(1) நினைவுகளில் சயனிக்கும் நிழல் மரம்
சருகுகளில்
மரம் உதிர்த்த நினைவுகளை
காற்று கூட்டிச் சேர்க்கிறது.
மரமோ
சருகுகளின் மீது சருகுகளாய்
நினைவுகள் மீது
நினைவுகளை மெத்துகிறது-
நினைவுகளின் சுகத்தில்
சருகுகள் மீது
நிழல் சாய்த்து
நினைவுகளில்
சயனிக்க.
(2) கல்மரம்

தொட்டுணரப் பார்க்கிறாயா
என்னை நீ?
என் தொல்நினைவுகளில்
மூழ்கு முதலில்.
முடிந்தால்
எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு நான் தோன்றிய
முதலிலிருந்து என்னைத்
தொட்டுப் பார்.
தொட்டுத் தொட்டுப் பார்த்தும்
முதலிலிருந்து தொட
முடியவே முடியவில்லை என்கிறாயா?
அதோ பார்-
என் மீது அமர்கிறது ஒரு பறவை.
அது அமர்கிற கணத்திலேயே
கல்மரமாயில்லாமல்
தொல்மரமாய் எனக்குள் நான்
உயிர்ப்பது தெரிகிறதா உனக்கு?
அதன் கிளைகளில் அமர்ந்து
முதலிலிருந்து
நீ தொட்டுணர முடியாததை
அந்தப் பறவை
தொட்டுணர்கிறது பார்.
நம்பவில்லையா நீ?
சற்று அமர் என் மீது.
என் தொல்நினைவுகளின் வேர்கள்
எத்தனையோ மில்லியன் ஆண்டுகளின்
முன்பின் ஆழத்திற்கு உன்னை
இழுத்துச் செல்லும் போது
நீ
ஒரு பறவையாகியிருப்பாய்
என் மீது-
அப்போது
அந்தப் பறவை உணர்ந்ததை
நீயும் உணரும் போது
நம்புவாய் என்னை
நீ.
(3) தொலைவு
ஒரு மலையுச்சிக்கு
எத்தனை மணி நேரம்
அல்லது
எத்தனை நாட்கள் என்பது
தொலைவாகிறது-
ஒரு பக்கத்து வீட்டுக்கு
எத்தனை மாதங்கள்
அல்லது
எத்தனை வருடங்கள்
என்பது தொலைவாகிறது.
சில பக்கத்து வீடுகள்
எத்தனை யுகங்களோ
என்று சொல்வது
மிகையில்லை என்பது போல்
தொலைவாகி விடுகிறது-
தமக்குள் அவை
சண்டையிட்டுக் கொள்வதால்.
பக்கத்து மலைகள் தமக்குள்
சண்டையிட்டுக் கொள்வதில்லை.
(4) மலை
(1)
மலை
அசைவதில்லையா?
அன்போடு
மலையுச்சியில் அமர்ந்து
ஒரு பறவை
அதை விட்டுப் பறக்கும் போது
அது அகம் நெகிழ்ந்து சிறிது
அசைவதைக் கவனிக்கவில்லையா நீ?
மேகங்கள் நகர்த்துகின்றன
மலையைப்
பார்!
(2)
குப்புறக்
கவிழ்ந்து கிடக்கிறதா
மலை?
ஒரு
குட்டி நட்சத்திரம்
அப்படித்தான் என்கிறது
நிமிர்ந்து நிற்கிறதாய்
நினைக்கும்
மலைக்கு.
(3)
விண்ணை
இடிக்க முடியாத
குறை
மலைக்கு-
உச்சியிலிருந்து அது
தன் பார்வையைத் தாழ்த்தத்
தெரிகிறது அதற்கு
அதோ-
அதனைச் சரித்து
அதன் நிழல்.
(4)
தடுக்கி
வீழ்கிறது-
தாழ்ந்துதானே தெரிகிறதென்று
செருக்கில் மலையைக்
கடக்கப் பார்க்கும்
உயரப் பறக்கும்
பருந்தின்
நிழல்.
(5) பிறை நிலவு
எந்த
நகவெட்டியில்
வெட்டிய
ஒளி நகமோ?
பிடி கழன்ற
ஒளி அரிவாளோ?
ஆகாய நதியில்
மிதந்து போகும்
ஒளிப் படகோ?
வானின் ஒற்றை
ஒளி அடைப்புக்குறியோ?
முறுக்கிய
பாதி ஒளி மீசையோ?
விண்மகள் அணிந்த
ஒளி மோதிரமோ?
பிறை நிலவோ?
பிதற்றல்தான்
கற்பனையோ?
இல்லை
என் பார்வையில்
கோளாறோ?
எப்படியோ?
பிறை நிலவு
பிறை நிலவுதான்
பிறை நிலவுக்கு.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
