அறிவியல் பிரபஞ்சத்தின் புறவயமான விதிகளையும் சமன்பாடுகளையும் கொண்டு எதார்த்தத்தை விளக்க முயல்கிறது; கலையோ, அதே எதார்த்தத்தை மானுட உணர்வுகளின் வழியாக உள்வாங்க முனைகிறது. பொதுவாக, இவை இரண்டும் சந்திக்காத இரு கோடுகள் என்றே கருதப்படுகின்றன. ஆனால், இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் இந்தக் கோடுகள் இணையும் புள்ளியாகத் திகழ்கிறது.அறிவியல் புனைவுகள் பலவும் அறிவியலை வெறும் அலங்காரமாகவோ அல்லது காட்சிப் பிரம்மாண்டத்திற்கான கருவியாகவோ மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் இப்படமோ, அறிவியலை கதையாடல் மொழியாகவே கையாள்கிறது. அதாவது, இயற்பியல் விதிகள் இங்கே கதைக்குத் துணை செய்ய வரவில்லை; மாறாக, அந்த விதிகளே கதையைத் தீர்மானிக்கின்றன. இயற்பியல் விதிகள் பிரபஞ்சத்தின் எல்லையை வரையறுக்கின்றன; அந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் மனிதன் எவ்வளவு தனிமையானவன் எனும் தத்துவார்த்த உணர்வை இப்படம் கடத்துகிறது. இங்கே அறிவியலின் ‘மெய்’ , கலையின் ‘அழகியலோடு’ கை கோர்த்து, புதிய வகை தரிசனத்தை நமக்கு வழங்குகிறது.
அறிவியல் உண்மைகளை வெறும் தகவல்களாகப் பார்க்காமல், அவற்றை வாழ்வின் தரிசனங்களாக மாற்றுவதே ஒரு சிறந்த கலைப்படைப்பின் அறம். இப்படத்தின் மெய்யான இலக்கு முற்றிலும் வேறானது. சினிமா எனும் ஊடகத்தில் அறிவியல் கருவியாகவே உருமாறிச் சிந்திக்க முடியுமா? எனும் சவாலான வினாவையே இப்படம் முன்வைக்கிறது. அறிவியல் சமன்பாடுகளை மேலோட்டமாக எளிமைப்படுத்தும் முயற்சி அல்ல; மாறாக, பிரபஞ்சத்தின் இயற்பியல் விதிகளை மானுட அனுபவமாக உருமாற்றி, அதன் வழியே வாழ்வியலை பற்றி சொல்லும் கலைப் பயணம். எத்தனையோ திரைப்படங்கள் அறிவியலை மேலோட்டமான மேற்கோளாக மட்டுமே கையாள்கின்றன; ஆனால் மிகச் சில படங்களே அறிவியலைத் தன் ஆன்மாவாகக் கொண்டு கட்டமைக்கப்படுகின்றன. ‘இன்டர்ஸ்டெல்லர்’ இயற்பியலை வெறும் பின்னணி யதார்த்தத்திற்காகவோ அல்லது கதையின் சுவைக்காகவோ கையாளவில்லை. மாறாக, காலத்தின் நகர்வு, கதாபாத்திரங்களின் பிரிவு மற்றும் தங்களுக்குள்ளேயே சுழலும் காரண-காரியத் தர்க்கம் என அப்படத்தின் ஒட்டுமொத்தக் கதையாடலும் இயற்பியல் கோட்பாடுகளாலேயே செதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இப்படம் வெறும் பிரம்மாண்டக் காட்சிகளை அடுக்கிக் காட்டும் சாதாரண அறிவியல் புனைவு அல்ல; அது மனிதப் பேரறிவின் எல்லைகளைத் துணிச்சலுடன் ஆராயும் சிந்தனைப் பரிசோதனை என்றும் சொல்லலாம்.
நோபல் இயற்பியாளர் கிப் தார்னுக்கும் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கும் இடையே தெளிவான ஒப்பந்தம் இருந்தது: ‘இயற்பியல் விதிகள் எக்காரணம் கொண்டும் படத்தின் வசதிக்காக மீறப்படக்கூடாது; தர்க்கரீதியான ஊகங்கள் கூட நிலைநாட்டப்பட்ட அறிவியல் விதிகளின் எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும்.’ இந்தக் கட்டுப்பாடுதான் இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தை மற்ற அறிவியல் புனைவுகளிலிருந்து தனித்துக்காட்டியது.

சான்றாக, புகழ்பெற்ற கார்கன்சுவா (Gargantua) கருந்துளையின் காட்சி வடிவம், முதலில் கலை நயத்திற்காக உருவாக்கப்பட்டு பின் அறிவியலால் நியாயப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது ஐன்ஸ்டீனின் ஈர்ப்புப் புலச் சமன்பாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டே துல்லியமாக உருவாக்கப்பட்டது. கிப் தார்னின் இயற்பியல் சமன்பாடுகள் மேம்பட்ட கணினி மென்பொருளில் இடப்பட்டு (Light-ray tracing), ஈர்ப்பு விசை ஒளியை எவ்வாறு வளைக்கும் என்பது கணக்கிடப்பட்டது. இந்த அசாத்தியமான காட்சி உருவாக்கம், வெறும் பொழுதுபோக்கோடு நின்றுவிடவில்லை. அது பிற்காலத்தில் மெய்யான வானியற்பியல் ஆய்வுகளுக்கே பெரும் பங்களிப்பை வழங்கியது. திரையில் நாம் கண்ட அந்த ஒளிவட்டம், ஒளி சிதறடிக்கப்படும் விதம் ஆகியவை நிஜமான கருந்துளைகள் எத்தகைய தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பதை உலகிற்கு முதன்முதலில் துல்லியமாகத் திரையிட்டுக் காட்டியது.
