
வான மண்டலத்தியல் கண்டு தெளிந்ததாக பெருமிதம் கொள்ளும் நம்மால், பூமியில், அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான, சமத்துவமான, வாழ்வுறுதி அளிக்கக்கூடிய ஒரு பொருளாதாரக் கொள்கையை வடிவமைக்க முடியவில்லை. சிறு குழு ஆட்சி, அரசு முறைகள், புரட்சிகள், முதலாளித்துவம், பொது உடமை, இடைப்பட்ட சோஷலிசம், எதுவும் முழுதாக அதன் நோக்கங்களை நிறைவேற்றவில்லை. வாழ்நாள் முழுதும் தம்மை அதிபராக அறிவித்துக் கொள்ளும் அதிகார மையங்கள், மக்களாட்சி, தனது குடிமக்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ள அரசுகள், எதுவும் நழுவும் பாதரசத்தை சரியான கருவி கொண்டு கையாளவில்லை.
பண்ட மாற்று, நாணய மதிப்பிற்கான கூடைகளில் இடம்பெறும் முன்னேறிய நாடுகளின் கரன்சிகள், தங்க இருப்பு, சந்தை சக்திகள் நிர்ணயிக்கும் நாணய மதிப்பு, அரசே அச்சடித்து வெளியிடும் அதிகப் பணப்புழக்கங்கள், பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் இந்தப் பொருளாதார தராசில் ஏற்றத் தாழ்வான தட்டுக்களைக் காட்டுகின்றன. விளைவு, நழுவும் பாதரசம் நச்சுப் புகையை வெளியிட்டு, பொது மக்களை மூச்சுத் திணறச் செய்கிறது.
உலகமயமாக்கல் (Globalization) என்ற கொள்கை, வணிகத்தின் மூலம், உலகம் ஒன்றுபடும், எங்கும் மக்களாட்சி தழைக்கும், பொது மக்களின் பொருளாதார நிலை மேம்படும், சமமின்மை குறையும் என்றெல்லாம் எதிர்பார்த்தது. கட்டுப்பாடில்லா, சட்ட பூர்வமான வணிகம், திறந்த சந்தைகள் உலகின் எல்லைகளை விரித்தெடுக்கும் என்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டனின் கொள்கை, தன் துப்பாக்கியால் தன் காலில் சுட்டுக் கொண்ட கதையாயிற்று.

உலகின் மோசமான பந்தயம் (2025) (The World’s Worst Bet) என்ற டேவிட் லின்ச் எழுதிய புத்தகம், உலக சந்தையை மறுகட்டமைத்த அமெரிக்காவில், சொந்த நாட்டின் பொருளாதாரம் தன்னளவில் சரிந்து வந்ததைப் பேசுகிறது. இதில் ‘சீன அதிர்ச்சி’ (China Shock) யால் குலைந்த தொழில் நகரங்கள் முதல், பெருந்தொற்றுக் கால கட்டத்தின் ‘வினியோகச் சங்கிலி’ (Supply Chain) நலிவுற்றதுவரை எழுதுகிறார். இதனால், அரசியல், மனித இனம் சந்தித்த வீழ்ச்சிகள் ஆழமானவை என்றும், இந்த யுகத்தின் மாபெரும் கொள்கை என்று கொண்டாடப்பட்ட உலகமயமாக்கல் எவ்விதம் சிறப்பாகச் செயல்படமுடியவில்லை என்றும் சொல்கிறார்.
20ம் நூற்றாண்டின் இறுதியில், மாபெரும் சூதாட்டமான உலகமயமாக்கல், உலகை இணைத்து, சுதந்திர வணிகத்தின் மூலம் செல்வச் சமச் சீர்மை ஏற்படுத்தி, வளமோங்கி, ஓரிடத்தில் குவியும் அதிகார அரசியல் மையம் அகன்று, மக்களாட்சி தழைக்கும் என்ற திசையில் செல்வதாக நம்பினார்கள். குறிப்பாக ரஷ்யாவையும், சீனாவையும் இந்த உலகப் பொருளாதாரத்தில் இணைப்பது, அவர்களின் வலிமையான இரும்பு வலைகளைத் தகர்த்து, அவர்களது நாட்டிலும் சுதந்திர வணிகச் சந்தைகளை ஏற்படுத்தி, வாழ்வியல் முன்னேற்றங்களைத் தரும் என எதிர்பார்த்தார்கள். சிறிது காலத்திற்கு அது நடந்தது-பெய்ஜிங் பெரும் வளர்ச்சி கண்டது, வால் ஸ்டீரிட்டில் பங்குச் சந்தை ஆரோக்கியமாக செழித்தது, விலைகள் குறைந்தன, இந்தப் புது உலகத்தின் வளர்ச்சி தடுக்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டது.
