ஆய்வு சுருக்கம்
பழந்தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பொதுமுனைவுக் கருத்துகளைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை திகழ்கிறது. இதற்குத் தரவாக இருபது மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. “மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களில் பொதுமுனைவுக் கருத்து” எனும் இவ்வாய்வுக் கட்டுரையில் பொதுமுனைவுக் கருத்து குறித்தான விளக்கம் முன் வைக்கப்படுகிறது. பின்னர் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உணர்த்தும் பழந்தமிழ்ச் சமுதாயம் குறித்து அறிகிறோம். மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்கள் மூலம் அறியவரும் பழந்தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பொதுமுனைவுக் கருத்துகள் குறித்து இக்கட்டுரை முழுதும் பரக்கக் காணலாம். மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உணர்த்தும் பழந்தமிழ்ச் சமுதாயம் பொதுமுனைவுக் கருத்துக்கள் மலிந்த சமுதாயம் என்பது இவ்வாய்வின் கருதுகோள் ஆகும். இவ்வாய்வுக் கட்டுரையில் சமூக உளவியல் அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
முன்னுரை
இலக்கியங்கள் அது தோன்றிய சமகால சமுதாயச் சூழலை பிரதிபலிக்கக் கூடியன. இவ்வகையில் பழந்தமிழரின் சமுதாய வாழ்வை அறிந்துகொள்ள நமக்கு பேருதவியாக இருப்பவை சங்க இலக்கியங்கள். பழந்தமிழ்ச் சமுதாயம் பண்பட்ட பழம்வரலாற்றைக் கொண்ட நிலைபெற்ற சமுதாயமாகும். இதையே சங்க இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சங்க இலக்கியங்களின் காலத்தை ஆய்வாளர்கள் கி.மு. 3 முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை என வரையறுத்துள்ளனர். இதில் மாற்றுக் கருத்துக்களும் உள்ளன. சங்க இலக்கியத்தில் உள்ள நூல்கள் அனைத்தும் ஒரே காலத்தில் இயற்றப்பட்டவை அல்ல. இவற்றில் சில நூல்கள் பல புலவர்களால் வெவ்வேறு காலங்களில் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பாகும். புறநானூற்றுப் பாடல்களும் இப்படியொரு தொகுப்பு நூலாகும். இத்தகைய புறநானூற்றில் இடம்பெறும் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் மூலம் அறியவரும் பழந்தமிழ்ச் சமுதாயத்தின் பொதுமுனைவுக் கருத்துகள் (Stereotype) பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
பொதுமுனைவுக் கருத்து (Stereotype)
ஒரு சமுதாயம் என்று உருவாகியதோ அன்றே பொதுமுனைவுக் கருத்துகள் உருவாகத் தொடங்கிவிட்டன எனலாம். பொதுவாக, மக்கள் சமுதாயத்தில் எதையும் இருப்பதை அவ்வாறே உள்வாங்கிக் கொள்வது இல்லை. எதையும் ஒரு வகைப்படுத்தி நோக்கவே விரும்புகின்றனர். இதன் விளைவே பொதுமுனைவுக் கருத்துகள் எனலாம்.
- “முச புடிக்கிற நாயை மூஞ்சைப் பாத்தா தெரியாது?”
- “ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்”
- “வெள்ளிக்கிழமை அதுமா இப்டி தலய விரிச்சிப்புட்டு இருக்க?”
- “ஆம்பள பையனா இருந்துட்டு இப்படி பொம்பள மாரி அழுவுற”
என்பன போன்ற பல விமர்சனங்களை நம் அன்றாட வாழ்வில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஏன் நாமே கூட இதுபோன்ற பல விமர்சனங்களை அடுக்கியிருப்போம். இவை காலங்காலமாக சமுதாயத்தில் நிலவிவருவதே. கல்வி அறிவின் காரணமாக தற்போது ஏற்பட்ட சமுதாய முன்னேற்றத்தினால் இதுபோன்ற சில விமர்சனங்கள் வழக்கில் இருந்து குறைந்துள்ளன. ஆனால் முற்றிலுமாக இல்லாமல் போய்விடவில்லை. கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் நடந்த மாற்றமே இவ்வாறெனில், சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய விமர்சனங்கள் எவ்வாறு இருந்திருக்கும் மாற்றம் அடைந்திருக்கும் என்பதை இருந்தவாறே கூறுவது கடினம். இருந்தாலும் ஓரளவுக்குச் பழந்தமிழ் இலக்கியத்தின் உதவியால் அறிந்து கொள்ளலாம்.
