ஸ்டேஷனர்ஸ் கம்பெனி

This entry is part 3 of 3 in the series காப்பிரைட் கதைகள்

உலகின் முதல் காப்பிரைட் சட்டம் பிறந்தது எப்படி

1530. லண்டன்.

புனித பால் தேவாலயம் இருந்த பகுதி காகிதக் காடாகக் காட்சியளித்தது.

ஒரு காலத்தில் ஒரு சில புத்தகக் கடைகள் தேவாலயத்தின் நிழலில் ஒண்டியபடி இருந்தன.இப்போது எண்ணற்ற புத்தகக் கடைகள் போட்டிபோட்டுக் கொண்டு போவோர் வருவோரைக் கவர்ந்திழுத்தன. புத்தகங்கள் கடைகள் கொள்ளாமல் நடைபாதையில்  வழிந்தன. அறிவு ஜீவிகளுக்கென்று தடித்த புத்தகங்கள், அடக்கமாகப் படிப்பவர்களுக்கு அடக்கமான அளவில் புத்தகங்கள், படிக்க விரும்பும் ஏழைகளுக்கு அளவில் சிறுத்த, சன்னமான புத்தகங்கள். குதிரைச் சாணமும், நிலக்கரிப் புகை நெடியும் வீசும் லண்டன் காற்றில், அச்சு மை நெடியும், புதிய காகிதத்தின்  மணமும்  கலந்தன.

விற்கப்பட்ட புத்தகங்கள் தவிர கடையின் உள்ளும், பரண் மீதும் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள். சில கடைகள் அடிக்கடி இடம் மாறின. வெவ்வேறு நேரங்களில் திறந்து மூடப்பட்டன.  சில புத்தகங்களை வெளிப்படையாக விற்பனை செய்ய முடியாது. கத்தோலிக்கத் திருச்சபையை விமர்சித்தும், போப்பையும் அரசரையும் தாக்கியும் எழுதப்பட்ட ப்ராடஸ்டண்ட் பிரசுரங்களை வெளிப்படையாக விற்பனை செய்வது ஆபத்தானது. எழுதியவர் யாரென்று கண்டுபிடித்தால் மரண தண்டனை நிச்சயம் என்று கருதுமளவு அரசரைக் கேலி செய்யும் அரசியல் கட்டுரைகளை நிச்சயமாக ஒளித்து  வைத்தே விற்பனை செய்ய முடியும்.

சமூகத்தின் மரியாதைக்குரிய ஒருவரைக் கடுமையாகத் தாக்கியும், தரம் தாழ்ந்தும் விமர்சிக்கும் பிரசுரம் ஒன்று எளிதில் அழிக்க முடியாத களங்கத்தை உருவாக்கும். ஆனால் அதனை எழுதியவர், எழுதச் செய்தவர் யார் என்பதைக் கண்டறிய முடியாது. இதுவே காக்ஸ்டன் அச்சகத்தைக் கொண்டுவந்து ஐம்பது ஆண்டுகள் ஆகியிருந்த லண்டனின் நிலை. இதைக் காக்ஸ்டன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

உன்னதமான  இலக்கியத்தையும், பக்தியையும், பொழுதுபோக்கையும், இங்கிலாந்திற்குக் கொடுத்த அச்சகங்கள் இந்தக் குழப்பங்களையும் கொடுத்தன. 

முதலீடு செய்யத் தயார் என்றால் ஒருவர் அச்சகம் ஒன்றை எளிதில்  நிறுவமுடிந்தது. அச்சுத் தொழில் தெரிந்த ஒருவர், தன் நண்பரை முதலீடு செய்யச் சொல்வது எளிதானது. தொழில் தெரியாத ஒருவர் சில மாதங்களில் அச்சுத் தொழிலைக் கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு நாள் பைபிளும், மறுநாள் ப்ராடஸ்டன்ட் அறிக்கையும் ஒரே அச்சகத்தில் அச்சாக முடிந்தது.

