1975 டோக்கியோ நகரம். சோனி நிறுவனத்தின் ஆய்வகம். பெய்து கொண்டிருந்த மழை சன்னல் கண்ணாடிகளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. பிரகாசமான விளக்கொளி ஆய்வகத்தை நிறைந்திருந்தது. அங்கே நின்றுகொண்டிருந்த பொறியாளர்கள் குழு, சுவற்றின் எதிரே பார்த்தபடி அசைவற்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். சுவற்றில் முன் மேஜை மீது இருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் அவர்களது உருவம் கருப்பு வெள்ளையில் எதிரொளித்தது. அந்தத் தொலைக்காட்சியின் அருகில் வைக்கப்பட்டு இருந்தது அந்தப் பெட்டி. பளபளக்கும் உலோகப் பெட்டி. அந்தக் குழுவின் ஐந்து வருட உழைப்பும், தோல்வியில் முடிந்த எண்ணற்ற முயற்சிகளும் உருவாக்கி இருந்த அந்தப் பெட்டி, சோனி பொறியாளர்களின் கனவு.
தலைமைப் பொறியாளர் தனது கண்ணாடியைச் சரி செய்து கொண்டு தன் அருகில் இருந்தவர்களைப் பார்த்தார். அவர் கண்களின் கூரிய பார்வையில் அவரது அனுபவம் தெரிந்தது. ஹிரோஷி அந்தப் பெட்டியின் சிவப்புப் புள்ளி வைக்கப் பட்டிருந்த ரெகார்ட் பட்டனை அழுத்தினார்.
அந்தப் பெட்டி விர் விர்ரென்று சுழன்றது. அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது ஒரு புள்ளியை ஒத்த சிவப்பு விளக்கு. அது அந்தப் பெட்டி வேலை செய்துகொண்டு இருப்பத்தைக் காட்டியது. தொலைக்கட்சித் திரையில் வழக்கமான அந்த ஜப்பானிய செய்தி வாசிப்பாளர் அன்றய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார். வழக்கமாக செய்திகள் முடிவடைந்தவுடன் காற்றோடு கலந்துவிடும் அந்தக் காட்சிகளை, அந்தப் பெட்டி மின்காந்த டேப் ஒன்றில் பதிவு செய்து கொண்டிருந்தது. நிரந்தரமான பதிவு. மீண்டும் மீண்டும் திரையில் காணக்கூடிய பதிவு.
வரலாற்றில் முதல் முறையாக அங்கு ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டது.
தலைமைப் பொறியாளர் சிரித்தவாறு தலையாட்டினார். டேப் சுழன்று கொண்டிருந்தது. “நாம் சாதித்து விட்டோம்” என்றார் மென்மையான குரலில். பீடமாக்ஸ் (Betamax ) என்று பெயரிடப்பட்ட அந்த VCR பெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துகொண்டு, அதனை மீண்டும் ஒளிபரப்பும். அன்றைய நாளில் அது ஒரு சாதனை.
பீடமாக்ஸ் வெறும் கருவி அல்ல. அது மக்களின் ஒய்வு நேரத்திற்கும், தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பிற்குமான பாலம். மாலைச் செய்திகளை இரவு உணவின்போது பார்க்கலாம். நள்ளிரவுத் திரைப்படங்களை வார இறுதிக்கென்று ஒதுக்கி வைக்கலாம்.
அந்த அறையில் இருந்த சோனி நிறுவன பொறியாளர்கள் சிந்தனையும் பேச்சும் பீடமாக்ஸ் உருவாகக் கூடிய புதிய சாத்தியங்களைக் குறித்தே இருந்தது.
அப்போது அமெரிக்காவில் அந்தப் பெட்டி உருவாக்க இருக்கும் புதிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை.
பின் வரும் நாட்களில் ஹாலிவுடுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையப் போகிறோம் என்பது தெரியாமல் அந்த பீடமாக்ஸ் VCR ன் சிவப்பு விளக்கு மின்னிக் கொண்டிருந்தது.
