நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின் நித்தம்
அஞ்சல் அருள்பெருகும் ஆணவம் நீங்கும்
செஞ்சுடர் சோதியாய் சிவனருள் தோன்றும்
எஞ்சலும் இல்லாத இறைவனாம் ஈசன்.
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் பாடல் 142.
வேதாந்த மாணவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளான சாதன சதுஷ்டயம் என்ற தலைப்பின் கீழ் வரும் நான்காவது தகுதி ஷட்க சம்பத்தி எனப்படும் ஆறு செல்வங்களான நற்பண்புகள். அவற்றில் முதலிரண்டான ஷமம், தமம் ஆகிய இரண்டு குறித்தும் சென்ற பகுதியில் பார்த்து முடித்தோம். மீதமுள்ள நான்கு பண்புகள் குறித்தும் இப்பகுதியில் காணலாம்.

ஷட்க சம்பத்தியில் மூன்றாவது பண்பு உபரதி: என்று அழைக்கப்படுகிறது. உபரமம் என்று பாடபேதமும் உண்டு. அவசியமற்ற புறச்செயல்களிலிருந்து இயல்பாக விலகி இருக்கும் நிலை என்று இதற்குப் பொருள். தன்னை அறிதலுக்கான பயணத்தில் இறங்கும் ஒருவனுக்கு மிக முக்கியமான ஒரு தேவை காலம். தேவையற்ற செயல்களைச் செய்வதிலிருந்து விலகி இருப்பதன் மூலம் அவனுக்கு வேதாந்த விசாரம் புரிவதற்கான காலம் கிடைக்கிறது. உபரதி என்ற இந்தப் பண்பு “செய்து” அடையப்படுவது அல்ல. அது மனத்தினுடைய வளர்ச்சியின் விளைவாக இயல்பாக ஒருவனுக்குள் நிகழ்வது. ஷமம் (மனத்தை ஆளும் திறன்), தமம் (புலன்களை ஆளும் திறன்) ஆகிய பண்புகளை ஒருவன் குறிப்பிட்ட காலம் தொடர்ந்து வளர்த்து வந்தானேயாகில் உபரதி என்ற பண்பு அவனுக்குள் இயல்பாகவே வந்து அமையும். வேதாந்த விசாரம் ஒன்றே நான் பொருட்படுத்தி புரியும் செயல்; அதற்குத் தடையாகவும், வேறு திசையில் இழுத்துச் செல்லும் எந்தச் செயலும் என் மனத்தைச் சிதறடிக்கிறது, எனக்குப் பயன் தராது என்று உணர்ந்து அவற்றிலிருந்து விலகி இருக்கும் நிலை உபரதி எனப்படும். தேவையற்ற செயல்களின் பயனற்ற தன்மையும், அவற்றால் காலம் வீணாவது குறித்த விழிப்புணர்வை அடைந்தாலே உபரதி என்று பண்பு நமக்குள் வந்து விடும்.
உபரதியை வளர்த்துக் கொள்ள இன்னொரு முக்கியமான பயிற்சி, புகழ்-இகழ், வெற்றி-தோல்வி, பாராட்டு-புறக்கணிப்பு என்ற இரட்டைகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நிற்கும் நிலை. என் செயல்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்ற எதிர்பார்ப்பைவிட, நான் எடுத்துக்கொண்ட செயல்களை எவ்வாறு செய்து முடிக்கிறேன் என்பதில் கவனம் செலுத்துவதில்தான் உபரதி என்ற பண்பு வளர்கிறது. மேலும், வேதாந்த மாணவன் தன்னுடைய பயிற்சிகளின் நோக்கத்தைத் தெளிவாக உணர்ந்தானாகில், உபரதி தானாக வந்து அமையும். மோக்ஷம் என்னும் அகவிடுதலையே வேதாந்த மாணவனது ஒரே குறிக்கோள். இந்த நோக்கம் தெளிவாக இருந்தால் புறச்செயல்கள் தானாகவே தம் முக்கியத்துவத்தை இழக்கும். எனவே, தேவையற்ற செயல்களைக் குறைத்தலும், மனத்தை உள் நோக்கித் திருப்பலும், புலன்களின் ஓட்டத்தை மெதுவாக்கலும், உலகத்திலிருந்து தனக்கு அங்கீகாரத்தை எதிர்பார்த்தலைக் குறைத்தலும், தன்னுடைய இறுதிக் குறிக்கோளாக அகவிடுதலை ஒன்றே என்பதில் தெளிவாக இருத்தலும், நாம் இப்போது புரிந்து கொண்டிருக்கும் அவசியமற்ற செயல்களுக்கும், நமக்குமிடையே ஒரு சிறு இடைவெளியை உருவாக்குதலுமே உபரதி என்ற பண்பை வளர்த்துக் கொள்வதற்கான உபாயங்களாகும்.