ஆனால், கதையில் ஒரு திருப்பம், செழுமைகள் சரியான விகிதத்தில் பகிரப்படவில்லை, முன்னெச்சரிக்கைகள் உணரப்படவில்லை- மத்திய மேற்கு தொழில் நகரங்கள் தவித்தன, போராட்டம் வெடித்து வன்முறையில் முடிந்தது, சரியான மாற்றங்களுக்கு உட்பட்டுவரும் எனக் கருதிய இடங்களில் தனி மைய அதிகாரங்கள் உருப்பெற்றதையும் அரசு உணரவில்லை. உணர்ச்சிபூர்வமான அறிக்கைகள் கொண்டாடப்பட்டு, தொழிலாளர்கள் பின் தள்ளப்பட்டனர். சுதந்திரச் சந்தையை கொண்டாடிய தேசங்கள் மீண்டும் தங்கள் இரும்புக் கோட்டையைக் கட்டின. தடையற்ற உலக ஒருங்கிணைப்பு கனவு தகர்ந்தது. தன் நாடு, தன் மக்கள், அவர்களின் நலனிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பது போன்ற பாதுகாப்பு வகைமைகளும், நிச்சயமற்ற தன்மையும் ஒருங்கே எழுச்சி பெற்றன. உலகக் குடிகள், உள்ளூர் குடிகளானார்கள். வணிகத்தின் மூலம் ஒன்றிணையும் உலகம் என்ற பந்தயத்தைக் கட்டினவர்கள் தோற்றுப் போனார்கள்.
1997 கோடையில் அமெரிக்காவின் ஒளிமயமான நம்பிக்கைகள் எழுச்சி பெற்றன. வளரும் பொருளாதாரம் நம்பிக்கை தர, டென்வரில் க்ளிண்டன் நடத்திய ஜி 7 மாநாட்டில், ரஷ்யாவின் போரிஸ் யெல்ஸ்டின் (Boris Yeltsin)கலந்து கொண்டது சிறப்பான முன்னெடுப்பு எனக் கொண்டாடப்பட்டது. இது ஒரு செய்தியைச் சொன்னது- பனிப்போர் முடிந்துவிட்டது, உலகச் சந்தை விரிவாகிறது, புதிய உலகத்தில் வேரூன்றி, தடைகளில்லா வர்த்தகமும், ஜனநாயக முதலாளித்துவமும் இனி செயற்படும்.
சீனாவின் வாங் ஜெமின், (Jiang Zemin) Wall Street மணியொலித்து இந்த உலகக் குழுமத்தில் இணைய முதல் அடி எடுத்து வைத்தார். சீனாவின் பொருளாதாரம் என்னவோ, முதலாளித்துவம்தான், ஆனால், ஒரு கட்சியின் மைய அதிகாரத்திற்கு உட்பட்டுத் தான் எதுவும் செய்யலாம். (நாம்தான் அலிபாபாவிற்கு நேர்ந்தவற்றைப் பார்த்தோமே.) பொருளாதாரச் சுதந்திரத்தின் மூலம் உலகை ஒன்றிணைத்துவிட்டோம் என்ற வெற்றிப் பெருமிதம் நிலவியது. அரசியல் சாதுர்யம் (Diplomacy) நிகழ்த்த முடியாத ஒன்றான அரசாங்க உட்சீர்திருத்தங்களை, வர்த்தகம் நிகழ்த்திவிடும் என்று வாஷிங்டன் நம்பியது.
