
அத்வைத வேதாந்தத்தைக் கற்பதன் பலனை முழுமையாக அடைய விரும்பும் ஒருவர் அதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகளை சாதன சதுஷ்டயம் என்ற தலைப்பில் சங்கரரின் தத்துவ போதம் என்ற நூல் பேசுகிறது. நான்கு தகுதிகளுடைய தொகுப்புகள் என்பது இதன் பொருள். அந்த நான்கு தகுதிகள்: விவேகம், வைராக்யம், முமுக்ஷூத்துவம், ஷட்க சம்பத்தி, ஆகியன. முதலில் இச்சொற்களுக்கான பொதுவான அர்த்தத்தைக் கொடுத்து விட்டு பின்னர் ஒவ்வொரு தலைப்பையும் விரிவாகக் காண இருக்கிறோம்.
விவேகம் என்பதற்கு பகுத்தறியும் திறன் என்றும், வைராக்யம் என்பதை உலகப்பொருட்கள் மீதான விருப்பமின்மை என்றும், ஷட்க சம்பத்தி என்பதை ஆறு விதமான ஒழுக்கப் பண்புகள் என்றும், முமுக்ஷூத்துவம் என்பதை அக விடுதலையின் மீதான இச்சை என்றும் சுருக்கமாகப் பொருள் கொள்ளலாம்.
விவேகம் என்பது ஒருவரின் பகுத்தறியும் திறன் (discrimination). எதைப் பகுத்தறியும் திறன்? “நித்ய அநித்ய வஸ்து விவேக:” என்று தத்துவ போதம் குறிப்பிடுகிறது. எது நிலையானது, எது நிலையற்றது என்று பகுத்தறியும் திறன்தான் விவேகம் எனப்படுகிறது. இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கையில் நாம் ஒரு உண்மையை அறிந்து கொள்கிறோம் – அதாவது, இந்த முழுப் பிரபஞ்சமும் காலம் மற்றும் வெளி என்ற எல்லைக்குள், கட்டமைப்புக்குள் இருக்கிறது. எனவே, படைப்பில் உள்ள எந்தப் பொருளும் காலத்திற்கும் வெளிக்கும் அப்பாற்பட்டது அல்ல. ஆகையால், அனைத்தும் காலத்தின் தாக்குதலுக்கு உட்பட்டவை. “கால: கிரீடதி, கச்சதி ஆயு:” என்றொரு வாக்கியம் உண்டு. ‘காலம் விளையாடிக் கொண்டே இருக்கிறது, ஆயுள் சென்று கொண்டே இருக்கிறது’. காலத்தின் தாக்குதல் என்பதன் பொருள் என்ன? ஒவ்வொரு பொருளும் காலத்தால் தாக்கப்படுகிறது என்றால், ஒவ்வொரு பொருளும் பிறப்பிற்கு உட்பட்டது, அதன் விளைவாக இறப்பிற்கும் உட்பட்டது என்பதே ஆகும்.
இந்தப் பிரபஞ்சம் முழுதும் நான் காலத்திற்கு அப்பாற்பட்ட எதையும் காண்பதில்லை. எனவே முழுப் படைப்பும் நிலையற்றது அல்லது அழியக்கூடியது என்று என்னால் கூற முடியும். எனவே, அழிவுத்தன்மை, நிலையற்ற தன்மை என்பது பொருட்கள், உயிரினங்கள், சூழ்நிலைகள் மற்றும் உறவுகளைக் கொண்ட முழுப்படைப்பின் உள்ளார்ந்த இயல்பாகும். நிரந்தரமான பொருள் என்று எதுவும் இல்லை, நிரந்தரமான மனிதர் என்று யாரும் இல்லை, நிரந்தரமான சூழ்நிலை என்று எதுவும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக நிரந்தரமான உறவு என்று எதுவும் இல்லை. மேலும், இந்த முழு உலகமும் அழியக்கூடியது என்பதால், உலகில் உள்ள எதுவும், அல்லது இந்த முழு உலகமும் எனக்கு முழுமையான பாதுகாப்பையோ ஆறுதலையோ ஒருபோதும் வழங்க முடியாது. எனவே, நான் உலகத்திடம் இருந்து நீடித்த பாதுகாப்பையோ ஆறுதலையோ எதிர்பார்க்கப் போனால், என் எதிர்பார்ப்புகள் நிறைவேறப் போவதில்லை. ஏமாற்றமே அதன் விளைவாக இருக்கும். எனவே, சரியான முடிவு இதுதான் – என்னுடைய பாதுகாப்பு மற்றும் இன்பத்துக்காக ஒருபோதும் நான் இந்த உலகத்தைச் சார்ந்து இருக்கப் போவதில்லை. இப்படி ஆராய்வதின் மூலம் ஒருவருக்கு ஏற்படும் இந்தத் தெளிவே விவேகம் எனப்படுகிறது.
