காணுமாறு காணேன்

“அங்கே!” என்று, பரந்து விரிந்த வெக்மன்ஸ் எனப்படும் பல்பொருள் அங்காடியின் கார் நிறுத்துமிடமொன்றை நோக்கி, தமயந்தி விரல் நீட்டினாள். “யாராவது எடுத்துவிட்டு போறதுக்கு முன்னாடி, அங்கே நிறுத்துங்கள்,” எனக் குரல் திண்ணமாக ஒலித்தது.

ராமசாமி தனது E-Class மாடல் சில்வர் மெர்சிடீஸ் காரை மெதுவாகச் செலுத்தினார். பல இடங்கள் காலியாகவும் இருந்தன. ராமசாமியின் கரங்கள், தமயந்தியின் விரல் நுனி சுட்டிய இடத்துக்குச் செல்ல, ஸ்டியரிங்கை சுழற்றின.

மதியச் சூரியன் வாகனத்தின் முன்பகுதியில் படர்ந்திருந்தது. மார்ச் மாத வெர்ஜீனியாவில் பிராட்போர்ட்பேர் மரங்கள்  பூத்திருந்தன. இது குளிரின் கடைசி மூச்சா, இல்லை வசந்தத்தின் முதல் நுனியா என்பது தெரியாமல், அம்மலர்கள் குழம்பியிருக்கக்கூடும் என ராமசாமிக்கு எண்ணம் ஓடியது.

ராமசாமி கவனமாகக் காரை நிறுத்தினார். கார் நிறுத்துவதை கவனிக்கும் உணர்கருவி ஒலித்தது. “இப்ப வந்திருக்கும் நியூ மாடல் E-Class ஆக இருந்தா, இன்னும் பார்க்கிங் சுலபமா இருக்கும். இது கொஞ்சம் கஷ்டம்,”  எனச் சொன்னார். “பக்கத்து வீட்டில் பார்த்தாயா? புது E-Class மாடல்; அருமையாக இருக்கு.” இன்ஜினை அணைத்தார். தமயந்தி, “ம்…” என்றாள். யோசனையில் இருந்தாள்

“என்ன யோசனை?” என ராமசாமி கேட்டார்.

இருவரும் இறங்காமல் வாகனத்திலேயே அமர்ந்திருந்தனர். 

“இன்னும் நம்பவே முடியல,”  வாகனம் நிறுத்தும் இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னாள் தமயந்தி.  சரியாக இருந்த தன் பர்பெரி சால்வையைச் சீர்செய்து கொண்டே இருந்தாள். “சுந்தரம்…” குரலையும் அதே போலச் சீர்செய்ய முயன்றாள், முடியாமல், நிறுத்தினாள்..

“மருத்துவர் சொன்னார், எப்பொழுது வேண்டுமானாலும்…,”  சுழன்று முடித்திருந்த ஸ்டீரியங் சக்கரம் விட்டு விழிகளை நகர்த்தாமல் ராமசாமி சொன்னார். “நாம் இன்னும் நேரம் இருக்கும் போலத்தான் நினைத்தோம். அவன் நமது க்ளாஸ்மேட்…”

“கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள்,” மெதுவாகச் சொன்னாள். “ஒரே விமானத்தில் மெட்ராஸிலிருந்து கிளம்பியது நேற்றைக்குப் போல இருக்கின்றது…”

“மிச்சிகன் நாட்கள்….” தன்னையறியாமல் ராமசாமி புன்னகைத்தார்.

“மிக்சிகன் பல்கலைக்கழகம்…புட்பால் விளையாட்டு பார்க்கப் போனது…வகுப்பறை நாட்கள்…நான், நீ, ராகவி, சுந்தரம்…சுந்தரம் ராகவியிடம் புரபோஸ் செய்தது…நினைக்க நினைக்க அனுமார் வால் போல நீள்கின்றது.”  சொல்கையில் தமயந்தியின் கண்கள் விரிந்தன. கைகள் கைப்பையை இறுகப் பற்றின. இன்னொரு கையால் ராமசாமியின் கரத்தினைத் தொட்டாள்.

“அவன் வாலை பிடித்துக் கொண்டே ஓடி ஓடி…. அவன் துருதுருவென உன்னையும், என்னையும், ராகவியையும் இழுத்துக் கொண்டு பாட்டு, புட்பால், நடனம்,தன்னார்வலர் வேலை என …  எனக்கெல்லாம் அவன் ஒரு ரோல் மாடல்.”

“இப்பொழுதும் அப்படித்தான். அழகு.. ருசி இரண்டும் அவனைப் பிடித்து ஆட்டும்”

“அவனுக்கு அழகான பூக்கள் மிகப் பிடிக்கும். ஞாபகம் இருக்கா? தன்னோடு டவுன்ஹவுஸுக்கு பின்புறம் ரோஜா வளர்த்தான். என்ன ரோஜா அது?”

“க்ரைஸ்லர் இம்பிரியல்ஸ், இன்னமும் இருக்கின்றது” என்றார் ராமசாமி. “செக்கச் செவேல்ன்னு இருக்கும். தீபாவளிக்குக் கோவிலுக்குக் கொண்டு வருவான்.”

அவர்கள் இருவரும் இருக்கைகளில் எண்ணங்களின் சுமையுடன் உட்கார்ந்திருந்தார்கள். வெளியில், மக்கள் தள்ளுவண்டிகளைத் தள்ளிக்கொண்டு, தங்கள் சாமான்களை ஏற்றிக்கொண்டு, எதுவும் நடக்கவில்லை போலத்தான் இருந்தனர்.

“அழகான பூங்கொத்து வாங்கவேண்டும்,” சொன்னாள் தமயந்தி. “அவனுக்குப் பிடித்த மாதிரி வாங்கவேண்டும்…”

“நிச்சயம்”

“அவன் இல்லாமல்…” தமயந்தியின் குரல் உடையும் எல்லைக்கு வந்தது. தன்னை சமாளித்துக்கொண்டு, கைப்பையை எடுத்துக்கொண்டாள். “போன மாதம் நாமச் சுந்தரத்தினை மருத்துவமனையில் பார்த்தோம். அப்புறம் போக முடியவில்லை.”

“என்ன செய்யறது. உன் கஸின் மகளுக்கு கலிபோர்னியாவில் கல்யாணம் போய் விட்டு வருவதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது. சுந்தரமே கிளம்பி வா என நேற்றைக்குச் சொல்லி விட்டான். எனக்குமே ஒரு வாரமா அடிக்கடி கனவில் வருகின்றான் என சொன்னேன்…”   சொல்லி விட்டு  ராமசாமி கொஞ்ச நேரம் யோசனைகளில் மூழ்கி அமர்ந்திருந்தார். “அவன் பாவம். ஐடி தொழிலிலிருந்து 55 வயதில் வெளியே வந்ததிலிருந்து, எத்தனை சிக்கல்! அவன் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை.”