திரைப்படம் அறிவியல் துல்லியத்தை சடங்குபோலக் கருதித் தன்னைச் சுருக்கிக்கொள்ளவில்லை. குவாண்டம் ஈர்ப்பு விசை, உயர் பரிமாணங்கள் அல்லது காலத்தின் ஆழமான கட்டமைப்பைத் தற்போதைய அறிவியல் முழுமையாக விளக்கிவிடும் என்று அது எங்கும் பாசாங்கு செய்யவில்லை. மாறாக, எவை நிறுவப்பட்ட உண்மைகள், எவை வலுவான அனுமானங்கள் மற்றும் எவை இன்னும் விடுவிக்கப்படாத மர்மங்கள் என்பதற்கு இடையே தெளிவான அறிவுசார் எல்லையை இப்படம் வகுத்துள்ளது. இந்த நேர்மையே இப்படத்தின் மகத்தான பலம். நிலைநாட்டப்பட்ட இயற்பியலிலிருந்து இப்படம் விலகும் இடங்களை, மறைமுகமான ஏமாற்று வேலையாகச் செய்யாமல், வெளிப்படையான கருதுகோளாகவே முன்வைக்கிறது. இதன் விளைவாக, இன்டர்ஸ்டெல்லர் அறிவியல் ஒழுங்குப்பாடும், தத்துவார்த்த லட்சியமும் ஒருசேரக் கைவரப்பெற்ற ஓர் அரிய படைப்பாக மிளிர்கிறது.
இத்திரைப்படம் இந்த அரிய சமநிலையை எவ்வாறு எய்துகிறது என்பதை உணர்ந்துகொள்ள, நாம் கருந்துளைகளின் மர்மங்களிலோ அல்லது ‘ஹைப்பர்ஸ்பேஸ்’ எனப்படும் உயர்வெளிப் பரிமாணங்களிலோ தேடத் தொடங்கத் தேவையில்லை. மாறாக, காலத்தால் முற்பட்டதும் எளிமையானதுமான கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் எனப்படும் நியூட்டனின் இயக்கவியல் விதிகளிலிருந்தே நமது தேடலைத் தொடங்கலாம்.

பொதுமக்களின் கற்பனையில், நவீன இயற்பியல் என்பது அதற்கு முன் இருந்த அனைத்தையும் அடியோடு தகர்த்து எறியும் புரட்சிகரமான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. நியூட்டனுக்குப் பிறகு ஐன்ஸ்டீன் வந்தார், ஐன்ஸ்டீனை குவாண்டம் இயற்பியல் கேள்விக்குள்ளாக்கியது, இவை அனைத்தும் எதிர்காலத்தில் மலரப்போகும் ‘அனைத்திற்குமான கோட்பாட்டிற்காக’ (Theory of everything) காத்திருக்கின்றன என்றே பலரும் எண்ணுகின்றனர். இந்தச் சித்திரம் எளிமையானதாகத் தோன்றினாலும், இது அடிப்படையில் பிழையானது. அறிவியல் வளர்ச்சி என்பது முந்தைய கோட்பாடுகளை முற்றிலுமாகத் துடைத்தெறிவது அல்ல; மாறாக, அவற்றை உள்வாங்கி, அந்த விதிகளுக்கான செல்லுபடியாகும் எல்லைகளை விரிவுபடுத்துவதே ஆகும். இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் இந்தத் தத்துவத்தை மிகவும் இயல்பாக உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்பவே தனது பிரபஞ்சத்தைக் கட்டமைக்கிறது
அன்றாட இயக்கங்களின் தளத்தில் விண்கலங்களின் ஏவுதல், திசைமாற்றம் மற்றும் விசைக்கேற்ப உடல்கள் அடையும் முடுக்கம் என அனைத்தும் இப்படத்தில் நியூட்டனின் விதிகளாலேயே ஆளப்படுகின்றன. இதில் வரும் என்டியூரன்ஸ் (Endurance) விண்கலம், ஜடத்துவம் (Inertia) எனும் தளைகளில் இருந்து விடுபட்ட ஏதோ மாயக் கப்பலைப் போலச் செயல்படவில்லை. அதன் நிறை (Mass) முதன்மையானது; அதன் எரிபொருள் எல்லைகள் தீர்மானகரமானவை. விண்கலங்கள் தங்களை இணைத்துக்கொள்ளும் முறைகள் (Docking sequences), ஆற்றல் மாறா விதிகளை மிகத் துல்லியமான யதார்த்தத்துடன் பின்பற்றுகின்றன. பதற்றத்திற்காகவும், காட்சிகளின் நேர்த்திக்காகவும் புகழப்படும் அந்தச் ‘சுழல்-இணைப்புக் காட்சி’ (Spinning-dock scene), அடிப்படையில் சுழற்சி இயக்கவியலின் ஓர் உன்னத விளக்கமே ஆகும். இந்தத் துல்லியம் தற்செயலானது அல்ல. ஐசக் நியூட்டனின் விதிகள், மனிதர்கள் நேரடியாகப் புழங்கும் தளங்களில் இன்றும் வியக்கத்தக்க வகையில் துல்லியமாக நிலைபெற்றுள்ளன. கருந்துளைகள் மற்றும் உயர் பரிமாணங்கள் சார்ந்த கதையாடலிலும் கூட, மனித உயிர்வாழ்தல் என்பது விசை, வேகம் மற்றும் நிறையை மேலாண்மை செய்வதிலேயே தங்கியுள்ளது என்பதை இப்படம் அங்கீகரிக்கிறது. மேம்பட்ட நவீன அறிவியல், கிளாசிக்கல் மெக்கானிக்ஸை ஒருபோதும் மறுப்பதில்லை; மாறாக அதை முன்நிபந்தனையாகவே கொள்கிறது. நியூட்டனின் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படாமல், ஒருவரால் சார்பியல் (Relativity) எனும் எல்லையை எட்டவே முடியாது.

இன்னும் நுணுக்கமாகக் காண்போமெனில், இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் நியூட்டனின் இயற்பியலை அறநெறி சார்ந்த முரணாகப் பயன்படுத்துகிறது. நியூட்டனின் பிரபஞ்சம் என்பது தீர்மானிக்கப்பட்டது; ஒழுங்குமுறைக்கு உட்பட்டது; எளிய வாசிப்பிற்கு ஏதுவானது. போதிய தகவல்கள் கைவசம் இருப்பின், விளைவுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணித்துவிட முடியும். படத்தின் தொடக்கத்தில், பூமியும் இந்த நியூட்டனின் விதிகளுக்கு உட்பட்ட தளமாகவே உணரப்படுகிறது: அது சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் வேளாண் வீழ்ச்சியால் மெல்ல அழிந்து வரும் மூடிய அமைப்பு . மானிட இனத்தின் வீழ்ச்சிக்கு மர்மமான பிரபஞ்ச சக்திகள் எவையும் காரணமல்ல; மாறாக, நமக்கு மிகவும் பரிச்சயமான தளங்களில் இயங்கும் தவறான மேலாண்மை, உண்மையை மறுத்தல் மற்றும் ஆற்றல் சிதைவு (Entropy) ஆகியவையே அடிப்படை காரணங்கள். இங்கே சிக்கல் இயற்பியல் விசித்திரமாகிவிட்டது என்பதல்ல, மாறாக மனிதர்கள் ஏற்கனவே தாங்கள் அறிந்திருந்த உண்மைகளைப் புறக்கணித்துவிட்டார்கள் என்பதேயாகும்.