VCR வீடியோ ரெக்கார்டிங்
1970 ன் இறுதிப் பகுதி. அமெரிக்காவின் இல்லங்களில் ஒரு புதிய மாற்றம் நடந்து கொண்டிருந்தது. பல ஆண்டுகளாக இல்லங்களின் பொழுதுபோக்கை அட்டவணை போட்டு ஆட்சி செய்து வந்தது தொலைக்காட்சி. அப்போது அதன் கால அட்டவணையின் பிடி சற்றுத் தளர்ந்தது. அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் அருகில் இருந்த VCR பெட்டிகள் மாலை விளக்கொளியில் மினுமினுத்தபடி, சுழன்று கொண்டிருந்தன. அந்தப் பெட்டிகள் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போக்கில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது.
1978 ன் ஒருநாள் மாலை நேரம். அமெரிக்காவின் ஒஹயோ (Ohio ) வில் அந்தக் குடும்பம் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் கூடியிருந்தனர். குடும்பத் தலைவி அவசர அவசரமாக வாக்யூம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்திருந்த சிவப்பு நிறக் கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது. குடும்பத் தலைவன் தனது கழுத்துப் பட்டையை தளர்த்தியவாறு முழங்காலிட்டு அமர்ந்து, அந்த VCR ன் கையேட்டை மேஜை விளக்கொளியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் முன் அந்த புத்தம் புதிய ஜப்பானியக் கருவி பெட்டியில் இருந்து பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. புத்தம் புது பிளாஸ்டிகின் மணம் அறையின் காற்றில் நிரம்பி இருந்தது.
“சரி. ஆரம்பிக்கலாம்” என்று தனக்குள் முணுமுணுத்த குடும்பத் தலைவன், VCR ன் ரெகார்ட் பட்டனை நோக்கித் தன் விரலை நீட்டினான். அவனது பாவனை ஒரு சிம்பொனி இசைக்குழுவை நடத்தப்போகும் இசைக்கலைஞனைப் போன்று இருந்தது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சோபா வின் மீது ஏறிக் குதித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் புதிய VCR பட்டனை அழுத்தியதும் தனது சிவப்பு விளக்கைச் சிமிட்டியபடி தொலைக்காட்சி நிகழ்ச்சியை பதிவு செய்யத் தொடங்கியது. வழக்கமாகக் காணும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்று அந்தக் குடும்பத்திற்கு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. இன்று அந்த நிகழ்ச்சி காற்றில் கரைந்து போகப் போவதில்லை. அது டேப் வில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அன்று இரவு உணவிற்குப் பின் இந்த நிகழ்ச்சியை மீண்டும் கண்டு ரசிக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவர்களுக்கு ஒரு மனக் கிளர்ச்சியை உண்டாக்கியது.
“கொஞ்சம் பின்னோக்கிப் போ” என்றாள் அவள். ஒரு முக்கியமான வசனத்தை கவனிக்கத் தவறி இருந்தாள். இரவு அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது. தவற விட்ட காட்சிகளை ரீவைண்ட் செய்து பார்ப்பதும், பிடித்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பதும் அவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. அந்த வீடு அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரையரங்கு ஒன்று போல ஆகி இருந்தது.
அமைதியான அந்த இரவு நேரத்தில் நீண்ட தெருமுனை வரை அவர்களின் வீட்டிலிருந்து வெளிப்பட்ட சிரிப்பொலி எதிரொலித்தது.
VCR மக்களுக்குக் கொடுத்த புதிய சக்தி புரட்சிகரமானது. அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்வதில் இருந்து விடுபட்டனர். சோனியின் பீடமாக்ஸ் க்குப் போட்டியாக JVC (Japan Victor Company ) நிறுவனத்தின் VHS (Video Home System ) பெட்டிகள் சந்தையில் அதிகரித்தன.
வீடுகளின் அலமாரிகளில் புத்தகங்கள் போன்று வீடியோ டேப் காசட்டுகள் இடம்பெறத் தொடங்கின. ஒவ்வொரு கேசட்டில் எந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது என்று பேனாவால் எழுதப்பட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டன.