“அவன் ஐடி தொழிலிலேயே இருந்திருக்கலாம்… நீ இருந்தாயே… அவனுக்குக் கடைசியில் நல்ல வங்கி கையிருப்பு இருந்திருக்கும்,” தமயந்தி சொன்னாள்.

ராமசாமி பதில் சொல்லவில்லை. அவர் கரங்கள் ஸ்டியரிங்கை இறுக்கப் பற்றின. 

“பிடிவாதம் அதிகம். ஒரு மணி நேரத்துக்கு நூறு டாலருக்கு மேல் சம்பாதித்தவன், வெறும் பதினைந்து டாலர் சம்பளம் உள்ள சப்ஸ்டிடியூட் டீச்சிங்குக்கு போனான்… அது வேஸ்ட்தானே?” எனத் தமயந்தி கேள்வியைப் பதிலாக வைத்தாள்.

“வேஸ்ட்தான். ஆனால் அதை அவனிடம் சொல்லிப் புரியவைக்க முடியவில்லையே. அப்போ தான் பள்ளி சம்பந்தப்பட்ட வாலண்டியர் வேலைகளில் பெரும் ஈடுபாடு வந்தது. ஐடி வேலையை விட்டுவிட்டான். இம்பல்சிவ்,” ராமசாமி கவலையுடன் சொன்னார்.

ராமசாமி இருக்கையின் வாரையைக் கழற்றினார். “கார்த்திக்கும், உமாவும் அவன் கூடவே வந்து ஒரு வருடம் ஆகின்றது… கார்த்திக் ஒரு வீடு வாங்கினான்தானே, பிரியா வாங்கிக் கொடுத்தாள் என சுந்தரம் சொல்லுவான்… அது என்னாச்சு?”

“தெரியவில்லை. சுந்தரம் தனக்கு அடிக்கடி உடம்புக்குச் சுகமில்லாமல் போகின்றது என அவன் வீட்டுக்கே வரச் சொல்லி விட்டான்…”

“கார்த்திக் இன்னும் வால்மார்டில்தானே வேலையில் இருக்கிறான்?

“ஆமாம். ஊபரும் ஓட்டறான். இப்ப வால்மார்ட்டில் இப்ப மேலாளராம். போன தடவை சுந்தரம் சொல்லிக்கிட்டு இருந்தான். அங்கே என்ன சம்பளம் வந்திட போகிறது….உமாவும் ஒரு டெண்டல் க்ளினிக்கில்தான் வேலைக்கு போறா…”

“பிரியா கல்யாணமே பண்ணிக்கலை. மெடிக்கல் டிகிரியும் எல்லாம் முடிச்சு வச்சுருக்கா… இப்போ எங்கே இருக்கிறா பாரு – மேற்கு வெர்ஜீனியாவுல, ஒரு கிராம கிளினிக்குல!, அது ஒரு வாழ்க்கையா என்ன?” வாகனத்திலிருந்து இறங்கி, கொஞ்ச நேரம் அமைதியாக நின்றாள். யோசனை, நினைவுகளில் ஏறி இறங்கியது. “சுந்தரம், அவளுக்கு அப்பாவா தன் கடமையைச் செய்திருக்கணும்.”

மார்ச் மாத மென் குளிர் காற்று, தமயந்தியின் குளிர் அங்கிகளைத் தாண்டி, உள்ளே சென்று வந்தது. தமயந்தி மூச்சை ஆழமாக உள்ளிழுத்தாள்.

யோசனை நினைவுகளில் நகர்வது போல், தரையில் உதிர்ந்து கிடந்த வசந்தக் கால மலர் இதழ்கள் காற்றில் உருண்டன.

“கண் ஒன்று தான் பல காணும்; தனைக் காணாது அப்படியென்று சொல்லுவார்கள். சுந்தரம் அப்படித்தான். தன்னார்வலர் வேலைகளில் ஊரார் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, தன் பிள்ளைகளைச் சரியாகப் பார்க்கவில்லை,”

“நீயும் அவனும், அதைப் பற்றிப் பேசியது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. கார்த்திக் போதைப் பழக்கத்திலிருந்து ரிகவரி ஆன பிறகு கொடுத்த விருந்தில், பேசிக்கொண்டு இருந்தீர்கள்…” தமயந்தி நினைவிலிருந்து மீட்டெடுத்தாள்.

“நான் சொன்னதை அவன் காதில் வாங்கவில்லை. பிடிவாதம். அதுக்கு அப்புறம் அவன் நம்மிடம் வெளிப்படையா தன்னார்வலராக என்ன செய்கிறான் எனச்  சொன்னதில்லை. மேலோட்டமாக தெரியும். அவ்வளவுதான். அது கிட்டத்தட்ட ஒரு ப்ளாக் பாக்ஸ்”  ராமசாமி தொடர்ந்தார்.

“”அது தெரிந்து நம்ம என்ன பண்ண போறோம்… ராகவி மறைவுக்கு பின்னரே ஒரு இடைவெளி வந்திடுச்சு.” 

“ம்…என்ன இடைவெளி, இன்னமும் கனவில் வருகின்றான்..” ராமசாமி முனகினார்.

“உச்…கரெக்ட்தான், அவனும் ராகவியும் இல்லாமல் நம்ம வீட்டில் எதுவும் நடந்தது இல்லை..” 

“ம்..”  

“நாம சொல்லறதை சொல்லிட்டோம்.  நாம இருவரும் விக்ரம் மீது முழுக் கவனம் செலுத்தினோம். கவனத்தைச் சிதறவிட்டதில்லை. சுந்தரம் வேற டைப் ” தமயந்தி சொன்னாள்.

அவர்கள் நுழைவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினர். சாலை மேல் காலணியின் மெதுவான ஓசை மட்டும் ஒலித்தது.

பல்பொருள் அங்காடியின் கதவுகள், அவர்களை எதிர்பார்த்தபடி திறக்க காத்திருந்தன. உள்ளிருந்து வெளிவந்த வெப்பமான காற்று, அவர்கள் முகத்தைத் தழுவியது. தமயந்தியின் குரல் மாறியது. “விக்ரமுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்…”

ஏதோ யோசனையில், தலையைக் குனிந்து நடந்துகொண்டிருந்த ராமசாமி, நிமிர்ந்து பார்த்தார்.

