வங்கமொழி & ஆங்கில மூலம்: ரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்
இது ரவீந்திரநாத் தாகூர் எழுதிய சிறியதொரு நாடகம். அவராலேயே மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. மஹாபாரதம், புத்தமதக் கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தற்காலத்திற்கேற்பப் பொருள்கொண்டால், இப்புதிய பொருள்காணல் தற்காலத்திற்கும் புராணகாலத்திற்கும் இடையே ஒரு பாலமாக விளங்கும் எனத் தாகூர் கருதினார். இவற்றை அவருடைய பல ஆக்கங்களில் காணலாம் – சண்டாளிகா, சித்ரா, நாட்டியப்பெண்ணின் வழிபாடு, மற்றும் பல.

கர்ணன் – குந்தியின் சம்பாஷணையும் இவற்றைப் போன்றதே. வெகு சுவாரசியமானது, சிந்திக்க வைப்பது. உளவியல் ரீதியாகக் கர்ணன் – குந்தி இவர்களின் செயல்களை எடைபோட்டு அவர்களே அதற்கான காரணங்களையும் கூறுவதாக எழுதப்பட்டது.
~oOo~
கர்ணனும் குந்தியும்
பாண்டவ அரசி குந்தி திருமணமாவதற்குமுன்பு கர்ணன் எனும் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தனது அவமானத்தை மறைப்பதற்காக அவள் குழந்தை பிறந்தவுடன் அவனை ஆற்றில் கூடையில் வைத்து நீர்ப்பெருக்கில் விடுகிறாள்; அக்குழந்தையை அதிரதன் எனும் தேரோட்டி எடுத்து தன்னுடைய மகனாக வளர்க்கிறான். அக்குழந்தை வளர்ந்து பெரியவனானதும், கௌரவர்களின் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறான். குருக்ஷேத்திரப் போரின் முன்பு குந்தி கர்ணனைப் பார்க்க வருகிறாள்.
~oOo~
கர்ணன்: நான் கர்ணன், தேரோட்டி அதிரதனின் மகன், நான் இந்தப் புனித கங்கை நதிக்கரையில் அமர்ந்து அஸ்தமனகால சூரியனை வழிபடுகிறேன். நீங்கள் யாரென்று கூறுங்கள்.
குந்தி: நான்தான் உன்னை முதன்முதலாக நீ வழிபடுகின்ற இந்த ஒளிக்கு அறிமுகப்படுத்திய பெண்.
கர்ணன்: எனக்குப் புரியவில்லை: ஆனால் எவ்வாறு காலைநேர சூரியன் மலையுச்சியில் உள்ள பனியை உருக்குகின்றதோ அவ்வாறு உங்களுடைய கண்கள் எனது உள்ளத்தை உருக்குகின்றன. உங்களுடைய குரல் பார்வையற்றதொரு துயரத்தை என்னில் எழுப்புகின்றது, அதன் காரணம் எனது முதன்முதல் நினைவுகள் எட்டவும் இயலாத தொலைவில் உள்ளதாக இருக்கக்கூடும். யாரென அறியவியலாத பெண்மணியே, கூறுங்கள். என்ன மர்மம் எனது பிறப்பை உங்களுடன் இணைக்கின்றது?
குந்தி: பொறுமை, மகனே. இருளின் மூடி பகலின் துளைக்கும் கண்களின் மீது கவிழும்போது நான் மறுமொழி அளிப்பேன். அதுவரையில், நான் குந்தி என்பதைத் தெரிந்துகொள்வாயாக.
கர்ணன்: குந்தி! அர்ஜுனனின் தாயல்லவா?