கத்தோலிக்கத் திருச்சபை விழித்துக் கொண்டது. அச்சகங்கள் மூலம் ப்ராடஸ்டண்ட் கருத்துகள் மேற்கு ஐரோப்பாவில் பரவியது. பல நூற்றாண்டுகளில் இருந்திராத புதிய சிக்கலை கத்தோலிக்கக் கிறிஸ்தவம் எதிர் கொண்டது.  மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் ஏற்கனவே ஜெர்மனியைத் துண்டாடி இருந்தது. அதுமட்டுமல்ல, அவரது ப்ராடஸ்டண்ட் கொள்கைகள்  பிரான்ஸ், நெதர்லாந், ஸ்விட்சர்லாந் என்று பரவியபடி இருந்தன. கத்தோலிக்கம் அப்போது இங்கிலாந்தின் அலுவல்பூர்வ மதமாக இருந்தது என்றாலும் ப்ராடஸ்டண்ட் அறிக்கைகள் அச்சகங்களின் மூலம் நாடெங்கும் பரவியது. அவை எளிதில் கைகள் மாறின. ரகசியமாக வாசிக்கப் பட்டன. ஒவ்வொரு ப்ராடஸ்டண்ட் பதிப்பும் ஒரு விதை. இங்கிலாந்தைப் பிளக்கக் கூடிய ஆலம் வேரின் விதை.

அதுவரை அரண்மனைக் கிசுகிசு என்ற அளவில் இருந்த, அரசின் மீதான விமர்சங்கள் இப்போது அச்சாகி வீதிக்கு வந்தன. அரசரைக் கேள்வி கேட்க முடிந்தது. அமைச்சர்களைத் தாக்கி எழுத முடிந்தது. ஒரு அரசின் ஸ்திரத்தன்மை குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கான கட்டுப்பாட்டைப் பொறுத்தது. இப்போது அச்சகங்கள் அந்தக் கட்டுப்பாட்டை சாத்தியமற்றதாக ஆக்கியிருந்தது.

இது தவிர, நன்மதிப்பு பெற்றிருந்த புத்தகப் பதிப்பாளர்களுக்கும் பிரச்சினைகள் முளைத்தன. அனுமதி பெறாமல், கைக்குக் கிடைத்தவற்றைப் பதிப்பித்து வெளியிடும் பதிப்பாளர்கள் உருவாக்கினர். புத்தக ஆசிரியருக்குப் பணம் கொடுத்து, அச்சுமை, காகிதம் இவற்றில் முதலீடு செய்து புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர்கள் புதிய போட்டியாளர்களைச் சந்தித்தார்கள். ஒரு புத்தகம் வெளியாகி நன்றாக விற்பனை ஆகும்போது அதனை அனுமதி பெறாமல், மலிவாக அச்சடித்து லாபம் பார்க்கும் போட்டியாளர்களால், நன்மதிப்பு கொண்ட பதிப்பாளர்கள் பாதிக்கப் பட்டனர்.

இத்தனை பிரச்சினைகளுக்கும் என்ன தீர்வு என்று லண்டன் யோசிக்க ஆரம்பித்தது.

Old St. Paul’s Cathedral Public Domain

தீர்வு

பதிப்புத் துறையில் இருந்தே அந்தத் தீர்வு பிறந்தது. 

லண்டனின் புத்தகப் பதிப்புத் துறையினர், 1403 ல்  உருவாக்கி நடத்தி வந்த தொழில் அமைப்பு (guild) ஸ்டேஷனர்ஸ் கம்பெனி என்று அழைக்கப் பட்டது. இந்தப் பெயர் அவர்கள் செய்துவந்த தொழிலில் இருந்து பிறந்தது. புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை ஊரூராய்ச் சென்று விற்பனை செய்தவர்கள் போலில்லாமல், ஓரிடத்தில் நிலையான கடை போட்டு விற்பனை செய்தவர்கள். எனவே “ஸ்டேஷனர்ஸ்” கம்பெனி ஆனார்கள். 

(Stationary , stationery என்ற சொற்களில் எழுத்துக்கள் வேறுபாட்டில் குழப்பம் ஏற்படலாம். Station + “er”- ஓரிடத்தில் நிலைத்தவர்கள்)

காலப் போக்கில் ஸ்டேஷனர்ஸ் கம்பெனியுடன்  பதிப்புத் துறை சார்ந்த அனைவரும் இணைந்தனர். கைகளால் எழுதும் எழுத்தர்கள், வெளிப்பாடுகளை செய்யும் கலைஞர்கள், புத்தகங்களைத் தைப்பவர்கள்  (binders), இறுதியாக அச்சகங்கள்.