“சுந்தரம் மாமா க்ரிட்டிக்கல். முடிந்தால் ஒரு செய்தி அனுப்பு எனச் சொன்னேன். சுந்தரம் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். சுந்தரம் நல்ல கணக்கு சொல்லித் தருவான். இன்றைக்கும் விக்ரம் சொல்லுவான்,” தமயந்தி சொன்னாள். 

தமயந்தி. “கிட்டத்தட்ட நான்கு வாரமாக, ஏதோ ‘வேலை, வேலை’ என விக்ரமை பிடிக்கவே முடியவில்லை. பேசினாலும் ஓரிரு வார்த்தைகள், ஒரு சிரிப்புதான். மருமகளும், ‘அவன் சூமில் சந்திப்பில் இருக்கிறார்’ என, தொலைப்பேசியை அவனிடம் கொடுப்பதில்லை. சொந்த வீடு, ஆறிலக்க சம்பளம், மணியாக இரட்டை பிள்ளைகள்…விக்ரம் நமக்கு பெருமைதானே?”

“நானும் பெருமைப்படுகிறேன்,” என ராமசாமி சொன்னார்.

“அப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் குரலில் தெரியவில்லையே.”

“என்ன தெரியவில்லை?”

“சந்தோஷமும், பெருமையும்.”

“அவன் வெற்றி பெற்றவன், ஆனால் எப்பொழுதும் பிசியாகவே இருக்கான்ல…” ராமசாமி, அங்கே இருந்த கடையில் வாங்கும் சாமான்களைச் சுமக்கும் வண்டியை எடுத்துக்கொண்டு நகர்ந்து கொண்டே சொன்னார். கொஞ்ச நேரம் அவர்களிடையே மௌனம் இருந்தது. “பிசியாக இருப்பது தப்பில்லை…நானும் அப்படித்தானே…” எனக் கேட்டார்.

“ம்…இருக்கலாம்…பிசியாக இருக்கிறது நல்லதுதானே..இல்லையா?” ஆனால் தமயந்தியின் குரலில் ஏதோ மறைந்திருந்தது.

அவர்கள் பூக்கள் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்லும் வழியில், பழங்களும் காய்கறிகளும் இருக்கும் பகுதியைக் கடக்கையில், ராமசாமிக்கு அந்த இன்னும் நிரம்பாத வண்டியைத் தள்ளுவதுவே சிரமமாகத் தோன்றியது. அவர் நின்றார்.“விக்ரம் சொந்தக் காலில் இருக்கின்றான், சுந்தரத்தின் மகனைப் போலவா இருக்கிறான்?,” எனச் சொல்லிவிட்டு, தமயந்தியை பார்க்காமல், தூரத்தில் எதையோ தேடுவதைப் போலப் பார்வையைத் திருப்பினார்.

“ம்…,அது சுலபமா என்ன?” என ஆமோதிப்பாகத் தலை அசைத்துத் தொடர்ந்தாள்.“பெற்றோராக, நாம நம்முடைய பிள்ளைகளுக்காக எல்லாத்தையும் தியாகம் செய்கிறோம். அதுதான் இயல்பு. நாம மிக உழைத்தோம். அதுதான் விக்ரமை அப்படிக் கொண்டு வந்தது இல்லையா?”

“நான்  Booz Allenல் எத்தனை சிரமமான வேலை பார்த்தேன். எத்தனை தூங்காத இரவுகள், சுந்தரம் வேலையை விட்டவன். நான் குடும்பத்துக்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். எனக்காக எதுவும் செய்யவில்லையே…”  உடல் சூடானது. உள்ளங்கை வேர்த்தது. தமயந்திக்கு அது தெரியாமல் இருக்க, அருகில் அடுக்கப்பட்டிருந்த ஒரு பழத்தை எடுத்துப் பார்த்தார். உற்று நோக்கி பதற்றத்தினை அதில் கொண்டு போய் சேர்க்க நினைத்தார்.

“நானும்… என் வேலை, என் கனவுகள், எல்லாமே விட்டேனே,விக்ரம் படிப்புக்கு, நம் வாழ்க்கைக்கு…” என்று தமயந்தி ஏக்கத்துடன் சொன்னாள்.

ராமசாமி அந்தப் பழத்தைத் திரும்ப வைத்தார்.

ராமசாமி பழத்தினை வைத்து விட்டு “பழம் வேண்டாம்…அவனுக்குச் சாப்பிட இயலாது.  பூ மட்டும் போதும்”  என நடக்க ஆரம்பித்தார்.

“நான் சொன்னதைக் காதில் வாங்கினாயா?” தமயந்தி கேட்டாள்.

“நீ திரும்பவும் வேலைக்குப் போயிருக்கலாமே…” என்றார் ராமசாமி. அவள் வேலையை விட்டது பயனற்றது என அவருக்குள் தோன்றியது. சொல்ல வேண்டாமென்று நினைத்ததை, கட்டுப்படுத்தாமல் வார்த்தைகளாக விட்டுவிட்டதாகவே நினைத்தார்.

“திரும்பப் போயிருக்கலாமா?” தமயந்தி திரும்பி ராமசாமியை முறைத்தாள். “நாம இரண்டு பேரும் சேர்ந்துதானே முடிவு செஞ்சோம்! வீட்டிலிருந்து விக்ரமுக்கு ஓர் உறுதியான அடித்தளத்தை கொடுக்கவேண்டுமென்றுதான் நான் வேலையை விட்டேன். நான் செய்த தியாகம் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை…உங்களுக்கும் திருப்தி இல்லை. அவனுக்கும் அதிர்ஷ்டமில்லை, ஐவி லீக் கல்லூரி போகலை!” பொரிந்து தள்ளினாள்.

அவர் பதிலளிக்கவில்லை.

ராமசாமி வண்டியைத் தள்ளிக் கொண்டு சில அடிகள் முன் சென்றார். பல இலக்கு வைத்து, வாழ்வில் பல விஷயங்களை விட்டுக் கொடுத்து, எதையெல்லாம் பெற்றோம் எனக் காண அவர் கொஞ்சம் இடைவெளி தேவை என நினைத்தார். அவர் முன்னே செல்லட்டும் என தமயந்தி சில அடிகள் பின்னே எடுத்தாள். அவசரத்தில், குழப்பத்தில், முடியாதென விட்டுக் கொடுத்ததால் நினைத்ததைப் பெற்றோமோ என யோசித்துப் பார்க்க அவளுக்கும் கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டது. அந்த நேரம் ஒரு குரல் குறுக்கே வந்தது.

“ராமசாமி சார்! தமயந்தி மேடம்!”