VCR : ஹாலிவுட்டின் பார்வை
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வந்த ஹாலிவுட் அலுவலகங்களில் VCR மீது தொடக்க காலங்களில் இருந்த பார்வை மாறத்தொடங்கி இருந்தது. ஹாலிவுட் ஸ்டூடியோ நிர்வாக அதிகாரிகள், வீட்டிலேயே ரெக்கார்டிங் செய்யும் வசதியைக் கொடுக்கும் VCR கருவிகள் பெருமளவு சந்தைக்கு வந்து விற்பனை ஆகிவந்ததைப் பதட்டத்துடன் கவனித்து வந்தனர். இந்த VCR கருவிகள் ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு திரைப்படத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளும் வசதியைக் கொடுத்தன. ஹாலிவுட் கவனத்துடன் கட்டி எழுப்பி இருந்த வியாபாராக் கோட்டையில் ரிலீஸ் தேதிகளும், அந்தத் தேதிகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் முக்கியமானவை. இந்த முக்கியத்துவம் VCR ஆல் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது..
ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் “பைரஸி” என்ற சொல் பரவத் தொடங்கியது. ஒருவேளை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்பவர்கள் அவற்றை வேறு நேரத்தில் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், நிரந்தரமாகப் பதிவு செய்து வைத்தால்? தொலைக்காட்சிகளை நாடாமல் பதிவு செய்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தால்? அவர்கள் அந்த டேப் களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால்? இந்தக் கேள்விகள் ஹாலிவுட் ஸ்டுடியோக்களைச் சுற்றி வந்தன. அவர்களைப் பொறுத்தவரை VCR ஹாலிவுட்டின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்ட ஆயுதம். அப்படித்தான் கருதினார்கள்.
முதல் முறையாக, ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் யாருடைய உடைமை என்ற கேள்வி எழுந்தது. நிகழ்ச்சிகளைத் தயாரித்தவர்களுடையதா? ஒளிபரப்பிய தொலைக்காட்சியுடையதா? அல்லது அவற்றைப் VCR கொண்டு பதிவு செய்து வைத்திருக்கும் மக்களுடையதா? தொடர்ந்து மக்கள் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டுவந்தனர். ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் போராட்டத் தயாராகின.
யூனிவேர்சல் ஸ்டுடியோவின் கட்டிடத்தின் ஜன்னல் வழியே லாஸ் ஏஞ்செலஸ் நகரின் காட்சி கண்களைக் கவரும் வகையில் இருந்தது. ஆனால் யூனிவர்சல் ஸ்டுடியோவின் தலைமை அதிகாரி சிட்னி ஷெய்ன்பர்க் (Sidney Sheinberg) அந்தக் காட்சிகளை ரசிக்கும் மன நிலையில் இருக்கவில்லை. அவரது பார்வை அந்த அறையின் மையத்தில் இருந்த நீண்ட மர மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய VCR பீடமாக்ஸ் (Betamax ) மீது இருந்தது.
“மீண்டும் ஒரு முறை ஓட விடு” என்றார் தனது உதவியாளரிடம். டேப் ஒடத் தொடங்கியது. அவர்கள் தயாரிப்பின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான, கடந்த ஞாயிறு அன்று இரவு ஒளிபரப்பப் பட்ட, ஸ்பீல்பெர்கின் ஜாஸ் திரைப்படம் திரையில் ஒடத் தொடங்கியது. திரையில் தெரிந்த படம் மிகத் துல்லியமானது என்று சொல்ல முடியாவிட்டாலும், தெளிவாகவே இருந்தது.
ஷெய்ன்பர்க் தனது வெள்ளிக் கம்பிகள் போன்றிருந்த முடியைக் கைகளால் கோதினார். ஜன்னல் வழியே வந்த பிற்பகல் வெயில் அறையின் கார்பெட் மீது நீண்ட கோடுகளை வரைந்திருந்தது. அவரது மேஜை மீது அறிக்கைகள் அடுக்கப்பட்டு இருந்தன. VCR விற்பனை அறிக்கை, சந்தையின் எதிர்காலம் பற்றிய கணக்குகள், நுகர்வோர் நடவடிக்கைகள் என்று ஒவ்வொரு அறிக்கையும் ஒரே கருத்தையே சொல்லின. அது ஷெய்ன்பர்கிற்கு உவப்பான கருத்தாக இல்லை.
“நான் ஜாக் வெலன்டி (Jack Valenti ) ஐச் சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மென்மையான குரலில்.