அன்றைய நாளின் மற்ற தொழிலமைப்புகள் போலவே ஸ்டேஷனர்ஸ் கம்பெனியும் துறை சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. தரக் கட்டுப்பாடு செய்தது. இதனால் தரமற்ற தயாரிப்புகள் தவிர்க்கப்பட்டன. உறுப்பினர்களுக்கிடையே உருவாகும் பிரச்சினைகளைத் தலையிட்டுத் தீர்த்தது; அரச நீதிமன்றங்களைவிட விரைவாகவும், செலவில்லாமலும் தீர்த்தது. துறைக்குப் புதிதாக வருபவர்களுக் பயிற்சி அளித்தது. நோய்வாய்ப்படும் உறுப்பினர்களைக் கவனித்துக் கொண்டது. இறந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்தது.

இந்த ஸ்டேஷ்னர்ஸ் கம்பெனி இப்போது தனக்குப் புதிய பொறுப்பு ஒன்றிக்கான வாய்ப்பு இருப்பதைத் தெரிந்து கொண்டது. அச்சுத் துறையை அரசு கட்டுப்பாட்டில் வைக்க ஸ்டேஷனர்ஸ் கம்பெனி உதவத் தயாரானது. அதற்குப் பலனாகப் புதிய சலுகைகளும் கிடைக்கும் என்று கருதியது.

கம்பெனி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு, ப்ராடஸ்டண்ட் மற்றும்  பிரிவினைவாதக் கருத்துக்களை கட்டுப் படுத்த விரும்பியது. கம்பெனி தனது உறுப்பினர்களுக்கு எதிரான வியாபாரப்  போட்டியைக் கட்டுப்படுத்த விரும்பியது. இரு தரப்புக்கும் உகந்த அமைப்பு ஒன்று உருவாக வேண்டும். அது பிரிவினைப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் ஸ்டேஷனர்ஸ் கம்பெனி உறுப்பினரைத் தவிர மற்றவர்கள் செய்யும் அச்சுத் தொழிலைக் கட்டுப்படுத்தவும்  வேண்டும்.

1557 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசி முதலாம் மேரி, ஸ்டேஷனர்ஸ் கம்பெனிக்கு அளித்த புதிய அங்கீகாரம், இங்கிலாந்தின் பதிப்புத் துறையின் தலையெழுத்தை நிர்ணயித்தது.

unbekannter Maler, Public domain, via Wikimedia Commons

புதிய விதிகளின்படி ஸ்டேஷனர்ஸ் கம்பெனி உறுப்பினர்களைத் தவிர பிறர் புத்தகங்களை பதிப்பிக்கக் கூடாது. அப்படிப் பதிப்பிக்க விரும்பினால், கம்பெனியின் அனுமதி பெறவேண்டும். கம்பெனி உறுப்பினர்களிலும் கூட, யார் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்க வேண்டி கம்பெனியில்  பதிவு செய்திருக்கிறார்களா அவர்கள் மட்டுமே பதிப்பிக்க முடியும். அனுமதி பெறாமல் யாரேனும் பதிப்பு செய்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அவர்கள் அச்சகத்தைக் கம்பெனி சோதனை செய்யலாம். அனுமதி பெறாத பதிப்புகளை அழிக்கலாம். அச்சுக் கருவிகளைப் பறிமுதல் செய்யலாம். விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்கலாம். இவை கம்பெனிக்கு வழங்கப்பட்ட புதிய அதிகாரங்கள்.

அரசுக்கு இப்போது பதிப்புத் துறையைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருந்தது. அதற்கென்று ஒரு துறையை உருவாக்குவதை விட, பதிப்புத் கம்பெனிக்கு தணிக்கை செய்யும் அதிகாரத்தை வழங்குவது எளிதாக இருந்தது. இருவரும் பலன் பெற்றனர். குறிப்பாக, கம்பெனியின் சில முக்கிய உறுப்பினர்கள் அதிகப் பலன் பெற்றனர். சில குறிப்பிட்ட புத்தகங்களை அவர்கள் மட்டுமே பதிப்பிக்க முடியும்.

இந்தப் புதிய அமைப்பு இன்றைய காப்பிரைட் போன்றது அல்ல என்றாலும், அதற்கு அடிப்படையானது.

