காகமும் அழகு

This entry is part 6 of 9 in the series ஹைக்கூ

ஒதுக்கப்படும் காகம்
பனி போர்த்திய நிலத்தில்
காலை அழகு

கவிஞர்: மட்சுவோ பாஷோ (1644-1694)

ஹிகோரோனிகுகி
கராசுமோயுகினொ
அஷிதாகன

ひごろ にくき
烏も 雪の
朝哉

இது முரணையும் இயற்கையையும் இணைத்துப் பேசும் ஹைக்கூ. 

தேவைக்கு அழைப்பது, தேவையில்லையெனில் விரட்டுவது என இரண்டு அணுகுமுறைகளை மட்டுமே காகத்துக்கு மனிதர்கள் வைத்திருக்கின்றனர். ஒப்பீட்டளவில் மயிலும், குயிலும், கிளியும் கவிதைகளில் இடம்பெற்ற அளவுக்குக் காகம் இடம்பெற்றதில்லை. நம்முடைய மத நம்பிக்கையின் அடிப்படையில் காகத்தை முன்னோர்களாகக் கொள்வதும், விருந்தினர் வருகையைக் காகம் அறிவிப்பதாகச் சொல்வதும் நமது கலாசாரத்தில் இருப்பினும், காகத்தைக் கொண்டாடுவதோ அழகைப் பாடுவதற்குக் காகத்தைக் கவிதையில் சொல்வதோ வழக்கமாக இல்லை. பாஷோவும் காகத்தை இந்த ஹைக்கூவில் இப்படித்தான் சொல்கிறார். ‘பொதுவாக விரும்பப்படாத’ – முதல் அடியில் காகத்தை அறிமுகப்படுத்துகிறார். 

சித்திரம் வர்த்தமான்

வீதிகளில், கூரைகளில், நிலத்தில் வெண்பனி போர்த்தப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு எட்டியவரையில் எங்கும் வெண்மை தெரியும் அந்தப் பனிக்காலத்தின் காலையில், அந்த வெள்ளைப் பரப்பின் மேல் கருமை நிறக்காகம் அமர்ந்திருப்பது பாஷோவுக்கு அழகாகத் தோன்றுகிறது. காகம் வெள்ளை நிறப் பின்னணியில் அமர்ந்திருக்கையில் கருப்பு வெள்ளை நிறபேதம் காட்சியழகைக் கூட்டுகிறது. பொதுவாக விரும்பப்படாத காகமும், அந்தக் காலையில் காட்சியழகுக்காக விரும்பப்படுகிறது.

விரும்பப்படாத காகம், காட்சியழகால் விரும்பத்தக்கதாகக் கவிதையில் இடம்பெறுகிறது. 

முதல் அடியில் இடம் பெரும் வார்த்தைகள் இரண்டு, ஹிகோரோ + நிகுகி. ஹிகோரோ – பொதுவாக, நிகுகி – வெறுக்கப்படும், ஒதுக்கப்படும். ஹி – ひ, கோ(go) – ご, ரோ – ろ ஹிகோரோ. நி – に,  கு -く, கி – き நிகுகி. இவை அனைத்தும் ஹிராகனா வரிவடிவில் உள்ள எழுத்துகள். அசை என்னும் ஜப்பானிய எழுத்தெண்ணிக்கை முதலடியில் ஆறாக இருக்கிறது. ஹைக்கூ இலக்கணப்படி ஐந்து அசைகள் மட்டுமே வரவேண்டும். இங்கு நிகுயி – ஒதுக்கப்படும், வெறுக்கப்படும் என்னும் பொருள்தரக்கூடிய சொல் நிகுகி என ஜப்பானியச் சொல்லிணக்கத்தில் இணைந்துக் கடைசியில் ஒலிக்கும் ‘கி’ வார்த்தையில் ஒலித்தாலும் அசையெண்ணிக்கையில் கணக்கிடப்படுவதில்லை. இதை ரென்தாய், ரெ – れ, ன் – ん, தா – た, யி – い, இணைப்பு, சேர்ப்பு என ஜப்பானிய இலக்கணம் சொல்கிறது. 

