பெல்லா தார் – இரங்கல்

ஐரோப்பிய சினிமாவின் ஆகச்சிறந்த மேதைகளில் ஒருவரான பெல்லா தார் மறைந்துவிட்டார். வண்ணங்களற்ற உலகில் ஒரு நுட்பமான யதார்த்தத்தைத் தேடியவர் பெல்லா தார். பெல்லா தார் ஒருபோதும் தனது பார்வையாளனை மகிழ்விக்க முற்பட்டதில்லை. மாறாக, வாழ்வின் கசப்பான பக்கங்களை ஒரு பெருங்கண்ணாடியைப் போல நம் முன்னே நிறுத்தினார். ஒரு திரைப்படம் என்பது வெறும் காட்சிப் படிமங்களின் தொகுப்பல்ல; அது மனிதன் தனது இருத்தலின் வேர்களை நோக்கித் திரும்பும் ஒரு தீராத பயணம் என்பதைத் தனது ஒவ்வொரு சட்டகத்தின் மூலமும் அவர் மெய்ப்பித்தார். புற உலகின் ஆரவாரங்களை விடுத்து, தனிமையில் அமர்ந்து அவரது படைப்புகளைத் தரிசிப்பதென்பது, நம் ஆழ்மனதின் அடுக்கடுக்கான மௌனங்களோடு நாமே உரையாடும் ஒரு நிகழ்வு.

தாரின் படங்கள் அதீத மெதுநடை கொண்டவை; அவை ஒருபோதும் கதைக்கருவிற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. 1994-ல் வெளியான ஏழு மணி நேரக் காவியமான Sátántangó திரைப்படத்தில், வெறும் 150 காட்சிகள் மட்டுமே உள்ளன. சில காட்சிகள் பத்து நிமிடங்கள் வரை எவ்வித வெட்டும் இன்றி நீளும். வேகமான படத்தொகுப்பிற்குப் பழகிய சமகாலப் பார்வையாளர்களுக்கு இது சவாலாக அமையலாம். ஆனால், தாரின் நோக்கம் ஆழமானது: சினிமா என்பது வாழ்ந்த அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, கதையை நகர்த்தும் இயந்திரமாக இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனை அந்த இடத்திலும் காலத்திலும் முழுமையாக மூழ்கடிக்க வேண்டும் என்பதே அவரது கலைத்திட்டம். வணிகச் சினிமா நமக்கு அளிக்கும் உடனடி மகிழ்ச்சியை நிராகரித்து, காலத்தின் பாரத்தை அதன் முழுமையில் உணரும்படி செய்வதே தாரின் படங்களின் முதன்மை நோக்கம்.

அவரின் கலை இயல்பாகவே சோரன் கீர்க்கெகார்ட் முதல் ஆல்பெர்ட் காம்யு வரையிலான இருத்தலியல் சிந்தனையாளர்களின் தத்துவத்தோடு கைகோர்க்கிறது. வாழ்வின் பொருளின்மைக்கும், நாம் தேடும் அர்த்தத்திற்கும் இடையிலான அந்த இடைவிடாத மோதலைத் தீர்த்து வைக்க தார் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, பாழ்நிலப்பரப்புகள் மற்றும் சலிப்பூட்டும் அன்றாடச் சடங்குகளின் வழியே நம்மை மீண்டும் மீண்டும் சுழலச் செய்து, இருத்தலின் பாரத்தை நாம் முழுமையாக உணரும்படி செய்தார். அவரது படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தேடித் திரியும் தொலைந்து போன ஆன்மாக்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் எந்த முன்னேற்றமும் இல்லை, ஆனால் அந்தச் செயல்களைச் செய்வதன் மூலமே அவர்கள் தங்கள் இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.  பொருளற்றது போல் தோன்றினாலும், அதுவே வாழ்வின் சாராம்சம்.