குந்தி: ஆம், உண்மை, உனது எதிரி அர்ஜுனனின் தாய். ஆனால், அதற்காக என்னை வெறுக்காதே. ஹஸ்தினாபுரத்தில் யாருமறியாத இளைஞனாக நீ ஆயுதப்போட்டியில் தைரியமாக, இரவில் ஒளிரும் நட்சத்திரங்களினிடையே காலையின் முதல் ஒளிக்கதிர்களைப்போலக் களத்தில் இறங்கினாய். ஆ! யார் அந்தத் துயரமே உருவான பெண், அவளது கண்கள் உனது திறந்த, மெலிந்த உடலை முத்தமிட்டன, கண்ணீரூடே உன்னை ஆசிர்வதித்தன, அவள் அரச குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தாள். ஏன், அர்ஜுனனின் அன்னை! அப்போது அந்தப் பிராமணர், மாவீரர், முன்னால்வந்து சொன்னார்: “தாழ்ந்த குலத்தில் பிறந்த எவனுக்கும் வீரத்தைக் காண்பிக்கும் போட்டிக்கு அர்ஜுனனை அழைக்க உரிமை இல்லை.” அஸ்தமன வேளையில் இடிமுழங்கும் மேகமொன்று தன் ஒளியை மழுங்க வைத்ததுபோன்ற துயரத்துடன் நீ பேச்சற்று நின்றாய். ஆனால் யாரந்தப் பெண், உனது அவமானமும் சினமும் கண்டு தனது உள்ளம் தீப்பிடித்து அமைதியாகப் பொங்குவதனை அறிந்து நின்றது? அர்ஜுனனின் தாய்! உனது தகுதியை அறிந்து அந்த இடத்திலேயே உன்னை அங்கதேசத்து அரசனாக முடிசூட்டி கௌரவர்களுக்கு உயர்ந்த தலைவனை அளித்த துரியோதனனுக்கு வாழ்த்துகள். இந்த உனது அதிர்ஷ்டத்தால், உணர்ச்சிவசப்பட்டு, அதிரதன் கூட்டத்தைப் பிளந்துகொண்டு ஓடோடி வந்தான்; நீ உடனே அவனை நோக்கி விரைந்து, பாண்டவர்கள், அவர்கள் நண்பர்கள் ஆகியோர் எள்ளி நகையாட உனது கிரீடத்தை அவனுடைய கால்களில் வைத்தாய். ஆனால் அங்கிருந்த ஒரு பெண்மணியின் இதயம் மட்டும் வீரத்தின் பெருமிதத்திலும், அந்த ஒப்பற்ற தாழ்மையாலும் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது; – அவளே அர்ஜுனனின் தாய்!
கர்ணன்: ஆனால் எது உங்களைத் தனியாக இங்கு அழைத்து வந்துள்ளது, அரசர்களின் தாயே?
குந்தி: எனக்கு ஒரு வரம் வேண்டும்.
கர்ணன்: கட்டளையிடுங்கள், எனது க்ஷத்திரிய ஆண்மையும் பெயரும் அனுமதிக்கும் அளவில் உமது பாதங்களில் அதனை அர்ப்பணிப்பேன்.
குந்தி: நான் உன்னை அழைத்துச்செல்ல வந்துள்ளேன்.
கர்ணன்: எங்கு?
குந்தி: உன் மீதான அன்பை வேண்டும் எனது இதயத்திற்கு உன்னை அழைத்துச்செல்ல, என் மகனே!
கர்ணன்: ஐந்து வீர புத்திரர்களின் அதிர்ஷ்டம் வாய்ந்த அன்னையே, தாழ்ந்த குலத்தில் பிறந்த இந்தச் சிறு படைத்தலைவனுக்கு எங்கு இடம் வைத்திருக்கிறீர்கள்?
குந்தி: எனது மகன்களுக்கு முன்னதானது உனது இடம்.
கர்ணன்: எனக்கு அதனை எடுத்துக்கொள்ள என்ன உரிமை இருக்கிறது?
குந்தி: உனது அன்னையின் அன்பிற்குக் கடவுள் கொடுத்துள்ள உரிமை உனக்குண்டு.