ஒருவர் தன்னுடைய அறமான ஸ்வதர்மத்தைப் பின்பற்றினாலே அது உபரதி என்ற பண்பை அவரிடம் தோற்றுவிக்கும் என்று தத்துவபோதம் கூறுகிறது. “ஸ்வதர்ம அனுஷ்டானமேவ உபரதி:” தன்னறம் எனப்படும் இந்த ஸ்வதர்மம் குறித்து கீதையில் கண்ணன் விரிவாகப் பேசுகிறான்.
நான்காவது பண்பு திதிக்ஷா என்று அழைக்கப்படுகிறது. இதை சகிப்புத்தன்மை என்று மொழிபெயர்க்கலாம். மன உறுதி என்றும் பொருள் கொள்ளலாம். வாழ்க்கையில் வரும் அனைத்து சவால்களையும், அனைத்து வகையான அனுபவங்களையும் எதிர்கொள்ளும், தாங்கிக்கொள்ளும் திறன் திதிக்ஷா என்றழைக்கப்படுகிறது. பொறுமை, உள்ளார்ந்த வலிமை என்றும் திதிக்ஷாவுக்குப் பொருள் சொல்லலாம். “ஷீதோஷ்ண சுக துக்காதி த்வந்துவ சஹிஷ்னுத்வம் திதிக்ஷா” என்று தத்துவபோதம் திதிக்ஷாவை வரையறை செய்கிறது. பொதுவாக இன்பம்-துன்பம், புகழ்-இகழ், வெப்பம்-குளிர்ச்சி, வெற்றி-தோல்வி போன்ற, நமக்கு விருப்பு, வெறுப்புகளை அளிக்கவல்ல இரட்டைகளான அனுபவங்களை மனக்கலக்கம் இன்றி தாங்கிக்கொள்ளும் திறன் திதிக்ஷா ஆகும்.
கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் கண்ணன் தன்னுடைய வேதாந்த உபதேசத்தைத் துவங்குகிறான். முதலில் ஆத்மாவைப் பற்றிய இலக்கணங்களைக் குறிப்பிட்டு விட்டு, பின்னர் ஆன்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைக் குறித்துப் பேசுகிறான். அதில் திதிக்ஷா என்ற பண்பே முதன்மை பெறுகிறது. “கௌந்தேயா, புலன்கள் பொருள்களுடன் தொடர்பு கொள்ளும் போது குளிர்–சூடு, இன்பம்–துன்பம் போன்ற அனுபவங்கள் உண்டாகின்றன. அவை வருவதும் போவதும் இயல்பானவை; நிரந்தரமல்ல. அவற்றை தாங்கு — அதுவே திதிக்ஷா,” என்று அர்ஜூனனுக்கு அறிவுரை கூறுகிறான்.
மனம் அமைதியாக இருக்கும்போதும், புலன்கள் நமது கட்டுக்குள் இருக்கும்போதும்தான் மனம் தன்னைப் பற்றிய அறிவில் ஆழ்ந்திருக்க இயலும். எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகியிருக்கிற அந்த உணர்வை அனுபவிக்க இயலும். இந்த நிலையை அடைவதற்குத் திதிக்ஷா என்ற சகிப்புத் தன்மை மிக அவசியம். இந்தப் பண்பு இல்லையெனில் மனம் ஒவ்வொரு சிறு நிகழ்வுக்கும் அசைந்து எதிர்வினை அளிக்கத் துவங்கும். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் வெளியில் ஓடும். தியானத்தில் நிலைத்து அமர இயலாது.
ஐந்தாவது பண்பு என்பது ஷ்ரத்தா எனப்படுகிறது. சிரத்தை என்று பொதுவாகத் தமிழில் எழுதப்படும் இந்தச் சொல்லுக்கு மேலோட்டமாக நம்பிக்கை என்ற பொருளை அளிக்கலாம். வேதாந்தத்தில் ஷ்ரத்தா என்ற சொல்லுக்கு சிறப்புப்பொருள் உண்டு.