தியனான்மென் (Tiananmen) சதுக்க நிகழ்விற்குப் பிறகு, ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் தொடங்கி க்ளிண்டன் வரை அனைவருமே, வணிகமே சீனாவில் மக்களாட்சிக்கு வழி வகுக்கும் என்று நம்பினார்கள். துடிப்பான வர்த்தகக் கூட்டான வட அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா (NAFTA)- North American Free Trade Agreement) க்ளிண்டனின் அருமையான முன்முயற்சி மட்டுமல்லாது, உலக வர்த்தக ஒருங்கிணைப்பிற்கான முதல் செயல் என்றும் சொல்லப்படுகிறது. வளமைக்கான புதுப் பாலம், புதிய வேலை வாய்ப்புகள், துறைகளில் பயிற்சி அல்லது மறுபயிற்சி, புது கண்டுபிடிப்புகளில் முதலீடு போன்றவை அதிர்ச்சிகளைத் தாங்கிவிடும் என நம்பப்பட்டது. ஆனால், இந்த பாதுகாப்பு வலையின் பெரும் பகுதி அறுந்தது. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டிய பில்லியன் கணக்கான நிதி, மாறும் நிர்வாகங்கள், காலப்போக்கு இவற்றால் பெருவாரியாகக் குறைந்து சிறு அளவில் தொழிலாளர் மறுபயிற்சி நிதி என வற்றியது. வாய்ப்புக்களைவிட, தொழிலாளர்களின் வேலை பறிபோதல் என்று உலகமயமாக்கல் பார்க்கப்பட்டது.

பொருளாதாரம் என்னவோ வளர்ந்தது; ஆனால், நன்மைகள் சமமாக, பரவலாக அனைவருக்கும் கிடைக்கவில்லை NAFTA ஒப்பந்தங்களில், குறைந்த பட்சமாக, ஊழியர்களுக்கான வசதி, வாய்ப்புக்களுக்கான பகுதிகள் இல்லாததால் தொழிலாளர்களின் சங்கங்கள் ஆரம்பத்திலிருந்தே அவற்றை எதிர்த்தன. குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைத்ததால், உற்பத்தியாளர்கள் மெக்ஸிகோவில் தொழிற்சாலைகளை அமைத்தனர். ஒரு புறத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியும், பங்கு வர்த்த்கம் செழிக்கவும், மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கவும் வழி செய்த NAFTA, ஆட்குறைப்பு, தொழிற்சாலைகள் இடம் பெயர்தல் அல்லது மூடப்படுதல், உறுதியற்ற இருளான எதிர்காலம் என்று மறுபுறம், உழைக்கும் வர்கத்தினரை அச்சத்திற்கு உள்ளாக்கியது. இதனால், ஜனநாயக கட்சியின் முதுகெலும்பாக இருந்தவர்கள், தங்களைப் பாதுகாத்து காப்பாற்றும் கட்சியினரை ஆதரிக்கத் தொடங்கினர்.
90கள் முடிவதற்கு முன்னரே எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது. அதிகக் கடன் சுமையாலும், சூதை ஒத்த நிதியமைப்பாலும், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியாவின் பொருளாதார நிலை 1997ல் கவலைக்கிடமாகியது. ஐ மெம் எஃப், (IMF)அமெரிக்கா விரைந்து அவற்றை மீட்டெடுக்க முயன்றாலும் அந்தப் பாதாள வீழ்ச்சி நடந்தே விட்டது; அவற்றின் நாணய மதிப்பு சரிந்தது, இலட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். காரணம் எளிது- உலகமயமாக்கல்- இணைந்த உலக வணிகம் வளரும் நாடுகளுக்கு ஆபத்தைக் கொண்டு வந்தது.

சியாட்டில் நடந்த கடும் போராட்டம் 1999ல் உலக வர்த்தக அமைப்பின் கூடுகையின் முதல் அமர்வை நடைபெற இயலாமல் செய்து விட்டது. பொது மக்கள், கண்ணீர்புகை குண்டுகளை அஞ்சாமல், உலகமயமாக்கும் கொள்கையை துணிவாக எதிர்த்தார்கள். ஆயினும், க்ளிண்டன் தன் கொள்கை, தவிர்க்க இயலாத ஒன்று என்றும், அது நலனைக் கொண்டு வருமென்றும் திண்ணமாக நினைத்தார்; சீனாவை, உலக வர்த்தக அமைப்பிற்குள் (WTO) கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடை பெற்றன- முன்னெப்போதும் இல்லாத வகையில் அது உலகை புரட்டிப் போட்டது. வாஷிங்டன் தப்புக் கணக்கு போட்டது- சீனாவிற்கான தங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும், இறக்குமதியில் தாக்கம் குறைவாக இருக்கும் என்று எண்ணியது அமெரிக்கா. ஆனால், தலைகீழாகத்தான் நடந்தது. அனைத்து தொழில் நிறுவனங்களையும் பாதிக்கும் வண்ணம் சீனாவின் பொருட்கள் அமெரிக்க சந்தையை நிறைத்தன. கூடாரத்திற்குள் ஒட்டகம் (Dragon 🐉) முக்கால்வாசி வந்துவிட்டது.
