யஜுர் வேதத்தில், ருத்ரம், சமகம் (Rudram, Chamakam) என்று வரும் பகுதிகளில், சமகம் என்பது ‘மே, மே’ என்று வரும். இந்த ‘மே’க்குப் பின்னணியாக ஒரு கதை உண்டு. தக்ஷனின் யாகமும், சிவனுக்கு அவன் அவிஸ் தராததையும், தாக்ஷாயணி தன்னை மாய்த்துக் கொண்டதையும், சிவன் ருத்ர மூர்த்தியாக தட்சனை வதம் செய்ததையும், பின்னர் விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் சிவனை அணுகி வேதம் முற்றும் அறிந்த ஒருவனை இழந்துவிட்டோமே என்று வருந்தி முறையிட்டதையும், சினம் தணிந்த ஐயன், தக்ஷனின் உடலில் பொருத்த ஒரு சிரம் கொண்டு வந்தால், அந்த ஞானத்தை உயிர்ப்பிக்கிறேன் என்று சொன்னதையும் நாம் அறிவோம். அவர்கள் அப்போதுதான் இறந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்டின் தலையைக் கொண்டுவர, அதை தக்ஷனின் உடலில் இணைத்தார் சிவன். ஆடு ‘மே, மே’ என்று குரல் எழுப்புவதைப் போல, தக்ஷன் தன் சமகத்தைச் சொன்னார். மாற்று உறுப்பு பொருத்தப்பட்ட உலகின் முதல் உயிர் இது. கற்பனையாக இருந்தாலும், இதைச் சிந்தித் திருக்கிறோம் அல்லவா? (இந்த சமகத்தில் இருக்கும் கணிதத்தையும், இயற்பியலையும் நான் புரிந்துகொண்டவாறு ஒரு நாள் எழுத வேண்டும்.)
இந்த உலகில் மிகவும் சிக்கலானதும் நுணுக்கமானதும் உடல் தான். இதற்கான மாற்று பாகங்களை, அதன் தயாரிப்பாளர் தருவதில்லை.
திருமூலர் சொல்கிறார்:

பல நூற்றாண்டுகளாக மருத்துவம் மாற்று உறுப்புக்களை (Replaceable Body Parts) தயாரிக்க முயற்சி செய்து வருகிறது. பித்தளையிலிருந்து மூக்கை செதுக்குவதும், தவளைகளிடமிருந்து தோலைப் பெறுவதும், பன்றிகளிடமிருந்து இதயத்தை பெறுவதும், பெட்ரோலிய துணைப் பொருட்களைக் கொண்டு மார்பகங்களை சீர் செய்வதும் நடந்து வருகிறது. இன்று ஸ்டெம் திசுக்களில் (Stem cells) இருந்து முப்பரிமாண அச்சு (3D Printing) வரை முன்னேறி வந்துள்ளோம் ஆயினும், ஒரு உடலுக்குத் தேவையான அனைத்து பகுதிகளையும் நம்மால் உருவாக்கிவிட முடியுமா? இந்த அழகிய கேள்விக்கு நகைச்சுவையும், மருத்துவ அறிவியல் கலந்தும், இப்படியான உடல் பாகங்களைத் தயாரிக்கும் பல ஆய்வுக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் நேரடியாகச் சென்றும், மேரி ரோச், “Replaceable You”- Adventure in Human Anatomy) என்ற ஒரு சிறப்பான நூலை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதிகளை நாம் இங்கே பார்க்கலாம்.

ஆய்வாளர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், அங்கங்களை இழந்தவர்கள், சிறுநீரகங்களுக்கான அச்சு செய்பவர்கள், உடுத்தக்கூடிய உறுப்புக்கள் (!) தயாரிப்பவர்கள் என்று பலரிடம் அவர் நேரில் சென்று உரையாடி அதை சரி பார்த்து இந்த நூலைத் தந்திருக்கிறார்.
இதில் குறிப்பாக கீழ்க்கண்ட கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
வடிவமைப்பு :
- உதாரணமாக முப்பரிமாண இதய உள் குழாய்களோ, மரபணு திருத்தப்பட்ட பன்றி இதயமோ எளிதாக அமைக்கப்படுவது கடினமே. மனித இதயத்தை போலவே மிகச்சரியாக ஒன்றை செயற்கையாக உருவாக்குவது என்பது சவால்கள் நிறைந்தது.