அதனால், ஹிகோரோ – பொதுவாக, நிகுகி – வெறுக்கப்படும், ஒதுக்கப்படும் என்னும் இரண்டு வார்த்தைகள் சேர்ந்து ஹிகோரோநிகுகி என ஆறு ஜப்பானிய அசைகள் அல்லது எழுத்தெண்ணிக்கையாக ஒலித்தாலும், எண்ணிக்கையில் ‘கி’ கணக்கிடப்படுவதில்லை. ‘நிகுகி’யில் அந்த ‘கி’யை விலக்கிவிட்டு நிகு என ஒலிப்பை நிறுத்த இயலாது. ஏனென்றால் ‘நிகு’ எனும் சொல் இறைச்சியைக் குறிக்கும். காஞ்சி வரிவடிவில் நிகுயி 憎い. இதைப் பிரித்து ஹிராகனா வரிவடிவில் எழுதினால் (憎) நி – に கு -く , யி – い என விரிவடையும். இறைச்சியைக் குறிக்கும் ‘நிகு’ காஞ்சி வடிவில் 肉 , நி – に கு -くமட்டும்.  

முதல் அடி – ஹிரோகோ நிகுகி – பொதுவாக ஒதுக்கப்படும்.

இரண்டாவது அடியில் கவிதையின் கருப்பொருளான காகம் குறிப்பிடப்படுகிறது. காகமும் என ஜப்பானிய மொழியின் உம்மைத் தொகை சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது. காஞ்சி வரிவடிவில் கராசு 烏, ஹிராகனாவில் பிரிக்கையில் க – か, ரா – ら, சு – す, கராசு – காகம். இதனுடன் மோ- も உம்மைத்தொகை சேர்ந்து கராசுமோ – காகமும் எனப் பொருள் கொள்கிறது.

கவனிக்க:

ஜப்பானிய மொழி ஒலிப்பின்படி ஒவ்வொரு ஹிராகனா எழுத்தும் நெடில். கராசு என ஒலித்தாலும், அது காராசூ. அதனால், ஜப்பானிய மொழி இங்கு தமிழில் எழுதப்படுகையில் அசையெண்ணிக்கையில் தமிழின் நிரையசையை எப்போதும் கொள்ளற்க. ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு ஹிராகனா எழுத்தும் ஓர் அசை.  

காகமும் பனியில், பனி அல்லது பனிப்பொழிவு காஞ்சி வரிவடிவில் 雪, ஹிராகனாவில் எழுதுகையில் யு – ゆ, கி – き, யுகி. இதனுடன் னொ – の, இல், யுகினொ ゆきの பனியில் எனப் பொருள்படும்.

இரண்டாவது அடி – கராசுமொ யுகினொ – காகமும் பனியில்.

மூன்றாவது அடி காலைப்பொழுதைச் சொல்கிறது, அஷிதாகன. 朝 இந்தக் காஞ்சி வடிவம் காலையைக் குறிக்கிறது. இது அச あさ என இரண்டு அசைகளிலும் காலையைக் குறிக்கும்.  அ – あ, ஷி – し, தா – た என மூன்ரு அசைகளிலும் காலையைக் குறிக்கும். இவ்விரண்டில் அஷிதா என்னும் பயன்பாடு கவித்துவமாகக் கொள்ளப்படும். தனியாக அச あさ காலை. காலைக் கதிரவனை அசாஹி என்பர்.  அ – あ, ச – さ, ஹி – ひ, அசாஹி – あさひ – 朝日- காலைக் கதிரவன்.

கன – 哉 – க – か, ன – な, வியப்பது. அட, ஆஹா போன்ற சொற்கள் ‘கன’  哉. 

வார்த்தைக்கு வார்த்தை இந்த ஹைக்கூவை மொழிபெயர்த்தால்,

ஹிகோரோனிகுகி
கராசுமோயுகினொ
அஷிதாகன

பொதுவாக ஒதுக்கப்படும்
காகமும் பனியில்
காலையில் ஆஹா!

மொழியாக்கத்தில்

ஒதுக்கப்படும் காகம்
பனி போர்த்திய நிலத்தில்
காலை அழகு

நிறபேதத்தால் கிடைக்கும் காட்சியழகில் ‘கருப்பு’, ‘வெள்ளை’ என நிறங்களைக் குறிப்பிடாமல் விட்டது பாஷோவின் கவித்துவம்.

(தொடரும்)

ஹைக்கூ

புறாவின் அழைப்பு வாளைத் துறந்த சாமுராய்

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.