எனில் இந்த உலகத்தை ஒருவர் முழுமையாகத் துறந்து விடவேண்டுமா? உலகத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்பது இதற்கான அர்த்தம் அல்ல. இங்கு விவேகம் என்பது பிரித்தறிதல் மட்டுமே. உலகத்தைத் தூக்கி எறிந்து விடுதல் அல்ல. சொல்லப்போனால் இந்த உலகம் நமக்குப் பல விஷயங்களைத் தரவல்லது. இவ்வுலகைப் பயன்படுத்தித்தான் நாம் கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சிக்கான வாய்ப்பு, பொழுதுபோக்கு மற்றும் இன்பத்துக்கான வாய்ப்பு, சேவை செய்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அடைகிறோம். இவை எல்லாவற்றையும் அடைவதற்கு இந்த உலகம் இன்றியமையாதது. இங்கு சொல்லப்படுவது நிரந்தரமான, நிலையான பாதுகாப்பையோ, இன்பத்தையோ நான் இந்த உலகத்திலிருந்து அடைந்து விடமுடியாது என்ற அறிவை அடைவதைத்தான். அந்த அறிவே விவேகம் எனப்படுகிறது.
இந்த உலகம், அதிலிலுள்ள பொருட்கள் அனைத்தும் நிலையற்றவை, அநித்யமானவை, எனவே நான் அவற்றைச் சார்ந்திருப்பது புத்திசாலித்தனம் அல்ல. நிரந்தரமான பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் அடைய வேண்டுமெனில் நான் சார்ந்திருக்க வேண்டியது நிலையான ஒரு பொருளை மட்டுமே. இந்த பகுத்தறியும் திறன்தான் விவேகம் எனப்படுகிறது. நிலையான அந்த பொருள் நித்ய வஸ்து என்று அழைக்கப்படுகிறது (வஸ்து என்ற சொல்லுக்கு பொருள் என்று அர்த்தம்). அந்த நிலையான வஸ்துவைத்தான் வேதாந்தம் பிரம்மம் என்றழைக்கிறது. வேதாந்தக் கல்விக்குள் நுழையுமுன் பிரம்மம் குறித்த அறிவு ஒருவருக்குத் தெளிவாக இல்லையெனினும், இவ்வுலகம் நிலையற்றது என்ற புரிதல் இருந்தாலே அவருக்கு விவேகம் என்ற தகுதி இருப்பதாகக் கருதலாம். மேலும், சாதன சதுஷ்டயம் என்றழைக்கப்படும் விவேகம் உட்பட்ட நான்கு தகுதிகளும் ஒருவரிடம் முழுமையாக இல்லாவிடினும் அவர் வேதாந்தக் கல்வியைத் துவங்கலாம். வேதாந்த நூற்களோடும், ஆசிரியரோடும் அவர் கழிக்கும் காலத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவரது தகுதிகளும் அதிகரிக்கின்றது.
இரண்டாவது தகுதி வைராக்யம் எனப்படுகிறது. பொதுவாக வைராக்யம் என்ற சொல்லை வெறுப்பு என்று புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் வைராக்யம் என்பது பற்றின்மை என்று வரையறுக்கப்படுகின்றது. இங்கு பற்று என்பது என்ன? தன்னுடைய பாதுகாப்புக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் உலகப் பொருட்களைச் சார்ந்திருப்பதையே பற்று என்கிறோம். கல்விக்காகவோ, பிழைப்பிற்காகவோ, சேவைக்காகவோ, அல்லது பொழுதுபோக்கிற்காகவோ உலகைப் பயன்படுத்துவதைப் பற்று என்று வரையறுக்கலாகாது. இங்கு பற்று என்பது நமது உளவியலின் அடிப்படையிலானது. நமது உளவியல் சார்புக்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ உலகப்பொருட்களைச் சார்ந்திருப்பதையே பற்று என்ற சொல் குறிக்கிறது. ஏற்கனவே விவேகம் என்ற பண்பின் மூலம் இவ்வுலகப் பொருட்கள் அனைத்தும் அநித்யம், நிலையற்றது என்று ஆராய்ந்து அறிந்திருக்கிறோம். எனவே இவ்வாறு விவேகம் என்ற தகுதியை அடைந்த மாணவனுக்கு வைராக்யம் என்ற பண்பு இயல்பாகவே வந்து அமையும். முண்டக உபநிஷத், “பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் பிராம்மண: நிர்வேதம் ஆயாத்” என்று கூறுகிறது. தன் செயல்களால் அடையப்படும் அனைத்து உலகங்களையும் ஆராய்ந்து அறிந்த பிராம்மணன் வைராக்யத்தை அடைகிறான் என்கிறது. இங்கு பிராம்மணன் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கவில்லை. பிரம்மத்தைத் தேடும் ஆன்ம சாதகனையே குறிக்கிறது. தனக்கு வைராக்யம் குறைவாக இருக்கின்றது என்று கருதும் ஆன்ம சாதகன் விவேகம் என்ற பகுத்தறிதலை மீண்டும் முறையாகச் செய்வதன் மூலம் தனது பற்றின்மை என்ற பண்பை வளர்த்துக் கொள்ளலாம்.
