ஆமரில்லிஸ் – முதல் பகுதி

மூலம் : கிஷ் ஜென்

தமிழாக்கம்: மைத்ரேயன்

ஓ! ஒரு கணவன், குடும்பம், ரகளை செய்யும் சிறு பிள்ளைகள் என்று எல்லாம் சூழ வாழும் நிஜமான ஒரு நபராக இருந்திருக்கலாம். அல்லது-  தான் துளிர்களாக, மொட்டுக்களாக வெளிவந்தது  ஒரு கதை போல ஆகி – வெளியே சொல்ல முடியாத ஓர் மோசமான உறவில் சிக்கி இருக்கலாம். மாறாக, ஆமரில்லிஸ் சென் டு காஸ்ட்ரோ, வயது நாற்பது- முடக்குவாதம் பீடித்தவள் என்று தன்னை அவள் வருணித்துக் கொண்டாள் – ஒரு மின் – உறவில் உளைந்து கொண்டிருந்தாள், அது ஏற்கனவே பல முறை இறந்திருந்தது, ஆனால் கணினி நச்சுயிரியைப் போல தன்னைத் தானே உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது. 

இதை மறுபடி துவங்கி, வளர்க்க எனக்கு வாய்த்தால்,… சரி இருக்கட்டும், உன்னால் ஊகிக்க முடியும்

இருவரின் வேலைகளால் வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து சமாளிப்பது, குடும்பத்தின் பிரச்சினைகளை – வீட்டுப்பாடங்களால் நெருக்கடி, வலை உலாக்கள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பது, துணிகளைச் சலவை செய்வது இப்படிப் பல – தீர்ப்பது ஆகியன இருக்கும் ஒரு நிஜ வாழ்விலிருந்து இதுதான் எத்தனை தூரம்.

இன்று என் ஷூவில் ஒரு கல் இருந்தது, பின் என்ன, ஒவ்வொரு எட்டு எடுத்து வைக்கும்போதும் அதை நான் உணர்ந்தபடி இருந்தேன், அதை எடுத்துப் போட்டிருக்க வேண்டும், ஆனால் ஏனோ அது உன்னை எனக்கு நினைவூட்டியது- என்னை நம்பு, இது எத்தனை மடத்தனமாக இருந்தது என்று எனக்குத் தெரியும், ஆனாலும்..

அவள் பதிலளித்தாள்: 

நீ அதை வெளியில் எடுத்துப் போட்டிருக்கத்தான் வேண்டும். அபத்தமாகப் பேசாதே.

இறுதியாக ஒரு நாள்:

இதைப் போல நீ எழுதிக் கொண்டிருக்கலாம், ஆனால் உனக்குத் தெரிய வேண்டும், நான் சதையும், ரத்தமும் கொண்ட ஒரு நபர். கூட இருந்து சமைக்க, சாப்பிட, தட்டு,பாத்திரங்களைக் கழுவ எனக்கு ஒரு நபர் தேவை. சாப்பாட்டுக்கு ஒரு பயங்கரத்தை நான் தயாரித்திருக்கிற நேரத்தில் அதைக் குறை சொல்ல ஒரு நபர் இருக்கணும்

அவர் பதிலெழுதினார்:

அப்படி ஒரு நபராக மட்டும் நான் இருக்க முடிந்தால்! உண்மையாக பெரும் வருத்தம் இது.

சில நாட்கள் கழித்து அவள் வேறு சில வாக்கியத் துண்டுகளைப் பெற்றாள்:

ஒரு பெரும் வருத்தம்

அப்படி இருந்திருந்தாலும்

என்ன பயங்கரத்தையோ உன்னால் எப்போதாவது கொடுக்க முடியுமா என்ன

உளறல். இருந்தும், இந்தத் துண்டுகள் தொடர்ந்தபோது, தன்னையும் மீறி, அவள் பரிவை உணர ஆரம்பித்தாள். இந்த மனிதன் பெருநிறுவனம் ஒன்றில் நிதி மேலாளர். ஆனால் இந்த வகை ஜாக்கிரதை உணர்வில்லாத திறந்த உணர்ச்சி வெளிப்பாட்டை –எத்தனையோ கவிஞர்களிடம் பார்த்த அனுபவத்தால், அவளால் அடையாளம் காண முடிந்தது. இது கவிதை இல்லை! கவிதைக்கான உந்துதல். அவளால் அதைப் பார்க்க முடிந்தது, அவ்வளவுதான். அவள் பதிலளித்தாள்:

நண்பர்களாக இருப்பதில் நான் மகிழ்வேன். ஆனால் நீங்கள் தெளிவான புத்திக்குத் திரும்பும் வரை எழுதாமல் இருங்கள், அதாவது ஒழுங்கான இலக்கணம், முறையான நிறுத்தல் குறிகள் ஆகியன. நான் உங்களிடம் அன்பு கொண்டுள்ளேன். 

இதை அவள் ஏன் எழுதினாள்? அவரை அவள் வெறுத்தாள். அவர் ஒரு விசித்திரமான ஆள், அவரை முதல் தடவை சந்தித்தபோது, அந்தக் கணமே அது அவளுக்குத் தெரிந்தது – அவர் வேலை பார்த்த ஒரு கட்டடத்தின் முகப்பறையில் நடந்த விடுமுறைக்கால விருந்தில் அவரைச் சந்தித்தாள், அது அவளுடைய நிறுவனம் வைத்திருந்த ஒளிப்படக் கண்காட்சிக்கருகே நடந்தது. உண்மையைச் சொன்னால், அந்தக் காட்சியின் கலையோ மோசமானது, ஆனால் கட்டடத்தை விலைக்கு வாங்கிய சீனர்கள்- நகரத்தின் நடுப்பகுதியில் ஏராளமாக வாங்கியிருந்தவர்கள் அவர்கள், ஏன் வால்டார்ஃப் அஸ்டோரியா1 கட்டடத்தைக் கூட வாங்கி விட்டிருந்தார்கள் – அவளுடைய எஜமானர்கள், அவர்களுக்குத் தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது.  ‘கூ’ குடும்பத்தினர் ஹாங்காங்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருட்டில்லை – அவர்களுக்கு மையச் சீனா நாட்டு மக்களைப் புரிந்திருந்தது, ஆமரில்லிஸுக்கு கூ குடும்பத்தினரைப் புரிந்திருந்தது. அதுதான் அங்கே நடந்தது. மற்றவர்கள் கலகலப்பாக உலாவிப் பழகியபோது, ஆமரில்லிஸும் இந்த நபரும்- அவர் பெயர் நதேனியல்- தங்களைப் பிணைத்துக் கொண்டு, அங்கிருந்த காட்சிப் பொருட்களை ஒவ்வொரு சட்டகமாக, மொத்தப் படைப்புகளையும் பார்த்தார்கள். அது ஒரு விதத்தில் அந்தத் தொகுப்புகளை மறுபடி தக்க இடங்கள் தேடிப் பார்த்துப் பொருத்தும் வேலை போல இருந்தது, ஆனால் இந்த நேரத்தில், அந்தக் காட்சிப் பொருட்களின் நிறங்கள் எத்தனைக்கு அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளின் நிறங்களோடு பொருந்தின என்பதைச் சுட்ட ஆமரில்லிஸுக்குத் தேவை இருக்கவில்லை. 