கர்ணன்: மாலைநேரத்துத் துக்கம்மிகுந்த இருள் பூமியின்மீது படிகின்றது, நீரின்மீது அமைதி இளைப்பாறுகிறது, தங்களது குரல் என்னைப் புராதனமான, உலகின் குழந்தைப்பருவத்தைத் தொலைத்த, அந்திக்கருக்கல் போலும் பிரக்ஞைக்குள் நடத்திச் செல்கிறது. எப்படியானாலும், இது கனவாக இருந்தாலும், அல்லது மறந்துபோன நிஜத்தின் துண்டாக இருப்பினும், என்னருகே வந்து உங்கள் வலதுகரத்தை எனது நெற்றிமீது வையுங்கள். என் தாய் என்னை நிராகரித்து விட்டாள் எனும் வதந்திகள் உலவுகின்றன. பல இரவுகளில் அவள் எனது உறக்கத்தில் வந்திருக்கிறாள்; ஆனால் நான், “உனது முக்காட்டை எடுத்து உன் முகத்தைக் காட்டு,” என்று அழுதபோது, அவள் உருவம் மறைந்துவிடும். அதே கனவு இப்போது நான் இந்த மாலையில் விழித்துக் கொண்டிருக்கும்போதும் வந்துவிட்டதா? பாருங்கள், தொலைவில் நதியைக் கடந்து காணும் உங்கள் மகன்களின் கூடாரங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன; இந்தப் பக்கத்திலும் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு கடலில் நிற்கும் புயலின் நிறுத்தப்பட்ட அலைகள்போன்ற எனது கௌரவர்களின் கூடார உச்சிகளைக் காணுங்கள். நாளைய போரின் சப்தங்களுக்கு முன்பாக, அது நடைபெற வேண்டிய இந்தப் பரந்த நிலத்தின் கொடிய அமைதியில், எதற்காக எனது எதிரி அர்ஜுனனின் தாயின் குரலொலி, மறந்துபோன எனது தாயினிடமிருந்து செய்தியைக் கொண்டு வரவேண்டும்? மேலும், எனது பெயர் ஏன் அவள் வாயிலிருந்து இசைபோலப் பிறந்து எனது இதயத்தை அவனிடமும் (அர்ஜுனன்) அவனது சகோதரர்களிடமும் ஈர்க்கவேண்டும்?
குந்தி: அப்போது தாமதிக்காதே, என் மகனே, என்னுடன் வந்துவிடு!
கர்ணன்: ஆம், நான் வருவேன், எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன், சந்தேகமே வேண்டாம். எனது ஆத்மா உங்கள் அழைப்பிற்கு பதிலளிக்கிறது; சாந்தமான விடியற்காலைப் போதில் இரவின் பைத்தியக்காரக் கனவுபோன்ற வெற்றிக்கும் புகழுக்குமான போராட்டமும், வெறுப்பிற்கான ஆத்திரமும் திடீரென எனக்கு உண்மையற்றதெனத் தோன்றிவிட்டன. சொல்லுங்கள், என்னை எங்கே அழைத்துப் போகப் போகிறீர்கள்?
குந்தி: மணலின் பேய்த்தனமான வெளிறிய நிறத்தின் குறுக்கே அந்த விளக்குகள் எரிகின்றனவே அந்த ஆற்றின் மறுகரைக்கு.
கர்ணன்: நான் அங்கே நிரந்தரமாகத் தொலைந்துவிட்ட என் தாயைக் காணப்போகிறேனா?
குந்தி: ஓ, என் மகனே!
கர்ணன்: அப்படியானால் நீங்கள் என்னை ஏன் நிராகரித்துக் கடத்திவிட்டீர்கள் – ஒதுக்கிவிடப்பட்டவன் – எனது பாரம்பரிய மண்ணினின்று, வீடே இல்லாத சிறுமையின் வேகத்தில் மிதந்தவாறு? இயற்கையாக உண்டாகும் நட்புறவை விடுத்து, அதனை வெறுப்பின் கொடிய ஈர்ப்பாக மாற்றி, அர்ஜுனனுக்கும் எனக்கும் இடையே ஏன் ஆழம் தெரியாத பிளவு? நீங்கள் பேச்சற்று நிற்கிறீர்கள். உங்களுடைய அவமானம் பரந்த இருளை ஊடுருவிக்கொண்டு, காணமுடியாத நடுக்கத்தை எனது கைகால்களில் ஊடுருவச் செய்கிறது. எனது கேள்விக்கு விடைதர வேண்டாம். எது உங்கள் மகனிடமிருந்து அவனுக்கான தாயின் அன்பைத் திருடிக்கொள்ளச் செய்தது என நீங்கள் எனக்கு விளக்க வேண்டாம். ஒன்றை மட்டும் கூறுங்கள் – எது இன்று உங்களை இங்கு வந்து உங்கள் கைகளாலேயே நீங்கள் அழித்துவிட்ட அந்த சுவர்க்கத்தின் இடிபாடுகளுக்கு என்னைத் திரும்ப அழைக்கச் சொன்னது?