இந்த சீன அதிர்ச்சியினால், டயர், மின்னணு சாதனங்கள், அறைகலன்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் அமெரிக்க தொழிலகங்கள் சரிவைச் சந்தித்தன. விலை மலிவான சீனப்பொருட்களுடன் அவைகளால் போட்டியிட முடியவில்லை. டென்னிசியில், யூனியன் சிடியில் குட் இயரின் 2 மில்லியன் சதுர அடியில், இயங்கி வந்த, நடுத்தர மக்களின் வாழ்வாதாரமான தொழிற்சாலை மூடப்பட்டதில், 1900 வேலைகள் பறிபோயின. அவ்விடத்தின் பொருளாதாரம் பள்ளத்தில் விழுந்தது.
வர்த்தக சீர் உதவி (Trade Adjustment Assistance), யூனியன் சிடி தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்புத் தோழன் என்று சொல்லப்பட்டாலும், அது நிறைவளிக்கவில்லை. பயிற்சி நிலையங்கள் போதிய அளவிலில்லை; அப்படிப் பயிற்சி பெற்றவர்களில் மூன்றில் ஒருவருக்கு மட்டுமே வேலை கிடைத்தது- அதுவும் முன்னர் வாங்கிய ஊதியத்தை விடக் குறைவான சம்பளத்தில்.
199-2011 வரையிலான கால கட்டத்தை ஆராய்ந்த பொருளியலாளர்கள், அமெரிக்கா, 2.4 மில்லியன் வேலைகளை, சீனப் பொருட்களை இறக்குமதி செய்ததால் இழந்தது என்று சொல்கிறார்கள். நாடு முழுவதையும் எடுத்துக் கொண்டால், இது ஒன்றும் அத்தனை பெரிய பாதிப்பு இல்லையெனச் சொன்னாலும், மாநில, மாவட்ட, ஊரக அளவில் இது பெரியதொரு தாக்கமே. கொடுக்கல்- வாங்கல் சமமாக இல்லை. சீனாவின் ஏற்றுமதி அதிகரிக்க, அமெரிக்காவின் இறக்குமதி அதிகரிக்க, வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) நிலை மோசமானது. ஒரு பக்கம் தானியங்கி சாதனங்கள், உற்பத்தியில், வினியோகத்தில், இடம் பிடிக்க மற்றொரு புறம் அன்னிய நாடான சீனா வணிகத்தில் மேல் நிலை அடைய, வேலை வாய்ப்புக்கள் மனிதர்களுக்குக் குறைந்து வந்தன.
2000த்தின் தொடக்கங்களிலேயே, வாஷிங்டனின் ‘சீனப் பந்தய’ (China Bet) விளைவுகள் உணரப்பட்டுவிட்டன. மேல்சபையின் (Senate) வெளியுறவுக் குழுவின் தலைவர், ஜோ பைடன், 2008ல், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் சம நிலையில் இல்லாததைப் பற்றிய கருத்துக்களை வரவேற்றார். தான் வாங்குவதை விட அதிகமாக பொருட்களை அமெரிக்காவிற்கு விற்ற சீனா, அதிலிருந்து கிடைக்கும் இலாபங்களை, அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் முதலீடும் செய்து, தன் செல்வ நிலையை உயர்த்திக் கொண்டது. சீனாவின் மிகப் பெரிய கடனாளியாகியது அமெரிக்கா. இந்த இக்கட்டிற்கு எளிய தீர்வும் கிட்டவில்லை.