மாறாக, அவளும் அவரும் அந்தப் படங்களைச் சாதாரணமாகப் பார்த்து வந்தார்கள். அபாரமாக உருப்பெருக்கப்பட்டு, உன்னிப்போடு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அந்தப் படங்கள், எல்லாம் சேபியா பழுப்பு நிறத்திலிருந்தன. உலகில் புதிய ஆக்கங்கள் செய்தவர்களில் வினோதமானவர்களின் உருவங்களை, மாற்று உலகங்களைப் பின்னணியாகக் கொண்டு சித்திரித்திருந்தன. அதோடு இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத கண்டுபிடிப்புப் பொருட்களோடும் காட்டின. லியனார்டோ இங்கு ரூப் கோல்ட்பர்க் போலக் காணப்படுவதாக அவர் சொன்னார். அவள் உரக்கச் சிரித்தாள். அவர்கள் பேசினார்கள். மாற்று உலக வெளிகள், ஓவியத் துறையில் அவருக்கிருந்த  இளமைக்கால ஆசைகள்; இவற்றோடு, ஓர் ஓவியரின் கலைக்கூடத்திற்கு அவள் சென்றது எத்தனை மோசமான ஒரு விபத்தாக ஆயிற்று, லியனார்டோவின் சித்திரத்தை எப்படி அவள் ஏணியிலிருந்து தட்டி விட்டிருந்தாள் என்பதையும் சேர்த்துப் பேசினார்கள். கூட்டம் வெகுவாகக் குறைந்த பின், பனிக்கட்டியில் செய்த ரெயிண்டியர் மானின் உருவை அகற்ற உதவியபடியே, அவர்கள் மேலும் பேசினார்கள். வந்தவர்கள் அவர்களைப் பார்த்தார்கள். அவர் தன் கைகளைத் தன் ஆடைகளின் பைகளில் நுழைத்து, எடுத்த வண்ணம் இருந்தார்; தன் திருமணச் சின்னமான மோதிரத்தை உருட்டிப் புரட்டிய வண்ணமிருந்தார். அவருடைய வாழ்க்கையில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று தன் தோழி தாரா சொல்வதாக, தன் செவிக்குழாய்க்குள் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிச் சில்லிற்குள் கேட்பது போல இருந்தது அவளுக்கு: 

இருந்தபோதும், அந்த வரவேற்புக் கூடத்திலிருந்து அவரும் ஆமரில்லிஸும் மது அருந்தச் சென்றார்கள். பிறகு அந்த மாலை முடிவில், வேறென்ன: அந்தத் திருமண மோதிரம் ஒரு ஒயின் புட்டியின் ஈரமான வாய் மீது அமர்ந்திருந்தது. அதற்கு மேல், அவரிடம் அவள் வேறு சில குணங்களைக் காண ஆரம்பித்தாள்- அவர் எப்படி பொருட்களை இறுகப் பற்றினார் என்பது ஒன்று. தவிர, முன்புறத்து வரவேற்புக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தாக்கங்களைக் கண்டுபிடித்தவர்களைப் போலத்தான் அவரும் இருந்தார், அவருடைய ஈடுபாடுகள் குறுகிய பரப்பில் ஆனால் தீவிரமானவையாக இருந்தன. அவர் வாழ்க்கையோ வேறு யாருடையதோ போல அமைந்திருந்தது, பல தலைமுறைகளின் முயற்சிகளில், நிறுவனங்களைப்போன்ற ஒரு பெரும் கட்டமைப்பு, அதற்கு ஏதோ தனியான மன விருப்பு இருப்பது போல, எழுந்திருந்தது. குடும்பத்தின் விவிலியப் புத்தகங்கள், குடும்பங்களின் ஒளிப்படங்கள், குடும்பத்துக் கோடை வாசத்துக்கான வீடுகள். குழந்தைகள். சுதந்திர உணர்வை எட்டிப் பிடிக்க மேற்கொண்ட நகைப்புக்குரிய முயற்சியாக- இது அபத்தமாகத் தோன்றினாலும்-  அவர் தனக்குக் கோடை வாசத்துக்காக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார்.  அதில் பையன்கள் தங்கும் விடுதி ஒன்றும், பெண்கள் தங்கும் விடுதி ஒன்றும் இருக்கும் என்றார். விடுதிகளில் தங்குவதை விரும்பாதவர்களுக்கு, கூடாரங்கள் இருக்கும். 