This page has the Stationers entry for the first quarto of Shakespeare’s “A Midsummer Night’s Dream

ஒரு உறுப்பினர் கம்பெனிப் பதிவேட்டில் ஒரு புத்தகத்தைப் பதிவு செய்யும்போது அவர் அந்தப் புத்தகத்தை வெளியிடும் தனியுரிமையப் பெறுகிறார். அவர் அனுமதி இல்லமால் மற்ற உறுப்பினர்கள் ஒரு போட்டிப் பதிப்பை வெளியிட முடியாது. இந்த உரிமை ஒரு சொத்து போன்றது. விற்கலாம். வாரிசுகள் அனுபவிக்கலாம். கூட்டாளிகளுக்குள் பிரித்துக் கொள்ளலாம். கடனுக்கு ஈடாகக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துக் கொள்ளலாம். அது ‘அறிவுசார்’ சொத்து.

கம்பெனிப் பதிவேடு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை. போட்டியினால் பிரச்சினைகள் வரும்போது, எது யாருக்கு உரியது என்பதை கம்பெனியின் பதிவேடு சொல்லும். முதலில் பதிவு செய்த்தவர் யார் என்பதைப் பதிவேடு ஒன்றே காட்ட முடியும். கம்பெனி அதிகாரிகள் இந்தப் பதிவேட்டைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தனர். ஒவ்வொரு பதிவும் தெளிவாக உள்ளதா என்பதைப் பரிசோதித்தனர். அது ஒன்றே ‘வருமுன் காக்கும்’ வழி.

ஒவ்வொரு பதிவும் ஒருவரின் சொத்து. அந்தச் சொத்துக்கு உரியவர்கள் பதிப்பாளர்கள்.  எழுத்தாளர்கள்  அல்ல.

தனது எழுத்தை அச்சில் பார்க்க ஆசைப்படும் எழுத்தாளர் தன் படைப்பை கம்பெனிக்கு விற்க வேண்டும். கம்பெனி அதனைப் பதிவு செய்து கொள்ளும். அதன் பின் கம்பெனி எத்தனை பிரதிகளை வேண்டுமென்றாலும் பதிப்பு செய்யலாம். புத்தகத்தில் மாற்றங்கள் செய்யலாம். சேர்க்கலாம், நீக்கலாம். அதனைப் பதிவு செய்திருக்கும் கம்பெனி உறுப்பினர் அதனை வேறு ஒருவருக்கு விற்கலாம். வாரிசுகளுக்கு எழுதி வைக்கலாம். விற்கும்போது பெற்றுக் கொண்ட தொகையுடன் எழுத்தாளர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அந்தப் படைப்பு அவருடையது அல்ல. 

எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், ஒரு தச்சர் நாற்காலி ஒன்றைச் செய்து அதனை விற்பனை செய்வது போலவே, எழுத்தாளர் ஒருவர் எழுதிய பின் தனது எழுத்தை விற்பனை செய்வார். அதனை விலை கொடுத்து வாங்கியவர் நாற்காலி ஒன்றை உபயோகிப்பதைப் போலவே அந்த எழுத்தை உபயோகிக்கலாம். எழுத்தின் உரிமை எழுத்தாளிரடமே இருப்பது, புத்தக விற்பனையில் தனக்கென்று ஒரு பங்கைப் பெறுவது என்பவையெல்லாம் அப்போது இருக்கவில்லை.

அடுத்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் இருக்கப் போவதில்லை.

ஸ்டேஷனர்ஸ் :புதிய  போலீஸ் 

கம்பெனி தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தியது. இரவோ பகலோ, கம்பெனி அதிகாரிகள் எந்த அச்சகத்திக்கும் செல்லலாம். சோதனை செய்ய  ஆணை (warrant ) எல்லாம் தேவையில்லை. அச்சாகும் புத்தகம் முறையான அனுமதி பெற்றது என்பதை பதிப்பாளர் நிரூபிக்கத் தவறினால் உடனடி நடவடிக்கை. அச்சுருக்கள் அழிக்கப்படும். பதிப்புகள் பறிமுதல் செய்யப்படும். அபராதமோ, சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்.

சோதனைகள் சாதாரணமானவை ஆக இருக்காது. கம்பெனி ஆட்கள் தடதவென்று வருவார்கள். கதவையையோ, சாதங்களையோ உடைப்பதற்கு ஆயுதங்கள் வைத்திருப்பார்கள். பறிமுதல் செய்யும் பொருட்களைக் கொண்டுசெல்ல வண்டி தயாராகி இருக்கும். 