எனவே வைராக்யம் என்பது உலகை நிராகரிப்பது அல்ல. உலகத்தினின்றும் ஓடிப்போவது அல்ல. எனக்கு உளவியல் ரீதியான பாதுகாப்பு அல்லது மகிழ்ச்சி தேவைப்படும்போது நான் அவற்றுக்காக உலகைச் சார்ந்திருக்காமல், நிலையான ஒன்றையே சார்ந்திருப்பேன் என்ற தெளிவுதான் பற்றின்மை என்று அழைக்கப்படுகின்றது.
மூன்றாவது தகுதி முமுக்ஷூத்துவம் எனப்படுகிறது. விடுதலையின் மீதான இச்சை. எதிலிருந்து விடுதலை? உலகத்தின் மீதான சார்புநிலை, நிலையற்ற பொருட்களைச் சார்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை. உலகத்தின் மீதான சார்பு நிலையே பலவிதமான உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. முதல் உளவியல் பிரச்சினை பாதுகாப்பின்மை. நான் என் பாதுகாப்புக்காக எதைச் சார்ந்திருக்கிறேனோ அது என்னை விட்டுப் போய்விடுமோ என்று கவலைப்படுகிறேன். குறிப்பாக நான் மனிதர்களைச் சார்ந்திருந்தால் அவர்களால் நிராகரிக்கப்பட்டு விடுவேனோ என்ற தொடர்ச்சியான ஐயத்திலும், கவலையிலும் இருப்பேன். என்னை இப்போது மதிப்பவர்கள், விரும்புபவர்கள் அவ்வாறு தொடர்ந்து என்னை மதிப்பார்களா? விரும்புவார்களா? என்ற ஐயம் தொடர்ந்து இருக்கும். உறவுகளில், கணவன்-மனைவிக்கு இடையில் இப்படி ஐயத்தை அடித்தளமாகக் கொண்டு அன்பும், மதிப்பும் செலுத்தப்பட்டால் அது என்ன மாதிரியான பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் தர இயலும்? குடும்பத்தைப் பற்றிய பாதுகாப்பின்மை மற்றும் மற்ற எல்லாவற்றைப் பற்றியும் பாதுகாப்பின்மை இவற்றிலிருந்துதான் நாம் விடுதலை அடைய நினைக்கிறோம். இங்கு அடிப்படைப் பிரச்சனை என்பது பாதுகாப்பின்மை, கவலை, பயம், விரக்தி, ஏமாற்றம், கோபம், வெறுப்பு ஆகியவைதான். உண்மையில் அனைத்து உளவியல் பிரச்சனைகளும் நம்பத்தகாதவற்றைச் சார்ந்திருப்பதாலும், நம்பகமற்றவற்றை நம்புவதாலும் ஏற்படுகின்றன. அது நிலையற்ற பொருளின் தவறு அல்ல, நிலையற்றவற்றிலிருந்து நிலையான மகிழ்ச்சியையும், பாதுகப்பையும் நான் எதிர்பார்த்ததுதான் என் தவறு. தவறான எதிர்பார்ப்பே பிரச்சனை. அத்தகைய தவறான எதிர்பார்ப்பு, தவறான சார்பு ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சனைகளே சம்சாரம் என்று அழைக்கப்படுகிறது. முமுக்ஷுத்துவம் என்றால் இந்த சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கான தீவிரமான ஆசை. இந்த ஆசை இல்லையென்றால், ஒரு நபர் ஒரு நிலையற்ற பொருளிலிருந்து மற்றொரு நிலையற்ற பொருளுக்குத் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பார். மீண்டும் ஏமாற்றப்பட்டு, விரக்தியடைந்து, அதிலிருந்து மற்றொரு நிலையற்ற பொருளுக்குச் செல்வார்.