ஆமரில்லிஸ் தலையை உலுப்பிக் கொண்டாள். அவள் வாழ்க்கை நேர் எதிரானது, அவளுடைய அப்பா தன்னுடைய காரிப்பியத் தீவின் ஸெஃபார்டிக் யூத வேர்களைப் புறக்கணித்து சீனக் குடியேறி ஒருவரின் பெண்ணை மணந்து கொண்டார், ஆனால் அந்தச் சீனக் குடியேறியின் மகளோ அவரிடம்,  “யாரும் தனி ஆளாக வாழ முடியாது,” என்றும், “விதிகளே இல்லாம எந்தச் சமூகம் இருக்கும்?” என்றும் சொல்வாள். கிடியன் அதற்குப் பதில் சொல்லுமுகமாக, “வழக்கத்தை எல்லாம் ஓரம் கட்டுவோம். உன் அம்மா ஏதோ தனியாக இருக்கறது மனுசங்களோட இயல்பே இல்லைங்கறாப்ல நடந்துக்கறா. ஆனா நான் சொல்றதை நம்பு, அதுதான் மனுசங்களோட பொது வாழ்க்கை நிலைமை,” என்பார். ஒருத்தருக்குப் பக்கவாதம் வந்தால் நகைச்சுவை உணர்வு கூடப் போயிடுமா? என்று ஆமரில்லிஸ் வியப்பாள். நதேனியல் தன் தலையை ஆட்டி மறுத்தார், அப்படி எல்லாம் இல்லை. ஆனால் கொஞ்சம் பேருக்கு அப்படி ஆகலாம், ஆமாம். மேலும்: உங்க அப்பா வேற ஒரு ஆளா மாறி விட்டார்ங்கற மாதிரி இருக்கு போல. ஆமாம், என்றாள் அவள், சொல்லும்போதே நதேனியலின் தலை முடியில் பாதி நரையாக மாறி விட்டிருந்தது என்பதைக் கவனித்தாள். அது கொஞ்சம் திகிலூட்டுவதாக இல்லையா? “உன்னைச் சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்,” என்றார், அவருடைய நன்கு பராமரிக்கப்பட்ட பற்கள் கண்ணில் பட்டன. அவருக்குப் பழுப்பு நிறக் கண்கள், கண் ஓரங்களில் சிரிப்புக்கான சுவடுகள் கோடுகளாக இருந்தன. அது ஒரு அருமையான கணமாக இருந்தது. மன முதிர்ச்சி உள்ளவர்களாக நடந்து கொண்டு, மறுபடி சேர வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், பிறகு மின்னஞ்சல் முகவரிகளை ஏன் பரிமாறிக் கொண்டார்கள்? வருஷத்தில் நிறைய நாட்களில் எதற்காக கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள்? காஃபிக்காக ஒரு முறை சந்திப்பதைப் பற்றிக் கூடப் பேசாமல் வெறுமனே ஏன் எழுதிக் கொண்டிருந்தனர்?

அவர்கள் ஒரு பிரச்சினையாகிப் போனார்கள்.

சமீபத்தில் அவர் பதிலெழுதவில்லை, தொடர்ந்து பதிலே அனுப்பவில்லை. தன் மின்னஞ்சலில் யாரிடமிருந்து கடிதம் வந்தது என்பதைச் சுட்டும் பத்தியில் அவர் பெயரை எதிர்பார்க்காமல் இருக்கும்படி பழக்கப் படுத்திக் கொண்டாள். அவருடைய பழைய கடிதங்களை எல்லாம் அழித்தாள், தன் தோழி தாரா, ஜாம்பியாவில் அனாதைக் குழந்தைகளைக் காக்கும் பணிக்குப் புறப்பட்டுப் போனபோது, தாராவின் தாத்தாவைப் பராமரிக்கும் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டாள். தாராவும் கூ குடும்பத்தினரிடம் பல காலம் முன்பு பணியாற்றியிருந்தாள். அப்போது தாரா அனாதைகளைப் பற்றி ஈடுபாடு கொள்ளத் துவங்கி இருந்தாள், அது ஒரு நீண்ட கதை. அப்போது, ஆமரில்லிஸை விட மிகவும் இளையவளாக இருந்தபோதும், அவளும் வழி தெரியாது தேங்கிப் போயிருந்தாள். அதாவது, பளீரென்றிருக்கும் மரகதப் பச்சைப் பின்னணியில் பெரும் தங்க நிற வட்டங்களோடு இருக்கிற ஆடை ஒன்றை அவள் இப்போது அணிந்து கொள்கிறாளே, அந்த ஜாம்பிய கிட்டெங்கெ உடைகளை அவள் கண்டெடுக்கும் வரை அந்தத் தேக்கம் இருந்தது. அதற்குப் பிறகு, நிகழ்வு, செயல், கதைத்தல், அப்படித்தான் அதைப் பேச முடியும்! குழந்தைகளின் படங்களை தாரா ஆமரில்லிஸிடம் காட்டினாள், தன் உதடுகளைக் கடித்தாள், லிப்ஸ்டிக் அவள் பற்களில் படிந்தது. கொஞ்சமும் சிரிக்காத ஒரு சிறுமி – முசுடான தோற்றம், அது சத்துக் குறைவான உடல்நிலைக்கு அறிகுறி என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு சிறு பையன், முடியெல்லாம் பழுப்பு நிறமாக ஆகி விட்ட நிலை- அதுவும் சத்து போதாமையின் அறிகுறி. அவர்களுக்கு யாரும் எழுதப் படிக்கச் சொல்லித் தரவில்லை என்பதை நாம் யாரும் சொல்லாமலே அறிவோம், ஆனால் விவிலிய நூலைப் படிப்பதற்கு மட்டும் இங்கிலிஷ் சொல்லித் தரப்பட்டிருக்கும் போலத் தெரிந்தது. 

“நிரந்தரமா ஜாம்பியாக்குப் போகல்லை நான்,” என்றாள் தாரா. “நாலைஞ்சு மாசம்தான். அது கூட உனக்குப் பரவாயில்லைன்னாத்தான்.”

“சரிதான்,” பதிலளித்திருந்தாள் ஆமரில்லிஸ்.

“என்ன தெரியுமா, அமெரிக்காவுல வாங்கித் தள்றத்தை விட மோசமா அங்கே வாங்கித் தள்றதாம் சீனா. அது உனக்குத் தெரியுமா? செப்புச் சுரங்கத்தையே கூட வாங்கியாச்சு. இப்போ அவங்க நிறைய செப்புச் சுரங்கங்களுக்குச் சொந்தக்காரங்க. இதுனால என்ன ஆச்சு, ஒரு சமயம் அந்தச் சுரங்கத்து மானேஜருங்க சுரங்கத் தொழிலாளருங்களைத் துப்பாக்கியால சுட்டப்ப, அந்த அரசாங்கம் அவங்களைச் சும்மா லேசா ரெண்டு தட்டுத் தட்டி விட்டுட்டாங்க. ஏன்னு கேட்டா, அவங்களுக்கு அத்தனை முதலீடும் வேண்டியிருக்கு. அதனாலெ, இது எனக்குத் தெளிவா இல்லை, பாரு. ஆனா, எனக்குத் தெரிஞ்ச சீன மொழியை அங்கே பயன்படுத்த வழியிருக்குமோன்னு யோசிக்கறேன்னு தோணுது. உடனே இல்லைன்னாலும் அப்பறமாக்கூட அப்படிச் செய்யலாம், நீ என்ன நினைக்கிறே? நான் மறுபடி மேல்படிப்புக்கும் போகலாமே? ஆனா இப்பத்திக்கு, நான் சொல்றது புரியறதா, அந்த பாவப்பட்ட அனாதைக் குழந்தைங்களுக்காகப் போகலாம். முதல்லே அவங்களுக்கு நான் உதவ முடியலாமே?”