இருவரும் திரும்பிப் பார்த்தனர். அருகிலிருந்த வாழைப்பழங்களை அடுக்கிக்கொண்டிருந்த ஒருவர்; வெக்மன்ஸ் கடையின் உடையுடன், புன்னகையுடன்  ஒருவர்… தமயந்தியும், ராமசாமியும் நினைவில் தேடினர்…சோமா, முன்புபோல இல்லை; சுருங்கிய உடல், தலைமுடியில் சிலந்தி வலைபோல ஓரிரு வெண்முடிகள் மட்டும் மிதமாகக் காட்சியளித்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பழக்கப்பட்ட ஒரு முகம்.

“சோமா!” தமயந்தியின் முகம் உறுதியான புன்னகையோடு மலர்ந்தது. “எப்படி இருக்கிறீர்கள்?”

“அருமை… சூப்பர்!” என்றார் சோமா. தனது கைகளை மேற்சட்டையில் மெதுவாகத் தடவி சுத்தம் செய்தபடியே, அவர்கள் அருகே வந்தார். “ரொம்ப நாளாச்சு!”

“நமக்கெல்லாம் வயதாகிவிட்டது… உங்களைச் சந்தித்தது ஒரு மிக மகிழ்ச்சியான தருணம்,” என்றார் ராமசாமி. அவருடைய குரல், பிரியத்தில் இளகியிருந்தது.

90களில், வடக்கு வெர்ஜீனியாவில் ஒரே ஓர் இந்தியக் கடை இருந்த காலம். கறிவேப்பிலை இலை, பொன்னி பச்சரிசி வேண்டும் என்றால், அந்த ஒரே இந்திய மளிகைக்கடையில்தான் கிடைக்கும். அங்கேதான் சோமா வேலை செய்தார். ராமசாமிக்கும் தமயந்திக்கும் மிகவும் பரிச்சயமான முகம்… முப்பது ஆண்டுகள் பறந்து போன பிறகு, அந்த மளிகைக் கடை கைமாறி, பிறகு மூடப்பட்டது. அதன் இடத்தில் பல புதிய கடைகள் வந்துவிட்டன. ஆனால், சோமாவை இங்கே…தமயந்திக்கு அலை அலையாய் எண்ணங்கள் எழும்பி உயர்ந்து கொண்டே இருந்தது. “ஒரு நண்பரைப் பார்க்கப் போகிறோம். அவருக்கு ‘க்ரைஸ்லர் இம்பீரியல்’ ரோஜா பிடிக்கும்; அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்,” எனத் தமயந்தி சொன்னாள்.

“அங்கே… பொக்கே பகுதியின் இறுதியில் உள்ளது. போய் பாருங்கள்,” என்றார் சோமா.

“நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? குடும்பம் எல்லாம் நலமாக இருக்கிறதா?” ராமசாமியின் குரலில் அக்கறை நன்கு பதிந்திருந்தது.

“எல்லாரும் நலம். உங்கள் குடும்பம் நலமா? உங்களுக்கு ஒரே மகன்தானே… எனக்கு ஒரே ஒரு மகள். அதோ அங்கே நிற்கின்றாள் பாருங்கள்”  சோமா கைக்காட்டினார்.

அருகிலுள்ள பில் போடும் பகுதியில், ஒரு இளம்பெண் பசுமஞ்சள் வண்ண டெய்ஸிகள் கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் சீட்டுப் புத்தகத்தைத் திறந்து, அதிலே எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

“இங்கே வேலை செய்கிறாளா?” என்று தமயந்தி கேட்டாள்.

“இல்லை, அவள் இங்கே வேலை செய்யவில்லை. அவளும் உங்களைப் போலப் பூங்கொத்து வாங்கத்தான் வந்தாள். அவளை அழைக்கிறேன்…” சோமா கையை உயர்த்தி அவளை அழைத்தார்.

அந்தப் பெண் அருகில் வந்தாள். அருகில் வந்ததும், “என் மகள், கல்பனா,” என ராமசாமியிடம் சொல்லிச் சொல்லியவுடன், திரும்பி கல்பனாவின் பக்கம் பார்த்து “வா… வணக்கம் சொல்லு!” என்றார்.

“வணக்கம், அங்கிள்… ஆன்ட்டி,” என்றாள் கல்பனா.

“ஹாய் கல்பனா! ,” என்றாள் தமயந்தி. 

“இன்றைக்கு ஓர் அருமையான செய்தி கிடைத்திருக்கிறது,” சோமா மகிழ்ச்சியுடன் கூறினார்.“கார்நெல் பல்கலைக்கழகம். முழு உதவித்தொகை. கம்ப்யூட்டர் சயின்ஸ்!” . சோமா பேசிக் கொண்டே போனதில் தமயந்திக்கும், ராமசாமிக்கும் மூன்று வார்த்தைகள்தான் காதில் விழுந்தது. அந்த வார்த்தைகள்,தமயந்தி மற்றும் ராமசாமியின் மனங்களில்,பகடைக் காய்கள் போல எதிர்பாராத ஓர் ஒலியுடன், அதிர்வுடன்,உருண்டு விழுந்தன.

“ஓ!” தமயந்தி ஆச்சரியத்துடன், சற்றே மூச்சுவிட்டபடி சொன்னாள்.

“வாழ்த்துகள்!”

“நன்றி, ஆன்ட்டி,” என்றாள் கல்பனா,

அவளது புன்னகையில் வெட்கமும் பெருமையும் ஒன்றாகத் தேங்கியிருந்தது.

“அருமை,” என்றார் ராமசாமி,

“புகழ்பெற்ற பல்கலைக்கழகம்.” தமயந்தி சொன்னாள்.

“நாங்கள் பெரும் பாக்கியசாலிகள்,” சோமா மெல்லிய குரலில் கூறினார். 

“சரி, சனிக்கிழமை… கடை பிசியாக இருக்கும். உங்களைப் பார்த்தது சந்தோஷம்!” எனச் சோமா விடைபெற கைகூப்பினார்.

“எங்களுக்கும் சந்தோஷம்தான், சோமா, மீண்டும் வாழ்த்துகள்!”

சோமா, மீண்டும் வாழைப்பழங்களை அடுக்கச் சென்றார்.

கல்பனா, தன்னுடைய டெய்ஸிகளை ஸ்கேன் செய்யப் பில்லிங் மேசையை நோக்கிச் சென்றாள்.

யோசனைகளில் நிறைந்த பார்வையுடன் தமயந்தியும் ராமசாமியும், அவளைப் பார்த்துக்கொண்டே நின்றனர்.

“மஞ்சள் வண்ண டெய்ஸி பொக்கே அழகா இருக்கே…சோமா மகள் கையில் இருக்கறத பாருங்க…” தமயந்தி சொன்னாள்.

