்லிச் சிரிக்க வைத்தார். அம்மா கண்கள் மின்ன சிரித்தது. அம்மாவின் கன்னம் விளக்கொளி பட்டுச் சிவந்த பழம்போல் இருந்தது. 

அப்பா சொன்னது என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். ‘எட்டுத் திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே’ என்ற அபிராமி அந்தாதிப் பாடலாகத்தான் அது இருக்கும். நானும் என்னை மறந்து கலகலவென்று சிரித்துவிட்டேன். அம்மா நாணத்துடன் அப்பா மடியில் இருந்து இறங்கி, அப்பா சாப்பிட்ட தட்டுகளை எடுத்து கழுவச் சென்றது.

 ‘அந்த அபிராமி அந்தாதிப் பாடலைக் கேட்டால் ஏன்மா சிரிக்கிற?’ என்று ஒருநாள் அம்மாவைக் கேட்டேன். அதற்கு அம்மா, ‘ஒரு கையில் கரும்பும், மறு கையில் ஐந்து வகைப் பூக்களும், உடல் முழுவதும் முத்துமாலையும், இடுப்பில் பல மணிகளால் செய்த ஒட்டியாணமும் பட்டும் அணிந்த அன்னை பார்வதி, எதுவுமே அணியாத சிவனைப் போய்க் கட்டிக்கொண்டு குடும்பம் நடத்துறாளாம்!’ என்று சொன்னதும், நானும் சிரிப்பேன். அந்தச் சமயத்தில், கிணறு வெட்டியபோது தாத்தா நிர்வாணமாக ஓடியது எனக்கு நினைவுக்கு வரும்

அப்பா எழுந்து வந்து என்னைத் தூக்கிக்கொண்டு வாசலுக்குச் சென்றார். அப்பாவின் கை என்மீது பட்ட இடம் குளிர்ந்தது.

முழு நிலவு வானம் அழகாக இருந்தது. பால் போன்ற நிலா. எங்கும் பால் வழியும் அழகு. அங்கங்கே நட்சத்திரங்கள் மின்னின. வாசலில் படுத்திருந்த சிகப்பு நாய் ஓடிவந்து அப்பாவை முகர்ந்து துள்ளி என் பாதத்தை நக்கியது, நான் கால்களை இழுத்துக்கொண்டேன்.  

நாம் அனைவரும் 

வான்மீன்கள் 

தாயில் விழுந்ததால் 

அலைமீன்கள் 

கணமேனும் 

அலைவிட்டுத் துள்ளும் மீன்கள்

 வான்வெளி அறிகின்றன 

தூண்டில் முள் விழுங்கும் மீன்

 துடிக்க துடிக்க 

நதி விடைபெற்றுக்கொள்கிறது

வான் இப்போதும் அப்படியே இருக்கிறது.

அப்பா கரளைக் கட்டையும், கம்பும்  சுற்றுவார் என்று சொன்ன நான்,  உங்களிடம் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். அப்பா கவிதைகள் சொல்வார். அந்தக் கவிதைகள் படித்த கவிதைகளாகவும் இருக்கும், தானே இயற்றிய கவிதைகளாகவும் இருக்கும்.

 ‘எனக்குப் புரியவில்லை அப்பா’ என்று நான் சொல்வேன்.  

 ”அது புரியும்போது புரியட்டும் மகளே’ என்பார்.

நானும் அப்பாவும் வீட்டிற்குள் நுழைந்ததும், அப்பா ஒரு பரிசுப் பொட்டலத்தை எடுத்து வந்து, அம்மாவுடன் சேர்ந்து, ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே!’ என்று என்னிடம் கொடுத்தார். இதைக் கண்டு அம்மாவுக்கும் ஆச்சரியம்! நான் அதனைப் பிரித்துப் பார்த்தேன். அத்தனையும் புத்தகங்கள்.

‘’எவ்வளவு மாமா?’ என்று கேட்ட அம்மாவிடம் அப்பா மூன்று விரல்களைக் காட்டினார்.

 ‘’ஒரு கேக்காவது வாங்கிக் கொண்டு மீதிப் பணத்திற்கு புத்தகம் வாங்கி இருக்கலாம் மாமா’ என்ற அம்மாவை அணைத்துக் கொண்டு, அப்பா என்னைத் தூக்கிக் கொண்டார்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.