 “ஆமாம்! போ, போ! உதவு! படி! எத்தனை நாள் தேவைன்னு தோணுதோ அத்தனை நாள் அங்கே இரு!” ஆமரில்லிஸ் சொல்லி இருந்தாள்- தாராவுக்கு அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்க வேண்டுமென்று இருந்தது அவளுக்குத் தெரிந்திருந்தது. தாராவின் தம்பி அவள் இப்படி ஊருக்குச் சேவை செய்யக் கிளம்புவதைப் பார்த்து எரிச்சல்பட்டான் என்பதும், அவள் இப்படிச் சீனாவுக்கு எதிராகப் பேசுவதையும் விரும்பவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். ஆன்டியோ வெற்றியடைந்த நிலபுலன் தரகர், அதற்கு அவர்களுடைய அம்மா லிங்லியின் உதவி பலமானது. அவர் தன் குடும்பத்தின் தேயிலைக் கடையை விற்று விட்டு, சீனாவுக்கே திரும்பிப் போயிருந்தார். அவரோடு, வெற்றி என்பதை ஒரு நாளும் கண்டிராத அவர்களின் அப்பாவும் போய்விட்டார். லிங்லியின் சீனத் தொடர்புகள் மூலம், சீன முதலீட்டாளர்களை ஆன்டியிடம் தான் அனுப்ப முடியும் என்று லிங்லி நம்பினார், அவரால் அப்படிச் செய்யவும் முடிந்தது- அப்படி வந்தவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் இருந்ததால், ஆன்டியால் தன் மொத்தக் குடும்பத்தினரையும், நன்றியுணர்வே இல்லாத தன் சகோதரி தாராவையும் சேர்த்து, இப்போது பராமரிக்க முடிந்தது.

தாராவின் வேலை, பொறுப்பு என்னவென்றால், அது எட், அவர்களின் பாட்டனார் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டியதுதான். லிங்லியும் டங்கனும் சீனாவுக்குத் திரும்பியபோது எட் அவர்கள் கூடப் போக மறுத்திருந்தார். இதனால் ஜாம்பியாவுக்குத் தாரா போக விரும்பியபோது, ஆமரில்லிஸ் அவ்வப்போது எட் வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து வர வேண்டும் எனத் தாரா கேட்டுக் கொண்டிருந்தாள், இதை நன்கு செய்யக் கூடிய நிலையில் ஆமரில்லிஸும் இருந்தாள். ஃப்ளஷ்ஷிங் பகுதியிலிருந்து நகரின் நடுப்பகுதிக்குப் போகும் சுரங்க ரயில் அவளுடைய அலுவலகத்துக்கு வசதியாக இருந்தது, மேலும் – அவள் பாதிப் பகுதிதான் சீன வம்சாவளி என்றாலும் –தாராவின் நண்பர்களில் ஆமரில்லிஸ் ஒருத்தியின் குடும்பம்தான் தாராவின் குடும்பத்தைப் போல ஷாங்காய் நகரத்துக்கு வெளியிலிருந்து வந்திருந்தது. ஆமரில்லிஸின் தற்கால அமெரிக்க வாழ்வில் அந்த வித ஒற்றுமைக்கு ஏதும் பொருளிருந்தது என்பது சற்று விசித்திரமானதுதான். ஆனால் இன்னொரு விதமாக – அது ஒருவகை உறவுமுறை கொண்டாடுவதாகவும் இருந்தது. அவளுக்கு இருந்தவை மிகச் சொல்பம். நிஜத்தில், அவள் மேலும் நிறைய உறவுகளையே வேண்டினாள். 

மாறாக, தாரா திருமணம் செய்து கொள்வதில் சற்றும் ஈடுபாடு கொள்ளவில்லை. பலரோடு பாலுறவு கொள்வது என்பது வெளிப்படையாகவே மனிதர்களின் இயல்பாக இருக்கையில், திருமணம் செய்வது என்பது தெளிவாக அதற்கு எதிரானது என்பதால் அது ஒரு மரித்துப் போன கருத்து என்று அவள் சொன்னாள். ஆமரில்லிஸின் மரியாதைக்குரிய வயதை எட்டும்போது அவள் வேறுமாதிரி யோசிக்க ஆரம்பிப்பாளோ என்னவோ. ஆனால் இப்போது அவள் இருபத்தி ஐந்து வயதுக்காரி, ஜாம்பியாவுக்குப் பயணம் போய் அங்கு விருந்தினருக்கான விடுதி ஒன்றில் குடியிருப்பதைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். (இதைச் சொன்னபடி) அவள் கண்ணடித்தாள். 

ஆமரில்லிஸுக்குக் கண்ணடிக்க என்ன இருந்தது என்றால், இருந்தது என்றாள் அவள். இந்தப் பெருநிறுவனத்தின் காசாளர் ஒருத்தர்.  “அவர் தன் முழு சூட்டோடு தூங்குகிறார்,”என்றாள். “அவர் வேறு புதிய சூட் ஒன்றை வாங்கினால், அவர் யாரென்று எனக்குத் தெரியாமல் போகலாம்.”

தாரா பகபகவென்று சிரித்தாள், கன்னங்களில் குழிகள் தெரிந்தன. ஆமரில்லிஸை விட கணிசமாகவே பெரிய உடல் அவளுக்கு, அவளுடைய சிரிப்பும் பொருத்தமான அளவுக்கு உரக்கவிருந்தது. ஆனால் என்னவும் ஆகட்டும்- தாராவின் பாட்டனார் எட் இருந்தார். யேயா, என்று தாரா அவரை அழைத்தாள். 

 “அவரைக் குளித்து விடும்படி சொல்லப் போகிறார், உன்னிடம்,” அவள் எச்சரித்தாள். “மாட்டேன் என்று சொல்லி விடு.”

“குளிச்சு விடக் கூடாது, சரி,” என்று உறுதி கொடுத்தாள் ஆமரில்லிஸ். 

“புதன்கிழமைகளில் அவர் மான்ஹாட்டன் சீனநகர்ப் பக்கம் மளிகை சாமான்கள் வாங்கப் போவார், ஏன் என்று என்னிடம் கேட்காதே, அவருக்கு அது புதன்கிழமை என்று தெரிகிறதே என்று நாங்கள் சந்தோஷப்படுகிறோம். அன்று நீ போய் அவரைக் காணவில்லை என்றால் அங்கேதான் அவர் போயிருப்பார்.”

“அவருக்கு எத்தனை வயசாறது?”

“அவருக்கு என்ன வயசாறது…. எங்களோட நினைப்புல அவருக்கு வயசு எண்பத்தி ஒன்பது. அவரென்னவோ என்னை விடத் தெம்பா இருக்கார். அவரோட இவர் என்ன சாப்பிடறார்னு அவரோட டாக்டர் எப்பவும் கேட்பார்.”