முன்னேறி வரும் மருத்துவம்
- விலங்கிலிருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதும், ஸ்டெம் திசுக்களில் இருந்து முடிப் பண்ணையை உருவாக்குவதும், செயற்கை சிறுநீரகங்களை அமைப்பதுமாக, சிறப்பாக மருத்துவமும், தொழில் நுட்பமும் செயல்பட்டு வருவதை எடுத்துச் சொல்கிறார்.
வரலாறு
- இப்படியான மாற்று அறுவை சிகிச்சை முயற்சிகள் பொ யு 1500 லிருந்து நடைபெற்று வந்துள்ளது என்பதையும் பதிவு செய்கிறார்.
இந்திய ஆயுர்வேத முறை, உடலை ஒரு இயக்கம் இல்லாத இயந்திரமாகவோ, அதற்கான மாற்றுப் பொருட்களை தயாரிப்பதையோ முன்னிறுத்திச் சொல்லவில்லை என்றாலும், உடல் உறுப்பை சரி செய்வதும், மாற்றுவதும் அறுவை சிகிச்சையினால் செய்ய முடியும் என்று சொல்கிறது. 1938ல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். இப்போது இந்த துறையானது கிரிஸ்பர் (CRISPER) முதலான மரபணு திருத்தங்கள் மூலம் பல அற்புதங்கள் செய்து வருகிறது. எனினும், பயணிக்க வேண்டியது தூரம் அதிகமே. ஸ்டெம்சன் சிகிச்சையகம், முடி இல்லாமல் வருந்தும் மனிதர்களுக்கு, ஒரு நல்ல சிகிச்சை முறையை கொண்டு வந்தது. நுண்ணறைகள் கொண்டுள்ள இயற்கை அமைப்பைப் பார்த்து, இரு கட்டமைப்பாக, அதாவது தோல் பரப்பில் குட்டிக்குட்டி விரல்கள் போல ஒன்றும், கெரட்டினோசைட்டும்(Keratinocytes) இணைந்து செயல்படும் வகையில் குமிழ்களை அமைத்தார்கள் ஆனால் அவற்றால், உள்ளிருக்கும் முடியை வெளிக்கொண்டு வர முடியவில்லை. அந்த நுண்ணறைகளில் சிறு குழாய்களை அமைத்தார்கள். இரு விதமான திசுக்களை சிறப்பானதொரு நூலின் மூலம் இணைத்து அவை பிணைந்த உடன் அந்த நூலை வெளியே எடுத்தார்கள். மிகவும் சிக்கலான, ஆனால் பொறியியல் அற்புதம் செய்த மாயம் இது. ஆயினும், இந்த ஸ்டெம்சன் நிறுவனத்தால் தொடர்ந்து இயங்க முடியவில்லை.

மேரி ரோச்சின் மற்றொரு அனுபவம் சீனாவில் பன்றிக்குட்டிகள் வளர்க்கப்படுவதை நேரில் பார்த்து வியந்த ஒன்று. அந்த இடம் உலகின் மகா சுத்தமான இடம் என்றே பராமரிக்கப்பட வேண்டும்; அப்படியேதான் செயல்படுகிறது. நோய்க்கிருமிகள் அங்கே இடம்பெறக்கூடாது. பதுங்குகுழி போன்ற இடத்தில் வேலை ஆட்கள் மூன்று மாதங்களுக்கு வசிக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியே செல்வதில்லை. அவர்களும் பன்றிகளும் மட்டும் தான். 40 வகையான நுண் கிருமிகள், தொற்றுக்கள், பூஞ்சைகள் இவைகளுக்காக பன்றிகள் பரிசோதிக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி பயன்படுத்தப்படுகிறது. அவை உட்கொள்ளும் உணவும் கதிர்வீச்சால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் எதற்காக? மனிதனுக்கான மாற்று இதயத்தைத் தருவதற்காக.
ரோச் சொல்கிறார், ‘நமக்கு நல்லூழ் இருந்தால் நமது இதயம் 80 வயதுக்கு மேல் கூட தொடர்ந்து துடிக்கும்.’
இவரை இந்த நூலை எழுதத் தூண்டியது எது? முதுகெலும்பும், முதுகுத்தண்டும், சரியாக இணையாமலோ, மூடப்படாமலோ இருப்பது’ spina bifida’ என்று சொல்லப்படுகிறது.
அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை ரோச் சந்திக்கிறார். அந்தப் பெண்ணிற்கு, கால் வளைந்து போனதால் நடையில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பெண் தன் பாதத்தை அறுவை சிகிச்சை செய்து அகற்றி, அந்த இடத்தில் செயற்கை விரல்களைப் பொருத்துமாறு கேட்கிறார். ஆயினும், நல்ல நிலையில் இருக்கும் விரல்களை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. மேரிக்கு இது வியப்பை அளித்தாலும், பாதத்தை எடுப்பது என்பதில் அதிக நுணுக்கங்கள் இடம்பெற்றுள்ளன என்பது தெளிவாகிறது.