நகரின் மறுபுறம் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க MPAA (Motion Picture Association of America) அலுவலகத்தில் தலைவர் ஜாக் வெலன்டி ஏறகனவே தன்னளவில் தீவிரமான போராட்டத்தில் இருந்தார். ஹாலிவுட்டின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நடிகர்களின் கையெழுத்திட்ட புகைப்படங்கள், திரைப்படப் போஸ்டர்கள், ஆஸ்கர் சிலைகள் ஆகியவை வெலன்டியின் அலுவலக அறையை அலங்கரித்திருந்தன. ஆனால் அன்று அவை அனைத்தும் பழம் பெருமை ஆகிவிட்டது போல் தோன்றியது அவருக்கு.
“நண்பர்களே !” வெலன்டி அந்த அலுவலகத்தில் கூட்டம் நடக்கும் அறையில் கூடி இருந்தவர்களைப் பார்த்து, மேஜையில் இருந்த பீடமாக்ஸ் VCR ஐ சுட்டிக் சுட்டிக் காட்டியபடி, “இங்கு நாம் பார்ப்பது வெறும் புதிய தொழில்நுட்பம் மட்டுமல்ல. இது ஒரு பிரதி எடுக்கும் பைரஸி மெஷின்” என்றார்.
வெலன்டியின் ‘பைரஸி’ என்ற அந்த ஒற்றைச் சொல் அந்த அறையில் இருந்தவர்களின் மனதில் கனமாக இறங்கியது. அதுவரை அந்தச் சொல் திரைமறைவில் பைரஸி தொழில் செய்யப்படுவதைக் குறித்தது. இப்போது சூழல் முற்றிலும் மாறியிருந்தது. அமெரிக்காவின் வீடுகளில் இருந்தவாறு யார் ஒருவரும் எளிதாக அதனைச் செய்துவிடலாம்.
டிஸ்னி அலுவலகத்தில் அன்று மதியம் டிஸ்னி நிர்வாக அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்தது அவர்களது புதிய அனிமேஷன் படம் அல்ல. VCR ல் ரெகார்ட் செய்யப்பட்ட ஒரு டிஸ்னி படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கவலை தோய்ந்த முகங்களுடன். அந்த டேப் மூன்று குடும்பங்களுக்கு இடையே கைமாறி கடைசியில் டிஸ்னி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. ஒவ்வொரு குடும்பமும் பிரதி எடுத்து புதிய காப்பியை உருவாக்கியபோதும் படத்தின் தரம் சற்றுக் குறைந்து குறைந்து வந்திருந்தது.
“திரைப்படங்களைக் காப்பி செய்வது மட்டும் பிரச்சினை இல்லை. விளம்பரங்களை யாரும் பார்க்கவில்லை என்றால் நிகழ்ச்சிகளுக்கு யார் ஸ்பான்சர் செய்வார்கள்!” என்று தன் கவலையை வெளிப்படுத்தினார் ஒரு நிர்வாகி.
வழக்கறிஞர்கள் காப்பிரைட் சட்டங்கள் குறித்துப் பேசினார்கள். கணக்குவழக்குப் பார்ப்பவர்கள் VCR இனால் ஏற்படும் நட்டக் கணக்குக்களைப் பேசினார்கள். பேசிப் பேசி ஓய்ந்த போது, அவர்களுக்கு அந்தப் பயம் உரைத்தது. அமெரிக்க மக்களின் பொழுதுபோக்குப் பழக்கங்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பிடி தளர்ந்துவருவதை உணரும் பயம்.
யூனிவர்சல் ஸ்டுடியோவின் சட்ட நிபுணர்கள் காப்பிரைட் சட்டங்களைப் படித்தார்கள், முந்தய வழக்குகளில் தகவல்களைத் தேடினார்கள், வாதங்களை வடிவமைத்தார்கள். VCR ஹாலிவுட்டிற்கு அச்சுறுத்தல் என்று முடிவானது. ஷெய்ன்பர்க் தனது சட்ட நிபுணர்களிடம் அன்று மாலை பேசினார். “நாம் சோனி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுப்போம். உச்ச நீதிமன்றம் வரை சென்றேனும் இதற்கு முடிவு காட்டுவோம்!”
டிஸ்னி நிறுவனமும் இந்த முடிவுக்கு உடன்பட்டது.