குந்தி: நீ கடிந்து கொள்வதனைவிட நான் மரணத்தன்மையுள்ள வேறொரு சாபத்தால் அலைக்கழிக்கப்படுகிறேன்: ஏனெனில், ஐந்து புதல்வர்களால் சூழப்பட்டிருந்தாலும், குழந்தைகளை இழந்த பெண்ணைப்போல எனது இதயம் சுருங்கிவிட்டது. என்னால் நிராகரிக்கப்பட்ட எனது முதல் குழந்தையால் உண்டான பெரியதான இழப்பின் பலனாக, என் வாழ்க்கையின் சந்தோஷங்கள் அனைத்தும் வீணாகி விட்டன. அந்த சபிக்கப்பட்ட நாளில் நான் எனது தாய்மைப் பதவியை ஒதுக்கிவிட்டபோதில் உன்னால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை; இன்று உனது கோழையான அன்னை உன்னிடம் கருணையுள்ள வார்த்தைகளுக்காகக் கெஞ்சுகிறாள். உனது மன்னிப்பு அவளுடைய இதயத்தில் நெருப்பாக எரித்து அதன் பாவத்தை அழிக்கட்டும்.
கர்ணன்: தாயே! எனது கண்ணீரை ஏற்றுக் கொள்ளுங்கள்!
குந்தி: நான் உன்னை எனது கரங்களுக்குள் சேர்த்துக்கொள்ளும் நம்பிக்கையுடன் இங்கு வரவில்லை, ஆனால் உனது உரிமைகளை உன்னிடமே சேர்ப்பதற்காக வந்தேன். அரசனின் மகனான உனது நியாயமான இடத்தை உனது சகோதரர்களுடன் சேர்ந்து பெற்றுக்கொள்ள வருவாயாக.
கர்ணன்: நான் உண்மையாகவே தேரோட்டியின் மகனே, ஆகவே பெரிய இடத்துப் பெற்றோரின் புகழை நான் விரும்பவில்லை.
குந்தி: அது இருந்தபடி இருக்கட்டும், உனக்கு உரிமையான அரசை நீ வந்து எடுத்துக்கொள்வாய்!
கர்ணன்: எனக்குத் தாயின் அன்பினை ஒரு காலத்தில் நிராகரித்த தாங்களா இப்போது என்னை நாட்டைக் காட்டி ஆசை காட்டுகிறீர்கள்? பிறப்பினால் உண்டான, நீங்கள் அப்போதே அறுத்தெறிந்த உடனடி உறவு இறந்துவிட்டது, அது இனி வளரவே முடியாது. அரசர்களின் தாயான தங்களைத் தாயே என்றழைத்து, தேரோட்டியின் வீட்டிலுள்ள எனது தாயைப் புறக்கணித்தால், நான் பெருத்த அவமானத்திற்குள்ளாவேன்.
குந்தி: மகனே! நீ மிக உயர்ந்தவன்! கடவுளின் தண்டனையானது எப்படி சிறிய விதையிலிருந்து ராட்சஸத்தனமாக வளர்ந்து விடுகிறது! தாயால் நிராகரிக்கப்பட்ட குழந்தை எவ்வாறு இருண்ட சிக்கலான நிகழ்வுகளால் வளர்ந்த மனிதனாகத் திரும்பிவந்து தனது சகோதரர்களுடன் மோதப்போகிறது.