பாலாறு பாய்வது போன்ற மாயத் தோற்றம் பலரையும் மயக்கியது; கடன் குறைந்த வட்டியில் கிடைத்தது, பொருள் மலிவாகக் கிடைத்தது, அடமானங்கள் எளிதாகின, வெளி நாட்டு முதலீடுகள், வால் ஸ்ட்ரீட்டை மகிழ்ச்சி கொள்ள வைத்தன, சிறிது காலம் வரை.
2008ல் முழு நிதி அமைப்பும், வீழ்ச்சி தரும் நிதி அமைப்புகள் மற்றும் அவற்றின் திட்டங்களால் பாதிக்கப்பட்டு தள்ளாடியது. மாபெரும் நிதி நிறுவனங்களான மார்கன் ஸ்டேன்லி, (Morgan Stanley) ப்ளேக் ஸ்டோன், (Blackstone) CITIC நிறுவனத்தின் பங்காளியான ‘பியர் ஸ்டீம்ஸ்’ (Bear Stearns’) ஆகியவற்றில் அதிக முதலீடு செய்த சீனா, அமெரிக்க அரசிற்கு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் மேலாக கடனும் கொடுத்திருந்தது. தங்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று சீன மத்திய வங்கியை வேண்டிக் கொள்ளும் நிலை வந்தது.
உள் நாட்டு நிலை தடுமாறியது; இரட்டை இலக்க ட்ரில்லியன் டாலர்களில் வீட்டுச் சொத்துக்களை இழக்க வேண்டி வந்தது, இலட்சக்கணக்கில் வேலையிழப்பு ஏற்பட்டது, வீடுகளும் போயின. இதைப் போன்ற அதிர்ச்சி, அரசியலிலும் ஏற்பட்டது. இந்தச் சிக்கலிலிருந்து உதித்த ‘தேநீர்க்கூடுகை’ (Tea Party) பிணையெடுத்தலுக்கும், உலகமயமாக்கலுக்கும் எதிராக, தீவிர வலது சாரியை நோக்கி திசை திருப்பி, சிக்கனமாக இருக்க வாஷிங்டனை அறிவுறுத்தியது; மீட்சி என்னவோ நொண்டிக் கொண்டிருந்தது. இந்த அதீதத்தை சமன் செய்ய, இடது சாரி, ‘வால் ஸ்டீர்ட்டை கையகப்படுத்து’ என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கியது. இதில் உண்மையில்லாமலில்லை.
நடுத்தர வர்க்கத்தின் நிதி நிலை 1999ல் இருந்த நிலையிலேயே தொடர, பங்கு வர்த்தகச் சந்தை மும்மடங்கு பெருகியது. மிகு பணக்காரர்களுக்கான தர அடையாளப் பொருட்கள் வளர்ச்சிபெற்ற அதே நேரத்தில் தொழிற்சாலைகள் தேங்கின, வாய்ப்புகள் இல்லாமலாயின. பலகாலங்களாக, உலகமயமாக்கலை விதந்தோதியவர்கள் கூட வணிகம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அதிகமாக்கிவிட்டது என்று சொல்லலாயினர்.
சீனாவில் ஷி ஜின்பிங்க், அரசியல் கட்சியின் ஆதிக்கத்தை மேலும் வலுவாக்கினார். சீன நிறுவனங்கள் அதிக அளவில் உளவு பார்ப்பதை அமெரிக்கா கண்டறிந்தது. உற்பத்திப் பொருட்களின் அமைப்புக்களைத் திருடி அதன் எளிய வடிவை உண்டாக்கி, தன் பொருட்களைத் தயாரித்து, சீனா, பொருளாதார இணையக் களவில் ஈடுபட்டு கபட வர்த்தகம் செய்து சந்தையைக் கைப்பற்றியது. அலிபே, டென்பே போன்ற செயலிகள், உள் நாட்டு வங்கிகளின் பெரும்பான்மையான செயல்களுக்கு மாற்றாக உருவெடுத்து, பொது வெளியில் புழங்கின. இந்தச் சவாலை சமாளிக்க, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உரிமங்களுக்கு வரம்பு நிர்ணயித்தார்கள், மீறுபவர்கள் கப்பம் கட்ட வேண்டும், நிலப்பகுதி வாரியான உரிமங்கள், செயல் எல்லைகள், கைது நடவடிக்கை எல்லாம் எடுக்கப்பட்டன- ஒழுகும் நீர்க்குழாயை சரி செய்ய அரசு களத்தில் இறங்கியது.