“ரொம்ப தொல்லை கொடுப்பாரா?”

”தொல்லையா? இல்லை. ஆனா அவர் பிடிவாதம் பிடிப்பார். கொஞ்சம் குறும்பும் செய்வார். சில நேரம் அவருக்கு நிஜமாவே இங்கிலிஷ் மறந்து போயிடும், ஆனா மத்த நேரம் வேணுமுன்னு அதை மறந்து போனதாக் காட்டுவார். ஒரு தடவை தன்னோட காது கேட்கப் பயன்படற எந்திரத்தை டாஃபடில்கள் இருந்த பூஞ்சட்டியில ஒளிச்சு வச்சுட்டார்.”

ஆமரில்லிஸ் சிரித்தாள்.  “ஆச்சரியமானவரா இருப்பார் போலிருக்கே.”

“அவரை மாதிரியே நீயும் ஆச்சரியமானவதான். எனக்குத் தெரிஞ்சவங்கள்லெ நீ ஒருத்திதான் இந்த மாதிரிப் பொறுப்பை எடுத்துக்கத் தயாரா இருக்கறவ.”

“ஓ, அப்படியெல்லாம் சொல்லாதே,” என்றாள் ஆமரில்லிஸ்.

தன் வாழ்க்கையை ஒரு வாழ்க்கையாக ஆக்க முயன்று வரும் ஒரு பெண்ணுக்கு தாராவின் தாத்தா உதவுபவராக இல்லை. ஆனால் அதில் அவர் இருக்கத்தான் செய்தார். தன்னைக் குளிப்பாட்டி விடும்படிக் கேட்பவர் போல அவர் தெரியவில்லை. அவர் சிலந்தியைப் போல ஒல்லியாகவும், ரத்த ஓட்டமே இல்லாது வெளுத்தவர் போலவும் இருந்தார். அவரது தாடி மெல்லியதாக நீண்டு இருந்தது. ஒரு முனிவர் போல அடர்ந்த வெண் புருவங்களோடு இருந்தார். அவர் முகம் வடிவத்தில் வானில் பறக்கவிடும் பட்டத்தைப் போல இருந்தது; அவரது தோல், மெலிந்து, புள்ளி புள்ளியாக எங்கும் தெரிகிறமாதிரியும், இதோ உதிர்ந்து விழும் என்பது போல இலேசாக ஒட்டிக் கொண்டிருந்தது. உதடுகள் உலர்ந்திருந்தன, ஆனால் அவருடைய பற்கள் அனேகமாக எல்லாம் இருந்தன- சில இடங்களில் முன்னும் பின்னுமாக ஆனால் அடுக்காகவும், கறைப்பட்டும் இருந்தன. ஈறுகள் அருகே பற்களின் வேர்கள் சிறிது தெரிந்தன. வீட்டுக்குள்ளே கூட அவர் ஒரு விளையாடும்போது போடும் தொப்பியை அணிந்திருந்தார், அதன் விளிம்பு மேலே தூக்கி விடப்பட்டிருந்தது. அதோடு ஒரு ஃப்ளானல் சட்டையும், அதன் மேல் கம்பளில் அரைக் கோட்டும், வெளிர் நீல நிறத்தில் தேகப்பயிற்சிக்கான, உடலொட்டிய மெல்லிய முழுக் கால் சராயும் அணிந்திருந்தார். அதன் விளிம்புகளில் ஆங்காங்கே தையல் பிரிந்திருந்தது. அவருடைய கைகள் உதறின. ஆனாலும் அவரது சுறுசுறுப்பைப் பற்றித் தாரா சொன்னது சரிதான். அடைசலாக இருந்த அவரது அடுக்ககத்தில் அவர் புழங்கியபோது லாகவமாக நடந்தார், அந்த லாகவம் தினசரி காலையில் பூங்காவில் அவர் பயின்ற டாய் சி பயிற்சிகளால் இருக்கலாம்.  ஆமரில்லிஸ் அவரை யேயா என்று அழைக்கவில்லை, அவர் அவளுடைய தாத்தா இல்லை. அவர் பெயரைச் சீன உச்சரிப்போடும் அவளால் அழைக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, தமக்குக் கொஞ்சம் நெருக்கமான வயசாளிகளை எல்லாம் சீனர்கள் அங்கிள் என்று அழைப்பார்கள் என்பதால், அவள் அவரை எட் அங்கிள் என்று அழைத்தாள். கலிஃபோர்னியாவிலிருந்தபோது அவளுக்கு நெருக்கமான ஒருவன் ஆமரில்லிஸ் சீனப் பெண் என்று கருதக் குறைந்த காரணதான் உண்டு என்று இனிமையாகத்தான் சொல்லியிருந்தான். இருந்தபோதும், அவளுக்கு இந்த ஒரு விஷயமாவது, யாரை அங்கிள் என்று சீனர்கள் அழைப்பார்கள் என்பது அவளுக்குக் கூடத் தெரிந்திருந்தது. 