நம் உடற்கூற்றை, குறிப்பாக உறுப்புகளை மாற்றி அமைப்பதில் மரபணு திருத்தம், முப்பரிமாண அச்சு நுட்பம், ஆகியவை எத்தகைய முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அவர் விவரிக்கிறார். கார்னிகி மெல்லன் பல்கலை ஆய்வகத்தில், அறிவியலாளர்கள் ஒரு முப்பரிமாண அச்சு கொண்டு மிகச்சிறிய ரத்தக்குழாயை வடிவமைத்தனர். இந்தக் குழாயின் மூலம் ஒரு எலியின் இதயத்தை துடிக்க வைப்பது நோக்கம். இன்றைய அதிபர் ட்ரம்ப், மருத்துவ ஆய்விற்கு வழங்கப்படும் வரும் நிதியைக் குறைப்பதால், புது கண்டுபிடிப்புகள் தேக்கம் அடைகின்றன என்று சொல்கிறார் மேரி. எதிர்காலத்தில், மருத்துவ உதவியும், புதுப்புது கண்டுபிடிப்புகளும் என்ன நிலைக்கு உள்ளாகும் என்று நினைப்பதே வேதனையாக இருக்கிறது என்றும் அவர் பதிவு செய்கிறார்.

மீண்டும் பன்றிகளுக்கு வருவோம். ஏன் அவற்றை நாம் உறுப்பு மாற்றத்திற்கு பயன்படுத்துகிறோம்?
ஹார்மெல் (Hormel) என்ற பன்றி இறைச்சி கம்பெனி, முதலில் இறைச்சியை பதப்படுத்த தொடங்கியது. 40, 50, 60களில் ‘மேயோ கிளினிக்கின்’ ஆராய்ச்சி அங்கமான ‘மேயோ பவுண்டேஷன்,’ இந்த ஹார்மெல் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்தது. அதன் நோக்கம் சிறு பன்றிகளை உருவாக்குவது; மனித உறுப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்க மட்டுமல்ல, அந்த உறுப்புகளின் செயல்பாட்டிற்காகவும் சிறு பன்றிகள் தேவைப்பட்டன. பன்றிகளுக்கு ரத்தக்குழாய் சார்ந்த நோய் வருகிறதா என்று பரிசோதிக்கவும் பட்டது. ஆம், வந்தது. ஒரு வெளியீட்டில் பன்றி என்பது பருமனான மனித இனத்தின் வடிவம் என்று விவரித்திருந்தார்கள். அதாவது, அதற்கும் இதய நோய் வருகிறது, இதயத் திசுக்கள் இருக்கின்றன, தேவையான அளவு உடற்பயிற்சி இல்லை. எனவே, மனிதனுடன் பன்றி மிகவும் பொருந்திப் போகிறது. நம் புராணங்களில், திருமால், வராக அவதாரம் எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. பன்றி உறுப்புகளும்- மனித உறுப்புகளும் என்று நீண்ட நெடிய ஆய்வுகள், குறிப்பாக வடிவம், செயல்பாடு இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டுமென்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மிக அதிக அளவில் ஆய்வறிக்கைகள் வெளிவருகிறது. கல்லீரல், சிறுநீரகம் பற்றி மட்டுமல்ல, ‘Orthodontia’ என்று சொல்லப்படும், தாடையும் பற்களும் சரியாக இணையாத ஒரு குறைபாட்டிற்கும் பன்றிகளைக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவற்றிற்கு பற்களில் ‘brass’ பொருத்தினார்கள். ஒரு தொடர்முறையாக, மனிதனுக்குத் தேவையான மாற்று உறுப்பிற்காக, அதுவும் அறுவை சிகிச்சை முறைக்கேற்றதாக, நுண் வழிமுறையாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, படைப்பில் நாம் காணும் விலங்குகளில், பன்றிக்கு அதிக மகத்துவம் ஏற்பட்டுவிட்டது. யாருக்குத் தெரியும், ஒரு நாள், ஆடுகளைக் கூட ஆய்வுக்கு எடுத்துக் கொள்வார்கள்!!
ஒரு பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்றுக்கொள்ளுமா?