இந்தச் செய்தி ஹாலிவுட் முழுவதும் பரவியது. தயாரிப்பாளர்கள் யூனிவேர்சல் மற்றும் டிஸ்னி அலுவலகங்கள் நோக்கிப் படையெடுத்தனர். அவர்கள் தொடரப்போகும் அந்த வழக்கே ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் அனைவருக்குமாக இந்தக் கடைசி நம்பிக்கை. அவர்கள் வழக்கிற்குத் தயாராகிய அதே நாளில் அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான இல்லங்களில் VCR பெட்டிகள் தங்கள் சிவப்பு விளக்குகள் மின்ன ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றைப் பதிவு செய்து கொண்டு இருந்தன.
பீடமாக்ஸ் வழக்கு
1976 ல், சோனி மீது யூனிவேர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் டிஸ்னி ப்ரொடுக்ஷன்ஸ் தொடுத்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸின் நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு வந்தது.
சோனி நிறுவனத்தின் பீடமாக்ஸ் VCR தங்களது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களை பைரஸி செய்ய உதவுகிறது என்றும், பீடகமாக்ஸ்ஐ தயாரிப்பதையும், விற்பனை செய்வதையும் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது யூனிவர்சல் ஸ்டுடியோஸ் தரப்பு.
பீடமாக்ஸ் VCR காப்பிரைட் சட்டத்திற்கு எதிரானது. அதனால் தங்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம்.
தங்கள் VCR தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு பின்னர் வேண்டியபோது பார்க்கும் வசதியை மக்களுக்குக் கொடுக்கிறது என்றும், அதனைத் தடை செய்வது நுகர்வோர் உரிமைக்கு எதிரானது என்றும் சொன்னது சோனி தரப்பு.
பீடமாக்ஸ் மூலம் ஒளிபரப்பாகும் திரைப்படங்களை பிரதி எடுப்பது நியாயமான பயன்பாடு (fair use ) என்று வாதாடியது.
வழக்கில் நீதிபதி வாரன் பர்குஸன் (Judge Warren Ferguson ) அளித்த தீர்ப்பு மொத்த ஹாலிவுடையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் சோனி நிறுவனத்திற்கு ஆதராவாகத் தீர்ப்பளித்தார். VCR மக்களுக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறதே ஒழிய அது திரைத்துறையை சீர்குலைக்கும் செயலைச் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் ஹாலிவுட் இதனை ஏற்றுக் கொள்ளத் தயாராகி இருக்கவில்லை. 1981 ல் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச் தனது தீர்ப்பை இம்முறை சோனிக்கு எதிராக வழங்கியது. பீடமாக்ஸ்ன் பயன்பாடு நியாயமான பயன்பாட்டின் (fair use ) வரையறைக்குள் அடங்காது என்றும், உண்மையில் அது காப்பிரைட் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தனது தீர்ப்பில் கூறியது.
இந்த வழக்கின் க்ளைமாக்ஸ் காட்சி 1983 ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறியது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வைத்த ஒற்றைக் கேள்வி இதுவே. “மக்கள் தங்கள் விருப்பம் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கும் VCR ஐத் தடை செய்ய வேண்டுமா?” கேட்பதற்கு எளியதாகத் தோன்றும் இந்தக் கேள்வி, தொழில்நுட்பம், படைப்புரிமை மற்றும் சட்டவரையறை என்ற பல சிக்கல்களைக் கொண்டிருந்தது.
1984 ஜனவரி 17 ம் தேதி, உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் குழுவில் இருந்த ஐந்து நீதிபதிகளில் நான்கு நீதிபதிகள் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். VCR தவறாகப் பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருப்பதாலேயே அதனைத் தடை செய்ய இயலாது என்றும், VCR பயன்பாடு காப்பிரைட் சட்ட விதிகளுக்கு முரணானது அல்ல என்றும் தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.
இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியமான விஷயத்தை உறுதி செய்தது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் வெளிவரும்போது புதிய பிரச்சினைகளை உருவாக்கும். தொழில்துறையோ, மக்களின் வாழ்க்கை முறையோ ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பத்தின் பலனை அறுவடை செய்யக் கற்றுக்கொள்ளும். இத்தகைய புதிய தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பது சட்டத்தின் கடமை. VCR விதிவிலக்கு அல்ல. எந்த ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் VCR ஐ அச்சுறுத்தல் என்று கருதினவோ, அதே ஸ்டுடியோக்கள் வீடியோ கேசட்டுகள் மூலம் வருவாய் ஈட்டத் தொடங்கின பின்னாட்களில்.
VCR : ஹாலிவுட்டின் புதிய நட்பு
1985 ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ். பீடமாக்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. தன் கைகளில் இருந்த அறிக்கைகளைப் படித்துக் கொண்டிருந்தார் அந்த ஹாலிவுட் ஸ்டுடியோவின் நிர்வாகி. அந்த அறிக்கைகள் அவருக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தின. பெருமளவு VCR கருவிகளை வாங்கிக் குவித்த அமெரிக்கர்கள், அதில் கண்டு களிக்கப் புதிய புதிய நிகழ்ச்சிகளைத் தேடிச் செல்கிறார்கள் என்ற உண்மையை அறிக்கைகள் வெளிப்படுத்தின. நாடெங்கும் வீடியோ கேசட்டுகளை வாடைக்குக் கொடுக்கும் புதிய தொழில் முளைக்க ஆரம்பித்து இருந்தது.
ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் எந்த VCR ஐத் தடை செய்வதற்கு பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்தனவோ, அதே VCR ஐத் தங்களது புதிய தொழில் ஒன்றினை சாதகமாகும் கருவியாகப் பார்க்கத் தொடங்கினர். முன்னாள் பகை இப்போது ஒரு நட்பு சக்தியாகத் தோற்றமளிக்கத் தொடங்கி இருந்தது.
அன்று யூனிவேர்சல் ஸ்டுடியோ கட்டிடத்தில் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு பேசப்பட்ட கருத்துக்கள் பதினெட்டே மாதங்களில் தலைகீழாக மாறியிருந்தன. பைரஸி குறித்துப் பேசப்பட்ட அதே அறைகளில் வீடியோ கேசட்டுகள் விற்பனை, வாடகை போன்றவை பேசப்பட்டன.
ஹாலிவுட் ஸ்டூடியோக்களுக்கு ஒரு புதிய தொழில் வாய்ப்பு உருவானது. ஒரு திரைப்படம் தியேட்டர்களில் ஓடி முடிந்தவுடன், அவை வீடியோ கேஸட்டுகளாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். அந்த கேசட்டுகளை விலை கொடுத்து வாங்கும் வீடியோ வாடகை நிலையங்கள் (Video rental services ) அந்த கேசட்டுகளை மக்களுக்கு வாடகைக்குக் கொடுக்கும். ஒவ்வொரு கேசட்டும் பலமுறை வாடகைக்கு விடப்படலாம்.
தியேட்டர்களில் ஓடித் தீர்ந்த படங்களுக்கு வீடியோ கேசட்டுகள் இரண்டாம் வாய்ப்பைக் கொடுத்தன. தியேட்டர்களில் சரியாக வசூல் கொடுக்காத சில திரைப்படங்கள் கூட கேசட்டுகள் மூலம் வருவாய் கொடுக்கலாம். சில நேரங்களில் இந்த கேசட்டுகள் சில திரைப்படங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுக்கும். ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் தங்கள் புதிய வருவாயைக் கணக்கிடத் தொடங்கின.
ஒருநாள் கூட்டத்தில் ஒரு நிர்வாகி ஒரு புதிய யோசனையை முன்வைத்தார் “நாம் ஏன் வீடியோ கேஸட்டுகளுக்கென்றே புதிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்கக் கூடாது?”
இப்படித்தான் Direct-to -video என்று அழைக்கப்பட்ட ஹோம் வீடியோ திரைப்படங்கள் தோன்றின. தியேட்டர் ரிலீஸ், விளம்பரம் போன்ற செலவுகள் கிடையாது. தியேட்டர்களுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. வார இறுதி கலெக்ஷன் பற்றிய கவலைகள் இல்லை. திரைப்படம் தயாரிக்கப்பட்டு, வீடியோ கேஸட்டுகளாக வெளியிடப்பட்டு நேரடியாக மக்களின் இல்லங்களை அடைந்தன.