ஒரு வேதாந்த மாணவன், ஆன்மவிடுதலை அடையும் இச்சையான முமுக்ஷூத்துவத்தை அடைந்தவன், ஆன்மவிடுதலையை சப்தப் பிரமாணமான வேதமே கொடுக்க வல்லது என்று தெளிந்து அதைக் கற்பதற்கு துவங்குகிறான். அவன் வேதாந்த நூல்களைக் கற்கும் காலம் முழுவதும், அல்லது அவன் மோக்ஷத்தை அடையும் காலம் வரை வேதாந்த நூல்கள் மீதும், அவற்றை பயில அவனுக்கு ஆசிரியர் மீதும் உள்ள நம்பிக்கையே இங்கு ஷ்ரத்தா என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. “குரு வேதாந்த வாக்யேஷு விஸ்வாஸ: ஷ்ரத்தா,” என்று தத்துவபோதம் குறிப்பிடுகிறது. இங்கு நம்பிக்கை என்பது கண்மூடித்தனமான, குருட்டு நம்பிக்கையோ, மூடபக்தியோ அல்ல. வேதாந்தம் சொல்ல வருவனவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வரை ஒருவருக்கு இருக்க வேண்டிய திறந்த மனநிலை; வேதாந்தப் பிரமாணம் சொல்வது எனது யுக்திக்கும், உலகியல் நோக்குக்கும் இப்போது ஒத்துவரவில்லை எனினும், இறுதியில் அது எனக்கு என்னைப் பற்றிய உண்மையான அறிவை அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருத்தல்; சப்தப் பிரமாணத்தை விமர்சனப் பாங்கின்றி அணுகுதல்; என்னுடைய ஆசிரியரும், வேதாந்த நூல்களும் எனக்கு நன்மையை அளிப்பதற்காகவே இந்த முறையில் எனக்குக் கற்பிக்கின்றன என்ற நோக்கத்தில் அணுகுதல்; ஆசிரியரிடமும், வேதாந்த நூல்களிடமும் அடக்கத்துடனும், பணிவுடனும் இருத்தல் ஆகியவற்றையே ஷ்ரத்தா என்ற சொல் குறிப்பிடுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் ஷ்ரத்தா என்பது அறிவுசார் அஹங்காரத்திலிருந்து விடுதலை. ஏனெனில் வேதாந்தக் கல்விக்கு அகங்காரம் (ஈகோ) மிகப்பெரிய தடையாகும்.
ஷட்கசம்பத்தியில் ஆறாவதும், இறுதியானதுமான பண்பு சமாதானம் எனப்படும். சமாதானம் என்ற சொல் பொதுவாக நமக்கு அமைதி என்ற பொருளில் அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் தத்துவபோதம், “சித்த ஏகாக்ரதா சமாதானம்,” என்று வரையறை செய்கிறது. மனம் ஒரு திசையிலேயே குவிக்கப்பட்டு, ஒருமுகப் படுத்தப்பட்டிருக்கும் தன்மைக்குத்தான் சமாதானம் என்று பொருள். மனம் வெளியில் ஓடாமல் உள்ளே திரும்பி நிற்றல்; புலன்கள், ஆசைகள், அச்சங்கள் மனதை இழுத்துப் போடாத நிலை; மனம்-புத்தி-இச்சை ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில், ஒரே திசையில் இருப்பது – இந்த நிலையே சமாதானம் எனப்படுகிறது.
இருப்பதிலேயே மிகக் கடினமானதும், சவாலானதுமான ஒரு செயல் தன்னைப் பற்றிய அறிவை அடைதலாகும். அதற்கு அலைபாயாமல், ஒரே திசையில் நிலைத்து நிற்கும் வலிமையான மனம் அவசியம். சிதறுண்ட மனத்தால் வேதாந்தம் உரைக்கும் உயரிய உண்மைகளைப் பிடித்துக் கொள்ள முடியாது. சமாதானம் என்றால் மனத்தை தன்னைப் பற்றிய அறிவை அடைவதற்குத் தகுதியான கருவியாக மாற்றுவது என்று பொருள்.
மனத்தை சிதறச் செய்யும் செயல்களை குறைத்தல்; சமம், தமம், உபரதி ஆகியவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்தல்; திதிக்ஷாவால் மனத்தின் அசைவின்மையை வளர்த்தல்; ஸ்ரத்தாவால் குருவின் உபதேசத்தில் நம்பிக்கை வளர்த்தல்; மற்றும் தினசரி சிறிய தியானம் அல்லது சுவாசத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மனத்தின் ஒருங்கு குவிக்கும் ஆற்றலை வளர்த்தல் ஆகியன சமாதானம் என்ற பண்பை வளர்ப்பதற்கு உபாயங்களாகக் கூறப்படுகின்றன.
நாம் இதுவரை பார்த்தவற்றை மீண்டும் நினைவுகூர்ந்தால்: வேதாந்த மாணவனுக்கு வேண்டிய தகுதிகளாக நான்கு தொகுப்புகளை தத்துவபோதம் கூறுகிறது. அதற்கு சாதன சதுஷ்டயம் என்று பெயர். விவேகம், வைராக்யம், முமுக்ஷூத்துவம், மற்றும் ஆறு செல்வங்களான ஷட்க சம்பத்தி என்ற பண்புகள். இவற்றையெல்லாம் விரிவாக சென்ற சில பகுதிகளில் பார்த்து முடித்தோம்.