பொதுவாக, கடுமையான எதிர்ப்பு இருக்கும். இதை மிகத் துல்லிய மறுப்பு (hyperacute) என்று சொல்கிறார்கள்; உடல் அந்த மாற்று உறுப்பை தள்ளப் பார்க்கிறது ;அந்த உறுப்பு பயன்படாமலும் போகிறது. ஒரு பன்றியின் உறுப்பை, மரபணு திருத்தம் செய்யாமல் மக்களுக்குப் பொருத்தப் போவதில்லை. அத்தகைய ஒரு திருத்தத்தை ஆல்ஃபா கேல் (Alpha gal)புரத சீரமைப்பு என்று சொல்கிறார்கள். அந்தப் புரதம் மேற்பரப்பில் உள்ள ஒன்று. அதை நீக்கிவிட்டால், அந்த பன்றி உறுப்பை பன்றி உறுப்பு என்று உதறாமல், மனிதனுடைய உறுப்பென்றே உடல் கருதிக் கொள்கிறது. இப்போது நாம் எதிர்கொள்ளும் இந்த துல்லிய மறுப்பு, மனித உறுப்பை மனிதனுக்கு மாற்றும் அறுவை சிகிச்சையிலும் ஏற்படுகிறது. எனவே, இரு முறைகளிலும் (மனிதனிடமிருந்து மனிதனுக்கு, விலங்கிடமிருந்து மனிதனுக்கு) நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது; அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதின் மூலம் தான், இந்த உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாகிறது.
இப்படி பன்றி உறுப்பினை மனிதர்களுக்கு பொருத்துவதில் மதம் அல்லது மரபு அல்லது இரண்டும் சேர்ந்த சிக்கல்கள் இருக்கின்றனவா?
யூத மதமும், இஸ்லாமியமும், வேறு விலங்கினை தேர்ந்தெடுத்து இருக்கலாமே என்று அறுவை நிபுணரிடம் கேட்டார்களாம். அதே கேள்வியை நூல் ஆசிரியரும் கேட்டிருக்கிறார். “நீங்கள் யூத உணவு முறையான கோஷரை (Kosher) பயன்படுத்துபவர் என்றாலும், பன்றி உறுப்பைத் தானே பொருத்துகிறோம், அதை உண்ணச் சொல்லவில்லையே; மேலும் உயிரைக் காப்பாற்றத்தானே இதை பயன்படுத்துகிறோம்” என்று அவர் பதில் அளித்திருக்கிறார்.
பல மதங்களைச் சேர்ந்த குருமார்கள், இவர்களுடன் விவாதங்கள் நடத்தி, ‘பன்றியை உணவாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதால், பன்றி உறுப்பை பொருத்திக் கொள்ளலாம்’ என்று ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.
தசைகள், திசுக்கள் இவற்றின் முப்பரிமாண அச்சுக்களில் பரிசோதனைகள்


பிட்ஸ்பெர்க், கார்னிகி மெல்லன், Feinberg ஆய்வகத்தில் நூலாசிரியர் ஒரு நாள் முழுதும் இருந்து அங்கே என்ன செய்கிறார்கள் என்று நேரில் பார்த்திருக்கிறார். செல்களின் சீரமைப்பால், தசைகள் உருவாகி அது எந்த செயலை செய்ய வேண்டுமோ அதற்கு ஏற்ப உருப் பெறுவதற்கான முயற்சிகள் அங்கே நடைபெற்று வந்துள்ளன. உதாரணமாக, இதயத்தின் இயக்கம் என்பது திருப்பம் சார்ந்தது. அது காற்றழுத்த விசைக் குழாயாக, குருதியை உடலில் இயக்குகிறது. எனவே அத்தகைய செல்களை ஏற்படுத்த வேண்டும் அவை, திருகு சுழல் அல்லது சுருளி போல் இருக்க வேண்டும். இது தொடைதசை நாரை விட மாறுபட்ட ஒன்று. ஏனெனில், தொடைதசைநார்கள் இணையாகச் செல்பவை; தோள்பட்டை தசைகள், ஒரு காற்றாடி போல இருந்தால் தான், பல வகையான இயக்கங்களுக்கு உதவும். எனவே பொதுவான தசைகளை அச்சு செய்யத் தேவையில்லை. அது என்ன செயல்பாட்டிற்கு தேவையோ, அந்த தசையின் இயற்கை அமைப்பு எப்படி இருக்கிறதோ, அப்படி அதை வடிவமைக்க வேண்டும். இது மிகவும் வியக்கத்தக்க விஷயம். மொத்த உறுப்புக்களையும் இன்று யாரும் முப்பரிமாணமாக அச்சு செய்வதில்லை; அது எதிர்காலத்தில் நடக்கலாம். இன்று இந்தத் துறையில் வடிவங்கள் எப்படி அமைக்கப்படுகின்றன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். ஒரு மனிதர் நுரையீரல் புற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்; அவரது நுரையீரலை ஸ்கேன் மற்றும் எம் ஆர் ஐ மூலம் உருபடங்களாகப் பார்த்து, அதை முப்பரிமாணத்தில் வெவ்வேறு கோணங்களில் சலித்து, வடிவம் எப்படி உள்ளது, எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிந்து, வடிவ மாதிரியை நெகிழிகளின் மூலம் அமைத்து, அதில், எப்படி அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்ற முறைகளை பரிசீலித்து, அவை ஏற்கக்கூடிய ஒன்றாக அமைந்தால், அந்த மாதிரியைக் கொண்டு சிலிக்கான் மற்றும் எலும்பு இணைப்பு பசையால் பிணைத்து ஒரு உறுப்பாகச் செய்கிறார்கள்-இது செயற்கை உறுப்பு. விலங்கிலிருந்து இந்த நுரையீரலை அறுவடை செய்யும் முன், மேற்கூறிய அத்தனை பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அந்த உறுப்பு பொருத்தப்பட்டால் அது xenotransplantation.