தாரா ஆமரில்லிஸை அந்த அடுக்ககத்துக்கு அழைத்து வந்து, அறிமுகப்படுத்தி இருந்தாள் என்ற போதும், ஆமரில்லிஸ் அங்கு சென்றபோது முதல் சில தடவைகள், ‘ஹை, என்னை ஞாபகம் இருக்கா? நான் தாராவின் தோழி, ஆமரில்லிஸ்,” என்று அர்த்தமில்லாமல் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தாள். அவரைப் பார்க்க அழைப்பில்லாமல் வருவதில் இருந்த சங்கடமான உணர்வைக் குறைக்க அவளுக்குத் தெரிந்த ஒரு வழி அது. வாயில் மணியை ஒலித்தால் தன் தாத்தாவுக்கு அது கேட்காமல் இருக்கலாம் என்று தாரா சொல்லி இருந்தாள், எனவே அவளிடம் கொடுத்த சாவியைப் பயன்படுத்தி, வீட்டுக்குள் தானாக நுழையலாம் என்றும் சொல்லி இருந்தாள். ஆனால் திடீரென்று வீட்டுக்குள் வந்து, ஏதோ பேசி காற்றை நிரப்புவது என்பதுதான் எத்தனை விசித்திரமானது. இந்த மீன் கெட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன். உங்களோட அறை ரேடியேட்டர் எப்பவுமே இப்படித்தான் கடங் கடங்குன்னு சத்தம் போடுமா? வீட்ல வேற புது லைட்பல்ப் இல்லைன்னு தெரியுதே. தனக்கு சீன மொழி பேசத் தெரிந்திருக்கக் கூடாதா என்று அவள் எண்ணினாள்; அது அவருக்குச் சற்றாவது சௌகரியமாகத் தெரிந்திருக்கும் என்பது அவள் எண்ணம். ஆனால் அசௌகரியமாக அங்கு உணர்ந்தது அவரா, அவளா? அவள் அங்கு போன இரு தடவைகளிலும், அவள் இங்குமங்கும் அலைந்து, அவருடைய வளர்ப்புப் பறவையின் கூண்டைச் சுத்தம் செய்து, சிதறிக் கிடந்த பொருட்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தி வைக்கத் தன்னால் ஆன மட்டும் முயன்று கொண்டிருந்தபோது, அவர் தன் பிரம்மாண்டமான தட்டைத் திரை தொலைக்காட்சியில் ஒரு சீன மொழி நிகழ்ச்சியைப் பாதி பார்த்துக் கொண்டிருந்தார், அவளைப் பொருட்படுத்தவில்லை. அவருடைய அடுக்ககத்தில் ஒரு அறை முழுதும் மரச் சாமான்கள்லும், பெட்டிகளாலும் நிரம்பி வழிந்தது, அவை எல்லாமே தாறுமாறாக பெருங்குவியலாக இறைக்கப்பட்டிருந்தன; பொருட்களை அங்கு கொண்டு வைத்தவர்களுக்கு அவரால் பணம் கொடுக்க முடியாமல் போனதால், அங்கு ஒரு சண்டை நடந்ததுபோல இருந்தது. 

ஆமரில்லிஸ் மூன்றாம் முறையாக அங்கு சென்றபோது, தான் உள்ளே நுழையும்போது அவர் தன் தலைக் குல்லாயை எடுக்கிறார் என்பதை அவள் கவனித்தாள், மேலும் அவள் பேசியபோது அவர் தன் இடது காதை உயர்த்துகிறார் என்பதைப் பார்த்தாள்- அது சரியாகக் கேட்கும் காதாக இருக்குமா? ஒருக்கால் அவள் பேசுவது அவருக்குப் புரியவில்லை என்றாலும், அவரிடம் யாராவது பேசுவதை அவர் வரவேற்கிறாரா? பூங்காவில் குழந்தைகளிடம் பேசும் அம்மாக்கள் அவர்களுக்குத் தாம் பேசுவது புரியும் என்பது போலப் பேசுவதைக் கவனித்திருக்கிறாள்; குழந்தைகள் கால்களை உதைத்துக் கொண்டு பதில் பேசும். எட் அங்கிள் குழந்தை இல்லைதான். ஆனாலும் தான் அவரிடம் பேசுவதில் அவருக்கு எளிமையான சந்தோஷம் கிட்டியதாக அவள் கற்பனை செய்து கொண்டிருந்தாள், அதனால் அவளுடைய ஐந்தாவது வருகையின் போது அவர் முகத்தில் வியங்கியம் கலந்த குழப்ப உணர்வு தெரிந்ததில் ஒரு பாட்டனாரைத்தான் கண்டாள், குழந்தையை இல்லை. அவருடைய கன்னக் குழிகள் தெரிந்தன; ஓ, இங்கே இருந்துதான் தாராவின் கன்னக் குழிகள் வந்திருக்கின்றன. அவளுடைய அம்மாவின் தாத்தாவை அவள் சந்தித்திருந்தால், அவர் தன்னை இப்படிப் பார்த்திருப்பாரா என்று யோசித்தாள்.  தன் முப்பாட்டனாரைப் பற்றி அவளுக்குச் சிறிதே தெரிந்திருந்தது, ஆனால் அவர் தன்னைக் கவனிக்காமல் தாண்டிப் போய் தன் ஆண் வாரிசைத்தான் கவனித்திருப்பார் என்று அவளுக்கு ஒரு எண்ணம் இருந்தது- அவளுடைய முப்பாட்டன் ஒரு பெருந்தனக்காரராக இருந்தவர், தன்னை வெளிக்காட்டாமல் அடக்கமாக இருந்தவர் என்றாலும் செங்காவலர்கள் அவரைப் பண்பாட்டுப் புரட்சிக் காலத்தில் மூழ்கடித்துக் கொன்றிருந்தார்கள். 

அவளுடைய ஆறாவது வருகையின்போது அவள் தன் சாவியைப் பயன்படுத்திக் கதவைத் திறந்து உள்ளே போகாமல், கதவைத் தட்டினாள். எட் அங்கிளுக்குக் காது கேட்டிராதோ என்று சிறிது சந்தேகப்பட்டாள். ஆனால் கதவு திறந்தது, இந்த முறை, அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது, அவர் புன்னகைத்தார். 

“நீ பலதடவை என்னிடம் சொல்லி விட்டாய்,” என்றார்.

அவர் பேசுகிறார்! சன்னமாக, தன் நெஞ்சையே கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டு. ஆனால் அவர் பேசினார்!

“நீங்க புரிஞ்சுகிட்டீங்களான்னு எனக்குத் தெரியல்லே,” என்றாள், மெதுவாக ஆனால் உரக்கப் பேசினாள். 

“நீ ரொம்ப வேகமாப் பேசறே.”அவளைப் பகடி செய்வதுபோல, தன் வாயை வேகமாக மூடித் திறந்தார். 

“நீங்க இதைச் செய்றீங்க,” ஆமரில்லிஸ் தன் சட்டைக்குள் முணுமுணுத்தாள். 

அவர் தன் மோவாயை உயர்த்தினார், அவருடைய கையில்லாத ஸ்வெட்டரிலிருந்து அவரது தாடி விடுபட்டு உயர்ந்தது. “தாரா நல்ல பெண்,” என்று மென்மையாகத் தொடர்ந்தார். 

“அவள் அப்படியானவள்தான்,” அவள் ஒத்துக் கொண்டாள். 

“நீயும் நல்ல பெண் தான். சீனப் பெண், அதை நான் பார்க்கிறேன்.”