தாரின் முத்திரை என்பது நுட்பமான நீண்ட காட்சிகள், காலத்தை அதன் மூல வடிவில் எதிர்கொள்ள நம்மைப் பணிக்கின்றன. கில்லெஸ் டெலூஸ் முன்வைத்த கால-பிம்பம் எனும் கருத்தாக்கத்தோடு ஆழமாகத் தொடர்புடையது அவரின் திரைமொழி. இங்கே சினிமா என்பது ஒரு செயலைத் துரிதப்படுத்துவது அல்ல, மாறாக காலத்தை அதன் போக்கில் சுதந்திரமாக விட்டுவிடுவது. ஹான்ஸ்-ஜார்ஜ் கடாமர் கூறுவது போல், கலை என்பது வெறும் தகவலல்ல, அது அனுபவத்தின் வழியே கிட்டும் ஒரு தரிசனம். Sátántangó படத்தில், ஒரு மாட்டு மந்தை எட்டு நிமிடங்கள் எவ்வித வெட்டும் இன்றி சேற்று நிலத்தைக் கடந்து செல்வது, காம்யுவின் சிசிபஸ் படிமத்திற்கு ஒப்பானது. முன்னேற்றமே இல்லாத, ஆனால் பிடிவாதமான இருத்தலியல் சரணாகதி அது. இந்தக் காட்சியை பார்க்கும்போது, நாம் அந்த மாடுகளின் பயணத்தில் நமது சொந்த வாழ்வின் பொருளற்ற முயற்சிகளையும், அதேநேரத்தில் அந்த முயற்சிகளின் தவிர்க்க முடியாத அவசியத்தையும் காண்கிறோம்.

“எனது கொள்கை  எளிமையானது: கல்வி புகட்டுவது அல்ல, விடுதலை அளிப்பதே” என்பது தாரின் வாக்கு. சினிமா எதையும் போதிக்கக் கூடாது, அது உணர்வுகளை விடுவிக்க வேண்டும் என்று அவர் நம்பினார். “எனது படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நீங்கள் வலிமையாக உணர்கிறீர்களா அல்லது பலவீனமாகவா?” என்பதே பார்வையாளனைத் நோக்கித் திரும்பச் செய்யும் ஒரு கேள்வி. இந்தக் கேள்வியில் ஒளிந்திருக்கும் ஆழம் மிகப்பெரியது. தார் பார்வையாளனுக்கு எளிய பதில்களையோ, ஆறுதல்களையோ அளிக்கவில்லை. மாறாக, அவர்கள் தாங்களாகவே தங்கள் இருத்தலின் அர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவரது படங்கள் கேள்விகளை எழுப்புகின்றனவே தவிர, பதில்களை அளிப்பதில்லை. இதுவே உண்மையான கலையின் அடையாளம் என்று அவர் கருதினார்.

பெல்லா தாரின் சினிமா எளிதில் செரிமானமாகக்கூடியது அல்ல. ஆனால், இருத்தலியல் தத்துவம் சொல்வது போல், வாழ்வின் பொருளின்மையை நேருக்கு நேர் எதிர்கொள்வதே உண்மையான வாழ்வு என்றால், தாரின் சினிமா அந்தப் பொருளின்மையின் ஆகச்சிறந்த காட்சி வடிவம். திரையில் எழுத்துக்கள் ஓடி மறைந்த பிறகும், அவர் எழுப்பிய அந்த நிசப்தமான கேள்விகள் நம்முள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது படங்களை ஒரு முறை பார்ப்பதே போதுமானதல்ல; அவை மீண்டும் மீண்டும் பார்க்கப்பட வேண்டியவை, ஏனென்றால் ஒவ்வொரு முறையும் புதிய அர்த்த அடுக்குகள் வெளிப்படுகின்றன. முதல் பார்வையில் சலிப்பூட்டுவதாகத் தோன்றும் காட்சிகள், அடுத்த பார்வையில் ஆழ்ந்த தத்துவ உரையாடல்களாக மாறுகின்றன.