வரையறை
குழுக்களைப் பற்றிய பொதுமுனைவுக் கருத்துகள் (ஸ்டீரியோடைப்கள்) என்றால் அந்தக் குழுக்களின் உறுப்பினர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகும். வெறும் பண்புகளை மட்டுமல்லாது உடல் தோற்றம், திறன்கள் மற்றும் நடத்தைகள் முதலிய அனைத்தும் பொதுமுனைவுக் கருத்துகள் குறித்த எதிர்பார்ப்புகளின் பொதுவானக் கூறுகள் ஆகும்.[1]

மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்கள்
காஞ்சித் திணையின் கீழ்வரும் துறைகளுள் மகட்பாற் காஞ்சி ஒன்றாகும். புறநானூற்றில் மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்கள் 336 முதல் 354 வரை என மொத்தம் இருபது உள்ளன.
முதுகுடித் தலைவன் ஒருவனின் மகளைக் கண்டு விரும்பிய வேந்தன் மகட்கொடை கேட்டுவர, தலைவன் வேந்தனுக்கு மகளைத் தர மறுப்பதே மகட்பாற் காஞ்சியாகும்.
“நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய மகட்பா லானும்”
(தொல். பொருள். நூ.79. 14-15)
என்றவாறு தொல்காப்பிய நூற்பா மகட்பாற் காஞ்சியை எடுத்துரைக்கிறது.
இதற்கு,
“பெண்கோள் ஒழுக்கத்தின் ஒத்து மறுத்தல் பற்றிப் பகைவனாய் வலிந்து கோடற்கு எடுத்துவந்த அரசனோடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்” என்றவாறு மகட்பாற் காஞ்சித் துறையைப் பற்றிய நச்சினார்க்கினியரின் விளக்கம் உள்ளது.
அரசு உருவாக்கம்
மக்கள் இனக்குழுச் சமுதாயமாக வாழத் தொடங்கியதன் பிறகு அரசு உருவாக்கம் ஏற்பட்டது. இவ்வாறு உருவான அரசுகள் பல்வேறு இனக்குழுச் சமுதாயங்களைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டு விரிவடையத் தொடங்கின. இதனையே, “வீரநிலைக் காலம் என்பது அதன் பெயருக்கேற்ப நிகழ்ச்சிகளின் மையமாக இருந்த வீரர்களால் மேலாதிக்கம் பெற்றிருந்தது. பழைய இனக்குழு, சாதிச் சமூகங்கள் உடைந்து புதிய தலைமைகள் மன்னர்க்கு உட்பட்டு எழுச்சி பெற்றன. அவை வன்முறையானவை எனினும் திறம்மிக்கன; குறுகிய காலத்தன; எனினும் புகழுடையன; ஒடுங்க வைப்பன; எனினும் செழுமையானவை. ஒரு நாட்டின் வரலாற்றில் இவ்வெழுச்சி ஒரு தெளிவான திருப்பு மையமாகும்”.[2] என்ற இக்கருத்தும் தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு இனக்குழுச் சமுதாயத்தில் இருந்து வேந்தர்களின் ஆட்சியின் கீழ் வந்ததெனச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இனக்குழுத் தலைவனுக்கும் வேந்தனுக்கும் இடையில் நடந்த பூசல்களின் பதிவாகவே மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உள்ளன.
மருதநிலத் தலைவர்
பெண்ணின் தந்தை, தமையர்கள் இப்பாடல்களின் மூலம் மண்ணின் மைந்தர்களாக, பெரும் வளம்மிக்க மருதநில ஊர்களுக்குத் தலைவர்களாக, சிறு பகுதியினை ஆட்சிப் புரிந்த மன்னர்களாக இருந்தது தெரிகிறது.
“ஓரெயின் மன்னர்”
(புறம்.338:12)
“பெருந்தகை மன்னன்”
(புறம்.340:9)
“தண்பனைக் கிழவன்”
(புறம்.342:11)
“வைகலும் உழக்கும் மாட்சியர்”
(புறம்.342:14-15)
“தொல்குடி மன்னன்”
(புறம்.353:11)
“எண்ணா மையலன் றந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி”
(புறம்.355:4-5)
“பஞ்சியுங் களையாப் புண்ணர்
அஞ்சுதக வுடையரிவ டன்னை மாரே”
(புறம்.353:15-16)
முதலியவாறு பெண்ணின் தந்தையும் தமையன்மாரும் சிறப்பிக்கப்படுவது கொண்டு இவர்கள் இனக்குழுச் சமுதாயத்தின் தலைவர்களாக இருந்து வரும் பழம்மரபைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. மேலும் இவர்கள் எவர்க்கும் எதற்கும் அஞ்சாத தொல்குடி மரபைச் சார்ந்த பெரும் வீரர்களாகக் காட்சித் தருகின்றனர்.