சீன அரசியலின் இரும்புப்பிடியை வாஷிங்டன் ஒருவாறு உணரத் தொடங்கியது. பந்தயம் தோற்றுவிட்டது. தன்னுடைய இரண்டாம் ஆட்சி காலத்தில், ஒபாமா, சீனாவைக் கட்டம் கட்டி வெளியேற்றுவதற்கான வழிகளைச் சிந்தித்தார். ட்ரான்ஸ்-பஸிபிக் கூட்டணியின் (TPP)மூலம், ஜப்பான், கொரியா போன்ற தேசங்கள் பெய்ஜிங்கின் வலைக்குள் சென்றுவிடாதிருக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், இதை விரைந்து செயல்படுத்த அவருக்கு இருந்த அதிகாரம் போதவில்லை; பல அதிகார வர்க்க அரசியல்வாதிகள், நிலைமை இன்னமும் மோசமாகுமோ என்றே இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்களை வரவேற்கத் தயங்கினார்கள். ஒபாமாவின் துணை அதிபரான ஜோ பைடனே, ட்ரான்ஸ்-பசிபிக் பங்காளிகள் அமைப்பைப் பற்றி ஐயம் கொண்டிருந்தார். எந்த வணிகம் ‘உலக வர்த்தகத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்’ என்று எண்ண வைத்ததோ, அதுவே மின்னதிர்ச்சியை ஏற்படுத்த, டி பி பியை கைவிட நேர்ந்தது.
NAFTA, சீனாவின் உலக வர்த்தக நுழைவு, ஆகியவற்றால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்துவந்த வாக்காளர்கள், பணக்காரர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தவிப்பதற்குமான காரணங்களைக் கேட்டார்கள். வாஷிங்டன் எந்தவொரு உலக ஒழுங்கைக் கொண்டாடியதோ, அதையே காரணம் என்று பெர்னி சான்டர்ஸ், (Bernie Sanders), மற்றும் (டோனால்ட் ட்ரம்ப்) Donald Trump காட்டினார்கள்.( Carrier Corporation) கேரியர் கார்பரேஷன் தங்கள் குளிரூட்டி (Air conditioner)உற்பத்தியை மெக்சிகோவிற்கு மாற்றியதில், இண்டியானா (Indiana) போன்ற மக்கள் பெருக்கம் நிறைந்த நகரங்களில் உலகமயமாக்கலின் உண்மைத் தாக்கம் எளிதில் பொது மக்களுக்குத் தெளிவாயிற்று.
வெள்ளை உழைக்கும் வர்க்க வாக்காளர்களிடம் தேவைக்கும் அதிகமான விதத்தில் உன்னத எதிர்காலத்தை வரைந்து காட்டிய ஹில்லாரி க்ளிண்டனின் வரைபடம், பல்லாண்டுகளாக இதில் ஏமாற்றமடைந்த நகர்ப்புற வாக்காளர்களிடம் எடுபடவில்லை. இதில் மிகவும் வருந்தத்தக்கது ஒன்றுண்டு- தரவுகளின் ஆதாரத்தில் தன் பரப்புரையை அதிகமாக நகர வாக்காளர்களுக்காக அமைத்தார் அவர்; தொழிற்சாலை மிகுந்திருக்கும் பகுதிகள், ரேகனின் ஜனநாயக மையங்கள் கை நழுவிப் போயின.