அவரது திரையில் விரியும் அந்த நிசப்தமான கறுப்பு-வெள்ளை பிம்பங்கள் அசையும்போது, இயல்பான காலவோட்டம் தன் போக்கை மாற்றிக்கொள்கிறது. அங்கே காலம் உறைந்துவிடுகிறது, அல்லது அந்த உறைந்த காலத்திற்குள் நாம் நுழைகிறோம். திரையில் ஒரு கதாபாத்திரம் செய்யும் சிறு அசைவோ, அல்லது வீசும் காற்றோ நமக்குள் ஒரு தத்துவத் தேடலைத் தொடங்கி வைக்கிறது. வாழ்வின் சலிப்பையும், அதன் பொருளின்மையையும் அத்தனை அழகியலோடு காட்சிப்படுத்திய பெல்லா தார், சினிமாவை ஒரு பொழுதுபோக்குச் சாதனத்திலிருந்து உயர்த்திக் காட்டிய வல்லவர். அவரது திரைமொழியின் ஆதாரசுருதி, “மீளச் செய்யப்படும் அன்றாடச் சடங்குகள்”. இந்தச் சடங்குகளின் மூலமாக அவர் நமக்குக் காட்டுவது என்னவென்றால், வாழ்வு என்பது பெரிய நிகழ்வுகளின் தொகுப்பல்ல, மாறாக சிறிய, மீண்டும் மீண்டும் நிகழும் செயல்களின் தொடர்ச்சி. அந்தச் செயல்களின் மீண்டும் மீண்டும் நிகழ்வுதான் நமது இருத்தலை வடிவமைக்கிறது.

The Turin Horse திரைப்படத்தில், ஒரு தந்தையும் மகளும் வேகவைத்த உருளைக்கிழங்கை உரித்து உண்பதும், கிணற்றிலிருந்து நீர் தூக்குவதும் வெறும் காட்சிப் பதிவுகள் அல்ல, அவை வாழ்வின் சலிப்பையும், அந்தச் சலிப்பிற்குள்ளேயே வேரூன்றியிருக்கும் பிடிவாதமான உயிர்வாழ்தலையும் சித்தரிக்கும் படிமங்கள். ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நிழலாகக் கொண்டு, வாழ்வின் பொருளின்மையை அப்படத்தில் அவர் செதுக்கியிருப்பார். அந்தக் குதிரையின் கண்களில் தேங்கியிருக்கும் வலியும், மனிதர்கள் ஒரு இயந்திரகதியோடு இயங்கும் விதமும் நீட்சேவின் தத்துவச் சிதறல்களைக் காட்சிப் பிம்பங்களாக உருமாற்றுகின்றன. இந்தப் படத்தில் ஆறு நாட்களில் நிகழும் நிகழ்வுகள், படிப்படியாக இருளை நோக்கிச் செல்கின்றன. காற்று இடைவிடாமல் வீசுகிறது, விளக்குகள் அணைகின்றன, கிணறு வற்றிவிடுகிறது, உலகமே மெல்ல மெல்ல செயலிழக்கத் தொடங்குகிறது. இந்தப் படிப்படியான சரிவு, வாழ்வின் இறுதி நோக்கி நாம் அனைவரும் நகர்ந்து கொண்டிருக்கும் பயணத்தின் ஒரு உருவகம்.

அதேபோல், Sátántangó படத்தில் மக்கள் மழையிலும் சேற்றிலும் உழன்று கழியும் காட்சிகள், மனித நிலையின் ஆழமான பிரதிபலிப்புகள். ஏழு மணி நேரப் பயணமான இப்படம், காலத்தின் ஓட்டத்தையே மறுவரையறை செய்து, ஒவ்வொரு காட்சியையும் ஒரு அனுபவமாக மாற்றுகிறது. இந்தப் படம் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் மக்களின் நம்பிக்கையையும், ஏமாற்றத்தையும், முடிவில் அவர்கள் மீண்டும் தங்கள் அன்றாட வாழ்வுக்குத் திரும்புவதையும் காட்டுகிறது. வட்டமாக அமைந்த கதை எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே முடிகிறது. இந்த வட்டத்தன்மை, வாழ்வின் சுழற்சியையும், மாற்றம் இல்லாத நிலையையும் குறிக்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் இறுதியில் எதுவும் மாறவில்லை என்பதை உணர்கிறார்கள்.