வேதாந்தத்தை கற்கத் துவங்குவதற்கு இத்தனை கட்டுப்பாடுகளா? இத்தனைத் தகுதிகளையும் ஒருவர் வளர்த்துக் கொண்டால்தான் வேதாந்தத்துக்குள் நுழைய இயலுமா? என்று மலைப்பாக இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு இந்தப் பண்புகள் முழுமையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேற்குறிப்பிட்ட பண்புகள் ஒவ்வொன்றிலும் சிறு அளவாவது ஒருவருக்கு இருந்தால்தான் அவரால் ஆன்மிகத்தின் பக்கமே வர முடியும். சிறிதுகூட இந்தப் பண்புகளின் தாக்கம் இல்லாதவருக்கு வேதாந்தக் கல்வியைப் பார்க்கும் போது அது காலத்துக்குப் பொருந்தாததாகவும், நேர விரயம் என்றும், இது ஏதோ வெறும் புத்தக அறிவு அல்லது கல்விசார் விவாதம் என்றும் தோன்றும். அவர்களுக்கு வேதாந்தக் கல்வியில் ஈடுபாடு ஏற்படாது.
மேலும், கூர்ந்து அவதானித்தால் இந்தப் பண்புகள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதைக் காணலாம். எனவே ஒருவர் ஒவ்வொரு பண்பையும் தனித்தனியாக கவனம் கொடுத்து வளர்க்க வேண்டியதில்லை. ஒரு பண்பின் மீது கவனம் செலுத்தினால் பிற பண்புகள் தாமாகவே வளரும். சிறிய அளவிலேனும் இப்பண்புகளைக் கொண்ட ஒருவர் வேதாந்தக் கல்வியைத் துவக்கிய பின்னர், அக்கல்வியே அவருடைய சாதன சதுஷ்டயம் என்ற நான்கு பண்புகளையும் முழுமையாக அளித்து விடும்.
தத்துவ போதம் என்ற வேதாந்த அறிமுக நூல் சாதன சதுஷ்டயத்தை அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு பண்பையும் வரையறை செய்வதோடு நின்று விடுகிறது. இப்பண்புகளை வளர்த்துக் கொள்வது எவ்வாறு என்ற விளக்கங்களுக்குள் அது செல்வதில்லை. இந்தப் பண்புகளை வளர்ப்பதற்கான உபாயங்களை கிருஷ்ணர் பகவத் கீதையில் அளிக்கிறார். விவேகம், வைராக்கியம், முமுக்ஷூத்துவம் ஆகிய மூன்று பண்புகளையும் கர்மயோகம் என்ற யோகத்தின் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும் என்கிறார். நாம் கர்மயோகம் குறித்து பின்னர் விரிவாகக் காண இருக்கிறோம். ஷட்க சம்பத்தி என்ற நான்காவது பண்பை உபாசனா யோகம் அல்லது தியான யோகத்தின் மூலம் அடையலாம். இவ்விரண்டு யோகங்களின் உதவி கொண்டு சாதன சதுஷ்டயம் என்ற நான்கு பண்புகளையும் வளர்த்துக் கொள்வதே தன்னை அறிதல் குறித்த விசாரமான ஞானயோகத்துக்காக ஒருவர் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதாகும்.
கர்மயோகமும், உபாசனா யோகமும் ஒருவருக்கு ஞானயோகத்தை மேற்கொள்வதற்கான தகுதியை அளிக்கும். ஞானத்தை அல்ல, ஞான யோக்கியதையையே அவை அளிக்கின்றன. ஞானம் ஞானயோகத்தால் மட்டுமே சம்பவிக்கும். எனவே முழுமையான ஆன்மிக சாதனையை இரண்டாகப் பிரித்து விடலாம். முதல் நிலை, “ஞான யோக்யதா பிராப்தி,” கர்மயோகம், உபாசனா யோகம் ஆகியவற்றைக் கொண்டு ஞானத்துக்கான தகுதிகளை அடைதல், இரண்டாவது நிலை, “ஞானப் பிராப்தி.” தன்னைப் பற்றிய அறிவை அடைதல். தன்னையறிந்தவனுக்கு அதற்குப்பின் அடைவதற்கு ஏதுமில்லை.
முழு வேதங்களையுமே எடுத்துக் கொண்டால் அவற்றின் முதல் பகுதியான, பூர்வ பாகம், முழுவதும் பல்வேறுவிதமான கர்மங்களைக் குறித்தும், உபாசனங்களைக் குறித்தும் விரிவாகப் பேசுகின்றது. இறுதிப் பகுதியான “அந்த பாகம்” அல்லது வேதாந்தம் ஞானயோகம் மூலம் ஞானத்தை அடைதல் குறித்துப் பேசுகிறது. முதல் பகுதியில் தகுதிகளை அடைதலும், இறுதிப் பகுதியில் ஞானத்தை அடைதலுமே முழு வேதங்களின் இலக்காக இருக்கின்றது.
[தொடரும்]
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