இந்த அடித்தளம் கதையாடலில் பெரும் பங்காற்றுகிறது. தொடக்கத்தில் செவ்வியல் இயற்பியல் விதிகளின்படி (Classical laws) இயங்கும் பிரபஞ்சத்தை நிறுவுவதன் மூலம், கதையின் பிற்பகுதியில் நிகழும் மாற்றங்கள் கால நீட்டிப்பு, சார்பியல் ரீதியிலான பிரிவு மற்றும் காரண-காரியச் சுழல்கள் ஆகியவை மெய்யான அதிர்ச்சியைத் தருகின்றன. பார்வையாளர்கள் எவ்விதத் தயாரிப்புமின்றி கற்பனை உலகிற்குள் எறியப்படுவதில்லை. மாறாக, தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றை நோக்கி, இயற்பியல் அறிவியலின் வளர்ச்சியைப் போலவே அவர்கள் மிக எச்சரிக்கையுடனும் நேர்த்தியுடனும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
நியூட்டன் இன்டர்ஸ்டெல்லர் படத்திற்கு அதன் இயந்திரவியல் அடித்தளத்தை கொடுத்தார் என்றால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அதன் உணர்ச்சிகரமான கதைக் கருவை கொடுத்தார் எனலாம். காலம் எனும் கருத்தியலை இப்படம் கையாளும் நேர்த்தியில் இது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. செவ்வியல் இயற்பியலில் (Classical Physics), காலம் என்பது மாறாதது, உலகளாவியது மற்றும் எதனாலும் பாதிக்கப்படாத நடுநிலைத் தன்மை கொண்டது. இயக்கம் அல்லது ஈர்ப்பு விசை என எது இருப்பினும், காலம் என்பது பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலும் ஒரே சீரான வேகத்தில்தான் ஓடும். நமது மானுட உறவுகள் அனைத்தும் காலத்தின் இந்த நடுநிலைத் தன்மையையே அஸ்திவாரமாகக் கொண்டுள்ளன. நாம் ஒன்றாக வயதாகிறோம்; ஒன்றாகவே காத்திருக்கிறோம். இங்கே பிரிவு என்பது இடஞ்சார்ந்த தூரத்தால் அளவிடப்படுகிறதே ஒழிய, காலத்தால் அளவிடப்படுவதில்லை.
ஐன்ஸ்டீன் இந்த மரபுவழி நம்பிக்கையை அடியோடு தகர்த்தார். சிறப்பு மற்றும் பொதுச் சார்பியல் கோட்பாடுகள் இரண்டிலுமே, காலம் என்பது குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்த தனித்துவமான ஒன்றாக மாறுகிறது. வேகம் மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றின் தாக்கத்திற்கு ஏற்ப, காலம் விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது. ஒரே நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட கால அளவை இரு வேறு பார்வையாளர்கள் முற்றிலும் மாறுபட்டதாக அனுபவிக்க முடியும்; வியப்பிற்குரிய வகையில் அவ்விருவருமே சரியானவர்களே. இன்டர்ஸ்டெல்லர் இக்கோட்பாட்டை வெறும் அறிவியல் விளக்கமாக மட்டும் கையாளவில்லை, மாறாக உணர்ச்சிகரமான ஆயுதமாகவே பயன்படுத்துகிறது.
இக்கோட்பாடு நெஞ்சை உலுக்கும் வகையில் காட்சிப்படுத்தப்படும் இடம் ‘மில்லர் கோள்’ (Miller’s Planet). ‘கார்கன்சுவா’ எனும் பேருருவக் கருந்துளைக்கு மிக அண்மையில் அக்கோள் அமைந்திருப்பதால், அங்கே அதீத ‘புவிஈர்ப்பு கால நீட்டிப்பு’ (Gravitational Time Dilation) நிகழ்கிறது. அக்கோளில் கழியும் வெறும் ஒரு மணிநேரம், பூமியின் கணக்கில் ஏழு நீண்ட ஆண்டுகளுக்குச் சமமானது. இக்காட்சி சாமர்த்தியமான அறிவியல் வித்தையாகவோ அல்லது தர்க்கரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய புதிராகவோ மட்டும் இங்கே கையாளப்படவில்லை; மாறாக, இது பேரிழப்பாகவே சித்திரிக்கப்படுகிறது. கூப்பர் அக்கோளிலிருந்து விண்கலத்திற்குத் திரும்பி, தனது குழந்தைகள் பல தசாப்தங்களாகத் தமக்கு அனுப்பிய வீடியோ செய்திகளை ஒவ்வொன்றாகப் பார்க்கும் தருணத்தில், சார்பியல் கோட்பாடு என்பது வெறும் இயற்பியல் விதியல்ல, அது அந்த இயற்பியல் வழியே கசிந்து வெளிப்படும் ஆறாத் துக்கமாக கலையில் உருமாறுகிறது.

இந்தத் தருணம் கதையாடலில் மிக முக்கியமானது. கால நீட்டிப்பு என்பது பொதுவாக வகுப்பறைகளில் அறிவியல் சமன்பாடுகளின் நுணுக்கமான விளைவாகவே கற்பிக்கப்படுகிறது. ஆனால், இப்படத்தில் அது அறநெறி விசையாக உருவெடுக்கிறது. மில்லர் கோளில் இறங்குவது எனும் கூப்பரின் முடிவு வெறும் உயிருக்கு ஆபத்தானது மட்டுமல்ல; அது தார்மீக ரீதியாக பேரழிவை நிகழ்த்தக்கூடியது. பிரம்மாண்டமான ஈர்ப்புப் புலத்திற்கு அருகில் செல்வதன் மூலம், தன் குழந்தைகளுடன் அவர் பகிர்ந்துகொண்டிருக்க வேண்டிய பல ஆண்டுகால வாழ்வை அவர் அறியாமலேயே பலிகொடுக்கிறார். இந்தத் துயரத்திற்குப் பின்னால் எந்த வில்லனும் இல்லை; எவரது தீய எண்ணமும் இதில் இல்லை. பிரபஞ்சம் தன் விதிகளுக்குக் குறுக்கீடு இன்றி அப்படியே கீழ்ப்படிகிறது, அவ்வளவுதான்.