Werckmeister Harmonies படத்தின் தொடக்கத்தில் ஒரு மது விடுதியில், ஜான்ஸ் என்ற எளிய மனிதன் சூரிய மண்டலத்தின் இயக்கத்தைப் பற்றி விளக்குகிறான். அங்குள்ள மக்கள் தாங்களே கோள்களாக மாறிச் சுழல்கின்றனர். ஏறக்குறைய பத்து நிமிடங்கள் நீளும் இந்த Single Shot, கேமரா அவர்களின் முகங்களை வருடிச் செல்லும்போது நாம் அந்த இடத்தின் இயல்பாகவே பயணிக்கிறோம். அவரது நீண்ட காட்சிகள் ஒரு புதிய வகை Cinematic Time உருவாக்குகின்றன. இந்தக் காட்சி வெறும் தொடக்கம் மட்டுமல்ல, படம் முழுவதும் வரவிருக்கும் குழப்பத்திற்கும் ஒழுங்கிற்குமான தேடலுக்கும் ஒரு உருவகம். ஜான்ஸ் விளக்கும் அண்ட இயக்கவியலின் ஒழுங்கு, பின்னர் படத்தில் வரும் சமூக குழப்பத்திற்கு முற்றிலும் எதிரானது. இந்த எதிர்வு, மனிதன் தேடும் ஒழுங்குக்கும், உலகின் குழப்பமான இயல்புக்கும் இடையிலான இடைவெளியைக் காட்டுகிறது.

Sátántangó படத்தில் சிறுமி தன் பூனையைக் கொல்லும் காட்சியும், The Man from London படத்தில் கப்பல் கரையை நோக்கி வரும் காட்சியும் நம் பொறுமையைச் சோதிக்கவில்லை. மாறாக, அவை நமது கவனத்தையும் புரிதலையும் ஆழமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்கின்றன. சிறுமி பூனையைக் கொல்லும் காட்சி, மனித இயல்பின் கொடூரத்தையும், அதே நேரத்தில் அந்தக் கொடூரத்தின் அடியில் புதைந்திருக்கும் வலியையும் காட்டுகிறது. அந்தச் சிறுமி தனது சொந்த துன்பத்தில் இருந்து தப்பிக்க வேறு எந்த வழியும் இல்லாமல், தன்னை விட பலவீனமான ஒன்றின் மீது தனது வலியை இறக்குகிறாள்.  

Béla Tarr ● Sátántangó ● Cat Poisoning Scene

அவரது படங்களில் குதிரை என்பது உழைப்பின் சின்னம் மட்டுமல்ல, அது சொல்லொணாத் துயரத்தைச் சுமக்கும் ஒரு மௌன சாட்சி. ‘தி டுரின் ஹார்ஸ்’ படத்தில் நீட்சே அணைத்துக்கொண்ட அந்தக் குதிரை, மெல்ல வலுவிழந்து நகர மறுக்கும் தருணம், ஆயிரம் வார்த்தைகளை விட வலிமையானது. Sátántangó படத்திலும் குதிரைகள் சேற்றில் வண்டி இழுக்கும் காட்சிகள் உண்டு. இந்தக் குதிரைகள் வெறும் விலங்குகள் அல்ல, அவை மனித நிலையின் பிரதிபலிப்புகள். அவை பேசாமல், கேள்வி கேட்காமல் தங்கள் சுமைகளைச் சுமக்கின்றன. இது மனிதர்கள் தங்கள் வாழ்வின் பாரங்களை சுமக்கும் விதத்தையும் நினைவூட்டுகிறது. குதிரையின் பார்வையில் காணும் அந்த ஆழமான சோகம், சொற்களால் வெளிப்படுத்த முடியாத துயரத்தின் உருவகம்.

பெல்லா தார் திரையரங்க அனுபவத்தின் மீது தீராத பிடிவாதம் கொண்டவர். ஒரு படைப்பை அதன் முழுமையான வீச்சில் உணர வேண்டுமானால், அது திரையரங்கின் இருட்டிலும், பிரம்மாண்டத் திரையிலும் மட்டுமே சாத்தியம் என்று அவர் நம்பினார். ஒலிக் கோர்ப்புகளும், நீண்ட அசைவுகளும் பார்வையாளனை அந்த நிலப்பரப்பிற்குள்ளேயே சிறைபிடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். DVD வெளியாவதற்கு அவர் ஒப்புதல் அளிப்பதற்கு பல வருடங்கள் ஆகின.  தனது கலையின் முழுமையான அனுபவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை. திரையரங்கின் இருட்டில், பெரிய திரையில், சக பார்வையாளர்களுடன் அமர்ந்து ஒரு படத்தைப் பார்ப்பது என்பது வீட்டில் தனியாக சிறிய திரையில் பார்ப்பதை விட முற்றிலும் வேறுபட்ட அனுபவம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காயின் நாவல்களை அவர் திரையாக்கிய விதம், இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான இடைவெளியைக் குறைத்தது என்றே சொல்லலாம். வார்த்தைகளின் வல்லமையும், பிம்பங்களின் மௌனமும் இணையும் ஒரு புள்ளியை அவர்கள் கண்டடைந்தனர். கிராஸ்னஹோர்காயின் நாவல்கள் நீண்ட, சுழலும் வாக்கியங்களைக் கொண்டவை, அவை ஒரு ஹிப்னாடிக் தன்மையை உருவாக்குகின்றன. தார் இதை திரையில் நீண்ட, தடையற்ற காட்சிகளாக மாற்றினார். இலக்கியத்தின் கருவும் , சினிமாவின் காட்சிப் பாஷையும் ஒன்றிணைந்து ஒரு தனித்துவமான கலை வடிவத்தை உருவாக்கின. அவர்களது ஒத்துழைப்பு இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த மிக முக்கியமான கலை கூட்டணிகளில் ஒன்று.