“அது நமது ஸ்டேட்டஸுக்கு செட்டாகுமா…கொஞ்சம் ரிச் ஆக …” சொல்லும் பொழுதே ராமசாமிக்கு அது சரியாக வரவில்லை எனத் தோன்றியது. “ நான் அப்படிச் சொல்லலை. சுந்தரத்துக்கு பிடித்ததை வாங்கனும்…” என முடித்தார். தமயந்தி அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. உதடுகள் இறுக ஏதோ யோசனையில் இருந்தாள்.

“நம்ம விக்ரம் புத்திசாலி. அவன் ஹார்வர்ட், யேல் மாதிரி ஐவி லீக் ஒன்றில் சேர்ந்திருக்க வேண்டியவன்தான்…அதிர்ஷ்டம் இல்லாமல் போச்சு…” ஏக்கத்துடன் தமயந்தி சொன்னாள்.

“அதற்காக நாம எவ்வளவு உழைத்தோம். என்ன செய்ய முடியும். கிடைக்க வேண்டியவை, சில நேரம் நமது கைக்கு வந்து சேராமலே போய்விடும். மிஸ் பண்ணறோம்.” ராமசாமி சலிப்புடனும் ஏமாற்றத்துடனும் கூறினார்.

வெக்மென்ஸிலிருந்து கிளம்பி, சாண்டிலியில் உள்ள சுந்தரத்தின் வீட்டை நோக்கி ராமசாமியும் தமயந்தியும் சென்றார்கள். அந்த டவுன்ஹோம், தரமான அரசுப் பள்ளிகள் சூழ்ந்த அமைதியான பகுதியில் இருந்தது. மரங்கள் நிரம்பிய தெருக்கள், சீரான நடைபாதைகள், குழந்தைகளின் சைக்கிள்கள், விளையாட்டுப் பரபரப்புகள் என நிரம்பியிருந்தது.

ராமசாமி காரை ஓரத்தில் நிதானமாக நிறுத்தினார். தமயந்தி, சிவப்பு ரோஜாக்களின் பூங்கொத்தைக் கவனமாக எடுத்துக்கொண்டு, மெதுவாகக் வாகனத்திலிருந்து இறங்கினார்.

வீட்டின் முன்வாசலை நெருங்கி, ராமசாமி அழைப்பு மணியை அழுத்தினார். சில நிமிடங்களில் கதவு திறந்தது. மறுபுறம் கார்த்திக் நின்றிருந்தான். முப்பது வயதிற்கும் மேல், மெல்லிய மீசையுடன் கூடிய முகம், கொழு கொழுப்பான உடல், சிறிது இரட்டை தாடையுடன் நின்றிருந்தான். கண்களில் சோர்வு தெரிந்தாலும், மரியாதையுடன் ஒரு மென்மையான புன்னகை முகத்தில் விளைந்தது.

“அங்கிள், ஆண்ட்டி, வாங்க,” என்றான், கதவை விரிவாகத் திறந்தான்.

“கார்த்திக்…” என்றார் ராமசாமி, மெதுவாக அவன் வலது தோளைத் தொட்டார். அந்த நொடியில், கார்த்திக் அவருடைய கரங்களைப் பற்றிக் கொண்டான் பின்னர்,திடீரென அழ ஆரம்பித்தான்.

ராமசாமி, ஒரு வார்த்தையும் பேசாமல், அவனை அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார். சில நிமிடங்கள் கடந்தபின், கார்த்திக் மெதுவாகச் சமாளித்து, கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“அப்பா மேலே இருக்கிறார். அக்காவும், என் மனைவியும் அவரை தயார் பண்றாங்க. அப்பா இன்னமும்… சாயங்காலம் நல்ல உடை போட்டுக்கொண்டு பளிச்சென இருக்கவேண்டும் என்பதில்தான் ஆசை. யாராவது பார்க்க வரும்போது, அவருக்கு அப்படித்தான் இருக்கணுமாம்…” கார்த்திக் மெதுவாகச் சிரித்தான். “உட்காருங்க. நான் டீ கொண்டு வரேன்,” என்று விட்டு, சமையலறைக்குள் சென்று மறைந்தான்.

அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். வரவேற்பு அறை சுத்தமாகவும், அமைதியாகவும் இருந்தது. இது ஒரு புதிய இடமல்ல. பல முறை வந்த இடம். எத்தனை தீபாவளிகள், எத்தனை பொங்கல் கொண்டாட்டங்கள்…இந்த அறை அந்த நினைவுகளைத் தாங்கியிருக்கிறது. பழையதாயினும் நல்ல தரமான சோபா, அதன் மேல் பரவியிருந்த பட்டு குஷன்கள்,சுவரில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஒவ்வொன்றும் தம் இடத்தில் இருந்தது.

ராமசாமியும், தமயந்தியும் அமைதியாக வரவேற்பறையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் கண்கள் சுவரில் தொங்கிய புகைப்படங்களை துலாவின. 

“பலமுறை பார்த்தவை…” தமயந்தியின் விரல்கள் மென்மையாகச் சுந்தரமும், அவரது மனைவி ராகவியும் இருந்த புகைப்படத்தினைத் தொட்டது.

“அது அவன் கல்யாண தினத்தன்று எடுத்தது, இங்கே பார், கார்த்திக்கும்…, ப்ரியாவும் துவக்கப்பள்ளியில் இருக்கையில் எடுத்தது…” ராமசாமி இன்னொரு புகைப்படத்தினைக் காட்டினார்.

“பிள்ளைகள்… வளர்ந்துவிட்டார்கள்.” தமயந்தி சொன்னாள். சொன்ன பின்னர்  “நமது கல்லூரி புகைப்படம் ஒன்று இருக்குமே. நான், நீ, ராகவி,சுந்தரம் எல்லாம் இருப்போமே” அவள் கண்கள் தேடின. 

“அங்கே புத்தக அலமாரி மேல் இருக்கு பார்”  என ராமசாமி காட்டினார்.

மிச்சிகன் பல்கலை கழக விளையாட்டரங்கத்தில், நீலமும்,  மஞ்சளும் கலந்த ஜெர்ஸி அணிந்து. சுந்தரம், ராகவி, தமயந்தி, ராமசாமி. எல்லோரும் இளமையாக, கவலையற்று சிரித்துக்கொண்டு இருக்கும் படத்தினைப் பார்த்ததும் தமயந்தி பெரும் ஆறுதல் ஒன்றினை உணர்ந்தாள். அந்தப் புகைப்படத்துக்குள் புகுந்து அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஆசை வந்தது.

தமயந்தி அந்தப் படத்தை உற்றுப் பார்த்தாள். “அது 1987 ஓஹியோ ஸ்டேட் கேம். ஞாபகம் இருக்கா?”