2016 தேர்தலில் க்ளிண்டன் தோற்றார்; பல முகாந்தரங்கள் -கலாசார கவலைகள், இன வெறுப்பு, கடினமான பொருளாதார நிலை அனைத்தும் பின்னிப் பிணைந்து, உலகமயமாக்கல் உள்ளூரில் செல்லுபடியாகவில்லை எனக் காட்டியது. ட்ரம்பின் மூன்று சொற்கள்- ‘சீனா, வணிகம், வேலைகள் ‘மக்களின் பேராதரவைப் பெற்றன. சீனாவால் பாதிக்கப்பட்ட இடங்களில், 100க்கு 89 இடங்களில் அவர் முன்னிலை பெற்றார். ‘உற்பத்தியை உள்னாட்டில் மலரச் செய்வோம்’ என்ற அவரது முழக்கம் சரியாக செயலாக்கம் பெறவில்லை; தன் கொள்கைகளில் அவர் எப்போதுமே நிலை நின்றவரில்லை; NAFTA சிதறியது; எஃகு, மற்றும் பல சீனத் தயாரிப்புகளுக்கு அதிக சுங்க வரி விதித்தாலும், நிறைய வரிச் சலுகைகளை அளித்து, வணிகப் பற்றாக்குறையை அதிகப்படுத்தி, அதனால், மேலும் இறக்குமதி அதிகரிக்கும் நிலையை உண்டாக்கினார். இந்த சுங்க வரிச் சலுகை, வணிகத் துறையை தொழிலகங்களின் வாயில் காப்போன் என்ற நிலைக்குத் தள்ளியது- 30 அலுவலகர்கள், அதிகப்படியான வேலைச் சுமை, புது சுங்க வரி கொள்கையின்படி, தங்களுக்கு வரிச் சலுகை கேட்டுக்கேட்டு விண்ணப்பித்த இலட்சக்கணக்கான நிறுவனங்கள். வீங்கிக்கொண்டே வந்த வர்த்தக பற்றாக்குறை குறையவில்லை; அவரது முதலாட்சி முடியும் நேரத்தில், முன்பிருந்ததை விட தொழிலகங்களில் வேலைகளின் எண்ணிக்கை குறைந்து போயிற்று.
பெருந்தொற்றுக் காலத்திற்கு சில தசாப்தங்கள் முன்னாலே, உற்பத்திகள் முழுமையாக ஒரே இடத்தில் நடக்கத் தேவையில்லை என்ற கொள்கையால் உலகை அமெரிக்கா பிணைத்தது; ‘சரியான சமயத்தில்’ என்பது பல பன்னாட்டு நிறுவனங்களின் மந்திரச் சொல்லானது. உதாரணமாக, காரின் டயர்கள் ஒரு நாட்டில், கியர் பெட்டி மற்றொரு நாட்டில், இன்ஜின் வேறொரு நாட்டில், இதைப் போல காரின் பல்வேறு பகுதிகள் பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு ஒரு நாட்டில் கூட்டுவிக்கப்பட்டு, முழுதான வடிவம் பெற்றன; உற்பத்திக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே சேமித்தல், பராமரித்தல், முதலில் வந்த பாகங்களை அன்றைய சந்தை நிலவரத்தின்படி உற்பத்திக்கு எடுத்துக் கொடுத்தல், அல்லது கடைசியில் வந்தவற்றை முதலில் பயன்படுத்துதல் இவையெல்லாம் ‘ஸ்டாக் மேலாண்மை’யின் தலைவலிகள். இந்தத் தனித்தனியாக பாகங்களை உற்பத்தி செய்யும் முறை, வழித்தடம் மற்றும், கப்பல், ஆகாய மார்க்கம், தரை மார்க்கம் செயல்முறையால் வழி நடத்தப்பட்டு ‘சரியான சமயத்தில்’ இயங்க உதவி செய்தது.
பகுதிகளும், பாகங்களுமாக உலக வர்த்தகம் நடைபெற்றது- முழுப் பொருளாக அல்ல. போயிங் 787 இதன் சிறந்த எடுத்துக்காட்டு- ஜப்பானிய இறக்கைகள், இத்தாலிய நிலைநிறுத்திகள், பிரித்தானிய இஞ்சின் அற்புதம் தான்; கவரும் ஒன்று, வீழ்ச்சிக்கும் இரையாகுமே!