நிலையற்ற பொருளை அடைய விரும்பி ஆற்றப்படும் செயல்கள் குறித்து ஒரு சுலோகம் இவ்வாறு கூறுகிறது. “கிருதி மஹோ ததௌ பதன காரணம்.” செயல்களால் ஆன பெருங்கடலுக்குள் மூழ்கிப்போக நாம் செய்யும் செயல்களே காரணமாக இருக்கின்றன. “பலம் அஷஸ்த்வம் கதி நிரோதகம்.” செயல்களின் விளைவுகள் நிலையற்றவை; அவை இறுதி இலக்கிற்குத் தடையாக நிற்கின்றன. ஆகவேதான், விவேக, வைராக்யத்தை அடைந்த ஒருவர் இந்தச் சிக்கலிலிருந்து வெளியேற விரும்புகிறார். இதுவே விடுதலைக்கான இச்சை என்றழைக்கப்படுகிறது. முமுக்ஷூத்துவம் என்றழைக்கப்படுகிறது.
நான்காவது தகுதி ஆறு ஒழுக்கப் பண்புகளின் தொகுப்பாகும். சமஸ்கிருதத்தில் ஷட்க சம்பத்தி: ஷட்க என்றால் ஆறு, சம்பத்தி என்பது செல்வத்தைக் குறிக்கும். தனிப்பட்ட ஒழுக்கம், சுய மேலாண்மை இவற்றை ஒருவரது செல்வம் என்றே வேதாந்தம் கருதுகிறது. மற்றவர்களை நிர்வகிக்க முயற்சிப்பதற்கு முன்பு, குடும்பம், நிறுவனம், தேசம், இவை அனைத்தையும் நிர்வகிக்க முயற்சிப்பதற்குமுன் ஒருவர் தன்னைத் திறன்படக் கையாளக் கற்றுக் கொள்ளவேண்டும். அதற்கான ஆறுவிதமான ஒழுக்கப்பண்புகளின் தொகுப்பைத்தான் வேதாந்தம் ஷட்க சம்பத்தி: எனக் குறிப்பிடுகிறது. கைவல்லிய நவநீதம் என்ற தமிழ் வேதாந்த நூல் இந்த ஆறு பண்புகளை, “சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை ஆறாம்,” என்று குறிப்பிடுகிறது.
ஞானத்திற்கு தகுதியான மனம் பெறுவதற்கான ஆறு செல்வங்கள்.
- ஷமம் (Śama)
- தமம் (Dama)
- உபரதி (Uparati)
- திதிக்ஷா (Titikṣā)
- ஸ்ரத்தா (Śraddhā)
- ஸமாதானம் (Samādhānam)
ஆறு பண்புகளில் முதலாவதானது ஷமம் எனப்படுகிறது. ஷமம் என்றால் மன அமைதி மற்றும் மனதின் மீது ஆதிக்கம் செலுத்துதல் என்று பொருள். மன அமைதியும் மனதின் மீதான ஆதிக்கமும் முதல் அக ஒழுக்கமாகும்; எளிய மொழியில் சொல்வதானால், மனக்கட்டுப்பாடு. ஷமம் என்பது மனத்தின் அலைக்கழிப்புகளை அடக்கி, உள்ளார்ந்த அமைதியை நிலைநிறுத்தும் திறன். விருப்பு உள்ளே எழுந்தாலும் மனம் அசையாமல் இருப்பது. வெறுப்பு எழுந்தாலும் மனம் கலங்காமல் இருப்பது. வெளிப்புற சூழல் எப்படியிருந்தாலும் உள்ளே அமைதியை நிலைநிறுத்தும் திறன். இதுவே ஷமம் எனப்படுகிறது. “மனோ நிக்ர: ஷம:” என்பது தத்வபோதத்தின் வரையறை. தன்னையறிதலான ஆத்ம ஞானத்தை அடையும் ஒருவருக்கு அந்த அறிவிலேயே நிலை நிற்பதற்கு ஷமம் என்ற மனதை அடக்கி ஆளும் பண்பு இன்றியமையாததாகும்.