இங்கு ஒன்றை நாம் புரிந்துகொள்ளலாம். இப்பிரபஞ்சம் நமக்கு எதிரானது அல்ல; அதே சமயம், அது நமது உணர்வுகளில் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. மானுட உணர்ச்சிகளுக்காகப் பிரபஞ்சம் தனது கால-வெளி வளைவை ஒருபோதும் மாற்றிக்கொள்வதில்லை. மாறாக, ‘ஒரே நேரத்தில் நிகழ்தல்’ என்பது மாயை என்பதையும், ‘காத்திருப்பு’ என்பது இனி இருவருக்குமான சமச்சீர் அனுபவம் அல்ல என்பதையும் மனிதர்கள் உணர வேண்டும் என்பதை பிரபஞ்சம் நமக்கு உணர்த்துவது. அத்தகைய பிரபஞ்ச எதார்த்தத்திற்கு ஏற்பவே, மனிதகுலம் தனது எதிர்பார்ப்புகளை மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது. முக்கியமாக, ‘இன்டர்ஸ்டெல்லர்’ சார்பியல் கோட்பாட்டைக் மனிதாபிமானமற்ற ஒரு விதியாகச் சித்தரிக்கவில்லை. மாறாக, காலத்தின் இந்த நெகிழ்வுத்தன்மையைப் புரிந்துகொள்வது, ஒருவனின் தார்மீகப் பொறுப்பை இன்னும் ஆழமாக்குகிறது என்றே இது முன்மொழிகிறது. சார்பியல் பயணத்தின் மெய்யான விலையை கூப்பர் உணர்ந்த கணத்திலிருந்து, அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஈடுகட்ட முடியாத சுமையைத் தாங்கி நிற்கிறது. பூமியை விட்டு வெளியேறுவது என்பது இனி வெறும் இடப்பெயர்வு அல்ல; அது காலத்தால் கைவிடப்படுவது. மீண்டும் வீட்டிற்குத் திரும்புவது என்பது மீட்பு அல்ல; மாறாக, மீள முடியாத பெருமாற்றத்தை எதிர்கொள்வதாகும்.
அந்த வகையில், சார்பியல் குறித்து இதுவரை உருவாக்கப்பட்ட படைப்புகளிலேயே மிக முதிர்ச்சியான சினிமாப் படைப்பாக மிளிர்கிறது. ஐன்ஸ்டீனின் பேரறிவை வெறும் காட்சிப் பிரம்மாண்டமாகச் சுருக்கிச் சிறுமைப்படுத்த இப்படம் மறுக்கிறது. மாறாக, அது ஆழமான கேள்வியைக் கேட்கிறது: இயற்பியல் விதிகளே பொதுவான காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க மறுக்கும்போது, மனித உறவுகளின் கதி என்னவாகும்?

நியூட்டனின் இயந்திரவியலையும், ஐன்ஸ்டீனின் சார்பியலையும் ஒன்றிணைப்பதன் வாயிலாக, இன்டர்ஸ்டெல்லர் நமக்கு மிகவும் பரிச்சயமான, அதே சமயம் நம்மை நிலைகுலையச் செய்யக்கூடிய பிரபஞ்சத்தை கண்முன்னே நிறுவுகிறது. அங்கு ராக்கெட்டுகள் இன்றும் விசை விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன; கடிகாரங்கள் இன்றும் ஓடுகின்றன. ஆனால், கால அளவு, நிகழ்நேரம் மற்றும் திரும்புதல் ஆகிய சொற்களின் உட்பொருள்கள் நிரந்தரமாக உருமாறிவிட்டன. இந்த இரட்டைத்தன்மை மிக அவசியம். நியூட்டனின் விதிகள் இல்லையெனில் இப்படம் வெறும் தர்க்கமற்ற கற்பனைக் கதையாகச் சிதைந்திருக்கும்; ஐன்ஸ்டீன் இல்லையெனில் அது ஆழமற்ற படைப்பாக வீழ்ந்திருக்கும். இந்த இரு கோட்பாடுகளின் இணைப்பிலிருந்து புதிய வகை சினிமா யதார்த்தவாதம் பிறக்கிறது. அங்கே அறிவியல் விதிகள் வெறும் காட்சிகளை நியாயப்படுத்தும் கருவிகள் அல்ல; மாறாக, அவை அப்படத்தின் அறநெறிகளையே தீர்மானிக்கின்றன. அங்கு மானுடச் செயல்களுக்கு விலை உண்டு, அதை வெறும் வீரத்தால் மாற்றிவிட முடியாது. தியாகங்களை வெறும் மனஉறுதியால் ஈடுகட்டிவிட முடியாது. அங்கு இழந்த காலம் என்பது மெய்யாகவே இழந்ததுதான். காலத்தின் அலைகளை எவராலும் பின்னோக்கித் தள்ள முடியாது எனும் கசப்பான உண்மையை இயற்பியல் விதிகள் இங்கே உறுதி செய்கின்றன.
அறிவியல் சமன்பாடுகளின் நுட்பம் விளங்காத சாதாரணப் பார்வையாளர்களிடம்கூட இன்டர்ஸ்டெல்லர் இவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதன் ரகசியம் இதுவே. இப்படம் நம்மிடம் தொழில்நுட்பத் தேர்ச்சியைக் கோரவில்லை; மாறாக, உணர்வுப்பூர்வமான நேர்மையையே கோருகிறது. அறிவு என்பது இயற்கையை அடக்கி ஆளுவதால் மட்டும் மதிப்பு பெறுவதில்லை; மாறாக, இயற்கையின் சமரசமற்ற விதிகளுக்கு உட்பட்டு, அவற்றுடன் இணங்கிச் செயல்படக் கற்றுக்கொள்வதிலேயே அதன் மேன்மை அடங்கியுள்ளது என்பதை இப்படம் உணர்த்துகிறது. அறிவியல் வளர்ச்சியைப் பற்றிய உரையாடல்களில் நாம் அடிக்கடி மறந்துவிடும் ஒரு பேருண்மையை இது மீண்டும் நினைவுறுத்துகிறது: அறிவு என்பது ஒருபோதும் யதார்த்தத்திலிருந்து நமக்கான விடுதலையைப் பெற்றுத் தருவதில்லை, மாறாக அந்த யதார்த்தத்தின் எல்லைகளைப் பற்றிய மிகத் தெளிவான பார்வையை மட்டுமே அது நமக்கு வழங்குகிறது.