கிராஸ்னஹோர்காயின் எழுத்துக்களில் பொதிந்திருக்கும் அந்த இருண்ட நகைச்சுவை, மனித வீழ்ச்சியின் துயரம் மற்றும் முடிவற்ற காத்திருப்பு ஆகியவற்றை தார் தனது நிசப்தமான கறுப்பு-வெள்ளை சட்டகங்களுக்குள் மிகச் சரியாகப் பொருத்தினார். Sátántangó முதல் The Turin Horse வரை, இவர்களின் கூட்டணி மானுட இருப்பின் அபத்தத்தை (Absurdity of Human existence) அத்தனை அழகியலோடு வெளிப்படுத்தியது. ஒரு காட்சியில் ஒரு மனிதன் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், கிராஸ்னஹோர்காயின் தத்துவார்த்தமான ஒரு நீண்ட பத்தியை தார் தனது கேமராவின் மெதுவான நகர்வின் மூலம் மாற்றியிருப்பார். சொற்களால் விவரிக்க முடியாததை மௌனத்தாலும், மௌனத்தால் சொல்ல முடியாததை இசையாலும் நிரப்பும் இவர்களின் கலைப்பகிர்வு, உலக சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளை  தந்தது.

தாரின் படங்களில் ஒலி வடிவமைப்பும் இசையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிஹாய் விக் இசையமைத்த ஒலிப்பதிவுகள், படத்தின் இருண்ட உணர்வுகளை மேலும் ஆழமாக்குகின்றன. அவரது படங்களில் இசை வெறும் பின்னணி அலங்காரமல்ல, மாறாக கதையின் ஒரு பகுதி. சில நேரங்களில் ஒரே இசைத் துண்டு மணிக்கணக்கில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும், இது ஒரு ஹிப்னாடிக் விளைவை உருவாக்கி பார்வையாளனை ஒரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. காற்றின் ஓசையும், மழையின் சத்தமும், அமைதியான அறைகளின் மௌனமும் கூட ஒலி வடிவமைப்பின் முக்கிய அம்சங்கள்.   

ஒரு மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதன் பிழைப்பிற்காகச் சுவரைப் பற்றிக்கொள்வது போல, அவரது காட்சிகள் இசையைத் தங்களின் ஆதாரமாகப் பற்றிக்கொள்கின்றன, மிஹாலி விக்  வடிவமைத்த இசைக்கோர்ப்புகள், குறிப்பாக The Turin Horse படத்தில் ஒலிக்கும் அந்த ‘செல்லோ’  கருவியின் இசை, காலத்தை உறையச் செய்கிறது; நம் சுவாசத்தின் வேகத்தைக் குறைத்து, கதாபாத்திரங்களின் அந்தத் தீராத களைப்பிற்குள் நம்மைச் சிறைப்பிடிக்கிறது. கதையையும் வசனங்களையும் தார் முற்றிலுமாகத் துறந்துவிடுவதால், இசை மட்டுமே அந்தத் திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான   ஓட்டமாக மாறுகிறது. நிசப்தத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அங்கே இசைதான். இசை  கதாபாத்திரங்களின் உடலசைவுகளோடு ஒன்றிணைந்து, ஒலியை ஒரு பருப்பொருள் போன்ற கனமாக மாற்றுகின்றன. அந்த இசையில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் தாழ்வான ஸ்வரங்கள், மனிதர்களின் அன்றாட உழைப்பையும், களைப்பையும், காலத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாத அவர்களின் இயலாமையையும் பிரதிபலிக்கின்றன. அழுகையின்  உணர்வுகளை வெளிப்படுத்தும் வயலினோ அல்லது தர்க்கங்களை விளக்கும் பியானோவோ போலன்றி, அந்தச் செல்லோ இசை அனைத்தையும் வெறுமனே தாங்கிக் கொள்கிறது. அது அதிர்வுகிறது, நிலைபெறுகிறது, பின்னர் மெல்லத் தேய்கிறது.  சொற்கள் பயனற்றுப் போன ஒரு உலகில், எஞ்சியிருக்கும் ஒரே குரலாக அந்தச் செல்லோ இசை ஒலிக்கிறது. அது நாடகத்தனமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை; மாறாக, மெல்ல மெல்ல அணைந்து கொண்டிருக்கும் ஒரு பிரபஞ்சத்திற்கு எதிராக, உயிர் பிழைத்திருப்பதற்கான பிடிவாதமான எதிரொலியாக அது ஒலிக்கிறது.