தையல் சேரும் இடத்தில் உடையில் கிழியத் தொடங்கி பெருகுவதைப் போல, பெருந்தொற்று இந்த பாக, பகுதி உற்பத்தியையும், அவற்றின் போக்குவரத்தையும் அதிகமாகப் பாதித்தது. சீனாவில் இயங்கி வந்த துணை நிறுவனங்கள் ஊரடங்கால் ஸ்தம்பிக்க, உயிர் காக்கும் காற்றோட்டக் கருவியிலிருந்து, மைக்ரோ சிப்ஸ் வரை அனைத்தும் ‘தகுந்த நேரத்தில்’ கிடைக்கவில்லை. துறைமுகங்கள் இயங்க முடியவில்லை; பொருட்கள் தேங்கிக் கிடந்தன. மூன்றரை நாட்களில் முடிய வேண்டிய ஒரு சுற்றுப்பயணம் இரு வாரங்களுக்கும் மேலாகியது; இது வெறும் திறன் பற்றாக்குறை அல்ல; தகவல் பற்றாக்குறை. ஐந்து விரல்களும் தனித்தனியாக இருந்தாலும், ஒன்றாகச் சேர்ந்தால் தானே செயல்பட முடியும்? பாக உற்பத்தி இடத்திலிருந்து, ரயில் மூலம் வந்து, வாகனங்களில் பயணித்து பின்னர் துறைமுகம் சேர்ந்து, கப்பலிலோ, விமானத்திலோ பயணித்து, முழுமை பெறும் மையத்திற்கு பகுதிகள்-பாகங்கள் வந்து சேராமல், தன் குழியை, உற்பத்தியும், வணிகமும் தாமே வெட்டிக் கொண்டன. திறம்படச் செய்தலும், மீட்சியும் ஒன்றல்லவே?
பொருள் கிடைக்காத நிலை மாறிவிடும் என்று ட்ரம்ப் எத்தனை உறுதி கொடுத்தாலும், தானியங்கள் தொடங்கி, கணினி வரை வியாபார நிறுவனங்களில் கிடைக்கவில்லை. ஜோ பைடனாவது இந்தச் சிக்கலிலிருந்து மீட்பாரா என்று 2020ல் தேசம் அவரை நாடிற்று. முக்கிய விநியோக சங்கிலியை சீராய்வு செய்வது அவரது முதல் 100 நாட்களின் முக்கியப் பணி என்று சொன்னார் அவர். FLOW என்ற தளத்தில், தொழிற்சாலைகளையும், முகவர்களையும் தகவல்களைப் பதிவிட்டு பரிமாறிக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்தார்- நமக்கு வர வேண்டிய பாகம் எங்கிருக்கிறது என்ற ஒரு தெளிவு பிறந்தது; வணிகச் செலவுகள் குறையத் தொடங்கின; ஆனால், பணவீக்கம், அரசியலை பாதித்தது.
ட்ரம்ப் சீனப் பொருட்களின் மீது விதித்திருந்த சுங்க வரிகளை பைடன் மாற்றவில்லை; மேலும் மற்றொன்றும் செய்தார். அமெரிக்கா தன்னை மீண்டும் கட்டி எழுப்பும் வரை எந்தச் சந்தைகளையும் திறந்துவிடும் ஒப்பந்தங்கள் கிடையாது- தேச மக்களுக்கு நிறைய பயிற்சி வழங்கப்படும்- சுதேசி பொருட்களை வாங்குவதற்கு அதிக அழுத்தம்- வணிக பேச்சுவார்த்தைகளில், ‘தொழிலக மற்றும் தொழிலாளர்களின் நலம் வலியுறுத்தப்படும் என்பவையெல்லாம் முக்கிய திட்ட வரையறையாக இருந்தன. $53 பில்லியன் டாலர் திட்டமான CHIPS and Science Act, அவரது செயல் திட்டம் என்று சொல்லப்பட்டது- குறைகடத்திகளுக்கான உள் நாட்டு உற்பத்திக்கான முன்னெடுப்பாக அது விளங்கியது.
ஒஹையோவில் இன்டெல், அரிசோனா, டெக்ஸாஸ், ந்யூயார்க்கில் குறைகடத்தி உற்பத்தி தொழிலகங்கள், எழுச்சி பெற்றன. 1970களில் தொழிலகங்களில் பணிபுரிந்தோர் எண்ணிக்கையை அடையும் நோக்கமில்லை- பரந்த, சிறிய, நிலையான விநியோகக் கட்டமைப்பும், உள்நாட்டு உற்பத்தியும் குறிக்கோளாக இருந்தது. அது அன்னியருக்கான வேலி.
(அடுத்த பகுதியில் மேலும் அறிவோம்)

உசாவி:
The World’s Worst Bet by David J. Lynch
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.






One Reply to “நழுவும் பாதரசம்”