திரைப்படம் சார்பியல் கோட்பாட்டின் எல்லைகளைக் கடந்து, குவாண்டம் ஊகங்களுக்கும் உயர் பரிமாணங்களுக்கும் நகரும் நிகழ்வுகளுக்கும் , அதற்கான அடித்தளம் ஏற்கனவே மிக வலுவாக நிறுவப்பட்டிருந்தது. இப்படம் நமக்குச் சரியான விடைகளைத் தரும் என்பதற்காக நாம் அதனை நம்பவில்லை; மாறாக, வினாக்களைச் சரியான முறையில் எழுப்பும் தகுதியைப் பெற்றுள்ளதாலேயே நாம் அதனை முழுமையாக நம்புகிறோம். இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தில், சார்பியலிலிருந்து கருந்துளை இயற்பியலுக்குக் கதை நகர்வது என்பது ஏதோ விசித்திரமான கற்பனை உலகிற்குள் நிகழும் திடீர் பாய்ச்சல் அல்ல. அது தர்க்கரீதியான படிநிலை வளர்ச்சி. காலம் தனது மாறாத தன்மையை இழந்த பிறகு, அடுத்த வினா தவிர்க்க முடியாததாகிறது: மனித உள்ளுணர்வால் எட்ட முடியாத அளவிற்கு ‘கால-வெளி’ தனது உச்சக்கட்ட நெருக்கடிகளை சந்திக்கும்போது என்னவாகும்? கார்கன்சுவா கருந்துளை ஒரு அரக்கனாகவோ அல்லது வெறும் தடையாகவோ இங்கே சித்திரிக்கப்படவில்லை. அது எல்லைக் காரணியாக ,அதாவது நாம் அறிந்த இயற்பியல் விதிகள் அவற்றின் முறிவுப் புள்ளி வரை நீட்டிக்கப்படும் களமாகவே அறிமுகப்படுத்தப்படுகிறது.

பொதுவான வெகுஜனப் பண்பாட்டில், கருந்துளைகள் எதையும் பாரபட்சமின்றி விழுங்கி அழிக்கும் அழிவுசக்தி போலவே கருதப்படுகின்றன. ஆனால், இந்த மேலோட்டமாக சித்திரத்திற்கும் இயற்பியல் யதார்த்தத்திற்கும் மிகக் குறைந்த தொடர்பே உள்ளது. இன்டர்ஸ்டெல்லர் இத்தவறான புரிதலைச் சீர் செய்யப் பெருமுயற்சி எடுக்கிறது. கார்கன்சுவா ஆபத்தானதுதான்; ஆனால் அது எதையும் ‘அதிகமாக இழுக்கிறது’ என்பதற்காக அல்ல. மாறாக, அது கால-வெளியை மிகக் கொடூரமாக உருமாற்றுவதால், தூரம், காலம் மற்றும் காரண-காரியம் குறித்த நமது மரபார்ந்த கருத்துக்கள் அங்கே தங்களின் பொருளை இழந்துவிடுகின்றன என்பதே அதன் உண்மைத் தன்மையாகும்.
கார்கன்சுவா குறித்த சித்தரிப்பானது, சுழலும் கருந்துளைகளைப் பற்றிய பொதுச் சார்பியல் கோட்பாட்டின் தீர்வுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சுழற்சியற்ற கருந்துளைகளைக் காட்டிலும், மெய்யான வானியல் கருந்துளைகள் கோண உந்தம் கொண்டவையாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சுழற்சியானது அவற்றின் கட்டமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கிறது. இங்கே கருந்துளையின் சுழற்சியால் கால-வெளியே நூல் இழை போல முறுக்கப்படுகிறது. இத்தகைய முறுக்கம், நிகழ்வு எல்லைக்கு (Event Horizon) மிக அண்மையிலும் நிலையான சுற்றுப்பாதைகளைச் சாத்தியமாக்குகிறது. இதுவே இக்கதையின் நகர்வுக்கு மிக அவசியமான தேவையாகவும் அமைகிறது
இத்திரைப்படத்தின் அறிவியல் தேர்வுகள் வெறும் அழகியல் சார்ந்தவை அல்ல. ‘கார்கன்சுவா’ சுழற்சியற்ற ஒன்றாக இருந்திருப்பின், அதன் நிகழ்வு எல்லைக்கு அருகில் நிலவும் ‘அலை விசைகள்’ (Tidal forces) மிகக் கொடூரமான அழிவைத் தந்திருக்கும். விண்வெளி வீரர்கள் அதன் அருகில் செல்வதையும், கூப்பர் அதன் கருமையத்திற்குள் குதிப்பதையும் இயற்பியல் ரீதியாகச் சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கும். ஆனால், கார்கன்சுவாவை ‘சுழலும் மாதிரியாக’ (Kerr Black Hole) சித்தரிப்பதன் மூலம், இன்டர்ஸ்டெல்லர் அறிவியல் நம்பகத்தன்மையின் விளிம்பில் நின்று கதையை நகர்த்துகிறது. உயிர் பிழைப்பதற்கு அங்கே உத்தரவாதம் இல்லை; ஆனால் அது இயற்பியல் விதிகளால் முழுமையாகத் தடைசெய்யப்பட்டதும் இல்லை. இந்த நுட்பமான வேறுபாடு மிக முக்கியமானது. கருந்துளைக்குள் விழுவது பாதுகாப்பானது என்று இப்படம் ஒருபோதும் வாதிடவில்லை. மாறாக, மிகச் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பேரழிவு விளைவுகள் தாமதப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்றே அது கூறுகிறது. கதையின் வசதிக்காக இங்கே பிரபஞ்சம் வளைந்து கொடுப்பதில்லை; மாறாக, இயற்பியல் அனுமதிக்கும் அந்த மிகக்குறுகிய இடைவெளிகளுக்கு ஏற்பவே கதையாடல் தன்னை வளைத்துக்கொள்கிறது.