தாரின் கேமரா இயக்கங்களும் தனித்துவமானவை. அவர் பெரும்பாலும் Steadicam பயன்படுத்தி நீண்ட ட்ராக்கிங் ஷாட்களை உருவாக்குவார். கேமரா கதாபாத்திரங்களைப் பின்தொடரும், அல்லது அவர்களை முந்திச் செல்லும், அல்லது அவர்களைச் சுற்றி வட்டமிடும். இந்த இயக்கங்கள் நமக்கு ஒரு பார்வையாளனாக இல்லாமல், அந்த உலகத்தில் நாமும் இருப்பது போன்ற உணர்வை அளிக்கின்றன. கேமரா ஒரு சாட்சியாக மட்டுமல்லாமல், அந்த இடத்தின் ஒரு பகுதியாகவே மாறுகிறது. அவரது ஒளிப்பதிவாளர்களான கபாஸ் பால் மற்றும் பிரெட் டியெரிங்க்ஸ் ஆகியோருடன் இணைந்து, தார் உருவாக்கிய கறுப்பு-வெள்ளை உலகம் மிகவும் துல்லியமானது. ஒவ்வொரு நிழலும், ஒவ்வொரு ஒளிக்கீற்றும் கவனமாக வடிவமைக்கப்பட்டவை. இந்த காட்சி அமைப்பு ரெம்ப்ராண்ட்டின் ஓவியங்களை நினைவூட்டுகிறது . அதாவது இருளில் இருந்து வெளிப்படும் முகங்கள், ஒளி மற்றும் இருளின் நாடகம்.

அவரது நீண்டகால ஒளிப்பதிவாளர்களான கபாஸ் பால் மற்றும் பிரெட் டியெரிங்க்ஸ் ஆகியோருடன் இணைந்து தார் உருவாக்கிய கறுப்பு-வெள்ளை உலகம், உலக சினிமாவின் ஆகச்சிறந்த காட்சிக்கள் . நிறங்களைத் துறப்பதன் மூலம், அவர் வாழ்வின் சாரத்தை மட்டும் எஞ்சவைக்கிறார். அவரது காட்சி அமைப்பு  மறுமலர்ச்சிக் கால ஓவிய மேதையான ரெம்ப்ராண்ட்டின் சியாரோஸ்குரோ பாணியை நினைவூட்டுகிறது. இருளில் இருந்து மெல்லத் தெரியும் ஒரு முதியவரின் முகச் சுருக்கங்கள், ஒற்றை மெழுகுவர்த்தி ஒளியில் ஒளிரும் கண்கள் என ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான இடைவிடாத நாடகத்தை அவர் திரையில் நிகழ்த்துகிறார். ஒளியின் ஒவ்வொரு கீற்றும் இருளை விரட்டப் பயன்படாமல், அந்த இருளின் அடர்த்தியை மேலும் ஆழப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய துல்லியமான காட்சித் திட்டமிடல், ஒரு சாதாரண வீட்டை அல்லது பாழடைந்த கட்டிடத்தைக் கூட ஒரு தத்துவப் படிமமாக உயர்த்தி விடுகிறது.