ரிச்சர்ட் கிராஃப்டன் அரசர் எட்டாம் ஹென்றியின் காலத்தில் ஆங்கிலத்தில் பைபிளைப் பதிப்பித்தவர். நான்காம் எட்வார்ட் அவையின் பதிப்பாளராகவும் இருந்தார். அரசி மேரி பதவிக்கு வந்தவுடன்  அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் சிறையில் தள்ளப்பட்டார். அவரைப்  பதிப்பிக்க வேண்டிய ஆணை ஒன்றை பதிப்பித்ததே அவரது குற்றம். ப்ராடஸ்டண்ட் அறிக்கைகளை ரகசியமாகப் பதிப்பித்த ஜான் டே, ஸ்டேஷ்னர்ஸ் கம்பெனியிடமிருந்து தப்பிக்க நாடு விட்டு நாடு ஓடினார். கம்பெனி அவரைத் துரத்திப் பிடித்தது. 

கம்பெனியின் நோக்கம் எளிமையானது. அது, ஒருவருக்குக் கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக் பாடமாக இருக்கவேண்டும் என்பதுதான் . 

அடுத்த நூற்றைம்பது ஆண்டுகள் கம்பெனியின் அதிகாரம் நீடித்தது. முதலாம் மேரிக்குப் பின், எலிசபெத் ஆகியோரின் ஆட்சி காலம், அரசர்கள் ஜேம்ஸ் மற்றும் சார்ல்ஸ்ஆகியோரின் ஸ்திரத்தன்மை அற்ற ஆட்சி காலம், அதன் பின் உருவான , அரசர் எவரும் காமன்வெல்த் அரசின் தோற்றம் மற்றும் வீழ்ச்சி, மீண்டும் மன்னராட்சி என இங்கிலாந்தின் களேபரமான வரலாற்றிலும் கூட ஸ்டேஷனர்ஸ் கம்பெனி தனது அதிகாரத்தை சிறிதும் இழக்காமல் இருந்தது. கம்பெனியின் பதிவேடு கனமானது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பதிவாகி, உறுப்பினர்களின் வியாபார சாம்ராஜ்யம் விரிவடைந்தது. கம்பெனி, அனுமதியற்ற பதிப்புகளைத் தொடர்ந்து வேட்டையாடியும்  வந்தது.

ஸ்டேஷனர்ஸ் கம்பெனியின் அதிகாரம் குறித்துக் கேள்விகள் எழவில்லை, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரை.

எழுத்தாளர்களிடையே எப்போதும் மனக்குறை இருந்து வந்தது. எழுத்தாளர்களிடம் ஒரு விலை கொடுத்த வாங்கிக் கொண்ட எழுத்துக்கள் மூலம் கம்பெனி பெரும் பொருள் சம்பாதித்தது.  மறுபுறம் வாசகர்கள், போட்டி இல்லாத காரணத்தால் புத்தக விலை அதிகமாகி இருப்பதைக் கண்டார்கள். பைபிள் வாங்க விரும்பும் ஒருவர் தன்னை அச்சாக்கும் அனுமதி பெற்றிருக்கும் ஒருவருடம் இருந்தே வாங்க முடியும். என்ன விலை என்றாலும்.

சிந்தனையாளர்கள் ஒரு கேள்வியை முன் வைத்தனர். கருத்துச் சுதந்திரம் ஒரு குடிமகனின் பிறப்புரிமை எனில், அரசு அச்சகங்களைக் கட்டுப் படுத்துவது எந்த வகையில் சரியானது என்பதே அந்தக் கேள்வி. 1688 ஆம் ஆண்டில் அரசர்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற அரசியல் அமைப்பு இங்கிலாந்தில் பிறந்திருந்தது. எனவே ஸ்டேஷனர்ஸ் கம்பெனியின் அதிகாரம் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற பார்வை உருவானது.