“இருக்கு,” மெதுவாகச் சொன்னார் ராமசாமி.

“மிச்சிகன் ஜெயிச்சிது. சுந்தரம் ஸ்டேடியம்ல ‘தி விக்டர்ஸ்’ பாடினான். நம்மையும் பாட வைத்தான்.  சந்தோஷமா இருந்தான்.” தமயந்தியின் குரலில் உற்சாகம் எட்டிப் பார்த்தது.

“கல்லூரி நினைவுகளா ஆண்ட்டி… “  கார்த்திக்கின் குரல் குறுக்கே நுழைந்தது. திரும்பினார்கள்.

கார்த்திக் தட்டில் தேநீர்க் கோப்பைகளும், பிஸ்கட்டும் கொண்டு வந்தான். “தயவு செய்து எடுத்துக்குங்க.”

“நன்றி, கார்த்திக்,” என்றாள் தமயந்தி. தேநீரை எடுத்துக் கொண்டாள்.

கார்த்திக் அவர்களுக்கு எதிரே உட்கார்ந்தான். “நீங்க பல வருஷமாக அப்பாவுடைய நண்பர்கள், அவர் எப்பவும் உங்களைப் பத்தி பேசுவார்.”

“எத்தனை தீபாவளி,பொங்கல் கொண்டாட்டங்கள், நீங்கள் எல்லாம் பிறந்து வளர்ந்தது, நல்லது, கெட்டது…”  ராமசாமி பெருமூச்சுடன் சொன்னார்.

“பெரிய ஹிஸ்டரி அங்கிள்…” கார்த்திக் ஆமோதிப்பாகச் சொன்னான்.

“ம்….” ராமசாமி ஏதோ சொல்ல வந்து நிறுத்தினார். அவர் கண்கள் கலங்கிச் சோர்ந்தன. “ எப்படி இருக்கிறான்…” அவர் குரல் தத்தழுத்தது.

“பலகீனமாக இருக்கிறார். ஞாபகங்கள் எதுவும் குறையவில்லை. உங்களைப் பார்க்கவேண்டும் என மிக ஆவலா இருக்கிறார்.” கார்த்திக் இடைவேளை கொடுத்தான். ” உங்களுக்கே தெரியும்…மருத்துவர் எப்ப வேண்டுமானாலும் எனச் சொல்லி… ” குரல் தத்தளிக்கத் தொடங்கியது உடன் குடித்து முடித்த தேநீர் கோப்பைகளை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றான்.

அப்போது வீட்டு மணி அடித்தது.

“நான் பார்த்துட்டு வர்றேன்,” எனச் சொல்லி ராமசாமி எழுந்து சென்றார்.

கதவைத் திறந்தபோது, கல்பனா நின்றிருந்தாள். கைகளில் பசுமஞ்சள் டெய்ஸிகள்.

“ஓ, கல்பனா!” ராமசாமி ஆச்சரியத்துடன் சொன்னார்.

தயக்கம் கொண்டு, சரியான இடம்தானா எனக் குழப்பத்துடன் ஓரடி பின்னகர்ந்து, உடனடியாக  முகம் தெளிவாகி கல்பனா “ஹலோ, அங்கிள்,” புன்னகையுடன் சொன்னாள். “சுந்தரம் சாரை பார்க்க வந்தேன்.”

“உள்ளே வா, உள்ளே வா.”

கல்பனா உள்ளே வந்தாள். தமயந்தியைப் பார்த்து வணக்கம் சொன்னாள்.

“வா கல்பனா…எப்படி இருக்க. ஒரு டீ எடுத்து வருகின்றேன்”  எனச் சொல்லி விட்டு கார்த்திக் எழுந்து சமையலறைக்குச் சென்றான். 

“சுந்தரத்தினை உனக்கு எப்படித் தெரியும்?” ராமசாமி கேட்டார், சோபாவில் உட்காரும்படி சைகை செய்தார். 

கல்பனா பூக்களைக் காப்பி மேசையில் வைத்து விட்டு அமர்ந்தாள்.

“இரண்டு வருஷமா சுந்தரம் அங்கிளிடம் படிக்க வந்துவிட்டு இருக்கேன். எல்லாச் சனிக்கிழமையும் கிட்டத்தட்ட இங்குதான் போகின்றது. SAT படிக்க கோர்ஸ் சேர்த்து விட்டார். கால்குலஸ் சொல்லிக் கொடுத்தார். போன சம்மரில்  காலேஜ் டூர் எல்லாம் வேற போனோம். டிசம்பர் வரை சனிக்கிழமை வகுப்புகள் இருந்தது,. ஹெல்த்  கெட்டுப்போன பின்னாடியும் அவர் என் டிராஃப்ட் படிச்சு திருத்தம் சொன்னார். என்னோட கல்லூரிக்கான விண்ணப்பக் கட்டுரை எழுதவே சுந்தரம் அங்கிள்தான் உதவினார்.”

“சனிக்கிழமை தோறும்?” தமயந்தி மெதுவாகக் கேட்டாள்.

“ஆமாம், ஆன்ட்டி. நான் ஒருத்தி இல்லை. நிறைய பசங்க வருவாங்க. ரொபாட்டிக்ஸ், டியூட்டரிங், கல்லூரி கவுன்சிலிங்… அவர்தான் எல்லாருக்கும்.”

கார்த்திக் தேநீரோடு வந்தான். “தேங்க்ஸ் கார்த்திக்…” என சொல்லிவிட்டு அதை வாங்கிக் கொண்டாள்.

கார்த்திக் சிரித்தான். “வியாழன் சாயங்காலம், சனி, ஞாயிறு வீட்டுல எப்பவும் யாராவது இருப்பாங்க. வீடே ஸ்கூல் மாதிரி இருக்கும். நேற்று அவரிடம் படிக்கும் மாணவர்களைப் பார்க்க ஆசைப்பட்டார், அருகில் இருந்த சிலர் வந்து பார்த்துப் போனார்கள்”

அப்போது படிக்கட்டில் காலடி சத்தம். பிரியா இறங்கி வந்தாள். 

“வணக்கம் ஆண்ட்டி,” என்றாள் பிரியா, கைகூப்பி. எளிமையான குர்தா, மிகவும் களைத்திருந்தாள், தூக்கமின்மை தெரிந்தது, ஒரு புன்னகை ஒன்றை அதன் நடுவே தக்க வைத்திருந்தாள்.

“பிரியா!” தமயந்தி எழுந்து அவளைக் கட்டிக்கொண்டாள். “எப்படி இருக்க?”

“நன்றாக இருக்கேன் ப்ரியா.”

