வட்டமும் மையமும்

வட்டமும் மையமும்

(1)

அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
மையத்தை
நகர்த்துகிறது.

(2)

அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
மையத்தை
மையமில்லாமல் அழிக்கிறது.

(3)

அந்தப் பறவை
வட்டமிட்டு
வட்டத்தை முடிப்பதற்குள்
வட்டமும் மையமும்
குவியும் ஒரு புள்ளியாய்
மோனத்தில்
மிக உயரத்தில்
சலனமின்றி
சிறகுகள் விரித்தபடி
பறக்கிறது


நடை

(1)

நடையில்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு எட்டில்
எழும்
ஒலிக்குப் பின்
நிரம்பும்
அமைதியென்று
தொடரும்
எட்டுகளில் தொடர்வது போல்
தெரிகிறது நடை.
ஆனால்,
அது
ஓர் எட்டை வைத்து
அதை விட்டு விட்டு
அடுத்த எட்டை வைத்து
அதை விட்டு விட்டு-
இப்படி ’விட்டு விடல்களின்’
தொடர்ச்சியென்றும்
தோன்றுகிறது.
கடைசி எட்டு வைத்து
பின் திரும்பிப் பார்க்கும் போது
முதல் எட்டிலிருந்து
கடைசி எட்டு வரை
எடுத்து வைத்த
எத்தனை எட்டுகள்
என்பதை விட
விட்டு விட்ட
எத்தனை ‘விட்டு விடல்கள்’
என்பதில்தான்
நடை நிர்ணயமாகிறதோ?

(2)

ஒரு வட்டப்பாதையில்
ஒரு புள்ளியில் நடை தொடங்கி
ஒரு சுற்றுச் சுற்றி
அதே புள்ளிக்கு
திரும்பும் போது
அது
அடுத்த அதே புள்ளியாய்-
இப்படி அடுத்தடுத்த அதே புள்ளியில்
தொடங்கி முடிய
முடிவில் நான்
கடந்த தூரம்
வானிலிருந்து
ஒரு நட்சத்திரத்திற்கு
தெரியும்
பூமிப் புள்ளியில் நான்
ஒரு கண்டத்திலிருந்து
இன்னொரு கண்டத்திற்கு
மாறி மாறிக் கடந்தாலும்
ஒரு புள்ளிக்குள்ளேயே
கடக்கும் தூரமாய்த்
தெரிவது போல்
தெரியும்
தூரம் போல் தானா?


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.