உடைமைச் சமுதாயம்
மக்கள் இனக்குழுச் சமுதாயத்தில் இருந்து உடைமைச் சமுதாயம் நோக்கி நகர்ந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் உணர்த்துகின்றன. இத்தகைய உடைமைச் சமுதாயத்திற்கு அடிப்படையான அறங்கள் உருவாக்கப்பட்டு சமூகக் கட்டமைப்பானது வலுப்படுத்தப்பட்டது.
“பழைய இனக்குழுச் சமூகத்தில் உறுத்தலாக இருக்கக் கூடியவற்றை அகற்றி நீதி, நெறி, அறம், ஒழுக்கம், முறை,நேர்மை சார்ந்ததாக செல்வ அபகரிப்பை மனிதனுக்குச் சரியானது என்றில்லாமல் ஒழுக்க அற வழிகளுக்குச் சரியானது எனத் தலைகீழாக்கியவை உடமைச் சமூகத்தின் அறங்களே”[3]. என்ற கருத்து உடைமைச் சமூகத்தில் அறங்களின் உருவாக்க முறையைக் கூறுகிறது.
இத்தகைய அறங்களின் உருவாக்கம், பின்பற்றலின் விளைவாக உடைமைச் சமுதாயம் வலுப்பெற்றது. “இத்தகைய வினை, மனிதர்க்கு இடையிலும் செயல்பட்டு மனிதர்க்கு மனிதர் உடைமையாக்கப்பட்டார்கள் (பெண்கள், உடல் உழைப்பாளிகள் …)”[4] தற்காலச் சமூகக் கட்டமைப்பிற்கு ஊற்றாக விளங்கிய உடைமைச் சமுதாயக் கட்டமைப்பிற்கு அறங்கள் பெரும்பங்காற்றியது விளங்குகிறது. உடைமைச் சமுதாய உறுப்பினர்களாக இனக்குழுத் தலைவர்களான மருதநில ஊர்த் தலைவர்களும் விளங்கினர் என்பதை மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் உணர்த்துகின்றன.

ஆண்மை
தற்கால சமுதாயத்தில் ஒரு உலகளாவியப் பார்வையில் ஆண்களைக் குறித்த கருத்தாக்கங்கள் குறிப்பிடத்தக்க மாற்றம் அடைந்திருக்கிறது. பல்வேறு துறைகளில் முன்னேறுகின்ற இப்போதைய தமிழ்ச் சமுதாயத்தை ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய தமிழ்ச் சமுதாயத்தோடு ஒப்பிடுவோமானால், குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைக் கூறலாம். இவ்வாறிருக்க வீரமே எல்லாம் என்று கருதப்பட்ட வீரநிலைக் காலமாக இருந்த பழந்தமிழ்ச் சமுதாயத்தில் ஆண்மை எவ்வாறு விவரிக்கப்பட்டது என்பதை மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்கள் மூலம் காணலாம்.
தொல்குடி வீரமரபு
வேந்தருக்கு எதிரான நிலைப்பாட்டோடு இனக்குழுத் தலைவர்களான தொல்குடி மன்னர்கள் இருந்தது இப்பாடல்கள் மூலம் அறிய வருகிறது. எத்தகைய பெருவேந்தர் மகட்கொடை விரும்பி வரினும் தன் தகுதிக்கேற்ப வணங்கி இரந்து கேட்பார்க்கு அல்லது மகட்கொடை நேரான் என்ற இனக்குழுத் தலைவரின் ஆண்மை போற்றப்படுகிறத[5]ு. ஒருவேளை வேந்தர்கள் இவரின் தகுதியை மதிக்காது செயல்படுவார்களானால் மகட்கொடை மறுத்ததன் காரணமாக வேந்தர்கள் இவருக்கு எதிராக போரில் இறங்குவர். ஆயினும் வேந்தனென்றும் பாராமல் எதற்கும் அஞ்சாது தன் தொல்குடி மரபிற்கும், வீரத்திற்கும் முதன்மை அளித்திருப்பதைக் காண முடிகிறது. இதில் வீரநிலை காலக் கவிதையின் தன்மை தெரிகிறது.