கருந்துளைகளின் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அம்சம் நிகழ்வு எல்லை ஆகும். மக்கள் கற்பனையில் இது திடமான மேற்பரப்பாக, அதாவது அதற்கு அப்பால் ஒன்றுமே இல்லாத ஒரு பிரபஞ்ச எல்லையாக கருதப்படுகிறது. உண்மையில், நிகழ்வு எல்லை என்பது ஒரு பருப்பொருள் சார்ந்த எல்லை அல்ல; அது வடிவியல் எல்லை. கால-வெளி வழியாகச் செல்லும் அனைத்துப் பாதைகளும் உள்நோக்கி, Singularity எனும் ஒற்றைப்புள்ளியை நோக்கி மட்டுமே செல்லும் மீள முடியாத ஒரு புள்ளியை அது குறிக்கிறது. வெளியே இருக்கும் பார்வையாளரின் பார்வையில், நிகழ்வு எல்லையை நெருங்கும் பொருள் காலவரையறையின்றி வேகம் குறைந்து, ‘சிவப்பு இடப்பெயர்ச்சிக்கு’ (Redshifting) உள்ளாகி, இறுதியில் காலத்தில் உறைந்துவிட்டது போலத் தோன்றும். ஆனால், உள்ளே விழும் கூப்பரின் பார்வையில், அந்த எல்லையைக் கடக்கும்போது விசேஷமாக எந்த மாற்றமும் நிகழாது. இந்த இரட்டைத்தன்மை சார்பியலின் மிகவும் திடுக்கிடும் விளைவுகளில் ஒன்றாகும்: ஒரே நிகழ்வைப் பற்றி இரு பார்வையாளர்கள் அடிப்படையிலேயே முரண்படலாம், ஆனால் இருவருமே தத்தம் குறிப்புச் சட்டகங்களில் சரியாகவே இருக்க முடியும்.
கருந்துளையின் மையத்தில் Singularity எனும் ஒற்றைக்காலப்புள்ளி உள்ளது. இங்கே கால-வெளியின் வளைவு முடிவிலியாகிறது ; நாம் அறிந்த இயற்பியல் விதிகள் யாவும் அங்கே செயலிழக்கின்றன. ஒற்றைக்காலப்புள்ளி என்பது இயற்பியல் பொருள் அல்ல; அது நமது கணித மாதிரிகள் அவற்றின் எல்லையை எட்டிவிட்டன என்பதற்கான ஓர் அறிகுறி மட்டுமே. சமன்பாடுகள் முடிவிலிகளை உருவாக்கும்போது, அது எதார்த்தத்தின் முடிவைக் குறிக்காமல், ஏதோ புதிய இயற்பியல் விதியின் தேவையையே சுட்டிக்காட்டுகிறது.
இன்டர்ஸ்டெல்லர் சிங்குலாரிட்டியைத் தகுந்த எச்சரிக்கையுடன் கையாள்கிறது. படம் அதனை நேரடியாகச் சித்தரிக்க முயலாமல், கருத்தியல் திறப்பாக மாற்றுகிறது. இங்கேதான் படம் நிலைநாட்டப்பட்ட அறிவியலிலிருந்து தர்க்கரீதியான ஊகத்திற்கு (Speculation) மாறுகிறது. ஒரு கருந்துளையின் உட்புறம் உயர் பரிமாணக் கட்டமைப்புகளுடன் இணைந்திருக்கலாம் அல்லது தகவல்கள் அதன் வழியாகத் தப்பித்துச் செல்லலாம் என்ற நவீனக் கோட்பாட்டு இயற்பியலின் (Holography, Information preservation) ஊகங்களை இப்படம் அழகாகக் கையாள்கிறது. இந்த வகையில், கார்கன்சுவா இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் போலவே செயல்படுகிறது. மனித கதாபாத்திரங்களைப் போலன்றி, அது எவ்வித நோக்கத்துடனும் செயல்படுவதில்லை; அதன் செல்வாக்கு உளவியல் சார்ந்தது அல்ல, மாறாகக் கட்டமைப்பு சார்ந்தது. கூப்பரை அவரது குழந்தைகளிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று கார்கன்சுவா ‘முடிவு’ செய்யவில்லை; ஆனால் அதன் ஈர்ப்புப் புலம் அந்தப் பிரிவைத் தவிர்க்க முடியாத விதியாக்குகிறது ஏனென்றால் பிரபஞ்சம் சீரான தன்மையுடன் இயங்குகிறது.
கூப்பர் கருந்துளையின் உட்புறத்திற்குள் நுழையும் புள்ளியில், ‘டெஸராக்ட்’ (Tesseract) எனப்படும் நான்கு பரிமாணக் கட்டமைப்பை இப்படம் அறிமுகப்படுத்துகிறது. இங்கே காலம் என்பது பயணிக்கக்கூடிய ‘இடஞ்சார்ந்த பரிமாணமாக’ (Spatial dimension) கருதப்படுகிறது. டெஸராக்ட் என்பது தற்போதைய இயற்பியலின் கணிப்பு அல்ல; அது நமது முப்பரிமாணக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் செயல்படும் உயர் அறிவாற்றலுக்கு இயற்பியல் எப்படித் தோன்றும் என்பதன் கலைப்படைப்பு ஆகும். டெஸராக்ட்டிற்குள் காலம் என்பது ஓடும் நதியல்ல; அது ஒரு நிலப்பரப்பு. கூப்பர் ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு ‘தாவிச் செல்லவில்லை’; மாறாக, பல காலத் தருணங்கள் ஒரே நேரத்தில் அணுகக்கூடிய வெளியில் அவர் இருக்கிறார். அங்கு மர்ஃபியின் படுக்கையறை நிலையான நங்கூரமாக மாற, காலத்தின் துண்டுகள் புத்தகத்தின் பக்கங்களைப் போல அவர் முன்னால் விரிந்து கிடக்கின்றன. டெஸராக்ட் எனப்படும் இந்தக் காட்சி வடிவம் அப்படியே உண்மையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. இதை Cognitive metaphor என்று சொல்வார்கள். மனிதப் புலன்களால் நான்கு பரிமாண வடிவியலை உள்ளுணர்வால் ஒருபோதும் கிரகிக்க முடியாது. அந்த நுண்மையான கருத்தியலை இடஞ்சார்ந்த ஒப்புமையாக (Spatial analogy) மாற்றுவதன் மூலம், நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றை திரைச் சித்திரமாகப் பார்க்கும் வாய்ப்பை இப்படம் வழங்குகிறது.