கல்பனா எழுந்து நின்றாள். “கார்த்திக், ப்ரியா , இன்றைக்கு நல்ல நியூஸ் வந்திருக்கு. சொல்லவேண்டுமென்று நினைத்தேன். அங்கிள்கிட்டேயும் சொல்லனும்”

“என்ன, கல்பனா?” கார்த்திக் கேட்டான்.

“கார்நெல் பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகை கிடைத்துள்ளது. இன்றைக்கு அதற்கான கடிதம் வந்தது” கல்பனாவின் குரல் நெகிழ்ந்தது. அவள் கைகளில் இருந்த கடிதத்தினை கார்த்திக்கிடம் நீட்டினாள். 

“நீயே அப்பாவிடம் காட்டு”  எனச் சொல்கையில் கார்த்திக்கின் முகம் மலர்ந்தது. அவள் கையை பற்றி குலுக்கி வாழ்த்தினை தெரிவித்தான்.களைப்பை மிஞ்சி பிரியா “வாவ் “ என்றாள்.  முன்னால் வந்து கல்பனாவைக் கட்டிக்கொண்டாள். “ஓ, கல்பனா! கிரேட் நியூஸ்! வாழ்த்துக்கள்!”

 ராமசாமி அவர்கள் முகங்களில் உண்மையான சந்தோஷம் நிறைந்ததைக் கண்டார். அவர் தொண்டை இறுகியது. மூச்சு தடுமாறியது. 

“ஏன்? கல்பனாவுக்கு நேரம் செலவிட்ட அப்பாவைப் பார்த்து கார்த்திக் என்ன நினைக்கின்றான்? இதெல்லாம் நிஜமாக இருக்க முடியுமா? தவறாகத் தெரியவில்லையா? இது வெறும் ஏமாளித்தனமா? அவ்வளவுதானா? என்னது இது?”  குழப்பம் அவரை சூழ்ந்தது. கால்கள் பலகீனமாயின. உடலின் எடை கூடியதாக உணர்ந்தார்.  தமயந்தியை திரும்பிப் பார்த்தார். அவள் முகத்தில் குழப்பம் கண்டார்.

“அவருக்குச் சந்தோஷமா இருக்கும்,” கார்த்திக் சொன்னான். பின்னர் திரும்பி ராமசாமியை பார்த்து  “விக்ரம்தான் அப்பாவுக்கு நிறைய உதவி செய்தான். உள்ளூர் ஹை ஸ்கூல் குழந்தைக்காக உதவித்தொகை அறக்கட்டளை ஆரம்பிக்க அவன் உதவி இல்லையென்றால் கஷ்டமாயிருக்கும். விக்ரமுக்கு லீகலாகவும், பைனாஸாகவும் என்ன செய்ய வேண்டுமெனத் தெளிவு இருந்தது. அம்மா பெயரில் அப்பாவின் சேமிப்பை வைத்து ஒன்று செய்து கொடுத்துள்ளான்.”

“விக்ரம்?” தமயந்தி திடுக்கிட்டாள்.

“ஆமாம், ஆன்ட்டி. கடந்த நான்கு வாரமாக, எத்தனை சூம் கால்!  அப்பாவோடு விக்ரம் தொடர்ந்து ஹெல்த் பற்றிக் கேட்டு வருவான். ரிட்டயர்மெண்ட் பணத்தில் ஏதாவது செய்யவேண்டும் என அப்பாவுக்கு ஆசை. ஆனால் என்ன செய்கிறது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அப்பா… விக்ரம்கிட்ட உதவி கேட்டார்…”

“விக்ரம் அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருக்கலாமே, ஏன்?…” என ராமசாமியும், தமயந்தியும் பார்வையைப் பரிமாறிக்கொண்டார்கள். 

“சரி,” பிரியா சொன்னாள். “அப்பா ரெடி. மேலே போகலாமா?” அனைவரும் மாடிப்படிகளை ஏறினார்கள். 

சுந்தரத்தின் அறை பெரியதல்ல. ஆனால் வெளிச்சம் நிறைந்தது. ஜன்னல் வழியாகச் சாயங்கால வெளிச்சம் உள்ளே வந்தது. படுக்கையில் சுந்தரம் சாய்ந்திருந்தார். தலையணையில் சாய்ந்து. வெள்ளை பைஜாமா. சுருங்கிய உடல். சோர்ந்திருந்த கண்கள், சின்ன சிரிப்பு முகத்தில் இருந்தது. அவர் அருகில் உமா, கார்த்திக்கின் மனைவி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். கையில் இருந்த புத்தகத்தினை மூடி வைத்து எழுந்து சுந்தரத்தினை அனைவரும் காண ஒதுங்கி நின்றாள் .

அவர்களைப் பார்த்ததும் சுந்தரம் சிரித்தார். பலவீனமாக இருந்தது.

“ராம்… தமி…” குரல் கிசுகிசுப்பு போல அவர் குரல் எழும்பியது.

ராமசாமி அருகில் போய் அமர்ந்தார். சுந்தரத்தின் கையைப் பிடித்தார். “சுந்தரம்.”

“வந்திருக்கீங்களா… உன்னை பார்க்கவேண்டும் என ஆசை” எனத் தடுமாறினார்.

தமயந்தி மறுபக்கம் அமர்ந்தாள். கண்களில் கண்ணீர். “நாங்கள் எப்பவும் உங்கூடதான்.”

சுந்தரம் மெதுவாக மூச்சுவிட்டார். அறையில் எல்லோரும் சுற்றி நின்றார்கள். கார்த்திக், அவன் மனைவி, பிரியா, கல்பனா, தமயந்தி, ராமசாமி.

கல்பனாவை பார்த்தார். அருகே அழைத்தார். கண்ணீர் ததும்ப “கார்நெல் கிடைச்சிருச்சி அங்கிள்” என்றாள். 

பிரியாவை பார்த்து “அவளுக்கு ஸ்வீட்….” என்றார். 

பிரியா ஆமோதித்து தலை அசைத்தாள். 

“சோமா…” என கல்பனாவிடம் சுந்தரம் சொன்னார். சிறிது நேரம் கண் மூடி படுத்திருந்தார். 

கண் திறந்ததும் சுந்தரம் ராமசாமி இருக்கும் திசையைப் பார்த்தார். “ராம்..தமி…விக்ரம்..” ஏதோ சொல்ல வந்தார். பேசும் சக்தி இல்லாமல் தடுமாறினார்.

“சுந்தரம் ஓய்வெடு…கார்த்திக் சொன்னான்..” ராமசாமி அவர் நெற்றியைத் தொட்டுச் சொன்னார்.

