புறாவின் அழைப்பு

This entry is part 3 of 9 in the series ஹைக்கூ

புறாவின் அழைப்பு

கூகையே
முகம் சுளிக்காதே
இது வசந்தகால மழை

கவிஞர்: கோபயாஷி இஸ்ஸா (1772-1858)

ஃபுகுரோஉமோ
ட்சுராகுசெனஓசெ
ஹாரூனோஆமெ

梟も
面癖直せ
春の雨

ஹாரூ என ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் வசந்தகாலம் அல்லது இளவேனிற்கால ஹைக்கூவை முன்பு பார்த்தோம். வசந்தகாலக் காற்று என அந்த ஹைக்கூ தொடங்கி, வசந்தகாலக் காற்ருக்கு முகம் சுளிக்கும் ஒரு பெண்ணைக் காட்சிப்படுத்தியது. இந்த ஹைகூ வசந்தகாலத்தில் முகம் சுளிக்கும் ஓர் ஆந்தையைக் காட்சிப்படுத்துகிறது.

முதல் அடி ஃபுகுரோஉமோ, 梟 ஃபுகுரோஉ, ஆந்தை, கூகை, காஞ்சி வரிவடிவில் உள்ள இதனை ஹிராகனாவில் பிரித்து எழுதினால் ふくろう ஃபு கு ரோ உ, ஆந்தை. அடுத்த எழுத்து ஹிராகனாவில்も மோ, இது ஆந்தை’யும்’ எனக் குறிப்பிடும் ‘உம்’. ஃபுகுரோஉமோ – ஆந்தையும். ஐந்து அசைகள் கொண்ட இந்த ஃபுகுரோஉமோ சில இடங்களில் ஃபுகுரோஉயோ என்றும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஃபுகுரோஉயோ என்றால் ‘ஆந்தையே’ என அழைப்பது.

ஃபுகுரோஉமோ – ஆந்தையும்

ஃபுகுரோஉயோ – ஆந்தையே

இந்த இரண்டு பதிப்புகளுள் ‘ஆந்தையே’ எனத் தொடங்கும் பதிப்பில் அதன் தலைப்பு ‘புறாவின் அழைப்பு’ எனத் தரப்பட்டுள்ளது. வசந்தகாலத்தில் ஒரு புறா ஆந்தையை அழைக்கும் ஹைக்கூவாக அது அறியப்படுகிறது. ஆந்தையும் எனத் தொடங்கும் பதிப்பு அழைப்பு ஏதும் இன்றி ஆந்தையின் தன்மையைப் பிரதிபலிப்பாக உள்ளது.

ஹைக்கூவின் முதல் அடி ஆந்தையும் அல்லது ஆந்தையே.

இரண்டாவது அடி ட்சுராகுசெனஓசெ, 面 ட்சுரா つ ட்சு, ら ரா, ட்சுராவின் பொருள் முகமூடி.  癖 கு(gu)செ ぐ கு(gu) せ செ, குசெவின் பொருள் தனிப்பாணி, நடந்துகொள்ளும் விதம். 直せ நஓசெ,  直 நஓ, な ந, お ஓ,  せ செ, நஓசெவின் பொருள் மாற்று, சரி செய், திருத்து.

ட்சுரா – முகமூடி, குசெ – நடந்துகொள்ளும் விதம், நஓசெ – திருத்து. வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றினால், முகமூடி அணிந்து நடந்துகொள்ளும் விதத்தை மாற்று. எளிமையாகச் சொன்னால், முகம் சுளிக்காதே.

ஹைக்கூவின் இரண்டாம் அடி முகம் சுளிக்காதே.

மூன்றாம் அடி ஹாரூனோஆமெ, 春 ஹாரூ は ஹா る ரூ வசந்தகாலம் அல்லது இளவேனிற்காலம். の நொ ‘இன்’ 雨 ஆமெ あ ஆ, め மெ, ஆமெ என்றால் மழை. வசந்தகால மழை.

ஹைக்கூவின் மூன்றாம் அடி வசந்தகால மழை.

வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது. ‘வசந்தகால மழையைப் பார்த்து மகிழ்வதை விட்டுவிட்டு ஏன் இந்த ஆந்த முகத்தைக் கோணலாக்கிச் சுழிக்கிறது’ என ஆந்தை நினைக்கிறது. தன் முகச்சுளிப்பை விலக்குமாறு கேட்டுக்கொள்கிறது. 

முகமூடி + தனித்தன்மை இரண்டையும் இணைத்து ஒரே வார்த்தையாக ட்சுராகுசெ 面癖 எனச் சொல்வது எப்போதும் முகத்தைக் கடுகடுப்பாக வைத்திருக்கும் தன்மையையும் குறிக்கும்.

இந்த ஹைக்கூவை இன்னொரு பார்வையில் 

ஆந்தையே
முகத்தைக் கடுகடுப்பாக வைத்திருக்கிறாய், மாற்று
வசந்தகால மழைபொழிகிறது

என்றும் மொழிபெயர்க்கலாம்.

மழையைப் பார்த்து முகம் சுளிக்காதே என ஒரு பார்வையும், எப்போதும் கடுகடுப்பாக இருக்காதே என இன்னொரு பார்வையையும் இரண்டாம் அடிக்குப் பொருள்களாகச் சொல்லலாம்.

எப்படிப் பார்த்தாலும் வசந்தகால மழையை விரும்பாத ஓர் ஆந்தையின் மனதை மாற்ற முயற்சி செய்யும் ஹைக்கூ இது.

梟 (ふくろう)も [ஃபு கு ரோ உ + மோ] அல்லது [ஃபு கு ரோ உ + யோ]
面癖 (つらぐせ) 直(なお) せ [ட்சு ரா கு செ ந ஓ செ]
春 (はる)の雨 (あめ) [ஹா ரூ நொ ஆ மெ]

ஃபுகுரோஉமோ
ட்சுராகுசெனஓசெ
ஹாரூனொஆமெ

கூகையே
முகம் சுளிக்காதே
இது வசந்தகால மழை

(தொடரும்)

ஹைக்கூ

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2 காகமும் அழகு

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.