இத்தகைய தொல்குடி மரபைச் சார்ந்த வீரர்களான பெண்ணின் தந்தை தமையர் பொருளாசை அற்றவர்களாக விளங்கியிருக்கின்றனர். இதனையே,
“முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்”
(புறம்.343:10-11)எனும் அடிகள் உணர்த்துகிறது.
மேலும்,
“புரையோர் அல்லோர் வரையலன் இவள்எனத்
தந்தையும் கொடான் .. .. .. .. ..”
(புறம்.343:12-13)
“நிரல்அல் லோர்க்குத் தரலோ இல்”
(புறம்.345:14)
என்ற அடிகள் தொல்குடி மரபில் நிலவிய மணமுறையைக் காட்டுகிறது. வேந்தர் பொருளாசைக் காட்டியும் இணங்காத மருதநில ஊர்த் தலைவரை இங்கு காண்கிறோம். தற்காலச் சமுதாயத்தில் நிலவி வரும் சாதியத் திருமண முறை போன்றதொரு முறையே பழந்தமிழ்ச் சமுதாயத்திலும் ஒரு சில குடிகளுக்கிடையே நிலவியதை அறிகிறோம். குடிக்கலப்பு நீக்கப்பட்ட குடித்தூய்மை பேணிய சமுதாயமாக பழந்தமிழ்ச் சமுதாயம் காட்சித் தருகிறது.
ஆளுமைத் திறன்
இனக்குழுச் சமூகத்தின் தலைவராகக் காட்சித் தரும் பெண்ணின் தந்தை பழமையான, வளம்மிக்க ஓர் ஊருக்குத் தலைவராய் இருந்தது தெரிகிறது. இதையே,
“அருங்கடி மூதூர்”
(புறம்:336)
“தண்பணை ஊர்”
(புறம்:341)
“நெடுநல் ஊர்”
(புறம்:343)
“பன்னல் வேலிஇப் பணைநல் ஊர்”
(புறம்:345)
“கதுவாய் மூதூர்”
(புறம்:350)
எனும் சொல்லாடல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து ஆணின் ஆளுமைத்திறன் விளக்கம் பெறுவதைக் காணலாம்.
தந்தையின் அதிகாரம்
இல்லப் பொறுப்புகளில் தந்தைக்கு இருக்கும் கடமை, அதிகாரத்தை இப்பாடல்களில் காண முடிகிறது. மகட்கொடை நேரும், மறுக்கும் உரிமை உடையவராகத் தந்தை திகழ்கிறார்.
“வேந்துகுறை யுறவுங் கொடாஅன் .. .. ..
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை”
(புறம்.341:1,3)
எனும் அடிகளும் இதனையே உணர்த்துகின்றது. இங்கு மகட்கொடை என்ற சொல் மகளை வழங்குதல் என்ற பொருளில் வருகிறது. இப்பாடல்கள் ஒன்றில் இடம்பெறும் “பண்பில் தாய்” எனும் சொல்லாடல் உணர்த்தும் பொருள்கொண்டு தாயின் தலையீடும் இதில் இருந்ததை உணரலாம். ஆயினும் தந்தையின் செல்வாக்கே மிகுதி என்பது புலனாகிறது. இது குடும்பப் பொறுப்பில் தந்தைக்கு இருந்த அதிகாரத்தைக் காட்டுகிறது.

பெண்மை
பழந்தமிழ்ச் சமுதாயத்தோடு ஒப்பிடுகையில் இக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் நிலை பல வகைகளில் மாற்றம் அடைந்திருக்கிறது. இருந்தும் பெண்களின் புறவழகை கவர்ச்சிக்காகப் பயன்படுத்தும் நிலையில் மாற்றமில்லை. இவ்வாறிருக்க பெண்மை பற்றிய கருத்தாக்கம் மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்கள் மூலம் பழந்தமிழ்ச் சமுதாயத்தில் எவ்வாறு இருந்ததெனப் பார்க்கலாம்.