நிஜத்தில்,ஹாப்பா2, என்று சொல்ல அவள் நினைத்தாள். ஆனால், அவளுக்கும் நேரான கருமுடி இருந்தாலும், யாரும் அவளைச் சீனப் பெண் என்று சொன்னதில்லை. இன்னும் சொன்னால், ஜனங்கள் பொதுவாக அவளை இன்ன வகை என்று அழைத்ததில்லை, சில நேரம் மட்டும் அவளிடம் கேட்டிருக்கிறார்கள், நீ என்ன விதம் என்று.  குறிப்பாக, குடிபோதையில் இருந்த ஆண்கள். அது ஒன்றுதான் அவள் ஒற்றையாக இருப்பதற்குக் காரணம் என்றில்லை. நட்சத்திரங்கள் ஒரு வரிசையில் சேராமல் போனதும் ஒரு காரணம். பட்டப் படிப்பை முடித்துக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின் தகுந்த ஆட்களைச் சந்திப்பது எத்தனை கடினமானது என்பதை அவள் முன்னதாகவே புரிந்து கொள்ளாததும் ஒரு காரணம்தான். ஒருவேளை அவளிடம் அவளுடைய அப்பாவின் குணங்கள் இருந்ததும் காரணமாக இருக்கலாம் – வழக்கம் பழக்கமெல்லாம் யாருக்கு வேணும் என்னும் அப்பா – அவருடைய பாதிப்புதான், நான் என்ன விதமானவளா, உன்னை மாதிரி முட்டாள்களைக் கொஞ்சமும் சகிக்காதவள், என்று பதில் சொல்கிறவளாக ஆக்கியிருந்தது. நதேனியலிடம் அவளுக்குப் பிடித்த பலவற்றில் அது ஒன்று, அவர் இப்படி ஒரு பதிலை அவள் வீசும்படி தன்னை வைத்துக் கொள்ளவில்லை. 

“என் அம்மாவின் வழியில் பாட்டி தாத்தாக்கள் சீனர்கள்,” அவள் சொல்லியிருந்தாள். “வடக்கு செஜியாங் மாநிலம், ஷாங்காய்க்கு மிக அருகில்.” அவள் செஜியாங் என்பதைச் சரியாக உச்சரிக்க முயன்றிருந்தாள். 

“எனக்கு அது தெரிகிறது,” என்றார் கிழவர். “செஜியாங் ஜனங்கள் திறமைசாலிகள்.”

அவருக்கு அவளைப் புரிந்திருந்தது! அவளுடைய பாட்டி ஓபல் கேட்டால் அவளுக்காகப் பெருமிதம் கொள்வாள். 

“அவர்கள் சோம்பலறியாதவர்கள், ஜியாங்ஸு மக்களைப் போல இல்லை,” என்று தொடர்ந்தார். “ஜியாங்ஸு மக்களிடம் மிக அதிகமாக நிலம் இருக்கிறது. செஜியாங்கில் நிலமே இல்லை. எல்லாரும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை, வசதி உள்ளவர்கள் கூட உழைக்க வேண்டியவர்கள்.”

“உங்களுடைய குடும்பம் அங்கிருந்து வந்ததா?” அவள் இப்போது ஜியாங்ஸு என்பதை உச்சரிக்கத் தயக்கப்பட்டிருந்தாள். 

“எங்களுடைய சொந்த ஊர் ஜியாங்ஸு மாநிலத்தில் இருக்கிறது,” அவர் சொன்னார். “ஆமாம், ஆனால் நாங்கள் பணக்காரர்களில்லை. நிச்சயமாக இல்லை.”

அவர் இன்னும் மேலே ஏதும் சொல்வார் என்று ஆமரில்லிஸ் எதிர்பார்த்தாள், ஆனால் அவர் தன் கைவைத்த நாற்காலியில் பின்னே தள்ளி அமர்ந்து கொண்டு, தன் குல்லாயை அணிந்தார், தூங்கிப் போய் விட்டார். அவருடைய தோளருகே, அவருடைய பறவை கிர்ரிட்டது. 

ஏழாவது தடவை அவள் போனபோது, அவருடைய டாய் ச்சி குழுவினரைப் பார்க்க இளங்காலை நேரமே போயிருந்தாள். அந்தக் குழு, அங்கிருந்த சிறு பூங்காவில் பயிற்சி செய்த பல வெள்ளை முடிச் சீனர்களின் குழுக்களில் ஒன்றாக இருந்தது. ஒரு குழு காஸெட் ரிகார்டர் ஒன்றோடு நடனம் பயின்றனர். இன்னொரு குழு, இரு குச்சிகளை இணைத்த கயிறு ஒன்றையும், ஒரு சிறு மத்தளத்தையும் வைத்துக் கொண்டு தந்திரங்கள் செய்தனர்- அதை எம்பிக் குதிக்கவும் சுழலவும் செய்தனர்! குழுக்கள் பெரியனவாக இல்லை, மூன்று, ஐந்து, எட்டுப் பேர்கள்தான் இருந்தனர்- ஆனால் அந்தப் பூங்காவின் எல்லா மூலைகளையும் பிடித்துக் கொண்டிருந்தனர். அதோடு பூங்காவின் முகப்பில் பாவியிருந்த பரப்பிலும் இருந்தனர், அது தெருவின் ஒரு பகுதியாவே இருந்த இடம். ஆமரில்லிஸ், தன் குதி உயர்ந்த செருப்பை அணிந்து கொண்டிருப்பதில், தான் வினோதமானவளாகத் தெரிவதாக உணர்ந்தாள். ஆனால், யாரும் அவளைப் பொருந்தாதவளாகப் பார்க்கவில்லை. எட் அங்கிளும், கையசைத்து அங்கீகரித்த பின்னர், அவளுக்குப் பின்னால் பார்த்திருந்தார். அவருடைய குழுவினர் தங்கள் வழக்கமான பயிற்சிகளைத் துவங்கியிருந்தனர் – மெதுவான, கிறக்கமூட்டும் அசைவுகள் அவை. அந்த அசைவுகள் முதியோர்களை இளைஞர்களாகக் காட்டின என்று ஆமரில்லிஸ் நினைத்தாள். இல்லை, இல்லை, இளைஞர்களாக என்றில்லாவிடிலும், – வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஏதோ ஓரிடத்தில் இருக்கும் – இன்ன வயதினர் என்று குறிக்க முடியாதபடி ஆக்கியிருந்தன என்று சொல்ல நினைத்தாள். அல்லது,… இல்லை, அதுவும் தப்புதான். சுலபமாகச் சொன்னால், அவர்கள் முழுதும் உயிர்ப்போடு இருந்தார்கள். ஆனாலும், , அங்கிருந்த ஸிக்கமோர் மரங்களின் மஞ்சள் இலைகளைத் தாண்டி வெடித்தெழுந்த அந்தக் காலை நேரத்தின் பளீரென்ற சூரிய ஒளி, அவர்களூடே பாய்ந்திருக்க – ஆண்களை விட நிறைய பெண்கள் இருந்த- அந்தக் குழுவினர், முன்னும் பின்னுமாக எட்டுகள் எடுத்து வைத்து வளைந்து ஆடியபோது, சாதாரண எதார்த்தத்திலிருந்து விலகிய ஒரு சூழலில் இருந்தவர்களாகத் தெரிந்தனர். அவர்கள் முழுதாக, முற்றிலும் முழுதாக, முழங்கால்களை மடித்துக் குந்தி மீண்டும் எழுந்தனர் –எட் அங்கிளின் கால் மடக்கல்கள் அனேகமாக வேறு எவருடையதையும் விடத் தீவிரமானதாக இருந்தன. அவர்களின் கால்கள் மிக நீளமாக நீட்டப்பட்டன; நிழல்கள் இன்னும் நீண்டதாக இருந்தன. முன்னும், பின்னும் அவர்கள் அசைந்தாடினர், விருட்டென்று குறுக்கே பாய்ந்தோடும் அணில்களோ, காலடிகளில் நொறுங்கும் இலைகளின் ஓசைகளோ அவர்களைச் சிறிதும் பாதிக்கவில்லை. சரேலென்று குவிந்து கீழிறங்கிய பறவைகளின் கூட்டமொன்று அவர்களைச் சுற்றி பிளவுகளிருந்த தார்ப்பரப்பில் அமர்ந்தது, உடனேயே திடீரென்று சுழன்று சிறகடிப்புகளோடு எழுந்து பறந்து போயிற்று. ஆனால் இவர்களின் குழுவோ அயராமல் அவற்றைப் பார்த்தபடி, அலுங்காமல் தங்களின் மெதுவான கையசைவுகளைத் தொடர்ந்து செய்தபடி இருந்தனர். எட் அங்கிளின் கைகள் மற்றவர்களின் அசைவுகளைப் போலவே நிதானத்தோடு இருந்தன – கை உதறலின் சுவடு கூடக் காணப்படவில்லை. இந்த லயிப்பு, இந்தக் கவனக் குவிப்புக்கெல்லாம் என்ன அர்த்தம்? பூமியின் அசைவோடு ஒன்றுதல். அவளுக்குத் தன் அம்மாவின் குரல் கேட்பது போலிருந்தது: யாராலும் தனியராகவே வாழ முடியாது.  அங்கே குளிர்ச்சியாக இருந்ததால், குழுவினர் தமது குழுவின் சீருடையை அணிந்திருந்தனர், திணிப்பு கொண்ட, கைகளில்லாத மேலங்கி அது, இடுப்புக்குக் கீழே, இழுப்புக்கு நீளும் கால்சராய்களை அணிந்திருந்தனர். எட் அங்கிள் மட்டுமே ஒரு குல்லாய் அணிந்திருந்தார். அனேகர் ஸ்னீக்கர்களைப் பூண்டிருந்தனர், ஆனால் ஒரு நபர் காலுறைகளோடு ப்ளாஸ்டிக் செருப்பை அணிந்திருந்தார். 