கர்ணன்: தாயே! பயப்படாதீர்கள்! வெற்றி பாண்டவர்களுக்கே என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. இந்த இரவு கலக்கமின்றியும், நிச்சலனமாகவும் இருந்தாலும்கூட, எனது உள்ளத்தில் பிரயோசனமற்ற தேடுதல்களாலும், தோல்வியை உண்டாக்கும் முடிவுகளாலும் நிறைந்த இசையை உணர்கிறேன். தோல்வியையே பெறப்போகின்றவர்களை விட்டுவிட்டுவரக் கூறாதீர்கள். பாண்டவர்களே அரசை வென்று அடையட்டும் ஏனெனில் அவர்கள்தாம் அதற்கு உரிமையாளர்கள். நான் நம்பிக்கையற்றவர்களுடனும் துர்ப்பாக்கியசாலிகளுடனும் இருப்பேன். நான் பிறந்த தினத்து இரவில் நீங்கள் என்னை ஆடையின்றியும், பெயரின்றியும், அவமானச் சின்னமாக நிராகரித்தீர்கள்; இன்னும் ஒருமுறை கருணையின்றி என்னைத் தோல்வியையும், மரணத்தையும் அமைதியாக எதிர்கொள்ள விட்டுவிடுங்கள்!
~oOo~
உளவியல் ரீதியாகக் கதாபாத்திரங்களை எடைபோட்டு நோக்குவதில் தாகூருக்கு இணை யாருமில்லை! புராண, இதிகாச, தற்காலக் கதைகளில் வரும் மாந்தர்களின் மன உளைச்சல்களை அலசி அவற்றிற்கு ஒரு காரணம் கற்பித்து நம்மை வியக்க வைக்கிறார்.
நீண்ட நாட்கள்வரை கர்ணனை ஒரு தீயபுத்தி கொண்டவனாகத்தான் கற்பனைசெய்து வைத்திருந்தேன். மகாபாரதக் கதையில் திரௌபதி அவமானப்படுத்தப்படும் நிகழ்வில் மகாபாரதத்தை எழுத்தில், கவிதையில் வடித்த அனைத்து ஆசிரியர்களுமே பெரும்பாலும் கௌரவர்களுடன் சேர்ந்து அவனும் பாஞ்சாலியை இழிவுபடுத்துவதாகக் கூறியிருப்பார்கள். இது அந்தச் சூழ்நிலையின் அவலத்தை நமக்குப் படம்போட்டுக் காட்டும் எழுத்தின் யுத்தி.
தாகூரும் அத்தகையதொரு யுத்தியை, கர்ணனின் தனது தாய்க்கான தேடலையும், அதனால் அவன் பட்ட மன உளைச்சல்களையும் விவரிக்கிறார். உண்மையிலேயே இது தனது ரத்தசம்பந்தமான தாயைத் தேடும் மகனின் தவிப்பு. இதில் உண்மையான உளவியலைத் தவிர்த்து உத்திக்கே இடமில்லை. தாய் – சேய் உறவின் அடிப்படைப் பரிமாணத்தை அக்கு அக்காகப் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பது மிகையேயல்ல.
‘இத்தனை நாட்கள் நீங்கள் இல்லாமல் வேறு யார் யாரோ என்மீது பரிவும் பாசமும் காட்டினார்கள்; இப்போது நீங்கள் வந்ததனால் நான் எதனைப் புதியதாகப் பெறப்போகிறேன்? இத்தனை நாட்கள் நீங்கள் என்னிடம் வருவதனை எது தடுத்தது? இப்போதைய தங்கள் வருகை எதனையாவது எதிர்நோக்கியா?’ எனவெல்லாம் கர்ணன் கேட்கலாமல்லவா? கேட்டு அந்த உறவைக் கொச்சைப்படுத்த அவன் முயலவில்லை. தான் இழந்துவிட்டதன் பரிமாணமே அவனை உளரீதியாகத் தாக்கி, ஆறாத மனப்புண்ணை ஏற்படுத்தி, மற்றவர்களிடம் பரிவும் பாசமும் கொள்ள வைக்கிறது.
இயற்கையான தாய் யாரென்று அறிந்துகொள்ள முடியாத குழந்தையின் கலக்கம் விவரிப்பிற்கு அப்பாற்பட்டது. அதுவும் அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதனை அறிந்துகொள்ளும் கட்டம் உணர்ச்சிகளின் கொந்தளிப்பானது. இதனையே தாகூர் தமது எழுத்தாற்றலால் அருமையாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