தாரின் படங்களில் வரும் நடிகர்கள் பெரும்பாலும் தொழில் முறை நடிகர்கள் அல்ல, அது அவரது படங்களுக்கு ஒரு ஆவணப்பட தன்மையை அளிக்கிறது. அவர்களின் முகங்கள் வாழ்வின் அடையாளங்களைத் தாங்கியவை, அவர்களின் அசைவுகள் இயற்கையானவை. ஹாலிவுட் பாணி நடிப்புக்கு மாறாக, இவர்கள் வெறும் இருப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் எதையும் நடிப்பதில்லை, மாறாக அவர்கள் தாங்களாகவே இருக்கிறார்கள். எதார்த்த நடிகர்கள் மூலம் படத்தின் உணர்வுகளுக்கு மேலும் எடை சேர்க்கிறது.

தாரின் கலையின் மற்றொரு முக்கிய அம்சம், இடத்தின் பயன்பாடு. அவரது படங்களில் வரும் இடங்கள் வெறும் பின்னணிகளா அல்லாது , அவை கதையின் முக்கிய பாத்திரங்களாக இருக்கின்றன. பாழடைந்த கிராமங்கள், காலியான தெருக்கள், பழுதடைந்த கட்டடங்கள் இவை அனைத்தும் மனித இருத்தலின் நிலையை பிரதிபலிக்கின்றன. இந்த இடங்கள் உயிரற்றவை அல்ல, அவை தங்கள் சொந்த வாழ்க்கை வரலாற்றைக் கொண்டவை. சுவர்களின் விரிசல்கள், களைகள் முளைக்கும் கற்களின் இடுக்குகள், பூச்சு உரிந்த கதவுகள் அனைத்தும் காலத்தில் கடந்து செல்வதையும், அழிவின் தவிர்க்க முடியாத தன்மையையும் காட்டுகின்றன.

தாரின் வாழ்க்கையில், அவர் வெறும் ஏழு நீளப் படங்களை மட்டுமே இயக்கினார். ஆனால் இந்த ஏழு படங்களும் உலக சினிமாவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தரத்திற்காக அளவை தியாகம் செய்த ஒரு கலைஞன் அவர். ஒவ்வொரு படமும் பல ஆண்டுகள் திட்டமிடலுக்கும், படப்பிடிப்புக்கும், படத்தொகுப்புக்கும் எடுத்துக் கொண்டது. அவர் எந்த சமரசமும் செய்ய மறுத்தார், தனது கலைத் தரிசனத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்த அணுகுமுறை இன்றைய வேகமான திரைப்படத் தொழிலில் கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

2011-ல் வெளியான தி டுரின் ஹார்ஸுக்குப் பிறகு, தார் ஓய்வு பெற்றதாக அறிவித்தார். சினிமா என்னும் ஊடகத்தில் தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டதாக அவர் உணர்ந்தார்.  அவர் விட்டுச்சென்ற படைப்புகள் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கும். அவரது திரைப்படங்கள்  கேள்விகளை எழுப்பலாம், அசௌகரியத்தை உருவாக்கலாம், நம்மை நாமே எதிர்கொள்ள வைக்கலாம். இதுவே உண்மையான கலையின் பணி. தாரின் திரைமொழி எளிதானது அல்ல, ஆனால் அதை அனுபவிக்க முற்படுபவர்களுக்கு அது ஒரு தனித்துவமான வெகுமதியை அளிக்கிறது. அவரது படங்கள் நம்மை மாற்றுகின்றன, நம் பார்வையை விரிவுபடுத்துகின்றன, வாழ்வைப் பற்றிய நமது புரிதலை ஆழமாக்குகின்றன. சில சமயங்களில் த்துவ ஆய்வாகவும், உணர்ச்சி பயணமாகவும் இருக்கின்றன. தாரின் மரபு என்பது அவரது படங்களில் மட்டுமல்ல, சினிமா என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றிய  புரிதலிலும் பதிந்துள்ளது.  சினிமா என்பது உலகளாவிய மொழி, அது வார்த்தைகளைக் கடந்து செல்லக்கூடியது, கலாச்சாரங்களை இணைக்கக்கூடியது, மனித இருத்தலின் ஆழங்களை ஆராயக்கூடியது என்பதை உணர்த்தியவர். அவருக்கு அஞ்சலி.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.