பேரழகு
பெண்களின் புறவழகு மற்றும் அகவழகை பாரி பறம்பின் பனிச்சுனை போன்று காண்பதற்கு அரியவளாய் பெண்மையில் சிறந்து விளங்கி பொலிவோடுத் திகழும் பெண்[6], மேகலை அணிந்த அல்குலையும் தொடியணிந்த தோளுமுடையவள் [7], இடையில் அணிந்த அழகிய தழையுடை அசைய ஓடிச்சென்று குன்றிமணிகளைத் தொகுக்கும் இளமையும் மாமை நிறமும் உடையவள்,[8] தழையணிந்தியலும் சிலம்பணிந்து பொழியும் அல்குலும் உடைய இளையவள்[9], மணமாகாத மெல்லிய இயல்பினையும் சுணங்கு பரந்த அழகிய முலையினையும் உடையவள்[10], இருள்வாசிப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையும் உடை இளையவள்[11], செறிந்த வளைகளை உடையவள்[12], அல்குலில் வரிப்படர்ந்திரித்தல் அழகென்னும் கருத்தில் அல்குலில் வரியுடையவள் என்றிருப்பது[13], கரிய கண்களையுடைய நெருங்கும் விருப்பத்தை உண்டாக்கும் முலைகளையும் கண்டாரை மயங்கச் செய்யும் பார்வையுமுடைய தையல்[14] முதலியவாறு புலவர்கள் வர்ணித்துள்ளனர். இங்கு பெண்ணின் புறவழகு ஆண்களைக் கவரும் கவிர்ச்சிக்காகப் பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஓர் ஊரின் அழிவிற்கே காரணமாகிய பேரழகிகள் எனப் புலவர்கள் பெண்மையை நொந்து கொள்கின்றனர். இதையே “பெரும்பாழ் செய்யும் இவள் நலனே” (புறம். 346: 6-7) என்ற அடியும் உணர்த்துகிறது.
உடைமைப் பொருள்
பழந்தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் உடைமைப் பொருளாக நடத்தப்பட்டதைக் காண முடிகிறது. பெண் தனக்கான ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாது இருந்தாள். இங்கு பெண் யாரை மணந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பவராகப் பெண்ணின் தந்தை திகழ்கிறார். பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கப்படவில்லை. பொதுவாகப் பழந்தமிழ்ச் சமுதாயத்தில் காதல் வாழ்வு சிறந்திருந்தது. ஆனாலும் பெண்களின் சம்மதம் பெறாத மணங்களும் நடந்திருக்கின்றன. அதற்கு உதாரணமே இம் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள். கபிலர் 337வது பாடலில் பெண்களின் வனப்பைச் சித்தரித்து இவளது நலன்களை அனுபவிக்கப் போவது யாரோ என்றாற் போல் பாடியிருக்கிறார். வேந்தனானவன் பெரும் பொருள் கொடுத்தாவது பெண்ணைப் பெற்றுவிட முனைகிறான். ஆனால் தந்தையோ,
“உறந்தை யன்ன உரைசால் நன்கலம்
கொடுப்பவும் கொளாஅன் நெடுந்தகை”
(புறம். 352: 10-11)
என்ற கருத்தினனாய் உள்ளான்.
இவற்றிலிருந்து பெண்கள் மணமாவதற்கு முன் தந்தையின் உடைமையாகவும் மணமாகியதன் பின் கணவனின் உடைமைப் பொருளாகவும் நடத்தப்பட்டிருப்பது தெற்றெனப் புலனாகிறது.
இற்செறித்தமை
பருவமெய்திய பெண்கள் அவரது நலன்களால் வேந்தர் முதலிய பலரையும் தன்பால் ஈர்ப்பர் என்றெண்ணி அதன் விளைவைக் கருத்திற் கொண்டு பெண்களை இற் செறித்தனர்; என்று தெரிகிறது[15]. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ்ச் சமுகத்தில் பெரும்பான்மையாக நிலவிய பருவப்பெண்களை வெளியில் அனுப்பாத சூழல் பழந்தமிழ்ச் சமுதாயத்திலும் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
பண்பில் தாய்
பரணர் ஒரு பாடலில் அழகான இப்பெண்ணை இவள் தாய் பெறாது இருந்திருப்பாளானாள் இவ்வூர்க்கு அழிவு வந்திருக்காது என வருந்துகின்றார்[16]. அழகானப் பெண்ணை வளர்த்தெடுத்தவள் அவளோடு பகையையும் வளர்த்தெடுத்தாள் இப்பண்பில் தாய் என்று நாட்டின் அழிவையெண்ணி வருந்துகிறார் ஒரு புலவர்[17] மகட்கொடை மறுத்து போருக்கு அவளும் உடன்பட்டிருந்தால் என்பதே “பண்பில் தாய்” எனும் சொல்லாடல் உணர்த்தும் உள்ளார்ந்த பொருள். தாயின் பண்புகளான அன்பு, நலம் விரும்புதல் முதலியவற்றை போற்றாது வீரத்தைப் போற்றிய மறப்பண்பு இச்சொல்லாடலில் காணக் கிடைக்கிறது. மேலும் பழந்தமிழ்ச் சமுதாயம் தாய்மைப் பண்பு குறித்த கருத்து நிலையாக்கம் பெற்றிருந்ததை இது காட்டுகிறது.