“பாரடைஸ் லாஸ்ட்” என்ற பெரும் காவியத்தைப் பின்னாட்களில் இயற்றிய ஜான் மில்டன் என்ற கவிஞர், 1644 ஆண்டு அவர் கம்பெனியின் அனுமதி பெறாமல், தனது பெயரில், கருத்துச் சுதந்திரம் குறித்த  ஒரு பதிப்பை (Areopagitica) வெளியிட்டார். பண்டைய ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த பேருரை ஒன்றின் பெயரையே தலைப்பாகப் பயன்படுத்தி இருந்தார். ஒரு உண்மை, பொய் ஒன்றை போட்டியில் வெல்லும். உண்மையை நிலைநாட்ட தணிக்கை தேவையில்லை என்றும், தணிக்கை செய்வது, அதிகாரத்தைக் குவிப்பதைத் தவிர வெறும் ஒரு பலனையும் கொடுக்காது என்று வாதாடினார். இந்தப் பதிப்பு குறித்துப்  பாராளுமன்றத்தில் புகார் செய்ய மட்டுமே ஸ்டேஷனர்ஸ் கம்பெனியால் முடிந்தது. ஜான் மில்டன் அந்த அளவு செல்வாக்குப் பெற்றிருந்தார்.  ஆனால், கம்பெனியின் தணிக்கை செய்யும் அதிகாரம் மாறவில்லை.  அந்த  அதிகாரம் பாராளுமன்றம் கொடுத்த லைசன்ஸ் அடிப்படையில் செயல்பட்டது. அரசரின் ஆணைப்படி அல்ல. கத்தோலிக்கர்கள், ப்ராட்டஸ்டண்டுகள், அரசர்கள், பாராளுமன்ற அரசியல்வாதிகள் அனைவரும் ஸ்டேஷனர்ஸ் கம்பெனியை விரும்பினர்.

பாராளுமன்றம் புதிய சட்டங்கள் மூலம் கம்பெனியின் தணிக்கை செய்யும் அதிகாரத்தை புதுப்பித்து வந்தது..

கவிஞர் ஜான் மில்டனின்  குரல் ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்புதான் வலிமையாக ஒலித்தது. 1694 ஆம் ஆண்டு கம்பெனியின் தணிக்கை லைசன்ஸ் புதுப்பிக்கப் படும்போது பாராளுமன்ற விவாதம் எழுந்தது. கம்பெனியும் தன்னால் இயன்றவரை லைசன்ஸ் புதுப்பிக்கப்பட “முயற்சி” செய்தது.

இந்த முறை கம்பெனியின் முயற்சி பலனளிக்கவில்லை.

பாராளுமன்றத்தில் சிலர் கம்பெனியின் அதிகாரம் கருத்துரிமையை ஒடுக்கும் என்று கருதினர். வேறு சிலர் கம்பெனி அச்சுத் தொழிலில் தனியுரிமை பெற்று இருப்பது நல்லதல்ல என்றும் மக்கள் பலன்பெற வேண்டுமென்றால் தொழில் போட்டி அவசியமானது  என்றும்  கருதினர். மற்றும் சிலர் கம்பெனி ஊழல் மலிந்ததாக மாறியிருப்பதைக் கருதினர்.

யார் என்ன கருத்தியிருந்தாலும் அதன் விளைவு ஒன்றுதான். கம்பெனியின் லைசன்ஸ் புதுப்பிக்கப் படவில்லை. கம்பெனியின் பதிவேடு காலாவதியாகவில்லை. ஆனால் கம்பெனியின், வேட்டையாடுதல், பறிமுதல் செய்தல் போன்ற அதிகாரங்கள் காலாவதியாகின.

தணிக்கை இல்லாத பதிப்புத் துறை குழப்பங்களை உண்டாக்கும் என்றெல்லாம் கம்பெனி வாதம் செய்தது.

ஆனால், பாராளுமன்றம் வளைந்து கொடுக்கவில்லை.

Artist Unknown (but made for John Daye): via Wikimedia Commons

தணிக்கைப் போலீஸ் இல்லாதபோது  

ஸ்டேஷனர்ஸ் கம்பெனி லைசன்ஸ் காலாவதி ஆனபின், யாரும் எதையும் பதிப்பிக்க முடிந்தது. நீண்ட காலமாகக் கட்டுப்பாட்டில் இருந்த பைரஸி பெருகியது. ஒரு புத்தகத்தின் பைரஸி பதிப்புகள், புத்தகம்  வெளிவந்த ஒரு வாரத்திற்குள் சந்தைக்கு வந்தன. சில நேரங்களில் ஓரிரு நாட்களில் கூட வெளிவரலாம். யார் முந்திக் கொள்வது என்பதில் பதிப்பாளர்கள் போட்டி போட்டனர். யார் மிகவும் மலிவாக வெளியிடுகிறார்களோ அவர்களை சந்தையைப் பிடிக்க முடியும். வேகம் முக்கியமானது. பிழைகள் பொருட்டல்ல.