இரண்டாவது பண்பான தமம் எனப்படுவது புலன்களின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் திறன். கண்கள், காதுகள், நாக்கு, தோல், மூக்கு ஆகிய ஐம்புலன்களும் வெளிப்பொருட்களை நோக்கி ஓடும்போது அவற்றை மடைமாற்றி உள்ளே திருப்பும் திறன். புலன்கள் வெளியில் ஓடினால் மனம் சிதறிவிடும்; மனம் சிதறினால் ஞானத்தில் நிலைநிற்க முடியாது. ஓர் ஆன்மசாதகன் தன் புலன்களை அமைதியாக வைத்திருத்தலும், அவற்றின் மீது கொண்டிருக்கிற அசையாத ஆளுமையுமே தமம் எனப்படுகிறது. “சக்ஷுராதி பாஹ்யேந்திரிய நிக்ர: தம:” – தத்துவபோதம். சக்ஷு என்றால் கண். கண் முதலிய வெளிப்புலன்களை அடக்கி ஆளுதலே தமம் என்று தத்துவபோதம் வரையறை செய்கிறது.
ஷமம், தமம் இரண்டினுடைய வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்தவை என்பது புரிந்திருக்கும். ஒன்றைப் பயிற்சி செய்வதன் மூலம் இனியொன்றின் வளர்ச்சியையும் காண முடியும். ஷமம் எனப்படுகிற மனத்தை ஆளும் திறனை மனத்தைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் அடையலாம். நமக்குள் ஓர் உணர்ச்சி எழும்போது, அந்த உணர்ச்சிக்கு உடனே ஆட்பட்டு விடாமல், அந்த உணர்ச்சி நம் மனதில் எழுந்திருக்கிறது என்ற விழிப்புணர்வோடு அதை கவனிப்பதில் இருந்து மனத்தை ஆளும் திறன் படிப்படியாக அதிகரிக்கிறது. “மனத்தை அடக்குவது காற்றைக் கட்டுவது போலக் கடினமானது,” என்று கீதையில் கண்ணன் கூறுகின்றான். தொடர்ந்த அப்பியாசமும் (பயிற்சியும்), வைராக்கியமுமே (பற்றின்மை) மனத்தை ஆளும் திறனை வளர்க்க ஏதுவான பயிற்சிகள் என்பது கீதையில் கண்ணன் நமக்குத் தரும் பரிந்துரை.
தமம் எனப்படும் புலன்களை ஆளும் திறன், நமது புலன்கள் எதை நோக்கி ஓடுகின்றன என்பதை அறிந்து அவற்றின் ஓட்டத்தை மெதுவாக உள்ளே திருப்பும் பயிற்சியின் மூலம் அடையப்படுகிறது. முதலில் நமது புலன்கள் இயல்பாக எவ்வெப்பொருட்களில் சென்று படிகின்றன என்பதை கவனிக்க வேண்டும். இது முதல் படி. பின், புலன்கள் தேவையற்று பொருட்களின் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். புலன்கள் பொருட்கள் பின்னால் ஓடும்போது அதற்கு நேர்மாறான சிந்தனையைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்படும் அந்தச் சிறிய இடைவெளியில் தமம் தொடங்குகிறது. பின்னர் ஒவ்வொரு புலனையும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். இதுவே தமத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழி. இப்பண்பை கிருஷ்ணர் தலையாயதாகக் கருதுகின்றார். “யதா சம்ஹரதே சாயம் கூர்மோங்கானீவ சர்வச: இந்திரியானீந்த்ரியார்தேப்ய: தஸ்யப் பிரக்ஞா பிரதிஷ்டிதா” என்று கீதையில் கூறுகிறார். ஒரு ஆமை தன் அங்கங்களை எல்லாம் உள்ளே இழுத்துக் கொள்வது போல யோகி தன் புலன்களைப் புறப் பொருள்களிலிருந்து முழுவதும் திருப்பிக் கொள்ளும் போது அவனுடைய ஞானம் நிலைபெற்றதாகும் என்பது இதன் பொருள். இதே பொருள் கொண்ட ஒரு திருக்குறளும் உண்டு. “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து.” ஆமை தன் அங்கங்களை தன் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்வது போல, ஒருவன் ஒரு பிறவியிலேயே ஐம்புலன்களையும் அடக்கக் கற்றுக்கொண்டால், அந்த ஆற்றல் அவனுக்கு ஏழு பிறவிகளுக்கும் அவனைப் பாதுகாக்கும் என்பது பொருள்.
ஆறு செல்வங்களாகிய நற்பண்புகளில் இரண்டைப் பற்றிப் பார்த்தோம். மீதமுள்ள பண்புகளை அடுத்தப் பகுதியில் விரிவாகக் காண்போம்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