புலவர்களின் சார்பு
வேந்தர்களின் தோற்றம் பழந்தமிழ்ச் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பழங்குடி மரபில் வந்த மன்னர்கள் தனித்து இயங்க முடியாது வேந்தர்களுக்கு கீழ் அவர்களுக்கு ஆதரவாக இயங்கும் நிலையை உருவாக்கியிருக்கும். இத்தகைய அரசு உருவாக்கத்திற்கு ஆதரவான புலவர்களின் நிலைப்பாட்டைப் பல பாடல்களில் காண முடிகிறது . இவ்வேந்தர்கள் புலவர்களால் பல பாடல்களில் கடவுளுக்கு நிகரானவர்களாக அசாத்திய திறமை உடையவர்களாக போற்றப்பட்டிருக்கின்றனர்.
இப்பாடல்களிலும் வேந்தன்,
“வேட்ட வேந்தனும் வஞ்சினத்தினனே”
(புறம்.336:1)
“முறஞ்செவி யானை வேந்தர்”
(புறம்.339:13)
“மறலிய சினத்தன் ”
(புறம்.341:8)
“வம்ப வேந்தர்”
(புறம்.345:7)
“படுமழை யுருமின் னிரங்க முரசிற் கடுமான் வேந்தர்”
(புறம்350:4-5)
“வென்றுஎறி முரசின் வேந்தர்”
(புறம்.351:5)
“மாமுது வேந்தர்”
(புறம்.353:12)
முதலானவாறு அறிமுகமாகிறான்.
வேந்தனானவன் பெருஞ்செல்வத்தைக் கொடுத்தாவது பெண்ணைப் பெற்றுவிட முனைகிறான். அதற்கும் பெண்ணின் தந்தை உடன்படாதிருக்க படை வலிமையால் அவரை ஒடுக்க விளைகிறான். போர்ப் பதற்றம் நிலவுகிறது. வளம்மிக்க இவ்வூரின் அழிவை எண்ணிப் புலவர்கள் வருந்துகின்றனர். இவற்றிலிருந்து பலத்தால் எதையும் சாதிக்கும் அரசின் வலிமைப் பற்றிய அச்சம் அக்காலப் பழந்தமிழ்ச் சமுதாயத்தில் நிலவியிருக்கும் எனத் தோன்றுகிறது.
இப்பாடல்களில் புலவர்கள் பேரரசுகளின் நியாயமற்ற போக்கைக் கண்டிக்கவில்லை. ஊரின் அழிவை எண்ணி வருந்துகின்றனரே தவிர பேரரசின் போக்கை ஆதரிக்கவே செய்கின்றனர். அரசு உருவாக்கத்திற்கான புலவர்களின் ஆதரவான போக்கை இது காட்டுகிறது. இப்பாடல்களுக்கு வேள்பாரியின் வீழ்ச்சியை நிகழ் உதாரணமாகக் காட்டலாம். இதிலிருந்து அக்காலச் சமுதாயத்தில் அரசு உருவாக்கம் மற்றும் விரிவாக்கத்தின் போது வேந்தர்கள் குறித்து “வேந்தர்களின் கோபத்திற்கு ஆளானால் ஆபத்து” என்ற பொதுமுனைவுக் கருத்து நிலவியிருக்குமோ என ஐயப்பட வைக்கிறது.