சுந்தரம் புன்னகைத்தார். அப்புறம், மெல்லக் கையை உயர்த்த முயற்சி செய்து, ராமசாமியையும், தமயந்தியையும் இன்னமும் அருகே வருமாறு அழைத்தார். படுக்கையில் இருந்த அவருடைய விரல்கள், அவர்களது கைகளைத் தொட முயன்றன. இருவரும் முன்னே நின்று, அவர் கரங்களைப் பற்றினர். மிகுந்த சிரமத்துடன், சுந்தரம் சில வார்த்தைகளைக் கோர்த்தார். “சாம்பியன்ஸ்…” ஏதோ நினைவுகள் மனத்தில் ஓடின. சொற்கள் துண்டிக்கப்பட்டது போல, கண்கள் மெதுவாய் மூடியன. சிறிது நேரம் சும்மா இருந்தார். பிறகு, ஓர் ஆழ்ந்த மூச்சுடன், திரும்பவும் ஆற்றலைத் திரட்டி, “ராம்… ஒரு பாட்டு…பாடுவியா?” என்றார்

“எந்தப் பாட்டு?”

“தி விக்டர்ஸ்… மிச்சிகன்…” அவரிடம் மீண்டும் ஒரு புன்னகை எழுந்தது. ராமசாமிக்கு வரவேற்பறை புகைப்படம் நினைவுக்கு வந்தது.

“கல்லூரி புட்பால் பாடல்…?” பிரியா கேட்டாள். ஆம் எனச் சுந்தரம் சின்னதொரு தலை அசைவைத் தந்தார்.

“அங்கிள்? ” பிரியா ராமசாமியை பார்த்தாள்.

ராமசாமி தயங்கினார். எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன?

“Hail to the victors valiant…” ராமசாமி மெதுவாக ஆரம்பித்தார். 

சுந்தரத்தின் கண்கள் மூடின. முகத்தில் அமைதி.

ராமசாமியும் தன்னையறியாமல் கண்ணை மூடிக் கொண்டார். அவர் வரவேற்பறை புகைப்படத்தினை நினைவுக்குள் கண்டார். அதனுள் புகுந்தார். “வா சுந்தரம்” என அழைத்தார். சுந்தரமும் நுழைந்தார். ராமசாமியின் குரல் எழுந்தது “Hail to the conquering heroes…”  மிக்சிகன் மைதானமே விளையாட்டு உச்சத்தில் அதிர்வதை ராமசாமி உணர்ந்தார். உடல் பரபரத்தது. பல ஆயிரம் குரல்களோடு பாடல் மைதானத்தினை நிரப்புகின்றது. இளமையின் வேகம், வெற்றியினை நோக்கி நகர்வு உடலிலிருந்து மனதுக்குப் பற்றிக் கொள்கின்றது. அந்த அரங்கமே ஒரு குரலானது.  “Hail, hail to Michigan, the champions of the West…” 

ராமசாமி மிக்சிகன் விளையாட்டரங்கத்தில் ராகவி, சுந்தரம்,தமயந்தியுடன் கையில் பிரியாவைத் தூக்கிக் கொண்டு, காலைக் கட்டிக் கொண்ட விக்ரமை அணைத்துக் கொண்டு நின்றிருந்தார். சுந்தரத்தின் மடியில் கார்த்திக் அமர்ந்திருந்தான். ராகவியும், தமயந்தியும் கரங்களைக் கோர்த்துக் கொண்டு அரங்கு நிறையும் குரல்களுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ராமசாமியின் குரல் சுந்தரத்தின் அறையில் மெல்லிய குரலிலிருந்து விளையாட்டு மைதானப் பாடலானது.

அவ்வறைக்குள் பிரியா ராமசாமியின் குரலுடன் இணைந்தாள். பின் கார்த்திக். உமா.. அப்பா பாடும் பாடல் அவர்களுக்கு மனப்பாடம். தமயந்தி அதற்குள் கலந்துக் கொண்டாள். 

அறையில் சுந்தரம் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார். சுந்தரத்தின் உடல் திடீரென்று உதறியது. ஒரு துளி புன்னகை வந்து போனது. சில நொடியில் அவரது முகம் சுருங்கியது. கை, கால் உதறியது. வாய் திறந்தது. வலி முகத்தில் பரவியது.

“ராகவி…” கிசுகிசுத்தார். “கார்த்திக்… பிரியா… உமா… தமி… ராம்…”

பெயர்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

உடல் மீண்டும் அசைந்தது. கண்கள் நிலைத்தன. நாக்கு சற்று வெளியே வந்தது.

அறையில் ஒரு பதற்றம் தோன்றியது.

கார்த்திக் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு மண்டியிட்டு தலையைப் படுக்கையில் வைத்திருந்தான். பிரியா சுவரில் சாய்ந்து நின்று சின்னக் குரலில் அழுதுகொண்டிருந்தாள். கல்பனா தன் டெய்ஸிகளுக்கு அருகில் கண்ணீரோடு நின்றிருந்தாள். உமா கார்த்திக்கின் தோளில் கை வைத்திருந்தாள். 

தமயந்தி அதிர்ச்சியில் சுந்தரத்தினை நோக்கி ஓரடி முன் சென்றாள். திரும்பப் பின் நகர்ந்தாள்.  “ இங்கே பாருங்கள்… அவன் என்ன சொன்னான் பாருங்கள்… இது தெரியாமல்…நாம்… நம்மை விட்டுப் போய் விட்டான். ஐயோ சுந்தரம்…” உரத்த குரலில் அழுது அவர் தோளை உலுக்கினாள்.

உலுக்கலில் மிக்சிகன் விளையாட்டரங்கத்திலிருந்து அறைக்குத் திரும்ப முடியாமல் உறைந்திருந்த ராமசாமி நிலை குலைந்தார். உறைந்த ஒன்று அசைந்தது. தன்னில் உற்று நோக்கினார். “Hail to the victors valiant…” என்னும் பாடல் மீது நின்று கொண்டு சுந்தரம் உச்சரித்து இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் பெயர்களைத் தாவித் தொட முயன்றார். பரமபத ஏணியின் படிகள் போல அவை அவர் முன் நின்றன. பிரமாண்டமாக நின்றன. 

கை கால்கள் நடுங்க, தமயந்தியின் கரங்களைப் பற்றி தரையில் அமர்ந்தார்.  “இங்கே..” என அறையில் இருந்த அனைவரையும், அறையில் இல்லாத அனைவரையும் அவளிடம் காட்டினார். அவள் “பார்க்காமல் போய்ட்டோமே” என அழுதாள்.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “காணுமாறு காணேன்”

Leave a Reply to Vidhya KCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.