உறுப்பு தானங்களில் இருந்து திசுக்களை மீட்பது சோர்வு தரும் ஒன்று. அந்த அறையில் அவர்கள் திசுமீட்பில் (Tissue Recovery) ஈடுபட்டிருந்தார்கள். எலும்பு, தசைநார், தோல், இவைகளைப் பிரித்தெடுத்து அவர்கள் திசுக்கள் மீட்பில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் பணிபுரியும் ஒருவர் இது மிகக் கடினமான பணி என்று சொன்னார். ஆசிரியரும் அவ்வாறே நினைத்திருக்கிறார். ஆனால், அந்தப் பணியாளர் குறிப்பிட்டது, “குறி அட்டைகளில் (Labels) கையால் அடையாள எண்ணை, மீள மீள எழுதுவது, இரு முறை சரி பார்ப்பது, அதற்கான பதிவுகள் செய்வது, இறுதியில், தகுந்த பெட்டிகளில் அதை வைப்பது, அதை வெளியே அனுப்புவது” போன்றவை சோர்வு தருகின்றன; மேலும் மகிழ்ச்சியும் இல்லாத பணி என்று அந்தப் பணியாளர் சொல்லியிருக்கிறார். அவரே மேலும் சொன்னாராம், “காலை வெட்டித் திறப்பதோ, அதிலிருந்து எலும்பை, தசைநார்களை எடுப்பதோ சிரமமில்லை; இந்த குறிஅட்டைகள், மீள் பார்வை, பெட்டியில் வைத்தல், தேவைப்படும் இடத்திற்கு அதை அனுப்புதல் ஆகியவை தான் சோர்வுக்கு உள்ளாக்குகிறது.” அந்தப் பணியாளரின் இந்தச் செய்தி மேரி ரோச் எதிர்பாராத ஒன்று.
நம் உடல் எப்படி செயல்படுகிறது என்பதை அதிக அளவில் அறிந்து கொள்ளும் போது அத்தனையையும் நம்மால் உள்வாங்க முடியுமா?
மேரி ரோச் சொல்கிறார் Gulp’ நூலை நான் எழுதிய போது உண்மையில் நம் வாயில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். உணவை மெல்லும் போது, அது உமிழ்நீருடன் கலந்து, நெகிழ்ந்து, சிறு துண்டுகளாக தொண்டை வழியே எளிதாகப் பயணித்து உள்ளே செல்கிறது. உணவு மெல்லப்படுவதையும், அதன் பிற செயல்களையும், தாடைகள் என்ன செய்கின்றன என்பதையும் ஆய்வு செய்யும் ஒருவரை மேரி ரோச் சந்திக்கிறார். உணவகங்களுக்கு இதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே சென்று பார்த்தபோது, மனிதர்கள் வாயில் உணவை மெல்வதை, அதை விழுங்குவதை பார்ப்பது சற்று அருவருப்பைக் கூட தந்தது என்று சொல்கிறார். ‘உணவை சாப்பிடுவதைப் பார்ப்பது’ என்பது இனிய செயலாக இல்லை.
அறிவியலோடு நாமும் பயணிப்போமே.
உசாத்துணை:
https://www.npr.org/2025/09/16/nx-s1-5530048/mary-roach-replaceable-you-anatomy-transplant
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