இந்தக் கட்டமைப்பின் மகத்தான அம்சம் என்னவென்றால், இது ‘காலப்பயண முரண்பாடுகளை’ மிக நேர்த்தியாகத் தவிர்க்கிறது. கூப்பர் இங்கே கடந்த காலத்தை மாற்றவில்லை; மாறாக, அவர் அதனை நிறைவேற்றுகிறார். அவர் கடந்த காலத்திற்கு அனுப்பும் தகவல்கள் எப்போதுமே அங்கே அனுப்பப்பட்டே இருக்கின்றன. அவர் கருந்துளைக்குள் நுழைவதற்குக் காரணமான தொடக்ககால நிகழ்வுகள் யாவும், அவர் வருங்காலத்தில் அனுப்பவிருக்கும் செய்திகளையே ஏற்கனவே சார்ந்திருந்தன. இந்தச் சுய-சீரான சுழற்சி (Self-consistent loop), இயற்பியலின் ‘நோவிகோவ் சுய-நிலைத்தன்மைக் கொள்கையோடு (Novikov self-consistency principle) கச்சிதமாகப் பொருந்துகிறது. இதன்படி, காலப் பயணி கடந்த காலத்தில் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்கனவே வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும். இங்கே புதிய கிளைகளோ அல்லது மாற்றப்பட்ட காலவரிசைகளோ கிடையாது. என்ன நிகழ வேண்டுமோ, அது நிகழ்ந்தே தீருகிற (மர்பியின் விதிகளை நினைவில் கொள்க). இது விதியால் உந்தப்பட்ட ஊழ்வினை அல்ல; மாறாக இது கட்டமைப்பு சார்ந்த தீர்மானவாதம். காலத்தைக் கடந்து பின்னோக்கி அனுப்பப்படும் தகவல்களை வெறும் ஈர்ப்பு விசையோடு மட்டும் மட்டுப்படுத்தியது இப்படத்தின் மிகச் சிறந்த அறிவியல் முடிவாகும். ஈர்ப்பு விசை மற்ற அடிப்படை விசைகளைப் போலன்றி, பரிமாணச் சிறைகளுக்குள் அடங்குவதில்லை. சில நவீனக் கோட்பாடுகளின்படி, ஈர்ப்பு விசை மட்டுமே நமது முப்பரிமாணச் சவ்விலிருந்து (Brane) வெளியேறி உயர் பரிமாணங்களுக்குள் ஊடுருவிச் செல்லும் ஆற்றல் கொண்டது. இங்கே தகவல்கள் பருப்பொருளாகப் பயணிக்கவில்லை; மாறாக ஈர்ப்பு விசையினால் உருவாக்கப்பட்ட அதிர்வுகளாகவும் வடிவங்களாகவும் பயணிக்கின்றன. மர்ஃபியின் கைக்கடிகாரம், அந்தப் புத்தக அலமாரி ஆகியவை வெறும் மாயப் பொருட்கள் அல்ல; அவை தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் இடைமுகங்கள். கூப்பர் காலத்தைக் கடந்து குரல் எழுப்பவில்லை; அவர் ஈர்ப்பு விசை எனும் தூதுவன் மூலம் காலத்தின் கதவைத் தட்டுகிறார்.
படத்தின் இறுதித் திருப்பம் தத்துவார்த்த உச்சம்: புழுத்துளையையும் டெஸராக்ட்டையும் உருவாக்கிய அந்த உயர் உயிரினங்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல, அவர்கள் ‘எதிர்கால மனிதர்களே’. மனிதகுலம் பிழைத்து, பரிணமித்து, இறுதியில் நேர்க்கோட்டு காலத்தைக் கடந்து உயர் பரிமாணத்தை எட்டிவிட்டால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அந்தத் தலையீட்டை அவர்களே நிகழ்த்துகிறார்கள் என்று பொருள். இறுதியில், மனிதகுலம் பிரபஞ்சத்தை வென்றுவிடவில்லை. பாரபட்சமற்ற பிரபஞ்சத்தின் விதிகளுக்குள் நின்று பொறுப்புடன் செயல்படுவது எப்படி என்பதை அது கற்றுக்கொண்டது. இப்படம் அறிவியலை அதிகாரமாகக் கொண்டாடவில்லை, மாறாக கட்டுப்பாடாகவே அணுகுகிறது. கூப்பரின் பயணம் தனிமனிதனின் வெற்றிக் கொண்டாட்டம் அல்ல; அது மகத்தான கோட்பாட்டின் நிரூபணம். தனது எல்லைகளை அங்கீகரிக்கக்கூடிய பேரறிவால் மட்டுமே மேலும் முன்னேறிச் செல்ல முடியும் என்பதே அது. இயற்பியலில் இருந்து தப்பிப்பதன் மூலம் அல்ல, மாறாக இயற்பியலோடு இணைந்து சிந்திப்பதன் மூலமே மனிதகுலத்தின் எதிர்காலம் பிழைக்கும். அதுவே இப்படத்தின் நிலைத்திருக்கும் செய்தி.
திரைப்படம் முன்வைக்கும் தத்துவத் தேடல் என்பது வெறும் நட்சத்திரங்களுக்கு இடையிலான பயணம் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சம் மனித மையவாதத்தை முற்றாக நிராகரிக்கிறது; அதன் விதிகளுக்கு முன்னால் மனிதனின் கண்ணீரோ, கதறலோ எவ்வித சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. இத்தகைய அபத்தமான சூழலில், மனிதநேய இருத்தலியல் பெரும் வெளிச்சமாக மாறுகிறது. அழிவின் விளிம்பில் நிற்கும் இனம், தனக்கான மீட்பைத் தான்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற கசப்பான உண்மையை உணரும்போது, அங்கு தெய்வங்கள் மறைந்து மனித முகங்கள் பிரகாசிக்கின்றன. மார்டின் ஹைடெக்கர் குறிப்பிடும் இருப்பு என்பது இங்கு காலத்தோடு பிணைந்த ஒன்றாகவே இருக்கிறது. கூப்பர் கருந்துளையின் கால-வெளி வளைவுக்குள் சிக்கிக்கொள்ளும்போது, அவர் எதிர்கொள்வது தனிமனிதனின் மரணத்தை மட்டுமல்ல, மாறாக காலத்தால் பிரிக்கப்பட்ட தந்தையின் இருத்தலியல் தவிப்பை. Being and Time தத்துவத்தின்படி, மனிதன் எப்போதும் ஒரு முடிவை நோக்கி இருக்கும் இருப்பு; ஆனால் கூப்பரின் பயணம் அந்த முடிவை தொடக்கமாக மாற்றும் விந்தையைச் செய்கிறது.