எழுத்தாளரிடமிருந்து  விலை கொடுத்து வாங்கிய பதிப்பாளர், மலிவான பைரஸி பாதிப்புகளுடன் போட்டி போட முடியவில்லை. இதனால் எழுத்தாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். மலிவாகப் பைரஸி பதிப்பு வெளிவரும் என்று தெரிந்தபின் யார்தான் எழுத்துக்கு விலை கொடுத்துப் புத்தகத்தை அச்சாக்க முன்வருவார்கள்! எழுத்தாளர்களின் வருவாய் குறைந்தது. எழுதும் ஊக்கமும் சேர்ந்து குறைந்தது.

பின்னாளில் ‘ராபின்சன் க்ரூசோ’ என்ற பெரும் வெற்றிபெற்ற நாவலை எழுதிய டேன்யல் டஃபோ, பைரஸிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஒரு எழுத்தாளரின் எழுத்து, அவரது வீடு மனை போன்று வாழ்நாள் முழுதும் அவருக்குச் சொந்தம் என்பது அவரது வாதம். எழுத்தைத் திருடுவது, ஒருவரது உடைமைகளைத் திருடுவது போன்றே குற்றம் என்று கருதினார்.

ஜொனாதன் ஸ்விஃப்ட் , ஜோசப் ஆடிசன் போன்றோரும் பைரஸிக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். எழுத்தாளர்களும், சில பதிப்பாளர்களும் கூட பைரஸி தடுக்கப்படவேண்டும் என்று கருதினர்.

ஆனால், எப்படி?

முன் போல் ஸ்டேஷனர்ஸ் கம்பெனியைத் தணிக்கை செய்ய அனுமதிக்க முடியாது. இப்போது ஆங்கிலேயர்கள் பத்திரிக்கைச் சுதந்திரம் முக்கியமானது என்று கருதுகிறார்கள், அல்லது அப்படிக் கருதுவது போலக் காட்டிக் கொள்கிறார்கள். எனவே புதிய தீர்வு தணிக்கை செய்யாமல், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

இப்போது ஸ்டேஷனர்ஸ் கம்பெனியும் இவர்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தது. தனக்கு ஏதேனும் அதிகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போடு. அப்படி பெரிய அதிகாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் தனது உறுப்பினர்கள் பதிவேட்டில் பதிந்திருக்கும் புத்தகங்களையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கருதியது. தன்வசம் இருக்கும் புத்தகங்களின் உரிமையை நிரந்தரம் ஆக்கிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டது. பிற எழுத்தாளர்களுடன்  சேர்ந்து பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

பாராளுமன்றம் விவாதங்களுக்குப் பின், நிறைவேற்றிய சட்டம் அவர்கள் கோரிக்கை வைத்தது போல் இருக்கவில்லை.

“Stationers’ Charter 1684,” Primary Sources on Copyright (1450-1900), eds L. Bently & M. Kretschmer, www.copyrighthistory.org

காப்பிரைட் சட்டம் 

1710 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி, அரசி ஆன் (Anne) புதிய சட்டத்திற்கு அனுமதி கொடுத்தார். “ கற்பதை ஊக்குவிக்கவும், புத்தகங்களின் உரிமையை எழுத்தாளர், அல்லது அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டவர்கள் வசம் குறிப்பிட்ட காலம் வரை விட்டு வைக்கும் சட்டம்” பிறந்தது. 

பதிப்பாளர்கள், அச்சகங்கள், தொழில் அமைப்புகள் இவை அல்லாமல், புத்தகங்களின் மீதான உரிமை எழுத்தாளர்களிடமே இருக்கும் என்று வரையறை செய்தது அந்தப் புதிய சட்டம். 