டாய் ச்சிக்குப் பிறகு அந்த முதியவர்கள் குழுவாக வேறெதையும் செய்யவில்லை என்பது ஆமரில்லிஸுக்கு வியப்பு தந்தது. சிலர் முதியோருக்கான மையத்துக்குப் போவார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது, அங்கே குழல் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அறையில், அவர்கள் வகுப்புகளில் பாடம் பயில்வார்கள், அல்லது மாஜாங் விளையாட்டை மூன்று மணி வரை விளையாடுவார்கள், அப்போது தங்கள் பேரப்பிள்ளைகளைப் பள்ளிகளிலிருந்து அவர்கள் சேகரிக்க வேண்டி இருக்கும். மற்றவர்கள் பூங்காவில் சுற்றினர். ஆனால் எட் அங்கிளோ வீட்டில் இருந்து தொலைக்காட்சியைப் பார்ப்பதை விரும்பினார். அவர் எப்போதும் இந்த மாதிரி இருக்கவில்லை: தாரா சொன்னபடி, அவர் முன்பு கலகலப்பாகப் பலரோடு உறவாடுவதைச் செய்தவர்தான். ஆனால் திடீரென்று அவருக்கு முதியோருக்கான மையம் மிக உஷ்ணமாகத் தெரிந்தது. பூங்காவோ மிகக் குளிர்ச்சியாக இருந்ததாம். தாய்ச்சியையும், மளிகைப் பொருட்களுக்காகக் கடைகளுக்குப் போய்வருவதையும் தவிர வேறெதையும் செய்ய விரும்பாமல் உள்ளே சுருங்கிக் கொண்டு, வீட்டில் அடங்கியிருந்து, தன் மரிப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று தனக்குத் தோன்றுவதாக தாரா ஒரு மின்னஞ்சலில் எழுதினாள். மேலும் அவர் எப்படித் தனக்கு மட்டும் சமைத்துக் கொள்கிறார் என்று பார் (என்று எழுதியிருந்தாள்). 

(தொடரும்)

குறிப்புகள்

1  வால்டார்ஃப்-ஆஸ்டோரியா (Waldorf-Astoria) என்பது பல அமெரிக்க நகரங்களில் உள்ள ஆடம்பரமான விடுதி. நகர நடுப்பகுதி என்பது நியூயார்க்கின் மையத்தில் உள்ள மான்ஹாட்டன் என்ற பகுதியின் நடுப்பகுதியைச் சுட்டும். நகரின் பிரம்மாண்டமான கட்டடங்கள், பெரு நிறுவனங்கள், கேளிக்கைத் தலங்கள் போன்றன அடங்கிய பகுதி. உலகின் மிகப் பெரிய வியாபார மையம் இங்குள்ளதாக விக்கிபீடியா சொல்கிறது.

2 ஹாப்பா என்பது ஒரு கலப்படச் சொல். பகுதி ஹவாயிய மொழியும், பகுதி ஜப்பானிய மொழியும் கலந்த வர்ணனையான ஹாப்பா ஹாலி (hapa haole) என்ற சொல்லின் பகுதி ஹாபா என்று சுருங்கிப் புழங்குகிறது. கலப்பினத்தவரை – பாதி ஹவாயிய, பாதி யூரோப்பிய பெற்றோரைக் கொண்டவர்கள் இப்படி அழைக்கப்படுகிறார்கள். இதுவே மருவி கிழக்காசியரும் யூரோப்பியரும் கலந்த இனத்தவர்களுக்கான சொல்லாக அமெரிக்காவிலும், யூரோப்பிலும் புழங்குகிறது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஆமரில்லிஸ் – முதல் பகுதி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.