வீரநிலைக் காலச் சமுதாயம்
மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களில் வெளிப்படையாகவே பெண்களை நொந்து கொள்ளும் புலவர்கள் ஆண்களைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. இங்கு போர் எழுவதற்கு மகட்கொடை மறுப்பு முதன்மைக் காரணமாக இருக்க ஆண்மையை கேள்விக்குள்ளாக்காது, பெண்மையைக் காரணமாகக் காட்டுவது; ஆண்மையைக் கேள்விக்குள்ளாக்க முடியாத சமுதாயத்தைக் காட்டுகிறது. அதாவது வீரநிலைக் கால சமுதாயச் சூழலைக் காட்டுகிறது. மேலும் மறப்பண்பை போற்றிய தாயும் ‘பண்பில் தாய்’ எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
இருவகைப் போக்கு
வீரர்களின் பண்புகள் எனத் “தமிழ் வீரநிலைக் கவிதை” எனும் நூல் பட்டியலிடும் பண்புகள் மகட்பாற் காஞ்சிப் பாடல்களில் வரும் மருதநில ஊர்த் தலைவர்களான பெண்ணின் தந்தைக்கும் தமையன்களுக்கும் இருப்பதைக் காண முடிகிறது. இதில் பழைய வீரநிலைகாலக் கவிதை மரபின் தொடர்ச்சியைக் காண முடிகிறது. இங்கு மகட்கொடை மறுப்பால் சினமுற்ற வேந்தன் போருக்கு எழுகிறான். இதனால் வளமிக்க ஊருக்கு அழிவு ஏற்படும் என்றெண்ணி புலவர்கள் வருந்துகின்றனர். இதில் புலவர்களின் அரசு விரிவாக்கத்திற்கு ஆதரவான போக்கைக் காண முடிகிறது. இவற்றின் மூலம் மரபான வீரநிலைக் கவிதைத் தன்மை யுடையது, அரசின் நிலை உருவாக்கத்திற்கு ஆதரவான புலவர்களின் பிரச்சாரத் தன்மை உடையது என இப்பாடல்களில் இரண்டு விதமான போக்குகளைக் காண முடிகிறது.
தொகுப்பாக
மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் வெளிப்படுத்தும் பழந்தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பொதுமுனைவுக் கருத்துக்கள் பற்றி கண்டோம். இதுவரை பார்த்தவற்றை பாலின பொதுமுனைவுக் கருத்துகள், சமுதாய பொதுமுனைவுக் கருத்துகள் என இரண்டாகப் பகுக்கலாம். இவ்வாறு மேற்கண்டவற்றை ஒரு தொகுப்பாகக் காண்போம்.
- பெண்களின் புறவழகை கவர்ச்சியாகக் காட்டியிருப்பது.
- இளம் பெண்கள் இற்செறிக்கப்பட்டமை.
- பெண்கள் உடைமைப் பொருளாக நடத்தப்பட்டது.
- தாய்மை குறித்த கருத்தாக்கம் பெற்றிருந்த சமுதாயம்.
- ஆண்கள் பெரும் வீரர்களாகக் காட்சியளிப்பது.
- ஆண்கள் ஆளுமைத்திறன் உடையவர்களாகப் போற்றப்பட்டிருப்பது.
- மகட்கொடை நேர, மறுக்க உரிமை உடையவராகத் தந்தை திகழ்தல்.
- தொல்குடி மன்னர்களின் இனக்கலப்பை விரும்பாத குடித்தூய்மை பேணிய மரபான மணமுறை மற்றும் செல்வத்தை விரும்பாதத் தன்மை.
- வீரநிலைக் காலச் சமுதாயம் என்ற ஆண்மைக்குச் சார்பான ஆணாதிக்கச் சமுதாயம்.
- “வேந்தர்களின் கோபத்திற்கு ஆளானால் ஆபத்து” என்ற பொதுமுனைவுக் கருத்து நிலவியிருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
பழந்தமிழ்ச் சமுதாய மக்களிடத்தில் நிலவிய பொதுமுனைவுக் கருத்துகள் என சமுதாயத்தின் பல்வேறு கூறுகளை பழந்தமிழ் இலக்கியம் வெளிப்படுத்தக் காண்கிறோம். இதற்குக் காரணம் சமுதாயம் இலக்கியத்தின் பாடுபொருளாக இருப்பதுதான். இத்தகைய மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் பெண் மறுப்பு நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளோடு பல வகைகளில் ஒத்திருப்பதைக் காண முடிகிறது. சமுதாயத்தில் பெண்களுக்காக, பெண்களின் மீது காரணம் சுமத்தி என வரலாற்றில் நடந்த போர்களை, சண்டைகளை இவை பதிவு செய்துள்ளன.