ஆன் சட்டம் (Statute of Anne 1710 ) புதிய வரையறை ஒன்றை உருவாக்கியது. ஒரு புத்தகத்தை எழுத்தாளர் ஸ்டேஷனர்ஸ் கம்பெனியில் பதிவு செய்து கொண்டால், அடுத்த பதினான்கு வருடங்களுக்கு அதன் உரிமை காக்கப்படும். பதினான்கு வருடங்களுக்குப் பின் எழுத்தாளர் உயிர் வாழ்ந்தால், மேலும் பதினான்கு வருடங்களுக்கு அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படைப்பு பொதுச் சொத்தாகிவிடும் (Public Domain). அதன் பின் அதனை யாரும் பதிப்பிக்கலாம். 

ஒரு எழுத்தாளர் தனது எழுத்தின் உரிமையை ஒரு பதிப்பாளருக்கு விற்கலாம். வீடு வாகனம் இவற்றை விற்பது போலவே. பெரும்பாலான எழுத்தாளர்கள் இப்படி விற்பதையே விரும்பினர். இந்த விற்பனை சட்டப் பூர்வமானது. இது ஸ்டேஷ்னர்ஸ் கம்பெனியிடம் வேறு வழியின்றி சொற்பத் தொகைக்கு விற்பனை செய்வது போன்றது அல்ல.

புதிய சட்டப்படி, கம்பெனி வசம் ஏற்கனவே இருந்த எழுத்துக்கள் இருபத்தொரு வருட காலம் பாதுகாப்புப் பெற்றன. அதன் பின்னர், எத்தகைய புகழ்பெற்ற புத்தகமாக இருந்தாலும், அது பொதுச் சொத்தாகிவிடும்.

உண்மையில் கம்பெனி எதிர்பார்த்தது வேறு. என்றென்றும் தங்கள் வசமிருக்கும் புத்தகங்களின் உரிமை காலத்திற்கும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தது ஸ்டேஷனர்ஸ் கம்பெனி. அவர்கள் வசம் இருந்த பைபிள், பிரார்த்தனைப் புத்தகங்கள், சட்டப் புத்தகங்கள், காவியங்கள் காலத்தால் அழியாதவை. வருடக் கணக்கில் தொடர்ந்து விற்பனை ஆகும் புத்தகங்கள் அவை. அவையும் கூட இருபத்தொரு வருடங்களுக்குப் பின் பொதுச் சொத்தாகிவிடும் என்பது கம்பெனிக்குக் கசப்பான உண்மை.

காப்பிரைட் சட்டம் யாரையும் முழுமையாகத் திருப்திப் படுத்தவில்லை. எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் உரிமையைப் பெற்றார்கள். ஆனால் அவர்களிடம் புத்தகத்தை வெளியிடும் வல்லமை இருக்கவில்லை. பதிப்பாளர்கள், தாங்கள் அனுமதி பெற்ற புத்தகங்களுக்கு, பைரஸிக்கு எதிரான பாதுகாப்பைப் பெற்றனர். ஆனால், முன்போல என்றென்றும் அவர்கள் அதனை உரிமை கோர முடியவில்லை. வாசகர்கள் பொதுச் சொத்தாகும் புத்தகங்களை விரும்பலாம். ஆனால் அதற்கு அவர்கள் காத்திருக்க வேண்டும். 

எனினும் ஆன் சட்டம், தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு உலகெங்கும் காப்பிரைட் சட்டம் வரையறை செய்யப்பட அடிப்படையாய் அமைந்தது. படைப்பின் மீது படைப்பாளிகளின் உரிமை உறுதி செய்யப்பட்டது. ஆனால் அந்த உரிமைக்குக் காலவரையறை இருந்தது. அவர்கள் தங்கள் படைப்பைப் பதிப்பிக்கும் உரிமையை ஒரு பதிப்பாளருக்குக் கொடுக்கலாம். ஆனால் பதிப்பிக்கும் உரிமை மட்டுமே பதிப்பாளருக்குக் கிடைக்கும். படைப்பின் முழு உரிமை படைப்பாளியிடமே இருக்கும். எது எப்படி இருந்தாலும் இறுதியில் அனைத்தும் பொதுச் சொத்தாக மாறும்.

இங்கிலாந்து ‘காப்பிரைட்’டை உருவாக்கியது.

இப்போது பிறந்திருக்கும் புதிய கேள்வி, இந்தச் சட்டம் புத்தகம், இசை, ஓவியம் என மனித மனதின் ஒவ்வொரு படைப்பிற்கு எப்படி பொருந்தும் என்பதே. 

காப்பிரைட் கதைகள்

இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.