அன்பு என்பது இப்படத்தில் கவித்துவ உணர்வாக மட்டும் நின்றுவிடாமல், ஐந்தாவது பரிமாணத்தின் அறிவியல் கருவியாக, காலத்தைக் கடக்கும் பாலமாக உருமாறுகிறது. காலத்தின் நெகிழ்வுத்தன்மை என்பது ஒருவனுக்கு முக்கியமான பொறுப்பை வழங்குகிறது. சார்பியல் கோட்பாட்டின் காரணமாகப் பூமியில் தங்கியிருக்கும் தனது மகளை விடக் குறைந்த வயதில் இருக்கும் தந்தை, தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் எத்தனை விலைமதிப்பற்றது என்பதை உணர்கிறார். இது கடமைவாதத்திற்கும் பயன்முறைவாதத்திற்கும் இடையிலான பெரும் போராகவும் நீடிக்கிறது. மனித இனத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்ய ‘பிளான் பி’ எனும் பெயரில் கருவிகளைச் சுமந்து செல்வதை விட, தான் நேசிக்கும் ஒரு உயிருக்காகக் காலத்தையே கடந்து மீண்டும் வரத் துடிக்கும் கூப்பரின் தனிமனித அறம் இங்கு மேலோங்கி நிற்கிறது. இந்தத் உறுதிதான் மனிதனை இயந்திரமாக மாறவிடாமல் தடுக்கிறது.

இயற்கையின் உன்னத நிலையை எதிர்கொள்ளும் தருணங்களில், மனிதாபிமானம் என்பது சிறு துகள் போலத் தோன்றினாலும், அந்தத் துகளே இப்பிரபஞ்சத்தின் ரகசியத்தைத் திறக்கும் கருவியாகிறது. கருந்துளையின் Singularity எனப்படும் ஒருமை நிலைக்குள் நுழையும்போது, மனிதன் தனது பௌதிக எல்லைகளைக் கடந்து மீவுமனிதத்துவம் மாற்றத்தை எட்டுகிறான். ஐந்து பரிமாண உயிரினங்களாக மாறிய மனிதகுலத்தின் எதிர்கால வடிவம், கடந்த கால மனிதனுக்குக் காட்டும் வழிதான் இப்படத்தின் உச்சகட்டம். இந்த உயரிய நிலையை அடைய அமெரிக்கப் பிரக்மாடிசத்தின் தத்துவத்தின் அந்த முன்னோடி வேகம் அவசியமாகிறது. ஆபத்துகள் நிறைந்த புதிய எல்லையைத் தேடிச் செல்லும் அந்த வேகம், பாதுகாப்பான வாழ்வை விடத் துணிச்சலான தேடலே வாழ்வின் அர்த்தம் என்பதை வலியுறுத்துகிறது.
இறுதியில், கூப்பர் திரும்பி வரும்போது அவர் சந்திப்பது பழைய உலகத்தை அல்ல; புதிய பரிமாணத்தில் இயங்கும் மனிதகுலத்தை. இந்த மீள முடியாத மாற்றம் என்பது மீட்பல்ல, அது முதிர்ச்சி. காலம் என்பது சிறையல்ல, அது நாம் நம் அன்பைப் பதிவு செய்வதற்கான விரிவான திரை என்பதை உணர்த்தும் இந்தப் பனுவல், பிரபஞ்ச எதார்த்தத்திற்கும் மனித உணர்ச்சிகளுக்கும் இடையிலான சமரசப் புள்ளியைத் தேடுகிறது. இத்தகைய விரிவான தத்துவத் தளங்கள் ஊடாகப் பார்க்கும்போது, இன்டர்ஸ்டெல்லர் என்பது வெறும் விண்வெளிப் பயணம் அல்ல என்று புலப்படுகிறது. அறிவு என்பது நமக்கு எல்லாம் வல்ல தன்மையைத் தருவதில்லை; அது நமக்கான சரியான திசையைக் காட்டுகிறது. நாம் எங்கே நிற்கிறோம், நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் மற்றும் எவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை அது நினைவுறுத்துகிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

இந்தக் கட்டுரையின்படி இண்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தில் நியூட்டனின் க்ளாசிக்கல் அறிவியலை அடிப்படையாக கொண்டு சிக்கல்கள் துவங்குகின்றன. கூப்பர் என்பவரின் குடும்பம் வழியாக காட்சிகள் சினிமா பார்வையாளனுக்கு போய் சேருகின்றது. நியுட்டானிய பௌதீக சிக்கல்கள் பின்னர் ஐன்ஸ்டீனின் சார்பியலால் உணர்ச்சி ரீதியான துயரமாக மாறுகிறது, குறிப்பாக மில்லரின் கோளத்தில் நேரம் விரிவடையும் காட்சி, அறிவியலை ஒரு சமன்பாட்டிலிருந்து மனித இழப்பின் மொழியாக மாற்றுகிறது. கூப்பர் மரணத்தை மட்டும் அல்ல, தனது பிள்ளைகளுடன் இருக்கும் வாழ்க்கையின் பல தசாப்தங்களையே அறியாமல் துறக்கிறார். இங்கு பிரபஞ்சம் கொடியதாக இல்லை; அது மனித உணர்வுகளை தாண்டிய ஒரு உண்மையை அறிந்துள்ளது, மனிதன் அதற்கு தன்னை ஒப்புக் கொடுத்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
விவேக் இந்தக் கட்டுரையில் இந்தப் படம் அறிவியலை கதைக்காக வளைத்ததில்லை; மாறாக, கதையையே அறிவியலுக்குள் அடக்குகிறது. கருந்துளை இயற்பியல் போல அனைத்தும் நவீன கோட்பாட்டு இயற்பியலுடன் ஒத்திசைக்கப்படுகின்றன என சொல்கின்றார்.
“உயர் உயிர்கள்” என்பது மானுடத்துக்கு அப்பால்அல்ல; எதிர்கால மனிதர்களே,இதன் மூலம் மனிதன் பிரபஞ்சத்தை ஆளவில்லை, அதன் விதிகளுக்குள் பொறுப்புடன் இயங்கக் கற்றுக்கொள்கிறான் என்ற பார்வை வலியுறுத்தப்படுகிறது.
அறிவு மனிதனுக்கு எல்லாம் செய்யும் சக்தியை அல்ல, சரியான திசையை மட்டுமே அளிக்கிறது. இதன் மூலம் Interstellar, அறிவியலையே உணர்வுபூர்வமான நடிப்பிற்கும், அது வழங்கும் அர்த்தத்திற்குமான விதையாக மாற்றி, அறிவுசார் நேர்மையுடனும் ஆழ்ந்த உணர்ச்சியுடனும் கூடிய சினிமாவை உருவாக்குகிறது.
நல்ல கட்டுரை