முடிவுரை
சமுதாய வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான மனிதகுல வாழ்விற்கும் எவ்விதத்திலும் பயன்படாத பொதுமுனைவுக் கருத்துகள் அன்றாட வாழ்வில் இருந்தும் சமுதாயத்தில் இருந்தும் நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் பாலினச் சமமின்மை நிலவி வருகிறது. இந்நிலை மாறுவதற்கென பலர் தங்களை அர்பணித்துள்ளனர். நம்முடைய அன்றாட வாழ்வின் பல்வேறு செயல்பாடுகளிலும் இப் பொதுமுனைவுக் கருத்துகளின் தாக்கம் இருப்பதைக் கவனிக்கலாம். இப் பொதுமுனைவுக் கருத்துகள் சமுதாயத்தில் பெண் பாலினத்தை மட்டுமல்லாது ஆண் பாலினத்திற்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவாறான சிக்கல்களை விளைத்து வருகிறது. அடிப்படையில் பொதுமுனைவுக் கருத்துகள் மீதான புரிதல் இருக்குமானால், இப்பாலினப் பாகுபாட்டை ஓரளவுக்குக் களையலாம்; இல்லாதும் ஆக்கலாம். மேலும் பலவாறான சமுதாயச் சிக்கல்களுக்கும் தீர்வு காணலாம். இதனால் வாழ்க்கை மீதான கண்ணோட்டமும் மாற்றம் காண ஆரம்பிக்கும்.
கட்டுரையாளர்: மு. இராமர் மாசானம் :
- முனைவர் பட்ட ஆய்வாளர்
- 7397453450, rammass58@gmail.com
நெறியாளர்: முனைவர் க. மாரியப்பன்
- உதவிப் பேராசிரியர்
- 9486863620, gmariappan.du@gmail.com
- தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை
- திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம்
- ஆந்திர பிரதேசம் – 517425
பயன்பட்ட நூல்கள்
- துரைசாமிப் பிள்ளை ஔவை. புறநானூறு மூலமும் உரையும். சாரதா பதிப்பகம். சென்னை. 2017.
- கைலாசபதி க. தமிழ் வீரநிலைக் கவிதை. குமரன் புத்தக இல்லம். கொழும்பு – சென்னை. 2021. தமிழில் மொழியாக்கம் கு.வெ.பாலசுப்பிரமணியன்
- ராஜ் கௌதமன். தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்( பி) லிட். சென்னை. முதல் பதிப்பு. 2018.
- Branscombe Nyla.R, Robert Baron.A. Social Psychology. Fourteenth Edition. Pearson . 2017.
அடிக்குறிப்புகள்
[1] Stereotypes about groups are the beliefs and expectations that we have concerning
what members of those groups are like. Stereotypes can include more than just traits;
physical appearance, abilities, and behaviors are all common components of stereotypic expectancies (Deaux & LaFrance, 1998; Zhang, Schmader, & Forbes, 2009). Branscombe Nyla.R Robert Baron.A. Social Psychology. 2017.p.208
[2]கைலாசபதி க. தமிழ் வீரநிலைக் கவிதை. ப.எ:105-106
[3]ராஜ் கௌதமன். தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும். ப.எ.37
[4]மேலது ப.எ.40
[5]வேம்பு மாரும் போந்தையு மூன்றும்
மலைந்த சென்னிய ரணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினுந் தற்றக
வணங்கார்க் கீகுவ னல்லன் (புறம்.338:6-9)
[6]பாரி பறம்பிற் பனிச்சுலை போலக்
காண்டற் கரிய லாகிய மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய (புறம்.337:6-8)
[7]தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர் (புறம்.339:6)
[8]அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக்
குரலங் குன்றி கொள்ளு மிளையோள்
மாமகள்…….. (புறம்.340:1-3)
[9]அம்பூந் தொடலை யணித்தழை யல்குல்
செம்பொறிச் சிலம்பி னிளையோல் (புறம்.341:2-3)
[10]விளங்கிழைப் பொலிந்த வேளி மெல்லியற்
சுணங்கணி வனமுலை யவளொடு (புறம்.341:10-11)
[11]செறிவளை மகளிர் (புறம்.344:2)
[12]கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்(புறம்.342:1-2)
[13]அல்குலவ் வரியே(புறம்.341:9)
[14]கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
மைய னோக்கிற் றையல்(புறம்.345:10-11)
[15]“துகல்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
அகிலார் நறும்புகை யைதுசென் றடங்கிய
கபில நெடுநகர்க கமழு நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல்” (புறம்.337:9-12)
[16]குவளை யுண்க ணிவளைத் தாயே
ஈனா ளாயி னானாது (புறம்.348:6-7)
[17]முகைவனப் பேந்திய முற்றா விளமுலைத்
தகைவளர்த் தெடுத்த நகையொடு
பகைவளர்த் திருந்தவிப் பண்பி றாயே” (புறம்.336:10-12)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