VCR ஐத் தடை செய்யக் கோரி பீடமாக்ஸ் வழக்கை நடத்திய அதே டிஸ்னி நிறுவனம் இந்த ஹோம் வீடியோ தொழிலில் முன்னணி வகித்தது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று. தங்களது கார்ட்டூன் திரைப்படங்களை ஹோம் வீடியோவிற்கென்றே தொடர்களாக (series ) வெளியிட்டது டிஸ்னி. 1992 ல் வெளிவந்த தங்களது Aladdin என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, 1994 ல் “Aladdin : The Return of Jafar “ என்ற கார்ட்டூன் தொடரை ஹோம் வீடியோவிற்கென்றே தயாரித்து வெளியிட்டது டிஸ்னி. இந்த ஹோம் வீடியோ தொடர் வீடியோ கேசட்கள் லட்சக் கணக்கான பிரதிகள் விற்பனையானது.
தியேட்டர் ரிலீஸ் செய்ய முடியாத சிறு தயாரிப்பாளர்கள் பலரும் ஹோம் வீடியோவில் திரைப்படங்களை வெளியிட ஆர்வம் காட்டினர். திகில், சாகசம், குடும்பக் கதைகள் என்று பலவிதமான (Genre) திரைப்படங்கள் ஹோம் வீடியோக்களாக வெளிவந்தன. ஒரு புதிய மத்தியத் தட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் வர்க்கம் உருவாகி இருந்தது.
1980 ல், உலகெங்கும் இருந்த நாடுகளின் புதிய பொழுதுபோக்குக் கலாச்சாரத்தில், வீடியோ கடைகள் முக்கியமான இடத்தைப் பிடித்தன. வெள்ளிக்கிழமை இரவுகளில் குடும்பங்கள் மற்றும் திரைப்படப் பிரியர்கள் வீடியோ கடைகளில் குவிந்தனர். இந்த மக்கள் அங்கிருக்கும் கேஸட்டுகளில் எழுதி இருக்கும் திரைப்படப் பெயர்களைப் படித்துப் பார்த்து, அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும், அது குறித்து அருகில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் ஆலோசனை செய்வதும், வீடியோ வாடகை நிலையங்களில் காணக்கூடிய வழக்கமான காட்சி ஆனது.
ஹாலிவுட்டை பொறுத்தவரை, ஒரு காலத்தில் தங்கள் லாபத்தை விழுங்கும் பூதம் போன்று தோன்றிய VCR இப்போது பொன் முட்டையிடும் வாத்தாக மாறியிருந்தது.

1997 ல் DVD திரைப்படங்களை வாடகைக்குக் கொடுக்கும் தொழிலை ஆரம்பித்தது Netflix. இணையத்தின் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டிற்கு தபாலில் வந்து சேரும் DVD. படத்தைப் பார்த்து முடித்தபின் கட்டணமின்றித் திருப்பி அனுப்பிவிடலாம்.
இன்டர்நெட் ஸ்ட்ரீமிங் தொழில்நுட்பம் பரவத் தொடங்கியபோது, ஹாலிவுட், VCR ல் கற்றுக்கொண்ட பாடத்தை நெட்டபிலிக்ஸ் நினைவில் வைத்திருந்தது என்றே தோன்றுகிறது. நெட்ப்ளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தொழில்நுட்பத்தை எதிர்க்கவில்லை, ஏற்றுக்கொண்டு வளர்ந்தது. இன்று முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக விளங்குகிறது. (எப்படியோ தலைப்பிற்கு வந்து விட்டோம்.)
இன்று நம்மில் பலரும் AI தொழில்நுட்பம் குறித்த பயம் கலந்த ஆச்சிரியத்தையும், சிலர் பெரும் கவலையையும் வெளிப்படுத்துவத்தைக் காண்கிறோம். இது, தொழில்நுட்ப சாத்தியங்களை வரலாற்றின் பார்வையில் இருந்து புரிந்து கொள்ளாமல் இருப்பதனால் வரும் பயம் என்றே தோன்றுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

அழகான நடையில் எழுதியுள்ளார். மிக சுவராசியமாக இருந்தது. தொழில் நுட்பம் தவிர்க்க இயலாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் ….